25 அக்டோபர் 2020

தி.ஜா.வுக்குத் தூண்டுதலாக இருந்த ஒரு சம்பவம் -பாயசம்-சிறுகதை வாசிப்பனுபவம்

தி.ஜா.வுக்குத் தூண்டுதலாக இருந்த ஒரு சம்பவம்


     தேனும் ஒரு விஷயம் கேள்விப்படும்போதோ அல்லது  ஒரு சம்பவம் காணப்படும்போதோ அதனால் உண்டாகும் பாதிப்பு மனதுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விடுமானால் அதுபற்றிய சிந்தனை ஓடிக்கொண்டேயிருக்கும். என்றாவது அச்சம்பவம் புனைவு வெளியில் ஒரு கதையாக உருவெடுக்கும் அல்லது ஒரு கதைக்குள் உள் நிகழ்வாய்ப் பரிணமிக்கும்.இது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொதுவானது. முழுக்க முழுக்கக் கற்பனையில் ஒரு படைப்பினை யாரும் தந்து விட முடியாது. அப்படியே தந்தாலும் அதில் ஜீவன் இருக்காது. ஜீவன் இருப்பதுபோல ஒரு பாசாங்கு வேண்டுமானால் பண்ண முடியும். அது ஒரு சிறந்த வாசகனால் நிச்சயம் உணரப்பட்டு விடும். இலக்கியத்தை உழைப்பாகக் கருதி வாசிக்கும் வாசகனிடம் பொய்மை அறுபட்டுப் போகும். 

      எல்லா எழுத்தாளர்களுக்கும் பொதுவான இந்த நியதி, ஒரு சம்பவத்துளியின் பாதிப்பாக பிரபல மூத்த படைப்பாளிகளுக்கும் உருப்பெற்றிருக்கிறதுதான்.

     லா.ச.ரா. வுக்கு உருளைக்கிழங்குக் கறி என்றால் கொள்ளை ஆசை. அன்று வீட்டில் அதுதான் என்று அறியப்படும் அந்தக் கணத்திலிருந்தே அதே நினைப்பாய் பரபரவென்று இருப்பார். வேறு வேலை ஏதும் ஓடாது. அடுப்பில் கறி வேகும் மணம் நாசியில் வாங்கும் அந்தத் தருணம் அவருக்கு ஆனந்தமானது. நாக்கில் ஊரும் ருசி.

     அதென்ன அப்படி ஒரு ப்ரீதி? தொண்டைக்குக் கீழே போனால் எல்லாமே  ஒண்ணுதான். அதுக்காக அப்டியா ஒரு பண்டத்துக்கு ஏங்குறது? பரபரபரன்னு திரியறே? வேறே வேலையே ஓடாம அலையறே? அப்டியா மனசை பலவீனமா வச்சுக்கிறது? இந்த உலகத்துல எதுதான் சாஸ்வதம்? எதன் மேலேயும் அப்படியான ஒரு அதீதப் ப்ரீதி கூடாதாக்கும்....இது நல்லால்லே..! எனக்குப் பிடிக்கலே...!..என்று சொல்லி கோபத்தில் உருளைக்கிழங்கு கறியைக்  கீழே கொட்டி விட்டார்கள் லா.ச.ரா.வின் தாயார். இந்த சம்பவம் அவருக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

     இத் தகவலை கி.ரா. அவர்கள் தி.ஜா.விடம் சொல்கிறார்கள். அங்கே வெடிக்கிறது சுப்பராயன் மீதுள்ள பொறாமை, புழுக்கம், கோபம், ஆத்திரம், இயலாமை இப்படி எல்லாமும். இத்தகவலை பேராசிரியர் கல்யாணராமன் அவர்கள் தி.ஜா.வின் சிறுகதைகள் என்கிற உரையில் எடுத்துரைக்கிறார். தி.ஜா.வைப்பற்றி தெளிவாய் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் திரு.கல்யாணராமன் அவர்களின் அனைத்து உரைகளையும் கண்டிப்பாகக் கேட்டாக வேண்டும். மோகமுள் நாவலை இதுவரை ஏழு முறை படித்திருக்கிறேன் என்கிறார் இவர். இன்னும் எத்தனை முறை படிப்பேனோ என்று கூறி...அந்நாவலைப்பற்றி இவர் ஆற்றியிருக்கும் உரை அத்தனை சிறப்பானது. அதற்கு மேல் அந்நாவலைப் பற்றிச் சொல்ல எதுமில்லை என்றே நினைத்து நம்மைத் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கிறது அவரது பேச்சு.

     சாமநாது கடவுளைக் கும்பிட்டுவிட்டுத்தான் அன்றைய பொழுதை ஆரம்பிக்கிறார். வழக்கம்போல் கடவுளை வணங்கி, அன்றைய நியமங்களைத் தொடங்க முனைந்தாலும் மனம் என்ன அத்தனை சுலபமாகவா  ஒருவனுக்குக் கட்டுப்பட்டு விடுகிறது? சாதாரண மனித ஜென்மம்தானே? நல்லதும் கெட்டதும் கலந்து பிடித்து வைத்த உருவம்தானே? சித்தப்பா...சித்தப்பா...என்று அவரை அணுகும் சுப்பராயனின் செல்வாக்கு மேல்தான் அவருக்கு என்ன ஒரு பொறாமை? புழுங்கிச் சாகிறது அவர் மனம். பொய்மை என்று அறியாமல், தன்னைப்பற்றியே பெருமையாக நினைத்துக் கொண்டு அவனது நற்செயல்களை ஏற்க மறுக்கிறது.  

     என்னை மாதிரி மாரும், தோளும், கல்லு மாதிரியான உடம்பும் யாருக்கேனும் கிடைக்குமா? எனக்கு எழுபத்தேழு,  அவனுக்கு அம்பத்தாறுதான். ஆனாலும் நானும் அவனும் ஒண்ணாயிட முடியுமா? சொத்து சம்பாதிச்சா சரியாப் போச்சா? பிள்ளைகளைப் பெத்து, வரிசையாக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாப்ல ஆச்சா? மூட்டு வியாதி, மண்டைக் கிறுகிறுப்பு, ப்ளட் பிரஷர் இப்டி உனக்கிருக்கிற ஏதேனும் எனக்குக் காட்டிட முடியுமா? கல்யாணம் பண்ணுறானாம்...கல்யாணம்? கடைசிப் பொண்ணையும் கட்டிக் கொடுத்து அனுப்பிச்சிட்டு  அப்புறம் என்ன பண்ணப் போறே? கோதுமைக் கஞ்சியும், மாத்திரையும் சாப்டுண்டு...பொங்கப் பொங்க வெந்நீர் போட்டு உடம்பத் துடைச்சிண்டு, வீட்டுலயே கிடக்கப்போறே...என்னை மாதிரிக் காலை வீசி சட்டுச் சட்டுனு நடந்து வந்து காவிரியில் ஒரு முழுக்குப் போட முடியுமா உன்னால...?

     பொறாமையில் வெந்து தணியும் உள்ளம்...இயலாமையை மறைக்க நினைக்கும் மனம், எதை எதையெல்லாம் பெருமையாகப் பேசிக் கொண்டு தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முனைகிறது? கண்கள் காணும் எதுவொன்றிலும் அவருக்கு சமாதானம் என்பது கிடைக்கவில்லை. காரணம் அவர் பார்வை படும் இடமெல்லாம் சுப்பராயனுடைய புகழ்...ஏழாவது கடைசிப் பெண்ணுக்கும் கல்யாணம் செய்து வைத்து சீரும் சிறப்புமாக அனுப்பவிருக்கும் நிகழ்வு....சாலை போட்டது, பாலம் கட்டியது, ஊருக்கு முதன் முதலாகக் கரும்புப் பயிரைக் கொண்டு வந்து சேர்த்து, செழிக்க வைத்து, சர்க்கரை ஆலைகள் தோன்ற உதவியது என்று எதை எடுத்தாலும் அவனின் ஈடுபாடு இல்லாத ஒன்று உண்டா?

     ஏன் கிடந்து வேகறேள்? உங்க அண்ணா பிள்ளைதானே? ஊருக்கும் எல்லாருக்கும் நல்லதுதானே செய்திருக்கார்...உங்களுக்கும் சொந்த சித்தப்பான்னு நிலம் எழுதி வச்சிருக்காரே...ஏன் இதையெல்லாம் ஏத்துக்க மனசு மறுக்கிறது? என்று வாலாம்பாள் பொழியும்போது....நீ எனக்குப் பொண்டாட்டியா அல்லது எங்கண்ணாவுக்கா? என்று விஷத்தைக் கக்குகிறார். மனதிற்குள் பொறாமையின் வேகம் எப்படி உடம்பு முழுதும் விஷமாகப் பரவியிருக்கிறது என்பதை இந்தச் சொல் மூலம் விவரிக்கிறார் தி.ஜா.

     எதை மையமிட்டுச் சொல்ல வந்தாரோ அது கதையின் இறுதிவரை பரிபூரணமாகப் பரவியிருக்கிறது. சுப்பராயனுடைய ஒவ்வொரு முன்னேற்றத்தையும் பார்த்துப் பார்த்து நினைவில் நிறுத்தி, அவற்றை நினைத்து நினைத்துப் பொறுமுகிறார். ஏழு பெண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொண்டாடிட்டானே என்று ரயில் ரயிலாக உறவுகள் வந்து இறங்குவதையும், ஊர் முழுக்க அவனது ஆட்களே பரவலாய், பரபரப்பாய்த் தென்படுவதும், வெளியூர்க்காரர்கள் சுப்பராயனோட சித்தப்பா என்று தன்னை விளிப்பதை விரும்பாதவராயும், சுப்பராயன் கட்டிய பாலத்தின் மீது கல்யாணத்திற்கான வாழை இலைக்கட்டுகள், நாலைந்து மூட்டைகள் என்று பஸ்ஸில் வந்து இறங்குவதைக் கண்டு  சபிப்பவராயும், ஊரே அலங்காரம் பண்ணிக்கொண்டு கொண்டாட்டமாய் இருக்கும் வேளையில், தன் வயிற்றெரிச்சல் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல், மனதுக்குள்ளேயே பொறுமிக் கொண்டு, பத்தரைக்கு மேலேதானே முகூர்த்தம், அதுக்குள்ளயும் என்ன கொட்டும், கூத்தும் என்று நாகஸ்வர, மேளச் சத்தத்தைக் கூட காதில் வாங்க விரும்பாத சிறு குணம் படைத்தவராய் மண்டபத்தை அணுகும் அவரின் மனநிலையின் உச்சமாய்த்தான் தனிமையை நாடுபவராய் விலகிச் சென்று “பாயசம்” கொதிக்கும் ஆளுயர அண்டாவைக் கவிழ்த்துக் கொட்டி விட்டு, அது பரவலாய் மடையில் வழிந்தோடுவதைக் கண்டு ஆறுதல்படுகிறார். அந்தச் செயலுக்குப் பின்னால்தான் அவர் மனம் அடங்குகிறது. அதே சமயம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாதே  தன்னை நிலைநிறுத்திக்  கொள்பவராய் மண்டபமே அதிருவது போல் யார் கண்ணுலயும் படலையா இது...என்ன வியாஜ்ஜியம் பண்றேள்...பெருச்சாளி ஒண்ணு உள்ளே விழுந்து நீந்திண்டிருக்கு....நா மட்டும் பார்க்காட்டா என்ன ஆகியிருக்கும்...அந்தப் பாஷாணம் என்ன வேலை பார்த்திருக்கும்? என்று பெரிதாகக் கத்தி, தன் தவறை மறைத்துக் கொள்கிறார்.

மனசு என்பது எப்படி வேண்டுமானாலும் குரங்காட்டம் போடும். நம் குண விசேஷத்தினால் அதை இழுத்துப் பிடித்து நிறுத்த வேண்டும். நமக்குள்ளது நமக்கு என்றும், நம் இழிச் செயலால் நாம் பாதிக்கப்படலாமே தவிர எதிராளிக்கு எந்தத் துன்பமும் வந்து விடக் கூடாது என்றும் உறவுகளோடு ஒன்றியிருந்தாலும், விலகியிருந்தாலும், நல்ல எண்ணங்கள் மூலமும், நற்செயல்களை வளர்த்துக் கொள்வதன் மூலமுமே நாம் நம் வாழ்க்கையில் நிம்மதியைக் காண முடியும். இம்மாதிரி எத்தனையோ விஷயங்களை இந்தப் “பாயசம்“ என்கிற தி.ஜானகிராமனின் சிறுகதை நமக்கு உணர்த்திச் செல்கிறது.

     லா.ச.ரா.வின் உருளைக்கிழங்குக் கதை கி.ரா.மூலம் தி.ஜா.வுக்குத் தெரியவர, அதன் மூலம் காலத்தால் அழியாத ஒரு அற்புதமான இலக்கியப் படைப்பு அவர் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைத்திருக்கிறது. 1971 ல் கணையாழியில் வந்திருக்கிறது இக்கதை. ஐம்பது ஆண்டுகள் முடியப் போகும் தருவாயிலும் இதன் இலக்கிய வீச்சுக் குறையாமல் நிற்கும் தகுதி நம்மை பிரமிக்க வைக்கிறது. தி.ஜா.வின் நூற்றாண்டினைக் கொண்டாடும் இத்தருவாயில் அவரின் இக்கதையும் இது போலான அவரது பிற படைப்புக்களும்  இன்னும் ஐம்பது ஆண்டுகளானாலும் அழியாது  நிற்கும் என்பதில் நமக்குத் துளியும் சந்தேகமில்லை.

                           -------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...