22 மே 2025

 

சிறுகதை               பேசும் புதிய சக்தி - மே 2025 இதழ் பிரசுரம் 

“பின்னோக்கிய அதிர்வுகள்“





ப்போது என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்திருந்தது பிரம்மராஜனின் மனம். முதலிலேயே இந்த யோசனை தோன்றாமல் போய்விட்டதே என்றும் வருந்தியது. அவசரக் குடுக்கை என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டார்.

            முதலில் செய்தது சரி. இரண்டாம் முறை செய்ததும் சரிதான். அப்போதைக்குத்தான் சரி அது.   பின்னால் இம்மாதிரி இடைஞ்சலை ஏற்படுத்தக் கூடும் என்பதான யோசனை பிறகுதானே வந்தது. ஏன் அது முதலிலேயே தோன்றவில்லை? இதற்குத்தான் எதற்கும் அவசரப்படக் கூடாது, ஆற அமர யோசித்து, நிதானித்து, ஒரு சரியான முடிவுக்கு வந்து செயலாற்ற வேண்டும் என்பது.

            தன்னுடைய காரியங்கள் எல்லாமும் எப்பொழுதுமே ஒரு அவசர கதியில் நிகழ்ந்து விடுவதாக நினைத்து சங்கடமாயிருந்தது இவருக்கு. நிகழ்ந்து விடுகிறது என்றால், தன்னை மீறி என்றுதானே பொருள்.  அந்தக் குறிப்பிட்ட கட்டத்தில் தனக்கு ஏன் ஒரு நிதானமில்லை? பொறு, அவசரப்படாதே…! என்று அதே மனசு ஏன் தடுத்து நிறுத்தவில்லை? அறிவு பத்தாதோ?

            வயதுதான் ஆகிறதேயொழிய இன்னும் பல காரியங்களில் நிதானமின்றித்தான்  செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. அறுபது வயதுக்கு மேல்தான் பலருக்கும் நிதானம் வருகிறது என்று சொல்கிறார்கள். தனக்கு அறுபத்தைந்து என்று எட்டியும் இன்னும் அது கைகூடவில்லை. எதுவுமே கைகூடவில்லை என்றே சொல்லலாம்தான்.

            நளினியிடமாவது ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். கேட்டால்  என்ன சொல்லப்போகிறாள்…வேண்டாம்…வேண்டாம்…அதெல்லாம் தப்பு…பண்ணாதீங்க….என்றுதான் சொல்லியிருப்பாள். அவள் பதில் அதுவாகத்தான் இருக்கும் என்று ஊகிக்க முடிந்த தனக்கு, அதைத் தனக்குத்தானே சொல்லி நிறுத்திக் கொள்ளத் துப்பில்லை.…அதுதான் பரிதாபம்.

            ருவர் ஒரு நாவல்தான் அனுப்ப வேண்டும் என்பது விதி. அந்த விதிக்குக் கட்டுப்பட்டு குறிப்பிட்ட தேதிக்குள் அந்த ஒரு நாவலை அனுப்பியாயிற்று. அத்தோடு முடிந்ததுதானே விஷயம்? விட்டுவிட வேண்டியதுதானே? பிறகும் என்ன நப்பாசை…? நப்பாசையா அது…குசும்பு!! தவறல்லவா? அது ஏன் தோணாமல் போயிற்று?

            ச்சே…! அனுப்பின அந்த நாவலுக்குப் பதிலா இப்ப எழுதி முடிச்ச புதிய நாவலை அனுப்பியிருக்கலாம்…அநியாயமாத் தோணாமப் போச்சு….!!

            -இந்த வயிற்றெரிச்சல் தோன்றியபோதுதானே அந்தப் புதிய யோசனையும் தோன்றியது? புதிய யோசனையா அது? விபரீத யோசனை…அதுதானே சரி.

            இப்போது வலிந்து படித்துப் பார்க்கும்போது தெரிகிறது. அனுப்பிய அந்த முதலை விட இந்த இரண்டாவது பெட்டர் என்று. எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்கிற ஆவல்தானே தன்னை அப்படி உழைக்க வைத்தது. ஊக்கமுற வைத்தது! எத்தனை நாள் ராத்திரி இதற்காகக் கண் முழித்திருப்பேன்? வீட்டு வேலைகளைக் கூடக் கவனிக்காமல் இதே நினைப்பாகத் திரிந்தேனே! உங்களால ஒரு உதவி உண்டா என்று எத்தனை முறை நளினி சலித்துக் கொண்டாள்? கொஞ்ச நாளைக்கு எதுவும் எங்கிட்டச் சொல்லாதே என்று அவள் வாயை அடைத்தேனே? ஏதாவது கேட்க வந்தால்கூட எரிந்து எரிந்து விழுந்தேனே? கோயிலுக்குப் போயிட்டு வரலாம், சினிமாப் போகலாம் என்று கேட்டபோதெல்லாம் கோபப்பட்டேனே?

