சிறுகதை
“நடக்காதென்பார்…நடந்து விடும்” -சிறுகதை பிரசுரம்-அந்திமழை நவம்பர் 2024 இதழ்
பொம்மையன்
இன்னும் சார்ஜ் ஒப்படைக்கல சார்….. - உள்ளே
நுழையும்போதே வாசலில் வரவேற்று பெரும் துக்கமாய் இதைச் சொன்னான் சண்முகபாண்டியன். குரல்தான்
அப்படியிருந்ததேயொழிய அவன் மனசு அப்படியல்ல என்பது எனக்குத் தெரியும்.
மொத்த ஃபைல்களையும் லிஸ்ட் போட்டு என்கிட்டே
ஒப்படைக்கணும்…அப்பத்தான் சார் நான் டேக்கன் ஓவர் கையெழுத்துப் போடுவேன். எத்தனை நாள்
ஆனாலும் சரி….-அவன் குரலில் இருந்த தீர்மானம் பொம்மையனைப்பற்றி அவன் நன்றாக அறிந்திருக்கிறான்
என்பதை உணர்த்தியது எனக்கு.
தப்பு சொல்வதற்கில்லை. நானாக இருந்தாலும்
அப்படித்தான் செய்வேன். அந்த ஃபைல் என்னாச்சு, இந்த ஃபைல் என்னாச்சு என்று நாளைக்குக்
கேள்வி வந்தால் யார் பதில் சொல்வது?
பொம்மையன் இருந்த இருக்கையைப் பார்த்தேன்.
டேபிளில் இருந்த கோப்புகள் மட்டும் அடுக்கப்பட்டிருந்தன. அவை அவன் பட்டியலிட்டவையாக
இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். காலடியில் கட்டுக்கள் குலைந்து நிறையக் கோப்புகள் இறைந்து கிடந்தன. ஒற்றைத் தபால்களாக
இன்னும் அந்தந்தக் கோப்புகளில் சேர்க்கப்படாதவையான வெளியிலிருந்து வந்திருந்த கடிதங்கள்
கட்டி வைக்கப்பட்டிருந்தன.
எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. எத்தனை
முறைதான் சொல்வது? இருந்த காலம்வரை சொல்லியாயிற்று. சரி சார்…சரி சார்…என்று பதில்
வருமே தவிர, கடிதங்கள் அந்தந்தக் கோப்புகளில் சேர்க்கப்பட்டிருப்பதே பார்க்க முடியாது.
சேர்த்திருந்தால்தான் காலடியில் ஏன் அப்படிக் குவிந்து கிடக்கிறது?
முதலில் கால் வைக்கும் இடத்தில் அப்படிக்
கோப்புகளைப் போட்டு வைத்திருப்பதே எனக்குப் பிடிக்காத விஷயம். சம்பளம் தரும் பணி. அதன்
மீது ஒரு மதிப்பு வேண்டாமா? அவருக்கென்று மூன்று ரேக்குகள் இருந்தனதான். அவற்றின் மேல்
வரிசையில் மட்டும், சுலபமாகக் கை நீட்டி எடுக்கும் வகையில் கோப்புகள் வரிசை காணப்படும்.
அடுத்தடுத்த கீழ் ரேக்குகளில் அனைத்துக் கோப்புகளையும் அடுக்குவது என்கிற பேச்சே பொம்மையனிடம்
கிடையாது. அவரது சிகரெட் பாக்கெட்டுகள், தீப்பெட்டி, சில வார இதழ்கள்…இதற்கா அந்த ரேக்குகளை
இவருக்குக் கொடுத்திருப்பது?
சாயங்காலம் எல்லாரும் போன பிறகு ஒவ்வொரு
தபாலா எடுத்து கிழிச்சிக் கிழிச்சிக் குப்பைல போட்டுடுவார் சார்….ரெண்டு மூணு பக்கம்
இருக்கிற கடிதங்களை மட்டும்தான் அந்தந்தக் கோப்புல சேர்ப்பாரு….வெறும் ரிமைன்டர் பூராவும்
குப்பைக் கூடைக்குப் போயிடும். கோர்க்கிற ஜோலியே
இல்ல சார் அவர்ட்ட….இப்டித்தான் போற ஆபீஸ்லெல்லாம் வேலை பார்க்கிறாரு….அவருக்கும் ஓடுது
வண்டி…..!
பியூன்
அழகர்சாமி இப்படித்தான் சொன்னார். அவரும் சமீபத்தில் அந்த அலுவலகத்திற்கு மாறுதலில்
வந்தவர்தான். பொம்மையன் வந்து ஓராண்டு முடியப்
போகும் நிலையில் அதற்குள் அவருக்குப் பணி உயர்வு வரும் என்று எதிர்பார்க்கவேயில்லை.
