03 ஜூலை 2025

 

சிறுகதை     கணையாழி ஜூலை 2025  பிரசுரம்

“எ(கொ) டுப்பினை”




                                   வெட்கமாயில்லயா உனக்கு? – கொதித்துப் போய்க் கேட்டே விட்டார் சதீஷ்வரன். தப்பு என்று தோன்றவில்லை அவருக்கு. மனசிலிருந்து பெரும் பாரம் இறங்கியது போலிருந்தது. கேட்ட வேகத்தில் உடம்பு லேசாக ஆடியது.

                        கீழே கேட்டைத் திறந்து பாஸ்கரன் வெளியேறும் சத்தம். மாடியிலிருந்து பார்த்தார். குழந்தை மனோஜ் முன்னால் உட்கார்ந்திருக்க அவன் வண்டியைக் கிளப்பிச் செல்வது தெரிந்தது. தினமும் காலையில் டென்ஷன்தான். எட்டரை மணி பிரேயருக்குள் பள்ளி வளாகத்திற்குள் கொண்டு விட்டு விட வேண்டும். இல்லையெனில் செக்யூரிட்டியே உள்ளே அனுமதிக்க மாட்டான். இரண்டொரு முறை கெஞ்சிக் கூத்தாடி உள்ளே அனுப்பியிருக்கிறான். அவ்வளவு கண்டிஷனான பள்ளி.

                        இவ்வளவு தள்ளியிருக்கிற ஸ்கூல்ல சேர்க்கிறியே…தினமும் கரெக்ட் டயத்துக்கு உன்னால கொண்டு விட முடியுமா? ஓவர் டிராஃபிக்கா இருக்கு. இடைல ரெண்டு மெயின் ரோடு வேறே குறுக்கிடுது. நடுவுல கடந்து யு.டர்ன் போட்டு வளைஞ்சு போகணும்…முடியுமா? யோசிச்சிக்கோ….!

                        சொல்லத்தான் செய்தார்.  அவர் பயம் அவருக்கு. ஆனால் அவன் வயதிற்கு அதே பயம் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. சென்னையில் பழகியவனுக்கு இதெல்லாம் சாதாரணம் போலும்…! தன்னால் உதவ முடியவில்லையே என்ற வருத்தம் இவருக்கு.

                        அதெல்லாம் பார்த்தா நடக்காதுப்பா…நல்ல ஸ்கூல். இடம் கிடைச்சதே பெரிய விஷயம். பணம் கட்டுங்கன்னு அவுங்க சொன்னதையே என்னால இன்னும் நம்ப முடில….அதிர்ஷ்டவசமாக் கிடைச்சுப் போச்சுன்னுதான் சொல்லணும்….அப்படிப்பட்ட ஸ்கூல்ல மற்ற அசௌகரியங்களையெல்லாம் பொருட்படுத்தக் கூடாதாக்கும்…இன்னும் கொஞ்ச நாள்ல ஸ்கூல் பஸ் விட்ருவாங்க….அதுல சேர்த்து விட்ருவோம்…அதுவரைக்கும் கொஞ்சம் சிரமம்தான்….

                        இப்படிச் சொல்லித் தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டு தினமும் கருமமே கண்ணாய்ச் செய்து கொண்டிருக்கிறான். மாலை மூணே காலுக்குப் பள்ளி விடும். போய்க் கூட்டி வர வேண்டும்.. இதற்கிடையில் ஆபீஸ் வேலையையும் நேரம் தவறாமல் குறைவின்றிப் பார்த்தாக வேண்டும்.

                        ஸ்கூல்ல அவனை விட்டுட்டு அப்டியே ஆபீஸ் போய் ஸ்வைப் பண்ணி, லாகின் பண்ணிட்டு மதியம்  ரெண்டு ரெண்டரைக்குக் கிளம்பி நேரடியா போயி மனோஜைக் கூட்டிட்டு வந்து வீட்டுல விட்டிட்டு திரும்பவும் ஆபீஸ் போயிடுவேன்….என்றான். பம்பரமாய்ச் சுழலுவது என்பார்களே…அப்படித்தான். சின்ன வயசுதான் என்றாலும் எந்த அலைச்சலுக்கும் ஒரு அளவில்லையா?

பெரு நகரமான சென்னையில் ஒவ்வொரு காரியத்திற்குமென்று தூர தூரமாய்ப் போக வேண்டியிருக்கிறது. அருகில் போனோம், வந்தோம் என்று இல்லை. பள்ளி அருகில் இருந்தால் கூட கொண்டு விட, கூட்டி வர என்று, தானே செய்யலாமே, இதில் அவனுக்கு உதவ முடியாமல் போய்விட்டதே என்று மனதுக்குள் வருந்திக் கொண்டிருந்தார் சதீஷ்வரன்.

                        சரி அதுதான் அப்படியென்றால் வீட்டில் இருந்து செய்யும் காரியங்களுக்குமா அவதி? அவர் மனது தாளவேயில்லை.  ஒரு பெண் வந்து சேர்ந்தும் மனையாளுக்கு எந்த உதவியும் இல்லை. அவள் எப்பொழுதும்போல் மாடாய் உழைத்தாள்.

                        மனசுக்குள்ளயே பொறுமிக்கொண்டிருந்தவர் பொறுக்க முடியாமல்தான் அப்படிக் கேட்டார். யாராவது ஒருத்தர் கேட்க வேண்டாமா? அப்படியா இருப்பது புகுந்த வீட்டில்? எதையும் கண்டு கொள்ளாமல், யாருக்கோ வந்த விருந்து என்பதைப் போல….? ஒரு சகஜபாவமே இல்லையே?

                        இப்டிப் பத்து வரைக்கும் தூங்கிட்டு சாவகாசமா எழுந்து வர்றியே…உனக்கு வெட்கமாயில்லே? குழந்தையை ரெடி பண்ணி ஸ்கூல் அனுப்புற வேலைகளச் செய்ய வேண்டாமா நீ?  உனக்குப் பங்கில்லையா? எதுவுமே கண்டுக்காம இருந்தா எப்படி? தினமும் பாடாப் படுறான் அவன்…நீபாட்டுக்கு இருப்பியா?

