30 ஜனவரி 2024

 

 

    சிறுகதை,                                  “மொட்ட..."         பிரசுரம்-பேசும் புதிய சக்தி    

      தெருக்கோடியில் 'மொட்டை' வருவது பாட்டி கண்ணில் பட்டுவிட்டது.  வழக்கமாய்ப் புருவத்திற்கு மேல் தடுப்பாக இடது கையை வைத்து தூரத்தில் வருபவர்களைப் பார்ப்பாள். ஆனால் மொட்டையை அடையாளம் கண்டு கொள்ள பாட்டிக்கு அது தேவைப்படவில்லை. காரணம் மொட்டைதான் பாட்டி மனதில் நிலைத்து நிற்கிறானே...? பார்த்தீர்களா....எனக்கும் “னே...“ என்று வந்து விட்டது. “ரே...” என்றுதான் நான் என் வயசுக்கு அவரைச் சொல்ல வேண்டும். அதுதான் மரியாதை. ஆனால் பாட்டி அவரை அப்படி விளித்து விளித்து எங்களுக்கும் அது மனதில் படிந்து போயிருப்பதால் அடிக்கடி நினைத்து நினைத்து அதைத் திருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. மொட்டை என்பது இட்ட பெயரா அல்லது பட்டப் பெயரா என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. பாட்டிதான் ஒரு நாள் மொட்டையின் பெயரைச் சொல்லி விளித்தாள். ஏ...மொட்ட...அவன் கணக்கத் தீர்த்திடு....என்று நம்பியார் பேசும் வசனம்தான் அப்பொழுதே எங்களுக்கு நினைவுக்கு வரும்.

      பாட்டிக்கு மொட்டையை அடியோடு பிடிக்காது. அவர் எங்கள் வீட்டில் அடியெடுத்து வைத்த நாள் முதல் அப்படித்தான். என்னதிது...யார் யாரையோ கூட்டிண்டு வர்ற? என்று சொல்லி முகம் சுளித்தாள். பாட்டிக்கு புது ஆள் யார்  வீட்டுக்கு வந்தாலும் பிடிக்காது என்பது பொது விதி.  அதற்கான காரணமெல்லாம் கேட்கக் கூடாது. பிடிக்காதென்றால் பிடிக்காதுதான்.  ஜெகந்நாதன்னு பேரை வச்சிண்டு பரப்பிரம்மம் ஜெகந்நாதம்னு எங்கயாச்சும் இருக்க வேண்டிதானே? இங்க வந்து ஏன் அடையறது?.

      அவளுக்குப் பிடிக்க வேண்டுமென்றால் புதிதாய் வீட்டுக்கு வருபவர்கள் யாரென்றாலும் கை நிறைய....ஊகூம்....பை நிறைய ஏதாச்சும் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அதுவும் அம்மாவிடம் கொடுக்காமல், பாட்டியைப் பொருட்படுத்தி...இந்தாங்கோ பாட்டி...என்று மரியாதையாய்க் குனி்ந்து வளைந்து கொடுத்து விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். அந்தக் கணத்தில் பாட்டி நன்றாக ஆசீர்வாதம்தான் பண்ணுவாள். அது மனதார வந்து விழுந்த ஆசியாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கு தொடர்ந்து கியாரண்டி இல்லை. அது நின்று நிலைக்க வேண்டுமானால், வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஏதேனும் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும். வெறுங் கையை வீசிக் கொண்டு வந்து நின்றால் துவம்சம்தான். அந்தக் கணத்தோடு முடிந்தது அவர் கதை. வெறுங்கை வெங்கடவா....ஆடவா பாடவா...ன்னு இவனை யார் வரச் சொன்னது? - காது கேட்கவே சொல்லி விடுவாள். தப்பித் தவறி அம்மா ஏதானும் அவருக்கென்று எடுத்து அல்லது ஒதுக்கி வைத்தால்....மொட்டைக்குமாச்சு...தட்டைக்குமாச்சு....அவனுக்கென்ன வேண்டிக் கெடக்கு...குழந்தேளுக்கு திருப்தியாக் கொடு...அது போதும்...என்று அம்மாவிடமே எரிந்து விழுவாள். இனிமே நா யாருக்குப் பயப்படணும்...என்று அடிக்கடி முனகுவாள். எதன் தாக்கமோ அப்படித்தான் வார்த்தைகள் வரும். நாங்கள் பாட்டி என்ன சொன்னாலும் பதில் பேச மாட்டோம். அம்மா உட்பட. அது அப்பாவின் மேல் உள்ள மரியாதை.

      கோபம் வந்தால் பாட்டியின் மூஞ்சி அப்படிக் கோணும். அதை, அந்தக் கணத்தை யாரேனும் சட்டென்று ஒரு மின்னல் வெட்டில் படம் பிடித்தால் தேவலை. அதைப் போலவே நிறைவாய்க் கொண்டு வந்து கொடுப்பவர்களைப் பார்த்து எங்கள் பாட்டி மனம் நிறைந்து சிரிக்கும் அந்தப் பொக்கை வாய்ச் சிரிப்பையும் கண் கொள்ளாக் காட்சியாகக் காணத்தான் வேண்டும். என்ன ஒரு கிழ மலர்ச்சி?

      உள்ளே என்ன இருக்கிறது என்று யாருக்குமே தெரியாதுதான். பாட்டிக்கும்தான். ஆனால் கொண்டு கொடுக்கும் சுமை கனமாய் இருந்தாலே போதும்.  பாட்டியின் மனது நிறைந்து போகும். ஏதோ...பெரிஸ்ஸாக் கொண்டு வந்திருக்கான்....என்று தானே திருப்தி கொண்டவளாய் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு ஆசீர்வதிப்பாள்.

      அப்படித்தான் மொட்டை ஒரு முறை பாட்டிக்கு சீதனம் கொண்டு வந்தார். வாங்கிய போது பாட்டியின் கைகள் ஒரு அடி கீழே இறங்கியதை நான் கண்டேன். யப்பாடீ....என்ன கனம்டா....என்று சொல்லியவாறே,...என்னவோ...ஏதோ...என்று கூடப் பார்க்காமல், கேட்கவும் வாய் வராமல், அப்படியே மூலையில் கிடாசினாள் அதை.

      இருந்து, ரெண்டு தோசை சாப்டுப் போயேண்டா....என்று வழக்கமாய்ச் சொல்லும் பாட்டியும், அதைத்தானே தெனமும் முழுங்கிண்டிருக்கேன்...ஒரு வாய் காப்பி மட்டும் குடுங்கோ....என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டு வாங்கிக் குடித்து விட்டுப் போகும் மொட்டை... நா அப்புறமா வர்றேன்.....என்று உடனே நகர்ந்ததுதான் அன்றைய அதிசயம். அவருக்கே தெரிந்திருந்ததோ என்னவோ அதன் மதிப்பு? அல்லது உள்ளே இருக்கும் சரக்கை உடனே பாட்டி பார்க்க நேர்ந்தால் என்ன ஆகுமோ? என்ற பயமாகவும் இருந்திருக்கலாம்.   நிச்சயமாகச் சொல்கிறேன்....நாம் யாருமே ஊகிக்க முடியாது அதை. இதுவோ அல்லது அதுவோ....என்று தெரிவு செய்யக் கூடியதாகவும் சொல்லிப் பார்க்க முடியாது.

      பத்து விராகன் எடை என்பது ஒரு பலம். மூன்று தோலா - ஒரு பலம். எட்டுப் பலம் கொண்டது ஒரு சேர். நாற்பது பலம் ஒரு வீசை. இப்போது ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு வீசைப் புளி கொடப்பா....என்று அந்தக் கால ஆசாமிகள் கேட்டு வாங்கியிருப்பார்கள், நினைவிருக்கலாம். ஒரு வீசை, ஒரு படி, அரைப்படி, கால் படி என்பதெல்லாம் பழைய அறுபது எழுபதுகளின் அளவைகள்....பிறகுதான் இந்தக் கிலோ விவகாரமெல்லாம்.

      மொட்டை கொண்டு வந்தது வீசையா...அல்லது படிக் கணக்கா? என்றால் படிக் கணக்கு. ஆனாலும் பூனைப் பீயைப் பொட்டணம் கட்டிக் கொண்டு வந்தாப்போல.....என்று பாட்டி கொதித்தெழுந்தபோதுதான் எல்லாருக்குமே அது என்னவாய் இருக்கும் என்று ஓரளவு ஊகிக்க முடிந்தது. ஏனென்றால் அதுபோல் ஏற்கனவே ஒன்றிரண்டு முறை எங்கள் அப்பா மூலம் அது நடந்திருக்கிறது. ஓட்டலில் வீணாய்ப் போவானேன் என்று பொறுக்கிச் சேர்த்துச் சேமித்துத் தூக்கி வந்தது. கழுதை விஷ்டையானாலும் கை நிறைய....என்று.

      தன் பிள்ளை அப்படிக் கொண்டு வந்தால் அது கோடி பெரும்.  வறுமையின்பாற்பட்ட தற்காலிகத் தீர்வுக்கான காரண காரியம் அது. . வீணாய்ப் போவதை அப்படிக் காசாக்குவதில் என்ன தவறு? என்கிற அதி தீவிரத் தேவை இருந்த காலம் அது.

      அங்கேர்ந்து இதைச் சொமந்துண்டு வந்து கொடுத்துட்டுப் போறாம்பாரு...அவன் கையைக் கடுவாய் பிடுங்க....- என்று பாட்டி திறந்து பார்த்து விட்டு அப்படியே திண்ணை ஓரத்தில் சாய்த்து விட்டாள். சடக்கென்று திரும்பி கம்பி அழியைப் பற்றிக் கொண்டு மொட்டையை அடிக்க...ஸாரி....அழைக்கப் பாய்ந்தவள், கண்ணுக்குத் தெரியாத தூரத்திற்கு அந்தப் பறவை பறந்து விட்டதை எண்ணி முணு முணுவென்று முனகிக் கொண்டே குளிக்கப் போனாள். எள்ளும் கொள்ளும் வெடிக்குது? மொட்டைக்கும் சேர்த்து முழுக்குப் போட்டாளோ என்னவோ? ஆனால் அது நடக்கவில்லை. மொட்டை வருவது நிற்கவில்லை. வேறு கதி...பாவம்தான் யோசித்தால்.

      நமக்குன்னு  எல்லாமும் எப்டி வந்து சேருது பார்....அதை என் கையாலே தொட மாட்டேன்....நீயே என்னவோ பண்ணிக்கோ...பிச்சு.....என்று அம்மாவிடம் ஓதிவிட்டுப் போனாள் பாட்டி. பிச்சு என்பது பிச்சம்மாளின் சுருக்கம்.

      பிச்சம்மாள்னு பேரு வச்சிருக்காளே...அப்போ பாட்டி பிச்சையெடுத்தாளா? என்று பிற்காலத்தில் என் பையன்  தன் பாட்டியை நினைத்துக் கேட்டது இப்போதும் எனக்கு ஞாபகம் வந்து கொண்டுதான் இருக்கிறது. பிச்சையெடுத்த மாதிரிதான் வாழ்க்கை இருந்தது என்றாலும், வீடு வீடாய்ப் போய் அம்மா...பிச்சை போடுங்க...ன்னு கத்தினால்தான் பிச்சையா?

               மாமி....ஒரு கரண்டி காபிப் பொடி கடன் தாங்கோளேன்....மாமி...ஒரு ஆழாக்கு அரிசி தாங்கோளேன்..ரெண்டு ரூபா கடன் தாங்கோளேன்....மாமா சம்பளம் வந்தவுடனே தந்துடறேன்....என்று அண்டை அயல் என நாளொரு மேனியும், பொழுதொரு வீடுமாய்ப் போய் நின்றாலும் அதுவும் ஒருவகைப் பிச்சைதானே...! திருப்பிக் கொடுத்தது பாதி...கொடுக்காதது மீதி, போனால் போகட்டும்  என விட்டது சில...என்றுதானே அந்நாளைய காலட்சேபம் கழிந்தது.

      வாழ்க்கையில் வறுமை என்பது இருக்கலாம். வறுமையே வாழ்க்கையாக இருந்தால்? மனிதன் எந்தக் கஷ்டம் வேண்டுமானாலும் பட்டு விடலாம்...ஆனால் தரித்திரக் கஷ்டம் மட்டும் படவே கூடாது. அவளை அணைத்துக் கொண்டோமானால் அது லேசில் நம்மை விடாது என்பது எங்கள் குடும்பத்தின் தீர்க்கமான அடையாளம்.

      அதனால்தான் வாசலில் பலாப்பொடிக்காரன் வந்தபோது மொட்டை கொண்டு வந்த அந்த சீதனத்தை விலையாய்க் கொடுத்து அம்மா அதை வாங்க வேண்டியிருந்தது. ரெண்டு படிப் புளியங்கொட்டைக்குப் பலாப்பொடி எவ்வளவுதான் கிடைத்து விடும்? அவன் அதைக் கொடுத்ததே யதேஷ்டம். மனசுள்ள ஏழைப் பங்காளனுக்குத்தான் அந்த தாராளம் வரும். அதையும் விட்டாளா பாட்டி? பிடியாய் வந்து நிற்கத்தான் செய்தாள்...

      காயும் கனியும் கட்டியளக்கணும்....தெரிஞ்சிதா...? என்ன போடறே நீ....ஏமாத்தப் பார்க்காதே....! என்று அந்தக் அரைப்படி அளவையை வாங்கி கையை வளைத்து அணைத்துப் பிடித்து அளந்தாளே பார்க்கலாம். நிச்சயமாய்ச் சொல்லலாம். இப்படியும் அளக்க முடியும் என்பதை அந்தச் சிறு வியாபாரி அந்தக் கணத்தில்தான் தன் வாழ்நாளில் முதன் முதலாய்ப் புரிந்து கொண்டிருப்பான். அரைப்படிக்குக் கால்படி இலவசம் என்பதான அளவை அது.  அதற்குப் பிறகு படு ஜாக்கிரதையாய் அவன் வியாபாரம் தொடர்ந்திருக்கும் என்பது திண்ணம்.  

      யம்மாடீ....இது நமக்குக் கட்டுபடியாகாது பாட்டி....நீங்க துட்டு கொடுத்தே வாங்கிக்குங்க....என்று கோபப்பட்டு சல்லென்று புளியங்கொட்டைப் பையை எடுத்து அவன் விசிறிப் போட்ட போது.....

      நன்னாய் இருப்பாய் நீ....அப்டிச் சொல்லாதே...உன் குழந்தேளெல்லாம் உன்னை நன்னா வச்சுக் காப்பாத்துவா....குடுத்துட்டுப் போ....என்று நல்ல வார்த்தை சொல்லி...அடுத்து அவன் பதில் வரும் முன்னே அளந்து போட்ட பாத்திரத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு உள்ளே நகர்ந்து விட்டாள் பாட்டி....இருந்து பேச்சு வளர்ந்தால்தானே வம்பு?