அடுத்துக் கண்காணிப்பாளராய்ச் செல்பவர் எத்தனை பொறுப்புடையவராய் இருக்க வேண்டும்? இப்படிப்
புகார் வரும்படியா நடந்து கொள்வது?
சார்…இ.இ.
உங்களைக் கூப்பிடுறாரு…. – அழகர்சாமி வந்து சொல்ல…இருக்கையை விட்டு எழுந்தேன். ஜன்னல் வழி பார்வை சென்றபோது யாரோ பெண்மணி உள்ளே
நுழைவது தெரிந்தது. கையில் ஒரு பெரிய சுமையை இடுக்கிப் பிடித்தபடி சற்றே வளர்த்தியாக
திண் திண்…என்று நுழையும் வேகம் பார்த்தால் ஏதோ சண்டைக்குத் தயாராகி வருவது போலிருந்தது.
அழகர்சாமி…யாரோ
ஒரு அம்மா வர்றாங்க…உட்காரச் சொல்லுங்க…சார்ட்டப் பேசிட்டு வந்திடுறேன்….என்றவாறே அலுவலரின்
அறையினுள் நுழைந்தேன்.
என்னாச்சு…பொம்மையன்
சார்ஜ் முழுக்க சண்முகத்திட்டக் கொடுத்திட்டாரா? – முதல் கேள்வியே அதுவாய் இருந்தது
சற்று ஆறுதலாய்த் தோன்றியது கருணாகரனுக்கு.
இன்னும்
கொடுக்கலை சார்…காலடில நிறைய ஃபைல்களைப் போட்டு வச்சிருக்காரு…அதுல கோர்க்க வேண்டிய
தபால்கள் வேறே கட்டுக் கட்டா இருக்கு…..அத்தனையையும் அந்தந்த ஃபைல்ல கோர்த்து எங்கிட்டே
மொத்த ஃபைல்களையும் லிஸ்ட்அவுட் பண்ணி ஒப்படைச்சாத்தான் நான் சார்ஜ் லிஸ்ட்டுல கையெழுத்துப்
போடுவேங்கிறாரு சண்முகபாண்டியன். அந்த அளவுல இருக்கு சார்…..
என்ன
இப்படிச் சொல்றீங்க…? ஆள வரச்சொல்லி மொத்தமாக் கொடுத்திட்டு ஒரேயடியாப் போகச் சொல்ல
வேண்டிதானே…? ப்ரமோஷன்ல போறாருங்க அவரு…தெரியும்ல…?-பேச்சு பொம்மையனுக்கு ஆதரவாகத்தான்
வரும் என்று கருணாகரனுக்குத் தெரியும். அலுவலர்கள் மொத்தமும் அவர் பக்கம்தான். அத்தனைபேரையும்
தன் கைக்குள் போட்டு வைத்திருந்தார்.
பொம்மையன்
அந்த மாவட்டத்தில் உள்ள எல்லா அலுவலர்களுக்கும்
வேண்டியவராய் இருந்தார். அவர்களுக்கான சொந்த
வேலைகளைச் செய்து கொடுப்பது, ரயில் டிக்கெட்
ரிசர்வ் செய்து கொடுப்பது, வீட்டுக்குச் சென்று அவரவர் வீட்டுப் பெண்மணிகளுக்கு சேலைகளைத்
தவணை முறையில் விற்பது…வங்கிக் கணக்குத் திறத்தல், சேமிப்பு வங்கி டெபாசிட் செய்தல்,
தபாலாபீஸ் கணக்குத் திறத்தல், வண்டி லைசென்ஸ் புதுப்பித்தல்,…சென்ட்ரல் மார்க்கெட்
சென்று மொத்தக் காய்கறிகளைக் குறைந்த விலையில் வாங்கிக் கொண்டு கொடுத்து நல்ல பெயர்
வாங்குதல்….என்று நாலா பக்கமும் கைகளை விரித்து நீட்டிக் கொண்டிருந்தார். சமயங்களில்
சொந்தச் செலவில் சென்னை சென்று செக்ரடேரியட்டில் அவர்களுக்கான காரியங்களையும் பார்த்து,
செய்து உதவி வந்தார். மாநிலக் கணக்காயர் அலுவலகம் செல்தல், அக்கவுன்ட் ஸ்லிப் வாங்குதல்,
ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் சாங்ஷன் என்ன நிலைமை என்று அறிதல், கருவூலத் தலைமை அலுவலகங்களுக்குச்
செல்லுதல், பணப் பிடித்தம்பற்றி அறிதல்….என்று செய்யாத வேலையில்லை…. இப்படி இருப்பவர்
அலுவலகத்தில் தன் பிரிவின் வேலையை எப்படிச் செவ்வனே நிறைவேற்றுவார்?
