சிறுகதை கணையாழி மே 2025 பிரசுரம்
“தூ(பூ)ங்கா
நட்பு”
மாலையில் அந்தப் பூங்காவுக்குச் செல்வோமா வேண்டாமா என்கிற அளவுக்கு யோசிக்க ஆரம்பித்து விட்டார் ஜம்புகேஸ்வரன். தான் குடியிருக்கும் அந்தப் பகுதியில் வேறு எங்கு பூங்காக்கள் உள்ளன என்று அவர் மனம் தேட ஆரம்பித்திருந்தது. அங்கு போனாலும் எப்படியிருக்குமோ?. ஒரே மனக் கிலேசங்கள் அங்கும் உலா வராது என்பது என்ன நிச்சயம்?
அந்த
நகருக்குள் வந்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டனதான். ஆனால் பூங்கா என்று செல்ல
ஆரம்பித்தது பணி ஓய்வு பெற்ற பின்புதான். அந்த வழி கூட அவர் போனதில்லை. என்றாவது தப்பித்
தவறிப் போயிருந்தால் அங்கிருந்து எப்படி வீட்டுக்கு வந்து சேருவது என்று தடுமாறியிருக்கிறார்.
ஒரே ஒரு முறை அது நிகழ்ந்திருக்கிறது. பலரும்
பல வழிகளில் சர்ரு…புர்ரு…என்று வண்டியை விட்டுக் கொண்டு மாற்றி மாற்றி வெவ்வேறு பாதைகளில்
போய் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜம்புவுக்கு ஒரு வழிதான். அது அடைபட்டால் அருகில்
ஒரு குறுக்குச் சந்து. அதன் வழியாக வெளியேறி விடுவார். பெரும்பாலும் அந்த வழியைப் பின்பற்றுவதில்லை. காரணம்
அங்கு நாய்கள் அதிகம். குலைத்துக்கொண்டே சட்டென்று பாய்ந்து விட முடியும். அந்த அளவுக்குக்
குறுகலானது. வலியப் போய் வம்பை விலைக்கு வாங்குவானேன்?
இப்படிப்
பொழுதே போகாமல் நாட்கள் கழியும் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை. ஓய்வு பெற்று இன்னும்
ஓராண்டு கூடக் கழியவில்லை. அதற்குள் நாளும் பொழுதும் சித்ரவதையாக இருந்தது அவருக்கு.
சர்வீஸ் முடியும் தருவாயில் ஒரு திட்டம் வைத்திருந்தார். குறைந்தபட்சம் தமிழ்நாடு முழுவதுமாகவாவது சுற்றிப்
பார்த்து விடுவது என்று. முக்கிய ஊர்கள், ஸ்தலங்கள், கோயில்கள் என்று விபரங்களடங்கிய
சுற்றுலா நூல் ஒன்றும் வாங்கி பலவற்றை மனதில் ஏற்றி வைத்து ஆவலோடுதான் காத்திருந்தார். வீச்சும் விறைப்புமாக எடுத்த எடுப்பில் ஓய்வுக்கு மறுநாளே கிளம்பி பிள்ளையார்பட்டி
சென்று விநாயகரைக் கும்பிட்டு தன் பயணத்தை ஆரம்பித்து வைத்துக் கொண்டார். என்ன காரணத்தினாலோ
மறுநாளிலிருந்து அது நின்று போனது. எடுத்த எடுப்பிலேயே அப்படி முடங்கிப் போகும் என்று
அவர் எதிர்பார்க்கவேயில்லை. புஸ்வானம் ஆகிப்போனது.
எதற்காக
அப்படி நிறுத்தினோம் என்று இன்றும் யோசித்துப் பார்க்கிறார், புலப்படவில்லை. இருந்த
இடத்திலேயே அமர்ந்து புஸ்தகங்கள் படிக்கும் ஆர்வம் தன்னை முடக்கி விட்டதோ?. காலை டிபனை
முடித்து விட்டு ஒன்றரை கி.மீ. தூரத்தில் இருக்கும் ஆயுதப்படை நூலகத்துக்குச் சென்று
பத்திரிகைகளை, தினசரிகளை மேய்வதில் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் இல்லை என்று தோன்றிவிட்டது.
எதிர்த்தாற்போல்
இருக்கும் மாரியம்மன் கோயிலில் பூஜை மணி அடிக்கும் வேளை எழுந்து போய் அங்கு நிற்பதும்,
பிரசாதம் தரும்போது தொன்னையில் அதை வாங்கி வெளியே வந்து நிதானமாகச் சுவைப்பதுமான சாவகாச
சந்தோஷம் அவரை முடக்கி விட்டது. அது முடிந்த கையோடு திரும்பவும் நூலகத்தில் வந்து உட்கார்ந்து
படிக்க ஆரம்பிப்பதும், பதினொன்றரை வரை அங்கேயே கிடப்பதுமான பொழுதுகள் எதற்கு வெட்டிக்கு
அலைந்து கொண்டு என்று அவரை ஒரேயடியாக சோம்ப வைத்து விட்டன.. நூலகம் அருகில் ஒரு அடர்ந்து
பரந்து முதிர்ந்த மரம். அதைச் சுற்றி வட்டமாய் மேடை கட்டியிருந்தார்கள். ஜிலு ஜிலுவென்றிருந்தது.அங்கு
பலரும் வந்து உட்கார்ந்து விடுகிறார்கள். சிலர் படுத்து அயர்ந்து தூங்கியும் விடுகிறார்கள்.
நிற்சிந்தையான உறக்கம். இவருக்கும் ஆசை வந்துவிட்டது. மெல்ல மெல்லப் போய் அங்கு உட்கார
ஆரம்பித்தார். புதிதாய்ச் சேர்த்துக் கொள்வார்களோ மாட்டார்களோ என்ற சந்தேகம். யாரும்
ஒன்றும் சொல்லவில்லைதான். ஆஉறா…என்ன சுகம். மேடைத் தரை குளுகுளுவென்றிருந்தது. கண்ணைச்
சுற்றியது. படுத்தால் ஆளைச்சுருட்டி எங்கோ கொண்டு சென்றுவிடும். தினசரி வரும் ஆள்தான்
என்று தன்னை அந்த இடத்திற்குப் பழக்கப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். ஒன்று கவனித்தார்.