                        பிரவீணா இந்தக் கேள்விகளில் அசந்துதான் போனாள். பதிலாகக் கோபம்தான் கனன்றது. கேட்டது மாமனார். தன் புருஷன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாலும் பரவாயில்லை. அவனே வாயடைத்துக் கிடக்கும்போது இந்தக் கிழத்துக்கு என்ன வந்தது ஆத்திரம்? என்றுதான் தோன்றியது அவளுக்கு.  எங்கப்பா கேட்டாலே நான் செய்ய மாட்டேன். இவரென்ன கேட்கறது? கோணல் புத்தி.

                        காலைல எழுந்ததுலேர்ந்து அவனுக்குப் பல் தேய்ச்சுவிட, பால் கொடுக்க, பாத்ரூம் அலம்பி விட, குளிப்பாட்ட….ன்னு உறரிபரியா அவன் அல்லல்படுறானே…இத்தனையையும் காதுல வாங்கிட்டே சுருட்டி மடக்கிப் படுத்துக் கிடக்கியே…உனக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா இல்லியா? –தொடர்ச்சியாக அவர் வாயிலிருந்து அருவியாய்க் கொட்டியது ஆதங்கம்.

                        இது அத்தனையும் சற்று நேரத்தில் அவள் அப்பனுக்குப் போய்விடும். போகட்டும் என்றுதான் சொன்னார். அந்தாளாவது பொண்ணுக்குப் புத்தி சொல்லட்டும் என்று எதிர்பார்த்தார். அல்லது சண்டைக்கு வரட்டும். இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்…!

                        குளிப்பாட்டி முடிந்ததும் மனோஜூக்குத் துடைத்து விட்டு யூனிபார்ம் போட்டு, ஷூ மாட்டி, தலை வாரிப் பொட்டிட்டு ரெடி பண்ணி, காலை டிபன் ஊட்டிவிட்டு மற்றதையெல்லாம் முடித்து விடுகிறார் இவர். அதில் அவன் பங்கு சிரமங்களைக் கொஞ்சம் தான் வாங்கிக்கொண்ட திருப்தி அவருக்கு.

                        தன் வயதுக்கு இதெல்லாம் செய்ய வேண்டுமென்ற அவசியமில்லைதான். அந்தப் பெண் உருப்படியில்லையே? இவன் கிடந்து அல்லல்படுகிறானே என்கிற வயிற்றெரிச்சல்.  நீதான் சொல்லணும்…என்றும் சொல்லிப் பார்த்துவிட்டார். சொன்னால்தானே? தயங்குகிறான்.  பயப்படுகிறானோ? என்றும் சந்தேகம் இருந்தது. நல்லதைச் சொல்ல ஏன் பயப்பட வேண்டும்? ஏன் தயங்க வேண்டும்? அப்புறம் என்ன ஆம்பிளை இவன்?

                        பிரவீணாவின் முகம் அனலாய்த்தான் உப்பி நின்றது. குழந்தையைப் பள்ளியில் விட அவன் போயிருந்த நேரம்.  மிருணாளினி அடுப்படியில் கவனமாய் இருந்தாள். உரைக்கிற மாதிரி நல்லாக் கேட்கட்டும்…என்று வாளாவிருந்தாளோ என்னவோ? சொல்வதைத் தடுப்பதில்லையே? இவர் எதுக்குத் தலையைக் கொடுக்கிறார் என்கிற எண்ணமாகவும் இருக்கலாம்…!

                        கைக்குழந்தையோடு ராத்திரித் தூக்கமில்லாம நான் அவதிப்படுறேன்…அது தெரியுமா உங்களுக்கு? காலைல ஒரு மணி நேரம் தள்ளி எழுந்திரிச்சது உங்களுக்குக் குத்தமாப் போயிடுத்தாக்கும்? – சொல்லிவிட்டு அழும் என்று எதிர்பார்த்தார் சதீஷ்வரன். குத்துக் கல்லாய் நின்றது அது. மனசுக்குள் அவ்வளவவு ஆத்திரம்.  சரியான அமுக்குணி…இருக்கும் லட்சணத்தில் ரெண்டாவது வேறு. எது நடக்கிறதோ இல்லையோ இந்தக் காரியம் ஒழுங்காக ஆகிறது. அதுக்கேத்த பொறுப்பு வேண்டாமா? கைக் குழந்தை இருந்தா மத்த காரியங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறதா? முதல் பிள்ளையை யார் கவனிப்பது? இவர்கள் இருவரும் சேர்ந்துதானே கவனித்தாக வேண்டும்? வயசான எங்களுக்கென்ன வந்தது? ஏதோ அவ்வப்போது குழந்தையைக் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த வயசுக்கு அவ்வளவுதானே முடியும்? குழந்தையைப் பார்த்துக் கொள்ள, பராமரிக்கப் பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாதவர்கள் எதற்காக ரெண்டாவது பெற்றுக் கொள்ள வேண்டும்? அந்தந்த வயதில் அதற்கான பொறுப்பும் கடமையுணர்ச்சியும் வேண்டாமா? முடிலன்னா ஆளைப் போட்டுக்குங்க…!