அவர்
பிரிவுக் கோப்புகளை அலுவலர் கேட்டால் கருணாகரன்தானே அட்டென்ட் செய்திருக்கிறார்? நடவடிக்கைகளை
அவர்தானே எடுத்திருக்கிறார். எழுத வேண்டியவைகளை அவர்தானே எழுதி எழுதித் தள்ளியிருக்கிறார்? தன் பிரிவில் ஒவ்வொரு கோப்பின் நிலைமை என்னவென்று
ஏதேனும் சிறிதேனும் தெரியுமா பொம்மையனுக்கு? அட…எந்தக் கோப்பு எந்த வரிசையில் எத்தனாவதாய்
இருக்கிறது என்றாவது சொல்ல முடியுமா? இன்னின்னமாதிரி புதிய கோப்புகளும் முளைத்திருக்கின்றன
என்று சிறிதேனும் அறிவாரா?
எல்லாம்
என் தலையெழுத்து என்று கருணாகரன் தன் தலையில் அடித்துக் கொள்ளாத குறைதான்.
அவர்
தன் சீட்ல உட்கார்ந்து கொஞ்சமாவது வேலை பார்க்க விடுங்க சார். அத்தனை வேலையையும் நான்தான் பார்த்திட்டிருக்கேன்.
எனக்கென்ன ரெண்டு சம்பளமா தர்றாங்க….ஆபீஸ் சூப்பிரன்டுக்கு செக் ஷன் வேலையையும் தானே
பார்க்கணும்னு தலைவிதியா என்ன? என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் இவரும். எதுவும்
நடப்பதாய் இல்லை.
சொல்லுவோம்…சொல்லுவோம்…கொஞ்சம்
பொறுத்துக்குங்க…இன்னும் கொஞ்ச நாள்ல அவருக்குப் ப்ரமோஷன் வந்திரும். கிளம்பிடுவாரு….-இதுதான்
அலுவலரின் பதிலாய் இருந்தது.
அதுக்குத்தான்
ஆர்டரே வரல்லியே சார் இன்னும்….?
வராட்டி
என்ன சார்…ரிலீவ் பண்ணி ஆளைக் கழட்டி விட வேண்டிதானே? – சற்றுக் கோபமாகவே கேட்கிறாரோ
என்று தோன்றியது.
சார்
மறந்திட்டீங்க போல்ருக்கு…… சண்முக பாண்டியன் ஜாய்ன் பண்ணின அன்னிக்கே ஆட்டோமேடிக்கா பொம்மையன்
ரிலீவ்னுதானே சார் அர்த்தம். எனக்கு பிரமோஷன் ஒரு வாரத்துல வந்திரும். அதுவரை நான்
லீவுல இருந்துக்கிறேன். எனக்கும் சொந்த வேலைகள் நிறையக் கிடக்குன்னு அவரும் போயிட்டாரே....சார்ஜ்
ஒப்படைக்கல இன்னும். அதச் சொல்லுங்க அவர்ட்ட…!
ஏன்…இவரா
எடுத்துக்க மாட்டாராமா? ஒவ்வொரு ஃபைலா எடுத்து,
வரிசையா நம்பர்களைக் குறிச்சு…கோப்புகள், பதிவேடுகள்னு பிரிச்சு எழுதி, ஒப்படைத்தேன்,
பெற்றுக் கொண்டேன்னு போட்டா முடிஞ்சு போச்சு…இது ஒரு வேலையா? அவரக் கூப்பிடுங்க…நான்
சொல்றேன்…. –
அப்டி
எடுக்க முடியாது சார். பர்சனல் ரிஜிஸ்டர் பிரகாரம் ஒப்படைக்கணும்…ரிஜிஸ்டரும், கோப்புகளும்
டேலி ஆகணும். அதல்லாம உதிரியா இருக்கிற கோப்புகளை பர்சனல் ரிஜிஸ்டருக்குக் கொண்டு வரணும்.
அப்பத்தான் எண்ணிக்கை சரியா நிக்கும். இது போக ரிஜிஸ்டர்களை லிஸ்ட் அவுட் பண்ணனும்.
கான்டிராக்டர்கள்கிட்ட வாங்கியிருக்கிற செக்யூரிட்டி
டெபாசிட் என்.எஸ்.ஸி பான்டுகளைப் பூராவும் பதிவேட்டுல ஏத்தி, உங்ககிட்டக் கையெழுத்து
வாங்கி பிறகு வர்றவர்ட்ட ஒப்படைக்கணும்….இவ்வளவு வேலைகளையும் வச்சிட்டு நாலுங்கிடக்க
நடுவுல ஆளக் கழட்டி விட்டாச்சு…இதத்தான் ஆரம்பத்துலயே நான் சொன்னேன்…நீங்க கேட்கலை…மாடில
இருக்கிற எஸ்.இ., வேறே கூப்பிட்டுச் சொல்றாரு….சண்முகபாண்டியனை உடனே ஜாய்ன் பண்ண விடுங்கன்னு…அவரும்
ஜாய்ன் பண்ணியாச்சு….இப்போ எல்லாமும் நடுவாந்தரத்துல நிக்குது….என்னை என்னசார் பண்ணச்
சொல்றீங்க…?