            நாவல் எழுதுபவர்களெல்லாம் இப்படியா இருந்து கொண்டிருக்கிறார்கள்? பைத்தியம் பிடித்தவன் போலவா அலைகிறார்கள்? சதாசர்வகாலமும் அந்த நினைப்பிலேயேவா பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்? ராத்திரித் தூக்கத்தில் திடுதிப்பென்று விழுந்தடித்து எழுந்து உட்கார்ந்து மற்றவர் தூக்கத்தையும் கெடுத்து, லைட்டைப் போட்டுக்கொண்டு அமர்ந்து பேயாய் டைப் செய்து கொண்டிருப்பவர்கள்தான் எழுத்தாளர்களா?

            எதுக்கு இப்டி மென்டலா அலையுறீங்க? – கேட்டாளே!

            வீட்டிலுள்ளோரின் தூக்கம் கெடுகிறதே என்று என்றேனும் நினைத்திருப்பேனா? அவர்களுக்கான தொந்தரவுபற்றி நினைத்தேனா?  கொக்குக்கு ஒண்ணே மதி என்பதுபோல் நடந்து கொண்டேனே?

            விழுந்து விழுந்து எழுதி, கடைசியில் அதைப் போட்டிக்கு அனுப்பி வைக்கையில் யாராவது தப்புப் பண்ணுவார்களா? படைப்பாளிக்கு அவன் எழுத்தில் எப்போதும் பெருமைதான். சரி…இருக்கட்டும். ஆனால் இரண்டில் எது பெஸ்ட் என்பதை நிர்ணயிக்கத் தெரிய வேண்டாமா? அப்புறம் என்ன பெரிய படைப்பாளி?

            ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்காமல், ரொம்ப நேரம் யோசித்துக் கடைசியில் கணக்கைத் தப்பாய்ப் போடும் மாணவன்போல் ஆகி விட்டதே என் கதை.

            இத்தனைக்கும் கடைசித் தேதிக்குப் பத்து நாள் மீதமிருந்தது. அதற்குள் என்ன அவசரம்? இ.மெயிலில் அனுப்புவதுதானே? கடைசி நாளைக்குக் கூட அனுப்பிக் கொள்ளலாமே? ராத்திரி பன்னிரெண்டு மணி வரை டைம் உண்டே!

            எல்லாம் இப்போது யோசிக்கத் தெரிகிறது. ஆனால் உரிய காலத்தில் உரிய முறையில் செய்யத் தெரியவில்லை.

            உரிய காலத்தில் செய்தாயிற்றுதான். ஆனால் உரிய முறையில் செய்யவில்லையே?

            ஏற்கனவே எழுதி வைத்திருந்த நாவலை விட, புதிதாய் எழுதிய நாவல்தான் நன்றாய் வந்திருந்தது. அதுவே பரிசுக்கு உரியதாய்த் தேர்வு பெறும் வாய்ப்பை பலமாகக் கொண்டிருக்கிறது என்று மனசு சொல்கிறது. பரிசு என்று கிடைக்காவிட்டாலும் கூட புத்தகமாகப் போடவாகவேனும் தேர்வாகும் தகுதி அதற்குண்டு என்ற நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது.

            எவ்வளவோ புதிய எழுத்தாளர்கள் வந்து விட்டார்கள். இளைய தலைமுறை எழுத்தாளர்கள். என்னென்னவோ புதிய புதிய விஷயங்களையெல்லாம் களமாகக் கொண்டு நாவலைப் பின்னுகிறார்கள். இன்றைய பாஷையில் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். அங்கெல்லாம் போய், குறைந்தது ஓராண்டாவது இருந்து ஸ்டடி பண்ணினால்தான் இப்படியெல்லாம் எழுத முடியும் என்று நினைக்குமளவுக்கு  சர்வ சகஜமாக, யதார்த்தமாக, அனுபவ ரீதியாக வார்த்தைகளில்  வித்தை பயின்று நாவலைப் படைக்கிறார்கள். பெருத்த ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. புத்தகங்கள் வரும் வேகத்திற்கு வாங்கிப் படிக்க முடியுமா என்று பிரமிக்க வைக்கிறது இன்று வரும் ஆக்கங்கள். நாம் பின்தங்கி விட்டோமோ என்று பயம் கொள்கிறது மனம். விழுமியங்களான விஷயங்களுக்கு இனிமேல் மதிப்பில்லையோ என்று எண்ண வைக்கிறது.

            முதலில் அனுப்பியது சரி.  அத்தோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம். கேட்டதுக்கு ஒரு நாவல் அனுப்பியாச்சு. அது போதும் என்று சிவனே என்று இருந்திருக்கலாம்.

