28 நவம்பர் 2018

குடும்ப ஓய்வூதியம் - தினத்தந்தி 28.11.2018 கட்டுரை



                 
 “குடும்ப ஓய்வூதியம்”     
     ய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது பெயரில் மட்டுமே வங்கிக் கணக்கு (சிங்கிள் அக்கவுன்ட்) வைத்திருக்க வேண்டுமென வலியுறுத்தக் கூடாது என்று கருவூல அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுத்தியுள்ளது என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கக் கூடியது. அரசு ஓய்வூதியர்களை கருணை கொண்டு நோக்குவது புரிகிறது.  
     பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆறு மாதத்திற்குள்ளேயே “ஙே” என்று ஆகி விடுகிறவர்கள் பலர். என்ன சார்…ஆள் தளர்ந்திட்டீங்களே? - பணியில் இருக்கும் நண்பர்களை அகஸ்மாத்தாய் சந்திக்க நேரிடுகையில் விழும் இந்தக் கேள்வி மேலும் அவர்களைத் தளர்த்தி விடும்.   பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பெருமளவில் பாதிக்கப்படுவதுதான் இதற்கான காரணம். அந்நிலையில் ஓய்வூதியம் மிகத் தெம்பூட்டக் கூடியதாக இருக்கிறது என்பதை எவரும் மறுக்க இயலாது.
     ஓய்வு பெற்ற பின்பு  ஓய்வூதியம் அடுத்த இரண்டு மாத இடைவெளிக்குள்  பெரும்பாலும் கிடைத்து விடுகிறதுதான் என்றாலும் (கிடைக்காதவர்கள் நிறைய உள்ளனர் என்பதை இங்கே சொல்லியே ஆக வேண்டும்,அதற்குப் பல காரணங்கள்) இந்தக் குடும்ப ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. அது மனைவி இறந்து கணவன் பெறுவதானாலும் சரி, கணவன் இறந்து மனைவி பெறுவதானாலும் சரி, அதற்காக விண்ணப்பிக்கும் முறைமைகளை அவர்கள் மீது கருணை வைத்து சுலபமாக எளிமைப் படுத்த வேண்டும் என்பதே இங்கே சொல்ல வந்த விஷயமாகிறது.
படிவம்-14 ல் குடும்ப ஓய்வூதியத்திற்கான பிரேரணையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி அதற்கு நிறைய இணைப்புகள் (குறைந்தது பத்து) இப்பிரேரணையுடன் சேர்க்கப்பட்டுள்ளன. அந்தப் பிரேரணையில் குடும்ப ஓய்வூதியம் பெறப் போகிறவரின் மாதிரிக் கையெழுத்து, புகைப்படம், கை ரேகைகள்., வங்கி விபரங்கள், அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான சான்று, குடும்பப் பாதுகாப்பு நிதி, என வெவ்வேறு விதமான பல இணைப்புகளும், பல இரட்டை நகலிலும், சர்வீஸ் ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்திடப்பட்ட அட்வான்ஸ் ஸ்டாம்ப் ரசீதுகளும் கேட்கப்படுகின்றன. அத்தோடு அந்தக் கையொப்பங்களுக்கும், புகைப்படங்களுக்கும், கைரேகைகளுக்கும் ஒரு அதிகாரியின் ஒப்பு சரிபார்ப்புச் சான்றும் (அட்டெஸ்டேஷன்) பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த இணைப்புகளைத் தயார் செய்யவும், இதோடு கூடிய படிவங்களைப் பூர்த்தி செய்து ஒட்டு மொத்தப் பிரேரணையை முழு வடிவில் கண்கொண்டு காண்பதற்குள் உன்பாடு என்பாடு ஆகிவிடுகிறது அவர்களுக்கு. இதற்காக குடும்ப ஓய்வூதியதாரர்கள் பாடாய்ப் படுகிறார்கள். பணியிலிருக்கையிலேயே “தன் மறைவுக்குப்பின்“ என்று சொல்லி யார் வாரிசு அல்லது நாமினி என்று பெயர் குறிப்பிட்டு அவருக்கு மொத்தம் நூறு சதவிகிதத் தொகையுமா அல்லது அவருக்கும் அடுத்தடுத்த வாரிசுகளுக்கும் என்று எத்தனை எத்தனை சதவிகிதம் என்று குறிப்பிட்டு சான்றொப்பம்  அளிக்கப்பட்டு, அதிகாரியின் ஒப்புதல் கையொப்பத்தோடு  பணியாளரின் அந்த நாமினேஷன் அவரது பணிப்பதிவேட்டில் இணைத்து பாதுகாக்கப்படுகிறது. அத்தோடு மாநிலக் கணக்காயரின் சரிபார்ப்புக்கு இவை அனுப்பப்படுகின்றன. இல்லாதவை குறிப்பிடப்பட்டு முழுமை பெறுகின்றன. போதாததற்கு ஆண்டுதோறும் மாநிலக் கணக்காயர் அலுவலகத் தணிக்கை வேறு நடைபெற்று குறையின்றி வைக்கப்படுகின்றன. இதில் வாரிசுதாரரின்  மாதிரிக் கையொப்பமும், புகைப்படமும ஒப்பளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. பணியாளரின் ஓய்வூதியப் பிரேரணையிலேயே கணவன் மனைவி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் இணைக்கப்படுகிறது (Spouse photos)  
இந்த வகையிலான பணிப்பதிவேட்டில் ஏற்கனவே இருப்பிலுள்ள வாரிசு மற்றும் பங்கு சதவிகிதங்கள் குறிப்பிடப்பட்ட  இணைப்புகளும், ஓய்வூதியதாரரின் கணவன்-மனைவி புகைப்படங்களுமே போதுமான ஆதாரங்களாய், சரி பார்க்கப்பட்ட ஆவணங்களாய் இருக்கையில், பணியாளர் இறந்த பிறகு குடும்ப ஓய்வூதியம் பெறப்போகிறவரிடம் புதியதாகப் பல சான்றுகளைக் கேட்பதும், கைரேகை, புகைப்படச் சான்றொப்பம், மாதிரிக் கையெழுத்து ஒப்பம், வாரிசுச் சான்று, வங்கி விபரங்கள்  என்று பலவற்றிற்குமாக குடும்ப ஓய்வூதியதாரரை அலைய விடுவதும், ஒன்றும் புரியாது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட வகையில் பரிதவிக்க விடுவதுமான தற்போதையய நடைமுறை கண்டிப்பாக எளிமைப் படுத்தப் பட வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது என்பதை இங்கே வலியுறுத்திச் சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது.
ஓய்வு பெற்ற பணியாளர் குறைந்தது அடுத்த பத்தாண்டுகள் (சில தவிர) உயிரோடு இருந்து ஓய்வூதியம் பெறுகிறார். அதற்குப் பின்பே குடும்ப ஓய்வூதியம் என்பது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ தவிர்க்க இயலாததாய் சில வாய்க்கிறது. அப்படியான கால கட்டம் என்பது 68 அல்லது 70 வயது தாண்டிய பொழுதுகளாய் உள்ளன. துணை உடன் இருக்கையிலேயே  ரொம்பவும் தளர்ந்து போனவர்கள், துணையை இழந்து நிற்கும் நிலையில் எதற்கும் முனைப்போடு முன்னின்று செயல்பட முடியாதவர்களாயும், உறுதியின்றி ஆட்டம் கண்டவர்களாயும்தான் இருக்கின்றனர் என்பதே யதார்த்தம். பென்ஷன் ஆபீஸ் சென்று பார்த்தால், கை, கால்கள் நடுக்கத்தோடு, பார்வை சரியின்றி, பேச்சு சுத்தமின்றி பலர் அலமந்து தடுமாறி  அலையும் காட்சிகள் மனதை வெகுவாய்ச் சங்கடப்படுத்தும்.
எனவே அப்படியான குடும்ப ஓய்வூதியம் பெற புதிதாய் விண்ணப்பிக்கும் நிலையிலுள்ளவர்களுக்கு இறந்து போன பணியாளரின் பணிப்பதிவேட்டில்  இணைத்துப் பாதுகாக்கப்பட்டுள்ள, அதிகாரியால்  ஒப்புதல் செய்யப்பட்டுள்ள மற்றும் மாநிலக் கணக்காயர் அலுவலகத்தின் தணிக்கைக்கு உட்பட்ட ஆவணங்களான நாமினேஷன் / வாரிசு  மற்றும் கணவன் மனைவி புகைப்படங்களின் ஆதாரங்களே  போதுமானது என்று கொண்டு, அந்த நாமினேஷனில் குறிப்பிட்டுள்ளபடியான சதவிகித ஓய்வூதியம் இன்னாரைச் சேர வேண்டியது என்பதை உறுதி செய்து, ஆணையிட்டு குடும்ப ஓய்வூதியங்களையும் மேலும் எளிமைப் படுத்தி, விரைந்து வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.
           -------------------------------------------------------------------------------------------
    


கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...