11 நவம்பர் 2024

 

சிறுகதை    “பால் மனக்  கணக்கு” - தினமணிகதிர்-10.11.2024 பிரசுரம்





                     துக்கு இருபத்தி ஒண்ணுதான் விலை. கார்டுக்கு அதுதான் ரேட்டு. காசுக்கு வாங்கினா இருபத்திரெண்டு. அவ்வளவுதான்.  அந்தக் கிழவர் பாவம்…இந்த வயசுலயும் உழைக்கிறார்…போனாப் போறது…இருபத்தி மூணு….அப்டீன்னாலும் மூணு பாக்கெட்டுக்கு அறுபத்தி ஒன்பதுதானே ஆச்சு…நூறு ரூபா கொடுத்தீங்கன்னா மீதி முப்பத்தி ஒண்ணு தரணுமே… - விடியாத அந்த நாலரை மணி விடிகாலையிலும், தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு துல்லியமாய்க் கணக்குப் பண்ணி சுளீர் என்று  எனக்குச் சொன்னாள் வைதேகி.

பிறகுதான்  எனக்கே உரைத்தது. அந்த நேரம் வீட்டு வாசலில், சற்றும் எதிர்பாராமல் பால் கிடைத்ததே பெரிது என்கிற எண்ணமே என் மனதில் நிறைந்திருந்தது.

ரெண்டு ஃபர்லாங் நடந்தால்தான் பால் டெப்போ.  அங்கேயும் இப்போதே பால் பெட்டிகள் வந்த இறங்கியிருக்குமா தெரியாது. அப்படியே வந்திருந்தாலும் பொறுப்பாளி வந்து விநியோகிப்பதற்கு எப்படியும் அஞ்சரைக்கு மேல்  ஆகிவிடும். நடக்கும் வழியில்தான் எத்தனை நாய்த் தொல்லை? குலைத்துத் தள்ளி குலை நடுங்க வைத்துவிடும். இந்த ஏரியா ஆள்தான் நான்…என்று அவைகளிடம் சொன்னால் புரிந்து கொள்ளவா போகிறது? தினசரி நம்மைப் பார்த்திருந்தால்தான் ஓரளவு ரெண்டே ரெண்டு குலைப்போடு வாயைமூடும். அதிலும் இருட்டிலும், அரைகுறை வெளிச்சத்திலும் நிச்சயம் அதற்குப் புரியாது. புது ஆள் என்கிற நினைப்பிலேயே உறுமலை ஆரம்பித்து விடும். எனக்கு நாய் என்றால் அநியாய பயம். யாருக்குத்தான் இல்லை?

சரக் சரக்…சரக்….என்று மெது மெதுவாய்ச் சாலையில்  அந்தத் தேய்ந்த ரப்பர் செருப்பை அணிந்த  கால்களைத் தேய்த்துத் தேய்த்து அவர் பால் கொண்டு வரும் சத்தம்தான் என்னை எழுப்பவே செய்தது. ஊரெல்லாம் உறங்கி வழியும்போது ஒரு வயதான குடுகுடு கிழம் கருமமே கண்ணாகத் தேய்ந்து மாய்கிறது. உழைப்பே பிரதானம் என்று நகர்ந்து கொண்டிருக்கிறது.

            முதல் நாள் கோயிலுக்குப் போய் மணிக்கணக்கில் வரிசையில் நின்று தரிசனம் செய்துவிட்டு, பிறகு ரொம்ப நேரமாகிவிட்டதே என்று ஓட்டலில் போய் வயிற்றுக்குக் கொட்டிக் கொண்டு, டாக்சி பிடித்து வீடு வந்து சேர்கையில் மணி பதினொன்றைத் தொட்டு விட்டது. மூடும் கடையைச் சட்டென்று பார்த்து, வண்டியிலிருந்து இறங்கி ஓடி…நாலு பாக்கெட் பால் வேணும்…என்று கத்தியபோது…பால் எப்பயோ தீர்ந்திடுச்சேய்யா…இனி காலைல ஆறு…ஆறரைக்குத்தான்…என்று பழக்கமான கடைக்காரன் கையை விரித்து விட்டான். ஃபோன் பண்ணிச் சொல்லியிருந்தீங்கன்னாக் கூட எடுத்து வச்சிருப்பேனே…என்று தன்னிரக்கம் வேறு.