      ம்மா....ஏன் அவனைத் திட்டிண்டே இருக்கே.....வந்தா வந்துட்டுப் போறான்...இங்கதான் அவனுக்குக் குளிக்க வசதியாயிருக்கு....அங்கே ஓட்டல்ல சதா பொம்பளேல்லாம் கொல்லைல உட்கார்ந்து பாத்திரம் தேய்ச்சிண்டிருப்பா....மறைவாக் குளிக்கிறதுக்கு அவனுக்கு ஒரு இடமில்லே..அந்தக் ஊனக் காலை வச்சிண்டு அவன் படுற அவஸ்தையிருக்கே...அதக் கண்கொண்டு பார்க்க முடியாது....நம்பாம்தான் அவனுக்கு வசதி, கெதி எல்லாம்.  கிணத்தடிலதான குளிக்கிறான்....பச்சைத் தண்ணிதானே... வெந்நீரா போட்டுத் தரச் சொல்றான்...பேசாம விடுவியா....?-ரெஸ்ட் டயத்துக்கு வந்திருந்தபோது அப்பா சொன்னார். அவருக்கு இரக்கம் ஜாஸ்தி.

      ஓட்டலில் உடன் வேலை பார்ப்போரை அரவணைத்துச் செல்லும் தயாள குணம். எல்லோரையும் தன் சகோதரனாய்ப் பார்க்கும் பாவம்....!

      ஆமாண்டா...இன்னும் அது ஒண்ணுதான் குறைச்சல்.......ஏன் போட்டுத் தந்தா என்னன்னு கேட்ப போலிருக்கு...உனக்குன்னு சிநேகம் வந்து வாய்க்கறது பார்....அதச் சொல்லணும்..... - பாட்டி அலுத்துக் கொண்டு வழுக்கைத் தலையை இழுத்துப் புடவைத் தலைப்பால் சுற்றி மறைத்து முடங்கிப் போனாள். ஆயுள் முழுக்கத் தன் கணவனிடம் அடிமையாய் இருந்து கழித்த வாழ்க்கை, இப்பொழுது எதைத் தொட்டாலும் எகிறத் துடித்தது. ரெண்டு ஆச்சட்டி வௌக்கை கை தவறி உடைச்சுட்டேன்னு  சோறு போடாமே நாள் பூரா வீதீல நிறுத்தி வச்சி கொடுமை பண்ணினவராக்கும் உன் தோப்பனார்.....! - பாட்டி மனதில் இன்னும் அணையாத கனல்....!

      பாட்டிக்கு ஏனோ மொட்டையின் மீது இரக்கம் பிறந்ததேயில்லை. ஒரு விபத்தில் மாட்டி, இடது காலின் உள்ளே நீண்ட கம்பி வைத்து ஆபரேஷன் பண்ணித் தைத்து, அந்த விறைப்பான காலை  அகட்டி அகட்டி...இழுத்து இழுத்து மொட்டை நடந்து வரும் காட்சி, பார்க்கும் எவரையும் இரக்கத்திற்குள்ளாக்கி விடும். அந்த ஓட்டலுக்கு வேலைக்கு வந்து, எங்கள் வீட்டிற்கு மொட்டை அறிமுகமாகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. எத்தனையோ முறை வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும்போதெல்லாம் அந்தக் காலின் மீதுதான் எங்கள் கவனம் போகும். பயமாய் இருக்கும்...இப்டியெல்லாமுமா உண்டு?  தூங்கும் நேரம் தவிர நாளின் மற்றைய பொழுதுகள் பூராவும் அவர் படும் அவஸ்தை காணச் சகியாது. வலிய ஒரு காட்சியை அனுபவிப்பது கொடும் வேதனையைத் தரும்.  இடது கால் நீ்ட்டியமணியமாய்த்தான் இருக்கும். அதை அவரால் மடக்க முடியாது. தூக்கத்தில் அந்தக் கால்கள் படும் அவஸ்தை, நடுக்கம், மனசு துவண்டு போகும். நம் எதிரிக்குக் கூட இப்படியெல்லாம் வரக் கூடாது என்று அஞ்சி மனது பிரார்த்திக்கும்.

       வயதில் பெரியவர்கள் யார் முன்னேயும் அருகில் அமராமல் சற்றுத் தள்ளித்தான் தரையில் தன் இருக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார் மொட்டை. கால் நீட்டினமேனிக்கு மரியாதைக் குறைவாய் ஆகிவிடக் கூடாது என்கிற கவனமுண்டு. அவருக்கு வசதி ஒரு நாற்காலியிலோ கட்டிலிலோ உட்காருவதுதான். பெரியவர்கள் தரையில் உட்கார்ந்திருக்கும்போது அது சாத்தியமா? பரவாயில்லை என்றாலும் கேட்க மாட்டார். அந்த மரியாதையெல்லாம் உண்டுதான்.  உயரமான இருக்கையில்தான் அவரால் சற்று சுலபமாக உன்னி எழ முடியும். மர நாற்காலிதான் சரி.  ப்ளாஸ்டிக் நாற்காலி என்றால் கவனம் தேவை.  இடது கையை ஊன்றி எழும் விசையில் நாற்காலி வழுக்கி நகர்ந்ததோ போச்சு....அப்படி ஒரு முறை எங்கள் வீட்டிலேயே தடாலடியாய் விழுந்து அதுவும் உடைந்து போனது. அவரும் ரெண்டு நாளைக்குப் படுத்த படுக்கையாகிப் போனார்.  நல்ல வேளை...பாட்டி அப்போது ஊரில் இல்லை.  தன் இன்னொரு பிள்ளையைப் பார்க்க மண்ணச்சநல்லூர் போயிருந்தாள். வருஷாந்திரப் பயணம்.

      அங்கே ஒரு பெரும் கூட்டம் உண்டு. ஒரே குடும்பமாய் ஏழெட்டு உறவு முறைகள் ஒன்று கூடி முப்பது எண்ணிக்கைக்கு மேல் ஒரு பெரிய வீட்டில் கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள். தினமும் பந்திச் சாப்பாடுதான் அங்கே. யாரோ சம்பாரிச்சுக் கொண்டு வர்றா...யார் யாரோ உட்கார்ந்து சாப்பிடுறாங்கங்கிற கதைதான்.  அங்கு பாட்டிக்கு வரவேற்பு அதிகம். ஏனென்றால் மாலாடு என்கிற ஒரு தின்பண்டத்தை பாட்டிதான் செய்வாள். பக்குவமாய்ப் பிடிக்க ஒரு பக்குவம் வேண்டும் அதற்கு. பொட்டுக் கடலை மாவு, ஜீனி, சுத்தமான பசு நெய்....என்று கலந்து உருண்டை உருண்டையாய்ப் பிடித்து வைக்கும் பண்டம் அது. மாவு எவ்வளவு வறுபட வேண்டும்....அதில் நெய்யை எந்தளவுக்கு ஊற்றி எந்தளவுக்கு அதைப் புரட்டி எடுக்க வேண்டும். எந்தப் பக்குவத்தில் அதை அடுப்பிலிருந்து இறக்க வேண்டும், எந்தக் கைச்சூட்டில் அதை உருண்டையாய்ப் பிடிக்க வேண்டும் என்று பாட்டிக்குத்தான் அத்துபடி. பிடித்தால் பிடித்த பிடியில் நிற்க வேண்டுமே...!

      மரகதம் பாட்டியிடம் அவர்களும் எத்தனையோ முறை கற்றுக் கொள்ளப் பார்த்தார்கள்தான். கற்றுக் கொடுத்தால், பிறகு, தான் அங்கே காலடி வைக்க முடியாதே என்று நினைத்தாளோ என்னவோ, காலம் பூராவும் டபாய்த்துக் கொண்டுதான் இருந்தாள். ஊர் போய்த் திரும்புகையில் இரண்டு பெரிய சம்படம் நிறைய எங்களுக்கும் அந்த மாலாடுப் பொக்கிஷத்தைத் தூக்க முடியாமல் தூக்கி வருவாள். ஓசிக்கு ஈயோட்ட முடியுமா?  போதாக் குறைக்கு வருஷம் பூராவும் பயன்படும் விதத்தில் பனை ஓலை விசிறிகளை (அது அந்த ஊரில் பிரபலமோ என்னவோ...) பத்திருபது என ஒன்றாய்ச் சேர்த்துக் கட்டிக் கிழித்துக் கொண்டு வந்து நிற்பாள். எங்கே போனாலும், எதைச் செய்தாலும் தலைச்சன் பிள்ளை இருக்கும் சந்நிதானத்திற்கு அம்மையநாயக்கனூர் ரயிலடி வந்து இறங்கி,  பஸ்ஸில் பாட்டி வீடு வந்து சேரும் போது, பெரிய சொத்து பத்தோடு காலடி வைப்பதாய் எண்ணி மனசு ஆறுதல் படும் அவளுக்கு.

      மூன்று ஆண், மூன்று பெண் என்று கூடிக் குதூகலமிடும் எங்கள் வீட்டில் பாட்டியின் மாலாடு வருகை எங்களை சொர்க்கத்திற்கே கொண்டு போய் நிறுத்தி விடும். வானரங்கள்...அதுக்குள்ளே தூக்கிண்டு ஓடறது பார்...! பத்து நாளைக்காவது வச்சிருந்து கொடு..கெட்டே போகாதாக்கும். .பாதி பாதியா உடைச்சுக் கொடு...அப்பத்தான் நீடிச்சி வரும்.  வருஷத்திற்கு ஒரு முறைதான் அம்மாதிரி சந்தோஷ சாகரத்தில் மிதக்கக் கிடைக்கும். முக்காலே மூணு வீசம் வறுமையிலும், பட்டினியிலும்தான் கழிந்தது எங்கள் வாழ்க்கை. ஆனால் வீட்டில் அது ஒரு குறையாய்ப் பட்டதேயில்லை யாருக்கும். பழகிப் போச்சு...வேறென்ன? ஒராள் ஓட்டல் சம்பாத்தியத்தில் எத்தனைக்குத்தான் முழம் போட முடியும்? ஊரெல்லாம் கடன்....பணமாயும், பொருளாயும்....என்னத்தைச் சொல்ல....?

      சும்மா இந்தப் பாட்டைப் பாடி என்ன செய்ய? மொட்டை வருவதை இதனால் நிறுத்த முடிந்ததா என்றால் இல்லையே? என்னா பாட்டி...தூக்கம் பலமோ? என அசட்டுப் பிசட்டு என்று கேட்கக் கூடாதவரிடம், கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுக் கொண்டு வந்து நின்றால்? ஏற்கனவே பாட்டிக்குப் பிடிக்காது. பிறகென்ன சகஜ பாவம்? தெரிய வேண்டாமா?

      அத்தனை சகஜமா, சர்வ சுதந்திர பாத்தியதையாய்  இருக்கானாம் இந்த வீட்ல....? பேசிக் காட்டறான்....என்று தளர்ந்த தோளில் மோவாயை இடித்துக் கொண்டு மூஞ்சியையும் திருப்பிக் கொண்டு  பாட்டி இருக்கும் காட்சி, பார்ப்போருக்குச் சிரிப்பைத்தான் வரவழைக்கும்.

      போதாக்குறைக்கு மன்னி...மன்னி....என்று அழைத்துக் கொண்டு அடுப்படி வரை மொட்டை நுழையும் காட்சி பாட்டிக்கு அடியோடு பிடிப்பதில்லை. ஆனால் அம்மா என்றும் எதுவும் சொன்னதில்லை. வாங்கோ...உட்காருங்கோ....என்று சொல்வதோடு சரி...கொடுக்க ஏதாவது இருந்தால்தானே...பள்ளிக்குச் சென்றிருக்கும் பிள்ளைகள் மதியம் பசியோடு வந்து நிற்குமே...என்கிற கவனம். அதுகளை வயிற்றை நிரப்பி அனுப்பினாலே போதும்....அன்றைய கடமையும் முடிந்த மாதிரிதான்.

      ம்மாமி....இந்தாங்கோ...பிள்ளேள் கண்ணுல படாம வச்சிண்டு சாப்பிடுங்கோ...என்று நாள் தவறாமல் ஒரு பொட்டலத்தைக் கொண்டு வந்து அம்மா பாட்டியிடம் கொடுப்பதையும்....பாட்டி அதை ஒளித்து வைத்துக் கொண்டு பிய்த்துப் பிய்த்து வாயில் போட்டுக் கொள்வதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். அம்மா எங்கள் காது கேட்கவே (சற்று சத்தம் கம்மியாய்த்தான்)  அப்படிச் சொல்வதால், நாங்களும் பாட்டியிடம் போய்...“எனக்கு பாட்டீ....” என்று  ஓசிக்கு நின்றதில்லை. எங்களைப் பார்க்க நேரிட்டால் வாய் மெல்லுவதைக் கூட நிறுத்திக் கொண்டு கண்ணை மூடி ஜெபம் பண்ணுவது போல் பாவனை செய்வாள் பாட்டி

      பிச்சு...நீ நன்னாயிருக்கணும்....ஆத்தங்கரைல போய்க் குளிச்சிட்டுத் திரும்பும்போது சீவனே இல்லடியம்மா...எப்டி வாங்கினே...? ஏது துட்டு? ஏதுடியம்மா...நாள் தவறினாலும் என் பாடு தவறாமப் பண்றியே...? உன்னை எம்புட்டெல்லாம் திட்டியிருக்கேன்...ஏசியிருக்கேன்...நீ நன்ன்ன்னா இருக்கணும்...உன் குழந்தேளெல்லாம் படிச்சு வேலைக்குப் போயி உங்களை சந்தோஷமா வச்சிப்பா....நா சொல்றேன் பாரேன்...என் வார்த்தை பலிக்காமப் போகாதாக்கும்....-அம்மா கண்களில் நீர் தளும்ப அந்தத் தண்ணிக் காப்பியைச் சுடச்சுடக் கொண்டு வந்து பாட்டியிடம் நீட்டுவாள். யப்பாடீ.....ஈஸ்வரா.....! என்று பாட்டி அதைத் தொண்டைக் குழிக்குள் விடும் காட்சி நம்மை உருக்கி விடும். மொத்த வாழ்க்கையிலும் மறக்கவே முடியாத பல சோக நினைவலைகள் உண்டு இப்படி.