                        பிள்ளை பெத்தா தாயாருக்குத் தூக்கம் போயிடும்னுதான் சொல்வாங்க…அதோட அதாத்தான் எல்லாமும் செய்தாகணும்…அதுதானே சுகமான சுமை? எல்லாத் தாய்மார்களும் அப்படித்தானே? நீ மட்டும் என்ன சொகுசா?  அதுக்காக காலைல பெரியவனை ஸ்கூல் அனுப்புறதுக்கு ரெடி பண்றது உன் வேலையில்லைன்னு சொல்றியா? அவனா எல்லாம் செய்துக்கிறதுக்குப் பழகற வரைக்கும் நாம செய்து விட வேண்டாமா? நானே செய்றேன்னு சந்தோஷமால்ல நீ வரணும்… குறைஞ்சபட்சம் அவன் பாத்ரூம் போனா அலம்பி விட, பல் தேய்ச்சுவிட, பால் கொடுக்கன்னு ஏதாச்சும் ரெண்டு வேலையையாச்சும் பகிர்ந்துக்கிட்டாத்தானே மத்தவங்களுக்கும் சிரமமில்லாம இருக்கும்? குளிப்பாட்ட, சாப்பிட வைக்க,  யூனிபார்ம் போட, ரெடி பண்ணன்னு மீதியை அவன் செஞ்சிப்பான்….ஸ்கூலுக்கு ஒரு நாள் விடாம மதியம் டிபனுக்கும், லெவன் ஓ கிளாக் ஸ்நேக்சுக்கும் உங்கம்மா  காலைல அஞ்சுக்கே எழுந்து ரெடி பண்றாளே…இந்த வயசான காலத்துல…அது உன் கண்ணுக்குத் தெரியுதா இல்லையா? நான் பண்றேன்னு ஒரு நாளைக்காச்சும் வந்து நின்னுருக்கியா?  எதையுமே கண்டுக்காம இழுத்துப் பொத்தித் தூங்குறதுக்கு உனக்கு எப்டி மனசு வருது? அட்டச் சோம்பேறியா நீ? கல்யாணம் ஆகுறதுக்கு முந்தி உங்க வீட்ல எப்டி இருந்தியோ அப்டியேவா புகுந்த வீட்லயும் இருப்பே? ரெண்டு குழந்தை வேறே பெத்துட்டே? அது ஒண்ணுதான் உன்னோட பிராக்ரஸ்….! அத நினைச்சுப் பெருமைப்பட்டுண்டு நாங்கள்லாம் கம்முன்னு கிடக்கணும்னு எதிர்பார்க்கிறியா? உனக்குன்னு அன்றாடக் கடமைகள் இருக்கா, இல்லையா? என்ன நினைச்சிக்கிட்டிருக்கே நீ?

                        கொட்டித் தீர்த்து விட்டார் சதீஷ்வரன். எப்படி இவ்வளவு கோர்வையாய்க் கேட்க முடிந்தது என்று அவருக்கே ஆச்சர்யம்…! பிரவீணாவுக்கு இவர்தான் மாமியார்!

                        தேர் மாதிரி ஆடி அசஞ்சு சாவகாசமா எழுந்து வருவே….உன் போக்குப் போல உன் காரியங்களை மட்டும் பார்த்துப்பே…வீட்டுல நடக்குற மத்த எதையும் கண்டுக்க மாட்டே…..கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்குள்ள நுழைஞ்ச ஒரு பொண்ணு இப்டியா இருக்கிறது? உறுத்தலே? இதத்தான் உங்கப்பன் உனக்குச் சொல்லித் தந்தானா? நல்லது எதுவுமே உன் மண்டைல ஏத்தலியா? இன்னொரு வீட்டுக்குப் போற பொண்ணை இப்டியா வளர்க்கிறது? அசிங்கமாயில்லே? வெட்கப்படணும் இதுக்காக…!

                        கொதித்துப் போய் வெடித்துக் கொண்டேயிருந்தார் சதீஷ்வரன். அவர் மனது தாளவேயில்லை. வயிறு எறிந்தது அவருக்கு. தன் மகனுக்கு இன்னும் சரியாய்ப் பார்க்காமல் அவசரத்தில் இந்தக் கல்யாணத்தைப் பண்ணி விட்டோம் என்று நினைத்தார். மிருணாளினியிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்தார்.  அந்த வேதனையிலேயே உயிரை விட்டு விடுவார் போலிருந்தது.  அநியாயமா அவசரப்பட்டுட்டனே…? என்று மனதுக்குள் புழுங்கினார். தனியாய் அழுதார்.

                        ருபத்தஞ்சுதான் ஆகுது அவனுக்கு. இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகலாம். நிதானமாப் பார்த்திருக்கலாம். அவசரப்பட்டுட்டோம்.  அவுங்க வீட்டுல சம்பந்தியோட அப்பா அம்மாவைப் பார்த்து, அவுங்க பொறுப்பான பேச்சைக் கேட்டு, அவுங்க இருப்பைக் கவனிச்சு நாம ஏமாந்துட்டோம்…அதே போலதான் இந்தாளும்னு நினைச்சிட்டோம். தலைமுறை இடைவெளில எவ்வளவெல்லாம் மாறியிருக்குன்னு சிந்தனை போகலை நமக்கு. அதுதான் நம்மளோட தலைவிதிங்கணும். ஆனா இந்த மனுஷன் தன் பொண்ணை இப்டி விட்டேத்தியா வளர்த்திருப்பான்னு நினைக்கவேயில்லை….ஆளைக் கண்டு மயங்காதே…ஊதுகாமாலைன்னான்…ஏதோ கொஞ்சம் பார்வையா இருக்கேன்னு சம்மதிச்சிட்டோம்…வெறுமே மினுக்கிட்டுத் திரியவா கல்யாணம் பண்ணி வைக்கிறது? பொறுப்பா இயங்க வேண்டாம்? எல்லாத்தையும் நம்ம பையன்ல இழுத்துப் போட்டு செய்ய வேண்டியிருக்கு? அவன் தலை எழுத்தை நாம எழுதிட்ட மாதிரியில்ல ஆயிப்போச்சு? கிடந்து மாய்டா…ங்கிற மாதிரி?

                        இந்த பாருங்க…இதெல்லாம் வெட்டிப் புலம்பல். நான்தான் உங்ககிட்டே சொன்னேன்ல…தனிக் குடித்தனம் வச்சிடுவம்னு…கூட இருந்தாத்தானே இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு? அவுங்க குடும்பத்தை அவுங்க பார்த்திட்டுப் போறாங்க…தனியா விட்டாத்தான் பொறுப்பு வரும் அவுங்களுக்கும்…எல்லாமும் நாமதான் செய்தாகணும்ங்கிற நிலைமைலதான் பொறுப்பு வரும்….