            எது நடக்கிறதோ இல்லையோ…காலையில் அஞ்சரைக்கு எழுந்ததுமே காப்பி குடித்தாக வேண்டும்…! தொண்டையில் அது சூடாக இறங்கினால்தான் நாளே துவங்கும்.  இல்லையென்றால் உலகம் ஸ்தம்பித்துப் போகாதா? பால் இல்லாமப் போச்சே…பால் இல்லாமப் போச்சே….அடச்சே…ச்சே…!! என்று பெரும் சோகத்தோடு அலுத்துக் கொண்டே தூங்கியாயிற்று. அந்தப் பால் நினைப்பே மைன்ட்டில் செட்டாகி ஆளைக் கிள்ளி எழுப்பி விட்டது.

            பொழுது விடியும் வேளையில் ஆபத்பாந்தவனாய் அந்தக் கிழவர்.  நாலரைக்கு எனக்கு சட்டென்று விழிப்பு வந்தது பெரும் ஆச்சர்யம்தான். அவரின் செருப்புச் சத்தம்தான் என்னை உசுப்பித் தூக்கி நிறுத்திற்று.  புத்தி நம் உறக்கத்திலும் எப்படி வேலை செய்கிறது பாருங்கள்?

            ஊரும் உலகமும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கையில் ஒரு ஜீவன் யாரையும் தொந்தரவு செய்யாமல் அந்தப் பகுதியில் வீடு வீடாய்ப் போய் பால் பாக்கெட் போட்டுக் கொண்டு தன்னிச்சையாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நாய்கள் வாய்மூடி மௌனியாய் அவர் பின்னால் வந்துகொண்டேயிருக்கின்றன அவருக்குக் காவல்போல். எவ்வளவு புத்திசாலிகள்?

 வயது  தொண்ணூறுக்கு மேல். ஆனாலும் விடாத உழைப்பு. கடை வைத்திருக்கும்  மகனுக்கு உதவி. உயர்ந்த உள்ளம். .அதுவே தெய்வம். பால் வண்டியான சைக்கிளை அவரால் ஓட்ட முடியாதுதான். ஆனால் பின் சீட்டில் பிளாஸ்டிக் பெட்டியை வைத்து இறுக்கக் கட்டி, அதில் பால் பாக்கெட்டுகளைப் போட்டுக் கொண்டு தள்ளியபடியே தளராது சென்று கொண்டிருக்கும் அந்த உருவம்….பார்ப்போர் மனதை நெகிழச் செய்யும். வீடு வீடாய் ஸ்டான்ட் போட, எடுக்க…எத்தனை கஷ்டம்? அதென்ன எக்ஸர்சைஸா?  அங்கங்கே வண்டியைச் ஸ்டான்ட் போட்டு நிறுத்தி, தேவையான பாக்கெட்டுகளைக் கையில் எடுத்துக் கொண்டு  வாசல் கேட்டைத் திறந்து கயிறால் கட்டி விட்டிருக்கும் பையில் போடுவதும், மாடியிலிருந்து கயிறு கட்டி ஊஞ்சலாடித்  தொங்கிக் கொண்டிருக்கும் கூடைகளில், பைகளில் போட்டுவிட்டு நகர்வதும்,…அட…அட…அடா…என்னே பொறுமையும் சகிப்புத் தன்மையும்  இந்தப் பெரியவருக்கு? இந்த வயதிலும் உழைத்துத்தான் சாப்பிட வேண்டும் என்கிற தீர்மானமும், உறுதியும்…..பையனோடுதான் இருக்கிறார் என்றாலும்  அவனுக்குப் பெரும் உதவியாய் இருந்து மீதி நாட்களைக் கழிப்பதுதான் நியாயம், தர்மம் என்று செயல்படும் அந்தக் கிழவர் எவ்வளவு போற்றத் தக்கவர்? எத்தனை மதிக்கத் தக்கவர்?