      எங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ....அம்மா பாட்டியைக் கவனிக்கத் தவறவே மாட்டாள். சந்தைக்குச் சரக்குப் போட்டு எடுத்துப் போகும் உதயமய்யர்-சாரதாம்பாள் குடும்பத்திற்கு மிகவும் கடமைப்பட்டவள் அம்மா. இவள் கேட்டு அவர்கள் இல்லையென்று ஒரு நாளும் சொன்னதேயில்லை. மூட்டை மூட்டையாய் சாக்கில்  அடுக்கி நிறுத்தி வியாபாரத்திற்குத் தயாராய் நிற்கும் பட்சணங்கள் நடுவே ஓரமாய் சுவரில் அம்மா கடனும் கோடு கோடாய் எழுதிக் கணக்கிடப்பட்டிருக்கும். அதுபாட்டுக்குச் சேர்ந்து கொண்டே போகும். அவர்கள் முறுக்கு சுற்றக் கூப்பிடும்  நாளில் அன்றைய  சேவைக் கட்டணத்தில்  இந்தக் கடன்  சிறிது சிறிதாய்க் கழியும். அம்மா முறுக்கு சுற்றப் போனாள் என்றால், எங்களுக்குள் மகிழ்ச்சி புகுந்து கொள்ளும். அன்று மாலை தின்பதற்குக் கிடைக்குமே...! பிச்சு மாமி...குழந்தேளுக்குக் கொண்டு போய்க் கொடுங்கோ...ஆசையாக் காத்திண்டிருக்கும்....- சாரதாம்பாள் மாமியின் கருணையே கருணை...!

      எத்தனை வீடுகளுக்கு கல்யாண முறுக்கு சுற்றப் போயிருக்கிறாள். அது கை வந்த கலை அம்மாவுக்கு.  பிச்சு மாமி...உங்க குழந்தேளை வரச் சொல்லி, நம்பாத்துல சாப்பிடச் சொல்லுங்கோ.....-இங்கிருந்து சாப்டுட்டு ஸ்கூலுக்குப் போகட்டும்.....காமு மாமி, நாகலட்சுமி மாமி என்று  எத்தனையோ விசேடங்களின்போது இப்படியான அழைப்பு உண்டுதான். ஆனால் அம்மா எங்களைக் கூட்டிப் போனதேயில்லை. கூட வேறு இரண்டு மாமிகளும் முறுக்கு சுற்ற வந்திருக்கிறார்கள்தானே...அவர்கள் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறதுதானே...அவர்களை மட்டும் ஏன் சொல்லவில்லை? என் குழந்தைகள் மீது மட்டும் என்ன அத்தனை கரிசனம்? இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழத் தெரியாதா எங்களுக்கு? மாட்டவே மாட்டாள் அம்மா. அதுதான் எங்களுக்கு, எங்கள் வீட்டுக்கான மதிப்பு. மரியாதை. வறுமையிற் செம்மை.

      முடியாமல்தான் இருந்தோம் மூன்று வேளைக்கு. ஏன் இரண்டு வேளையே தாளம் போட்ட நாட்கள் எத்தனையோ! ஒரு வேளையும் இல்லாமற் போயிருக்கிறதுதான். ஆனால் அப்பா எங்களை மதிய உணவுக்கு அனுப்பியதேயில்லை. காமராஜ் கொடுத்த இலவசக் கல்வித் திட்டத்தை மட்டும் ஏற்றுக் கொண்டார்தான். இலவச சீருடை கூடப் பரவாயில்லை என்று வாங்கிக் கொள்ளச் சொன்னார். ஆனால் மதியச் சோற்றுக்கு வேண்டாம் என்று மறுத்தே விட்டார். அது கௌரவப் பிரச்னை ஆனது அப்பாவுக்கு. அப்படி விவேகமாய் வளர்ந்தவர்கள் நாங்கள்.

      மொட்டையைப் போன்று ஒருவர், நாங்களே தனது உறவு என்று வந்து நிற்கும்போது எப்படி அவரை மறுதலிப்போம்? எப்பயும் போல் ஓட்டலில் ரெஸ்ட் டயத்துக்கு வரவும், படுத்துத் தூங்கவும், ராத்திரிப் படுக்கைக்கு வரவும் போகவுமாகத்தான் கடைசி வரை இருந்தார் மொட்டை. பாட்டியும் சொல்லிச் சொல்லி அலுத்துத்தான் போனாள்.

      பொழுது விடிஞ்சு பொழுது போனா இவன் வந்து ஒண்டிக்கிறான். அந்தக் கக்கூஸ் பக்கம் ஒரு அவசரத்துக்குப் போக முடிலை. இவன் போய் அடைச்சிண்டுடறான்...என்ன கருமாந்திரம் இது? - அத்தனையும் சொல்லி அலுத்தாயிற்றுதான்.

      ஒரு கட்டத்தில் எல்லாம் குறைந்தும் போனது. இருந்தா இருந்துட்டுப் போறான். அந்த ஒரு ஜீவன் வந்து நீட்டி நிமிர்ந்துட்டுப் போறதுல வீடு தேய்ஞ்சா போகப் போறது? விட்டு விட்டாள் அடியோடு.

      காரண காரியமில்லாம ஏன் ஒருத்தரை வெறுக்கறே? அல்லது வெறுக்கிற மாதிரி நடந்துக்கிறே? அவனால உனக்கு என்ன துன்பம்? ஏதோ வரான், படுத்துக்கிறான்....போறான்....வேறே ஏதாச்சும் இடைஞ்சல் பண்ணினானா? அப்படீன்னா சொல்லு... இனிமே வராதேன்னு சொல்லி நிறுத்திப்புடறேன்....அண்ணா...அண்ணான்னு சொல்லிண்டு நம்பளையே சுத்திண்டு திரியறான்....இருந்துட்டுப் போகட்டுமே....நமக்கும் சிலபேர் இருக்கான்னு அவனுக்கும் வாழ்க்கைல ஒரு பிடிப்பு ஏற்படுமில்லையா...? இதெல்லாம் உனக்கு நான் சொல்லித்தான் தெரியணுமா? எவ்வளவு அனுபவங்களைச் சேமிச்சவ நீ...? வாழ்க்கைல எத்தனை கஷ்டங்களைத் தாண்டி வந்தவ ? எவ்வளவு துன்பங்களை எதிர் நீச்சல் போட்டுக் கடந்தவ நீ? இப்டி அவனை வெறுக்கிறது உனக்கே நல்லாயிருக்கா?  மனசு ஒப்புக்கிறதா? கொஞ்சம் யோசிச்சுப் பார்...புரியும்.... அப்புறம் உன் இஷ்டம்.....

      அப்பா அத்தோடு முடித்துக் கொண்டார். பாட்டியின் அமைதி நம்பிக்கையளித்தது. அவள் புடவைத் தலைப்பால் அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டதும், மூக்கைச் சிந்தியதும், நெஞ்சம் விம்மியதும் பார்க்க மிகவும் வேதனையாயிருந்தது. கடந்து வந்த இடர்பாடான பாதைகளை மனிதர்களால் ஆயுளுக்கும் மறக்கவே முடிவதில்லைதான்.

      ன்று பொழுது விடிந்த போது மொட்டை படுத்திருந்த இடம் காலியாயிருந்தது.

      என்னாச்சு....சொல்லாமப் போக மாட்டானே? என்றார் அப்பா. எனக்குத் தெரியாம ஏதாச்சும் திட்டினியா அவனை? என்று பாட்டியைக் கடிந்தார்.  காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அவர் ஓட்டலை அடைந்த போது அங்கும் மொட்டை வந்திருக்கவில்லை என்பது  மேலும் பயத்தை உண்டு பண்ணியது. சொந்த ஊருக்கு எதுவும் வண்டியைக் கட்டி விட்டாரோ? என்றெல்லாம் நினைத்தோம்.

      ஏதேனும் தற்கொலைக்கு முயன்றிருந்தால்? அப்படியும் பயம் வந்தது.  அன்றியும் கடந்த ரெண்டு  மூன்று நாட்களாகவே பாட்டி ஏதும் சொல்லவில்லையே அவரை? எப்பொழுதும் போல் வந்து போய்க் கொண்டுதானே இருந்தார்? நாங்கள் இப்படி யோசித்துக் கொண்டிருந்தோம்.

      ஒரு மாதம் மேல்  ஓடி விட்டது. எந்தத்  தகவலும் இல்லை. அவரை மறக்க ஆரம்பித்திருந்த நேரம். அப்பாதான் அடிக்கடி நினைவுபடுத்திப் பேசிக் கொண்டிருந்தார். ஓட்டல்ல கணக்குத் தீர்த்துத்தான் வாங்கிண்டு போயிருக்கான். ஏது கணக்கு? அப்பப்போ வாங்கினதுபோக மீதம்...அவ்வளவுதான். ஒரு வார்த்தை சொல்லாமப் போயிட்டானே...? என்ன பிரச்னையோ? அவா அவா மனசுல இருக்கிறது மற்றவாளுக்கு எப்படித் தெரியும்?

      ன்றுதான் அந்த அதிசயம் நடந்தது.

      வாசலில் வந்து நின்ற டாக்சியிலிருந்து இறங்கினார்கள் அவர்கள்.

      மரகதம் பாட்டி....பிச்சம்மாள் கிருஷ்ணய்யர் வீடு இதுதானே....? - கேட்டுக் கொண்டே உள்ளே  நுழைந்தார் அவர்.

      யாரது வந்திருக்கிறது? தெரிலயே...நேக்கு...குனிஞ்சு வாங்கோ.. நிலை இடிக்கப் போறது.....-சொல்லிக்கொண்டே உள்ளேயிருந்து தட்டுத் தடுமாறி  ஓடி வந்தாள் பாட்டி.

      என்னைத் தெரிலயா பாட்டி....நாந்தான் மணி......என்று சொல்லிக் கொண்டே சந்தோஷமாய் நெருங்கினார் அவர்.

      ஓ....நம்ப மரகதமணியா...? நொச்சியம் கிச்சா மாமா பிள்ளை மரகதமணிதானே?  மண்ணச்சநல்லூர் மணியன்தானே? ஓட்டல்லாம் நன்னா நடக்கிறதா?   வாடா...வாடா...வாடா....-மகிழ்ச்சி பொங்க வரவேற்றாள் மரகதம் பாட்டி.. வாயிலில் சிலர் நிற்பதைக் கவனித்துத் தயங்கினாள்....

      என்ன தயக்கம்.? .அதான் நா வந்திட்டனே....உள்ளே வாங்கோ....என்று பின்னால் திரும்பி வெளியே நின்றவர்களை அழைத்தார் அவர்.

      ஓ...ஊமப் பொண்ணு ஈஸ்வரியா..? அதுதானே உம்பேரு....?.....மாலையும் கழுத்துமா என்னடீ இது...திடு திப்னு.? பகவானே...எம்புட்டு அழகு இந்தப் பொண்ணு..? - கேட்டுக் கொண்டே நெருங்கி அந்தப் பெண்ணின் முகத்தை ஆதுரமாய் வழித்து முத்திக் கொண்டாள் பாட்டி. அமைதியாய் நின்ற மாப்பிள்ளையையும் உற்றுப் பார்த்தாள் மரகதம் பாட்டி. திறந்த வாய் அப்படியே நின்று போனது. யார்ரா இது.....? கேள்வி ஒலியாய் உருப்பெறாமல் ஒளியாய் ஊடுருவியது.

      அதிர்ந்து நின்றவளின் வற்றிய கண்களிலிருந்து சரம் சரமாய்க் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. நெஞ்சை இரு கைகளாலும்  பிடித்துக் கொண்டு அங்கே மாப்பிள்ளைக் கோலத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தார் மொட்டை.. என்கிற ஜெகந்நாதன்.

      திருச்சினாப்பள்ளி சர்வ மங்கள சமாஜத்திலேர்ந்து இவர் ஜாதகம் வந்தது. ஊர் பக்கத்துல லால்குடிதானாமே...? விசாரிச்சதுல ரொம்ப வேண்டியவாளாப் போய்ட்டா... அலமேலு ஜாதகத்தோட அப்டி ஒரு பொருத்தம்....நா பேசறேனே அது போறாதா? என்று  பார்த்த ஜோர்ல சம்மதம் தெரிவிச்சிட்டார் மாப்பிள்ளை.....அவளுக்கு வேளை வந்துடுத்துன்னு மற்ற எதையும் பொருட்படுத்தாமே ரெண்டு குடும்ப சம்மதத்தோட  சட்டுப் புட்டுன்னு கோயில்ல வச்சு சிம்பிளாக் கல்யாணத்தை முடிச்சிட்டேன்....உத்தமர் கோயில்லதான் எல்லாமும் நடந்தேறித்து. நேரா இங்கதான் கூட்டிண்டு வர்றேன் உங்ககிட்டே ஆசீர்வாதம் வாங்கணும்னு கடைசில பார்த்தா மாப்பிள்ளை உங்களுக்குத் தெரிஞ்சவராவே போயிட்டதுதான் இதுல ரொம்ப விசேஷம்.....விவரமெல்லாம் சொன்னார் - மனசுக்குப் பரம சந்தோஷமாயிடுத்து...- நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனார் மரகதமணி.

      தம்பதிகள் மரகதம் பாட்டியின் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்க, அம்மாவும் நாங்களும் பின்னால் அமைதியாய் நிற்க, மனசார, ஆனந்தக் கண்ணீர் மல்க, உதடுகள் துடிக்க அனைத்து இஷ்ட தெய்வங்களையும், குல தெய்வத்தையும்  மனதில் நினைந்து வணங்கி பரிபூர்ணமாய் ஆசிர்வதித்த பாட்டி, “ஓடிப் போய் உங்க அப்பாவைக் கையோடு அழைச்சிண்டு வா..” .என்று என்னைப் பார்த்துச் சொல்ல....ஓட்டலை நோக்கி  சந்தோஷமாய் வேகமெடுத்தேன் நான்.

                                    ----------------------------------

 

                                   

     

 

       

     

 

 

சிறுகதை                                          “சகதர்மிணி”       பிரசுரம்-அமுதசுரபி

      ப்பொழுதும் போல் நிச்சலனமாய் இருந்தாள் அகல்யா. அப்பப்போ செய்யும் காரியங்களில்தான் அவள் கவனம். இந்த வயதிலும் எப்படி அவளால் இத்தனை ஒருமித்த கவனத்தோடு காரியமாற்ற முடிகிறது என்று இவருக்கு ஆச்சரியமாய் இருந்தது. நடந்தவை, கடந்தவை என்று எதையும் அவள் மனதில் போட்டுக் கொள்வதில்லை. அதற்காக அவள் இளம் பிராய அனுபவங்கள், குடும்ப அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் மறந்து போனாள் என்று சொல்வதற்கில்லை. அநியாய ஞாபக சக்தி அவளுக்கு. +2 கணக்கை இப்பொழுது கொடுத்தாலும் உடனே போட்டு  விடை கண்டு பிடித்து நீட்டி விடும் சாமர்த்தியம். பக்கத்து வீட்டுப் பையன் அப்படித்தான் வந்து கேட்டு வாங்கிக் கொண்டு போனான். அதில் அவளுக்கு அத்தனை பெருமை. புத்தி இப்பொழுதும் அவளுக்கு அத்தனை ஷாா்ப்...!