                        தனியா எங்கடி விடுறது? அந்த மனுஷன் வந்து உட்கார்ந்திடுவானாக்கும்…எப்படான்னு காத்திட்டிருக்கான்? நான் சமைக்கிறேன்னு வந்து நின்னுடுவான்…நல்லதாப்போச்சுன்னு இது வழக்கம்போல படுத்துத் தூங்க ஆரம்பிச்சிடும்.  தோசை வார்க்கிறேன்…இட்லி பண்றேன்…இன்னிக்கு இடியாப்பம் பண்ணுவோம்…தெருக்கோடில ஒரு கடைஇருக்கு…அங்க மசாலா நல்லாயிருக்கும். வாங்கிட்டு வந்திடுவோம்…மதியம் பிரியாணி பண்றேன்….அங்க நம்ம வீட்ல  பண்ணி எடுத்திட்டு வந்திடுறேன். இங்க நீங்க சமைக்க வேண்டாம்…எல்லாருக்கும் அங்க சமைச்சிடுறேன்..-ன்னு அலப்பரை பண்ணுவான் அந்தாளு…அவன் பொண்ணை வேலை செய்ய அனுமதிக்க மாட்டான். வேலைக்குப் பழக விட மாட்டான். மேலும் சோம்பேறி ஆக்கிடுவான்…சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாமத் தவிப்பான் நம்ம பையன். எங்களுக்கும் எல்லாமும் பழகணுமா வேண்டாமா…நீங்க வரக் கூடாதுன்னு அதுவும் சொல்லாது. அவனுக்கும் வாய் வராது….அந்தாள் ராஜ்யம்தான் இங்க நடக்குமாக்கும்…!

                        என்னவோ பண்ணிட்டுப் போறார்…உங்களுக்கென்ன…? எப்டியோ காரியம் ஆனாச் சரின்னு அவுங்க இருக்க வேண்டிதானே? யார் சமைச்சா என்ன சாப்டா என்ன? நம்ம வயிறு நிறைஞ்சா சரின்னு உங்க பையன் இருந்துக்கணும்…பிடிக்காத அன்னிக்கு ஆபீஸ் கேன்டீன்ல வயித்தை ரொப்பிக்கணும். அப்டியிப்படி சமாளிச்சு வண்டிய ஓட்டிக்க வேண்டிதான்….காலப்போக்குல எல்லாம் சரியாப் போகுமாக்கும்…இதுக்கு நாம ஏன் கிடந்து பாடாப் படணும்? – நன்றாய்த்தான் சொன்னாள்….ஆனால் இவருக்கு ஏற்கவில்லையே?

                        நீ என்னடீ ஒரு அம்மாவா இருந்திட்டு இப்டிப் பேசிட்டிருக்கே…? உன் பையனுக்கு கான்டீன்ல்லாம் பிடிக்காதாக்கும்…வயித்துக் கோளாறு வரும்னு சொல்லுவான். எண்ணெயும், மசாலாவும் அவனுக்கு ஆகவே ஆகாதாக்கும். இதெல்லாம் நானில்ல உனக்குச் சொல்ல வேண்டியிருக்கு? அம்மாவான உனக்கே தெரிய வேண்டாமா? உன் பிள்ளைக்கு உன் சமையல்தான் பிடிக்கும். அதுதான் வயித்துக்கு ஒத்துக்குமாக்கும்….அந்த மனுஷன் மாடர்ன் சமையல் சமைக்கிறேன்னு என்னென்னவோ பண்ணிட்டிருப்பான்…புஸ்தகத்தக் கையில் வச்சிட்டு அது இதுன்னு செய்ய ஆரம்பிச்சிடுவான். இந்தப் பொண்ணோட அம்மாவ எப்படி எதுக்கும் ஆகாம ஆக்கி வச்சிருக்கான் பார்த்தியா? ஒரு காப்பி கலக்கணுமானாக்கூட அந்தம்மாவுக்கு அரை மணி நேரம் ஆகும். அந்தளவுக்கு இடத்தை விட்டு அசையாத சோம்பேறி ஆக்கி வச்சிட்டான் அந்தாளு. இந்த அபத்தங்களையெல்லாம் நமக்கு யாரும் சொல்லலை. நாமும் கவனிக்கலை. அதனால இப்போ அனுபவிக்கிறோம். எல்லாமும் சேர்ந்து நம்ம பையன் தலைல விடிஞ்சிது….அவன் பாவம் அப்பாவி….மெல்லவும் முடியாம, முழுங்கவும் ஏலாமக் கிடந்து  தவிக்கிறான்…..

                         அந்தப் பொண்ணை அப்டியே ஏத்துக்க வேண்டிதான்னு சொல்றியே அது நடவாது…! இந்த வீட்டுக்கு ஏற்ற மாதிரி அந்தப் பெண் மாறித்தான் ஆகணும். அதுதான் சரி. மரு…மகள்னு இங்க வந்து சேர்ந்தாச்சில்ல…அப்புறம் இனி ஆயுசுக்கும்  இங்கதானே? பிறகென்ன…தன்னை மாத்திக்க வேண்டிதானே? பிறந்த வீட்டு சோம்பேறித்தனத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு புதுப் பெண்ணா வளைய வரணுமாக்கும்…சண்டித்தனமெல்லாம் பிறந்த வீட்டோட போச்சு….இங்க ஆகாது….!இன்னமும் சொல்லப்போனா சமத்தா இருந்து…நம்மள அது வழி நடத்தணும்…அதுதான் அதுக்கும் அழகு, இந்த வீட்டுக்கும் அம்சம்….!

                        கனவு காணாதீங்க…அதெல்லாம் நடக்கப் போறதில்லை…நீங்க சொல்றதெல்லாம் அந்தக் காலம்…! சண்டை போட்டுட்டே இருங்க…அதுதான் நடக்கப் போவுது…வீடு எப்பவும் போர்க்களமாவே இருக்கட்டும்….அவனே சும்மாக் கிடக்கான்…உங்களுக்கென்ன வந்தது? என்னத்தையோ சமைச்சமா சாப்டமான்னு மீதி நாட்களை ஓட்டாமே எதேதோ பேசிட்டிருக்கீங்களே…? – மிருணாளினி  ஒத்தைக்கு நிற்கத் தயாரில்லை என்று தெரிந்தது.  அவள் சப்போர்ட் இல்லாமல், தான் மட்டும் ஒற்றைத் தெரு நாய் போலக் குரைத்து என்ன பயன்? வீணாய்க் கெட்ட பெயர்….நல்லது சொன்னால் இந்தக் காலத்தில் அதுதானே பரிசாகக் கிடைக்கிறது…! தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்திருந்தார் சதீஷ்வரன். மனசு சமாதானமாகவே மாட்டேனென்கிறது.  தன்னுடைய புத்திகெட்ட தனத்தால் வந்த விளைவு என்று எண்ணி எண்ணிக் குமுறுகிறார்.