நினைத்தது
அத்தனையையும் மழை பொழிந்தாற்போல் கேட்டுவிட்டு
அமைதியானார் கருணாகரன். இதென்ன நிர்வாகமாக? என்று கேட்பதுபோலிருந்தது அவர் கேட்ட கேள்விகள்.
ஒருவருக்கு
பணி உயர்வு வரும்முன் அவர் இடத்துக்கு இன்னொருவரைப் போடுவதும், அவர் வந்து நான் பணியில்
சேர வேண்டும் என்று தயாராய் நிற்பதும், மேலிடத்திலிருந்து ப்ரஷர் கொடுப்பதும், வேற
வழியில்லாமல் பணியில் இருக்கும் ஒருவரைக் கழட்டி விடுவதும் என்ன நிர்வாக நடைமுறை என்று
தெரியவில்லை எனக் குழம்பினார் கருணாகரன்.
சரி
தொலையுது என்று கழற்றி விட்டால் ஒழுங்காய்ப்
பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வதுதானே முறை…?
சண்முக
பாண்டியன், அவரோ போயிட்டாரு…நீங்களா கோப்புகளை வரிசைப்படுத்தி எடுத்துக்கப் பாருங்களேன்….-சொல்லித்தான்
பார்த்தார் கருணாகரன். எப்படியோ பிரச்னை தீர்ந்தால் சரி என்று.
அப்போ
நாளைக்கு அந்த ஃபைல் இல்ல…இந்த ஃபைல் இல்லன்னு என்கிட்டக் கேட்கக் கூடாது….இருக்கிற
ஃபைல்களுக்குத்தான் நான் லிஸ்ட் போட்டுக் கையெழுத்துப் போட முடியும். இல்லாததுக்கு
நீங்கதான் பொறுப்பு என்று திருப்பியவுடன் கமுக்கமாகிப் போனார் கருணாகரன். இருபது வருஷம்
சர்வீஸ் போட்டு மானேஜராகப் பொறுப்பேற்றிருக்கும் தன்னையே பயமுறுத்துகிறான் நேற்று வந்த
இவன். கேட்டால் எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று திமிராய்ப் பேசுகிறான்.
தடியெடுத்தவன் தண்டல்காரன் என்கிற கதையாகி நிற்கிறது.
ஆபீசில்
ஒரு கண்காணிப்பாளர், நிர்வாக அலுவலர், கணக்கு அலுவலர் என்று ஏன் பிரித்து வைத்திருக்கிறார்கள்?
அந்தந்தப் பிரிவுகளின் வேலைகள் தடங்கலின்றி நடப்பதற்கும், நிர்வாகம் சீராகச் செல்வதற்கும்தானே?
ஒவ்வொருவரும் அவரவர் செல்வாக்கு என்று அரசியல்வாதிகளையும், மேலிட நிர்வாகிகளையும் கையில்
போட்டுக் கொண்டு, அவரவர் இஷ்டத்திற்குச் செயல்படுவது என்று ஆனால், பிறகு எதுதான் உருப்படும்?
எந்த
முடிவும் இல்லாமல் வெளியே வந்தார் கருணாகரன். தன் இருக்கையில் சண்முக பாண்டியன் இருக்கும்
கோப்புகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.
லிஸ்ட்
போடுறீங்களா? என்றார் கருணாகரன் சுமுகமாக.
ஆமா
சார்…வேறென்ன பண்றது? நீங்களோ என்னைக் கேட்குறீங்க…நானோ ஜாய்ன் பண்ணியாச்சு. வேலைல
சேர்ந்திட்டு எப்படி சார் செக் ஷன் பணியைப்
பார்க்காம இருக்கிறது? அவெய்லபிள் ஃபைல்சை லிஸ்ட் போடுறேன்…அதுக்குக் கையெழுத்துப்
போட்டுத் தந்திடுறேன்…காலடில இருக்கிறதெல்லாம் என்னன்னு எனக்குத் தெரியாது சார்…அதுக்கு
என்னைப் பொறுப்பாக்காதீங்க…ஆயிரம் தபால் இருக்கும் போல்ருக்கு…கோர்க்காமயே வச்சிருக்காரு…ஒரு
சீனியர் அஸிஸ்டன்ட், நாளைக்கு சூப்பிரன்டா ஜாய்ன் பண்ணப் போறவரு…இப்டியா சார் இருக்கிறது?
