21 ஜூன் 2019

மறைத்(ந்)த கடன்-சிறுகதை-தினமணி கதிர்


சிறுகதை                               “மறைத்(ந்)த கடன்”                          *************************************                ----------------------------------------

                        
ன்றைய தினசரியைப் பார்த்ததும் அதிர்ந்தது மனசு. கைகள் நடுங்க ஆரம்பித்து விட்டது. சட்டென்று அந்தச் செய்தியை மூடி மறைத்தேன். பக்கத்தில் யாருமில்லை. ஆனாலும் ஒரு பயம்.  அது அவன்தானா என்று திரும்பவும் பார்க்க மனம் விழைந்தது. தைரியமில்லை. அடப் படுபாவி…! வாய் முனகியது.
வெளியே ஊய்…ஊய்ய்ய்…என்று வாடைக்காற்று தீவிரமாய் வீசிக் கொண்டிருந்தது. என் மன அமைதியை அதுவும் சேர்ந்து குலைப்பதாய்த் தோன்ற ஜன்னலைப் பட்டென்று சாத்தினேன்.
சுமதீ…!.என்று கத்தப் போனேன். குவிந்த உதடு நின்று விட்டது. அழைக்காவிட்டாலும் கூட காதில் விழுந்திருக்குமோ என்பதுபோல் திரும்பிப் பார்த்தேன். கொல்லைப்புறத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அங்கிருக்கும் காற்றோசையில்…பறவைகளின் கீச்சொலிகளில் அழைத்திருந்தாலும் அவள் காதில் நிச்சயம் விழுந்திருக்காதுதான்.
தற்செயலாய்த் திரும்பியவள்…நான் அவளையே பார்ப்பது கண்டு…தலையசைத்து, என்ன? என்றாள். ஒண்ணுமில்லயே….! என்று இங்கிருந்தே சைகை செய்தேன். என் முகத்திலுள்ள அந்நேர திகிலை உணர்ந்திருப்பாளோ?
பிற செய்திகளைப் படிக்க ஓடவில்லை. திரும்பவும் அந்தக் குறிப்பிட்ட செய்தியைப் புரட்டிப் பார்க்கவும் மனமில்லை. மனதிலுள்ள பயம் மட்டும் விலகவில்லை.
சுமதிக்கு இதைச் சொல்வதா, வேண்டாமா? யோசிக்க ஆரம்பித்தேன். …ஐயைய்யோ…வாங்க முதல்ல போயிட்டு வருவோம்…என்று சொல்லக் கூடும். அல்லது பயந்து போய், வேண்டாம்…விட்ருங்க…இந்த நியூஸ் தெரிஞ்சதாவே காட்டிக்க வேண்டாம்…என்றும் சொல்லக் கூடும். எதை அவள் சொல்லுவாள் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை.
செய்தியே அவளுக்குத் தெரிந்தால்தானே…மறைத்து விட்டால்? மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.. துவைப்பதை முடித்துவிட்டு அவள் உள்ளே வரக்கூடும். அதற்குள் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
ஒன்று அவளிடம் அதைச் சொல்ல வேண்டும்…அல்லது அவ்விடம் விட்டு அகல வேண்டும். அந்தச் செய்தி அவள் கண்ணில் படாமல் மறைக்க வேண்டும். பேப்பர் வந்து விட்டதைப் பார்த்து விட்டாள். சற்றுப் பொறுத்து ஒரு வாய் காபித் தண்ணியை ஊற்றி விட்டு படிக்க உட்கார்ந்து விடுவாள். அரை மணி நேரமாவது ஓடும் அவளுக்கு. அதற்குள் என்ன செய்யலாம்? அதாவது, அந்த வாசிப்புக்கு முன்… ஏதாவது செய்தாக வேண்டும்.
விருட்டென்று எழுந்தேன். பேன்ட் சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். தினசரியை எட்டாய் மடித்து பேன்ட் பாக்கெட்டுக்குள் செருகினேன். எதையும் அவள் பார்த்ததாய்த் தெரியவில்லை. மனதுக்குள் என்னவோ ஒரு யோசனை. அது சரியாக வருமா என்று தெளிவு பெறாத நிலையில் அதைத்தான் செய்வது என்கிற முடிவில் வெளியேறினேன்.
எங்கே கிளம்பிட்டீங்க….? –
இதோ வந்திட்டேன்….. – சொல்லிவிட்டு மேற்கொண்டு நிற்காமல் வாசல் கதவைச் சாத்திக் கொண்டு கிளம்பினேன். கொல்லையிலிருந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். என்றுமில்லாத புதிதாய் நான் அப்படிக் கிளம்புவது உறுத்தியிருக்க வேண்டும். பொருட்படுத்தவில்லை நான்.  