இரண்டாவது முறை செய்ததுதான் தப்பாய்ப் போயிற்று. ஆசை…அது யாரை விட்டது? எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி. அப்படியானால் அதை வேறு ஏதாவது போட்டி அறிவிப்பு வரும்போது அனுப்பியிருக்கலாமே? அதுவரை பொறுக்க ஏன் மனசில்லை?  புதிய நாவலைத் திருத்தித் திருத்தி இன்னும்  மெருகேற்றியிருக்கலாமே? பக்கங்களைக் கூடக் கூட்டியிருக்கலாமே?

            எழுத்தின் மீது நம்பிக்கையிருந்தால், படைப்பு நன்றாக உருப்பெற்றிருக்கிறது என்று திடமானால் காத்திருக்கலாமே. இன்னும் எத்தனையோ வாய்ப்புகள் வருமே? அதற்குள் என்ன அவசரம்?

            பதறாத காரியம் சிதறாது. இப்போது பதறியாயிற்று. சிதறி விட்டது.

            ச்சே…! மரமண்டை…!! என் புத்திய செருப்பால அடிக்கணும்…..!!

            எதுக்கு? இல்ல…எதுக்குங்கிறேன்? கிராமத்து வீட்டு முகவரில, அப்பாவோட பேர்ல…அந்த இரண்டாவது நாவலை அனுப்பினதுல என்ன தப்பு? ஃபோன் நம்பரும் வேறேதானே கொடுத்திருக்கு? இ.மெயிலே வேறையாச்சே? எப்படிக் கண்டு பிடிக்க முடியும்? என்னோட அசல் பெயர்தான் தெரியாதே? அப்பாவோட பேரோட கிராமத்து வீட்டு முகவரில  பக்காவா அனுப்பியிருக்கேன். எவன் கண்டு பிடிக்கப் போறான்? ஒருத்தனுக்கும் தெரியப் போறதில்லை. அப்புறம் எதுக்குப் பயப்படணும்?

            நினைப்பெல்லாம் நல்லாத்தான் இருக்குது. ஆனா அந்த நெனப்புதானே பொழப்பைப் கெடுக்குது?

            ஒரு வேளை ரெண்டு நாவலும் செலக்ட் ஆயிடுச்சின்னா?

            கேள்வி வந்து பயமுறுத்திக் கொண்டேயிருந்தது பிரம்மராஜனை. அந்த எண்ணத்தில்    அவருக்குத் தூக்கமேயில்லை. அப்டியுமா தனக்கு ஒரு கௌரவம் கிடைக்கும்? இது எப்படிக் கௌரவம் ஆகும். அவப்பெயரன்றோ வரும்? நினைத்து நினைத்துக் குழம்பினார் பிரம்மராஜன்.

            என்ன ஆள் ஒரு மாதிரி டல்லாவே இருக்கீங்க?  ரெண்டு மூணு நாளாவே உங்க மூஞ்சியே சரியில்லையே? ஏன்…என்ன பிரச்னை? பென்ஷன் இன்னும் அக்கௌன்ட்ல சேரலியா? மெஸேஜ் வந்துதா இல்லையா? நெட்ல போய்ப் பார்ப்பீங்களே, பார்த்தீங்களா இல்லியா? முதல்ல போய்ப் பாருங்க…கிரடிட் ஆகியிருக்கா இல்லையான்னு…!

            கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் நளினி. அவளுக்கு அந்த பயம். எங்கே வரவேண்டிய துட்டு வராமல் போய்விட்டதோ என்று. அவளுக்குத் தவறாமல் இருபத்தஞ்சு இருபத்தாறு தேதியிலேயே அவள் கணக்குக்குப் பென்ஷன் வந்து சேர்ந்து விடுகிறது. தொலைபேசி இலாகாவில் இருந்து ஓய்வு பெற்றவள் அவள்.

            அதெப்படி நாலஞ்சு நாள் முன்னாடியே பென்ஷன அனுப்புறாங்க….? மாதம் முடியுமுன்னே ஆள் மண்டையப் போட்டா? முன்னாடியே அதிகமா வலிய இப்படிக் கொடுக்கிறது சரியா? மாசம் முடிஞ்சு ஒண்ணாம்தேதியோ அல்லது மாசக் கடைசியிலோ தர்றதுதானே முறை….ஒரு வாரம் முன்னமேயே ஓய்வூதியத்தப் பைசல் பண்றது கரெக்டா? தப்பால்ல தெரியுது? என்றார் இவர்.

            அய்யாவுக்கு  வயித்தெறிச்சலா இருக்காக்கும். எங்களுக்கெல்லாம் அப்டித்தான். உங்கள மாதிரி வந்திச்சா, வரல்லியான்னு காத்துக் கெடக்குற ஜென்மங்கள் இல்ல நாங்க….கன் மாதிரி வந்து நிக்குமாக்கும்….-பிகு பண்ணிக் கொண்டாள். அது சரியா, தப்பா என்று யோசிக்க அவள் தயாராயில்லை.