அங்கு யாரும் யாருடனும் ஒரு வார்த்தை பேசிக் கொள்வதில்லை. தெரிந்தவர்களாகவே காட்டிக்
கொள்வதில்லை. இடம் பிடிக்கப் போட்டி. நாடு சுதந்திரம் அடைந்தபோது வந்து படுத்தவங்க…என்று
ஏதோவோர் படத்தில் வசனம் வருவதை நினைத்துக் கொண்டார்.யாரும் எதுவும் பேசிக்கொள்ளாதது
சற்றுப் புதுமையாக இருந்தது. தன் பயணத் திட்டம் நின்று போனது இப்படி ஒரு இடத்தைக் கண்டு
பிடிப்பதற்குத்தானோ? என்று நினைத்துச் சிரித்துக் கொண்டார் ஜம்புகேஸ்வரன். தொடர்ந்திருக்கும்தான்.
அதற்கு வேறொரு புதிய காரணம் தோன்றியது அவர் மனதில்.
கூட யாராவது இருந்தால்
பரவாயில்லை என்பதுதான். தன்னைப்போல் ஆர்வமுள்ள இன்னொருவர் துணைக்குக் கிடைத்தால் தன்
பயணம் விடாது தொடரும் வாய்ப்புண்டு என்று அவர் மனம் சொல்லியது. நொண்டிக் கழுதைக்கு
சறுக்கினது சாக்கு. மனிதன் தன் செயல்களுக்கு, முடக்கங்களுக்குக் காரணங்களைத் தேடிச்
சமாதானமடைகிறான். பல முயற்சிகள் இப்படித்தான்
வீணடிக்கப்பட்டு விடுகின்றன. அவரை விட இரண்டு வயது பெரியவள் அவர் மனைவி ஜெகதாம்பாள்.
காதல் மனைவி. வயது தடையில்லாமல் போனது. முன்பே அவளும் பணியிலிருந்து
ஓய்வு பெற்று விட்டவள். அவளாவது கூட வருகிறேன் என்றாளா? என்னாலெல்லாம் அப்படி அலைய
முடியாது என்று ஒரே வரியில் முடித்துக் கொண்டாள். பென்ஷன் வருது, தாராளமா செலவு பண்ணலாம்,
போற எடத்துல ரூம் போடறேன். வசதியாத் தங்கிக்கலாம், நல்ல ஓட்டலாப் பார்த்து சாப்பிடலாம்…ஒண்ணும்
பயமில்லை என்று எல்லாமும் சொல்லித்தான் பார்த்தார்.
இங்க இருக்கிற கோயில் குளங்களுக்குப்
போனாப் போதும் எனக்கு..என்று விட்டாள். மனமே
கோயில்தான். தனிமையில் அமர்ந்து தியானிக்க முடியாதா? பயிற்சியில் அந்தப் பலன் கிட்டாமலா
போய்விடும்? இவருக்கும் அப்படித்தான் தோன்றியது. இசை கேட்பதில், கண்மூடி தியானிப்பதில் எப்பொழுதும்
ஆர்வம் இருந்தது. தனிமையை விரும்பாதவன், தனிமையில்
இருக்க முடியாதவன், இருக்கத் தெரியாதவன் ஒரு மனிதனே அல்ல என்பது இவரின் வாதம்.
அந்தத் தனிமை உணர்வுதான் அவரை இப்போது
தள்ளி வைத்து விட்டதோ என்று தோன்றியது. இல்லையென்றால் அந்த தண்டீஸ்வரம் பூங்காவிற்குச்
செல்லத்தான் வேண்டுமா என்று இப்போது ஏன் தோன்ற வேண்டும்? வெறுமே நடைப் பயிற்சி செய்து விட்டு ஆசுவாசமாக அமர்ந்தால் அதுவே அரட்டைக்கும்
வம்பிற்குமான இடமாகப் பரிணமித்து, இதையெல்லாம் பேசித்தான் ஆக வேண்டுமா? என்று தோன்றுமளவுக்கு
அவரை ஒதுக்கி வைத்து விட்டது.
எப்போதுமே அடுத்தவர்பற்றிப் பேசுவதில், வெட்டி அரட்டை
அடிப்பதில் அவருக்கு ஈடுபாடு இருந்ததில்லை. தானுண்டு. தன் வேலையுண்டு…அவ்வளவுதான்.
மொத்த சர்வீசும் அவர் அப்படித்தான் கழித்திருக்கிறார். அதனாலேயே அவரைப் பலருக்கும்
பிடித்திருந்தது. இந்தாளால எந்த வம்பும் இல்லப்பா…பிரச்னையில்லாத ஆசாமி…!
ஒவ்வொருவருடைய தனிப்பட்ட
வாழ்க்கையை அறிந்து கொள்வதிலும் அதுபற்றி விமர்சித்துப் பேசுவதிலும்தான் இந்த மனிதர்களுக்கு
எவ்வளவு ஆர்வம்? எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவா வாழ்க்கை அமைந்து விடுகிறது? குடும்பச்
சூழ்நிலை வெவ்வேறு மாதிரித்தான் இருக்கிறது. அதற்கேற்றாற்போல் அவரவர் இருப்புகள் மாறுகின்றன.
ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் கேலிக்குரியவையா? விமர்சனத்திற்குட்பட்டவையா?
என்ன மனிதர்கள்? வேம்பு சாரின் வம்பளப்பு அந்த ரகமாய்த்தான் இருந்தது. அநியாய வாய்…என்று
நினைத்து பயந்தார் ஜம்புகேஸ்வரன்.
என்ன ஜம்பு சார்….போதும்…போதும் எத்தனை
ரவுன்ட் அடிப்பீங்க…வந்து உட்காருங்க….! - - உட்காரவே வேண்டாம்…நடந்தே கழிப்போம்…அப்படியே
யாரும் குறிப்பாக நோக்காத வேளையில் வெளியே நழுவி விடுவோம் என்றிருந்தவரைக் கவனித்து
சத்தமாய்க் கூப்பிட்டார் வேம்புநாதன்.