அந்த தினசரிக்குப் பதிலாக வேறொன்றை வாங்குவது என் முடிவாயிருந்தது. ஆனால் ஒன்று அதிலும் இந்தச் செய்தி வந்திருந்தால்? அதை எப்படித் தெரிந்து கொள்வது? அந்தக் கடையில் நின்று ஓசியில் பேப்பரை எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு வாங்குவது என்பதெல்லாம் ஆகாது. ஒரு வேளை அதிலும் வந்திருந்தால் வாங்காமல்  திரும்ப வைக்க வேண்டும். ஏற்கனவே ஒரு முறை ஒரு மாத இதழை உரிமையோடு எடுத்துப் புரட்டிய போது, சார்…கசங்கிரும்… …வாங்குறதானா எடுங்க….என்றவன் அவன்.
இப்போது என்ன செய்யலாம்? பெரும்பாலும் அந்த தினசரியில் இந்தச் செய்தி வந்திருக்க வாய்ப்பில்லைதான். அது ஒரு அரசியல்  கட்சி சார்ந்த பத்திரிகை போலத்தான். ஆகவே உறுதியாகச் சொல்லலாம். எனவே அதையே வாங்கி விடுவதுதான் சரி. இன்று அதைத்தான் பேப்பர் பையன் போட்டிருக்கிறான் என்று சுமதியிடம் சொல்லி விடுவது என்று முடிவு செய்து கொண்டேன்.
அருகிலிருக்கும் அவன் கடையில் சென்று மாற்றிவிடலாம் என்றுதான் கிளம்பினேன் என்றும் அதற்குள் வழக்கமாய் வாங்கும் தினசரி விற்றுத் தீர்ந்து விட்டது என்றும் சொல்லி வாங்கிய பேப்பரை, பையன் போட்ட பேப்பராய்க் காட்டி விடலாம் என்பது என் முடிவாய் இருந்தது.
வேறு எந்த வகையிலும் சுமதிக்கு அந்தச் செய்தி போய்ச் சேர வாய்ப்பில்லை. அவள் டி.வி.யில் செய்தி கேட்பதில்லை. சீரியலோடு சரி….
சில்லரையை நீட்டி குறிப்பிட்ட அந்த தினசரியை எடுத்தேன்.
என்ன சார்…பையன் வரல்லியா…? போட்டிருப்பானே….? என்றான் கடைக்காரன்.
வந்தான்…வந்தான்…இது எப்டியிருக்குன்னு பார்க்கலாமேன்னுதான்….என்று விட்டுக் கிளம்பினேன். நடந்தவாறே பக்கங்களைப் புரட்டினேன். அடிக்கும் காற்றில் பேப்பர் பறந்து மடங்கியது. அடைத்திருந்த ஒரு கடை ஓரம் போடப்பட்டிருந்த குத்துக்கல்லில் அமர்ந்து நிதானமாய் செய்திகளை அலசினேன். அந்தக் குறிப்பிட்ட படத்துடன் கூடிய செய்தியைக் காணவில்லை. தப்பித்தேன். பேப்பரை நன்கு மடித்துக் கொண்டு நடையைக் கட்டினேன்.
சரி…வீட்டில் போடப்பட்ட அந்த வழக்கமான தினசரியை, தற்போது பைக்குள் வைத்திருப்பதை என்ன செய்வது? இங்கேயே கிழித்து எறிந்து விடலாமா? –. சுமதிக்குத் தெரிய வேண்டாமென்றாலும், என்றாவது தேவைப்பட்டால்…? அதை அவளுக்குத் தெரியாமல் பத்திரமாக வைத்துக் கொள்வது என்று முடிவு செய்தேன்.
.அடுத்த நிமிடம்  மனதுக்குள் திரும்பவும் அந்த இருட்டு வந்து  உட்கார்ந்து கொண்டது. வீட்டிற்கு வந்த நான் என் அறைக்குள் புகுந்து கொண்டேன். அலமாரி அடியில் குறிப்பிட்ட  செய்தி வந்த பேப்பரைப் புதைத்தேன்.
விழித்துக் கொண்டது மனது. எவ்வளவு உதவி செய்திருக்கிறேன் அவனுக்கு.? எல்லாவற்றையும் கடந்து இப்படி ஆகிப் போனதே…! மனசு உடைந்து போனானோ…? –எண்ண அலைகள் விரிய ஆரம்பித்தன.