                        இன்னொரு வீட்டுக்குப் போற பொண்ணை இப்டியா வளர்க்கிறது? என்று கேட்டு வெட்கமாயில்லே? என்று வேறு தான் சொன்னதை அந்தப் பெண் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. உரைக்கவேயில்லையோ? அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டு விட்டது. ஒருவேளை அழ ஆரம்பித்திருக்குமோ? அழட்டும்…நன்றாய் அழட்டும்…அப்டியாவது புத்தி வரட்டும்…நாம நம்மை மாத்திக்கணும் என்று உணரட்டும்…கோத்திரமே மாறி இந்த வீட்டுப் பொண்ணுன்னு வந்து சேர்ந்தாச்சு…பிறகென்ன? எல்லாத்தையும் மாத்திக்க வேண்டிதானே? அவனுக்குத்தான் வாயில்லேன்னா நானுமா சொல்லாம இருக்க முடியும்? பிள்ளைப் பூச்சி மாதிரி இவன் இருப்பான்னு நினைக்கவேயில்லை. பயந்தோளிப் பய…! பொண்டாட்டிக்குப் பயப்படுறவன்…கோழையாத்தான் இருப்பான்…நல்லது சொல்ல…தைரியம் இல்லாதவன் என்ன ஆம்பளை? பையனையும் நினைத்து நினைத்து கோபம் கொப்பளித்தது அவருக்கு.  தன் பையன் இப்படி அமுக்குளியாய் இருப்பான் என்று எதிர்பார்க்கவேயில்லை இவர்.. இதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க வேண்டும். காமத்தின் வயப்பட்டிருப்பான். அதிலிருந்து மீள முடியாதவனாய்க் கிடந்து உழலுபவனாயிருக்கும். அதுவும் அவனை அதில் வீழ்த்தியிருக்கும். இரவில் காலைப் பிடித்து விடுகிறானோ என்னவோ?

  ஊர் உலகத்தில் இருப்பவனெல்லாம் ரெண்டு வருஷம் போகட்டும் மூணு கூட ஆகட்டும்…அப்புறம் பிள்ளை பெத்துக்குவோம் என்று தள்ளிப் போடுகையில்  சரியாக ஓராண்டில் ஒன்றை வெளியே தள்ளி விட்டானே இவன்? பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்த மாதிரி? ஒரு பேரப்பிள்ளை பிறந்ததில் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு பக்கம் இவன் இப்படி அவள் அடிவருடியாய் இருப்பான் என்று இவர் நினைக்கவேயில்லை. போதாக் குறைக்கு இப்போது ரெண்டாவது வேறு…! புளுக்…என்று பிதுக்கி எறிந்தாற்போல….!!

                        அம்மா இப்படி அடுப்படியில் கிடந்து சாகிறாளே என்று துளியாவது ஒரு சங்கடம் வேண்டாம்? வருத்தம் வேண்டாம்? இரக்கம் வேண்டாம்? சமையலுக்கு ஒரு ஆள் போடுறா என்று நூறு முறை சொல்லியாயிற்று. அதுபற்றி நினைப்பதேயில்லை. அந்தப் பெண்ணோ எதற்குமே வாய் திறப்பதில்லை. கலகலவென்ற பேச்சுமில்லை. மாமனார், மாமியார் என்கிற மரியாதையுமில்லை. இன்னொரு வீட்டு ஆள் என்கிற மாதிரி அந்த ரூமே கதியென்று கிடக்கிறது. இந்த வீட்டோடு இன்னும் எதுவும் ஒட்டவில்லை. மனதுக்குள் அன்பு எழவில்லை. தினமும் தவறாமல் தன் அப்பாவோடு ஒரு மணி நேரம்  போனில் பேசுகிறது. அந்தாள் என்னெல்லாம் அட்வைஸ் பண்ணுகிறானோ? அவன்தான் இந்தப் பெண்ணைக் கெடுக்கிறான். நல்லது சொல்லித் தந்தால் அது இப்படியிருக்குமா? அந்தாளுக்கே நல்லது தெரிந்திருந்தால்தானே சொல்லித் தர முடியும்? ஜாலிப் பேர்வழி…அர்த்தம் பொருத்தம் இல்லாமல் பணத்தை விரயமாக்கிக்கொண்டு, தேவையில்லாததையெல்லாம் வாங்கிச் சேர்த்துக் கொண்டு, அதுதான் நாகரீகம் என்கிற மயக்கத்தில் திரிபவன்….காலத்திற்கேற்றாற்போல் அப்டேட் ஆகுறாராம் ஐயா…! கிழிஞ்சது போ…! – சரியான  தத்தாரிக் கிறுக்கன்…!!