            இப்போது அவளுக்கே என் மூஞ்சியைப் பார்த்து உறுத்தியிருக்கிறது. இந்தாளு முகம் ஏன் இத்தனை வாட்டமாயிருக்கு? என்னவோ இரும்புத் துண்ட முழுங்கினவன் மாதிரிக் கிடக்கானே? என்று  கேட்டு விட்டாள்.

            சொல்வோமா…வேண்டாமா? – யோசனை போனது இவருக்கு. இதிலெல்லாம் படு அலெர்ட்டாக இருக்கும்  மனசு, போட்டிக்கு அனுப்புவதில் ஏன் கோட்டை விட்டது? பின் மண்டையில் பொட்டென்று அடித்துக் கொண்டார்.

            முதலில் அனுப்பிய நாவல் தேர்வாகி விட்டதென்றால் பிரச்னையில்லை. எல்லோருக்கும் தெரிந்த புனை பெயரில் அனுப்பியது அது. விட்டது சனி என்று அப்பாடா….எனப் புறப்பட்டுப் போய், தரும் பரிசை வாங்கிக் கொண்டு வந்து விடலாம். அந்த இரண்டாவதைப் பற்றி வாயையே திறக்கவும் வேண்டாம். அதைப்பற்றி எவனும் கேட்கப்போவதுமில்லை. எவனுக்கும் அதுவும் தானே என்பதும் தெரியப் போவதுமில்லை…நானே  சொல்லப் போவதுமில்லை.

            ஒருவேளை இரண்டுமே தேர்வாகிவிட்டால்? பரிசுக்குரியதாக ஆகி விட்டால்?  அல்லது ஒன்று பரிசு பெற்று இன்னொன்று புத்தகம் போட என்று கூடத் தேர்வாகி நின்றால்? மொத்தம் போட்டியில் பதினைந்து நாவல் தேர்வாகப் போகிறதே? முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ஐந்து ஆறுதல் பரிசுகளும் போக மீதி ஏழு பிரசுரத் தேர்வாயிற்றே…! அதற்கும் ஒரு மதிப்பு உண்டே? பதினைந்து நாவல்கள் புத்தகங்களாக வெளி வரும் என்று எந்த நிறுவனம் இத்தனை வளமாக அறிவிக்கிறது? அதற்கே அவர்களைப் பாராட்டியாக வேண்டும்தான்.

எவ்வளவு பரந்த மனதோடு அந்தப் பதிப்பகம் இந்தப் போட்டியை அறிவித்திருக்கிறது? எழுத்தை ஊக்குவிக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணம்தானே இதன் அடிப்படை? எழுத்தாளர்களை வளர்த்தெடுக்க வேண்டும், தூக்கிப் பிடிக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தில் பிறந்ததுதானே இந்தப் போட்டியும் அதன் விரிந்து பரந்த அறிவிப்புகளும்? குறைந்தபட்சம் அந்தப் பதிப்பகத்தையாவது மதிக்க வேண்டாமா?

ஒருவர் ஒரு நாவல்தான் அனுப்பலாம் என்று கறாராகச் சொல்லியிருப்பது என்ன வெறும் விளையாட்டா? தனக்குத் தோன்றிய இந்தக் குயுக்தி, வேறெவருக்கும் தோன்றாமலா போயிருக்கும்? எதிலும் ஒரு ஒழுங்குமுறை இருக்க வேண்டும் என்றுதானே இந்தக் கண்டிஷனையெல்லாம் போடுகிறார்கள். பெரிய பெரிய எழுத்தாளர்களை வைத்துப் பரிசீலித்துத் தேர்வு செய்யப் போகும் இந்தப் போட்டியின் முடிவு சிறப்பானதாக இருக்க வேண்டாமா? அதில் ஒரு கண்ணியம் மிளிர வேண்டாமா? அந்தத் தேர்வின் மூலம் சிறந்த நூல்கள் வெளிவந்தன என்ற பெருமை பெற வேண்டாமா? பதிப்பகத்திற்கும் பெருமை, நாவல்களைத் தேர்வு செய்த மூத்த எழுத்தாளர்களுக்கும் பெருமை, பரிசு பெற்றவர்களுக்கும் பெருமையாயிற்றே?

ச்சே…! இப்படியொரு தவறைச் செய்து விட்டோமே? மனசு கிடந்து அடித்துக் கொண்டது பிரம்மராஜனுக்கு. இன்னும் கொஞ்சம் போனால் இந்த நினைப்பிலேயே தான் பிரம்மமாய் உட்கார்ந்து போவோமோ என்றெல்லாம் நினைப்புப் போய் விட்டது அவருக்கு.