வாரத்திற்கு ஒன்று என்று அந்தக் கடிதத்தை எழுதியிருந்தேன். வெறி பிடித்தவன் போல எழுதினேன். எழுதி எழுதி…தவறு….திட்டித் திட்டி.. போட்டுக்கொண்டேயிருந்தேன். வெறுமே ஃபோனில் பேசினால் உறைக்காது என்று எழுத்தில் பதிவு செய்தேன். சேர்ந்தாற்போல் நிறைய அஞ்சலட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டு வசைமாரி பொழிந்து கொண்டேயிருந்தேன்… அவன் பெண்டாட்டி படித்தால் படிக்கட்டும் என்று கருதியே அப்படி எழுதினேன்? இந்தக் காலத்தில் யாருமே அப்படிச் செய்ய மாட்டார்களே…என்று தெரிந்தும் செய்தேன். தொடர்ந்து அந்தத் திட்டுதலைக் கண்டாவது கொஞ்சம் சொரணை வருகிறதா பார்ப்போம்…! கொடுத்த காசு கொஞ்சமாவது மீளாதா? எனக்குத் தெரியாமையா இவ்வளவும் நடந்திருக்கு?  என்று  நாளைக்கு சுமதிக்குத் தெரிய வந்து கேட்டால் எவ்வளவு கேவலம்?  .கல்லுளிமங்கன்…கிணற்றில் போட்ட கல்லாய் இருந்தான். ஒரு பதிலில்லை.  
 எதற்கு அப்படிச் செய்தேன்? அன்று என் மனதி்ல் இருந்த ஆத்திரம் அப்படி. இன்று?  இப்போது வந்துள்ள செய்தி பயமுறுத்துகிறதே? இயற்கையாக நிகழ்ந்ததுதானா? விடாமல் . எழுத்தில் எல்லாவற்றையுமே பதிவு செய்தது எனக்கே வினையாய் மாறுமோ? அதையே சாட்சியாய் வைத்து நான்தான் காரணம் என்று சொல்ல வாய்ப்புண்டோ? முட்டாள்தனமான செயலாய் ஆகிவிட்டதோ? என்னை நானே காட்டிக் கொடுத்தது போல…! தினையை விதைத்து, வினையை அறுத்தவன் போல…!
என் மனைவி முன்னால் அவளறியாமல் இப்படி ஏமாளியாய் நிற்கிறேனே என்கிற குற்றவுணர்ச்சி எனக்கு. இந்தக் கடிதங்களையெல்லாம் அவன் மனைவியிடம் காண்பித்திருப்பானா? பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு சொன்னேனே…அவனே எப்டி எழுதியிருக்கான் பாரு…என்று காட்டியிருப்பானோ? காட்டினால் காட்டட்டும், படித்தால் படிக்கட்டும் என்றுதானே போஸ்ட் கார்டில் எழுதியது? அவன் படிக்கும் முன்பே அவன் பெண்டாட்டி கைக்கு அது போய்ச் சேர வேண்டும் என்றுதானே எழுதியது…அப்போதிருந்த வேகம் அது. இப்போது ஏன் மனம் பயப்படுகிறது?
பயமென்ன …? அவன் எங்கோ…நான் எங்கோ… மூஞ்சியைப் பார்த்தே வருஷங்கள் ஆயிற்று. பேச்சே வேண்டாம் என்றுதானே பிரிந்தது? போனது போகட்டும் என்றுதானே வந்தது? ஆளை நேரில் பார்க்காமல் இருக்கலாம். எழுத்து சாட்சியாய் நிற்கிறதே…!
அவரா கொடுக்கிற போது கொடுக்கட்டும் - ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாளே சுமதி…! எப்படிப்பட்ட மனசு வேண்டும் அதற்கு? முதல்ல போய் இந்தப் பணத்தைக் கொடுத்து அவரை மீட்டுக் கொண்டாங்க…என்று சொல்லி போட்டிருந்த நகையைக் கழற்றிக் கொடுத்தாளே….எந்தப் பெண் செய்வாள்? பணத்தைக் கட்டிட்டு நீங்க கையெழுத்துப் போட்ட அந்தப் பத்திரத்தை வாங்கி முதல்ல கிழிச்சு எறிங்க திருமணம் ஆகி ஆறு மாதங்கள் கூட ஆகாத பொழுது. அப்படி நம்பினாள் என்னை. இத்தனைக்கும்  இக்கட்டு வந்தபோதுதான் வாயைத் திறந்தேன்.
அவன் செய்த பொறுப்பற்ற காரியங்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து, நட்புக்கு மதிப்பு வைத்து, தேவைப்பட்டபோதெல்லாம் உதவி செய்து…இன்று கடைசியில் நான் நிற்கிறேன் நஷ்டப்பட்டு….! கொடுத்ததில் ஒரு பைசா திரும்பவில்லை இன்றுவரை…
நீ வேலைக்கு வச்சிருக்கியே ஒரு பையன்…அவன் ஒரு பெண்ணோட சேர்ந்து சுத்திட்டிருக்கிறதை அழகர்கோயில்ல தற்செயலாப் பார்த்தேன்டா…..
இருக்கட்டும்…அதுக்கென்ன இப்போ…? – ராஜூவின் பதில் இது.