பெயருக்கேற்றாற்போல் கசப்புதான்
அவர் பேச்சு. போய் உட்கார்ந்தால் ஒரு நல்லது அவர் வாயிலிருந்து வராது. தன் மன வருத்தங்களை
மறைப்பதற்காகவே இப்படியிருக்கிறாரோ என்றும் தோன்றியது இவருக்கு. சொந்த வாழ்க்கையின் சிக்கல்கள் மனித வக்கிரங்களை
உருவாக்குகிறதோ என்று நினைத்தார்.
உங்களுக்கு சங்கதி தெரியுமா?
பாலரமணி பையனுக்கு பெங்களூர் மாறுதல் ஆயிடுச்சாம்…இன்னும் ஒரு மாசத்துக்குள்ள போயிடுவானாம்.
அவன் மட்டுமில்லே….பொண்டாட்டியையும் கூட்டிட்டுப் போறானாம்…இவரைப் பார்த்துத்தான் கூறினார்.
எப்படிப் பதில் சொல்லாமல் இருப்பது?
அதெப்படிங்க…ஸ்கூல் ஆரம்பிச்சு
நாலு மாசம் ஆகப் போவுது…ஒரு சின்னப் பையன் பேரன் உண்டுல்ல….ரெண்டோ மூணோ படிக்கிறான்னு
சொல்லுவாரே…அவன் படிப்பு? - ஒரு வருஷம் போனாப் போகுது…பார்த்துக்கலாம்ங்குதாம்
பையன் ஒய்ஃப்பு? பெங்களூர் போயே ஆகணும்னு ஒத்தக் கால்ல நிக்குதாம்…..!
உங்க காதுக்கு வந்திருச்சா
செய்தி? நீங்கதான் இந்தப் பார்க்குக்கு ரேடியோ….!
அதெல்லாம் எப்டியும் தெரிஞ்சு
போகும்ல…! அந்தத் தெருவுல உள்ளவங்க ரெண்டு
பேர் இந்தப் பார்க்குக்கு வர்றாங்கல்ல…அத விடுங்க…இந்த மனுஷன் சதா தன் மருமகளைக் குறை
சொல்லிட்டே இருந்திருக்காரு….அது பிரச்னையாயிடுச்சு….அதான் விஷயம்….நாம கவனிக்க வேண்டியது
அதுதான்…..
அடுத்தவர் விஷயத்தில் இந்த
மனுஷனுக்கத்தான் எம்பட்டு அக்கறை?
அது அவுங்க குடும்ப விஷயம்…நமக்கெதுக்குங்க…நாம
எப்பயும் போல சாயங்காலம் இங்க வந்தமா, நடந்தமா, ரெஸ்ட் எடுத்தமா கிளம்பினமான்னு இருக்க
வேண்டிதானே? இந்த வம்பெல்லாம் நமக்கெதுக்கு….?
நீங்க என்ன ஒரேயடியாச்
சலிச்சிக்கிறீங்க…? என்றார் வேம்புநாதன். தான் சொன்னது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது
தெரிந்தது. இதையெல்லாம் என்கிட்டே சொல்லாதீங்க…எனக்குப் பிடிக்காது…எதுக்கு அநாவசியமா
வம்பு பேசிட்டு….? என்றே வெளிப்படையாய்ச் சொல்லத்தான் நினைத்தார். தினசரி அங்கு சந்திக்கும் அவரை ஏன் அநாவசியமாய்ப்
பகைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது. அதனால் மேம்போக்காகச் சொன்னார். ஆனால்
அதுவே பிடிக்கவில்லையே இந்தாளுக்கு?
என் ஸ்வாரஸ்யத்த நேத்து
வந்த நீ கெடுப்பியா?
வெறுமே பேசுறதுல என்ன தப்பு
சார்…பொழுது போன மாதிரி இருக்கும்ல? நமக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இடம் மாறுகிறார். அதச்
சொன்னேன்…ரொம்ப நாளாவே மருமகளுக்கும் அவுங்களுக்கும் இடைல புகைச்சல் இருந்திருக்கு…அந்தப்
பொண்ணு வீட்டுல ஒரு வேலையும் செய்யாதாம். துரும்பைக் கூட நகர்த்தாதாம். கைக்குழந்தை
வேறே. அதயாவது அதுவே பார்த்துக்கிட்டா சரின்னு இவுங்க இருக்க…அது என்ன பண்ணுமாம்…நடு
உறால்ல கொண்டு வந்து குழந்தையைத் தரைல விட்டுட்டு, ரூமுக்குள்ள போய்க் கதவை அடைச்சிக்கிடுமாம். அப்போ இவுங்க யாராச்சும் எடுத்துத்தானே ஆகணும்.
இவுரு ஓடி ஓடிப்போய் எடுத்துக்குவாராம். வேறே வழி?
இதிலென்ன தப்பு இருக்கு…வீட்ல
இருக்கிற பெரியவங்க குழந்தைகளப் பார்த்துக்கிறதுக்குத்தானே இருக்காங்க…தன்னோட பேரக்
குழந்தையைத்தானே பார்த்துக்கிறாங்க…சந்தோஷமாச் செய்ய வேண்டிதானே? – விட்டுக்கொடுக்காமல்
பேசினார் ஜம்புகேஸ்வரன்.
வேம்புவின் கெட்ட எண்ணங்களுக்கு
ஆதரவு என்று எந்த முனையிலும் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதே அவரது நினைப்பாக இருந்தது.
தனக்கு அவரது பேச்சுப் பிடிக்கவில்லை என்பதை அவரது அபிப்பிராயங்களை நிராகரிப்பதன் மூலம்
உணர்த்தி, அவரிடமிருந்து விலக்குப் பெற வேண்டும் என்பதே ஜம்புவின் தீர்மானமாயிருந்தது.
இன்னும் தெரியுமா? அந்த
மருமகப் பொண்ணு காலைல தினமும் பத்து மணிக்குத்தான் படுக்கையை விட்டே எழுந்திருக்குமாம்.
அடைச்ச கதவு அடைச்சமேனிக்கே கிடக்கும். அங்கயிருக்கிற டாய்லெட்டை யூஸ் பண்ண முடியாம
இவர் ரூமுக்கு வந்து நுழைஞ்சிக்குவானாம் பையன். இவர் என்ன புலம்புறார்னா வயசான எனக்கு
ஆத்திர அவசரத்துக்கு சட்டுன்னு ஒண்ணுக்குப் போகக் கூட முடிலங்கங்கிறார். அடக்க முடிலங்க…இவன்
போய்க் கதவைச் சாத்திக்கிறான்னு அழறார் பாலரமணி.