            அவரிடம் போய் எப்படிக் கணக்குப் பார்ப்பது? ஆத்திர அவசரத்துக்குப் பால் தந்ததே பெரிய விஷயம்.  வீட்டுக்கு வீடு இத்தனை பாக்கெட் என்று கணக்குப் பண்ணி எடுத்துக் கொண்டு வரும் அவரிடம் பால் இருக்கா தாத்தா….? என்று மாடியிலிருந்து அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு கத்தியபோது…இருக்கு….வாங்க…என்று சொல்லியபடியே…உருட்டிக் கொண்டிருந்த வண்டியைத் தட்டுத் தடுமாறி நிறுத்தி, அதைத் தன் கைகளாலும், இடுப்பு அணைப்பிலும் தாங்கிப் பிடித்து நிறுத்தி,  மாடியை நோக்கிய அந்தக் கணம்….. அவரின் தள்ளாட்டமும், தடுமாற்றமும், கண்கள் சரியாய்த் தெரியாத நிலையில் அவரின் இடுங்கிய பார்வையும்….இவனை ஒரு கணம் ஆட்டி எடுத்துவிட்டதுதான்.

            ஐயையோ…பெரியவரத் தெரியாம நிப்பாட்டிட்டமோ? அவசரப்பட்டுட்டனே….! என்று மனது சங்கடப் பட, கிடு கிடுவென்று மாடியிலிருந்து இறங்கி ஓடி….பால் பாக்கெட்டை அவரிடமிருந்து வாங்கியபோது மனசு எவ்வளவு நன்றி பாராட்டியது அந்தக் கிழவருக்கு. பொழுது விடியும் முன் சூடாய் மணக்க…மணக்கக் காப்பி குடித்தாக வேண்டும் என்கிற வாழ்க்கை லட்சியம் இன்று அவரால் தவறாமல் நிறைவேறப் போகிறதே…? எவ்வளவு பெரிய வாழ்நாள் லட்சியம் அது…!! வெளியே சொன்னால் சிரிப்பார்கள்.

            அவர் சொன்ன கணக்கே மண்டையில் ஏறாத அந்தக் கணத்தில், இன்னும் ஒரு பாக்கெட் கொண்டு வந்து தந்திடுறேன்….அதோட கணக்குச் சரியாப் போயிடும்…அடுத்தாப்ல இன்னொரு ரவுண்டு வருவேன்…அப்பத் தர்றேன்…என்று அவராகவே சொன்னதும் பதிலுக்கு வெறுமே மண்டையைத்தான் ஆட்ட முடிந்தது. புத்திக்குக் கணக்குப் பண்ணத் தெரியவில்லை. தோன்றவுமில்லை. கேட்க வாயுமில்லை.

            அந்த நாலரை மணிக்கு அந்தப் பகுதியில் கிடைக்காத பால் வீட்டு வாசலில் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி ஏதோ பெரும் சாதனையை நிகழ்த்தி விட்டது போன்றதான உணர்வைத்தான் எனக்கு ஏற்படுத்தியிருந்தது. எல்லோரும் குறட்டை விட்டுத் தூங்குகையில் நான் மட்டும் விழித்து அவர்களுக்காக ஓடுகிறேனே?  வீட்டிலுள்ள எல்லோருக்கும் என்னால், என் முனைப்பால் கிடைத்த ஏமாற்றமில்லாத காலைப் புத்துணர்ச்சி. பாக்கிக் காசைப் பற்றி  மனம் எண்ணவேயில்லை. வந்து இன்னொரு பாக்கெட் தருகிறேன் என்று சொன்ன தாத்தாவையும் மேற்கொண்டு எதிர்பார்க்கவில்லை. முதல்ல போய் அடுப்பை மூட்டி. பாலைக் காய்ச்சி, காபியை உள்ளே இறக்குற வழியைப் பாருய்யா….!