என்னடா இப்டிக் கேட்கிறே…? அது உன்னோட “மதர்  கம்ப்யூட்டர் சென்டர்லயே” படிக்கிற பொண்ணு…ட்ரெயினிங் இன்ஸ்டிட்யூட்ன்னு பேர் வச்சிட்டு, பாடம் நடத்தாமே, அந்தப் பையன் இந்த ட்ரெயினிங்கைக் கொடுத்திட்டிருக்கான் அந்தப் பொண்ணுக்கு, …இது உனக்குத் தப்பாத் தெரிலயா…?
இந்த பார்…வேலை நேரத்துல இன்ஸ்டிட்யூட்ல அவன் பெர்ஃபாமன்ஸ்  எப்படியிருக்குங்கிறதுதான் எனக்கு முக்கியம்… வெளில எப்படித் திரியறான்ங்கிறதைக் கவனிக்கிறது என் வேலையில்லே…ப்யூர்லி இடீஸ் உறிஸ் பர்ஸனல்….அதுல என்னால தலையிட முடியாது….
அப்டியா…? நாளைக்கு உன் ஸ்கூலுக்குக் கெட்ட பெயர் வந்தா பரவால்லியா…? தொழில் பாதிக்காதா? பொழப்பு நாறிடும்டா….!
அந்தப் பெண்ணுக்கு புத்தி எங்க போச்சாம்…? விரும்பித்தானே அவனோட சுத்துறா? அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? முத்தி வர்றபோது அவனை வெளியேத்திட்டு இன்னொருத்தனைப் போட்டுட்டுப் போறேன்….எனக்கென்ன வந்தது?
முற்றி வந்தாத்தான் தடுக்கப் பார்ப்பியா? ஆரம்பத்துலயே கட் பண்ண மாட்டியா? உன் கல்விக் கூடத்துல ஆரம்பிச்ச தப்புடா இது…? ஒழுக்கம் சார்ந்த விஷயம்…! இங்க வச்சு இந்த வேலையெல்லாம் செய்யாதேன்னு அவனைக் கண்டிச்சுத் தடுக்க வேண்டாமா?
இந்தக் காலத்துல இதெல்லாம் சாதாரணம்…கண்டுக்கிட்டா நமக்குத்தான் அசிங்கம்…அதெப் புரிஞ்சிக்கோ நீ….
டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் வச்சிருந்தபோதும் இப்டி ஒண்ணு நடந்திச்சு…அப்பயும் தடுக்க விட்டுட்டே….அது ஒரு வழியா எப்டியோ கல்யாணத்துல முடிஞ்சதுனால தப்பிச்சே…அப்பயே என்னை மாதிரி ஃப்ரென்ட்ஸ் நாலுபேர் உதவலேன்னா நீ இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்திருப்பியா…? கொஞ்சம் நினைச்சிப்பாரு….! எல்லா வழியும் அடை பட்டுப் போச்சுன்னு வந்து நின்னியே…ஞாபகமிருக்கா? உன் பொஞ்சாதி வீட்ல கூட யாரும் உதவலியேடா….ஃப்ரென்ட்ஸ்தானே உன்னைக் காப்பாத்தினது…?  – என் பேச்சை இப்படிப் புறக்கணிக்கிறானே என்கிற ஆத்திரம் என்னுள் எழ, கத்த ஆரம்பித்தேன்.
யாரு இல்லேன்னு சொன்னா? இப்போ அதையெல்லாம் ஏன் இழுக்கிறே….! நானென்ன நீங்க செய்ததையெல்லாம் மறுத்தேனா? இல்ல எவனும் இங்க நுழையக் கூடாதுன்னு தடுத்தனா…? எதுக்குடா இப்டிப் பேசுறே…? திரும்பவும் எனக்குப் பண முடைன்னா நீங்கதான் உதவப் போறீங்க…நான் வேறே யார்ட்டப் போய் நிப்பேன்….?-உங்க கடனெல்லாம் உசிரப் பணயம் வச்சாவது திருப்பிக் கொடுத்திருவன்டா…
வாய்தான் கிழியுது….உனக்கு எப்பத்தான் முடை இல்லாம இருந்திச்சு? அகலக்கால் வைக்கிறதுல நீதான் மன்னனாச்சே….! எவன் பேச்சையும் கேட்க மாட்டே…ஆனா உதவி மட்டும் வேணும்…அப்டித்தானே…! உதவி செய்றவங்களுக்கு உரிமை எதுவும் கிடையாது….ஒரு வார்த்தை கேட்டுறக் கூடாது…ரோஷம் பொத்துக்கிட்டு வரும்……?
ஏண்டா வேண்டாததெல்லாம் பேசுற….?