தனக்குத்தான் அத்தனையும் மறந்து மண்ணடித்துப் போய்விட்டது என்று தோன்றியது சபேசனுக்கு. படிக்கிற காலத்திலேயே  பாதிதான் ஞாபகம் வரும். எக்ஸாம் உறாலில் அமர்ந்திருக்கையில் எந்தவொரு கேள்விக்கும் முழுதாய் விடை எழுதியதாய் நினைவில்லை. எத்தனையோ முறை முயன்றுதான் பார்த்தார். படித்தவைகளை முழுசாய் நினைவுக்குக் கொண்டுவரவே முடியவில்லை அவரால். ஐம்பது சதவிகித மார்க் எடுத்துத்தான் பாஸ் பண்ணினார். பின்னாடி படிந்த அவரின் உழைப்புதான் அசுரத்தனமானது. அதனால்தான் அரசாங்க வேலையைப் பிடிக்க முடிந்தது. படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமில்லைதான். கொஞ்சம் கணக்கு, கொஞ்சம் தமிழ், கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தால் போதுமே! அதிக பட்சம் இருநூற்றைம்பது, முன்னூறு வார்த்தைகள் பயன்படுத்துவோமா இந்த வேலையில்? அவ்வளவுதானே நம்ம இங்கிலீஷ்...என்று அடிக்கடி அலுவலகத்தில் சொல்லிக் கொண்டிருப்பார்.

வீட்டில் அவளுக்காகத்தான் இங்கிலீஷ் பேப்பர் வாங்கிப் போட்டார். தமிழ் தினசரி இவருக்கு. அந்த இங்கிலீஷ் பேப்பரை அப்படித் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை இவர். ஜாதிப் பிரஷ்டம். அது என்னவோ சின்ன வயசிலிருந்தே அந்த இன்ட்ரஸ்ட் இல்லாமல் போனது. ஆனால் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறார். ரீகல் டாக்கீஸே அவரைப் போன்றவர்களுக்காகத்தான் கட்டி விட்டிருக்கிறான்.பென்உறர், மெக்கன்னாஸ் கோல்ட், லாஸ்ட்  இன் தி டெஸர்ட், ஃபைவ் மேன் ஆர்மி...என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

 அதற்காக ஆபீசில் வேலை செய்ய முடியாமல் போனதா என்ன? அந்த இங்கிலீஷ் தனி. அதுக்கு கூர்ந்த அவதானிப்பும், அக்கறையான உழைப்பும் போதும். கைவந்து பெரிய ஸ்காலர் ஆகி விடலாம். சூப்பிரன்ட் பார்க்காம எந்த ஃபைலும் வரக்கூடாது, நானா உங்க இங்கிலீஷைத் திருத்திட்டு உட்கார்ந்திரக்கிறது? அவர் கைவச்சாத்தான் டிராஃப்ட் அப்ரூவ் ஆகும்....அலுவலர் கண்டிஷனாகச் சொல்லி விடுவார்.

 அகல்யா தனக்காக ஆங்கிலத்தில் பேசுவதைச் சுருக்கிக் கொண்டு விட்டாளோ என்று தோன்றியது. அவள் வேலையே அப்படித்தான். அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களில் டெலிபோனில் வேலை பார்க்கும்போது ஆங்கிலம்தான் பிரதானம். படு ஃப்ளூயன்ட்டாக இருக்கும் அகல்யாவின் இங்கிலீஷ். பிரமிப்பாய் இருக்கும் இவருக்கு. அவ்வப்போது இவரும் அவிழ்த்து விடுவார். கோபம் வரும்போதுதான் இவருக்கு இங்கிலீஷ் வரும். டு வாட் ஐ ஸே...!

தான் பிறந்த ஊரில் ஒருவர் இருந்தது நினைவுக்கு வந்தது. அந்த ஊரிலேயே சென்னை சென்று சில காலம் வேலை பார்த்துத் திரும்பியது அவர் ஒருவர்தான். பேசும்போதெல்லாம் ஒன்று சொல்வார். படு பந்தாவாய் இருக்கும். வென் ஐ வாஸ் இன் மெட்ராஸ்....என்று அவர் துவக்கும்போதே...ஆரம்பிச்சிட்டான்யா....என்று முனகுவார்கள். அதற்கு மேல் இங்கிலீஷ் வராது அவரிடத்தில். அவருக்கான பட்டப் பெயராகவே அது நிலைத்துப் போனது.

மொழி ஒரு காரணிதானே. பரஸ்பரப் பரிமாற்றத்திற்கான கருவி அவ்வளவே...என்று தத்துவம் பேசி சமாளித்தார். இவருக்குப் புரிந்து கொள்ள முடியும்.  சரசரவெனப் பேச வராது. பழகிட்டா வந்துடும் என்று சாதாரணமாய்த்தான் சொன்னாள். அதற்காக அவள் ஒன்றும் கர்வம்  கொண்டவளாய்த் தெரியவில்லை. ஆங்கிலம் பேசத் தெரியாத கணவன் அமைந்து விட்டானே என்று குறைபட்டுக் கொள்ளவில்லை. கொஞ்சம் கொஞ்சம் பேசறேளே நீங்களும் என்றாள். அப்டியா? என்றிருந்தது இவருக்கு. அது ஒரு பிரச்னையாகவே அவள் நினைக்கவில்லைதான்.அவனோடும், பிறரோடும் சேர்ந்திருக்கும் பொழுதுகளில் அவள் என்றும் ஆங்கிலம் உபயோகித்ததில்லை. அது ஒரு பண்பாட்டின் அடையாளம்தானே!  தனக்குத்தான் போட்டு மண்டையைக் குடைகிறது. அவள் பாண்டித்யத்தை இவர் அழிக்க விரும்பவில்லை. விழுந்து விழுந்து வரி விடாமல் இங்கிலீஷ் பேப்பரை மேய்வதில் இவருக்கு என்றும் பொறாமை இருந்ததில்லை. அப்படி என்னதான் படிக்கிற மூணு நாலு மணிநேரமா? என்று சமயங்களில் கடிந்து கொள்வார். எழுத்தெல்லாம் அழிஞ்சிடப் போகுது என்று கேலி செய்வார்.

அது ஒன்றுதான் அவளுக்குப் பிடித்தது. மற்றப்படி சினிமா..டிராமா.....ஊறீம்....அந்த ஜோலியே ஆஉறாது. கோயிலுக்கா? உற்சாகமாய்க் கிளம்புவாள். முணுமுணு என்று என்னத்தையோ மந்திரத்தை  முனகிக் கொண்டேயிருப்பாள். சுற்றிச் சுற்றி வருவாள். எத்தனை சுத்துதான் சுத்துவா? ஆச்சா...இல்லையா? என்று பொறுமை கழறுவார். இவரைப் பொறுத்தவரை ஒரே கும்பிடு. பெரிய்ய்ய கும்பிடு...போட்டுவிட்டு வந்து அக்கடா என்று அமர்ந்து விடுவார். சுற்றி மறைந்தவள் திரும்பவும் தெரிகிறாளா என்பதை மட்டும் ஒவ்வொரு சுற்றுக்கும் கண்காணித்துக் கொள்வார்.  அவளோ இவர் இருக்கும் திசையையே திரும்பிப் பார்க்க மாட்டாள். இன்னிக்குக் கோயிலுக்கு வந்ததுக்கு ஏதாச்சும் வரத்தை வாங்காமப் போறதில்ல....என்று பிரதிக்ஞை செய்து கொண்டதுபோல் இருக்கும்.....அடிப் பிரதட்சிணம் என்று சமயங்களில் ஆரம்பித்து விடுவாள். உலகமே வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும்போது இவள் அளந்து அளந்து எட்டு வைத்துக் கொண்டிருப்பாள். அவள் நம்பிக்கைகளை யாரும் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.

அம்மா அப்பாவைத் தவிர வேறு எந்தத் தெய்வமும் பெரிதாய்த் தோன்றியதில்லை இவருக்கு. கண் கண்ட தெய்வங்கள் அவர்கள்தான். கோயிலுக்குச் சென்றால் அங்குள்ள சிற்பங்கள்தான் இவர் கண்ணையும் கருத்தையும் கவரும். ஸ்வாமி அலங்காரத்தை ரசிப்பார். கண்ணைத் திறந்து கும்பிடுங்க....மூடாதீங்க....என்று மானசீகமாக எல்லோருக்கும் சொல்வார். அர்ச்சனை முடிந்து தட்டு வந்தவுடன் அந்த வாழைப் பழத்தை உரிப்பார். தேங்காயைத் தரையில் தட்டி உடைப்பார். ஒரு மூடி அர்ச்சகருக்குக் கொடுத்திடு...அப்பத்தான் புண்ணியம் என்று கவனமாய்ச் சொல்வார்....!

மிழ்ப் பேப்பரையே இவர் மேலாகத்தான் புரட்டுவார். தலைப்புதான் பார்ப்பார். உள்ளே புகுந்து என்றும் படித்ததில்லை. அது என்னவோ உலக நடப்புகளெல்லாம் தப்புத் தப்பாய் செல்வதாகவே ஒரு கருத்து ஊன்றிப் போனது இவரிடம். மக்கள் நலனுக்கான தன்னலமற்ற தியாக சீலர் என்று எவரும் இன்று இல்லை என்ற முடிவில் அரசியலும் நாட்டு நடப்பும் வெறுத்தே போனது.

அகல்யாவைப் பார்த்துக் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. அன்று கண்ட மேனி அழியாமல்....என்பதில்தான் வித்தியாசம். செய்யும் வேலைகளில் இன்றும் கொஞ்சம் கூடச் சுணக்கம் இல்லை. ஒரே மாதிரி சீரான வேகத்தோடு இயங்குகிறாள். எட்டரைக்குள்ள சமையல் முடிச்சிருவா என்று நினைத்துக் கொள்வார். அதேபோல் கரெக்டாக அதே நேரத்துக்குக் குளிக்கக் கிளம்புவாள். ஆரம்பத்தில் விடிகாலையில் குளித்து விட்டுத்தான் அடுப்பையே மூட்டுவாள். போகப் போக அது முடியாமல் போனது. வேலைக்குப் போற இடங்கள்ல அப்படித்தான்....விடு...விடு...என்றார் இவர். என்னவோ அவளுக்கு இவர் சலுகை செய்வது போல. விசேட நாட்களுக்கு மட்டும்தான் குளித்து சமையல் மற்றும் லீவு நாட்களில்.

அவள் செய்யும் பாயாசம் மற்றும் வடை நைவேத்தியத்திற்காகவே விசேட நாட்கள் அடிக்கடி வராதா என்று மனது ஏங்கும்.. அன்றெல்லாம் மண்டை வெல்லம் உடைத்துக் கொடுக்க, ஏலக்காய் உரித்துப் பொடிக்க என்று காத்திருந்து செய்து கொடுப்பார். எப்பொழுதடா பூஜை முடியும் என்று நாக்கைத் தீட்டிக் கொண்டு காத்திருப்பார். ஆரம்பத்தில் அவள்தான் பூஜை செய்தாள். பிறகு இவரைச் செய்யச் சொன்னாள். ஏதாச்சும் ஸ்லோகங்கள் படிச்சிக்குங்கோ...தெரிய வேண்டாமா...வயசாறதில்லையா? என்றாள்.

நான் என்னத்தக் கண்டேன்...ஆத்தக் கண்டேனா...அழகரச் சேவிச்சேனா...என்றார் இவர். வறுமையும் பசியும்தான் எங்களுக்கு ஸ்லோகம். அது நிரந்தரமா இருக்கைல வேறே என்ன மைன்ட்ல வரும்? பசித்திருப்பவனிடம் கடவுளைப் பற்றிப் பேசாதே..முதலில் அவன் பசியைப் போக்கு....என்றார் விவேகானந்தர்.  ஆனால் அவள் சொன்னது ஒரு பக்கம் உறுத்தத்தான் செய்தது. சின்ன வயதில் அம்மா சொல்லிக் கொடுத்தது கொஞ்சம் கொஞ்சம் நினைவிலிருந்தது. கஜானனம் பூத கணாதி சேவிதம்...கவித்த ஜம்பு பலசார பட்சிதம்.....-அட...வருதே...! என்று அவருக்கு அவரே ஆச்சரியப்பட்டுக் கொண்டு சொல்லிப் பார்த்தார். ஆயுர்தேஉறி...தனந்தேஉறி...வித்யாந்தேஉறி...மஉறஸ்வரி...சமஸ்தம் அகிலாந்தேஉறி....தேஉறிமே பரமேஸ்வரி.....அதுக்குத்தான் சின்னப்புள்ளைலயே மண்டைல ஏத்தணும்ங்கிறது....! இப்ப புதுசாப் படின்னா எப்டி ஏறும்? சினிமாவும், பாட்டும்தான் ஞாபகத்துல இருக்கு...தனக்குத்தானே நொந்து கொண்டார்.

எந்தப் பழைய சினிமாப் பாட்டுக் கேட்டாலும் அது இந்தப் படம் என்று டக்கென்று சொல்லி விடுவார். இசையில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. பல்வேறு பாடகர்களின் விதவிதமான குரல்களை ஆழ்ந்து ரசிப்பார்.சி.எஸ்.ஜெயராமனின் குரலில் அப்படி ஒரு மோகம். அவர் பாடல் பூராவும் பதிந்து வைத்திருக்கிறார். அன்பாலே தேடி என் அறிவுச் செல்வம் தங்கம்....அம்புவியின் மீது நான்.... என்று அனுபவித்து நாக்கைக் குழைத்து இவரும் பாடுவார். யாராவது பாடச் சொன்னால் வராது. அவராகத் தன் ரசனையில் பாடும்பொழுது கேட்டுக் கொள்ள வேண்டும். ஓவியம் கலைந்ததென்று...ஓவியர்கள் வெறுப்பதில்லை.....உருக்குலைந்த கோட்டையினை சரித்திரம் மறப்பதில்லை....என்று டி.எம்.எஸ்.ஸின் சோகக் குரல் அப்படியே  சுருதி பிசகாமல் வழியும் இவரிடம்....!

க்ளாசிகல் பேஸ்டு சாங்....எது எது என்று குறித்து வைத்துக் கொண்டிருந்தார். அவற்றில் ஒரே ராகத்தில் உள்ள வெவ்வேறு படங்களின் பாடல்களைப் பொருத்திப் பார்ப்பார். அதற்குரிய பிரபலமான கர்நாடக சங்கீதப் பாடலையும் கேட்டு ரசிப்பார். இன்றும் ஓரிரு வரிகள்தான் குறிப்பிட்ட ராகத்தில் சினிமாப் பாட்டில் நுழைகின்றன..அது போல்...இது போல்...என்பதாய்த்  தோன்றும் இவருக்கு. கர்ணன் படப் பாடல்கள் அத்தனையும் க்ளாஸிகல் பேஸ்டு சாங்க்ஸ் என்று சொல்லி ராகங்கள் அத்தனையையும் மனப்பாடமாக வைத்திருந்தார்.

தினமும் காலையில் வாக்கிங் போகும்போது காதில் ஏர்.ஃபோனைச் செருகிக் கொண்டு தியான ஸ்லோகத்தைக் கேட்டுக் கொண்டே போனார். அது மிகவும் நீளமாக, குறைந்தது பதினைந்து நிமிடத்துக்கு மேல் ஓடுவதாய்த்தான் இருந்தது.  விடாப்பிடியாய் தினமும் கேட்டார். ரெண்டு ரெண்டு வரியாய்ச் சொல்லிப் பார்த்தார்.  மனப்பாடம் ஆகிவிட்டது. சம்ஸ்கிருதம் என்பதால் உச்சரிப்பு ஸ்பஷ்டமாய் இருக்க வேண்டும் எனத் திருத்தமாய்ச்  சொல்லிச் சொல்லிப் பழகினார். “நாங்க பழக வந்திருக்கோம்“ என்று சினிமாக் காட்சியும் இடை இடையில் வந்து மோதத்தான் செய்தது. ஒதுக்கி விட்டுத்தான் சொல்லிப் பழகினார்.   ஓம்....சுக்லாம் பரதரம் விஷ்ணும்...சசி வர்ணம் சதுர்புஜம்....என்று ஆரம்பித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

தனிமையில் இருந்து எதையும் செய்தாரென்றால் சபேசன் தன்னை ஒரு நடிகர்திலகம் என்று மனதிற்குள் வரித்துக் கொள்வார். எது செய்தாலும் சிவாஜியின் அடையாளம் அவரிடம் படிந்திருக்கும். சரஸ்வதிசபதத்தில்...சரஸ்வதிதேவியின்முன்அமர்ந்துஅம்...மா.....அப்....பா....ஓசை...ஒலி...சப்தம்...நாதம்...எழுத்து...சொல்....என்று மெல்ல மெல்லப் பேசி...அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி....என்று உணர்ச்சி பொங்கப் பாடுவாரே அது  போல் படிக்கும் தியான ஸ்லோகத்தை  சம்மணமிட்டுக் கொண்டு வார்த்தை வார்த்தையாய்ச் சொல்லிப் பார்த்தார் சபேசன். அப்படியே மனதில் நின்று விட்டது. நம்மகிட்டயும் கொஞ்சம் பவர் இருக்கத்தான் செய்யுது...என்று நினைத்துக் கொண்டார்.

அந்த வருட நவராத்திரி கடைசி நாளான சரஸ்வதி பூஜையின்போது ஸ்வாமி முன்னால் அமர்ந்து தியான ஸ்லோகத்தைக் கருத்தாக உச்சரித்தார். மொத்த ஸ்லோகத்திலும் ஒரு இடத்தில் கூட உச்சரிப்பு தவறி விடக் கூடாது என்பதற்காகக் கண்களை மூடிக் கொண்டு சொன்னது கவனத்தை ஒருங்கிணைத்து லயிக்க வைத்தது. அது முதல் விசேட நாள் பூஜைகளை வீட்டில் அவர்தான் செய்து வருகிறார். அதில் அகல்யாவுக்கு அவ்வளவு பெருமை. இன்னிக்கு நல்ல நேரம் எப்பன்னு பார்த்து வச்சிக்குங்கோ...அதுக்குள்ளேயும் சமையலை முடிச்சு, பூஜை நைவேத்யங்களைப் பண்ணி கொண்டு வச்சிடுறேன்.  வேணுங்கிற வெத்தல, பாக்கு பழம், சூடம், உதிரிப் புஷ்பம்  எல்லாம் தயாராய் எடுத்து வச்சிக்குங்கோ...சுவாமி படங்களுக்குப் பொட்டு வச்சு...பூ வைங்கோ.... என்று அக்கறையாய் அவள் சொல்வதும் பூஜைக் காரியங்களில் முழுமையாக ஈடுபடுவதும், அவரையும் அம்மாதிரி சுப காரியங்களில் லயிக்க வைத்து விட்டது. ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி....! என்று தானே அப்பொழுதுதான் அரிச்சுவடி அறிந்ததுபோல் உணர்ந்தார்.

அப்டி இப்டின்னு என்னையும் ஒரு பண்டாரம் மாதிரி ஆக்கிட்டியேடீ....என்று சமயங்களில் தமாஷாக அலுத்துக் கொள்வதும் உண்டுதான். உள்ளூர ஒரு சந்தோஷமும் திருப்தியும். பஞ்சகட்சமும், வஸ்திரமும் உங்களுக்கு எவ்வளவு பொருத்தமா இருக்கு? வியட்நாம் வீடு பிரஸ்டிஜ் பத்மநாபய்யர் போல...! என்று அவள் சொன்னது கிர்ர்ரென்று இவர் தலைக்கு ஏறி விட்டது. அதற்குப் பின் அவளோடு ஒத்துழைப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டார் சபேசன். அதில்தான் மீதி வாழ் நாளின் திருப்தி அடங்கியிருப்பதாய்த் தெரிந்தது.

ன்றுமே அவளை வீட்டுக் காரியங்களில்,  சமையலில் ஒத்தையாய் விட்டதில்லை இவர். காய்கறிகளைக் கரெக்டாக நறுக்கிக் கொடுத்து விடுவார். தேவையான பாத்திரங்கள் சில பற்றில் கிடந்தால், அதைத் தேய்த்து வைத்து விடுவார். எதெது உடனுக்குடன் தேவை என்பது அவருக்கும் தெரியும். அந்தந்தப் பாத்திரங்களைத் தேய்த்து, கைக்கெட்டுவதுபோல் அடுக்கி விடுவார். தடங்கலில்லாமல் பாத்திரங்கள் கைக்கு வந்தால்தான் சமையல் விறுவிறுப்படையும் என்பது அவருக்கும் தெரியும். தேங்காய் கீற்றுவது, மிக்ஸியில் போடுவது, சிறு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேடையில் கைவாகாக வைப்பது என்று அவள் பதற்றத்தைக் குறைக்க முயல்வார். அவள் ஒன்றும் பதறியதாகத் தெரியவில்லைதான். இவருக்குத்தான் அப்படித் தோன்றும். நீங்க போய் பேப்பர் படிங்கோ...நான் பார்த்துக்கிறேன்...என்று அவள் சொன்னால் சற்று வருத்தப்பட்டுக் கொள்வார். ஏன்...நான் நிக்கிறது பிடிக்கலையா? என்று கூடக் கேட்டிருக்கிறார். நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணுவேனோன்னு நினைக்கிறியா? அட ஏண்டி...இந்த வயசுல...? என்று கேட்டு விலகி விடுவார். வேலைக்கு நடுவில் அவளைப் பார்க்கையில் கொஞ்சம் சபலம் தட்டத்தான் செய்யும். அதைத்தான் புரிந்து அவள் இப்படிச் சொல்கிறாள் என்பதை இவர் உணர்ந்து கொண்டார்.

அகல்யாவிடம் ஒரே ஒரு குறை. குழம்பு, ரசம், கூட்டு, கறி என்று எதிலும் உப்புத் தெரியாது. தேவைக்கும் மிகக் குறைவாகவேதான் இருக்கும்.. ப்பி.பி மாத்திரை சாப்பிடுவதால் உப்புக் குறைச்சலாய்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற டாக்டரின் ஆலோசனைப் படி அவள் கை அந்த அளவுக்குத்தான் நீண்டது. அவளை விட அஞ்சு வயசு பெரியவனாச்சே...என்று இவரும் அந்த ருசிக்குப் பழகிக் கொண்டார். எதனாலேயும் அவள் வேகம் குறைந்ததேயில்லை. சீரான செயல் அது. பதற்றமில்லாதது. நியமங்களை நிறைவேற்றுவதில் அவளுக்கிருந்த நிதானம் போற்றுதற்குரியது.

      தன்னிடம்தான் சோர்வு தென்படுகிறது. பல சமயங்களில் கவனம் சிதறிப் போகிறது. எதுவும் செய்யாமல் முகட்டைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது என்பது இப்போது சர்வ சகஜமாகியிருக்கிறது. அவரால் இளம் பிராய அனுபவங்களிலிருந்து மீளவே முடியவில்லை. அப்பாவும் அம்மாவும் பட்ட கஷ்டங்கள் இப்போதும் நினைவில் வந்து கொண்டேயிருக்கின்றன. அரிசிக் கடைக்கும், பலசரக்குக் கடைக்கும் பையைத் தூக்கிக் கொண்டு அலைந்ததும், கடன் தர மறுத்து வெறும் கையோடு திரும்பியதும் அவரின் நினைவிலிருந்து அழிக்க முடியாத சித்திரங்களாகி விட்டன. அம்மா மூஞ்சி அடிக்கடி கண் முன் வந்து (மறந்தால்தானே நினைப்பதற்கு!) அவரைக் கலங்கடித்துக்கொண்டுதான் இருக்கிறது. வாடகை வீட்டு ஓனர் ராமண்ணா இல்லத்தைத் தாண்டிச் செல்லும்போது அவர் திண்ணையில் உட்கார்ந்திருப்பாரோ என்று மனம் பயம் கொள்ளும். வாய் திறந்து கேட்டு விடுவாரோ என்றும் தோன்றும். ஆனால் அதிலும் ஒரு ஒழுங்கு இருந்தது. அப்பாவிடம்தான் அவர் வாடகை பாக்கியைக் கேட்பார். இவர்களை லட்சியம் செய்ய மாட்டார். தரேண்ணா...கொஞ்சம் பொறுத்துக்குங்கோ...இது அப்பாவின் பதில். அந்த வார்த்தைதான் அவருக்குத் தேவை.

      அப்பா கொண்டு வரும் கொஞ்சூண்டு சம்பளப் பணத்தில் எப்படிக் கஷ்டப்பட்டுக் குடும்பம் நடத்தியவள் அம்மா. இந்தத் துட்டை வச்சிண்டு நான் எத்தனைக்குத்தான் முழம் போடுவேன்...என்று அவள் அலுத்துக் கொண்டது உண்மைதான். ஆனால் அதைத் தாண்டி அவள் இம்மி கூடச் சென்றதில்லை. கமலா மாமியாத்து சாம்பார்...சுட வச்சிருக்கேன்...நன்னாயிருக்கும் சாப்பிடு...என்று ஊற்றிய சாம்பாரில்தான் அவர்கள் முதன் முதலில் பருப்பைப் பார்த்தது. மாமி...சாம்பார் கொஞ்சம் மிஞ்சிடுத்து....எடுத்துப்பேளா....ஊசாம நன்னாயிருக்கா பாருங்கோ...வீணாப் போகுமேன்னுதான்....என்று தயங்கித் தயங்கி கமலா மாமி கேட்க...அதனாலென்ன மாமி...குடுங்கோ...கொண்டு போறேன்...என்று வாங்கி வருவாள். கடன் வாங்கும் குடும்பம்தானே என்று கீழாய் நினைத்ததில்லை அவர்கள். அந்தக் காலம் வேறு. ஒரு குடும்பம் கஷ்டப்பட்டு எப்படி முன்னேறுகிறது என்பதைக் கண் கொண்டு பார்த்துப் பாராட்டினார்கள். சரிக்குச் சமமாய் நினைத்தார்கள். காசு மட்டும் வைத்திருப்பவர்கள் உயர்ந்தவர்கள் ஆகி விட மாட்டார்கள் என்று மனிதனை மனிதன் மதித்த காலம்.

      கப்பலோட்டிய தமிழன் படத்தில் பாரதியின் துணைவியாய் வரும் செல்லம்மாதான் இவர் மனதில் தோன்றும். பக்கத்தாத்துலர்ந்து கடன் வாங்கி வச்சிருந்தேன். அம்புட்டு அரிசியையும் இப்டிக் குருவிகளுக்குப் போட்டுட்டேளே...! எனும் அந்தக் குரல் இவருக்கு அச்சு அசலாக அம்மாவை ஞாபகப்படுத்தும்.

      காமாலை இறக்கப்போனேன். பெரியாத்துல குடுத்தா...இந்தாடீ ருக்கு....இந்த மாவை எடுத்துக்கோ...குழந்தேளுக்கு இட்லி வார்த்துக் குடு....ரொம்ப நாளாச்சு இட்லியக் கண்ணால பார்த்து....என்று தன் விருப்பத்தையும் சேர்த்தே சொல்வாள்  பாட்டி. மந்திரித்து மந்திரித்து மஞ்சக் காமாலை இறக்குவாள். ஒரு சின்னக் குடம் நிறைய மஞ்சள் கரைத்த தண்ணியை மந்திரம் சொல்லி உரு ஏற்றி, காமாலை வந்தவர்களுக்குத் தெளித்து, உடம்போடு தடவி, தரையில் இறக்கி, தட்டோடு கவிழ்த்து வைத்து விட்டு வருவாள். அஞ்சு, ஒன்பது என்று நாள் கணக்கு உண்டு. அதிக பட்சம் பதினாலு. ஒட்ட இறங்கி விடும் காமாலை. என்ன அதிசயமோ? பாட்டி வைத்தியம் பிரபலம். அந்த மந்திரித்த மஞ்சள் தண்ணி தட்டில் மெல்ல மெல்ல இறங்க இறங்க...காமாலை காணாமல் போகும். படிப்படியாக இப்படிப் பலருக்கும் வைத்தியம் பார்த்து...தன் உடம்பை உருக்கிக் கொண்டாள் மரகதம் பாட்டி.

காமாலை இறக்கி இறக்கி...உங்க உடம்புல வாங்கிக்கிறேளே பாட்டி....நாளைக்கு நீங்க படுக்கைல விழுந்தேள்னா நாங்க என்ன பண்ணுவோம்...எங்க பாடு திண்டாட்டமாப் போயிடுமே...என்று அக்ரஉறாரமே வருந்தியதுதான். அதுபோலவே பாட்டியும் ஒரு நாள் போய்ச் சேர்ந்தாள். ஊரே துக்கம் விசாரித்தது. நாலு அக்ரஉறாரமும் வந்து அஞ்சலி செலுத்தியது பாட்டிக்கு. காமாலையில் பிழைத்தவர்கள் காடு வரை வந்தார்கள். தகனம் முடியும்வரை நின்றார்கள்.

      பாட்டீ...என் பேரன் மூணு நாளாக் கண்ணே திறக்காம இருக்கான்...என்னன்னு வந்து பாருங்கோளேன்...என்று வீட்டு வாசலில் வந்து அழாக் குறையாய் நின்றவர்கள் அநேகம். ஒண்ணுத்துக்கும் கவைலைப்படாதே...நா இருக்கேன்....நா வந்து உன் பேரனை எழுப்பித் தரேன்...இதோ புறப்டாச்சு....என்று ஓடுவாள் மரகதம் பாட்டி. அவர்கள் எல்லோரும் கொடுத்த காசிலும், கடனிலும், ஆதரவிலும்தான் குடும்பம் ஓடியது. . ஆனால் எந்தக் காலத்திலும் நெறி பிறழ்ந்ததில்லை. அந்த ஒழுக்கமும் சீலமும்தான் இன்றும் முன் நின்று காப்பாற்றுகிறது.

இந்தப் பூர்வ கதையெல்லாம் அவள் அறிய மாட்டாள். ஆனால் பையன் எப்படி? என்று அவர்கள் விசாரித்த விதம்தான் அநேகம். எல்லாத் துறைகளும் ஒருங்கிணைந்த கூட்டத்திற்குச் சென்ற இடத்திலெல்லாம் அலுவலரிடம் தன் பெயரைச் சொல்லி பையன் எப்படி? பொறுப்பானவனா? ஒழுக்கமானவனா? நன்றாய் வேலை பார்ப்பானா? தீய பழக்கங்கள் இல்லாதவனா? என்றெல்லாம் விசாரித்ததும், குறைந்தது பத்துப் பதினைந்து பேர் வந்து தனக்குத் தெரிந்தும் தெரியாமலும்   கேட்டுப்போனதும் என்ன சபேசன்.....ஏன் இவ்வளவு பயந்து பயந்து விசாரிக்கிறாங்க...? சென்னைலர்ந்து ஆள் வந்த மணியமாத்தான் இருக்கு....என்று அலுவலர் அவரிடம் கேட்டதும்....இன்றும் மறக்க முடியாதவை. அவள் சகோதரிக்கு நிகழ்ந்த மண முறிவுதான் அவர்களை இந்த அளவுக்குத் தீவிரமாய் விசாரிக்க வைத்திருக்கிறது என்பது பின்னால்தான் தெரிந்தது. தப்பில்லை என்று தோன்றியது.

       தனது முப்பத்தைந்தாவது வயதில் அகல்யா தன்னிடம் வந்து சேர்ந்ததை சபேசன் நினைத்துக் கொண்டார். அன்று முதல் அவள் தனக்காகவும், அந்த வீட்டுக்காகவும்தான் காரியமாற்றுகிறாள். பிறந்து, வளர்ந்து, ஓடியாடி, படித்து, ஊர்சுற்றி, வேலைக்குப் போய் பல்லாண்டுகளாய் தனக்குப் பழகிய பிரதேசத்தை, நகரத்தை  விட்டு அவருக்காக அவள் வந்து விட்டாள். ஏன்...நீங்க இங்க மாறுதல் வாங்கிட்டு வந்திடுங்களேன்...என்று ஒரு வார்த்தை அவள்  வீட்டில் யாரும் கேட்கவில்லை. வீடெல்லாம் பார்த்து அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணியாச்சு....சாமான் செட் எல்லாம் வாங்கிப் போட்டாச்சு....அப்படியே நுழைஞ்சு தீபம் ஏத்தி சாமி கும்பிட்டுட்டு  சமையல் வேலையை ஆரம்பிக்க வேண்டிதான்....என்றார் சபேசன். மனதுக்குள் அவ்வளவு உற்சாகம். ஆனால் அவளிடம் அந்தத் துள்ளல் என்பது இல்லை. அந்தச் சின்ன வயசில் அவ்வளவு அடக்க ஒடுக்கம்.  ரொம்பவும் நிதானமாக செயல்பட்டாள். மிகுந்த பொறுப்போடு வளர்க்கப்பட்ட பெண்ணாகத் தெரிந்தது.

சபேசன்....உங்க ஒய்ஃப்பிட்ட ஒரு ஃபேமிலி லுக் இருக்கு...அது ரொம்ப லட்சணம்...என்றார் வெங்கடாத்திரி. அலுவலகப் பொறியாளர். பாசமானவர். இஷ்டமாய் ஒவ்வொன்றும் விசாரிப்பார். குடும்ப விவகாரங்களில் ரொம்ப ஈடுபாடு. ஆனால் அவருக்கு அமைந்ததுதான் சரியில்லை. ஒருவேளை அந்த பாதிப்பேதான் இந்த ஈடுபாட்டைக் கொண்டு வந்திருக்கிறதோ என்னவோ?.

      ஊரை விட்டுத் தள்ளிக் குடியிருந்தார். விமான நிலையம் தெரியுமா? அந்தப் பக்கம் என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார். அம்புட்டு தூரத்திலயா வீடு கட்டினீங்க...? என்று இவர் கேட்க...அது என் மாமனார் வாங்கிப் போட்டிருந்த இடம். எடுத்துக்குங்கன்னார். லோனப் போட்டு மள மளன்னு  ஏத்திட்டேன்....இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகிட்டிருக்கு....என்று சொன்னார். அவர் பகுதியில்தான் ஒரு கொலை விழுந்தது ஒரு முறை. அதுவும் ஒரு வார்டு கவுன்சிலர் பெண்ணை வெட்டிச் சாய்த்து விட்டார்கள்.  வீட்டுக்கு வீடு தண்ணீருக்கு வசதி செய்ததால் தங்கள் லாரித் தண்ணி பிழைப்புப் போச்சு என்று பெண்ணென்றும் பார்க்காமல் இந்தக் கொலை பாதகத்தைச் செய்து விட்டார்கள் பாவிகள். அது ஊருக்குள்ள நடந்தது...நான் தள்ளியில்ல இருக்கேன்...என்பார் வெங்கடாத்திரி. அவர் பகுதி கொலை அவரைச் சிறிதும் பாதித்ததாகத் தெரியவில்லை. ஒரு முறை இதுபற்றிக் கேட்டபோது....நானே என்னிக்குக் கொலை செய்யப் போறனோ தெரில....என்று சொன்னார். அவர் தைரியம் பற்றித் தெரியாதா?.

      அப்படீன்னா உங்க ஒய்ஃப் தனியா இருப்பாங்களே...பயமில்லையா? என்றால் அதெல்லாம் ஒரு பயமுமில்லை. அவளப் பார்த்து யாரும் பயப்படாம இருந்தாப் பத்தாதா? என்பார் பதிலுக்கு. அவருக்கும் மனைவிக்கும் ஏழாம் பொருத்தம். அவர் மாடியில்...அந்தம்மா கீழே. சாப்பிடும் நேரத்துக்குப் படியிறங்கி வருவார். மேஜையில் எல்லாம் வைக்கப்பட்டிருக்கும்.எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பாடு முடித்து திரும்பவும் மேலேறி விடுவார். ஒரு பையன்...அவனும் மரைன் இஞ்சினியர். ஆறு மாசத்திற்கொரு முறை வந்து இருக்கீங்களா என்று எட்டிப் பார்த்து விட்டுப் போவான். கப்பலிலேயே கழிந்தது அவன் காலம். அதிலேயே ஒரு பெண்ணையும் பிடித்துக் கொண்டு விட்டான். வல் மேரேஜ்.  ஸாரி...ஸாரி...லவ் மேரேஜ்...ஃபாஷனாக அப்படிச் சொல்லிக்கொண்டுதானே இப்போதெல்லாம் அலைகிறார்கள். அப்பனும் ஆத்தாளும் இந்த லட்சணத்துல இருந்தா...பிள்ளைக என்ன செய்யும்? அது தன் வழியப் பார்த்திட்டுத்தானே போகும்....? போய்ட்டான்.....!

      கல்யா குடும்பக் குத்து விளக்கு. பூஜை ரூம் எதற்கு....தினமும் அவளைக் கும்பிடலாம் என்று தோன்றும். ஒரு வயதுக்கு மேல் மனைவி கடவுளுக்கு சமானமாகிவிடுகிறாள்தானே? அவருக்கு எப்போதோ இது தோன்றி விட்டது.  வகிடெடுத்துத் தலைவாரிக் கொள்வது, பொட்டு வைத்துக் கொள்வது, வகிடு ஆரம்பிக்கும் இடத்தில் பளிச்சென்று தெரிவதுபோல் குங்குமம் பதித்துக் கொள்வது, சீராக  திரேகம் மறைத்துப் பாங்காய்ப் புடவை உடுத்திக் கொள்வது என்று அவளது ஒவ்வொரு அசைவையும், செயலையும் கூர்ந்து கவனித்தார் இவர். ஒரே ஒரு முழம் மல்லிகைப் பூ. அதற்கு மேல் வைக்கப் பிடிக்காது அவளுக்கு. வளையமாகப் போட்டுக் கொண்டு முன் பக்கம் தொங்கவிடுதல் என்பதெல்லாம்  அறவே இல்லை. மெட்ரோபாலிட்டன் சிட்டியில் இருந்து வந்தவள் என்கிற அடையாளம் ஏதுமில்லை அவளிடம்.  இந்த மடிப்பைக் கொஞ்சம் சரி பண்ணி விடுங்களேன் என்பாள் சமயங்களில். புடவை முன் மடிப்பு நான்காய் விலகி நிற்கும். அவற்றை ஒன்று சேர்த்து அயர்ன் பண்ணியது போல் இழுத்து விடுவார். இவர் சரி பண்ணியபிறகு செருகிக் கொள்வாள். அப்படியே வாரி அணைத்துக் கொள்ளலாம் போலிருக்கும் அந்த நிமிடம். மனுஷன நிம்மதியில்லாம அடிக்கிறதே இந்தப் பொம்பளைங்கதானே...!

      எல்லோரோடும் சகஜமாகப் பழகுதலும், சிரித்து மகிழ்தலும், ஒன்றாக எதிர்த் தரப்பு சென்ட்ரல் எக்ஸைஸ் கேன்டீனுக்குப் போவதும் வருவதும் என்று கலந்துகட்டித்தான் இருந்தாள். ஆனாலும் தனக்கான ஒரு தனித்தன்மையை, ஒரிஜினாலிட்டியை விட்டுக் கொடுக்காமல் பராமரிக்கும் திறன் அவளிடம் இருந்ததுதான். அஞ்சே முக்கால் ஆபீசுக்கு...அஞ்சு மணிக்கே பலரும் இறங்கிப் போவதைப் பார்த்திருக்கிறார். இவர் அவளுக்குப் ஃபோன் பண்ணுவார். நில்லுங்கோ...வரேன்...என்று சொல்வாளே தவிர ஒரு நாள் கூட அலுவலக நேரம் முன்பாக அவள் கீழே இறங்கியதில்லை. மற்ற பெண்கள் அத்தனை பேரும் போயிருப்பார்கள். இவள் ஆறு மணி போலத்தான் சாவகாசமாய் வருவாள். எந்தச் சலனத்திற்கும் ஆட்படாத திடமான மனசு....போனாப் போகட்டும்...அப்டியெல்லாம் வர முடியாது...இதுதான் அவள் பதில். வேலையில் அத்தனை சின்சியர். அடேங்கப்பா...!

      ந்தப் பாத்திரங்களெல்லாம் போறாது...ஒவ்வொரு காரியத்துக்கும் என்னென்ன வேணும்னு நினைச்சுப் பார்த்து வாங்கணும்....என்று அவள் அக்காள் சொன்னபோது சரி என்று மூவரும் கிளம்பினார்கள். தங்கைக்கு தனிக் குடித்தனம் அமைத்துக் கொடுப்பதில்  அக்காவின் அக்கறை இவனை ஆச்சரியப்படுத்தியது. பாத்திரக் கடையில் நுழைந்து வகைக்கு மூணு நாலு என்று அவர்கள் வாங்கியபோது வாயை மூடிக்கொண்டு வேடிக்கைதான் பார்த்தார். பாதிப் பாத்திரக் கடை வீட்டுக்கு வந்து விட்டது.

      தடங்கலில்லாம கரண்டி, அடுக்கு, வட்டை, டம்ளர்னு இருந்தாத்தான் சுணக்கமில்லாம வேலை செய்ய முடியும்...பால் காய்ச்சிர ஏனம்னா அதுல நாலு இருக்கணும். குறைஞ்சது மூணாச்சும். அதனால இதெல்லாம் ஜாஸ்தின்னு நினைக்காதீங்கோ...பற்றுப் பாத்திரம் அதிகம் விழுந்தா வேலைக்காரி வச்சிண்டு தேய்ச்சிக்கலாம். நீங்க ரொம்பச் சிக்கனம்தான்...எனக்குத் தெரியும். ஆனாலும் அகத்துக் காரியங்கள்ல அதைக் காட்டப்பிடாது. சுங்கம் பிடிக்கப்படாது.  தாராளமா இருக்கப் பழகிக்கணும்...சரியா...?

இவர் எதையும் குத்தமாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் வீட்டின் தேவைகளை அவர் நன்கறிவார். எங்கப்பா அம்மாவோட சேர்ந்திருந்த வாழ்க்கைல நான் கற்றுக் கொள்ளாததா? என்று நினைத்துக் கொள்வார்.

      ஒரு மாசம் வரை இருந்துவிட்டு அகல்யாவின் அக்கா கிளம்பிப் போயாயிற்று. சின்னஞ்சிறுசுக...நான் எத்தனை நாளைக்கு ஒண்டின்டு இருக்கிறது...? தோன்றியிருக்கலாம். இதுவரைக்கும் அவ எங்கள விட்டிட்டு இருந்ததேயில்லை. இப்பத்தான் தனியா  விட்டுட்டுப் போறேன். என் தங்கையைக் கண்கலங்காம, சந்தோஷமா வச்சிப்பேள்னு நினைக்கிறேன்....உங்க மேல எங்களுக்கு நல்ல நம்பிக்கை உண்டுதான்....இருந்தாலும் ஒரு பேச்சுக்கு, மனச் சமாதானத்துக்குச் சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்கோ... என்று வீட்டிலும், பிறகு ரயிலடியிலும் நீலாக்கா சொன்னதும், இவள் வண்டி நகர நகர சொரியச் சொரிய அழுததும், கொஞ்ச தூரம் ஓடிப் போய்க் குனிந்து பார்த்து டாடா சொன்னதும், கை காண்பித்ததும், ரொம்பவும் கலங்கடித்தது.

      அவளும் ஓட்டி விட்டாள்  முப்பதாண்டுகளை. ஒரு பையனுக்குக் கல்யாணம் முடித்து அவனும் இப்போது சென்னையில் குடித்தனம். அவனோடவே போய் இருந்திடுவோமே என்று சொந்தமாக சென்னையில் ஒரு அடுக்கக வீடு வாங்கும் யோசனையை அவள்தான் முன் வைத்தாள். அந்தப் பெண்ணும் அம்மா...நீங்க ரெண்டு பேரும் எங்களோடவே வந்திடுங்கோளேன்...எதுக்குத்தனியா இருக்கணும் என்கிறது. எல்லாம் காலம் கொடுத்த கொடை. பெற்றோர்கள் ஆசீர்வாதம்...

      வேலைக்குப் போன பிறகு வீட்டுச் சாப்பாடுங்கிறதே அவனுக்கு இல்லாமப் போச்சு. படிக்கிறதுக்குன்னு காலேஜ் போய் உறாஸ்டல்ல இருந்து உடம்பைக் கெடுத்துண்டுட்டான். அப்புறம் வேலைக்குப் போயாச்சு...கல்யாணமும் பண்ணியாச்சு....என் கையால சமைச்சுப் போட்டு அவன் சாப்பிட்டதா எனக்கு அறவே  ஞாபகம் இல்லை....அந்தப் பொண்ணும் நம்ம பெண்ணாட்டம் சொல்றது...வந்திடுங்கோன்னு...அவாளோட போய் மீதிக் காலத்தை அவாளுக்குன்னு இருந்து செய்து கழிச்சிட்டுப் போவோமே...என்ன நஷ்டம்? குறைஞ்சா போறோம்? எப்படிச் சிந்திக்கிறாள்? சரியாய் வருமா?

      கேட்டு விட்டாள். அவளின் இஷ்டம் புரிந்து போனது இவருக்கு. அதை மீறி இதுநாள் வரை எதுவுமே செய்ததில்லையே...பின் இதை மட்டும் எப்படி மறுப்பது? ஏன் மறுக்க வேண்டும்?

      கடைசி காலத்தில் கொஞ்சம் தனியாய் இருக்க வேண்டும் என்கிற ஆசை உண்டுதான் அவருக்கு. ஏதோ கோயில் குளம்னு போனோம், ஒரு கச்சேரிக்குப் போனோம். சினிமாவுக்குப் போனோம் (அவ எங்கே வரப்போறா) .அப்டியே கிளம்பி ஒரு ஓட்டல்ல போய் உட்கார்ந்து நாலு இட்லியை முழுங்கினோம்.(அவளுக்கு சப்பாத்தி குருமாதான் இஷ்டம்).நிம்மதியா வீடு வந்து சேர்ந்தோம்னு இருக்குமே...அந்தச் சின்ன ஆசை கூட நிறைவேறாதோ? அதையும் விட்டுக் கொடுத்திற வேண்டிதானா? இவ்வளவு ஆவலாகச் சொல்கிறாளே? அவளோட இந்தக் கடைசி கால விருப்பத்தை மறுக்கணுமா? தேவையில்லாம முறுக்கிக்கணுமா? அப்டி முறுக்கிண்டு நின்னு அதனால என்னதான் லாபம்? போடா சொக்கான்னு  தனியா விட்டிட்டுப்  போய்ட்டான்னா? அப்புறம் ஒத்த மரத்துக் குரங்கு கணக்கால்ல நிக்கணும்?  அவ மனசு கோணாம இதையும்தான் செய்திட்டுப் போவோமே? என்ன கெட்டுப் போறது?  முடிவு செய்து கொண்டார் சபேசன்.

நான் என்னோட ஐட்டமெல்லாம் இந்த சூட்கேஸ்ல அடைச்சாச்சு... இனிமே நீங்கதான் உங்களோடத ரெடி பண்ணிக்கணும்....என்று வந்து நின்றாள் அகல்யா.

முதலில் அவளைக் கொண்டுபோய் பையனோடு சேர்த்து வைத்து விட்டுத் திரும்பி வந்து அடுத்த ரௌன்ட்ல சாமான்களை பேக் பண்ணி அனுப்பும் வழியைப் பார்ப்போம் என்று முடிவு செய்து கொண்டார் சபேசன்.  

                        --------------------------------------------------------

 

 

     

 

படிமம்   - சிறுகதை  -தினமணிகதிர் பிரசுரம்- உஷாதீபன்       

       மாடியிலிருந்து தரை தளத்திற்கு வந்திருந்த சுசீலா  சட்டென்று புடவைத் தலைப்பை எடுத்து மூக்கையும், வாயையும் சேர்த்துப் பொத்திக் கொண்டு பார்த்தாள். படியிறங்கி வந்ததிலும் அவளுக்கு மூச்சு வாங்கியது. ஒரு மாசமாயிற்று. லிஃப்ட் வேலை செய்யவில்லை. அதற்கு செலவு இருபதாயிரத்தைத் தாண்டுகிறது என்பதால் யாரும் காசு தர முன்வரவில்லை. ஏறி, இறங்கிச் செத்தாலும் சரி...தம்பிடி பேராது என்றிருக்கிறார்கள். அடுக்ககத்தில் குடியிருப்பதில் அடுக்கடுக்காய்ப் பல சிரமங்கள் உண்டு. வந்த பின்னால்தானே தெரிகிறது?

      காம்பவுண்டு நுனியில் மூடப்பட்டிருந்த சதுர இரும்பு மூடியைக் கடப்பாரையைக் கொண்டு நெம்பித் தூக்கி கழிவு நீர் வழித் தொட்டியைத் திறந்தான் உச்சிப்புளி.

      நீங்க தள்ளிப் போயிருங்க சார்...என்றான் அருகில் நின்றிருந்த சுந்தரத்தைப் பார்த்து. மேல் துண்டால் பொத்திக் கொண்டிருந்த சுந்தரம்... இருக்கட்டும்...நீங்க வேலையை ஆரம்பிங்க....என்றார்.

      தொட்டியில் கொழ கொழவென்ற கழிவும், நீரும் கசடுமாகத் தளதளத்து மிதந்து கொண்டிருந்தது. வாடை ஆளைத் தூக்கியது.  வெளியே மூடியை மீறி வழிந்து சென்றிருந்ததால், துர் நாற்றம் அதிகமாயிருந்தது. கசடுகளோடு கழிவுத் தண்ணீர்  இரும்பு கேட்டைத் தாண்டி சரிவுப்படிகளில் இறங்கியிருந்தது.

      இன்னும் கொஞ்சம் போச்சுன்னா ரோட்டுல ஓட ஆரம்பிச்சிடும் சார்.....அப்புறம் பிரச்னை ஆயிடும்....என்றான் உச்சிப்புளி.

      ஆமாமா....அதான் அவசரமா உங்களக் கூப்பிட்டது....என்றார். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டார். யார் வீட்டிலாவது வேடிக்கை பார்க்கிறார்களா? என்று. புகார் கொடுக்காமல் இருந்தால் சரி. கார்ப்பரேஷன் வண்டி வாரம் ஒரு முறையோ, இரு முறையோ வருகிறதுதான். அந்த நேரம் கண்ணில் பட்டால் அபராதம் பதினஞ்சாயிரம். அருகில் குடியிருப்பவர்கள் புகார் சொல்லியும் இது நடந்து விடுகிறது. இங்காவது லாரியில் இறைக்கப்படுகிறது. பல வீட்டில் ரோட்டுச் சாக்கடையோடல்லவா இணைத்திருக்கிறார்கள்? அதை யார் சொல்வது? சொல்லாமல் இருக்கத்தான் காசைக் கொடுத்து வாயை அடைத்திருக்கிறார்களே? வேலியே பயிரை மேய்ந்தால்?

      சுத்தம் பண்ணிடுவோம் சார்...அதுக்குச் சொல்லல....இங்க மட்டுமில்ல.....பெரிய செப்டிக் டாங்க் போறவரைக்கும் வழில இருக்கிற நாலு சதுரத்தையும் தோண்டிக் க்ளீன் பண்ணனும்....இல்லன்னா இது போயி...அங்கங்க அடைச்சிக்கிட்டு நிக்கும்....என்று சொல்லி நேர் கோட்டின் இடது கடைசி நுனியில் இருக்கும் பெரிய செப்டிக் டாங்க் வரை அங்கங்கே உள்ள சதுரங்களைக் காண்பித்தான் அவன்.

      இது ஒண்ணுதானே ஒழுகுது....இங்கதானே ஓவர்ஃப்ளோ ஆகுது...அப்போ...இங்கே மட்டும் தோண்டினாப் பத்தாதா...? நீ என்னப்பா...பெரிய்ய்ய வேலயா இழுத்து விடுறே....?

      அப்டியில்ல சார்....அதெல்லாமும் அடைச்சி அடைச்சிதான் இங்க வந்து தேங்கியிருக்கு....எட்டு வீட்டுக்கும் லிங்க் இருக்குல்ல சார்... அவசரத்துக்கு என்ன பண்றதுன்னு, பேசின்ல கண்டதையும் போடக் கூடாது....பேப்பர், பீத்துணி, முடிக் கத்தை..காய்கறித் தோல், .குழந்தைங்க கழிவுன்னு சுருட்டிச் சுருட்டி அதுக்குள்ள வீசியெறிஞ்சா...கொஞ்சம் கொஞ்சமாச் சேர்ந்து அடைக்கத்தான சார் செய்யும்....சரியா தண்ணியும் ஊத்த மாட்டாங்க....அப்டியே ஊத்துனாலும், இந்தக் கழிவுகளோட சேர்ந்து மத்த கழிவுகளும் போய் நின்னுக்கிடும்....பெரிய டாங்குக்குப் போற வழி இப்டித்தான் அடைபடும்... யாரும் சொன்னாக் கேட்குறதில்ல.....நாம என்ன சார் பண்ண முடியும்? அப்பப்போ இப்டிக் க்ளீன் பண்ணித்தான் ஆகணும்....

      இங்கு அடுக்ககம் கட்டும்போது உச்சிப்புளிதான் வாட்ச்மேன். அவனுக்கு எதெது எங்கே லிங்க் இருக்கிறது என்று நன்றாய்த் தெரியும். ரிப்பேருக்கு அடிக்கடி அவனை அழைப்பதே அதற்காகத்தானே!

      இதற்குத் துட்டுப் பிரட்டுவதே பெரும்பாடாகிப் போனது. இன்னும் மூணு வீட்டில் காசு வந்தபாடில்லை. இவன் என்னடான்னா பெரிய செலவு வச்சிருவான் போல்ருக்கே...? என்று பயந்தார் சுந்தரம். மனதுக்குள் ஒரு கணக்கு ஓடிக் கொண்டிருந்தது அவருக்கு.

      ஒவ்வொரு முறையும் இவர்தான் இந்தக் க்ளீனிங் வேலைகளைக் கவனிக்கிறார். வேறு எவரும் தலையைக் காட்டுவதில்லை. மொத்தம் எட்டு வீட்டில் ஆறு வீட்டுக்காரர்கள் வாடகைக்கு வந்தவர்கள். ஒரு சொந்த வீடு தனி மனுஷி. அதுவும் வயசான கேஸ். இவரும் வயசானவர்தான். ரிடையர்ட் ஆயாச்சே...! ஆனால் அது கணக்கில் வராது. ஆம்பிளயாச்சே...!  எனக்கென்ன வந்தது என்றிருக்கிறார்கள். சொந்த வீடு வைத்திருப்பவன்தான் பாடாய்ப் பட வேண்டியிருக்கிறது,

      சங்கம் அமையுங்கள் என்கிறார்கள். எட்டு வீட்டு அடுக்ககத்திற்கு என்ன சங்கம் வேண்டிக் கிடக்கிறது? ஆளுக்கு மூணு மூணு மாசம் பராமரிப்புப் பொறுப்பு.  அவ்வளவுதான். அதாவது ஒழுங்காக நடக்கிறதா என்றால் அதுவுமில்லை. சம்ப்பில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்று கூடப் பார்க்காமல் மோட்டார் ஸ்விட்ச்சைத் தட்ட வேண்டியது. வெத்து மோட்டார் ஓடி ஓடி ஏர் லாக் ஆக வேண்டியது. பிறகு குய்யோ முறையோ என்று வந்து நிற்க எத்தனை முறைதான் ஓடி ஓடிப் போய்ச் சரி பண்ணுவது? ஏர் லாக் ரிலீஸாகி மேலே தொட்டியில் தண்ணீர் விழுகிறதா என்று கூட நாமே போய்ப் பார்த்து உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. பொறுப்பிலிருப்பவர் பாதி நாள் ஊரில் இருப்பதில்லை. பிறகு தண்ணி லாரிக்கு எவன் புக் பண்ணுவது?

      இன்று சொன்னால் நாளைதான் வரும் மெட்ரோ லாரி. தொட்டி காலி. தேவைக்கு என்ன செய்வது? ஆளாளுக்கு கழுவாமல் கிடப்பார்கள் போலிருக்கிறது? யாரோ பார்க்கட்டும் நமக்கென்ன வந்தது என்றிருந்தால்?  பிரைவேட் லாரிக்குச் சொல்ல அடுத்த ஒரு மணியில் அவன் வந்து கொட்டிவிட்டுப் போய் விடுகிறான். ரேட் ஜாஸ்தி.  இவர்களின் கவனக் குறைவுக்கு,  பொது நஷ்டமா? இதென்ன அநியாயம்?   சொந்த வீடு என்று ஒரு சந்தோஷம், நிறைவு உண்டா? சதா என்னவாவது  ஒரு பிரச்னை. போதுண்டாப்பா...சாமி...!

      தனி வீடு என்றால் எதுவானாலும் நம்மோடு போகும். இது பெருந்தொல்லையாவில்ல போச்சு?  சுந்தரத்திற்கு தாளாத அலுப்பு. பெரிய தப்புப் பண்ணியாயிற்று என்கிற நினைப்பு வந்து விட்டது. நல்ல வேளை நூறு, நூற்றைம்பது வீடுகள் உள்ள அபார்ட்மென்டில் போய் மாட்டவில்லை.. அங்கிருக்கும் பிரச்னைகளைக் கவனித்தால் இது தங்கம்...! ஆனாலும் காசையும் கொடுத்து, பணத்தையும் லட்சக்கணக்காய் இழந்து, தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொண்ட மாதிரி ஆகிப் போனது!!

      பையன் பெயருக்கே வீட்டை ரிஜிஸ்டர் பண்ணியிருந்ததால் பொறுமுவதைத் தவிர வேறு வழியில்லாமல் நின்றார் சுந்தரம். தன் பெயருக்கு என்று பதிந்திருந்தால் என்றோ விற்றுத் தலை முழுகியிருப்பேன் என்று  வீரம் பேசினார்.  பசங்களுக்கென்ன நன்றி உணர்ச்சியா இருக்கு?  தலைமுறை மாறிய தவறுகள்...! ஐம்பது லட்சம் கொடுத்து வீடு வாங்கியது ஒரு விலையாகவே தெரியவில்லையே அவர்களுக்கு? இப்பத்தான் எல்லாத்தையும் கோடில பேசறாங்களே...!

      பக்கா ஏரியாப்பா இது. இன்னும் ரெண்டு வருஷத்துல தண்ணிக் குழாய், பாதாளச் சாக்கடை எல்லாம் வந்துடப் போறது.   ரெயில்வே ஸ்டேஷன், பஸ்-ஸ்டான்டு, அத்தனையும் பக்கம். குறிப்பா இங்கயிருந்து எல்லா ஐ.டி. ஆபீஸ்களும் நார்மலான தூரம்தான். மெயின் ரோடுல போய் நின்னா எல்லா கம்பெனி பஸ்ஸூம் இந்த வழியாத்தான் போறது வருது. இந்த வசதி வேறே எங்கயும் கிடைக்காது....தெரிஞ்சிக்கோ....நீ நல்ல இடமாப் பார்த்துத்தான் வாங்கியிருக்கிறே...எதுக்கு அநாவசியமாக் குறைப்பட்டுக்கிறே.... சமாதானம் சொல்றானாம் அப்பனுக்கு....!

      ன்ன....உங்களைத்தானே....! - சத்தம் கேட்டுத் திரும்பினார்.   இங்க வாங்கோ....என்று முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு அழைத்தாள் சுசீலா.   என்ன என்றவாறு போய் நின்றார். எதற்காக இத்தனை எள்ளும் கொள்ளும்?

      அங்க பக்கத்துல போய் நின்னுண்டு என்ன கொஞ்சிண்டிருக்கேள்? ஈஷிக்காதீங்கோ...  எம்புட்டு நேரம் ஒட்டிண்டு வேடிக்கை பார்க்கணும்....தள்ளி நின்னுண்டு சொன்னாப் போறாதா? ஏதாச்சும் வியாதி வெக்கை வந்து வைக்கப் போறது......இங்கயே இருந்தமேனிக்கே சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கோ....இல்லாட்டா சீக்கிரம் சரி பண்ணுப்பான்னுட்டு சட்டுன்னு வந்து குளிக்கிற வழியப் பாருங்கோ...சம்ப்ல தண்ணி குறைவா இருக்கு...லாரி வந்தாத்தான் ஆச்சு...! அவனோட என்ன உறவாடல்...வள வளன்னு.? ஊருல எத்தன குழி தோண்டினேன்னு கேட்டாகணுமா? கோபமாய் நொடித்தாள் சுசீலா.

      சுந்தரத்திற்கு சங்கடமாயிருந்தது அவளின் பேச்சு. அப்டிச் சொல்லாதறீ...எவ்வளவு கஷ்டமான வேலை தெரியுமா? க்ளீன் பண்றேன்னு அவன் வந்து நிக்கிறதே பெரிசு....உறவாடல் அது இதுன்னு அவன் காது கேட்கப் பேசறியே? தகுமா?  இந்த வேலை பண்றவனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும். அதைத் தெரிஞ்சிக்கோ...! குத்தி விட்டு, தோண்டி எடுத்து வெளில போட்டு, சரி பண்றது என்ன சாதாரணமா?.நாத்தம் கொடலப் பிடுங்கும்...தெரியுமில்ல?  ஆழமான தொட்டில க்ளீன் பண்ண இறங்கி, எத்தனை பேர் விஷ வாயு தாக்கி இறந்து போயிடறாங்க... அவுங்க உயிர் மட்டும் என்ன அவ்வளவு மலிவாப் போச்சா? நம்மள மாதிரி மனுஷாள்தானே. அவாளும் ?..  பாவம்டீ.....ரெண்டு வார்த்தை அவனோட சகஜமாப் பேசினாத்தான் என்ன? குறைஞ்சு போயிடுவோமா? அப்படி நாம என்ன உசத்தி, அவனென்ன தாழ்த்தி? ? தெய்வப் பிறவிகளா? அநாவசியமா ஒருத்தர் மனசு சங்கடப் படுற மாதிரிப் பேசக் கூடாது...! தப்பாக்கும்...ஆகாத வார்த்தை சொல்லாதே....! அடுக்காது. செப்டிக் டாங்க் கழிவு எடுக்கிறது என்ன அத்தனை ஈஸியாப் போச்சா உங்களுக்கு? இன்னைக்கு சாயங்காலம் போய் பாதுகாப்புக்கு ஊசி போட்டுக்குவான் அவன். அது தெரியுமா உங்களுக்கு? அப்பத்தான் நாளைக்கு ஏதாச்சும் இப்டி வேலை வந்தா அவன் தொடர முடியும்...! செத்துப் பிழைக்கிற பிழைப்புடீ....சாதாரணமா நினைச்சிடாதே...! அது பாவமாக்கும்....!!

      முறைத்துக் கொண்டே படியேறினாள் சுசீலா. இது என்ன சொன்னாலும் கேட்காது.....அஉற்றிணையில் அவள் முனகிக்கொண்டே போனது இவருக்குக் கேட்கத்தான் செய்தது. ஆள் நேரடியாய் நின்று, இருந்து பார்த்து செய்கிறாரே என்கிற நன்றியில்லையே? ஏன்...இவ பையனை வந்து நிக்கச் சொல்றது? சுருங்கிப் போயிடுவானோ? அது சரி....மத்த வீட்டுக்காரன்களுக்கே எதுவும் அக்கறை இல்லை...இவளைச் சொல்லி என்ன செய்ய? - நொந்து கொண்டார் தனக்குத்தானே...! ஏழு வீட்டில் ஒருவன் கூட தலை நீட்டவில்லையே? ஆட்கள் இருக்கிறார்களா, இல்லையா என்கிற அளவுக்கு கமுக்கமாய் கிடக்கிறார்களே....! சொந்த வீடு வச்சிருக்கிறவனுக்குத்தான் அக்கறை....எங்களுக்கென்ன வந்தது?

      சார்....வந்து பாருங்க..... - குரல் கேட்டு.....நகர்ந்தார் சுந்தரம். அடுத்தடுத்த  சதுரங்களைத் திறந்து குத்தி விட்டு, அடைசல் சரி பண்ணி,  வாளியில் தண்ணீர் பிடித்துப் பிடித்து நாலு குழிகளிலும் அடித்து ஊற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தான் உச்சிப்புளி.  ஏற்றுக் கொண்ட வேலையில் அவனது கவனமும், அதைத் தெளிவுறச் செய்வதில்  இருந்த தீவிர ஈடுபாடும்....இன்னொரு ஆளைக் கூடக் கூட்டி வந்திருக்கலாம் என்றுதான் அவருக்குத் தோன்றியது. கூலி அதிகமாகும்...இதுக்கே முக்கி முனகுகிறார்கள்...! நாங்க ரெண்டே பேர்தான். காலைல ஒரு முறை கக்கூஸ் போனா முடிஞ்சிது. அதிலும் பாதி நாள் நாங்க ஊர்லயே இருக்கிறதில்லை...பிறகு எதுக்கு சம பங்கு கொடுக்கணும்? இப்படியான ஆராய்ச்சியும் கேள்வியும் வேறு. மனிதர்கள் மனசு எப்படியெல்லாம் வேலை செய்யும், சிந்திக்கும் என்று யாராலுமே கணிக்க முடியாது. பீத்த புத்தி என்பது பலருக்கும் பொது போலும்?

      சாலையில் கழிவு நீர் லாரிகள் போய்க் கொண்டிருந்தன. இந்தப் பகுதியில் இது சகஜம். சதா ஒன்று கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கும். ஏதாவது ஒரு அபார்ட்மென்டில் சுத்தம் நடந்து கொண்டேயிருக்கும். நல்ல பைசா. கைல காசிருந்தா நாமளே இப்டி நாலு லாரி வாங்கி விடலாம் போல்ருக்கே...என்று தோன்றும். இன்ன வேலையை இவனிவன்தான் செய்யணும்னு ஏதேனும் சட்டம், வரைமுறை இருக்கா என்ன?

      சார்....எல்லா வீட்லயும் டாய்லெட் பேசினைச் சுத்தம் பண்ணச் சொல்லுங்க...ஆளுக்கு ஒரு வாளித் தண்ணிய அடிச்சி ஊத்தி விடச் சொல்லுங்க.....வழில அடைச்சிருந்ததுன்னா அதுவும் கீழே இறங்கி ஓடி வந்திடும்.....-அவன் சொற்படி அங்கிருந்தபடியே ஒவ்வொரு வீட்டுக்கும் ஃபோன் போட்டார் சுந்தரம். இந்த வயசான காலத்தில் நல்ல வேலை தனக்கு. அடுக்ககத்தில் வீடு வாங்கினதுக்கு இதுவும் வேணும்...இன்னமும் வேணும்...!

      எல்லாம் சுத்தமாகி, நான்கு சதுரங்களையும் மூடியபிறகு சுற்றிலும் டெட்டால் கலந்து தெளித்து, பிறகு ப்ளீச்சிங் பவுடரைத் தூவச் சொன்னார்.  கழுவி விட்ட இடங்களிலும் தண்ணீர் போகப் பெருக்கி,  பரவலாகப் பவுடர் தூவி எந்த துர் நாற்றமும் இல்லாமல் ஆக்கி கை கால்களைக் கழுவிக் கொண்டு வந்து நின்றபோது,  கூலியைத் தயாராய் நீட்டினார் சுந்தரம்.

      வாங்கி எண்ணிப் பார்த்தவன்...திருப்தியோடு...ரொம்பச் சந்தோசம் சார்....என்று பெரிய கும்பிடாய்ப் போட்டான். இங்கே யார்ட்டயும் எதுவும் சொல்லிக்க வேண்டாம்...தெரிஞ்சிதா....? என்றார் சுந்தரம்.

      ஏதோ புரிந்து கொண்டவனாய் சரிங்...சார்....என்று சல்யூட் அடித்தான். வர்றன் சார்...ஏதாச்சும் வேலைன்னா  கூப்டுங்க.. நானே வர்றேன்....என்றவாறே நகர்ந்தான். அதுவே அவன் திருப்தியை உணர்த்தியது.

      விறு விறுவென்று மாடிக்கு ஏறினார் சுந்தரம். அறுபது தாண்டிய வயதிலும் தன்னால் தடங்கலின்றி ரெண்டு மாடி ஏற முடிந்திருப்பதை எண்ணி மனம் சந்தோஷப்பட்டது.

      ப்பா....யப்பா....யப்பா.....? பையன் அலறுவதைக் கண்டு, என்னடா...என்னாச்சு? என்று பதறிப் போனார்.  நாலடி தூரத்தில் எதற்கு இப்படிக் கத்துகிறான்?  ஏண்டா....? என்றார் பதிலுக்கு.     

      அப்டியே பாத்ரூமுக்குள்ள நேராப்  போயிடு....இங்க எங்கியும் உட்கார்ந்துடாதே....! எல்லாத் துணியையும் நனைச்சிடு....குளிச்சிட்டு பிறகு உறாலுக்குள்ள வா....நீ உள்ளே நுழைஞ்சவுடனேயே கப்பு அடிக்கிறாப்ல இருக்கு...எனக்கு குமட்டுது.....

      ஏண்டா..படுபாவி...  என்னடா இப்டிச் சொல்றே....? ஒரு வாய் காப்பி சாப்டுட்டுப் போறேண்டா....இவ்வளவு நேரம் அங்க கால் கடுக்க நின்னிருக்கேன்ல....? கண்காணிச்சிருக்கேன்ல...டயர்டா இருக்குடா....?

      போய்...நாலு சொம்பு படக்குன்னு தலைல விட்டுண்டு வாங்கோ...அப்புறம் காப்பி குடிக்கலாம்....அந்த அநாச்சாரத்துல போய் நின்னுட்டு, அதே வாயோடயும், கையோடயும் காபி வேறே ஊத்தணுமா...?...போங்கோ...சடார்னு போயிட்டு வாங்கோ.....இம்புட்டு நேரம் ஜன்னல் வழியா வந்த சுகந்த மணம்  பத்தாதா? யப்பாடா...என்னா நாத்தம்? - பையனுக்கு சப்போர்ட்.

      ஜன்னல சாத்திக்க வேண்டிதானே...யார் வேண்டான்னா? நா என்னடீ பண்ணினேன்...வேடிக்கைதானே பார்த்தேன்....அதுக்கே ஒட்டிண்டிடுத்தா? நன்னாயிருக்குடி உங்க ஆச்சாரம்....? எனக்கே விலக்கா....? ஒரு வாய் காபிக்கு இதுவா பேச்சு? ரொம்ப அநியாயம்டீ....? என்றவாறே தன் அறைக்குள்ளிருக்கும் பாத்ரூமுக்குள் நுழையப் போனார் சுந்தரம்

      பையன் அவரின் புத்தக அலமாரிப் பக்கம் ஒளிந்தவன் போல்  நின்று தீவிரமாய்ப் பார்த்துக்  கொண்டிருந்தான்.

      இந்த மாதிரிக் கண்ட கண்ட புஸ்தகத்தையெல்லாம் படிச்சிட்டுத்தான் அப்பா இஷ்டத்துக்குப் பேசறார்...தெரிஞ்சிதாம்மா....இங்க வந்து பாரு...என்னென்ன புக்ஸெல்லாம் வரிசை கட்டியிருக்குன்னு....அவருக்குன்னு தனி டேஸ்ட்டு.....கொடி பிடிச்சிண்டு....!

      அதுநாள்வரை தன் அறையின் அந்த அலமாரிப் பக்கமே எட்டிக் கூடப் பார்க்காத, தலையைக் கூடத் திருப்பி நோக்கியிராத தன் மகன், அன்று அவன் மனது சொன்ன பாதுகாப்பு அவசியம் கருதி, அங்கு வந்து புகுந்து கொண்டதைக் கவனித்தார் சுந்தரம்....

      இன்னிக்குத்தான் உனக்கு இந்தப் புஸ்தக வாசனையே அடிச்சிதாக்கும்? ஒரு பார்வை பார்த்தவுடனே எல்லாமும் தெரிஞ்சி போச்சா...? பேஷ்... வெறுமே.... பார்த்திட்டுச் சொல்லாதே... எதையும்.....! .படிச்சிட்டுச் சொல்லு, புரியுதா...?  - என்றவாறே நிதானமாய் பாத்ரூமுக்குள்  குளிக்க நுழைந்தார்.

                              -----------------------------------------------------