            இப்போது இவள் என்னடாவென்றால், புத்தியைத் தீட்டி, மனக் கணக்குப் போட்டு மீதிக் காசெங்கேய்யா என்று ஒத்தைக்கு நிற்கிறாள்? ஏமாந்துட்டீங்க…என்று சொல்லாமல் சொல்கிறாள். கேலி செய்கிறாள். இவனை எதிலடா மடக்கலாம் என்று காத்துக் கொண்டிருப்பாளோ? திருடனை “மடக்கிப்“ பிடித்தனர் என்பதுபோல் அகப்பட்டக்கொண்டேன்.

            ஏமாந்தால்தான் என்ன? அப்படியே வைத்துக் கொள்வோமே…என்ன குடி முழுகிப் போகிறது? அந்தப் பெரியவரின் உழைப்பின் முன்னால் இதுவெல்லாம் தூசு!  பாக்கெட் இருபத்தஞ்சு ரூபாய் என்று கூடச் சொல்லட்டுமே…இன்னும் ஒரு மீதிப் பாக்கெட் கொண்டு வந்து கொடுக்கப் போகிறார்? நூறுக்குக் கணக்குத் தீர்ந்து விடும். பிறகென்ன நஷ்டம்?  அந்த மீதி ஒன்றைக் கொடுக்காவிட்டால்தான் என்ன?

             வராதுங்கிறனே... என்னைக்கு இன்னொரு ரவுன்ட் வந்திருக்கார் அவர்? அவர் வயசுக்கு ஒரு ரவுன்ட் வர்றதே பிரம்மப் பிரயத்தனம். அவர் ஏதோ சொல்லியிருக்கார்…நீங்களும் மொண்ணையாக் கேட்டுட்டு வந்து நிக்கிறீங்க…? காசு கொடுத்துதானே பால் வாங்கினோம்…அப்பக் கணக்குப் பண்ணி மீதி வாங்கத் தெரியாதா? அதிலென்ன தப்பு? கௌரவக் குறைச்சல்? அவர் சொன்னதைக் கேட்டுட்டு அப்டியே வந்து நிப்பீங்களா? இருபத்தி ஒண்ணுதானே தாத்தா…காசுக்கு இருபத்திரெண்டு, ஒரு ரூபா கூட வச்சிக்குங்க…மூணு பாக்கெட்டுக்கு அறுபத்தி ஒன்பது போக மீதி முப்பத்தி ஒண்ணு கொடுங்கன்னு வாய் விட்டுக் கேட்டு வாங்கியிருக்க வேண்டாமா? இந்தச் சின்னக் கணக்குக் கூடவா உங்களுக்குப் போடத் தெரியாது?தூக்கம் தெளியலயா அப்போ…அவர் முன்னாடி தூங்கிக்கிட்டே நின்னீங்களா?   – விட்டு வாங்கினாள் வைதேகி. அடேயப்பா…என்னா வாய்? என்னா பேச்சு? சந்தர்ப்பம் கிடைத்தால் ஆளைப் போட்டு அமுக்கி துவம்சம் செய்து விடுவாள்.