வெஸ்டர்ன் டாய்லெட் இவர்
ரூம்லதான் இருக்காம்…அவனுக்கும் அடிக்கடி தொடை வலி, கால்வலி வருதுன்னு அங்கதான் வந்து
குந்திக்கிறானாம். இதுனால என்ன பிரச்னைன்னா பையனுக்கும் இவருக்கும் சண்டை. வெளிக்குப்
போறதுல பிரச்னை…சொல்லிவிட்டு சத்தமாய்ச் சிரித்தார். வாய் நிறைய அவுல்.
குளிக்கிறது கூடவா அந்த
பாத்ரூம்ல செய்யக் கூடாது, அதுக்கும் இங்கதானான்னு கேட்டுருக்கார். அவ தூக்கம் கலைஞ்சிடும்,
குழந்தை எழுந்திரிச்சிடும்னு சொல்லியிருக்கான். அவன் பெண்டாட்டி மேலே இருக்கிற அக்கறை
துளிக்கூடத் தன்மேல இல்ல பாருங்க அவனுக்குன்னு என்கிட்டே சொல்லி ஆதங்கப்படுறார். குளிக்கப்போனா
அரை மணி நேரம்…அப்டி என்னதான் தேய்ச்சுத் தேய்ச்சுக் குளிப்பானோ அந்த ஆண்டவனுக்குத்தான்
வெளிச்சம்…டாய்லெட் போனா பதினஞ்சு நிமிஷம்னு இவனுக்கே பாத்ரூம் எங்கேஜ்டா இருந்தா…நான் என் வசதிபோல எப்பப்
போறது? வீட்டுல ஒரு வயசான மனுஷன் இருக்கானேங்கிற கரிசனம், மரியாதை இல்ல பாருங்க…எம் பொண்டாட்டியும் சொல்ல மாட்டேங்கிறா…அப்பா
பாவம்டா…அவருக்கு இடைஞ்சல் ஏற்படுறமாதிரி செய்யாதேன்னிருக்கா…அவன் கேட்டாத்தானே…பொண்டாட்டிக்குப்
பயந்த பய…ன்னு திட்டுறார். என்கிட்டே புலம்பி என்ன பண்ண? அவன் பையன்டல்ல சொல்லணும்?
தாங்கமாட்டாமச் சொல்லித்தான் சண்டை பெரிசாயிடுச்சி போல….இப்போ அது பெங்களூர்ல போய்
நிக்குது…!. –
கோர்வையாய் வேம்புநாதன்
எடுத்து வைத்தது இவரைப் பெரிதும் சங்கடப்படுத்தத்தான் செய்தது. அடுத்தவர் கஷ்டங்களை உள்வாங்கித் தன்னுடைய துயரங்களை
மறக்கிறாரோ என்றும் தோன்றியது. அவர் வீட்டில் என்ன பிரச்னை என்று யாருக்குத் தெரியும்? ஒரு நாளும் அவர் அப்படி எதுவும் சொன்னதில்லை. ஒரு
மனிதனுக்கு வீட்டில் சதா பிரச்னைகள் இருந்தால் எப்படியும் அது வெளியே வந்து விடும்தான்.
யாரிடமாவது சொல்லி, தன் மனபாரத்தைக் குறைத்துக்
கொள்ள வேண்டுமென்று முயலுவதுதான் மனித இயற்கை. எதிராளிக்குப் பிடிக்கிறதோ இல்லையோ என்று
இறக்கி வைக்க முயலுவது இயல்பு. அதற்கு சரியான,
சமாதானமான எதிர் வினை கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, யாரிடமாவது
புலம்பித் தீர்ப்பது பரஸ்பரம் நிகழ்ந்து கொண்டிருக்கும் உலக நடப்புகள் என்றுதான் ஜம்புகேஸ்வரன்
நினைத்தார்.
ஆனால் வேம்புநாதன் அதில்
இன்பம் காண்பது போல் தோற்றமளித்ததுதான் இவருக்குப் பிடிக்கவில்லை. இந்த மனிதனிடம் மாட்டினால்
நாளைக்கு நம் கதையையும் அரசல் புரசலாகக் கேட்டு, திரித்து வெளியிடுவான்…அந்த அளவுக்கு
வம்பு தும்பு பேசித் தன் பொழுதை இன்பமாக்கிக் கொள்ளும் இயல்பு கொண்டவன் இந்த ஆள் என்று
யோசித்தே விலக ஆரம்பித்தார் ஜம்புகேஸ்வரன். வெட்டி அரட்டைக்கு நான்தான் கிடைத்தேனா?
தண்டீஸ்வரம் பூங்காவில் அவருக்குத் தெரிய
மற்ற யாரும் வேம்புநாதனைப் போல் வம்பு பேசும் ஆசாமிகளாய்த் தோன்றவில்லை. நடைப் பயிற்சிக்காக
வரும் பலரும் அதை முறையே முடித்துவிட்டு வெளியேறிக் கொண்டிருப்பதே வழக்கமாய் இருந்தது.
ஏழு மணிக்கு டிங்…டிங்…டிங்…என்று மணியடித்துக் கொண்டு வந்து நிற்கும் போளி விற்பவர் அங்கிருந்த பலரையும் தன் கைபாகத்தால் கட்டிப்
போட்டிருந்தார். போளிக்கென்ன பெரிய கைபாகம் வேண்டிக் கிடக்கிறது என்று தோன்றலாம்தான்.
அதிலும் சில நுணுக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது
என்பது அதைத் தொடர்ந்து வளைச்சுக் கட்டுபவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியாய்
இருந்தது. ஜீரா போளி, தேங்காய் போளி, பருப்பு போளி என்ற வகை மாதிரியில் போட்டு முடியாமலும்,
கொடுத்து முடியாமலும்தான் திணறிக் கொண்டிருந்தார் கடைக்காரர். ராத்திரி பூராவும் போளி
போட்டு அடுக்கினாலும் தின்று தீர்ப்பார்கள் போலிருக்கிறது. ஆனாலும் இந்த சீனியர் சிட்டிசன்சுக்கு
அநியாய நாக்கு ருசி.