                        இந்த பார்…நீ அந்த வீட்டு மருமகள். அங்கே நடக்கிறதையெல்லாம் இங்க சொல்லக் கூடாது…என்ன செய்ய? என்று யோசனை கேட்கக் கூடாது. உன் புருஷன்ட்ட வேணும்னா கேட்டுக்கோ…இல்லையா…உன் மாமனார் மாமியார்ட்டக் கேட்டுக்கோ…அவங்கதான் இப்போ உன்னோட அப்பா, அம்மா…புரிஞ்சிதா? இனிமே இந்த மாதிரி என் கூடப் பேசுறதை விட்டிடு. அவுங்க கண்காணிச்சாங்கன்னா தப்பாப் போயிடும். அப்புறம் சண்டை வரும். பரஸ்பரம் நல்லுறவு இல்லாமப் போயிடும். உன் பேர்ல நம்பிக்கையில்லாமப் போயிடும்…தெரியுதா? அந்த வீட்டுக்குப் பொறுப்பான பொண்ணா வளைய வர்றதுதான் இனி உன் வேலையா, கடமையா இருக்கணும்…..மனசுல வச்சிக்கோ…உன் மீதி வாழ்க்கை அங்கேதான்…அவுங்களோடதான்…அந்த வம்சம் உன்னால தழைக்கணும்…

                        சொல்வானா அந்த ஆள்? அவனே ஒரு விட்டேற்றியான ஆளாயிற்றே…? பல விஷயங்களில் அந்த மனுஷனுக்கே நாம சொல்லிக் கொடுக்கணும் போலல்ல நடந்துக்கிறான்…அவனுக்கு எப்படி இப்படிப் பொறுப்பாப் பேச வரும்? அப்படிப் பொறுப்பாப் பேசற ஆளாயிருந்தாத்தான்…இந்தப் பொண்ணு இப்படி இருக்காதே இங்க…? அந்த மாதிரி நல்ல அடையாளம்தான் எதுவுமேயில்லையே? – எண்ணி எண்ணிப் பொறுமினார் சதீஷ்வரன். இதிலேயே தான் படுக்கையில் விழுந்து விடுவோமோ என்று அஞ்சினார்.  இருக்கும் மீதிக் காலத்திற்குத் தன் பையனுக்கு உதவியாய் இருந்து விட்டுக் கடைசி மூச்சை விடுவோம் என்று ஆண்டவனை வேண்டினார்.

கூடவே பெற்றோரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் இவன், வயசான தாய் தந்தையரை வசதியாய், பொறுப்புகளற்ற சுதந்திரமாய், சுகசௌகரியமாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டாமா? அந்தப் பெண்தான் ஜாலியாய் இருக்கிறது ஆடி அசைந்து கொண்டு…துரும்பைக் கூட நகர்த்தாமல் சோம்பிக் கிடக்கிறது. அட்டச் சோம்பேறி…அரதச் சோம்பெறி…!! சண்டி மாடு. .இவளானால் அடுப்படியில் கிடந்து மாய்கிறாள் நாள் முழுதும். இவரோ அவளுக்கு இயன்றவரை உதவியாய் இருந்து கழிக்கிறார். கடை கண்ணிகளுக்குப் போக என்று அலைகிறார். வீட்டில் சிறு சிறு வேலைகள் செய்கிறார். அவள் சொல்வதைப் பணிக்கிறார்.  இருவரும் என்றுதான் ஓய்வது? கிருஷ்ணா ராமா என்று எந்த நாளில்தான் தியானித்துக் கிடப்பது?

                        ள்ளேயிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. போச்சு…மொபைல் வீடியோ பார்க்க ஆரம்பிச்சாச்சு….-நினைக்க நினைக்க எரிச்சல் அதிகமாகியது இவருக்கு. இந்தப் பாழாய்ப் போன செல்போன் வந்தாலும் வந்தது. குஞ்சு குளுவான் விடாம அத்தனை பேர் கைகளிலும் ஒரு ஃபோன். எப்பப் பார்த்தாலும் ஏதாவது படங்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பது. சினிமா, வீடியோ, கிளிப்பிங்ஸ், விளையாட்டு…அரட்டை என்று ஏதாச்சும் ஒன்று…..இந்த வீட்டில் சதா கையில் அதோடு அலைவது அந்தப் பெண் மட்டும்தான். அது ஒன்றுதான் அதன் சொந்தம். மற்றதெல்லாம் தண்டம். யாரோடு அப்படி என்னதான் பேசுமோ? என்னவோ அறிவாளி போன்று ஒரு சிரிப்பு. கெக்கே…பிக்கே…என்று கனைப்பு….சராசரிப் பெண்ணுக்குரிய தன்மையே இல்லை. பெரிய லார்டு லபக்குதாஸ் என்ற நினைப்போ என்னவோ?

பி.இ. படித்த பெண்ணை வேலைக்குப் போக வேண்டாம் என்று வேறு சொல்லி விட்டான் இவன். அந்த வருவாயும் நின்றது. அதுகளுக்குத்தான். நாமளா வாங்கிக் கொள்ளப் போகிறோம். இருக்கும் பென்ஷனுக்கே செலவில்லை.  நிம்மதியாப் போச்சு என்று உட்கார்ந்து விட்டது அது. திங்க…தூங்க…சினிமாப் பார்க்க…பாட்டுக் கேட்க…வெளியில் போகலாம் என்று அவனை அனத்தி எடுத்துக் கிளப்ப, பெரிய பெரிய மால்கள் என்று அலைய, கண்டதையும் பர்சேஸ் பண்ண, ஓட்டலில் மூக்குப் பிடிக்கத் திங்க…பிறகு வயிற்று வலி என்று அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு சோம்பிக் கிடக்க…காசைக் கரியாக்க…சேமிப்பு என்பதே இவர்களுக்குத் தெரியுமா தெரியாதா? மாதத்தின் முதல் செலவு சேமிப்பு என்று இவர் தந்தையார் சொல்லிக் கொடுத்துப் பழக்கியதை நினைத்துக் கொள்வார் இவர். அதை இப்போது தன் மகனிடம் அமுல்படுத்த முடியவில்லையே? பென்ஷன் இல்லாத…அட…வேலையே நிரந்தரமில்லாத இவர்களின் ஜாப்பில் உடம்பில் தெம்பு இருக்கும்போதே ஏதாச்சும் கொஞ்சம் சேர்த்து வைத்துக் கொண்டால்தானே பிற்காலத்துக்கு உதவும்?  அந்தச் சிந்தனையே இல்லாமல் இருந்தால்? எவனாவது கொண்டு வந்து இந்தா வச்சிக்கோ என்று இனாமாய் நீட்டுவானா?

ஆசைகளே துன்பத்திற்குக் காரணம். ஆசைகள் இல்லாமல் இருக்க வேண்டுமானால் இளமையில் வறுமையில் அடிபட்டிருக்க வேண்டும். கஷ்டங்களை அனுபவித்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் காசின் அருமை தெரியும். சிக்கனத்தின் அவசியம் புரியும். எதுவுமே இல்லையே இவர்களிடம். ஏதோ மரத்திலிருந்து உலுப்புவது போலல்லவா காசை உலுப்பி சூரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்?

எதை எதை நினைத்துத்தான் வருத்தப்படுவது? உடம்பே தெம்பற்றுப் போனதாக உணர்ந்தார் சதீஷ்வரன். இறைவா…என்னைச் சீக்கிரம் எடுத்துக்கோ…! அவர் மனது இப்படித்தான் இறைஞ்சியது.

ம்மா…எப்பப் பார்த்தாலும் மொபைல்ல ஏதாச்சும் பார்த்திட்டேயிருப்பியா? எங்கூடப் பேசவே மாட்டியா? ரெண்டாம் கிளாஸ் படிக்கும் அவள் பையன் மனோஜூம் இதைக் கேட்டே விட்டான்.  கண்ணு கெட்டுப் போகும்மா…காது கேட்காது சதா இயர் ஃபோன் மாட்டிட்டிருந்தீன்னா…? – சின்னக் குழந்தைக்குத் தெரிவது கூட அந்தப் பெரிசுக்குத் தெரியவில்லை. அம்மா என்ன இப்படி இருக்கா? என்று அந்தக் குழந்தையும் அவளிடம் ஒட்டுவதேயில்லை. அதற்கு இவன் சொல்லிச் சொல்லி அந்த நல்ல பழக்கம் வந்திருக்கிறது. ஆனால் அவன் மனையாளிடம் இதை இம்ப்ளிமென்ட் பண்ண முடியவில்லை. வீட்டில் டி.வி.யை நிறுத்தி விட்டான். ஐம்பதாயிரம் ரூபாய் டி.வி…நாற்பத்திஎட்டு இஞ்ச்….வெறும் கறுப்பு போர்டு போல் தண்டத்திற்குத் தொங்கிக் கொண்டிருக்கிறது.

தாத்தா…தாத்தா..என்று இவரிடம் ஓடி வந்து விடும்தான்.  எங்கே…தியான ஸ்லோகம் சொல்லு…என்று கேட்கிறார் இவர். ஓரிரு முறை கேட்டதுதான்.  குழந்தைகளுக்குத்தான் எவ்வளவு ஞாபக சக்தி? பதினைந்து மணித் துளிகள் கொண்ட அந்த ஸ்லோகத்தை வரி விடாமல் எப்படித் துல்லியமாய் ஸ்பஷ்டமாய் ஒப்பிக்கிறான்? ஏற்ற இறக்கங்களோடு அவன் உச்சரிக்கும் அந்த ஸ்லோகம் காதுகளில் தேனாய்ப் பாய்கிறது இவருக்கு. இதைவிடவா ஒரு இறைத் தியானம் வேண்டும்? மனது உருகிப் போகிறதுதான்.

யோகா வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த காலங்களில் காந்தி மியூசியத்தை ஊரில் விடிகாலையில் சுற்றிச் சுற்றி வந்த போது குறைந்தது நூறு முறையாவது கேட்ட பின்னால்தான் அவருக்கே மனப்பாடமாகியது. குழந்தை சில முறைகள் கேட்டதோடு சரி…பிறகு அங்கங்கே திருத்தங்கள் கொஞ்சம் சொன்னார். பிடித்துக் கொண்டு விளாசுகிறதே இப்போது? ருத்ரம் கத்துக்கோ…அந்த ராகத்தோடு கேட்டு மனசுல ஏத்தணும்…மொத்த உடம்பும் சுத்தமாயிடும்…உடம்புல, நரம்புல மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி ஒரு ஸ்வர ரீங்காரம் தெய்வீகமா எப்பவும் ஓடிட்டேயிருக்கும்…ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி….அது ஒன்றுதான் அவர் மனதுக்கு நிம்மதி. அந்தக் குழந்தையுடன் கழிக்கும் பொழுதுகளில் தன் மன அவஸ்தைகளை அறவே  மறக்கிறார் சதீஷ்வரன். அது ஒன்றுதான் அவரது தற்போதைய சந்தோஷம்.

                        பாஸ்கரன் வண்டியேற்றும் சத்தம் கேட்டது. குழந்தையைப் பள்ளியில் விட்டுத் திரும்பியாயிற்று.

மக்கும் குப்பை….மக்கா குப்பை….பிரித்துப் போட்டா நலமாகும்…-பாட்டுச்சத்தம் கேட்க…விடுவிடுவென்று மாடி ஏறி வந்தவன்…குப்பை எடு…குப்பை எடு…என்று பதறினான் அவளைப் பார்த்து. சாவகாசமாய்த் தூக்கி வந்து அவனிடம் நீட்டினாள் பிரவீணா…!

நல்லவேளை…எடுத்து வந்தாவது கொடுக்கத் தெரிகிறதே…என்று நினைத்துக் கொண்டார் சதீஷ்வரன்.  ஒரு நாள் கூட கீழே இறங்கி அந்தக் குப்பை வண்டியில் கொண்டு சேர்த்ததில்லை. அம்மா…நீங்க குப்பை போடப் போனா இதையும் சேர்த்திடுங்க…என்று சொல்லி அது சேர்த்து வைத்த குப்பைப் பையையும் நீட்டி விடுகிறது. வாய் பேசாமல் வாங்கிப் போகிறாள் மிருணாளினி. அவள் ஒரு பயந்தாங்கொள்ளி.அதனால்தான் பையனும் அப்படியிருக்கிறான். தாயைப் போல பிள்ளை……அவள் அதைப் பொருட்படுத்துவதேயில்லை. பண்ணிப் பிரயோஜனமில்லை என்று உதறிவிட்டாளோ என்னவோ? அப்படி ஒரு ஜீவன் தன் வீட்டில் நடமாடிக்கொண்டிருக்கிறது என்றே அவள் கண்டு கொள்ளாதது போல்தான் இருந்தது. இவர்தான் பார்த்துப் பார்த்து, நினைத்து நினைத்துப்  பொறுமுகிறார். பாஸ்கரனும் கூட மனையாளோடு அட்ஜஸ்ட் ஆகிவிட்டானோ? அவ மாறாட்டா என்ன…நான் மாறிட்டுப் போறேன்….!! கழுதையோடு சேர்ந்த கட்டெறும்பு!