இவர் போகுற ஆபீஸ்ல இதைக் கேள்விப்பட்டாங்கன்னா இவரை எப்படி சார் மதிப்பாங்க…? ரொம்பக்
கேவலமா இருக்கு சார்…உங்களுக்காகத்தான் சார் நான் இதைச் செய்றேன்…நீங்க சங்கடத்துக்குள்ளாகக்
கூடாதேன்னுதான்…அதுக்காக காலடில கலைஞ்சு கிடக்குற ஃபைல்ஸையும் எடுத்துக்கப்பான்னு சொல்லிடாதீங்க…அது
என்னால முடியாது…அதுல நான் கை வைக்க மாட்டேன்…பொம்மையன்தான் வந்தாகணும்…சொல்லிப்புட்டேன். பாஸ் கேட்டார்னாலும் இதையேதான் சொல்லுவேன்…
இதைச்
சொல்லி முடித்தபோது அந்தம்மா உள்ளே நுழைவது தெரிந்தது.
இருக்கையில்
அமர்ந்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டார் கருணாகரன். ஒரு வாய் தண்ணீர் குடித்தார்.
சற்றே ஆசுவாசப்பட…சொல்லுங்கம்மா….என்றார்.
சார்…என்னைத்
தெரிலிங்களா…? நான்தான் பொம்மையனோட ஒய்ஃப். உங்களப் பார்க்கலாம்னுதான் வந்தேன்….
என்ன
சொல்கிறார்கள் இவர்கள்? சற்றே துணுக்குற்ற கருணாகரன்…மெதுவான தொனியில் கேட்டார்.
என்னை
எதுக்கும்மா நீங்க பார்க்கணும்? -கேட்டவாறே அவர்களை நோக்கினார். தீர்க்கமான முகம்.
அகன்ற நெற்றி….பளீர் கண்கள். தெளிவான குரல். கணீர் பேச்சு….-ஆளுமை இந்தப் பெண்ணிடம்தான் இருக்கும்
போலும்!-இவருக்குத் தோன்றியது இப்படி.
சார்…நீங்க
ஒரு உதவி செய்யணும்…அவர் இந்த ஆபீசை விட்டு ரிலீவ் ஆயிட்டாரு…அடுத்து இன்னும் ஒரு வாரத்துல
அவருக்குப் ப்ரமோஷன் வந்திடும்…அதுக்கு க்ளியரன்ஸ் சர்டிபிகேட் இங்கயிருந்து சென்னை
தலைமைக்குப் போகணுமாமே…! அவர் பேர்ல எந்த டிஸிப்பிளினரி கேசும் பென்டிங் இல்லன்னு….அதக்
கொஞ்சம் அனுப்பி வைக்கணும்…என்கிட்டே கொடுத்தாலும் சரி…நான் மெட்ராஸ் கொண்டு போயிடுவேன்..ஏன்னா
அவர் இதுக்காக சென்னைல உட்கார்ந்திருக்காரு…அதுக்காகத்தான் இப்போ நான் வந்தேன்….ப்ளீஸ்…உதவுங்க…..-
அந்தம்மா
கேட்கும் தொனி இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உண்மையிலேயே பணிவுதான் அது. போனால்
போகிறது, கொடுத்து விடலாம் என்கிற அளவுக்கான இரங்கலாய்த் தோன்றியது இவருக்கு. ஆனால்
முடியாதே…! பிரச்னை நாளைக்கு சிக்கலாகிவிட்டால் தனக்கல்லவோ அது அவமானமாய் விடியும்?
மாடியில் உட்கார்ந்திருக்கும் பெருந்தலை நாளைக்குத் தன்னையல்லவா குரல் உயர்த்திக் கேள்வி
கேட்கும்? அப்போது மூஞ்சியை எங்கு கொண்டு வைத்துக் கொள்வது?
எப்டி
விட்டீங்க நீங்க? சண்முக பாண்டியன்தான் தெளிவாச் சொல்லியிருக்காருல்ல…இருக்கிற ஃபைலுக்குத்தான்
கையெழுத்துப் போடுவேன்னு….இல்லாத மத்ததுக்கு யார் பொறுப்பு? ஒழுங்கா சார்ஜ் கொடுத்திட்டு
நீ எங்க வேணாலும் போய்யா…உன்னை யாரு கேட்கப் போறாங்க..ன்னு சொல்ல வேண்டிதானே? இவுங்களக்
கன்ட்ரோல் பண்ணத்தானே நீங்க இருக்கீங்க…?