என்றோ ஒரு நாள் ஆசைக்குச்
சாப்பிட்டால் சரி. அதுவேவா வழக்கமாய் வைத்துக் கொள்வது? அல்லது புதிது புதிதாய் அங்கே ஆட்கள் அனுதினமும் பூங்காவுக்கென்று
வந்து கொண்டிருக்கிறார்களா? தினசரி வழக்கமாய் அதைத் தின்காவிட்டால் அன்றைய பொழுது சாபல்யமடைந்ததாக
ஆகாது என்று கங்கணம் கட்டிக்கொண்டது போலல்லவா சென்று மண்டுகிறார்கள். இவர்களுக்கு யார்தான்
எடுத்துச் சொல்வது? அவர்கள் வயசுக்கு அந்தத் தீனி ஆகுமா? நாக்கு அப்படியா இழுக்கிறது.
ஒரு பக்கம் பாவமாகவும், பரிதாபமாகவும்தான் இருந்தது இவருக்கு. தனக்கு ஏன் இப்படியான
ஆசையெல்லாம் இல்லை என்று நினைத்துப் பார்த்தார்.
சிறு வயது முதலே விரும்பியது கிடைத்ததில்லை. வறுமையும், கஷ்டமும், தரித்திரமும்
பிடுங்கித் தின்றது. அதனால் எதையும் தின்ன ஆசைப்பட்டதுமில்லை. எனவே அந்தப் பழக்கம்
இப்போதுமில்லை.
அப்படி என்னதான் பெரிய
டேஸ்டு அது என்று அறிய ஒரு நாள் போய் இவரும் நிற்கத்தான் செய்தார். தீர்ந்திடுச்சு
சார்…என்று விட்டார் அவர். முகத்திலறைந்தாற்போல் இருந்தது இவருக்கு. அதோ…ரெண்டு வச்சிருக்காப்ல
இருக்கே…? என்று சட்டியில் கிடந்ததைச் சுட்டிக் காட்டினார். அது வீட்டுக்கு சார்…பிள்ளைங்களுக்கு….-
என்ற போது இவர் வாய் அடைத்தே போனது. ஆசையும் வடிந்து போனது.
ஆசைப்படாதவன் எதற்குமே.
எப்போதுமே ஆசைப்படக்கூடாதுதான். அல்ப விஷயம் என்றாலுமே அவனுக்கு அங்கேயும் ஒரு ஏமாற்றம்
காத்துக் கொண்டுதான் இருக்கும். தன்னுடைய இருப்பு என்பது எல்லாவற்றிலுமிருந்தும் விலகி
நிற்பதுதான். நாக்கு ருசியையும் அதில் சேர்த்துக்
கொள்ள வேண்டியதுதான்.
சர்வீசில் இருக்கும் காலத்திலேயே அவர்
அப்படி இருந்ததில்லை. அலுவலகத்திற்கு வந்து போகும் கான்ட்ராக்டர்கள் தங்களின் காரியம்
ஆக வேண்டும் என்பதற்காக சுதந்திரமாக இயங்குவார்கள். அவர்களுக்கு யார் இந்த அனுமதியைக்
கொடுத்தது என்று எண்ணி ஆச்சரியப்படும்முன் சர்வ சகஜமாக எல்லாமும் புழங்க ஆரம்பித்து
விடும் அங்கே. அதிகாரத்தை அவர்களே கையில் எடுத்துக் கொள்வார்கள். எல்லாம் பணம் பண்ணும்
வேலை.
இந்தாப்பா…மொத்தம் எத்தனை
பேருன்னு எண்ணிக்க…எதுத்தாப்ல போய் வெண்மணி டீ ஸ்டால்ல நான் சொன்னேன்னு தனித்தனியாப்
பார்சல் போட்டு வாங்கிட்டு வந்திடு. அப்டியே கேத்தல்லா சூடா டீயையும் கொண்டாரச் சொல்லு…..சாருக்கு
டீயா…காபியான்னு கேட்டு தனியா வாங்கிக் கொடு…..ஒருத்தர் விடக்கூடாது…
ரொம்ப வருஷமாக இயங்கிக்
கொண்டிருக்கும் ஒப்பந்ததாரர்கள். அவர்களை விட்டால், மீறி அங்கே யாரும் நுழைந்து விட
முடியாது. திட்டப்பணிகளெல்லாம் அவர்களுக்குத்தான். எப்படிப்பட்ட வேலைகளானாலும் அவர்கள்தான்
செய்வார்கள். எல்லாவற்றிற்கும் ஆட்கள் வைத்திருந்தார்கள். ஆட்டைத் தூக்கி மாட்டில்
போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டில் போட்டு கஜகர்ணமடிக்கத் தெரிந்தவர்கள்.
அப்பொழுதெல்லாம் கூடத்
தனக்கு வேண்டாம் என்று விடுவார் ஜம்புகேஸ்வரன். கான்ட்ராக்டரே டேபிளுக்கு எதிரே உட்கார்ந்து
பரிமாறுவார். இலையோடு தள்ளி விட்டிருக்கிறார்.
அதான் வேணாம்னு சொல்றேன்ல….! என்று கடிந்து கொண்டார் இவர். அதற்குப்பின் அவர்கள் இவரைப்
பொருட்படுத்தியதேயில்லை. அவர்களுக்கா காரியமாற்றிக்கொள்ளத் தெரியாது? எப்படியோ தொலையட்டும்.
நமக்குத் தலைவலி இல்லாமல் இருந்தால் சரி என்று இருந்திருக்கிறார் இவர். ஆபீசே இவரை
மதிக்காத தன்மைதான். கிளார்க்குகள் கூட அந்த ஃபைல் என்னாச்சு? இது என்னாச்சு? என்றால்
சரியாய் பதில் சொல்ல மாட்டார்கள். இந்தாள் அனத்தல் வேறே?