குறைந்த பட்சம் அவன் தேவைகளையாவது பூர்த்தி செய்து கொடுக்கிறதா அது? அதெல்லாம் தெரிந்தால்தானே? சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்தால்தானே வரும்?

உங்க துணிமணியெல்லாம் போட்டுட்டுப் போங்க…வாஷிங் மெஷின்ல போட்டு எடுத்து வைக்கிறேன்…. – ஒரு நாள் சொன்னதில்லை. எல்லாமும் மிருணாளினிதான் செய்கிறாள். அட…அந்த ரெண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைக்கென்று இருக்கும் யூனிபார்ம் துணிகளையாவது சேகரித்து, துவைத்து, மடித்து, அடுக்கி எடுத்து வைத்து…ஊறீம்…எதுவும் கிடையாது.

பாட்டி…எனக்கு நாளைக்கு மன்டே…ஒயிட் யூனிபார்ம்…ஒயிட் ஷூ…என்று மிருணாளினியிடம்தான் போய்ச் சொல்கிறது அது. சரிடா கண்ணு…பாட்டி எடுத்து வைக்கிறேம்ப்பா…ஷூவைக் கிளீன் பண்ணி வைக்கத் தாத்தாட்டச் சொல்லு…என்றாள். இவர் அழுக்கான ஷூவை சர்ஃப் போட்டு வாஷ் பண்ணி பளீரென்று வைத்தார். குழந்தைக்கு ஏக சந்தோஷம்….

எப்டி தாத்தா? புத்தம் புது ஷூவாட்டம் ஆயிடுச்சு? சூப்பர் தாத்தா…என்று சொல்லிக்கொண்டே ஓடி வந்து கட்டிக் கொண்டு முகத்தில் சப்புச் சப்பு என்று முத்தம் கொடுத்த போது அந்த ஜென்மமே ஈடேறி விட்டதாக உணர்ந்தார் சதீஷ்வரன்.

நல்ல வேளை இந்தக் குழந்தை பாக்கியமாவது கிட்டியிருக்கிறதே…அந்த மட்டும் புண்ணியம் செய்தோம்….எல்லாம் போகப் போகச் சரியாகும்…நாமென்ன காலம் பூராவும் இருந்தா பார்க்கப் போகிறோம்? இன்னைக்கோ…நாளைக்கோ…. என்று தேற்றிக் கொள்ள முயன்றார் சதீஷ்வரன்.  ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை…!

குப்பையைப் போட்டு விட்டு மேலே வந்த பாஸ்கரனை சரட்டென்று அறைக்குள் இழுத்துக் கொண்டது அந்தக் கை.  டப்பென்று கதவை உள்புறம் தாழ்ப்பாள் போடும்  சத்தமும் தொடர்ந்து கேட்டது.

உங்கம்மா அப்பாவோட இனியும் என்னால ஒண்ணா இருக்க முடியாது. ஒண்ணு அவுங்களக் கிளப்புங்க…இல்லன்னா நாம இந்த வீட்டை விட்டுப் போயிடுவோம்….பெங்களூர் போட்டுடுவாங்க போலிருக்குன்னு சொன்னீங்கல்ல…போயிடலாம்……உங்க அம்மா அப்பா இங்கே இருந்திட்டுப் போகட்டும். இந்த வீடு ஒண்ணும் நமக்கு வேண்டாம்….ஆனா நாம தனியாப் போயாகணும்…அதுவும் ஒரு மாசத்துக்குள்ள…நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது…இன்னைலர்ந்து முப்பது நாள்ல நாம பெங்களூர் போறோம்…தனியா இருக்கோம்…பையன் படிப்பு ஒரு வருஷம் போனாப் பரவாயில்ல…!  பார்த்துக்கலாம்…என்ன…நான் சொல்றது புரியுதா? மண்டைல ஏறிச்சா?

பிரவீணா…என்ன இது திடீர்னு? திடுதிப்னு இப்படிச் சொன்னா எப்டி?

அப்டித்தான்… நான் சொல்றபடி செய்றீங்களா இல்ல…நான் எங்க அப்பா வீட்டுக்குக் கிளம்பிப் போகட்டுமா? இனியும் என்னால பொறுக்க முடியாது…!  எனக்கு இந்த வீட்ல சுதந்திரமேயில்லை….வெறி பிடிச்சிரும் போலிருக்கு எனக்கு…!

-கதவுக்கு வெளியே காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தார் சதீஷ்வரன். என்ன…என்ன…? என்று சைகையால் வினவினாள் மிருணாளினி. அவள் முகமும் மாறித்தான் இருந்தது.  சற்றுப் பொறுத்து மெல்லப் பல்லைக் கடித்துக் கொண்டே அவரை அருகில் அழைத்து அவருக்கு மட்டும் கேட்பதுபோல் பாதி வார்த்தையும், பாவமுமாய் முனகினாள்…

இதுக்குத்தான் சொன்னேன்…உங்க திருவாயை மூடிட்டுப் பேசாமக் கிடங்கன்னு… கேட்டாத்தானே?…..வினையை மடில கட்டிட்டு யாராவது சகுனம் பார்ப்பாங்களா?

உண்மையில் தன் மருமகளுக்குத்தான் சதீஷ்வரன் என்று பெயர் வைத்திருக்க வேண்டுமென்று அந்தக் கணத்தில் நினைக்கத் தலைப்பட்டார் இவர்.   சதீஷ்வரி….சதீஷ்வரி…என்று அவர் வாய் பதற்றத்துடன்  முனக ஆரம்பித்திருந்தது.

 

                                               ----------------------------------

                       

             

 

             

கருத்துகள் இல்லை:

  இந்திரா பார்த்தசாரதி   - படைப்பு வாசிப்பனுபவம் - பேசும் புதிய சக்தி - ஜூலை 2025  பிரசுரம்         த மிழ் இலக்கியச் சூழலில் பல பழம் பெரும...