பின்னே என்ன? அந்தப் பையன் நம்ம ஸ்கூல்ல படிக்கிற பொண்ண இழுத்துக்கிட்டு வெளில சுத்திட்டிருக்கான்ங்கிறேன். அதோட சீரியஸ்னெஸ் தெரியாமே விட்டேத்தியா நீ பேசினேன்னா? அவனை வெளியேத்திட்டு  இன்னொருத்தனைப் போடுவேங்கிறே… நீ இருந்து கவனிக்கிறாப்ல இல்ல…அதானே….உன்னைக் கெடுக்குது….இப்பயே கல்லாவுல உட்கார்ந்து காசு பண்ணனும்ங்கிற புத்தி உனக்கு….கடுமையா, தனியாளா உழைச்சு முன்னேறணும்ங்கிற எண்ணம் வேண்டாமா? நாம தொழிலாளியாத்தான்டா செயல்படணும்….அப்பத்தான் உருப்படுவோம்…  
…நாந்தான் இன்னொரு இடத்துலே வேலைக்குப் போறேனே…அங்க நான் ஒரு தொழிலாளிதானே…! .இடை இடையிலே இங்க வந்து இதையும்  பார்த்துக்கிறேன்…போதாதா…?
அங்க இருபதாயிரத்தை வாங்கி, இங்க பதினஞ்சாயிரத்த சம்பளமாக் கொடுக்கிறதுல என்னடா பெரிய லாபம் இருக்கு…?நீ இல்லாத நேரத்துல என்ன நடக்குது, எவ்வளவு பைசா வருதுன்னு உனக்கு எப்படித் தெரியும்?  நீயே உன்னோட சொந்த இன்ஸ்டிட்யூட்ல கடமையா உட்கார்ந்து கருத்தாக் கவனிச்சேன்னா எவ்வளவு நல்லாயிருக்கும்? ஜாப் ஒர்க்கெல்லாம் வாங்கலாமில்ல? கூட வருமானம் கிடைக்குமுல்ல… ….கொஞ்ச நாள்ல ஒரு ஜெராக்ஸ் மிஷினும் வாங்கிட்டேன்னா…இன்னும் தொழில் பெருகும்ல…ஸ்கேனிங்…பிரின்டிங்னு படிப்படியா முன்னேற்ர வழியைப் பார்ப்பியா….இப்டி  எவனையோ வேலைக்கு வச்சி சம்பளம் கொடுத்திட்டிருக்கேன்னு பெருமைப் பட்டுக்கிறியே…இது தேவையா….?அந்தச் சின்னூண்டு இடத்துக்கு பெருக்கித் தண்ணி எடுத்து வைக்க ஒரு ஆளு…அவளுக்கு ரெண்டாயிரம் சம்பளம்…ஏன் இதை நீயே செய்துக்கிட்டா குறைஞ்சு போவியா? ஓட்டை அதிகாரம் பண்ணிட்டுத் திரியணும் உனக்கு…அதுதான உன் மனப்பான்மை… இந்த வயசுல உழைக்காம பின்னே எப்போ உழைக்கப் போறே?  பண உதவி கேட்டு வந்து நின்ன நீ, இதுக்கு ஆலோசனை கேட்டியா? உன் இஷ்டத்துக்குச் செய்றே….பணம்னா மட்டும் நாங்க வேணுமாக்கும்?….
பார்த்தியா…சொல்லிக் காட்டுற பார்…ஏண்டா…நண்பனுக்கு உதவினதை டமாரம் போடுவியா? நட்புக்காக உதவிட்டு, இப்போ இப்படிப் பேசலாமா?
உன்கிட்டேதானே சொல்றேன்…ஊருக்கா சொல்றேன்….? கொடுத்தவனுக்கு ஒரு வார்த்தை கேட்கிற உரிமை கூடக் கிடையாதா? நாளைக்குத் திரும்ப வருமான்னு நாங்களும் யோசிப்போம்ல….?
…கண்டிப்பா வரும்…அதுக்கு நான் ஜவாப்தாரி….ஒரு ஆளை வேலைக்கு வச்சு…சம்பளத்தைக் கொடுத்துப் பாரு…அப்புறம் தெரியும் அந்தப் பெருமை….! துணிஞ்சு இறங்கணும்டா….அப்பத்தான் தொழில்லெல்லாம் முன்னேற முடியும்….
      அதுக்கு ஒரு பீரியட் இல்லையா…? ஆரம்பத்துலயேவா ஆழம் தெரியாமக் கால விடுவாங்க….? தொழில்ல முன்னேர்றவரைக்கும் நீ ஒருத்தன்தாண்டா தொழிலாளி….நீ மட்டும்தான் தன்னந்தனியா  உழைக்கணும்….-காது கொடுக்கவேயில்லையே…!