உடனே பில்லுப் போட்டு இன்னைக்கே
டிரஷரிக்கு அனுப்பணும்ங்கிறாங்க…எம்.புக் எழுதியாகணும்னு கான்ட்ராக்டர் உட்கார்ந்திருக்காரு…நாளைக்கே
பணம் வேணும்ங்கிறாரு…இல்லன்னா சைட்ல வேலை நின்னு போகும்னு பயமுறுத்துறாரு…நீங்க என்னடான்னா
ஃபைலைக் கேட்குறீங்க..ஸ்கீம் ஒர்க் ஃபர்ஸ்ட்…மத்ததெல்லாம் அப்புறம்தான்னு பாஸ் சொல்றார்…எங்களுக்கென்ன
பத்துக் கையா இருக்கு…நீங்க வேறே நெருக்கினா எப்படி? – என்று இவரையே மதிக்காமல் அலுத்துக்
கொண்டார்கள் எழுத்தர்கள். ஆமை புகுந்த வீடு விளங்காது என்பது சரிதான் என்று உணர்ந்தார்.
காசுபுழங்கும் இடத்தில் அது ஒன்றுக்குத்தான் மரியாதை. மனித எத்தனங்களுக்கு மதிப்பேது?
என்னவோ நடக்கட்டும் என்று வாளாவிருக்க ஆரம்பித்தார்.
ஒப்பந்ததாரர்களுக்குக்
கொடுக்க என்று காசான பட்டியல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. அவைகளுக்குத்தான்
முன்னுரிமை. நிதியாண்டு இறுதிக்குள் திட்டப் பணிகள் முடித்தாக வேண்டும். முடித்தாகிறதோ
இல்லையோ காசாக்கியாக வேண்டும். பிறகு கூட வேலைகளைச் சாவகாசமாக ஓரிரு மாதங்களில் முடித்துக்
கொள்வார்கள். டப்பு இல்லையென்றால் எங்கும் எதுவும் ஆகாது.
பணப்புழக்கம் மிகுந்த அலுவலகத்தில்
வந்து இப்படி வகையாய் மாட்டிக் கொண்டோமே என்று பயமாய் இருந்தது ஜம்புவுக்கு. திட்டப்
பணிகள் அல்லாமல் நிர்வாக ரீதியில் மட்டும் இயங்கும் அலுவலகத்திற்கு எப்படியாவது மாற்றல்
வாங்கிக் கொண்டு போயாக வேண்டும் என்று அவர் மனது துடித்தது. அந்த முறைதான் ஒரு அமைச்சர்
மூலம் முயற்சித்தார். அதுவும் பணியாளர்கள் சங்கத்து ஆட்கள் பண்ணிக் கொடுத்தது. கொஞ்சம்
கைக்காசு செலவாயிற்றுதான். வேறு வழி? யப்பாடா…ஆள விடுங்கப்பா…! என்று ஓடியே வந்து விட்டார்.
அப்போதிருந்து ஓய்வு பெறும் வரை மாற்றமேதுமில்லை. தலைமை அலுவலகத்திற்கு இவர மாதிரி
ஆள்தான் லாயக்கு என்று ஆணியடித்து உட்கார வைத்து விட்டார்கள். நிர்வாகப் புலி. ஒரு
மொத்த ஆபீசையே பொறுப்பாய் விட்டு விட்டுகவலைப்படாமல் இருக்கலாம். எல்லாவற்றையும் எடுத்துச்
சுமக்கத்தான் இவர் இருக்கிறாரே? என்று மொத்த மாவட்டத்துக்கும் இவரைத்தான் இண்டு இணுக்கு
என்று அணுகினார்கள். அத்தனை பேருக்கும் முகம் சுளிக்காமல் வேணுங்கிறதைச் செய்து கொடுத்தார்.
அவரால் பலனடையாதவர் எவருமில்லை என்றாகிப் போனது. அதுவே அவரின் நிலைத்த புகழுக்குக்
காரணமாகி அங்கேயே அவரைச் சிலையாய் உட்கார வைத்து விட்டது.
அப்படியே இருந்து கழித்து வயது முதிர்வில் வெளியே வந்தவர்தான். போதுண்டாப்பா
உங்க சங்காத்தம்? என்று தோன்றிவிட்டது. அதற்குப்பின்னும் ஃபைலைத் தூக்கிக்கொண்டு வீடு
தேடி வந்தார்கள்தான். துரும்பை நகர்த்த முடியாது என்று மறுத்து விட்டார். கை வைத்தால்
பிறகு வளரும். முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கும். ஓசிக்கு அப்படி மாறடிக்க வேண்டும்
என்று என்ன அவசியம்?
இப்போது எவரும் வருவதில்லை.
அவரை மறந்தே விட்டார்கள் என்றே சொல்லலாம். தனக்கு ஆக வேண்டிய காரியம் என்று அந்த அலுவலகத்தின்
மூலமாக ஏதுமில்லை. எல்லாவற்றையும் தான் இருக்கையிலேயே வழித்தெடுத்துப் பெற்றுக் கொண்டாயிற்று.
இனி அவர்களின் சகவாசம் எதற்கு? லஞ்சப் பேர்வழிகளோடு எதற்குத் திரும்பத் திரும்பக் கை
கோர்த்துக்கொண்டு? ஒருத்தர் மாற்றி ஒருத்தர் என்று வந்துகொண்டேயிருப்பார்கள். சாருக்கு
ஏதாச்சும் காசு கொடுத்துச் சரி பண்ணிக்கலாம் என்று வந்து நிற்பார்கள். மூளையைச் செலவு
பண்ணாமல் கெட்டித்து வைத்திருப்பவர்கள். அடுத்தவன் முதுகிலேயே குதிரை ஏறி காலத்தை ஓட்டி
விடலாம் என்று நினைப்பவர்கள். இவர்களோடு நட்பாய் இருந்தாலென்ன இல்லாவிட்டால்தான் என்ன?
– விட்டு உதறி வருஷம் இரண்டாகப் போகிறது.
நரி வலம் போனால் என்ன இடம்
போனால் என்ன? என்று இருப்பவருக்கு வேம்பு நாதனின் நட்பே வேண்டாம் என்றுதான் சமீப நாட்களில்
தோன்ற ஆரம்பித்திருந்தது. அன்றாடம் பூங்காவில் சந்திக்கும் சாதாரணப் பழக்கம்தான். அதை
நட்பு என்று எப்படிச் சொல்லிக் கொள்வது? நட்பு என்பது ஆத்மார்த்தமானது. அப்படி எதுவுமில்லையே?
அவ்வாறிருக்கையில் இவர் பேசும் வம்புக்கு நாம் அநாவசியத்திற்குத் தலையைக் கொடுப்பானேன்? மதித்துக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்ததே தப்பு
என்றல்லவா ஆகிப் போனது. அப்படி நினைக்க ஆரம்பித்த வேளையில்தானே மற்ற யாரும் அவரிடம்
நெருங்காததை உணர முடிந்தது இவரால்? சச்சதுரமாய் நடைபயின்று கொண்டிருக்கையிலேயே தூர
இருந்து கைதூக்கி ஒரு சல்யூட் அடித்துவிட்டு விலகிச் செல்பவர்கள்தான் இருந்தார்கள்.
பக்கத்தில் நெருக்கமாய் வந்து தான் மட்டுமே கேனைத்தனமாய் அவரோடு பேசிக் கொண்டிருக்கிறோமோ
என்று விபரீதமாய்ப் புரிய ஆரம்பித்திருந்தது இவருக்கு.
கூட உட்கார்ந்து வம்பளக்கிறதுக்கு
ஒரு ஆளப் பிடிச்சிட்டார் போல்ருக்கு… என்று யாரோ பேசிக் கொண்டே தலைக்குப் பின்புறம்
நடந்து சென்று கொண்டிருந்தது அவர் காதுகளில் விழுந்து விட்டதுதான் இவரைத் துணுக்குறச்
செய்து விட்டது. ஏற்கனவே இந்தாள் என்ன இப்படியிருக்காரு என்கிற எண்ணத்தில் பழகிக்கொண்டிருந்தவருக்கு
அன்றுதான் கடைசி சந்திப்பு என்று உறுதிப்பட்டது.
ஆனாலும் வேம்புநாதன் வரும்
அந்தப் பூங்காவிற்கு அவரால் செல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் வருகிறாரே என்று பூங்காவையே
புறக்கணிக்க முடியுமா? அவரோடு பழகிய எத்தனை பேர் இன்னும் விடாமல் அங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்?
அவர்களெல்லாம் என்ன சண்டையா போட்டார்கள்? வம்பளக்க நாங்கள் தயாராயில்லை என்றுதானே அவரிடம்
சிக்காமல், அருகில் சென்று பேச்சுக்கு உட்காராமல் நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்?
அந்தப் பிறரைப் போல் தானும் இருந்துவிட்டுப் போக வேண்டியதுதானே…? பலவாறு நினைத்துக்
குழம்பிப் கொண்டிருந்தார் ஜம்புகேஸ்வரன். அடுத்த ரெண்டு நாட்கள் ஏன் பூங்காவிற்குப்
போகாமல் இருந்தோம் என்றே அவருக்குத் தெரியவில்லை.
உடம்பில் ரொம்பவும் சோம்பேறித்தனம் வளர்ந்திருந்தது. யாருக்காக யார் முடங்குவது?
உலகம் பலவிதம். மனிதர்களும் பலவிதம்தான். ஒருவருக்காக ஒருவர் தன்னை மட்டுப் படுத்திக்
கொள்ள வேண்டுமா? இந்த மனுஷன் தன்னை ரொம்பவும் தொந்தரவு பண்ணி விட்டாரே? இருக்கிற சொந்தப்
பிரச்னைகள் போதாதென்று இது வேறையா? இறைத்தன்மைத்தான செயல்பாடுகளில் கவனம் செலுத்தினால்
இம்மாதிரி மன மாச்சரியங்களெல்லாம் படிப்படியாகக் குறையும் வாய்ப்பு உண்டுதான். அதை
நமக்கு நாமேதான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்தான். யாரேனும் வந்து பாடம் நடத்துவார்களா
என்ன? தன் அர்த்தமற்ற முடக்கத்துக்காக வருந்தினார் ஜம்புகேஸ்வரன். உடம்பையும் மனதையும்
உற்சாகமாய் வைத்துக்கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது என்று நினைத்து சமாதானம்
செய்து கொண்டார்.
என்ன ஜம்பு சார்….கிளம்பலியா பார்க்குக்கு…?
– வாசலில் புதுக் குரல் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்தார் ஜம்புகேஸ்வரன். பராசரன்
நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நாலு வீடு தள்ளிக் குடியிருக்கும் நன்மையான நபர்.
வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரை வைத்துத்தான் கணக்குத் திறந்ததும், லாக்கர்
பெற்றதும், புதிய சேமிப்புகளை உருவாக்கியதும்…மிகவும் உதவியாய் இருந்திருக்கிறார்தான்.
அதிசயமா இருக்கு…? நீங்களும்
வர்றீங்களா….? – என்றார் ஜம்பு.
ஆம்மா….யாராச்சும் துணையிருந்தாத்தான்
ஏதேனும் காரியம் ஆகும் போல்ருக்கு…! இல்லன்னா ரொம்ப சோம்பிப் போகுது…வாங்க போவோம்….உங்ககூட
நானும் கொஞ்சம் நடை பழகிக்கிறேனே? காலும் கையும் கெஞ்சுதே…
ஓ…தாராளமா….அப்போ தினமும்
இந்த டயத்துக்கு வந்திடுங்க…சேர்ந்து கிளம்பிடுவோம்… - உற்சாகமாகச் சொன்னார் ஜம்புகேஸ்வரன்.
தன்னோடெல்லாம் அவர் சேர
வாய்ப்பில்லை என்று ஜம்பு நினைத்திருந்தார். அத்தோடு இது நாள்வரை நடைப் பயிற்சிக்கெல்லாம்
சென்றவருமில்லை. வீட்டிலேயேதான் அடைந்து கிடப்பார். ஓரொரு நாள் மொட்டை மாடியில் நடந்து
கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார். இன்று அவரே கிளம்பி வந்து இப்படிக் கேட்டது அதிசயம்தான்.
வேம்புநாதனின் வம்பளப்பிலிருந்து தப்பிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று சட்டென்று
மனதில் தோன்றிவிட்டது ஜம்புவுக்கு.