வயசானா கூர் கெட்டுப் போகும்னு சொல்வாங்க…ஒரு வேளை தனக்கு அப்டி ஆயிடுச்சோ…? மறை கழன்டு போச்சோ? என்னென்னவோ நினைப்பெல்லாம் கிளர்ந்தது பிரம்மராஜனுக்கு.

இரண்டு நாவலும் தேர்வானால் கிராமத்து முகவரியில் அப்பா பெயர் சேர்த்து எழுதி அனுப்பிய அதைப்பற்றி வாயே திறக்க வேண்டாம். அதற்கான அவசியமேயில்லையே? ஆனால் ஒன்று….

அதை என்றாவது எங்காவது புத்தகமாகப் போட முனைந்தால் மாட்டிக் கொள்ளும் வாய்ப்புண்டுதானே! யோசனை கிளர்ந்தது அவருக்கு. என்றாவது என்ன, இவர்களே புத்தகமாகப் போட்டு விட்டால்? யார் போய் வாங்குவது…நான்தான் அவன் என்று? சரி அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்….அதற்கும் சேர்த்து இப்போதே வருத்தப்படுவானேன்? சற்றே தன்னைத் தேற்றிக் கொள்ள முயன்றார். ஆனாலும் மண்டை காய்ந்தது பிரம்மராஜனுக்கு.

ன்றிரவு ஒரு கனவு வந்தது அவருக்கு. எதை நினைத்து நினைத்து மாய்கிறோமோ அதுவே கனவாகவும் வந்து பயமுறுத்தும் வாய்ப்பிருக்கிறதுதானே?

என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்க…? – கேட்டார் பதிப்பாளர்.

என்ன பண்ணிட்டேன்….?

என்ன பண்ணிட்டேனா? ஒருத்தர் ஒரு நாவல்தான் அனுப்பலாம்னு சொல்லியிருக்கிறபோது இன்னொரு பேர்ல இன்னொரு முகவரிலர்ந்து  இன்னொரு நாவல் அனுப்பியிருக்கீங்களே…இது சரியா?

அது என் அப்பா பெயர் சார்…என்னோட புனை பெயர்ல அனுப்பலே…?

புனை பெயர்லதான் ஒரு நாவல் தனியா அனுப்பிட்டீங்களே?

இது வேறே பேர்தானே…முகவரி கூட வேறேதானே?

ஆள் ஒண்ணுதானே சார்….? வேறே வேறல்லியே?

அப்டீன்னா….? – மேற்கொண்டு பேச்சு எழாமல் விழித்தார் பிரம்மராஜன்.

புரியலையா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா? ஒருத்தர் ஒரு நாவல்தான் அனுப்பலாம்ங்கிறதுதானே போட்டியோட கண்டிஷன்…ஒருத்தரே வெவ்வேற பேர்ல, வெவ்வேறு முகவரிலர்ந்து நாவல் அனுப்பினா அது சரியா? ஒருத்தரே ரெண்டு நாவல் அனுப்பியதா ஆகாதா?

பதில் சொல்ல முடியாமல் முழி முழியென்று முழித்தார் பிரம்மராஜன். எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டதாய் உணர்ந்தார்.

நீங்கள்லாம் இப்படிப் பண்ணலாமா சார்….அதுவும் நிறைய எழுதியிருக்கீங்க…உங்க பேரைச் சொன்னாலே எல்லாருக்கும் தெரியும்….ஏன் சார் இந்தக் கேவலமான வேலையைப் பண்ணினீங்க…? உங்க ரெண்டாவது நாவல்தான் பெட்டர்னு நீங்க நினைச்சிருந்தீங்கன்னா,  கொஞ்சம் பொறுத்திருந்து அதை மட்டும் அனுப்பியிருக்க வேண்டிதானே?

தலை குனிந்து நின்றார் பிரம்மராஜன்.

இப்போ உங்களோட ரெண்டு நாவலுமே செலக்ட் ஆயிடுச்சின்னு வச்சிக்குங்க….அந்த இன்னொரு நாவலுக்கான பரிசை நீங்களே வந்து வாங்கிக்குவீங்களா? டபுள் ஆக் ஷனா? இல்ல உங்க ஒய்ஃப்பை வந்து வாங்க வைப்பீங்களா? அவருக்கு உடம்பு சரியில்ல…அதனால நான் வந்திருக்கேன்னு சொல்லச் சொல்லி அனுப்புவீங்களோ? செய்தாலும் செய்வீங்க….?

“…………………..“

வெவ்வேறு பேர்ல நாவல் அனுப்பிச்ச நீங்க…இதையும்…இப்படிச் செய்ய மாட்டீங்கங்கிறது என்ன நிச்சயம்? இன்னொருத்தருக்கான வாய்ப்பை நீங்க கெடுக்குறீங்கங்கிறது உங்களுக்குப் புரியலையா? எழுத்தாளர்கள்னா கொஞ்சத்துக்குக் கொஞ்சம் நேர்மையா இருப்பாங்கன்னு நினைப்பு…..அப்டியெல்லாம் இல்ல…அவங்களும் சராசரி மனுஷங்கதான்னு சொல்றீங்க நீங்க….அப்டித்தான சார்? ஆனா ஒண்ணு…சராசரிகள் கூட இப்படி இருப்பாங்களாங்கிறது சந்தேகம்தான்….

என்னை மன்னிச்சிடுங்க…..எனக்குப் பரிசு வேண்டாம்…..என் நாவலைத் தயவுசெய்து ஒதுக்கிடுங்க…ரெண்டையும்தான் சொல்றேன். .பரிசீலனையே பண்ண வேண்டாம்….உங்களை மன்றாடிக் கேட்டுக்கிறேன்….அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் பிரம்மராஜன்.

ன்னங்க…என்னங்க….ஏன் இப்டி விசிக்கிறீங்க….கனவா….கெட்ட கனவு கண்டீங்களா….? எழுந்திரிங்க… குழந்த மாதிரி அழறீங்க…அதுக்குத்தான்…சாப்டவுடனே வயித்துல லோடோடு படுக்காதீங்கன்னு சொன்னேன். இப்படித்தான் கன்னா பின்னான்னு கனவு வரும்.  எழுந்திரிங்க…பாத்ரூம் போயிட்டு வந்து படுத்துக்குங்க….குல தெய்வத்த நினைச்சு நெத்தில விபூதி இட்டுக் கும்பிட்டுப் படுங்க….-பிரம்மராஜனை உசுப்பி எழச் செய்தாள் நளினி.  எழுந்தவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

ரெண்டு மூணு நாளாவே நீங்க சரியில்லேன்னு நான் சொன்னது சரியாப் போச்சா இப்போ…? என்று முனகிக் கொண்டாள் நளினி.

ஒரு மாதம் கடந்த பொழுது……

தனது பிரபலமான முகநூல் பக்கத்தில்  அந்தப் பதிப்பகம் நாவல் முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதில் கிராமத்து வீட்டு  முகவரியில் தன் தந்தையார் பெயரில்  பிரம்மராஜன் எழுதி அனுப்பியிருந்த அந்த இரண்டாவது நாவல் மட்டும் மூன்றாம் பரிசைப் பெற்றிருந்தது.

  பிரம்மராஜன் அந்தப் பரிசினை வாங்கப் போகிறாரா இல்லையா என்று அறிய  உங்களைப் போல் நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்தான் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண…!!! ஆசை யாரை விட்டது? மனிதர்களுடைய தவறுகளுக்கெல்லாம் காரணம் ஆசைதானே? போய் நின்று “நான்தான் அவன்“ என்று துணிந்து சொல்வாரா அல்லது குட்டு வெளிப்பட்டு விடுமே என்று கண்டு கொள்ளாமல் கமுக்கமாய் இருக்கப் போகிறாரா?  அல்லது மனைவியை விட்டு வாங்கச் செய்யப் போகிறாரா?  அல்லது விழா மேடையில் ஏறி எல்லோரும் அறிய என்னை மன்னித்து விடுங்கள், இந்தப் பரிசுக்குத் தகுதியுடையவன் அல்ல நான் என்று கம்பீரமாய் முழங்கி உண்மையே உயர்ந்து நிற்கும் என்று தலைநிமிரச் செய்து விழாவில் எல்லோரையும் அதிரச் செய்து நற்பெயரைத் தட்டிக் கொள்ளப் போகிறாரா?

ஒரு வேளை பூனை போல் விழாவுக்குப் போய் கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்து  அமர்ந்து அந்த இரண்டாவது நாவலின் மூன்றாவது பரிசினை யார் வாங்கப் போகிறார்கள் அல்லது என்ன செய்யப் போகிறார்கள் என்ற அறிவிப்பினை எதிர்நோக்கி ரகசியமாய்க் காத்திருக்கப் போகிறாரா?

பிரம்மராஜன் பிரமை பிடித்தவர் போல் அமர்ந்திருந்தார். தான் கெட்டதுமில்லாமல் நன்றாய் வந்திருந்த அந்த இரண்டாவது நாவலின் நற்பெயரையும் சேர்த்துக் கெடுத்து விட்டோமோ என்றும் அப்போது அவருக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.  வயசானால் கூர் கெட்டுப் போகும் என்பார்கள். தனக்கும் கெட்டுத்தான் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறோமோ? அவசர புத்தி…ஆசைப் புத்தி…அசிங்க புத்தியாகி விட்டதே?     

அப்போது மேடையிலிருந்து அந்த அறிவிப்பு வெளியானது.