            எனக்குள் எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. ஏழு மணிக்கு மேல் சாவகாசமாய்க் கிளம்பிப் போய் ஆடி அசைந்து வாங்கிக் கொண்டு வந்து, இந்தா பிடி…என்று சொல்லியிருந்தால்தான் இவளுக்கெல்லாம் சரியாய் வரும். ஒருத்தன் கஷ்டப்பட்டு சத்தம் கேட்டு அலர்ட் ஆகி, தூக்கத்தை விரட்டி, மாடியிலிருந்து திடுதிடுவென்று இறங்கி ஓடிப் போய் அக்கறையாய் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறானே…என்ற நன்றியில்லையே? வாங்கின பாலைப் பக்குவமாய்ச் காய்ச்சி எடுத்து வைத்திருக்கிறானே? என்கிற சமாதானப் பார்வையில்லை. வெட்டி ஓட்டு ஓட்டுகிறாள். சண்டைக்கு அடிபிடி மாடுபிடி…!

            மீதி ஒரு பாக்கெட்டை அவர் எங்க கொண்டு வந்து தரப் போறார்? அதெல்லாம் வர மாட்டார்….பாக்கிக் காசும் மொங்கான்தான். அப்படியென்ன அவசரம்? காலைல ஏழு மணிக்கு மேலே காப்பி சாப்பிட்டா தொண்டைல இறங்காதா உங்களுக்கு? ஒரு நாளைக்கு கொஞ்சம் லேட்டா காப்பி சாப்பிட்டா உயிர் போயிடுமா? யாருக்காக இப்டி உசிர விட்டுண்டு ஓடிப்போய் வாங்கினீங்க? நாங்க யாரும் கேட்கலையே? நீங்களா எங்களுக்கு உதவி செய்றதா நினைச்சிட்டு இப்டியெல்லாம் கோமாளித்தனம் பண்ணினா அதுக்கு நாங்க என்ன பண்றது? நாங்களா பொறுப்பாக முடியும்? பொண்ணும். பையனும் நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்த அறையில் மாமியார்.  யார் இருந்தால் எனக்கென்ன, சொல்ல வேண்டியதைச் சொன்னால்தான் என் மனசு ஆறும்…! உழைக்கவும் உழைத்து, கொத்தடிமையாவும் இருத்தல் இருக்கிறதே…! அதைப்போல் ஒரு கொடுமை உலகில் வேறேதுமில்லை.

            அடக் கடவுளே…! இதற்கா இவ்வளவு பேச்சு?ஈஸ்வரா…என்று எனக்கு விடுதலை?  ஆனாலும் இவளுக்கு வாய் ரொம்ப அதிகம்தான். எப்படித்தான் அடக்குவது இதை? பிஞ்சுல பழுத்தவ மாதிரி இப்படி எகிறிப் பாய்கிறாளே? இவளை எப்படி இவர்கள் வீட்டில் பொறுத்திருந்தார்களோ? மாட்டினான்யா வசம்மா ஒரு கிறுக்கன்…என்று என்னிடம் தள்ளிவிட்டு விட்டார்களோ?

            கொஞ்சம் உன் திருவாயை மூடிட்டு சும்மா இருக்கியா? ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் ஓ…ஓ…ன்னு கத்திட்டு? தேவையில்லாத டென்ஷன்.  பக்கத்து வீட்டுல காதுல விழுந்தா உன்னைப் பத்தித்தான் தப்பா நினைப்பாங்க…கொஞ்சம் அடக்கி வாசி…ஓட்ட வாயி….!! பொம்பளைக்கு இவ்வளவு வாய் ஆகாது….ஊர் சிரிச்சிப் போகும் அப்புறம்….! மனசு வெறுத்துப் போயிடும்…!

            சொல்லிவிட்டு வேகமாய்க் கீழே இறங்கி என் சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்தேன்.  இத்தனை வருடம் வேலை பார்த்தும் இன்னும் ஒரு மொபெட் கூட வாங்க முடியாத நிலையில்தான் நான் இருக்கிறேன். இரண்டு முறை டிபார்ட்மென்ட் லோனுக்கு அப்ளை பண்ணி, ஃபன்ட் இல்லை…ஃபன்ட் இல்லை  என்று திரும்பி வந்து விட்டது. எல்லாத்துக்கும் ஒரு ராசி வேணும்…கடன் பெறுவதில் கூடவா இத்தனை சிரமங்கள்? ஆபீசில் இன்னும் சைக்கிளில் வரும் ஒரே ஆள் நான்தான்.

அந்தக் குறை வைதேகிக்குத் தாளாத ஒன்று.  ஒரு கோயில் குளம்னு எங்கயாச்சும் ஃப்ரீயாப் போக முடியுதா? வர முடியுதா?  எல்லாத்துக்கும் நடந்து நடந்தே சாக வேண்டியிருக்கு….பஸ்ல போயிப் போயி காசு கொடுத்து மாளல…..அந்தக் கூட்டத்துல நசுங்கிச் செத்து, யாரு போவாங்க? அப்டி என்ன சாமி வேண்டியிருக்குன்னுதான் அலுப்பு வருது.  எனக்கு எதுக்கும் யோகமில்லை….வீடு வீடுன்னு கெதியாக் கெடந்து செத்து மடிய வேண்டிதான்…..வாழ்க்கைப்பட்ட எடம் சரியில்லை…யாரை நோகுறது? –எனக்கும்தான்…நானும் என் மனதில் சொல்லிக் கொள்வேன்தான்.

 நாமே இப்படிக் குறைபட்டுக் கொண்டால் தாத்தா மாதிரி ஆட்கள்? எந்தச் சாமியைக் கும்பிட்டால் இந்தத் துயரம் தீரும்? நன்மையும் தீமையும் பிறர் தர வாரா…! எல்லாமும் நமக்கு நாமே சம்பாதித்துக் கொள்வதுதான். இருப்பதை வைத்து அல்லது நியாயமாய்க் கிடைக்கும்வரை  ..….திருப்தி கொள்ள முடியாத மனசு.

அவள் மனக்குறையைத் தீர்த்து வைக்க என்றுதான் எனக்கு வேளை வரப்போகிறதோ? இந்தச் சமயம் பார்த்துத்தான் எல்லா நினைப்பும் வருகிறது. நினைப்பு என்று வருவதென்ன? எப்போதும்  இதெல்லாமும் மனதில் காட்சிகளாய் ஓடிக் கொண்டிருப்பதுதான். நான் நடுத்தர வர்க்கத்தவனா அல்லது கீழ் நடுத்தர வர்க்கத்தவனா? இன்னும் எவ்வளவு வருவாய் இருந்தால் என்னால் என் குடும்பத்தை சந்தோஷமாய்க் கொண்டு செலுத்த முடியும்?        பற்றாக்குறையோடு குடும்பம் நடத்துவது பாவமா? கடன் எதுவுமில்லையே? அந்த திருப்தி ஏன் வரமாட்டேனென்கிறது?

தீராத, ஓயாத சிந்தனைகள் என் மனதில். இருந்தால் பெரும் பணக்காரனாய் வலம் வர வேண்டும். அல்லது பரம ஏழையாய்ச் சுற்றித் திரிய வேண்டும் . இந்த ரெண்டும்கெட்டான் மத்தியதர வர்க்க வாழ்வு இருக்கிறதே….அப்பப்பா…! மனுஷனால் நினைத்துப் பார்க்கவே முடியாத துன்பங்கள் அடங்கியவை அவை. பற்றாக் குறை…பற்றாக் குறை… அநியாயப் பற்றாக்குறை….எது வந்தாலும் போதாது. எவ்வளவு வந்தாலும் போதாது. எண்ணிச் சுட்டது விண்ணப்பம் என்று ஒரு முதுமொழி.   எண்ணிச் சுடவே இருந்தால்தானே? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? வெறும் கையில் முழம் போட முடியமா?

ட…நீங்க எதுக்கு வந்தீங்க…..? நாந்தான் வருவனே….இதோ கிளம்பிட்டேயிருக்கேன்ல… - கையில் ஒரு பால் பாக்கெட்டோடு கொந்திக் கொந்தி நடந்து வந்து கொண்டிருந்தார் அந்தக் கிழவர்.  அடப் பாவி மனுஷா…!

என்னாச்சு…ஒத்தப் பாக்கெட்டோடு வர்றீங்க…? என்றேன் நான்.

ஒங்களுக்குத்தான்…..கொண்டாந்து தர்றேன்னு சொல்லிட்டு வந்தேன்ல…..? கொடுக்க வேண்டாமா?  பெறவு நீங்க எதுக்கு வர்றீங்க? நா வரமாட்டன்னு நினைச்சிட்டீங்களா? – சொல்லிவிட்டுப் பொக்கு பொக்கென்று பொக்கை வாயால் சிரித்தார். ஒரு குழந்தையின் குதூகலம் அதில் தெறித்தது. ரொம்பவும் அனுபவம் வாய்ந்த சிரிப்பு அது. ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது.

இதக் கொடுக்க வாணாமா? இன்னைக்கு அடுத்த ரவுன்ட் இல்லாமப் போச்சு…பால் பாக்கெட் கொறச்சுப் போட்டுட்டாங்க….ராத்திரி பார்லர்ல ஏதோ நிறையப் பால் கெட்டுப் போயிடுச்சாமுல்ல….கீழே கொட்டிட்டாகளாம். எல்லாக் கடைக்கும் அளவாத்தான் போட்டிருக்காக இன்னைக்கு…சரி…உங்க ஒரு பாக்கெட்டை ஏன் தொங்கலா விடணும்னு எடுத்திட்டுப் புறப்பட்டேன்…..இந்தாங்க பிடிங்க……-சொல்லிக் கொண்டே  பால் பாக்கெட்டை என் கையில் திணித்தவர்…இருங்க…பாக்கி தர்றேன்….என்றார்.

இன்னும் என்ன பாக்கி? அதான் பால் பாக்கெட் கொடுத்திட்டீங்களே…என்றேன் புரியாமல். அப்போதும் என்னிடம் கணக்கு ஏதுமில்லை.   அவரிடம் போய் மனக் கணக்குப் போட்டு வாங்க எனக்கு மனசே இல்லை. மீதி ஒரு பாக்கெட்டைக் கொடுத்து விட வேண்டும் என்று புறப்பட்டுப் பாதி வழி வந்திருக்கிறாரே…என்ன ஒரு நேர்மையான உணர்வு இந்த மனுஷனுக்கு? பழையவர்கள் பழையவர்கள்தான். அந்த மகிமையே தனி.  தொண்ணூறு தாண்டிய ஒரு ஜீவன் பொழுது விடிந்தும் விடியாததுமாய் உழைக்கும் உழைப்பா இது? துவங்கிய வேலையை ஒட்டுக்க முடித்தால்தான் ஆயிற்று என்கிற தீர்மானம். என்ன ஒரு ஒழுங்கும் நேர்மையும்…!

இந்தாங்க பாக்கி…நாலு பாக்கெட்…நாலிருபது எண்பது…நா மூண பன்னெண்டு….தொண்ணூத்தி ரெண்டு போக மீதி எட்டு….சரியா இருக்கா பார்த்துக்குங்க….

எதுக்குத் தாத்தா இதெல்லாம்…? மீதியைத் தராட்டாத்தான் என்ன? எதுக்கு இந்தக் கணக்கு? வாடிக்கையல்லாத எனக்கு, கேட்டவுடனே மறுக்காம எடுத்துத் தந்தீங்களே…அது எவ்வளவு பெரிய விஷயம்? பால்லெல்லாம் இல்ல…ன்னு முகத்தத் திருப்பிட்டுப் போறவுங்கதான் அதிகம்.  போதாக்குறைக்கு இன்னிக்குப் பால் ஷார்ட்டேஜ்னு வேறே சொல்றீங்க…நான் வாங்கின பால் வேறே யாராச்சும் வாடிக்கையாளருக்கு குறையில்லாமப் போயிருக்கும்….இன்னைக்குப் பார்த்து நான்தான் உங்களுக்குக் குறுக்கே  சங்கடமா வந்து நின்னுட்டேன் போலிருக்கு….

சே…சே…அது ஏன் அப்டி நினைக்கிறீங்க…ஒவ்வொரு நாளைக்கு இப்டி ஏதாச்சும் ஆகுறதுதான்.  சகஜம்தானே…எதிர்பாராம நடக்குறதுக்கு நாமதான் என்ன பண்ண முடியும்? அதுக்காகப் பாலை ஒரு நியாயமில்லாத விலைக்கு விற்க முடியுமா? காசுக்கு இருபத்திரெண்டு…நா ஒரு ரூபா கூடக் கேட்குறேன்….அவ்வளவுதான்…..வீட்டுக்கு வந்து டெலிவரி கொடுக்குறவுக இருபத்தஞ்சுன்னெல்லாம் கூட விற்குறாங்க…நமக்கு அது வாணாம். எதுலயும் மனுசனுக்கு ஒரு நிதானம் வேணும்…நியாயம் வேணும்…அப்டி வர்ற எதுவும்தான் ஒருத்தனுக்கு நிலைக்கும்…நீங்க கொண்டு போங்க….என்று மீதிச் சில்லரையை என்னிடம் திணித்து விட்டு நடையைக் கட்டினார் அவர்.  அவர் கணக்கு பாக்கி கொடுப்பதோடும், முடிந்தது அன்றைய வேலை என்று திரும்புவதோடும்தான் நிறைவு பெறுகிறது. கோடு போட்டுக்கொண்டு பயணிக்கும் அன்றாட நியமங்கள். அவரவர் மனது நிர்ணயித்து வைத்திருக்கும் தர்ம நியாயங்கள். அந்த மனக் கணக்கு தனிக் கணக்கு. அது என்ன வெறும் பால் கணக்கா, மனக் கணக்கா அல்லது பால்மனக் கணக்கா?

மீதி ஒரு பாக்கெட்டும் வராது…பாக்கிச் சில்லரையும் வராது….நல்லா ஏமாந்தீங்க…மொங்கான்தான் –என்னவொரு இளக்காரமான பேச்சு?  வைதேகியின் வார்த்தைகள் என் காதுகளை அறைந்தன. நமக்கு வாய்த்தது இப்படி…என்ன செய்ய? அவள் கணக்கும் தனிக்கணக்குதான். தனி நபர் கணக்குகள் பல இடங்களில் மாறுபடும்தானே? ஒத்து வராத கணக்குகளோடும் ஒன்றித்தானே பயணிக்கிறோம்? உலக நடைமுறையிலிருந்து விலகிச் செல்ல ஏலுமா? நன்னெஞ்சே நீ  அறிவாய்…!  சில பெண்கள் பலவற்றில் எப்போதும் கொஞ்சம் அதீதம்தான்…! நினைத்து சிரித்துக் கொண்டேன்.

பாக்கிச் சில்லரையையும் எடுத்துக் கொண்டு ஒரு பால் பாக்கெட்டோடு தட்டுத் தடுமாறி பாதி வழிக்கும் மேல் வந்து, ஏன் நீங்க வந்தீங்க…நான்தான் வருவனே..என்று பவ்யமாய்ச் சொல்லிக்  கொடுத்து விட்டு படு நிதானமாய், நிச்சலனமாய்த் திரும்பி நடந்து கொண்டிருந்த அந்தத் தாத்தாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றேன் நான்.

  -------------------------------------

                                               

 

 

கருத்துகள் இல்லை:

பேசும் புதிய சக்தி - ஏப்ரல் 2025 இதழில்   “கடைநிலை“  நாவல் அறிமுகம்