இப்பொழுதே
கேட்பதுபோல் கற்பனை செய்து உடம்பு சிலிர்ப்பதை உணர்ந்தார் கருணாகரன். அவரவர்களின் பர்ஸனல்
காரியங்களுக்கு நன்றாய், வகையாய் பொம்மையனைப் பயன்படுத்திக் கொள்வதும், காரியம் என்று
வரும்போது நம்மீது பழி சுமத்துவதும் அல்லது பொறுப்பை இறக்கி விடுவதுமாகிய இந்தத் தந்திரங்களை
அலுவலர்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது கருணாகரனுக்கு.
அரசியல்வாதிகளோடு
பழகிப் பழகி இவர்களுக்கும் நெளிவு, சுளிவு, ஒளிவு, மறைவு என்று எல்லாமும் கைகண்ட கலையாகிப்
போனது என்று நினைத்துக் கொண்டார்.
க்ளியரன்ஸ்
சர்டிபிகேட் கொடுத்திருவோம்மா…அதிலொண்ணும் பிரச்னையில்ல…அவர் ப்ரமோஷனத் தடுக்கிறதுல
எனக்கென்ன லாபம்? டிபார்ட்மென்ட் சீனியாரிட்டிபடி அது வருது…நான் ஒண்ணு சொன்னா நீங்க
அதைக் கேட்டுத்தான் ஆகணும்…செய்வீங்களா? என்று சொல்லி நிறுத்தினார் கருணாகரன்.
என்ன
என்று புரியாமல் - என்ன சார் சொல்றீங்க…நான்
வெளியாளு….என் புருஷனுக்காக வந்து நிக்கிறேன்….நான் என்ன இந்த ஆபீசுக்காகச் செய்ய முடியும்?
ஏதாச்சும் எதிர்பார்க்கிறீங்களா சார்….? அப்டி உண்டுன்னா சொல்லுங்க…செய்திருவோம்….
அடடடடடா…கர்மமே…நான்
அந்த மாதிரி எதுவும் சொல்ல வர்லம்மா…நீங்க என்ன எல்லார்ட்டயும் பேசற மாதிரி எங்கிட்டயும்
பேசிட்டிருக்கீங்க…ஒரு இடத்துக்குப் போகுற முன்னாடி அங்க இருக்கிறவங்களப்பத்தி என்ன
எப்படின்னு கேட்டுத் தெரிஞ்சிட்டு வர மாட்டீங்களா? உங்க வீட்டுக்காரரைக் கேட்டாலே சொல்வாரே…அத
விட்டிட்டு என்னென்னமோ பேசிட்டிருக்கீங்க…? -டென்ஷனாகிப் போனார் கருணாகரன்.
ஏதாச்சும்
தப்பாக் கேட்டிருந்தா மன்னிச்சிக்கங்க சார்…- அந்தப் பெண்ணின் குரல் தாழ்ந்து வந்தது.
போகட்டும்….எல்லாரும்
இப்டித்தான் இருப்பாங்கன்னு இனிமே சட்டுன்னு எங்கயும் இப்பக் கேட்ட மாதிரிக் கேட்டுறாதீங்க…புரிஞ்சிதா? வேறொண்ணுமில்ல…பொம்மையனை இங்க வந்து ஒழுங்கா அவர்
சீட் சார்ஜை முழுமையா ஒப்படைச்சிட்டுப் போகச் சொல்லுங்க…அது போதும்…இந்த பாருங்க…இந்தப்
பையன் கிடந்து திண்டாடுறான்…காலடில உங்க வீட்டுக்காரரு போட்டு வச்சிருக்கிற லட்சணத்தப்
பாருங்க…ஆபீஸ் ஃபைலு….கடவுளுக்கு சமானம்…மாசா மாசம் சம்பளம் வாங்குறமில்ல…அதுக்கு உண்மையா
நடந்துக்க வேண்டாமா? அதனால…வந்து…நிதானமா உட்கார்ந்து குப்பையாக் கிடக்குற ஃபைல்களை
எடுத்து ஒழுங்கா அடுக்கி, உதிரித் தபால்களை
அந்தந்தக் கோப்புகள்ல கோர்த்து…நடவடிக்கை எடுக்காட்டாலும் பரவால்ல….நான் அதைப் பார்த்துக்கிறேன்…அவர்
செக் ஷன் பொறுப்புக்களை முழுமையா. ஒண்ணுகூட விடுபடாமக் கொடுத்து, கையெழுத்திட்ட சார்ஜ்
லிஸ்ட் ஒரு நகலையும் வாங்கிட்டுப் போகச் சொல்லுங்க…உடனடியா இதை அவர் செய்தார்னா அவருக்கு
நல்லது…..அவர்பாட்டுக்கு லீவுல போயிட்டாரு…இப்ப எங்க பாடுதான் திண்டாட்டமாயிருக்கு.