கிளம்புங்க…என்றவாறே உற்சாகமாய்
செருப்பை மாட்டிக் கொண்டு புறப்பட்டார் ஜம்புகேஸ்வரன். பார்க்குக்குச் சென்று நடக்க
ஆரம்பித்தவர் வேம்புநாதன் வந்திருக்கிறாரா
இல்லையா என்று கூட அவரது வழக்கமான இருக்கைப் பக்கம் திரும்பவேயில்லை. திரும்பிப் பார்த்தால்
எங்கே சத்தமாய்க் கூப்பிட்டு விடுவாரோ என்று பயந்தார். அதனாலேயே அவரது இருக்கைக்குப்
பின்னால் வரும் நடை வழியைத் தவிர்த்து வளைந்து செல்லும் விலகிய இன்னொரு பகுதியில்…வாங்க
இப்படிப் போகலாம்…தூரம் கொஞ்சம் அதிகமாகும்….என்று சொல்லி பராசரனையும் இழுத்துக் கொண்டு
திசையை மாற்றி நடந்தார்.
என்னதான் பாதையை மாற்றிக்
கொண்டு நடந்தாலும் வேம்புநாதனின் சத்தமான பேச்சும், உரத்த சிரிப்பும் அந்தப் பூங்கா
முழுவதும் எதிரொலிக்கும்தான்.. அது பலருக்கும் பரிச்சயமான ஒரு குரல். அப்படியிருப்பவரிடமிருந்துதான்,
ஒதுங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதும், அந்த மனநிலைக்கு ஆளானதும் சற்றே சங்கடத்தை
ஏற்படுத்தத்தான் செய்திருந்தது ஜம்புகேஸ்வரனுக்கு. ஆனால் இப்போது பராசரனின் வருகை அவருக்கு
ஒரு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. அத்தோடு அவர் ஏதோ ஸ்லோகம் ஒன்றை சற்றே சத்தமாய்
உச்சரித்துக் கொண்டு கூடவே நடந்தது இவருக்கு இதமாக இருந்தது. மனதுக்குப் பிடித்தும்
இருந்தது. காதால் கேட்டாலே புண்ணியம் என்று நினைக்கத் தலைப்பட்டார். சற்று முன்னால்,
பின்னால் நடப்பவர்கள் என்று ஒரு முறை அவரைத் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள். ஸ்லோகத்தின் ஸ்பஷ்டமான உச்சரிப்பு அவர்களை ஈர்த்திருக்க
வேண்டும்.
நேரம் போனதே தெரியவில்லைதான்.
எத்தனை ரௌன்ட் வந்தோம் என்றே எண்ணவில்லை. தான் வேகமா அல்லது பராசரன் வேகமா என்று கண்காணித்ததுபோல்
நடை போட்டதில் உடம்பிற்குப் புதிய தெம்பும் உற்சாகமும் கூடியிருப்பதாக ஜம்புகேஸ்வரன்
உணர்ந்தார்.
போதும், முடிச்சிக்குவமா?
என்று பராசரன் கேட்டபோது மொத்த தூரத்தில் பாதி
கடந்திருப்பதை உணர்ந்தார்கள் இருவரும்.
முக்கால் மணி நேரத்துக்கும்
மேலே ஆயிடுச்சு…இல்ல? ஓ.கே….போதும்…போகலாம்…என்றார் ஜம்புகேஸ்வரன்.
வாயிலைக் கடந்து பூங்காவை
விட்டு வெளியேறும்போது தெரு விளக்குகள் சட்டுச் சட்டென்று எரிய ஆரம்பித்தன. டிங்…டிங்…டிங்…என்ற
மணிச் சத்தத்தோடு போளி வண்டி வேகமாய் வந்து கொண்டிருந்தது. பின்னால் திரும்பிப் பார்த்தார். பூங்காவில் உள்ள
அனைத்து விளக்குகளும் போடப்பட்டிருந்தன. சுற்றிலும் நல்ல வெளிச்சம் பரவியிருந்தது.
மனதில் சட்டென்று ஏதோ தோன்ற தள்ளி மூலையிலிருந்த வேம்புநாதனின் இருக்கை நோக்கி அவர்
பார்வை போனது. அந்தப் பகுதி சற்றே இருள் சூழ்ந்து தெரியும். கவனித்துக் குறிப்பாய்
நோக்க வேண்டும்.
இடம் வெறுமையாயிருந்தது.
அப்போ இத்தனை நேரம் அவர் இல்லாமத்தான் சுத்தியிருக்கமா என்று நினைத்துக் கொண்டார் ஜம்பு.
மறுநாள் காலையில் அந்தச் செய்தி அவர் காதுக்கு வந்தது.
வேம்புநாதன் திடீர் உறார்ட் அட்டாக்கில் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருக்கிறார்……!.
அன்று பூங்கா நடைப் பயிற்சிக்குச்
செல்லாமல் கிளம்பிப் போய் அவரைப் பார்த்து வர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்
ஜம்புகேஸ்வரன்.
பராசரனிடம் இந்த விபரத்தைச்
சொன்னபோது, நானும் வரேன்…சேர்ந்து போய்ப் பார்த்திட்டு வருவோம்…எனறு உற்சாகமாய் அவர்
கிளம்பியது இவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
இந்தப் பார்க்கோட முதல்
மெம்பர் அவர்தானாமே? கார்ப்பரேஷனுக்கு எழுதி லைட்டெல்லாம் போட வச்சு, ஆழ்துளைக்கிணறு தோண்டி தண்ணிக்கு ஏற்பாடு பண்ணி…மெயின்டனன்சுக்கு ஆள் போட்டு பலதும்
பண்ணியிருக்கார் போல்ருக்கே…! போயிட்டு வருவோம்…புறப்படுங்க….
–
வேம்புநாதனைப் பற்றி அவர்
அறிந்து வைத்திருந்ததில் ஒன்று கூடத் தனக்குத் தெரியாது என்று நினைத்த போது கொஞ்சம்
வெட்கமாகவே இருந்தது இவருக்கு. பராசரனின் வேகத்தைப் பார்த்து ஆச்சரியமாயிருந்தது. வேம்புநாதனுடன்
கொஞ்சமும் பழகாத அவரின் மனிதாபிமானப் போக்கும், தன்மையும், விட்டு ஒதுங்குவோம் என்றிருந்த ஜம்புகேஸ்வரனின் மனநிலையைத் தடுமாற வைத்தது.
--------------------------------------
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக