31 அக்டோபர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - “சிலிர்ப்பு” - சிறுகதை - வாசிப்பனுபவம் -

   தி.ஜா.நூற்றாண்டு - “சிலிர்ப்பு” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்


கடவுள் இதையுந்தான் காப்பாத்தப் போறான்...இல்லாவிட்டால் மனிதர்களை நம்பியா பெத்தவர்கள் இதை விட்டு விட்டிருக்கிறார்கள்? இப்படி அனுப்பும்படியான ஒரு நிலைக்கு ஒரு குடும்பம் வந்துடுத்தே...அது எப்படி ஏற்பட்டதுன்னு யார் யோசிக்கிறா? அதுக்கு என்ன பரிகாரம் தேடறது? இப்படிக் கண்காணாத தேசத்துக்குப் போகும்படி ஆகுமா?

       குழந்தைத் தொழிலாளர் பிரச்னையை அப்பொழுதே சுட்டிக் காட்டியிருக்கிறது இந்தக்கதை. நவம்பர் 1953 ல் கலைமகளில் வெளிவந்திருக்கிறது. செவ்வியல் வரிசையில் (classics) இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தும் நிற்கும் சிறுகதை. தி.ஜா.வின் படைப்புகளைப் பற்றிப் பேசுபவர்கள் கண்டிப்பாக இந்தக் கதையைச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.                                          

       முன்னும் பின்னுமாகப் பின்னப்பட்டிருக்கும் இச்சிறுகதை  சற்று ஊன்றிப் படிக்க வேண்டியது. அவரது உரையாடல்களையே நாம் அப்படிப் படித்துத்தான் புரிந்து கொண்டாக வேண்டும். ஒரே ஒரு முறை வாசிப்பில் மனதில் முழுமையாக உள் வாங்க முடியாது. எடுத்துக் கொண்ட கருவை நிலை நிறுத்துவதற்காக சுற்றிலும் அவர் கட்டும் கற்சுவர்  மிகப் பலம் வாய்ந்தது. ஒரு வார்த்தை வீணாகாது.

       திருச்சியில் ஒரு ஜட்ஜ் வீட்டில் வேலை பார்த்த பத்து வயது எட்டும் ஒரு பெண் குழந்தையை, கல்கத்தாவில்  அந்த ஜட்ஜூக்குத் தெரிந்த பெரிய வேலையிலிருக்கும் ஒருவரின் வீட்டில் வேலை செய்ய அனுப்புகிறார்கள்.

       திருச்சிராப்பள்ளி ஜங்ஷனில் இருந்து கிளம்பும் அந்த ஷட்டில் ட்ரெய்ன் மாயவரம்  வரை போகிறது. இன்றைய மயிலாடுதுறை. மாயவரம் சென்று அங்கிருந்து சென்னை, பிறகு கல்கத்தா  என்று பயணிக்க வேண்டும். மாயவரத்திலிருந்து கல்கத்தா செல்லும் ஒரு முக்கியஸ்தரிடம் அந்தக் குழந்தையை ஒப்படைக்க வேண்டும். அவர்கள் அந்தப் பெண் குழைந்தையை கல்கத்தாவிலிருக்கும் அந்தக் குடும்பத்தில் சேர்த்து விடுவார்கள்.

       இதற்காக அந்த ஷட்டில் ரயிலில் ஒரு பெண் குழந்தையோடு பயணிக்கும் அம்மாளும், அதே ரயிலில் அதே பெட்டியில் இவர்களோடு பயணிக்கும் பெங்களூரிலிருந்து வந்து திருச்சியில் இறங்கி, அந்த ஷட்டிலில் ஏறி கும்பகோணம் போகும் அப்பாவும் பையனும். திருச்சியிலிருந்து ரயில் புறப்படுகிறது.. கதை துவங்குகிறது.

       வெறும் கதையைச் சொல்லவா இந்தப் படைப்பு எழுதப்பட்டிருக்கிறது? குழந்தைகளின் மனநிலை, அவர்களின் கபடமில்லாத பேச்சு, அதை உணர்ந்து வருந்தும், சிலிர்க்கும்  பெரியவர்கள், அந்தச் சிறுவனிடம் பொறுப்போடு நடந்து கொள்ளும்  அந்தச் சிறுமி, சிறு வயதிலேயே அந்த இளம் கன்றுக்கு ஏற்பட்டுள்ள மனப்பக்குவம், அதை வீட்டு வேலைக்கு அனுப்பும் கொடுமை, அறியாப் பருவத்தில் சரி என்று கிளம்பிச் செல்லும் அதன் பொறுப்பு,  இது எல்லாவற்றையும், வார்த்தை வார்த்தையாய்த் தன் உரையாடல் மூலம் விளையாட விடும் தி.ஜா.வின் எழுத்து வன்மை நம்மை பிரமிக்க வைக்கிறது.

       உனக்கு என்ன வேலை தெரியும் என்று கேட்க, பத்துப் பாத்திரம் தேய்ப்பேன், காபி, டீ போடுவேன், இட்லி தோசைக்கு  அரைப்பேன். குழம்பு, ரசம் வைப்பேன். குழந்தைகளைப் பாதுகாப்பேன், கோலம் போடுவேன், அடுப்பு மெழுகுவேன், வேஷ்டி, புடவை தோய்ப்பேன்....

       எப்படிப் பழக்கியிருக்கிறார்கள் அந்தச் சிசுவை...? கல்வி கற்க வேண்டிய வயதில், ஓடியாடி விளையாட வேண்டிய பருவத்தில், சோற்றுக்கே வழியில்லாமல் அதுபாட்டை அது பார்த்துக் கொண்டால் போதும் என்று விற்று விட்டாற்போல அனுப்பி விட்டார்களே...? படிக்கும் மனது இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்துத்தான் ஆக  வேண்டும். அப்போதுதான் நாம் மனிதன் என்பதற்கு அர்த்தமாகும்.

       இவ்வளவெல்லாம் செய்வியா? யப்பாடீ....உனக்குச் சம்பளம் எவ்வளவு? - அவர் கேட்கிறார். அது சொல்கிறது. 

       சம்பளம்னு கிடையாது...ரெண்டு வேளை சாப்பாடு போடுவா...தீபாவளிக்கு ஒரு ஜோடி பாவாடை சட்டை எடுத்துக் கொடுப்பா...

       கோலம் போட்டு, அடுப்பு மெழுகி, புடவை தோய்ச்சு, குழந்தையைப் பார்த்துண்டு, தோசைக்கு அரைச்சு, எல்லாம் பண்ணினதுக்கு இந்த ஆறணாச் சீட்டிப் பாவாடைதான் கிடைச்சுதா அவாளுக்கு? கழிசலாப் பார்த்துப் பொறுக்கி எடுத்துக் கொடுத்தாப்ல.... - கூட்டி வந்த அந்தம்மாளின் பொறுமல்.

       ஜட்ஜ் வீட்டில் வேலை பார்த்த அந்தக் குழந்தைக்கு சூடாய் ஒரு சாப்பாடு கிடையாது. தினசரி பழம் சோறுதான்.. பஞ்சத்தில் அடிபட்டாற்போல, கண்கள் உள்ளேபோய், ஒட்டி உலர்ந்து பார்க்கவே பரிதாபமாய் இருக்கும் அந்தக் குழந்தையைப் பார்க்க இவருக்கு மனம் வெதும்பிப் போகிறது.

       ஊருக்குப் போற குழந்தைக்கு மூணு வருஷம் வீட்டோட கிடந்து உழைச்ச குழந்தைக்கு ஒரு நல்ல சாப்பாடாப்போட்டு தீர்க்கமா நாலு துணிமணி எடுத்துக் கொடுத்து, ரெண்டு நாள் பயணம் பண்ணி போய் இறங்குறதுக்கு ஏத்தாப்ல, ஜீவனோட அனுப்பப்படாதோ....ஜட்ஜ் வீடுன்னு பேரு...குளிர்ந்த மனசு....இப்டியா பழையது போட்டு அனுப்புவா...” - அந்தம்மாளின் வயிற்றெரிச்சல் தாளாது பொங்குகிறது.               பெங்களூருக்கு அனுப்பின பையன், பிச்சி மாமாவுக்கு தொள்ளாயிரம் ரூபா சம்பளம் உனக்கு நூறுதானே சம்பளம்...என்று மாமா பேசிக் கேலி செய்வதைக் கேட்டுப் புரிந்து கொண்டு, நான் ஒரு மூணு சக்கர சைக்கிள் கேட்டேம்ப்பா...வாங்கித்தரேன்னு சொல்லிச் சொல்லி ஏமாத்திட்டார் மாமா...என்று சொல்ல, எனக்கு ஒரு சின்னூண்டு கீ கொடுக்கிற மோட்டார் பொம்மை வாங்கிக் கொடுப்பா என்று அப்பாவுக்கு ஏற்றாற்போல் கேட்பதும், இந்த அக்காவுக்குப் பத்து வயசுன்னா அஞ்சாங்கிளாஸ் படிக்குதான்னு சிறுவன் கேட்பதும், இல்ல நான் படிக்கல...வேலைக்குப் போறேன் என்று அந்தச் சிறுமி சொல்வதும், குழந்தைகளுக்கான உரையாடல்களில் நம் மனதை உருக்கித்தான் விடுகிறது.

       திருச்சியில் ஆரஞ்சு ஒன்று வாங்கி அந்தச் சிறுவனுக்குக் கொடுக்க, இதை ஊருக்குப் போய்த் திங்கறேம்ப்பா...அம்மா உரிச்சுக் கொடுப்பா....என்று அவன் சொல்வதும்...குழந்தைகளின் மனதைப் படம் பிடித்துக் காட்டி, அந்தப் பெண் குழந்தைக்கு உரிமையோடு சாப்பாடு வாங்கிக் கொடுத்து, ரயில்வே சாப்பாடை சிறுவன் சாப்பிடத் தெரியாமல் திணற, கட்டி கட்டியாய் இருக்கும் சோற்றை, நெகிழப் பிரித்துப் பிசைந்து அந்தச் சிறுமி ஊட்டும் காட்சி...அந்த இளம் வயதிலேயே எப்படியான பக்குவத்திற்கு அது ஆளாகியிருக்கிறது? என்பதை நாம் அறிய மனசு நெகிழ்ந்து  விடுகிறது.

       இரண்டு அநாதைகள். அதாவது தாயை விட்டுப் பிரிந்த அநாதைகள். ஒரு அநாதை இன்னும் இரண்டு மணி நேரத்தில் தாயின் மடியில் துள்ளப் போகிறது. இன்னொன்று தாயிடமிருந்து தூர தூரப் போய்க் கொண்டிருக்கிறது.

       பசிக்கிறதா என்று நாமாய்க் கேட்கிறவரையில் வாயைத் திறந்ததோ? என்னமோ பகவான்தான் காப்பாத்தணும்....என்று ஆதங்கமாய் துயரம் எழ அந்த அம்மாள் சொல்லும்போது....எத்தனை நுணுகி நுணுகி இந்தக் கருவைக் கையாண்டிருக்கிறார் தி.ஜா. என்று நாம் வியந்து போகிறோம்..

       இப்படி அனுப்பும் நிலை ஒரு குடும்பத்துக்கு வந்து விட்டதே? அதை யார் நினைப்பார்கள்? அதற்கு என்னதான் பரிகாரம்? அந்த வாத்தியாரோட குழந்தைகளுக்கெல்லாம் பள்ளிக்கூடம்னு இருக்கைல, இது மட்டும் இப்படி தேசம் விட்டுப் போகுமா? குழந்தையைப் பார்த்து எல்லா நெஞ்சமும் இளகுகிறது. உடன் பயணிப்போருக்கும் மனம் வேதனை கொள்கிறது.

       குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. அந்தச் சிறுவன் தன் கையிலிருக்கும் ஆரஞ்சுப் பழத்தை அந்தச் சிறுமியிடம் வழங்குகிறான்.

       வாண்டாண்டா கண்ணு..அம்மா உரிச்சுக்கொடுத்து சாப்பிடணும்னு சொன்னியே....என்று அந்த அம்மாள் சொல்ல....

       அப்பா...வாங்கிக்கச் சொல்லுப்பா.... - வாங்கிக்கோம்மா....என்று சொல்ல வாங்கிக்  கொள்கிறது அந்தச் சிறுமி.

       ஸ்வாமி... நல்ல உத்தமமான பிள்ளையைப் பெத்துருக்கேள்...என்று வாடா கண்ணு என்று வாரியணைத்து முத்தமழை பொழிகிறாள் அந்த அம்மாள்.

       கும்பகோணம் வந்து வி்டுகிறது. பையனை அழைத்துக் கொண்டு நடக்கிறார் அவர். நன்றாய் நடக்கத் தெரிந்த அவனை அள்ளித் தூக்கிக் கொள்கிறார். வாரியணைத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வு பரபரக்கிறது. தழுவிக் கொண்டே போகிறார். உள்ளம் பொங்கி வழிகிறது. அந்தச் சிவனையே, சச்சிதானந்தத்தையே கட்டித் தழுவிக்கொண்ட ஆனந்தம் பிறக்கிறது அவருக்கு.

       மனிதப் பிறவியைக் கொண்டாடியவர் தி.ஜா. மனிதராக வாழ்வதனால் அல்லவா தப்புகள் செய்ய முடிகிறது என்று மகிழ்ந்து களிகூர்ந்தவர். அவர் கலை உலகம் மாய லோகம்....அது ரத்தத்தாலும், சதையாலும், நுண்உணர்வாலும், ஓசை தவிர்த்த ஓசையாலும் உருவாக்கப்பட்ட உலகம் என்கிறார் பிரபஞ்சன்.  நாம் நமது உழைப்பைச் செலுத்திப் படிக்கும் “நமது இந்த இலக்கிய  வாசிப்பில் இதைத் துல்லியமாக உணரலாம்.

                                          --------------------------------

 

      

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...