ஆபிஸ் மானேஜரா நான் இருந்து என்ன பிரயோஜனம்? இதோ…நேத்து வந்த இந்தப் பையன் கேட்குற
கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடில..? இந்தக் கேவலம் எனக்குத் தேவையா? நான் சொல்ற
இதை நீங்க உடனடியாச் செய்தாப் போதும்…..
கண்டிப்பா
செய்யச் சொல்றேன் சார்…அது என் பொறுப்பு. பெரியவங்க நீங்க…உங்க வார்த்தையை மதிக்கலன்னா
எப்படி? நாளைக்கே வந்து செய்து முடிக்கச் சொல்லிடுறேன். நீங்க மட்டும் தயவுபண்ணி அந்த
கிளியரன்ஸ் சர்டிபிகேட்டை இன்னைக்கு அனுப்பி வச்சிடணும்.்..சாயங்காலம் வரைக்கும் நான்
வெயிட் பண்ணனுமின்னாக்கூட இருக்கேன். இருந்து வாங்கிட்டுப் போறேன்….
கருணாகரன்
அந்தப் பெண்ணைக் கூர்ந்து நோக்கினார். பிறகு கேட்டார். இதென்னம்மா கறி காய் வியாபாரமா?
யார்ட்ட வேணாலும் தூக்கிக் கொடுக்கிறதுக்கு? அவர் நேர்ல வந்து கையெழுத்திட்டு அந்த
சர்டிபிகேட்டை வாங்கிட்டுப் போகணும். அதுதான் ப்ரொசீஜர்….அவர் கையெழுத்தில்லாமக் கொடுக்க முடியாதாக்கும்….நீங்கபாட்டுக்கு சாதாரணமாக் கேட்குறீங்க….
சார்…மன்னிக்கணும்…நான்
மறுபடி மறுபடிப் பேசுறனேன்னு நினைக்கக் கூடாது. நீங்களா சர்டிபிகேட் போட்டீங்கன்னா…தபால்ல
சென்னைக்கு அனுப்பிடுவீங்கதானே…அதை என் கையில கொடுங்க…நானே அனுப்பிடுறேன்…இல்ல…நேர்ல
எடுத்திட்டுப் போயி…சென்னை தலைமைகிட்டயே ஒப்படைச்சிடுறேன்னு சொல்றேன்….இதுக்காகவே அவர்
அங்க கெடையாக் கிடக்கார் சார்….அதத் தயவுசெய்து புரிஞ்சிக்குங்க….
பொறுமையிழந்தார்
கருணாகரன். புரியாமல் பேசும் அந்தப் பெண்மணியிடம் மேலும் பொறுமை காப்பதா அல்லது வெடிப்பதா?
புரியவில்லை அவருக்கு. சற்றுப் பொறுத்து ஒன்று சொன்னார்.
நாங்க
தபால்ல அனுப்பிடுறோம்….நீங்க கிளம்புங்க….
சார்…ப்ளீஸ்…..-
கொஞ்சம் உதவுங்க……-அந்தம்மாவின் கெஞ்சல் இவரைச் சங்கடப்படுத்தியது. அதை உடனடியாகச்
செய்தால் அதைவிட மகாமோசமான தப்பு எதுவுமில்லை என்று மனசுசொல்லியது.
ஒழுங்காய்ப்
பொறுப்பை ஒப்படைக்காமல் இவன்பாட்டுக்கு வெளியே சுற்றுவானாம்…இவன் மீது எந்த ஒழுங்கு
முறை நடவடிக்கைகளும் இல்லை என்று சான்று தர வேண்டுமாம்….அதுவும் இவன் ப்ரமோஷனுக்காக…என்ன
பைத்தியக்காரத்தனம் இது? எந்த மடையனாவது இதைச் செய்வானா? கொடுப்பதைக் கொடுத்துவிட்டு
ஒழுங்கு மரியாதையாய்ப் பெறுவதைப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்?
செய்வதை ஒழுங்காய்ச் செய்து முடித்துவிட்டால் யார்தான் தடுக்க முடியும்? அது ஏன் இவர்களுக்குத்
தெரியவில்லை? ஆபீசர்களுக்கு வேண்டிய ஆள் என்றால், ஜால்ரா போடும் ஆள் என்றால் எல்லாவற்றையும்
கண்ணை மூடிக் கொண்டு செய்துவிட முடியுமா? அப்படியானால் மத்தவன்பாடு திண்டாட்டத்தில்
நின்றால் அது பரவாயில்லையா இவர்களுக்கு?
நடைமுறையில்
சில நெளிவு சுளிவுகள் தேவைதான் என்றால் அது நிர்வாகச் சீர்கேட்டிற்கு வழி வகுக்காமல்
இருக்க வேண்டுமல்லவா? அதை ஏன் எவரும் உணர மறுக்கிறார்கள்?
நீங்க
கிளம்புங்க மேடம்…..என்றார் கடைசியாக.
சற்று
நேரம் இவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அந்தம்மாள் விலுக்கென்று எழுந்து சென்றது
என்னவோ போலிருந்தது. அந்த அறையிலிருந்த அனைத்துப் பணியாளர்களின் பார்வையும் அந்தப் பெண்மணி
மேல் படிந்தது.
யப்பாடா….பெரிய
தலவலிடா சாமி….ஒரு வேலையை ஒழுங்கா செய்றதுக்கு என்ன மாதிரியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு…..?
– நினைத்துக் கொண்டே நேரத்தைப் பார்த்தார் கருணாகரன். அலுவலக நேரம் முடிந்து அரைமணியாகியிருந்தது.
குளிர்காலமானதால் வெளியே மெல்ல இருள் பரவுவது தெரிந்தது. வெளி கேட் விளக்கினை வாட்ச்மேன்
சரவணன் எரிய விட்டிருப்பது அந்தப் பகுதியை வெளிச்சமாக்கியிருந்தது.
பெண்
பணியாளர்கள் ஒவ்வொருவராய்க் கிளம்ப ஆரம்பித்திருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து மற்றவர்களும்
மூட்டையைக் கட்ட …இன்றைக்கு இது போதும் என்கிற அலுப்பில் தானும் கிளம்பி விடுவோம் என்று
எழுந்தார் கருணாகரன். சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் எந்த டென்ஷனுமில்லாமல் குறிப்பாக இந்த நினைப்பில்லாமல் இருக்கலாம் என்ற எண்ணமே அவர்
மனதை இலகுவாக்கியது.
சரவணா….வா…வா…வா….ரூமெல்லாம்
பூட்டு. வாச லைட்டைப் போடு….-சொல்லிக் கொண்டே
பையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார் கருணாகரன். ஏறக்குறையக் காம்பவுன்டே காலியாகி
நின்றது.
இந்தோ
வந்துட்டேங்கய்யா….என்றவாறே ஓடிவந்த சரவணன்….கொட்டகைக்கு அந்தாப்ல பாம்பு ஓடுதுங்கய்யா….குச்சியெடுத்திட்டு
அடிக்கப் போவுமுன்ன….பொந்துக்குள்ள போயிடுச்சி….- அவன் சொல்வதைக் கேட்டு தனக்குத்தானே
அமைதியாய்ப் புன்னகைத்துக் கொண்டார் கருணாகரன்.
அது
ஒண்ணும் செய்யாதுப்பா…அதுபாட்டுக்குப் போயிரும்…அடிக்காத…என்றார்.
இரண்டு
நாள் விடுப்பு முடிந்து புத்துணர்ச்சியோடு அலுவலகம் வந்து அவர் தன் இருக்கையில் அமர்ந்த
போது அவர் டேபிளில் அந்தக் கோப்பு இருந்தது. நிதானமாகப் பிரித்துப் பார்க்கத் தலைப்பட்டார்.
அது பொம்மையனுக்கு வழங்கப்பட்ட அவர் மீது எந்த ஒழுங்கு முறை நடவடிக்கையும் இல்லை என்பதற்கான
சான்றாக இருந்தது. அலுவலரே நேரடியாகக் கையொப்பமிட்டு ஒப்புதலளித்திருக்கிறார் என்று
புரிந்தது.
அமைதியாகத்
தலை குனிந்து வேலையைத் துவக்கியிருந்த சண்முகபாண்டியனை நோக்கினார். கீழே குப்பையாய்க்
கிடந்த கோப்புகளை மேஜை மேல் எடுத்து வைத்து உதிரித் தபால்களை எந்தெந்தக் கோப்புகள்
என்று அறிந்து அந்தந்தக் கோப்புகளில் நிதானமாகச் சேர்க்க ஆரம்பித்திருந்தார் அவர்.
மேலே
சூப்பிரண்டிங் இன்ஜினியரே கூப்பிட்டுச் சொல்லிட்டார் சார்….அவருக்கு எதிர்த்தாப்ல நம்ப
இ.இ.யும்தான் சார் இருந்தாங்க….சனிக்கிழமை ஆபீசுக்கு வந்து மாட்டிக்கிட்டேன் சார்….உங்கள
ஃபோன்ல கூப்பிடட்டான்னு கேட்டன் சார்…வாணாம்னுட்டாங்க…
கண்ணை
மூடி அமர்ந்திருந்தார் கருணாகரன். அவர் உதடுகள் என்னவோ மந்திரங்களை அமைதியாய் உச்சரிக்க
ஆரம்பித்திருந்தது.
--------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக