26 அக்டோபர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - “பரதேசி வந்தான்“ - சிறுகதை - வாசிப்பனுபவம்

 

தி.ஜா.நூற்றாண்டு - பரதேசி வந்தான்“ - சிறுகதை - வாசிப்பனுபவம் -உஷாதீபன்

     எங்கும் இருக்கிறது நாதம். கேட்கவா முடிகிறது. கைதட்டியோ, வேறு ஏதாவது செய்தோதானே அதை உணர முடிகிறது? அது போலத்தான் இதுவும்....-                                                     அந்தப் பரதேசியில் வார்த்தைகள் எத்தனை சத்தியமானவை?

     வெறும் பரதேசியா அவன்? அப்படி என்றாலும் வயிறு பசிக்காமல் இருக்குமா? அந்தத் தணலை ஆற்றாமல் பரிதவித்து நிற்கிற அந்தத் தருணம், அவன் வாயிலிருந்து வரும் வயிரெறியும் அந்த வார்த்தைகளுக்கு சக்தியில்லாமலா போகும்? சாதாரண மனித ஜென்மம் அப்படியான ஒரு தருணத்தில் தன்னை மறந்து சொல்லும், சொல்லி விடும் அல்லது தவறி விழுந்து விடும் வார்த்தைகளுக்கு அத்தனை சக்தி கூடுமா? கூடிவிடுகிறதே...! கூடிவிட்டதே...! நான் சாபமிடலை ஐயா...என் பசி சாபமிட்டது....

       “அண்ணா“ அப்படித்தானே நம்ப வேண்டி வந்து விட்டது? சாதாரண ஆளா அண்ணா? கோர்ட்டில் வக்கீல். வாழ்க்கையில் நீதிபதி. அந்த நீதிபதியே இப்படி ஒரு காரியம் செய்யப்போய், அது அச்சான்யமாய் முடிந்து போகிறதே...! சாணக்கிய சாகசம் செய்து ஏற்றுக் கொண்ட வழக்கில் வெற்றி காணும் அவர், வாழ்க்கையில் அந்த நீதியை நிலைநாட்ட முடியவில்லையே...!

       நீர் எவ்வளவு பெரிய மனுஷனா இருந்து என்னய்யா பயன்? கொஞ்சூண்டு அன்பு இல்லையேயா உம்மிடம்? உம்முடைய அகங்காரம் அத்தனை பஞ்சையாக, லேசாகத்தானே இருக்கிறது? துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால் அது எத்தனை கம்பீரமாய் நின்றிருக்கும்? பரதேசி எத்தனை ஆணித்தரமாய் சொல்லிவிட்டான்? பரதேசிக்கு முன் வந்த பிச்சைக்காரன் என்னமாய்ப் பேசினான்? நான் சொல்றேன்...கேட்க மாட்டேன்னுட்டானே...?

       தெருவில் போகும் ஒரு சாதாரணப் பிச்சைக்காரன். அவனிடம் உமக்கென்ன வம்பு? என்னவோ அவனுக்கு வருவதை, தோன்றியதை (அப்படியா அவன் பாடுகிறான்? அட்சரம் பிசகாமல் குரு பக்தியை மனதை இருத்தியல்லவா பாடுகிறான்) இவனுக்கெல்லாம் என்ன பாட்டு வேண்டிக்கிடக்கு? தப்புத் தப்பாய்.... நினைக்கும் அண்ணாவின் அகந்தை....

     காஞ்சிமா புரியில்....வாங்க்ஷையுடன் வந்தெனக்கு....                                               வாஞ்சையா.....வாங்சைஷயா....?                                                               வாங்சைஷதானுங்க...எங்க குருநாதர் அப்டித்தான் சொல்லிக் கொடுத்திருக்காரு....-என்ன ஒரு உறுதி அவனுக்கு? -சாதாரணப் பிச்சை எடுப்பவன், தன் சொல்லைத் தட்டுவதா?                                                                                    அப்ப உனக்கு அரிசி கிடையாது....                                                                 வேணாங்க...                                                                                     அண்ணா...என்னண்ணா...பிச்சைக்காரன்டப் போயி வாயாடிண்டு? நீங்க எங்கே...அவனெங்கே..?           குருநாதன் சொல்லிட்டானாம்...இவன் சொல்ல மாட்டானாம்....                                    ஆமாய்யா...சொல்லத்தான் மாட்டேன்...நீர் பிச்சை போடணும்ங்கிறதுக்காக என் குருநாதர் பாடத்தை மாத்திப் பாட மாட்டேன்....காக்காய்க்குக் கிளின்னு பேர் வச்சு...நானூறு பேர் அழைச்சா...அது கிளிதான்....                                                                                    அங்கேயே அடிபட்டுப் போகிறது அண்ணாவின் நீதி பரிபாலனம்...பிச்சைக்காரனுக்கு என்ன ஒரு அகந்தை? ...தோன்றுகிறது. தான் சொன்னதை அவன் கேட்டாக வேண்டும் என்கிற மமதை இவருக்கு இல்லையா? அதை உணரவில்லையே? பெண்ணுக்குக் கல்யாணம் முடிந்து, கிரஉறப்பிரவேச வைபவத்தின்போதா அடுத்தது நடக்க வேண்டும்?

       இருநூறு இலைகள்...சாப்பாட்டிற்குப் போட்டாயிற்று. கொல்லைக்கட்டு, அடுக்களை, கொல்லை நடை, வாசல் நடை...என்று எங்கே பார்த்தாலும். பந்தியைச் சாரி சாரியாய் நோட்டம் விடுகிறார் அண்ணா. ஜூனியர்களின் கவனிப்பும், காரியமும் ஏதாவது ஒரு இடத்தில் பிசகினாலும் போச்சு. எங்கும், எதிலும் அபஸ்வரம் தட்டக் கூடாது....இசையறிஞர் அவர். அதன் நுணுக்கம் தெரிந்தவர். அதே நுணுக்கமும், தீர்க்கமும் அவரின் எல்லாச் செயல்களிலும் வெளிப்பட்டாக வேண்டும். அவரின் கௌரவமே அதுதான்.

       அப்படியிருந்தும் எப்படி இது நடந்தது? ஏ...பஞ்சாமி...யார்ரா இது அங்கே...? காட்டிய இடத்தில் இலைக்கு முன் அமர்ந்திருக்கும் ஒரு பரதேசி.....எலும்பும் தோலுமாய்...அழுக்குப் படிந்த உருவம்....எப்படிறா வந்தான்? என்னடா நிர்வாகம் பண்றேள்? கிளப்புடா அந்தக் கழுதையை.....

       உட்கார்ந்து விட்டானே அண்ணா....... கையை நனைத்து விட்டானே...

       வேண்டாம்...போகட்டும் பாவம்.... - அறிவு கேட்டதா என்ன? என்ன படித்து என்ன பயன்? என்ன செல்வமிருந்து என்ன பயன்? அந்த மனத்தில் துளி அன்பில்லையே...? இதை யார் அவருக்குச் சொல்வது? சொல்லி உணர்த்த வைப்பது?                                                                             ஓஉறா....அப்டியா....நானே போறேன்.... -ஏய்... எழுந்திருடா....?                                       


வாய் பேசாமல் நிமிர்கிறான் அந்தப் பரதேசி.  வாயில் போட்ட கறி...எச்சிலான கை.....பசிக்கிறது.....எச்சில் பண்ணி விட்டேன்.....வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்...!..               எழுந்திர்றாங்கிறேன்...பதிலா சொல்லிண்டிருக்கே....?-தரதரவென்று இழுத்து வெளியில் கொண்டு தள்ளுகிறார்...நிலைகுலைந்து விழுகிறான்.....கபகபவென்று பசிக்கும் வயிறு. தீயாய் எரிந்து கொண்டிருக்கிறது. கைக்கு எட்டியது வாய்க்குத் துளி எட்டி நின்று போயிற்று. பசியைக் கிளப்பி விட்டு விட்டது.  உள்ளே அனல்......பசி அனல்.....பற்றி எரிகிறது...

       எப்படிப்பட்ட ஒரு காட்சி...? பசித்தவனை, சாப்பிட அமர்ந்தவனை, சாப்பிட ஆரம்பித்துவி்ட்டவனை, கையை நனைச்சிட்டானேண்ணா....? என்று சொல்லியும்...கேட்காமல் முடியைப் பிடித்து இழுத்து வெளியில் கொண்டு தள்ளினால்....? - அந்தக் கடவுளுக்குத்தான் அடுக்குமா?           அவ்வளவு படித்த, செல்வந்தரான, அவ்வளவு புத்திசாலியான, செல்வாக்கு மிகுந்த...அண்ணா அதைச் செய்து விட்டாரே...?                                                                          ஒருவன் பெரிய செல்வந்தனாயும், மிகப்பெரிய தொழிலதிபராயும் இருந்து என்ன பயன்? அவனின் நற்செயல்கள், தான தருமங்கள், இவைகள்தானே அவனை வெளிக்கொண்டு வருகின்றன? உலகறியச் செய்கின்றன? அது போல்-

       அண்ணா சாணக்கிய அறிவு ஜீவியாய் இருந்து வக்கீல் தொழில் செய்து, நீதி பரிபாலனம் பண்ணி தன் கௌரதையைக் காப்பாற்றிய போதும், அவரிடம் ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்க வேண்டிய அன்பு, கருணை, நேயம்...இல்லாமல் போனதே...?

       வன் சபித்தால் பலிக்காமல் போகுமா? அப்படி ஒரு நிலையில் எவன் சபித்தாலும்....நடந்து விடுமோ?

       ஓய் வக்கீலே....நீர் நன்னா இருப்பீரா? இலையில் உட்கார்ந்து எச்சில் பண்ணினவனை இப்டி எழுப்பி விடுறீரே...இது தகுமா?...ஆகாது...ஆகவே ஆகாது...நா போறேன்...ஆனா இதே தேதிக்கு அடுத்த மாதம் நான் வருவேன்...உம்ம வீட்லயே உட்கார்ந்து சாப்பிடுவேன்...நடக்கிறதா இல்லியா பாரும்.....

       என்ன சொல்கிறான் இவன்? இவன் மனிதனா அல்லது வேறு யார்? சாபமிடுவதுபோல் சொல்லிவிட்டுப் போகிறானே? பதறிப்போகிறது அவர் மனம். நடந்து விடுகிறதே...சொன்னதுபோல்...

       கல்யாணப் பையன் பிரக்ஞையின்றி மயங்கி, டாக்டர் வந்து பார்த்து (அதுவும் கல்கத்தாவிலிருந்து) நாற்பத்தெட்டு மணி நேரம் கெடு விதித்து, கதை முடிந்து போகிறது. அண்ணாவின் இன்பக் கனவு...ஒரே பிள்ளை...ஜெகமே அவன்தான்....அது அழிந்து விடுகிறது. அவரின் ஆணவமும், அகந்தையும் அத்தோடு கருகிச் சாம்பலாகிறது.

       அந்தப் பரதேசியைக் கண்டதும் தேம்பித் தேம்பி அழுகிறார் அண்ணா.                               என் வார்த்தையால் ஆகலை....வருத்தப்படாதீர்கள்...சொன்னது போல் வந்தது வார்த்தை தவறக் கூடாது என்று...நான் சாபமிடவில்லை ஐயா... என் பசி சாபமிட்டது. இது நடப்பதற்கு அதுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை. தெரியாமல் இருந்ததை நான் சொல்லியிருக்கலாம்.... எங்கும் இருக்கிறது நாதம்...கை தட்டியோ, வேறு ஏதாவது செய்தோதானே உணர முடிகிறது? அது போலத்தான் இதுவும்..!  -   ஆஉறா...என்ன ஒரு ஆத்ம சிந்தனை...எப்படியான ஒரு ஆத்மப் பரிசோதனை?

       அண்ணா சூன்யத்தைப் பார்த்து வெறித்திருக்கிறார். இவன் மனிதனா அல்லது கடவுளா? துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால் அது எத்தனை கம்பீரமாய் நிமிர்ந்து நின்றிருக்கும்...? அவன் சொன்னதை இந்த அறிவு உணர்த்தவில்லையே....மனம் உணரவில்லையே....! என்ன படித்து என்ன பயன்? எவ்வளவு சொத்தும் பத்தும், தோட்டம் துரவும் இருந்தும் என்ன பயன்?

       ஓய்...கால தேவரே....உட்கார்ந்து பேசுமேன்...கால் வலிக்கவில்லையா? - கருணை பிறக்கிறது மனதில். பேச்சு மாறுகிறது அண்ணாவுக்கு. சோற்றுக்கு நின்ற பரதேசி காலதேவனாகி விடுகிறான்.

       வயிறு குழைய, விலா எலும்புகளின் தோல் விரிய...ஈஸ்வரா...!- பசியின் வடிவாக அமர்கிறான் அந்தப் பரதேசி.

       நம் வாழ்க்கையிலும் நாம் இப்படிக் கேள்விப் பட்டிருக்கிறோம்...இதற்கொப்ப வடிவான நிகழ்வுகளையும் கண் கொண்டு பார்த்திருக்கிறோம்தானே...! பரதேசி வந்தான்...வந்து போனவன் குரு ஸ்தானத்திற்கு உயர்கிறான். வாழ்க்கையை உணர்த்துகிறான். அவனுக்கிருக்கும் மனப் பக்குவம் அடேயப்பா...! சில வாரத்ததைகளில் எவ்வளவு உணர்த்தி விட்டான்?                                    அவ்வளவு பேர் உட்கார்ந்து சாப்பிடும் அந்தப் பந்தியில் நூற்றில் ஒருவனாய் அந்தப் பரதேசியும் அமர்ந்து சாப்பிடுவதில் அவர் என்ன குறைந்து போகப் போகிறார்...? அப்படி என்னதான் நஷ்டம் ஆகிவிடப் போகிறது. ஆனால் அந்த எளிய உண்மை அவருக்குத் தெரியவில்லை. அதற்கு மனசில் அன்பில்லாமல் போகிறது அண்ணாவுக்கு. செல்வாக்கும் அகந்தையும் கண்ணை மறைத்து விடுகிறது.

       காலம் காட்டிக் கொடுத்து விடுகிறது அந்த உண்மையை. அதன் அடையாளமாய் அந்தப் பரதேசி பிரசன்னமாகிறான். கால தேவனாய்... நின்று உணர்த்துகிறான்....

        தி.ஜா.வின் இந்தச் சிறுகதை க்ளாசிக் வரிசையில் இன்னும் நூறாண்டு காலத்திற்கு நிற்கும் என்பது சத்தியம்.

                                  -------------------------------------------------------------

      

      

 

 

      

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...