23 ஜூன் 2019

“மின்னல்“ – சிறுகதை – கி.ராஜநாராயணன் = உஷாதீபன் வாசிப்பனுபவம்


“மின்னல்“ – சிறுகதை – கி.ராஜநாராயணன்               ***********************************************************************************************************************************   உஷாதீபன்,                    வாசிப்பனுபவம்  
**************************************************************************************                                                     தொகுப்பு:-“கதவு“ – அன்னம் வெளியீடு                                          சிவகங்கை                                                                                               ******************************************************************************************************************************************************************************

   
        இப்படித்தான் கதை எழுத வேண்டும் என்று ஏதேனும் வரைமுறை இருக்கிறதா? இருக்கிறது என்றார்கள் அப்போது. அப்படிச் சொன்ன அந்தக் காலத்திலேயே அதெல்லாம் இல்லை என்று நிலை நிறுத்துவதுபோல் படைப்புக்கள் வந்தன. அட, இப்படிக் கூட எழுத முடியுமா? என்று மூக்கில் விரல் வைத்தார்கள் அதைப் படித்தவர்கள். மனதில்லாமல் பாராட்டினார்கள். கண்டும் காணாததுபோல் இருந்தார்கள். ரெண்டு வார்த்தை சொல்லி விட்டால் எங்கே தன் எழுத்து கௌரவம் பாதிக்கப்படுமோ என்று பயந்தார்கள். நான் அதெல்லாம் படிக்கிறதில்லை என்று அலட்சியமாய் இருந்தார்கள். அப்படியிருந்து, எந்த விதிகளுக்கும் உட்படாத மகோன்னதப் படைப்புக்களைப் படிக்கத் தவற விட்டார்கள். வாய்விட்டுப் பாராட்டத் தவறி, தங்கள் மதிப்பைக் குறைத்துக் கொண்டார்கள்.
 படித்தவன்தான் எழுத முடியும், படிக்காதவன் எழுத முடியாது என்றும் ஏதாவது இருக்கிறதா? சிறந்த வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள்தான் எழுத முடியும், அல்லாதவர்கள் கையில் பேனாவைத் தொடவே முடியாது என்றும் ஏதாவது உண்டா? கதையே எழுதாதவர்கள் எழுதவே முடியாது…கொஞ்சமாவது அனுபவம் வேண்டும் என்று ஏதேனும் சொல்ல முடியுமா?  இப்படியே அவரவர்க்குத் தோன்றியபடி கேள்விகளைக் கேட்டுக் கொண்டும், தாங்களே அறிவு ஜீவிகள் என்று நினைத்து பதில் சொல்லிக் கொண்டும் அல்லது மனதில் நினைத்து தனக்குத்தானே பெருமைப் பட்டுக் கொண்டும், படைப்புக்களைத் தந்தவர்கள் தங்களின் எல்லா ஆக்கங்களிலும் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிட  முடியுமா எவராலும்? அல்லது நான் எழுதுவதுதான் எழுத்து என்று நிலை நிறுத்திவிட முடியுமா?
படைப்பாளி ஒன்றை நினைத்து எழுதுகிறான்…. வாசகன் ஒன்றைப் புரிந்து கொள்கிறான்…தான் எதை உணர்த்த எழுதினோமோ அது வாசகர்களால் சரியான கோணத்தில் உணரப்பட்டுள்ளது, புரிந்து கொள்ளப்பட்டுள்ளது  என்று யாரேனும் திருப்தியாகச் சொல்லிவிட முடியுமா? அவரவர் அப்படி நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். தனக்குத்தானே பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். சூட்சுமத்தை அப்படி ஒளித்து வைத்தேன்… …இப்படி மறைத்திருந்தேன்…என்பதெல்லாம் வெறும் சொந்தப் பெருமை. எல்லா வாசகர்களாலும் ஒரே கோணத்தில் புரிந்து கொள்ளப்படுதல் இல்லை என்பதுதான் யதார்த்தம். அதைத் தவறு என்றும் சொல்லிவிட முடியாது.