முதலாளி மனப்பான்மையோடு பேசுகிறான்? இந்தப் புத்தி இவனுள் எப்படி வந்தது? ஒரே ஒரு ஆளை வேலைக்கு வைத்து சம்பளம் கொடுக்கும்போதே இப்படி கெத்தாகப்  பேசுகிறானே…இன்னும் நாலைந்து பேரை  வைத்திருந்தானானால் ஆளைப் பிடிக்க முடியாது போலிருக்கிறதே…!
தவறு செய்து விட்டோமோ…? உதவியதே தப்போ…? – என் சிந்தனை பலபடியாய்ப் போனது. என் ஆபீசுக்கே அந்த ஃபைனான்ஸ் கம்பெனி  ஆட்கள் வந்த அன்றைக்குத்தான் அது உறைத்தது. சர்வ நாடியும் ஒடுங்கிப் போனது எனக்கு.
சார்…உங்க முகத்துக்காகத்தான் பார்க்கிறேன்….ஐம்பதாயிரத்துல ஒரு தவணை கூடக் கட்டலை சார்….ஆறு மாசம் ஓடிப்போச்சு….வட்டி வேறே இருக்கு…. கொஞ்சமாச்சும் கட்டச் சொல்லுங்க…இல்லன்னா எங்க வழக்கப்படி இறங்க வேண்டியிருக்கும்…இதச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தோம்…அப்புறம் வருத்தப்படாதீங்க…
.உரக்கப் பேசியவனைத் தெரிந்தவர்கள் ஆபீசில் இருந்தனர். என்ன சார், இந்தாள் வந்திட்டுப் போறான்…இவன்ட்ட எப்டி நீங்க மாட்டினீங்க..? ….இந்தக் கேள்வியே எனக்கு “வதக்“ என்றது.
என்னிடம் ரொக்கமாய் வாங்கியிருந்தது போக, அவனுக்கு ஜாமின் கையெழுத்து வேறு போட்டவன் நான். என்னென்னவோ சொல்லி என்னை இழுத்துக் கொண்டுபோய் அமர்த்தி விட்டான் அங்கே. எப்படி மயங்கினேன் என்றே தெரியவில்லை. உண்மையிலேயே மயங்கித்தான் போனேன்.  என்னைப் பற்றி நன்கு தெரிந்த அந்த ஃபைனான்ஸ்காரனாவது என்னை எச்சரித்தானா? அதுவுமில்லை.அவனுக்கென்ன வந்தது?  அவனைப் பொறுத்தவரை நான் ஜாமின் போடுவது அவனுக்குப் பாதுகாப்பு. கருத்தில்லாத ஒருவன் கடன் வாங்க, கருத்துள்ள, கனமுள்ள ஒருவன் உதவுகிறான் என்றால், பிடி இருக்கிறது என்கிற நம்பிக்கைதானே…! அதுவும் அரசாங்கச் சம்பளம் உள்ள ஒரு ஆள் கிடைப்பது லட்டு மாதிரி அவனுக்கு.
என்னை என்ன பண்ணச் சொல்றே….?எல்லா வழியும் அடைச்சிருச்சு… ஆளுக்கொரு பக்கம் நெருக்கினா என்னதான் பண்றது? தவணை கேட்டுத்தான் பார்த்தேன்…எவனும் ஒத்துக்க மாட்டேங்கிறான். வீட்டுக்கு வந்து, இருந்த நாலு  ஃபேனைக் கழட்டிட்டுப் போயிட்டான். டி.வி.யைத் தூக்கிட்டான். சல்லிப்பயலா இருக்கானுங்க…தெருவே பார்த்திருச்சு. அடுத்தாப்ல சென்டருக்கு வந்து  சிஸ்டத்தைத் தூக்குவேங்கிறான்…கால்ல விழாத குறையாக் கெஞ்சினேன். திரும்ப  வருவேன்னுட்டுப் போயிருக்கான்….தவிச்சிட்டிருக்கேன்….தற்கொலைதான் பண்ணிக்கிடணும்….
அடப் பாவி….! என்ன பேசுறான் இவன்…? இந்த வார்த்தைதான் என்னை நடுங்க வைத்து விட்டது. தனக்கென்று ஒரு குடும்பத்தை வைத்துக் கொண்டு  தற்கொலை என்கிறானே…!.அப்போ என் பணம்?  பேசும் பேச்சு, செய்யும் செயல்,  எடுக்கும் முடிவுகள் எல்லாமே தவறாய்ப் போய்விட்டதே  இவனிடம்.
 என் மனைவிக்குத் தெரிந்து கொஞ்சம், தெரியாமல் கொஞ்சம் என்று கொடுத்திருக்கிறேன்?  ….யாரிடம் போய்ச் சொல்லுவேன் …என்னை மாதிரி ஒரு அரசாங்க அடிப்படை ஊழியனுக்கு அந்தத் தொகை பெரியதுதானே…! போதாக்குறைக்கு ஜாமின் கையெழுத்து வேறு….!