“மூன்றாவது பரிசினைப் பெற்ற “பின்னோக்கிய அதிர்வுகள்”  என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் பிரம்மராஜனைப் பெருமையோடு மேடைக்கு அழைக்கிறோம்…..“

குனிந்து தன்னை முகம் மறைத்துக் கொண்டிருந்த பிரம்மராஜனுக்கு இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியாய் இருந்தது. எப்படி? இது எப்படி இவர்களுக்குத் தெரிந்தது? அப்பா பெயரில் ஊர் முகவரியிலிருந்தல்லவா அனுப்பியிருந்தேன். என் பெயரைச் சொல்லி அழைக்கிறார்களே? கண்டுபிடித்து விட்டார்களா?

உடல் நடுக்கத்தில் அதிர்ந்து போய் எழ முடியாமல் பம்மிப் போய் உட்கார்ந்திருந்தார் பிரம்மராஜன். இன்னும் என்னெல்லாம் கேவலம் நடக்கப் போகிறதோ? ஊர் அறிய அசிங்கமாகப் போகிறதா?

சார்…உங்களத்தான் கூப்பிடுறாங்க…மேடைக்குப் போங்க…காதுல விழலியா? – பின்னாலிருந்து ஒருவர் முதுகைத் தொட்டார். என்னையும் தெரிந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்? ஆச்சரியமாயிருந்தது இவருக்கு.

தட்டுத் தடுமாறி எழுந்தார் பிரம்மராஜன். மேற்கொண்டு என்ன ஆகப் போகிறதோ என்று அவர் மனம் பதை பதைத்துக் கொண்டேயிருந்தது. அந்தப் பதற்றத்தோடு மேடையை நோக்கி அடியெடுத்து வைத்தார்.  அந்தப் பெரிய உறாலின் கடைசியில் உட்கார்ந்திருந்த அவருக்கு இப்போது அந்த மேடை வழக்கத்தை விட மிக மிகத் தூரமாய்த் தோன்றியது. எட்டு எடுத்து வைக்க வைக்க நீண்டு கொண்டே போனது.

ஏன் சார்…கடைசிக்குப் போனீங்க…முன்னால வந்து உட்கார்ந்திருக்கலாமே? யாரோ நின்று கொண்டிருந்த ஒருவர் சொன்னார்.

தலை நிமிர்ந்து பார்க்க அஞ்சி, பாதி குனிந்தவாறே மேலே சென்றவர்…விருதினைக் கையில் பிடித்துக் கொண்டு காத்துக் கொண்டிருக்கும் தலைமையின் அருகில் போனதும், வாங்க…வாங்க…பக்கத்துல வாங்க…என்று அவரை அருகே இழுத்து  நிறுத்தி, வைத்திருந்த சால்வையைப விரித்துப்போர்த்தி, விருதுப் பேழையையும், பரிசுத்தொகைக் கவரையும்  அவர் கையில் வழங்கி, நேரே கூட்டத்தைப் பாருங்க.. என்று நிதானமாய்ச் சொல்ல…கண்கள் மறைத்தது பிரம்மராஜனுக்கு.  

எதுவும் வாய் திறக்கத் தோன்றாமலும், மகிழ்ச்சியாய்ச் சிரிக்கத் தெரியாமலும், கண்களில் ஈரம் கசிய அந்த விருதினை பிரம்மராஜன் பெற்றுக் கொண்டபோது அது மிகவும் கனப்பதாகத் தோன்றியது அவருக்கு.

என் வாழ்நாளில், நாற்பது வருஷ எழுத்து அனுபவத்தில்  எனக்குக் கிடைத்த முதல் விருது இதுதான்…என்று சொல்லி ரத்தினச் சுருக்கமாகத் தன் நன்றியுரையை முடித்துக் கொண்டார் பிரம்மராஜன்.  அதைச் சொன்னதிலும் மனசு வெட்கப்படத்தான் செய்தது.

விழா முடிந்தது. ஆனாலும் பிரமை நீங்கியபாடில்லை அவருக்கு. எப்படி நிகழ்ந்தது இது ? சரியென்று மனதுக்குத் தோன்றவில்லையே? பதில் பேச வக்கில்லாமல், வகையில்லாமல் இப்படி வாங்கிக்கொண்டு வந்து நிற்கிறேனே? இது நியாயமேயில்லையே?

அருமையான சிற்றுண்டிக்குப் பின் எல்லோரும் படிப்படியாகக் கலைந்து கொண்டிருந்தார்கள். போட்டி நிறுவனர் அவரை நோக்கி வருவது தெரிந்தது.

என்ன பிரம்மராஜன் சார்…சந்தோஷம்தானே…!  என்றார் அவர்.

எதுவும் தோன்றாமல் இறுகிய முகத்தோடு அவரையே பார்த்தார் இவர்.