எழுத்துக்கு ஆதாரமே ஆழ்ந்த ரசனையும், வாழ்க்கை அனுபவமுமேதான் என்று பள்ளிக் கல்விப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்காத  பலரும் இங்கே நிரூபித்திருக்கிறார்களே…! கொள்ளையாய் எழுதித் தள்ளியிருக்கிறார்களே…! மற்றவர்களையெல்லாம் விட அதிகமாகப் புகழப்பட்டிருக்கிறார்களே…! அப்படி நிரூபித்தவர்களிடம் தங்களின் தோல்வியை மானசீகமாக ஒப்புக் கொண்டவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். ஆழமான கருவை உள்ளடக்கி, நிறையக் கதாபாத்திரங்களை உலவவிட்டு, அறிவுபூர்வமான விவாதங்களைக் கொண்டு வந்து, தத்துவ வித்தகங்களை, விசாரங்களை அள்ளித் தெளித்து, உருவம், உத்தி, உள்ளடக்கம்,  க்ராஃப்ட் ஒர்க், டெப்த்…என்ற பதப் பிரயோகங்களை முன்னிறுத்தி தன் படைப்பைப் பற்றிப் பெருமையாய்ச் சொல்லிக் கொள்பவர்கள் அல்லது சொல்ல வைப்பவர்கள் இந்த மாதிரிச் சாதாரண, எளிமையான, விகல்பமற்ற, படைப்புக்களைப் படித்து தங்களுக்குள் வெட்கப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
இலக்கியம் வெறுமே படித்துப் புரிந்து கொள்ளப்பட வேண்டியது மட்டுமல்லாமல்  ஆழமாய், உள்ளார்ந்து உணரப்பட வேண்டியதல்லவா? அப்படி ஆழ்மனதோடு ஒன்றிப் போய் படித்தால்தானே இலக்கியம் இனிக்கும்.
அப்படி ஆழமாய் உணரக் கூடிய, உணர வேண்டிய படைப்புத்தான் பெரியவர் திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் “மின்னல்” சிறுகதை. இதெல்லாம் ஒரு கதையா? இதப்போய் ஒரு கதையா எழுதியிருக்காரு? அப்படி என்ன இருக்கு இதுல? வெறுமே சூழல விவரிக்கிறது மட்டும்தானா கதை? அது மட்டுமே ஒரு கதையாகிட முடியுமா? என்று கேட்டால், அங்குதான் இந்த உணரப்பட வேண்டியது என்கிற தாத்பர்யம் வந்து குந்திக் கொள்கிறது.
எழுபதுகளில் மதுரை சென்ட்ரல் சினிமாத் தியேட்டரின் பின் பக்கம் ஒரு கல்பதித்த  சந்தின் ஒரு சின்ன இடத்தில்தான் சிவகங்கை அன்னம் பதிப்பகத்தின் புத்தகக் கடை இருந்தது. அங்கேதான் இந்தக் “கதவு“ தொகுப்பு கிடைத்தது. அந்தக் கதவில் அடித்த மின்னல்தான் இது.
கதையென்று ஒன்றுமேயில்லையே இதில்….! வெறுமே கதாபாத்திரங்கள் உட்கார்ந்திருப்பதையும், ஒருவருக்கொருவர் வேகும் வெயிலில் புழுங்குவதையும், வியர்வையைத் துடைத்துக் கொள்வதையும், புஸ்…புஸ்….என்று வெக்கை தாங்காமல் மூச்சு விடுவதையும், ஒருத்தருக்கொருத்தர் கோபமாய்ப் பார்த்துக் கொள்வதையும், எரிச்சல் பட்டுக் கொள்வதையும், இட நெருக்கடியில் தவிப்பதையும், எப்பய்யா இந்த பஸ் கௌம்பும் என்று தெரியாமல் அவஸ்தையை சகித்துக் கொண்டு, இருக்கவும் மனமில்லாமல், போகவும் முடியாமல் கிடந்து நெளிவதையும் மட்டுமே சொன்னது எப்படி ஒரு சிறந்த கதையாக மாறிப் போனது? அட…படிக்கும் நமக்கே அந்தப் பஸ்ஸூக்குள் ஏறியதைப் போலவும், கூட்டத்தில் சிக்கிவிட்டதைப் போலவும், இட நெருக்கடியில் மாட்டிக் கொண்டதைப் போலவும், வெளியேற முடியாமல் தவிப்பதைப் போலவும் உணர வைத்து நம்மையும் அந்தக் கஷ்டத்திற்குள் மாட்டிவிட்டு விட்டாரே….!
அந்தச் சமயம் பஸ்.ஸிற்குள் மென்மையான குளிர் காற்று. பிரயாணிகளைத் தடவிச் சென்றது. அந்தக் கலகலச் சிரிப்பு எல்லோர் காதுகளிலும் புகுந்தது. தொடர்ந்து மருக்கொழுந்தின் வாடை….கம்மென்று. கிராமப் பெண்ணொருத்தி கையில் குழந்தையுடன்….பஸ்ஸில்….
போலீஸ்காரரைப் பார்த்ததும் அந்தக் குழந்தை சிரிக்கிறது. வெயிலின் தாக்கத்தில் அவரின் கோணல் முகம் மறைந்து குதூகலம் படர்கிறது. புசு புசுக் கன்னத்தோடு, கருவண்டுக் கண்களோடு எல்லோரையும் சுற்றிச் சுற்றி மலங்க மலங்கப் பார்க்கிறது குழந்தை…குளிர்ந்த காற்று வீசிப் பரவுகிறது பஸ்ஸில்…அட…அதுகாறும் பரவியிருந்த மூதேவி எங்கே போனாள்….லட்சுமி களை சட்டென்று எப்படி வந்தது அங்கே…! சொர்க்கத்தையே கையில் ஏந்தி வரும் அந்தப் பெண்மணியினால் அந்த பஸ்ஸில்தான் என்னவொரு மாற்றம் சட்டென்று? வா…ராசா…. –பல்லுப் போன அந்தக் கிழவிக்குத்தான் அந்தக் குழந்தை மேல் என்னவொரு ப்ரியம்? அவள் கைகள் எப்படி நீள்கின்றன அதை நோக்கி…? என் செல்லக் கனியில்லே….அட….என்னமா ஒரு கொஞ்சல்…? அது கிடக்கட்டும்…அந்தக் கண்டக்டருக்குத்தான் எப்படியொரு அன்பு அப்படித் திடீரென்று முளைத்தது.    அதற்காக டிக்கெட் கிழித்து அது கையிலா கொடுப்பார்கள்? ஜன்னல் வழி காற்றோடு விட்டு விட்டதே…! தாயின் கலகலவென்ற சிரிப்பு…. போக்கிரிப் பயலே….போலீஸ்காரரின் கொஞ்சல்…..
அதுவரை அமைதியாய் இருந்த ரெண்டு கிழவிகளும் அந்தப் பெண்ணோடு பேச ஆரம்பித்து விட்டார்கள். மும்மூணு பல்லாக இருந்த ஒருவரின் வாயையும், அவற்றின் நாற்றத்தையும் சகித்துப் பழகி, அப்படி வாய்களாய்ப் பார்த்துப் பார்த்து, தன் முகத்தின் களையையே இழந்த அந்தப் பல் டாக்டர் கூட தன்னை மறந்து ரசிக்க ஆரம்பித்து விட்டாரே….! ஆஉறா…அந்த இளம் பெண்ணுக்குத்தான் எத்தனை அழகான, பல் வரிசை…!
அடடே…அந்தப் பெண் இறங்குகிறதே…இடம் வந்து விட்டதா…?
போய்ட்டு வாடா கண்ணு… - கிழவியின் ஆதங்கமான விடை கொடுத்தல்.
தடியான ஆசாமி ஒருத்தரின் சோம்பல் முறித்த  எரிச்சலான கொட்டாவி….தூங்க ஆரம்பித்து விட்ட போலீசும், கிழவியும்…..முகத்தில் மீண்டும் அருவருப்பு படர அமைதியாய் அமர்ந்திருக்கும் பல் டாக்டர்…உஸ்…அப்பப்பா…என்ன வேக்காடு….என்ன வேக்காடு…கொஞ்சம் தள்ளித்தான் உட்காருமேய்யா….எத்தனை தடவை சொல்லணும்….கண்டக்டரின் கோபமான கத்தல்…..
பஸ்ஸின் உறாரன் சத்தத்தில் அது யாருக்கும் காதில் விழுந்த மாதிரித் தெரியவில்லை…
மின்னலை உணர்ந்தீர்களா? ஆய்ந்து உணர வேண்டிய இப்படியான கதைகள் அய்யா கி.ரா.விடம் இன்னும் பல உண்டு. எல்லாவற்றிற்கும் ஆதாரம் அனுபவமும், ஆழ்ந்த ரசனையும்…அதுதான் ஒரு எழுத்தாளனைப் புடம்போட்டவனாய் மாற்றுகிறது. இந்தக் கதையை எழுதியபோது கி.ரா. அய்யாவுக்கு எத்தனை வயதிருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சந்தேகமேயில்லை. நாற்பதுக்குள்தான். ஒன்று நினைத்துக் கொள்ளுங்கள்….வயதிற்கும் மன முதிர்ச்சிக்கும் சம்பந்தமில்லை. அது தனி…இது தனி….இல்லையென்றால் இப்படியொரு படைப்பை அந்தச் சின்ன வயதில் தந்துவிட முடியுமா என்ன?
              --------------------------------------------------------------------------------------


      
                    

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...