சுமதிக்குத் தெரிந்து கிழித்தது ஒரே ஒரு பத்திரம். ஆபீசுக்கு வந்து எச்சரித்த அந்த ஜாமின் கடன்? மீதி ரொக்கம்?  கல்யாணத்திற்கு முன்னமே நடந்த இந்த விஷயங்களையெல்லாம்தான் நான் அவளிடம் மறைத்து விட்டேனே! இப்போது சொன்னால்? கதை கந்தல்தான்.
ஏதாவது சேவிங்க்ஸ் வச்சிருக்கீங்களா? என்று வந்த புதிதில் என்னிடம் கேட்டாள்…! அன்று எப்படி எரிந்து விழுந்தேன்? எனக்கு கைச் செலவுக்கு மட்டும் ஒரு சிறு எமௌன்ட்டை வச்சிட்டு, மீதியை அப்படியே அம்மாட்டக் கொடுத்திருவேன்…அதுதான் இன்னைவரைக்கும் என் பழக்கம்…குடும்பத்துக்காகத்தானே சம்பாதிக்கிறோம்…வளர்த்து ஆளாக்குன பெற்றோர்ட்டக் கொடுக்காம, பாங்குலயா போட்டு வைக்க முடியும்? என்ன கேள்வி கேட்குற நீ?-விரட்டினேன் அவளை.
 ப்போது சுமதி என்னைக் கேள்வி கேட்டால்? தெரிந்த ஒரு கடனுக்கு,  அவராத் தர்றபோது தரட்டும் என்றாளே…? இன்று தருவதற்கு ஆளே இல்லையே…? ஸ்வாகாதானா அந்தத் தொகை? அவளுக்குத் தெரிந்த ஸ்வாகா… தெரியாத ஸ்வாகா….-நினைக்க நினைக்க எனக்கு உடம்பு நடுங்கிக் கொண்டேயிருந்தது. ஆளே போய்விட்டான். அவன் மனைவியிடமா சென்று கேட்க முடியும்? எழுதின எழுத்துக்கு, நேரில் போய்த்தான் நிற்க முடியுமா? கட்டையைத் தூக்கிக் கொண்டு அடிக்க வந்தால்?
எவனாவது கன்னா பின்னான்னு இப்படி சரம் சரமாய் வசவு மழை பொழிந்து கடிதம் எழுதுவானா? என் புத்தியை செருப்பால அடிக்கணும்…
அபத்தக் கடிதங்கள்பற்றி அவளிடம் சொல்லவே கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். எழுதும் எழுத்துக்கு ரோஷம் பிடுங்கி எடுக்க, கொஞ்சம் கொஞ்சமாகவேனும் தந்து விடுவான் என்று நினைத்தது எவ்வளவு தப்பாய்ப் போயிற்று. வாங்கிய கடனையே அடைக்கவில்லையே? அப்புறம் நான் கொடுத்த கடனை எங்கே அடைக்கப் போகிறான்?
மனதில் கொஞ்சமும் நிம்மதியில்லை.  குளித்து விட்டு ஆபீசுக்குக் கிளம்பினேன். பஸ்ஸில் போகிறவன் நான். சைக்கிளோ அல்லது டூ வீலரோ ஓட்டத் தெரியாது. எவ்வளவு அப்பாவி பாருங்கள். யார் பின்னாலும் உட்கார்ந்து கூடப் போவதில்லை. பயப்படாதீங்க சார்…பத்திரமா கொண்டு போய் விடுறேன்…என்றுதான் சொல்வார்கள். ஏறினால்தானே…. …! முன் ஜாக்கிரதை முத்தண்ணா நான்…! எதில்? எதை நினைத்து சிரிப்பது அல்லது அழுவது? ?
ஆபீஸ் போக மனமில்லை. சாலை ஓரமாய் நின்று அலுவலகத்திற்கு விடுப்பு சொன்னேன். வீட்டில் வைத்து சொல்ல முடியாது. எதற்கு என்ற கேள்வி வரும். பிறகு பேச்சு நீளும்.
என் கால்கள் அவன் வீட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. போவதா, வேண்டாமா என்கிற சந்தேகத்திலேயே ஊர்ந்து கொண்டிருக்கிறேன். மனிதனுக்கு எதிலும் முடிவெடுக்கும் திறன் ரொம்ப முக்கியம். இல்லையென்றால் தொட்டதற்கெல்லாம் துன்பம்தான். என் பாடு அப்படித்தான். படு சராசரி நான். இப்போது வசவுக் கடிதங்களும் பயமுறுத்துகின்றன. வராத கடன்களும் பயமுறுத்துகிறது. மொத்த வாழ்க்கையில் எதிலும் பட்டுக் கொள்ளாமல் ஓட்டுவதே பெரிய சாதனையோ? இப்போது உறைக்கிறது புத்திக்கு.
போய் நின்றால் வேறு பிரச்னைகள் ஏதேனும் முளைக்குமோ? சூழ்நிலை மோசமாகி விடுமோ? அவன் மனைவி, கணவனை இழந்த சோகத்தில், ஆத்திரத்தில் ஏதேனும் ஏடா கூடமாய்  ஆரம்பித்து விட்டால்? உறவுக்கார்கள் சூழ்ந்து கொண்டால்? உதவி செய்தவன் என்றாலும், கன்னா பின்னா என்று எழுதிய அந்தக் கடிதங்கள்தானே நிற்கும்?
கொடுத்த காசு வராது என்கிற புகைச்சலில், மனைவியிடம் மறைத்த மனசாட்சி உறுத்தலில்,  இனி காந்தி கணக்குதான் என்கிற முடிவில், கிழி கிழியென்று கிழித்து அன்று எழுதிய பைத்தியக் கிறுக்கல்கள் இன்று விஸ்வரூபம் எடுத்து என் முன் பேயாய் ஆடின.
போவது சரியா, தவறா என்ற முடிவில்லாமலேயே. அவன் வீடு இருந்த பகுதியை அடைந்தேன். தூரத்தில் ஆட்கள் பிரிந்து பிரிந்து நிற்பது தெரிந்தது.. தெருக்கோடி வீடு. வீதியின் கடைசியில் தெரிந்த சிறு சிறு கும்பலான காட்சி, மேலும் என்னை நகர விடாமல் தடுத்தது. கால்கள் நின்று விட்டது.
என்ன…இப்டி ஒரு முடிவு எடுத்திட்டாரு..? – என்னைக் கடந்து போனவர்களின் வார்த்தைகள் என்னைத் துணுக்குறச் செய்தன….!
ரு வாரம் கழிந்த பொழுதில் சுமதி அந்த தினசரியோடு என்னிடம் வந்து நின்றாள். பொழுது இருட்டும் வேளையில் ஆபீஸ் முடிந்து வீட்டுக்குள் நுழைந்த என்னிடம் அதை விரித்துக் காண்பித்தாள்.
என்ன இது, நீங்க பார்த்தீங்களா…இல்லியா….? அலமாரியெல்லாம் துடைச்சுக் க்ளீன் பண்ணி வைப்போம்னு சுத்தம் பண்ணிட்டிருந்தபோது இது கண்ணுல பட்டுச்சு.…. இதப் பாருங்க முதல்ல……-என்ன கதையாகியிருக்குன்னு…- நிதானமாய்ச் சொன்னாள். எனக்குத் தெரிய அவள் எதிலும் அதிகம் பதட்டம் கொள்பவளில்லைதான். பெண்களே கொஞ்சம் நம்மை விடத் தைரியசாலிகள்தான்.
அவள் காட்டிய அந்தச் செய்தியை நோக்கினேன்.
வருந்துகிறோம்…..என்று போட்டு, ராஜூவின் படத்துடன் கீழே உற்றமும் சுற்றமும் என்று தெரிவித்து, தோற்றம்…மறைவு என்று தேதிகள் குறிப்பிட்டிருந்த அந்த அஞ்சலிக் குறிப்பை அப்பொழுதுதான் பார்ப்பவன் போல் அதிர்ச்சியுற்றேன். என் அலமாரியிலுள்ள அவனுடனான அந்தப் புகைப்படம் அடையாளம் காட்டியிருக்கிறது அவளுக்கு.
போனாப் போகட்டும்… தலைய முழுகுங்க…….என்றுவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போய்விட்டாள்.
அவள் இப்படிச் சொன்னது பெருத்த ஆறுதலாய் இருந்தது எனக்கு. போய் துக்கம் விசாரிச்சிட்டு வாங்க…என்று எதுவும் சொல்லாதது ஆச்சரியமாகவே இருந்தது.
அந்தப் பேப்பரை எடுத்துக் காண்பித்தவளுக்கு என் மீது சிறிது கூடவா சந்தேகம் எழவில்லை? என் காதுக்கு வந்த,  அவன்  தூக்கு மாட்டி இறந்த தகவலை அவளிடம் சொல்வதா வேண்டாமா?   நான் அவள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை விட அவள் என் மீது வைத்திருக்கும், அதீத நம்பிக்கையையும்,  மதிப்பையும் நினைத்தபோது, என்னுள் புதைந்த மீதமிருக்கும் ரகசியங்களுக்காய்,  மானசீகமாய் இப்போதும் நான் அழுது புழுங்கிக் கொண்டிருக்கிறேன். நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதில் எவ்வளவு மெய்மை அடங்கியிருக்கிறது? ஆனாலும் இன்னொரு பக்கம் அது பொய்யாகிப் போனதே…!
                 ---------------------------------------------

                                                                                        





கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...