இந்தப் பரிசுத் தொகை உங்களுக்கு உபயோகமாய் இருக்கும்னு நம்பறேன்…நீங்க முதல்ல அனுப்பிச்ச நாவலை நாங்க ஒதுக்கிட்டோம்.. போட்டியிலேயே சேர்க்கலைன்னு வச்சிக்குங்களேன்.. இரண்டாவது அனுப்பிச்ச நாவலை உங்கப்பா பெயர்ல அனுப்பிச்சிருக்கீங்க…உங்க சொந்த ஊர் முகவரில…அப்படி செய்திருக்க வேண்டியதில்ல….உங்க பெயர்லயே அனுப்பிச்சதா நாங்க எடுத்துக்கிட்டோம். ஏன்னா கடைசிப் பக்கத்துல சென்னை முகவரியைத்தான் கொடுத்திருக்கீங்க…ஆச்சரியமாயிருந்திச்சு. அப்புறம்தான் அது உங்க நாவல்னு புரிஞ்சிக்கிட்டோம். உங்கப்பாவோட உழைப்பும், வறுமையும், நேர்மையும் ஒன்றின வாழ்க்கையை உருக்கமான அழகிய சித்திரமா வடிச்சிருக்கீங்க…மனசு உருகி உருகிப் படைச்ச அந்தப் படைப்பை ஒதுக்கவே எங்களுக்கு மனசு வரல்லை…அப்புறம்தான் உங்க முதல் நாவலைப் போட்டியிலிருந்தே ஒதுக்கிடுறதுங்கிற முடிவுக்கு நாங்க வந்தோம். எங்க பரிசீலனைக் குழு ஒருமனதா செய்த முடிவு அது. எல்லோரும் மனமுவந்து ஏத்துக்கிட்டுத்தான் இதைச் செய்திருக்கோம்…உங்களைக் கௌரவப்படுத்தணும்ங்கிறதுதான் எங்களோட ஒரே நோக்கமாய் இருந்தது.

இருந்தாலும்….. – ஏதோ சொல்ல முயன்றார் பிரம்மராஜன். வார்த்தைகள் வரவில்லை. என்னையறியாமல் நாவல் முடிவுக்குப் பின் கீழே என் முகவரியையே கொடுத்திருக்கிறேனா? இதுநாள் வரை இது மண்டையில் உறைக்கவேயில்லையே? தப்பு செய்றவன் ஏதேனும் ஒரு அடையாளத்தைத் தானறியாமல் விட்டுட்டுப் போவான்ங்கிறது இதுதானோ?

அதுமட்டுமில்லே…உங்க ரெண்டு ஃபோன் நம்பரும் எங்ககிட்டே இருக்கே…ஏற்கனவே புக்ஸெல்லாம் நிறைய வாங்கியிருக்கீங்கதானே…அத வச்சும் உறுதி செய்துக்கிட்டோம்…

உங்களோட விடாத உழைப்புக்காக எங்களோட விதிகளை நாங்களே எங்களுக்குள்ளே தளர்த்தி இந்தப் பரிசை உங்களுக்கே கொடுத்துடுறதுங்கிற முடிவுக்கு ஏகமனதா வந்தோம். செய்து முடிச்சிட்டோம். எங்களுக்குப் பரம சந்தோஷம்…அதுபோல உங்களுக்கும் இந்தப் பரிசு சந்தோஷத்தை அளிக்கும்னு நம்பறோம்…ஆல் த பெஸ்ட்….தொடர்ந்து எழுதுங்க…எங்களோட பதிப்பகம் சார்பா மனமார்ந்த வாழ்த்துக்கள். நாவல் புஸ்தகமா வந்தவுடனே உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்….ஒரு விஷயம்…நாவல் உங்க பெயர்லதான் புக்கா வரும்…வாழ்த்துகள்….

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்றோ…? எந்தக் கிருஷ்ணனின் கால் பெருவிரல், தேரை அழுத்தி என் தலையைக் காப்பாற்றியது? புரிந்தும் புரியாதவராய் நடந்து கொண்டிருந்தார் பிரம்மராஜன்.

ஐயா….ஆட்டோ வேணுங்களா…எங்க போகணும்? கேட்டவாறே சர்ர்ர்ரென்று உறுமிக்கொண்டு இரைச்சலோடு அருகே வந்து  நின்ற அதில் பதிலெதுவும் சொல்லத் தோன்றாமல் பிரம்மமாய் ஏறி உட்கார்ந்தார் பிரம்மராஜன்

எங்க போகணுங்கய்யா….? –டிரைவர் திரும்பிப் பார்த்துக் கேட்டார்.

மகாத்மாகாந்தி நகர்…..என்றார் பிரம்மராஜன்.

                                                ---------------------------------

 

                       

           

           

கருத்துகள் இல்லை: