28 ஜனவரி 2024

 

பாவப்பட்டவன்“    சிறுகதை - சொல்வனம் இணைய இதழ் பிரசுரம்


   'என் முகத்தைப் பார்த்தா உங்களுக்கு அப்படியா தெரியுது...?"                                                                                                                                                                                     -              எதிரே பவ்யமாய் எழுந்து நின்றவரை நேருக்கு நேர் தீர்க்கமாய்ப் பார்த்து கேள்வியை அவர் முகம் நோக்கி வீசினான் சத்யன்.                                                                                                                                                                                                                             அந்த அம்பு அவர் முகத்தில் கூர்மையாக இறங்கியிருக்க வேண்டும். திடீரென நிலை குலைந்து போனார் அவர். எழுந்தவர் மீண்டும் உட்காரப்போனார்.                                                                                                                                                                                                                                                                                                       "எதுக்காக எழுந்திருக்கிறீங்க...? வந்ததும் உங்களை நான் உட்காரத்தானே சொன்னேன்...? "                                                                                           உட்காரப் போனவர் மீண்டும் எழுந்தார். அவர் காரியத்தில் அவருக்கே நிதானமில்லை.                                                                                                                                "செய்றது தப்பு...தப்புன்னு மனசு சொல்லுது...ஆனா செய்யாம இருக்க முடியலை...அப்டித்தானே...? ஏன்னா செய்து செய்தே பழகிட்டீங்க...!"                                                                                                                                                                                              இல்ல சார்..." அசட்டுச் சிரிப்பு உதிர்த்தார் அவர்.                                                                                                                                                                                                                                                      இவன் முகமோ கடுமை சிறிதும் மாறாமல் இருந்தது. எதற்காக மாற்றுவது? மாற்றுவதுதான் எப்படி? எது இயல்போ அதுதானே உணர்ச்சி வெளிப்பாடாய் வெடிக்கும்? அவசியமிருப்பவன்தானே மாறுபாடாக நெளிய வேண்டும்?                                                                                                                                                                                                                                                                                                                                                      அவர் கையில் வைத்திருந்தது கைக்குள் போனது. விரல்களை மடக்கி மூடியிருந்தார்;.                                                                                                                                          'நீங்க தப்பா நினைக்கப்படாது..."                                                                                                                                                                                                                                                                           "எதை? நீங்க கொடுக்கிறதையா? அல்லது நான் வாங்கப்போறதா நீங்க நினைக்கிறதையா?                                                                                                                                                                                                                                                                                                        'அப்டியில்லை சார்...வழக்கமாச் செய்றதுதான்..."                                                                                                                                                                                                                    'வழக்கமான்னா...? காலங்காலமா செய்திட்டு வர்றீங்களே...அதைச் சொல்றீங்களா...?"                                                                                                                                 'ஆமா சார்...அதே தான்..."                                                                                                                                                                                                                                                                             'காலங்காலமா இங்கே உட்கார்ந்திட்டிருந்தவங்களும் வாங்கிட்டு வர்றாங்க...அப்டித்தானே?"                                                                                                                        'ஆமா சார்..."                                                                                                                                                                                                                                                                                                           'அதுனால வழக்கம்போல எங்கிட்டயும் எடுத்து நீட்டிட்டீங்க...நானும் வாங்கிக்கணும்ங்கிறீங்க..."                                                                                                                  இதற்கு அவர் பதில் சொல்லவில்லை.                                                                                                                                                                                                                                                 'இதுவரைக்கும் இருந்த எல்லா மூஞ்சிலயும் பீ அப்பினதுனால, இந்த மூஞ்சிலயும் அப்பிவிட்ரலாம்னு நினைச்சிட்டீங்க..."                                                                                                                                                                                                                               இப்பொழுது முற்றிலுமாக அவர் தலை குனிந்திருந்தார். அந்த உறாலில் இருந்த எல்லோர் தலையும் குனிந்துதான் கிடந்தது. கோப்புகளில் இத்தனை கவனமாய் அவர்கள் இருந்து இவன் பார்த்ததேயில்லை.  கோப்பினைப் பார்க்கிறார்களா? அல்லது தூங்குகிறார்களா?                                                                                                                                                                                                                                                                            

வலது கடைசியில் இருந்த கணக்கர் ராமானுஜம் கைப்பேனா நழுவியது. நினைத்ததுபோலவே அவர் தூங்கத்தான் செய்தார். பாவம்! இரவு முழுவதும் அவருக்கு உறக்கம் இருந்திருக்காது. தினமும் போராட்டம்தான்.                                                                                                                                                                                                                                                                                                                          புத்தி பேதலித்த பெண்டாட்டியுடன் தினமும் அல்லல் அவருக்கு.  இருக்கவும் முடியாமல், விடவும் முடியாமல், இரண்டு குழந்தைகள் வேறு. அதுகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ஓட்டமும் நடையுமாக வியர்க்க விறுவிறுக்க வருவார். நெற்றியில் இட்டிருக்கும் நாமம் மூக்கிலே வழிந்தோடும். மூக்குப்பொடி வாடை வேறு ஆளைத் தூக்கும். இருப்பவர்களைக் கொல்லும். துடைக்கும் உணர்வு கூட இருக்காது அவருக்கு.                                                                                                                                                                                                                                                                                                                                    இவனுக்கு அவர் பேரில் எப்போதும் பரிதாபம்தான்.                                                                                                                                                                                                            'என்னை மாதிரி நீங்கள்லாம் இருந்தீங்கன்னா, என்னைக்கோ சொல்லாமக் கொள்ளாம வீட்டை விட்டு ஓடிப் போயிருப்பீங்க..." என்பார் எல்லோரிடமும்.                                                                                                                                                                                                                                                                                                                  வழக்கமாய் மதியச் சாப்பாட்டிற்கு மேல் ரூம் சாவியைக் கேட்பார். அவர் மேல் இரக்கப்பட்டு ஒரு சாவியை நிரந்தரமாக அவரிடமே கொடுத்து வைத்திருந்தான்  இவன். போய் நன்றாக ஒரு தூக்கம் போட்டுவிட்டுத்தான் வருவார். அப்பொழுதுதான் முடியும் அவரால். இல்லையென்றால் மூளைக்கு ஓய்வில்லாமல் என்றைக்கோ அவருக்கும் பைத்தியம் பிடித்திருக்கும்தான்.                                                                      'என் சகதர்மிணியோட சேர்ந்து நானும் கைகோர்த்திட்டு  அலைய வேண்டிதான்..." என்பார் வேதனையாக.                                                                                    'சார், உங்க ரூம் இருக்கே...சொர்க்கம் சார் அது...அதென்ன சார் இப்டி ஆளைப் போட்டு அமுக்குது..." என்று உருகி உருகிச் சொல்வார். பாவமாய் இருக்கும் இவனுக்கு. அவர் உடம்பின் அயற்சியும், அவரின் பாடுமல்லவா அவரை அப்படிச் சுருட்டி அடிக்கிறது?                                                                                                                                                                                                                              ராமானுஜம் தட்டச்சராய் இருந்த காலத்திலிருந்து அறிவான் இவன். உட்கார்ந்திருக்கும் அந்தப் பெரிய ஆகிருதியின் முன்னே அந்த டைப் மிஷின் மிகச் சின்னதாய்த் தோன்றும். இவர் விரல்கள் விளையாடும் வேகம், சூப்பர்ஃபாஸ்ட் ரயிலை மிஞ்சும். சடசடவெனப் பிளந்தெடுக்கும் பேய் மழையின் உக்ரம் அது!                                                                                                                                                                                                                                      'சார், தயவுசெஞ்சு டைப்பிஸ்டை தனி ரூமுக்குள்ள    போட்ருங்க   சார்...சத்தம் தாங்க முடியலை...இங்கே எங்க வேலை கெடுது .."                                                                                                                                                        வாயு வேகம், மனோ வேகம் எல்லாவற்றையும் விட அதிவேகம் ராமானுஜம் டைப் அடிப்பது!!                                                                                                              அது அவர் தனியாய்த் திரிந்த காலம். கல்யாணம் என்பதுதான் அவரை இப்படி மாற்றிப் போட்டு விட்டது. அத்தை பெண், அத்தை பெண், என்று உறவிலேயே கட்டி வைத்துவிட்டார்கள். அந்தக் குடும்பத்தில் ஏற்கனவே சில குறைபாடுகள்தான்.                                                                                                                                                                                                                                  'எங்கதான் சார் இல்ல...வீட்டுக்குவீடு வாசப்படிதான்...எங்க அத்தை, கால்ல விழாத குறை சார்...கதறி அழறாங்க...என்னை என்ன பண்ணச் சொல்றீங்க...? சின்ன வயசிலேயிருந்து எங்க குடும்பத்துக்கு நிறைய உபகாரம் செய்தவங்க...அவங்க உதவியினாலதான் எங்க குடும்பமே ஏதோ ஓரளவுக்கு இன்னிக்கு ஜீவிச்சிட்டிருக்கு.....கோவில் உண்டக்கட்டிய நம்பி இருந்த எங்க குடும்பத்தைக் கடைத்தேற்றினவங்க அவுங்கதான்..."                                                                                                                                                                                                                                                              'எனக்கெதுக்கு இவ்வளவு துட்டு? ஏற்கனவே ரெண்டு விளங்காமப் போயிடுத்து...அதுகள் ஆயுசுக்கும் கொஞ்சம் ஒதுக்கிட்டேன்...இவ ஒருத்திதான்...வெளில கொடுத்துத்தான் ரெண்டு சப்பட்டையாப் போச்சு...கண்ணெதிரிலே ராமானுஜம் இருக்கான்...அந்தப் பெருமாளுக்கே என் பொண்ணை தாரை வார்த்துடறேனே...ஏத்துக்கப்படாதா...?"                                                                                                                                                                                                                             

-இதைச் சொல்லியபோது அவர் நின்று கண்கலங்கிய காட்சி இவன் மனத்திரையில் ஓடியது. நல்ல மனதுள்ளவர்களையும், நல்லதையே நினைத்து செய்பவர்களையும் கூட வாழ்க்கை எப்படியெல்லாம் நிலைகுலையச் செய்து விடுகிறது?                                                  'எல்லாமும் கர்மவினை சார்...எங்க அப்பா அப்டித்தான் சொல்லுவார். என்னை என்ன செய்யச் சொல்றீங்க...?"                                                   'அடிக்கடி ராமானுஜத்திடம் வெளிப்படும் அந்த வார்த்தைகள்...! என்னை என்ன செய்யச் சொல்றீங்க...?' எத்தனை இடங்களில் எத்தனை மனிதர்கள் இதே வார்த்தைகளைச் சுமந்து கொண்டு இந்த வாழ்க்கையின் அவலங்களையும் சுமந்து சகித்துக்கொண்டு கழிக்கிறார்கள்?                                                                                                                                           இருக்கையிலேயே தூங்கும் அவரை இவன் ஒன்றும் சொல்வதில்லை. சொல்லிப் பயனில்லை. 'கர்ர்ர்ர்ர்......" என்ற ஒரு நீளக் குறட்டையோடு தனக்குத்தானே விதிர்த்து விழித்துக் கொள்வார். பிறகு வேலை தொடரும். இரவு எத்தனை நேரமானாலும் அன்றைய வேலையை அன்றே முடித்துவிட்டுத்தான் எழுவார். பிறகென்ன? டைப்பிஸ்ட்டாய் இருந்த காலத்திலும் சரி, இன்று பதவி உயர்வில் இருக்கிறபோதும் சரி, ஆபீஸ் வேலையில் அதே வேகம் இம்மியும் குறையவில்லை.                                                                                                                                                                                                                                 

எதிரே இருந்தவர், 'சார், அப்புறம்...?" என்றார்.                                                                                                                                                                                                                                                            அந்த அப்புறம் என்ற சகஜமான வார்த்தையே இவனுக்குப் பிடிக்கவில்லை.                                                                                                                                                            'உன்னோடு தோளில் கை போட்டவனுக்கல்லவா நீ இந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும். .."                                                                                                         'போயிட்டு வாங்க...ரெண்டு நாள் ஆகும்..."                                                                                                                                                                                                                                                                           'சார்....ர்ர்ர்...."                                                                                                                                                                                                                                                                                                                                          'ஆமாங்க...இத்தனையையும் வெரிஃபை பண்ண வேணாமா...?  இருபத்தஞ்சு பர்ஸன்ட் செக்கிங் என் சார்ந்த வேலை...பார்த்துத்தான் போட முடியும்..."                                                                                                                                                                                                                                                                                                                                'எல்லாமே இன்ஜினியர் பார்த்துட்டார் சார்...நீங்க வெறுமே இனிஷியல் மட்டுமே பண்ணினாப் போதும்..."                                                                                                                   'மொட்டை இனிஷியல் போடுங்கிறீங்க...உங்களுக்குச் செக்குத் தர்றது நானா? இன்ஜினியரா...?"                                                                                                                                     'நீங்கதான் சார்....இன்னைக்குச் செக்கை வாங்கி கேஷ் பண்ணினாத்தான் சார் நாளைக்கு அடுத்த வேலையை ஆரம்பிக்க முடியும்..."                                                                                                                                                                                                                                                                                                                                                                'அதுக்காக நான் கண்ணை மூடிட்டுப் போட முடியுமா...? என்ன சொல்றீங்க நீங்க...?"                                                                                                                                                  'சார்...கொஞ்சம் தயவுபண்ணுங்க சார்...ஃபார்மாலிட்டீஸை வழக்கம்போல செய்துடுவோம்...அதைப் பத்தி நீங்க எதுவும் நினைக்க வேணாம்..."                                                                                                                                                                                                                                                                                                                                                           'இப்டி எதிர்க்க உட்கார்ந்திட்டு என்னை டார்ச்சர் பண்ணாதீங்க...ஆபீஸ் ப்ரொசீஜர் எப்டியோ அப்டித்தான் என்னால செய்ய முடியும்...உங்க ஃபார்மாலிட்டீஸையெல்லாம் அங்கயோட நிறுத்திக்குங்க..நீங்க போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வரலாம்..." - சொல்லிவிட்டு இருக்கையை விட்டு எழுந்தான்.                                                                                                                                                                                                                                                                                                                                                               'ராமானுஜம்...வர்றீங்களா...ஒரு டீ சாப்டிட்டு வரலாம்..."                                                                                                                                                                                                                                    'நா வாங்கிட்டு வரச் சொல்றேன் சார்..." - அந்த ஆளின் குரலை இவன் சட்டையே செய்யவில்லை.                                                                                                                             உட்கார்ந்தமேனிக்கே உறக்கத்திலிருந்து திடீரென விழித்ததால், வாயிலிருந்து எச்சில் வழிய, அதைக் கையால் பிடித்துத் துடைத்துக்கொண்டே எழுந்தார் ராமானுஜம்.                                                                                                                                          எப்பொழுதுமே ரப்பர் செருப்புதான் அணிவார் அவர். படக் படக் கென்று சத்தம் எழுப்பும் அது. தனது வருகைக்கான அடையாளமாய் தாமதமாய் வரும் பொழுதுகளில் உதவியாய் உணர்ந்தார் அதை.                                                                                         வெளியில் நடக்கையில், 'சார்...ஒண்ணு சொல்லணும் உங்க கிட்டே...சொல்லலாமா? " என்று ஆரம்பித்தார் ராமானுஜம். வெகு நேரமாக அதற்காகக் காத்துக்கொண்டிருந்தது போல் இருந்தது அவர் ஆரம்பித்தது.                                                                                                                                                                                                               'சொல்லுங்க..." என்றான் இவன்.                                                                                                       'உங்க பேரு சத்தியமூர்த்தியா இருக்கலாம் சார்...ஆனா இங்க நீங்க சத்யமா இருக்க முடியாது சார்..."                                                                                                                        லேசாய்ப் புன்னகைத்தவாறே இவன் அவரைப் பார்த்தான்.                                 'ஆமா சார்...சத்தியமான உண்மை இது...விளையாட்டுக்குச் சொல்லலை ..." மீண்டும் அழுத்தம் கொடுத்தார் ராமானுஜம்.                                                         பதில் பேசாமல் யோசனையோடு நடந்தான் சத்யன்.                                                                                                                                                                                                                                          'என் சர்வீசிலே நான் எவ்வளவோ பார்த்துட்டேன் சார்...திருச்சில நான் இருந்தபோது இப்படிச் சொல்லிட்டிருந்த ஒரு மானேஜரை, அவர் வயலூருக்கு டூ வீலர்லே போகறச்சே இடை மறிச்சு அடி பின்னி எடுத்துட்டாங்க சார்...அந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் ஆபீசுக்கே வரலை. அப்டியே லீவைப் போட்டுட்டுப் போனவர்தான். மெட்ராஸ் போயிட்டார் ஒரேயடியா...! இவுங்கல்லாம் ரொம்ப வருஷமா தொடர்ந்து நம்ம ப்ராஜக்ட் ஒர்க் பார்த்திட்டிருக்கிறவங்க சார்...ஆளுகளைக் கூட மாத்த முடியாது...யாரையும் எதுத்துக்கவும் முடியாது. அவுங்களால எந்தப் பிரச்னையும் வராது. ஏன்னா எந்தச் சிக்கல்னாலும் அவுங்களே சமாளிச்சிக்குவாங்க...நாளைக்கு ஆடிட்ல பிரச்னை வந்தாலும் கையைக் காண்பிச்சு விட்டாப் போதும்...வேணுங்கிறதைக் கவனிச்சு அனுப்பிடுவாங்க...சொல்லப் போனா அவுங்களுக்காகத்தான் ஆபீஸே நடக்குதுன்னு வச்சிக்கிங்களேன்...வெறுமே சீலைப் போட்டு சைன் பண்ணச் சொன்னாத் தப்பு...அதுவும் செய்வாங்க...ஆனா அது வேறே மாதிரி ஆளுகளுக்கு...உங்களுக்கில்லே...இது நீங்கங்குறதுனாலதான் இந்த மரியாதை...ஆகையினால எதுக்கு சார் பிரச்னை...? உங்க நல்லதுக்காகச் சொல்றேன்...நன்மைக்காகச் சொல்றேன்..."                                                                                                                                                                                                                                                                                      - தயங்கியவாறே நிறுத்தி இவனைக் கூர்ந்து பார்த்தார் ராமானுஜம்.  நினைத்ததைச் சொல்லி முடித்துவிட்ட திருப்தி அவரிடம். இவரைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற ஆதங்கம் அவர் முகத்தில் வழிந்தது போலிருந்தது.                                                                                                                                                                                                                                                                                                                                                         'நான் ஒண்ணும் போட மாட்டேன்னு சொல்லலியே ராமானுஜம்..? .25 பர்சன்ட்  செக்கிங் பார்த்துட்டுப் போடறேன்னுதானே சொன்னேன். வரி, சர்சார்ஜ், இதெல்லாம் கரெக்டா போட்டிருக்காங்களான்னு பார்க்க வேண்டாமா? பட்ஜெட்டை எகிறிடக் கூடாதுல்ல...?அதையாவது பார்க்க வேண்டாமா நான்? நாளைக்கு யார் பதில் சொல்றது? "                                                                                                                                                                                                                                                       ஒண்ணும் பைன்ட் பண்ணாது சார் எதுவும்...தைரியமா நீங்க போடலாம்...டோட்டல் எஸ்டிமேட்டே அந்தப் பிரிவுலதானே அப்ரூவ் ஆகுது...பிறகென்ன சார்? நாம இனிஷியல் பண்றது அந்த வேலைகள் பதிவேட்டுல முடிஞ்சிடுச்சுங்கிறதைத்தான்...எல்லாத்தையும் எழுதித்தானே சார் நீட்டுறாங்க...பேசாமப் போட்டு விடுங்க சார்...செக்கைக் கிழிச்சு தொலையுதுன்னு அனுப்பி விடுங்க...இதிலெல்லாம் ரொம்ப உள்ளே போனீங்கன்னா பிறகு மன நிம்மதியே போயிடுமாக்கும்.. அதெல்லாம் கெடக்கட்டும் சார்...நான் ஒண்ணு கேட்குறேன் அதுக்கு உண்மையா பதில் சொல்றீங்களா...?"                                                                                                                                           'என்ன ராமானுஜம், பேச்சு ஒரு மாதிரியிருக்கு?" - இவன் குரல் தானே உயர்ந்தது.                                                                                                                                                                                     'ஐய்யய்யோ...தப்பா நினைச்சிக்கிடாதீங்க...உங்களோட சகஜமான உரிமையுள்ளவன்ங்கிற முறைலதான்..."                                                                                                      'என்ன சொல்லுங்க...?"                                                                                                                              'உண்மையிலேயே இதெல்லாம் சரியா ஒர்க் அவுட் பண்ணியிருக்காங்களான்னு பார்த்து உறுதி செய்யத்தான் நீங்க சரி பார்க்கிறீங்களா, இல்ல வேறே எதுக்காச்சுமா?"                                                                                                                                                                                                                                                                             அதிர்ந்துதான் போனான் சத்யன். இருந்தாலும் அவர் கேட்ட தோரணையில் அவர் மூலம் நிறைய விஷயங்கள் வெளிவரும்போல் தோன்றியது இவனுக்கு.                                                                                                                                                                                                                                                                                                                            ராமானுஜம் ரொம்பவும் சகஜமானவர். ஆபீசின் எல்லாப் பிரிவுகளுக்கும் வேண்டப்பட்டவர். அதனால்தான் அவரை கணக்குப் பிரிவிலேயே போட்டிருந்தான் இவன். யாரும் அவரை வெறுக்க மாட்டார்கள். ஒதுக்க மாட்டார்கள். தன்னிடமும் மரியாதையாய்த்தான் இருக்கிறார். அதனால் பதில் மரியாதை என்றும் அவருக்கு உண்டு.                                                                                                                                                                                                                                                                                     'உங்களோட இத்தனை நாள் பழகினவன்ங்கிற முறைலதான் கேட்குறேன். வேறே எதுக்காச்சும்னா வெளிப்படையா சொல்லிக் கேட்டிருங்க. தப்பில்லே...அதைத்தான் அவங்களும் விரும்புவாங்க...எங்களால இவ்வளவுதான் முடியும்னு கொடுத்திட்டுப் போயிடுவாங்க...அதில்லாம வெட்டியா இருந்தீங்கன்னா அனாவசியமா பழி உங்க மேலேதான் விழும். நாளைக்கு ஒர்க் டயத்துக்கு முடியலைன்னா                                             இதையெல்லாம் காரணமாச் சொல்லுவாங்க...புகார் ஆயிடும்...பார்த்துக்குங்க..."                                                                                                                                இவன் இப்போது யோசிக்க ஆரம்பித்தான். ராமானுஜம் தன்னைவிட ரொம்பவும் அனுபவப்பட்டவராய்ப் பேசுகிறார். இத்தனை நாள் பழகியும், என்னைப்பற்றித் தெரிந்தும், மீண்டும் இந்தச் சந்தேகத்தை ஏன் எழுப்புகிறார்? மனித மனம் சபலத்திற்கு ஆட்பட்டது என்று நினைக்கிறாரோ?                                                                                                                                                                                                                                 'உங்க மனசை நீங்களே தெளிவாக் கேட்டுக்குங்க சார்...கூச்சப்படாதீங்க...உங்களுக்கு நீங்களே பொய்யா இருக்காதீங்க...உங்களுக்கு வர்ற பங்கை வாங்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்களா...இல்ல வாங்கணும்னு நினைக்கிறீங்களா? இதுவா அல்லது அதுவா...? சரியா முடிவு பண்ணிக்குங்க...ஏன்னா காலம் காலமா இந்தப் பழக்கம் உண்டு இங்கே...புதுசில்லே...நீங்க வேணாம்னா உங்க பங்கை வேறே யாராவது வாங்கிக்கப் போறாங்க...அவ்வளவுதான்...அல்லது உங்க பேரை மிஸ் யூஸ் பண்ணி வாங்கிக்கிடுவாங்க...அதை நீங்க தடுக்க முடியாது.   அது பத்தி உங்களுக்குத் தெரியவும் தெரியாது...."                                                                                                                                                                                                                                                                            'நீங்க என்ன சொல்றீங்க ராமானுஜம்?" - பரிதாபமாய்க் கேட்டான் இவன். அவரது அனுபவத்தின் முன் தான் ஒன்றும் இல்லாததுபோல் தோன்றியது அந்த நிமிடத்தில்.                                                                                                                                                    

'இல்ல சார்...நிறையப் பேருக்கு வாங்கணும்னு தோணும். ஆனா மனசுல பயம் வந்திடும். ஏதாச்சும் பிரச்னை ஆயிடக் கூடாதேன்னு. இன்னும் சிலபேர் கிடைக்கிறதை வாங்கிக்கிடுவோம்னு நினைப்பாங்க...ஏன் விடணும்னு ஒரு நினைப்பிருக்கும். ஆனா தான் வாங்குறது மத்தவங்களுக்குத் தெரியக் கூடாதுங்கிற எண்ணமிருக்கும்...அதாவது கௌரவத்தை இழக்க விரும்பாத மனசு. அதாவது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசைன்னு அர்த்தம். வாங்கறதுன்னு ஆயிட்டாலே அது எப்படியாவது தெரிஞ்சு போயிடும்னு வச்சிக்குங்க...கீதைல சொல்றமாதிரி பாவ காரியங்கள் என்னைக்காவது ஒரு நாள் எப்டியாவது வெளில வந்துதான் தீரும்ங்கிறதுதான் சத்யம். ஆனா அதையெல்லாம் பத்தி இப்ப யாரு நினைக்கிறா? இன்னும் சில பேர் இருக்காங்க. அவுங்க இந்த விஷயத்தையே ஜனநாயகப்படுத்திடுவாங்க...வர்றதை எல்லாருக்கும் சந்தோஷமாப் பிரிச்சுக் கொடுத்திடுவாங்க. தன் பங்கையும்கூட...அதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும்...என்கூட திருச்சில ஒருத்தர் ஒர்க் பண்ணினார். அவர் பெயர்கூட வெங்கடேசன்னு நினைக்கிறேன். அந்த மாதிரி ஏதேனும் எண்ணம் உண்டா சொல்லுங்க...அதுக்கு நான்கூட ஒத்தாசை பண்றேன்..                                                                  வாய்மூடி மௌனியாய்க் கேட்டுக் கொண்டிருந்தான் சத்யன். இதென்ன? ஒரு வேண்டாத விஷயத்தைப் போய் இத்தனை விலாவாரியாய் விவரித்துக்கொண்டு? சே! "                                                                                                                                                                                                                                                                                             'ஒண்ணும் குழம்பிக்க வேண்டாம் சார்...வேணும்னா வேணும். வேண்டாம்னா வேண்டாம். அவ்வளவுதான்...டேக் இட் ஈஸி..."                                                                                                                                                                                                                                             சத்யன் அமைதியாயிருந்தான். அவரே மேற்கொண்டு பேசட்டும் என்றிருந்தது அவனுக்கு. கணக்காளர் மிகக் கணக்காகத்தான் பேசுகிறார். கணக்காகப் பேசுகிறாரா அல்லது மிகக் கணக்காய் காயை நகர்த்துகிறாரா? என்னைத் தெளிய வைக்கிறேன் என்னும் சாக்கில் நைஸாக உள்ளே இழுக்கிறாரோ? இப்போது அவர் மேலேயே சந்தேகம் வந்தது இவனுக்கு.                                                                                                                                                                                                    'எதுக்குச் சொல்றேன்னா சார்...நீங்க தப்பா நினைக்கக்கூடாது. இன்றைய சூழ்நிலை அப்படி. எதெல்லாம் நாம தப்புன்னு நினைக்கிறோமோ அதெல்லாம் நடைமுறைன்னு ஆயிடுத்து. குடிக்கிறமாதிரின்னு வச்சிக்குங்களேன். டீக்கடைக்குப்போகிற மாதிரி தினமும் அங்க போறாங்க இல்லியா? ஃபார்மாலிட்டின்னு இப்ப அதுக்குப் பேர் சொல்றாங்க...செய்ற தப்புக்கு, தப்பு பண்றவங்க கொடுத்த பேரு அது. ஆனா தப்புன்னு எங்கயும் அதைச் சொல்லவே மாட்டாங்க..அவுங்க வாயிலிருந்து அது மட்டும் வரவே வராது. அது அவச்சொல். தப்பு தப்புன்னு நாமதான் ஒத்த மரத்துக் கொரங்கு மாதிரி காழ் காழ்னு கத்திட்டிருக்கணும். அதையும் கவனிக்க எவனும் இருக்க மாட்டான். காரியத்துல கண்ணாயிருக்கிறவன், அங்கங்கே தூவ வேண்டியதைக் கணக்கா தூவிட்டு காரிய சித்தி பண்ணிட்டுப் போயிட்டேயிருப்பான்...இவன் இங்கே  'பே.."ன்னு வாயைப் பிளந்திட்டு வெறுமே நின்னிட்டிருக்க வேண்டிதான். என்னுடைய சர்வீஸ்ல எவ்ளவோ பார்த்தாச்சு. உங்களுக்கும் இந்த அனுபவம் கிட்டியிருக்கும்தான்...ஆனாலும் உங்ககிட்டே சொல்லணும்னு தோணிச்சு...சொல்லிட்டேன்..."                                                                                                                                                                                                                                   முடிந்தது என்பதுபோல் பேச்சை நிறுத்திவிட்டு, இவன் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு ரோட்டை கிராஸ் பண்ணுவதில் கவனமானார் ராமானுஜம்.                                                                                                                                                                                                                                                                                                                           சூடான டீ மனதுக்கும், உடம்புக்கும் இதமாய் இருந்தது. தெளிந்த குளத்தில் கல்லெறிந்து குழப்பி விட்டாரா? அல்லது கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க எத்தனிக்கிறாரா? இவனுக்கே இவன் இருப்பு புரியவில்லை.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       அந்த நீண்ட அமைதியை ராமானுஜமே குலைத்தார் மீண்டும்.                                                                                                                                                                                                                         'என்ன சார், சங்கடப்படுத்திட்டேனா...? ரொம்ப உரிமை எடுத்திட்டு உங்களுக்கே அட்வைஸ் பண்ணிட்டேனோ? ஏதோ சொல்லிடணும்னு தோணிச்சு. நேத்திலேர்ந்து ஒரே அரிப்பு. இதுவரைக்கும் யார்கிட்டயும் இவ்வளவு விலாவாரியா டிஸ்கஸ் பண்ணினதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. ஏன்னா நான் பழகினவங்களெல்லாம் ரொம்பப் ப்ராக்டிகலானவங்க...உலக நடைமுறைகளோட, அதன் போக்குல, லாவகமா, ரொம்ப இயல்பா கலந்துடறவங்க...பிராக்டிகல்னுதான் சொன்னேன். நேர்மையானவங்கன்னு சொல்லலை...அந்த வார்த்தை  இப்போ ரொம்பப் பழசு... அநாவசியமான, அநாகரீகமான வார்த்தைன்னு கூடச் சொல்லலாம். உங்களை நான் வித்தியாசமானவரா மனசுல வச்சிருந்தேன். அதான் சொன்னேன். இத்தனை உரிமை  எடுத்துக்கிட்டதுகூட அதுனாலதான்...உங்களுடைய ட்ரீட்மென்ட் ரொம்பக் கடுமையாத் தெரிஞ்சது எனக்கு. அதனால சுதாரிச்சேன். வெளியூர்ல வந்து தங்கியிருக்கீங்க...தனியா வேறு இருக்கீங்க...பயமில்லாமத் தெளிவாப் பேசுறீங்க...உங்க வேலைகள்ல ஒரு தீர்மானம் இருக்கு...அது உங்களை வழி நடத்துது...ஆனா அதுவே உங்களுக்கு எதிராத் திரும்பிடுமோன்னு நான் பயப்படுறேன்...எது உங்க பலம்னு நீங்க நினைக்கிறீங்களோ அதுதான் உங்க பலவீனம்னு  எனக்குத் தோணுது...சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்...இப்பத்தான் என் மனசு நிம்மதி ஆச்சு....."                                                                                                                                                                                                                                            -ஒரு நீண்ட பெருமூச்சோடு பேச்சை நிறுத்தினார் ராமானுஜம். உலகாயத அனுபவங்களையெல்லாம் கரைத்துக் குடித்ததுபோல் இருந்த அவரது பேச்சு, சத்யனை நிரம்ப சிந்திக்க வைத்தது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           என்னதான் நடைமுறைகள் மாறியிருந்தாலும், அடிப்படை விழுமியங்கள் மாறி விடுமா என்ன? அவைகளுக்குஅழிவுண்டா? அவற்றை அசைத்துப் பார்க்கலாமே தவிர வேரோடு பிடுங்கி எறிய முடியுமா? எங்கெங்கோ சுற்றினாலும் கடைசியில் அங்குவந்துதானே சங்கமமாகிட வேண்டும்? அத்தனையையும் அது உள் வாங்கிக்கொண்டு தன்னை மேலும் புனிதப் படுத்திக்கொள்ளத்தான் செய்யும். அந்த நாளும் ஒரு நாள் வரத்தான்  செய்யும்..!விடியத்தான் செய்யும்!!. அதற்காக நின்று கொண்டிருக்கும் அந்த ஸ்தலத்தை விட்டு, தான் இடம் பெயர முடியுமா? மேட்டில் நிற்பவன் பள்ளத்தில் விழலாமா? எல்லோரும் பள்ளத்திலேயே கிடக்கிறார்கள் என்பதால் அந்த இடம் புனிதமாகிவிடுமா?                                                                                                                                                                                                                                                                       

மீண்டும் இருக்கையில் போய் அமர்ந்த போது அந்த ஆள் இல்லை என்பது மனதுக்கு மிகவும் நிம்மதியாயிருந்தது இவனுக்கு. தன்னுடைய இயல்புக்கு ஏற்றாற்போல் தனக்கு ஒரு அலுவலகம் வாய்க்காதது எப்பொழுதும் சிக்கலாகவே இருந்திருக்கிறது என்று நினைத்தான்.                                                                                                                                                                                                                       தான் இதுவரை இருந்த அலுவலகங்களிலெல்லாம் இந்தப் பிரச்னை தன்னைத் தொடர்ந்து வந்திருப்பதையும், அதற்காகவே மாறி மாறி இடம் பெயர்ந்து கொண்டிருப்பதையும் எண்ணிப்  பார்த்துக் கொண்டான்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                  பதவி உயர்வு  வேண்டாம் என்று சொல்லி உள்ளுரிலேயே பேசாமல் குப்பையைக் கொட்டிக்கொண்டிருக்கலாமோ என்று  எப்போதும்போல் அப்பொழுதும் தோன்றியது.                                                                                                                                                                                                                                                                           

பதவி உயர்வில் மேலே செல்லச் செல்ல பொறுப்புக்கள் அதிகமாவதைப்போலவே சிக்கல்களும் பெருகுகின்றனவே? இவற்றிலிருந்து தன்னளவில் ஒதுங்கியிருக்கலாம்  என்றால், கடமையைக்கூட ஒழுங்காகச் செய்ய முடியாத சூழல் அல்லவா நிலவுகிறது?                                                                                                                                                                                                                                                                              தான் உண்டு, தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருக்க நினைப்பவன்கூட அப்படியே தன்னைக் கொண்டு செலுத்த முடியவில்லையே? தன்னைப் போல் இருப்பவர்களெல்லாம் இப்படி நாள்தோறும் ஏதாவதொன்றிற்கு அவதிப் பட்டுக்கொண்டு மன உளைச்சலோடு திரிய வேண்டியதுதானா?  தவறு செய்பவர்களுக்கல்லவா மன உளைச்சலும், நிம்மதியும் குலைய வேண்டும்? இங்கே மாறுபாடாய் அல்லவா திகழ்கிறது?                                                                                                                                                                                                                                                                                                                              யோசிக்க யோசிக்க சத்யனுக்கு தலையை வலிப்பது போல் இருந்தது.                                                                                                            \

இருப்பது வெளியூர். அதில் எங்கிருந்தால் என்ன? வெறுமே நிர்வாகம், நடைமுறை என்கிற அளவில் மட்டும் பணியில் ஐக்கியமாகி விடுவதுபோல் தனக்குத் தோதாய் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வெளியேறி விட்டால் என்ன? தன்னைப் போன்றவர்களின் இடம் அப்படித்தானே அமையும்?                                                                                                                                                                                                                                                                                                                                                                    தீவிரமாய் யோசிக்க ஆரம்பித்தான் சத்யன். ராமானுஜத்தோடான உரையாடல் ஒரு சரியான வழிக்குத்தான் தன்னைத் திருப்பி விட்டிருக்கிறது என்பதாக உணர்ந்து திருப்தியடைய ஆரம்பித்தான்.                                                                                                                                                                                                                                                ஒரு நீண்ட விடுமுறை இடைவெளிக்குப்பின் அன்று அவன் அலுவலகம் வந்தபோது, அவன் இருக்கையில், அவனின் முதல் பார்வையில், அது அவனை வரவேற்றது.                                                                                                                                                                                                                                                                                                   

தனக்கான இடத்தைத் தானே தேர்வு செய்து அடைந்திட வேண்டிய அவசியம்கூட இல்லையென்பதுபோல், அது அந்த அலுவலகத் தலைமையாலேயே  தன் முயற்சியில் பெற்று வைத்திருந்த சென்னைத் தலைமையகத்துக்கான மாறுதல் ஆணை என்பதாய்  அவனின் பார்வைக்குத் தயாராய் அங்கே வைக்கப்பட்டிருந்தது.!!                                                                                                                                                                                                                                                                                                               ---------"""""""""""""""""""""""------------                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             

27 ஜனவரி 2024


சிறுகதை                      “எளைச்சவன்…!                        

மாயவன் சைக்கிளைக் கஷ்டப்பட்டு  மிதித்துக் கொண்டிருந்தான். சுற்றுக்கு ஒரு முறை கடக்…கடக் என்று சத்தம் வந்து கொண்டிருந்தது. செயின் லூசாக இருக்கிறது. அடையாக அப்பிக் கிடந்த அழுக்குகளை அகற்றாமல் திருப்பத்திலிருந்த ஒர்க் ஷாப்பில் கழிவு எண்ணெயை எடுத்து பல் சக்கரத்தில் விட்டது தப்பாய்ப் போயிற்று. சாலையில் செல்பவர்கள் இவனையும் வண்டியையும் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனார்கள். மனதுக்குள் சிரிப்பு.

அது என்னவோ கிடக்கட்டும்… இப்போது காரியம் ஆனால் சரி… என்று அவன் பார்வை வரிசையாய் நிற்கும் கடைகள், நடுவே வீடுகள், வெட்ட வெளிகள், பெட்ரோல் பங்கு, பெரிய கட்டடங்கள்…என்று அலசிக் கொண்டே போயின.

இன்று அவனுக்கு நாலாயிரம் ரூபாய் வேண்டும். அஞ்சாயிரத்து சொச்சம் சேர்ந்திருப்பதாக மனதில் இருந்தது. பாஸ் புத்தகத்தைப் பார்த்து சரி பார்த்துக் கொள்வோம் என்றால்  கணக்கு வைத்திருக்கும் உப்பிலியம்மன் கோயில் கிளை பாங்குக்குள் நுழையவா முடிகிறது. வரவு பதிய வழியில்லை. அது முடியாமல் போய் ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. சம்பளக் காசை லேத்துப் பட்டறை அண்ணாச்சி பூதலிங்கம் எப்படியோ அங்கே இங்கே மாற்றியோ, புரட்டியோ ரெண்டு தவணைகளாகக் கொடுத்து விட்டார். தன் பாடு சில்லரைப் பாடு என்று அறிந்தே கொடுத்தது போலிருந்தது. அம்புட்டு சில்லரை எங்கிருந்துதான் கிடைத்ததோ, அல்லது வீட்டில் சேமிப்பாய் வைத்திருந்தாரோ… திரட்டிக் கொட்டிக் கொண்டு வந்தது போல்தான் இருந்தது.

இந்தா புடி உன் சம்பளக் காசு…..என்று கொண்டு வந்து சில்லரையும் நோட்டுமாகக் கொட்டினார். சம்பளப் பணம் அந்த மாதம் சம்பளக் காசாக வந்தது. எப்பொழுதும் அந்த மாதிரி ரூபத்தில் மாதச் சம்பளத்தை அவன் பார்த்ததில்லை. தாமதிக்காமல் கொடுத்து விட வேண்டும் என்கிற உந்துதல்தான் அப்படிச் செய்ய வைத்து விட்டதோ என்று தோன்றியது மாயவனுக்கு. ஐநூறு ஆயிரம் செல்லும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, பள்ளிகளில் அதை வாங்க மாட்டேன் என்று விட்டார்கள். குறிப்பிட்ட தேதிவரை கொடுக்கலாம் என்றாலும், அவர்கள் வாங்கத் தயாராய் இல்லை. அரசாங்கம் சொல்வதைக் கேட்பதா, இவர்கள் சொல்படி நடப்பதா? பிள்ளையின் படிப்புப் போய்விடுமே என்று பயம்.

பொண்ணுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட என்று சில்லரைகளை எண்ணி எடுத்துக் கொண்டு போனபோது, அத்தனை சந்தோஷமாக வாங்கிக் கொண்டது ஆச்சரியமாயிருந்தது. அவர்களே ஒன்றும் சொல்லாதபோது ஏன் வலியக் காரணம் சொல்ல வாயைத் திறக்க வேண்டும் என்று கமுக்கமாய் இருந்துவிட்டான். எட்டாயிரத்தில் மூணு போனது.

ஊரெல்லாம் நோட்டு மாற்ற அல்லாடும்போது, தான் மட்டும் உறாய்யாக இருப்பதாய்த் தோன்றியது. தெருவிலும், சாலையிலும் அரக்கப் பரக்க கூட்டம். அம்புட்டு சனம் தினசரி வீதிக்கு வந்தது ஆச்சரியப்படுத்தியது. பாங்குகளில் நீண்ட வரிசை. பொம்பளை ஆம்பிளை வித்தியாசமில்லாமல் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு கதியே என்று நின்றார்கள். வெயில் கொளுத்தியது.  ரேஷன் கடைகளில் கூட சர்க்கரைக்கும், மண்ணெண்ணெய்க்கும் இம்புட்டுக் கூட்டம் பார்த்ததில்லை. அதாவது வாரத்தில் அல்லது மாதத்தில்  ஒரு நாள், இருநாள்தான். பிறகு தீர்ந்து விடும். இது தீராத கூட்டமாய் அல்லவா இருக்கிறது? பணம் எடுக்கும் ஏ.டி.எம்.கள் பூட்டிக் கிடந்தன. செக்யூரிட்டியும் இல்லை. பணம் இருந்தால்தானே  பாதுகாப்புக்கு ஆள் வேணும். வெறும் மிஷினுக்கு எதுக்குப் பாதுகாப்பு என்று விட்டு விட்டார்கள். பணம் கட்ட, மாற்ற என்று ஓயாத ஒழியாத கூட்டம். ராத்திரி வரிசைக்குக் கல்லுப் போட்டு வந்து நிற்பதாய்ச் சொல்கிறார்கள். இருக்கட்டுங்க, அதனாலென்ன என்றும் காதில் விழத்தான் செய்கிறது. யாரும் அதை மறுத்தும் பேசாததுதான் அதிசயம். தேவை அப்போதைக்குப் பணம். புத்தியில் அது மட்டும்.

இருபது தேதி தாண்டிய இந்தப் பொழுதில்தான் பணத் தேவை அந்த மாதத்தில் வந்திருக்கிறது.  காரணம் மல்லிகாவின் பள்ளிக் கட்டணம்தான். இல்லையென்றால் மாதக் கடைசி வரை ஓட்டியிருப்பான். மீதிக் காசு குடும்பச் செலவுகளுக்கான முன் மாத பாக்கி மற்றும் அந்த மாதத் தேவைகளுக்கென்று தீர்ந்து போய்விட்டன.

ஜோதியை டாக்டரிடம் கூட்டிப் போக வேண்டும். மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுக்க வேண்டும். எல்லாமும் தீர்ந்து போய் நான்கு நாட்களுக்கு மேல் ஆகிறது. ஒரு வாரம் எந்த மருந்தும் சாப்பிடாமல் டாக்டரிடம் போய் நின்றால் அவர் அது சரியில்லை இது சரியில்லை என்று மேலும் மருந்து மாத்திரைகளைக் கூட்டி விடக் கூடும். கறாரான டாக்டர் பத்ரி. நறுக்கென்று கத்தரித்தாற்போல் பேசுவார்.

நான் சொல்றபடி செய்யலேன்னா அப்புறம் எதுக்கு எங்கிட்டக் கூட்டிட்டு வர்றே? என்பார். அவரிடமே மாத்திரைகள் இருந்தால் எடுத்து நீட்டி, கொண்டு போ என்று சொல்பவர்தான். அந்த மனசு உண்டு. அதே உரிமையில்தான் கண்டிக்கவும் செய்வார்.

ஏன்யா, ஃபீஸைத்தான் குறைச்சு வாங்கிக்க முடியும். மருந்துகளையும் நானே எப்பவும் தந்திட்டிருக்க முடியுமா? வந்திச்சுன்னா…இருந்திச்சுன்னா தாராளமா எடுத்திட்டுப் போ….இல்லன்னா நீதான உம்பொஞ்சாதிக்கு வாங்கிக் கொடுக்கணும்….

மாத ஆரம்பத்தில் பத்து தேதி வாக்கில் போனால் அவரிடம் மருந்துகள் இலவசமாய் கிடைக்க வாய்ப்பு உண்டு. மருந்துக் கம்பெனிக்காரர்கள் அந்த முதல் வாரத்தில்தான் அதிகம் வருகிறார்கள் அவரிடம். இப்பொழுது இருபது தேதி தொட்டு விட்டது.  இலவச மாத்திரை மருந்திற்குக் கண்டிப்பாய் வழியில்லை.

இருக்கும் சேமிப்பையும் எடுத்துத்தான் ஆக வேண்டும். நாளைக்குள்ளாகவாவது ஜோதியை டாக்டர் முன் கொண்டு நிறுத்தியாக வேண்டும். குளிர்காலம் வேறு. மேலுக்கும் கீழுக்கும் ஜிவ்வு…ஜிவ்வு என்று இழுக்கிறது. ராத்திரி விடும் குறட்டையைப் பார்த்தால் பிராந்தியமே அதிர்கிறது. எங்கிருந்துதான் இவளுக்கு இப்படிச் சளி கட்டியதோ? எதைச் சாப்பிட்டாலும் மூச்சிழுக்கிறதே…? எந்திரிச்சு உட்கார்ந்தால் தடால் என்று சாய்கிறாளே…! இந்தத் தீனிக்கே உடம்பு இப்படிக் கனத்தால், போன மாசம் வரை அந்த சிலோன்காரர் பங்களாவில் வேலை பார்த்தாளே…அங்கேயே தொடர்ந்திருந்தாளானால்…ஆளைப் பிடிக்க முடியாது போலிருக்கிறதே…!

நீ கறியும் மீனுமாத் தின்னுட்டு வந்திர்றே…வளர்ற பிள்ளைக்கு ஒழுங்கா சாப்பாடு போட வேணாமா…நாளைக்குக் கட்டிக் கொடுக்கிற பொம்பளைப் பிள்ளைல்ல அது… புஷ்டியா, பார்வையா இருந்தாத்தான எவனாச்சும் சரியின்னு தலையாட்டுவான்….சொங்கியா நொடிச்சுப் போச்சுன்னா…..?

ஆத்தாடி…பொண்ணு மேலதான் எம்பூட்டு கரிசன….? நா ஒண்ணும் திங்கலையா அப்டி…நீயே கண்ணுபட்ருவ போலிருக்கே…! இந்தா…அவுகளும் திரும்பவும் எலங்கைக்கே போறாகளாம்…அந்தய்யா மட்டும்தான் போவாகன்னு நினைச்சிருந்தேன்…அந்தம்மாவும் போகுதாம்…பங்களாவ யாரோ ரியல் எஸ்டேட்காரவுகளுக்கு விலை பேசிப் புட்டாகளாம்…ஆளுக வந்து எடத்தப் பார்த்துட்டெல்லாம் போயிட்டாக….தோட்டம் பூராவும் எடுத்திருவாக போலிருக்கு…இனிமேட்டு அங்கொரு கூடாரத்தப் போட்டு உட்கார்ந்திருவாக…சீட்டுக் குலுக்கல் நடக்கப் போவுதாம்ல…பேசிக்கிறாகய்யா….நாமளும் ஒரு சீட்டு சேர்ந்து வப்பம்யா…?

போடீ, போக்கத்தவளே….எவன்ட்டயாவது கொடுத்து ஏமாறுறதுக்கா? இங்க சோத்துக்கே தாளமாயிருக்கு?

சரி விடு…அவுக குடும்பத்தோட கிளம்பிட்டாக...என் பொழப்பு போச்சு….

அதான பார்த்தேன். அந்தம்மாவப் பத்தி கூட அப்டி இப்டிப் பேச்சு வந்திச்சில்ல…அவரு சிலோன்ல இருக்க…இது யார் கூடவோ போகுது வருதுன்னு…அதான் கை நழுவிடுமோன்னு இழுத்திட்டுப் போறாராக்கும்…..

அந்த வம்பெல்லாம் எனக்குத் தெரியாது….அவுக போறாக…அம்புட்டுத்தான்….இந்த மாசத்தோட கணக்கு முடிச்சாச்சு…..

இல்லைன்னாலும் உன் உடம்புக்கு இனியும் உன்னால  வீட்டு வேலைக பார்க்க முடியும்னு எனக்குத் தோணல….பேசாம வீட்டுலயே கெட…அதான் சரி…

கெடக்கலாம்யா…ரூவா…ரெண்டாயிரம் எவன் தருவான்….எஞ்சோறும் அங்க கழிஞ்சிச்சில்ல….இப்போ…? காசும் போச்சு…..என் வயித்துப்பாடும் சேர்ந்திச்சு…..

அட விடு புள்ள…பார்த்துக்கலாம்….. – என்னவோ தைரியத்தில் சொல்லி விட்டான் மாயவன். ஆனாலும் ஜோதி கொண்டு வந்த ரெண்டாயிரம் எத்தனை உபயோகமாய் இருந்தது. சுளையாய் அது இப்போது இல்லை. பாங்கில் இருக்கும் அஞ்சுல நால எடுத்து டாக்டருக்கும் மருந்துக்கும் வீட்டுச் செலவுக்கும் கொடுத்து இந்த மாதத்தை ஓட்டி விடலாம்தான். அப்புறம்? சிங்கி அடிக்க வேண்டிதானா?

யோசித்துக் கொண்டே கடந்து கொண்டிருந்த மாயவனைத் தடுத்து நிறுத்தியது ஒரு குரல்.

மாயி…அங்க எங்க போயிட்டிருக்க….? – குரல் கேட்டுச் சட்டென்று வண்டியிலிருந்து இறங்கினான். கிழட்டுத்தனமாய் உளட்டியது வண்டி..

காத்தும் குறைஞ்சு போச்சா….? அடக் கடவுளே…என்றவாறே யார் என்று குரல் வந்த திக்கைப் பார்த்தான்.

அங்க எங்கப்பா போறே….பாங்குக்கா…? அதெல்லாம் வரிசை குமரன் தியேட்டர் வரைக்கும் போயிருச்சி….இனிமே போயி நீ நின்னு பணம் எடுக்கவா…? பாதிப் பேருக்குக் கூடக் கிடைக்காது….ஆனாலும் சனம் நம்பி நிக்குது….. ரெண்டாயிரம்தான் கொடுக்குறாகளாமுல்ல… ….நீ எம்புட்டு எடுக்கணும்…

…கிடைக்கிறத வாங்கிக்கிட வேண்டிதான்…என்னா செய்றது? வம்பாத்தான் இருக்கு…சண்டைக்கா நிக்க முடியும்…? நம்ம பணத்தை நாம எடுக்க முடில பாரு….என்னா கொடுமடா இது…!

அதெல்லாம் விடு…நா ஒரு வழி சொல்றேன் இங்க வா…. – சற்றே குரலைத் தாழ்த்தி அழைத்தான் ராசப்பன்.

என்ன என்பது போல் வண்டியை ஸ்டான்ட் போட்டு விட்டு அருகில் போனான் மாயவன்.

நம்ம நெல்லு மண்டிக்காரரு ஒண்டிப்புலி இருக்காருல்லப்பா… அவுக ஆளுகளுக்கெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா ரூவாயக் கொடுத்து மாத்திட்டு வரச்சொல்றாராம்…நேரா அவர்ட்டப் போ… தர்றத வாங்கிட்டு நோட்டு மாத்திக் கொடு  கையில காசு வாயில தோசை …….போ…ஓடு….

 சரி…அதுனால எனக்கென்ன பிரயோசனம்…? – புரியாமல் முழித்தான் மாயவன். தன்னுடைய அவசரத் தேவை எப்படிப் பூர்த்தியாகும்?…புரியவில்லை அவனுக்கு. கைமேல காசுன்னா சரியாப் போச்சா…? எனக்கு நாலுல்ல வேணும்…?

அட நா சொல்றன்ல…நீ போய்யா உடனே…அவரு சொல்வாரு விவரம்…இங்க போய் மிஷினு முன்னாடி நின்னு ஒண்ணும் பிரயோசனமில்ல…இந்த வழியப் பாரு…இருக்கிற கைக்காச எதுக்குச் செலவழிக்கிற? அழுத்துய்யா வண்டிய….!

என்னத்தையோ சொல்லி மனசைக் கலைக்கிறானே! ….மாயவனுக்குப் போவதா இருப்பதா தெரியவில்லை. நம்ம பணமிருக்க அடுத்தவனிடம் போய் ஏன் நிற்க வேண்டும்? ஆசை காட்டுறானோ? – புத்தி கேள்வி கேட்டது.

எதுக்காக அவரு தன் பணத்த மத்தவங்ககிட்டக் கொடுத்து விடணும்…? அவரே கொண்டுட்டுப் போய் நேரடியாக் கொடுக்க வேண்டிதான….எதுக்கு ஆளுகளத் தேடுறாரு? ஒரு வேள இம்புட்டுப் பணமான்னு சந்தேகப்படுவாகளோ…அதுக்காகச் செய்றாரோ…? கண்ணு போட்ருவாகன்னு ஒளிவு மறைவாச் செய்யப் பார்க்குறாரோ? பாங்குல ஒரே ஆளு, முழுக்க மாத்த முடியாதுன்னுட்டு மண்டி ஆளுகளாப் பொறுக்கி அனுப்புறாரோ…? –கேள்வியாய்த்தான் பிறந்தது. வேறு ஒன்றும் புலப்படவில்லை  மாயவனுக்கு. இருக்கிறவனும் இல்லாதவனும் சேர்ந்துல்ல கஷ்டப்படுறானுக….! ஆனா நம்ம கஷ்டம் தீராத கஷ்டமாச்சே…!

அவரு சொல்வாரு விவரம்னானே… மாத்திக் கொடுத்தா ஏதாச்சும் கிடைக்குமா இருக்கும்.  அதத்தான் ரகசியமாச் சொல்றானா இவன்…? – யோசித்துக் கொண்டே வண்டியை உருட்டினான் மாயவன். காற்று நன்றாய் இறங்கியிருந்தது. இனி கிண்ணென்று அடித்துக் கொண்டுதான் வண்டியில் ஏற வேண்டும். இதோடு ஏறி அமர்ந்தால் பஞ்சர்தான்.

“சிவனாண்டி ரிப்பேர் கடையில்“ ஸ்டான்ட் போட்டான்.

அண்ணே காத்தடிக்கணும்…..

காதில் வாங்காதது போல் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான் சிவனாண்டி.

இதென்ன கத்தையா வச்சு எண்ணிக்கிட்டிருக்கான்….? அதிசயமாய்ப் பார்த்தான் மாயவன். அவ்வளவு பணத்தை ஒருவர் கையில் பார்க்கவே சற்று பயமாயிருந்தது.

நானே அடிச்சிக்கிறவா….? பம்ப்பை எடுக்கப் போனான். Nஉறாஸ் மூலம் காற்றடிக்கும் வசதி இல்லை அங்கு.

அதையும் காதில் வாங்கியவனாய்த் தெரியவில்லை. நோட்டு எண்ணுவதில் அத்தனை மும்முரம். உடம்பெல்லாம் வேறு வியர்த்துக் கிடந்தது. என்னாச்சு?

மாயவன் ஃப்ரன்ட் வீலுக்கும்> பேக்குக்கும் காற்றை நிரப்பிக் கொண்டு எடுத்த இடத்தில்  பம்ப்பை வைத்தான். அவன் பணம் எண்ணுவது மனசை உளட்டியது.

அண்ணே சில்லரை அப்புறமாட்டு தர்றேன்…. என்றான் சிவனாண்டியைப் பார்த்து… கைக்குக் கை மாறும் நோட்டுக்கள் அலைக்கழித்தன.

அப்போதும் திரும்ப வில்லை அவன் பார்வை. காதில் விழுந்ததா இல்லையா? சந்தேகமாயிருந்தது.

எண்ணிய நோட்டுக்களுக்கு நூல் சுற்றினான் சிவனாண்டி. அத்தனையும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள். மஞ்சள் பையில் வைத்து வாயைக் கட்டினான்.

ஏது சிவனாண்டி அண்ணனுக்கு இம்புட்டுப் பணம்? ஒரு நா கூட அவர்ட்ட இப்டிப் பார்த்ததில்லையே….? – மாயவனுக்கு எதுவும் புரியாமல் குழப்பமாய் இருந்தது. இவனும் ராசப்பன் சொன்னமாதிரி என்னமும் செய்வானோ? எல்லாம் துணிஞ்சிட்டாய்ங்களா? வெத்து வேட்டெல்லாம் பணத்தோட அலையுது? பணம் எவன் மனசையும் மாத்திடும்தானே…! அப்பாவி சப்பாவி பலியாவுறானுகளா…?

அவனென்னடா என்றால் ஒண்டிப்புலிட்டப் போங்கிறான்…இங்க என்னடான்னா இம்புட்டுப் பணம் எண்றான்…? ஒரு வேளை அவரும் சிவனாண்டிட்டப் பணம் மாத்தக் கொடுத்திருப்பாரோ…? அடிக்கடி இந்தாளை அங்க பார்த்திருக்கனே…? அப்டியிருக்குமோ? கேட்ருவமா…? இல்ல வேறே என்னவாச்சுமா இருந்தா…வம்பால்ல போயிரும்…? – ஒரு திடீர் முடிவில் வாய் நுனி வரை வந்து விட்ட வார்த்தைகளை அடக்கிக் கொண்டான் மாயவன். காரியத்தில் அங்கிருந்த தீவிரம் இவன் வாயைக் கட்டிப் போட்டது.

அவன் கையில் இருக்கும் பணத்தைப்பற்றி நாம் ஏன் நோண்ட வேண்டும்? கேள்வி பிறந்தது. வந்த வேலை என்ன….? பணம் எடுப்பது….அதற்கு நீண்ட வரிசை என்று சொன்னான் ராசப்பன். இவ்வளவு நேரத்தில் போய் நின்றிருந்தாலும் பத்து முப்பது பேராவது குறைந்திருக்கும்.  பாழாய்ப் போன சைக்கிள் மக்கர் பண்ணி விட்டது. நின்றாலும் கிடைக்காது என்றானே…? அப்படியானால் பணத்திற்கு என்ன செய்வது? ஜோதியின் ஆப்பரேஷனைத் தள்ளிப் போட வேண்டியதுதானா? அவளுக்கு உடம்பில் என்னென்ன வியாதியெல்லாம்தான் இருக்கிறது? சளியை நீக்க மருந்து சாப்பிட்டாள் இத்தனை நாள். அது கொஞ்சங் கூடக் குறைந்த மாதிரியில்லை. முன்னாடி இருமி…இருமி உள்ளேயே வச்சிப்பா…இப்பப்போ காறிக் காறித் துப்புறா…அதுதான் கண்ட பலன்…இப்போ புதுசா ஒண்ணு சொல்றாரே டாக்டரு…என்னவோ தொண்டை ஆபரேஷன்றாரு…ஒண்ணும் புரிய மாட்டேங்குது இந்த மர மண்டைக்கு….என்னா கருமமோ…கெரகமோ…? விட்ற முடியுமா?, எனக்கிருக்கிற ஒரே துணை அவதான…!

யோசித்துக் கொண்டே வண்டியை உருட்டிக் கொண்டிருந்தான் மாயவன். ஓட்ட வேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை. இப்படிப் போனால்தான் யோசிக்க முடியும் என்று மனசு சொல்லியது. பலவித யோசனையில் நெஞ்சு படபடத்தது.

ஃபோன் மணி அடித்தது. அப்போதுதான் பையிலிருக்கும் செல் ஞாபகமே வந்தது. அது கூட இத்தனை நாள் அவனிடம் இல்லை. இருந்த ஒன்றை வீட்டிலேயே வைத்திருந்தான். எதாச்சும் அவசரமாய்ப் பேச வேண்டுமென்றால் பேன்ட் பாக்கெட்டிலிருந்த குறிப்பு நோட்டை எடுத்து நம்பரைப் பார்த்துக் கொண்டு ஏதாச்சும் கடையில் போய் நின்று ஒத்த ரூபாய்க் காசு போட்டு வீட்டுக்குப் பேசி விடுவான். அந்த மிஷினைக் கூடப் பல கடைகளில் எடுத்து விட்டார்கள் இப்போது. எதோ ஒன்று பஸ் ஸ்டான்ட் பக்கம் மட்டும்தான் இருந்தது. எதுக்கும் அவசரமென்றால் அங்குதான் ஓடுவான். இந்த செல் ஓசியாய்க் கிடைத்தது. சிலோன்காரர் கொடுத்தாருன்னு கொண்டு வந்து கொடுத்தாள் ஜோதி.

அவுக எலங்கைக்குப் போறாகல்லயா…இந்தா வச்சிக்கன்னு அந்தய்யாதான் கொடுத்தாக….வாங்கிக்க…வாங்கிக்கன்னு நாலு வாட்டி அந்தம்மா சொன்னப் பெறவுதான் நானே கைய நீட்டினேன்….

இத வச்சிட்டு இலங்கைக்கு வா…வான்னு உன்னைக் கூப்பிடப் போறாக….என்றான் இவன்.

ஏன்யா…இம்புட்டு உடம்பு முடியாதவள எங்கனயாச்சும் யாராச்சும் கூப்பிடுவாகளா? கூறாத்தான் பேசுறியா நீ…? எனக்கு கிஃப்ட்டு கொடுத்திருக்காகய்யா…என்று சொல்லி விட்டு வெள்ளந்தியாய் ஜோதி சிரித்தது கண்முன்னே வந்தது……

சிந்தனை தடைபட எங்கு வந்திருக்கிறோம் என்று நோக்கினான் மாயவன்.

பாங்க் வாசல். சற்றே கூட்டம் குறைந்திருந்தது. பரவால்லியே…!  

என்னா…பார்த்திட்டு நின்னுட்டே…போய் வரிசைல நில்லுய்யா…ஆளுக சேர்ந்திரும்…! ராத்திரி ஒன்பது பத்துக்கு மேல ஆவும்…பணம் புதுசா வச்சிருக்காக…மிஷினுல…போய் நில்லு, கிடைக்கும்….- யாரோ ஒருவர் சொல்லிக் கொண்டே வேட்டியை விலக்கி உள் அன்ட்ராயரில் பணத்தைச் செருகிக் கொண்டே போனார். ஆனா ரெண்டாயிரந்தான்….பார்த்துக்க…. –சொல்லிக் கொண்டே  அவனைப்  பார்த்து வக்கணை காண்பித்தார்.

என் கணக்குல காசு இருக்கு…அத எடுக்கத்தான புறப்பட்டு வந்தேன்….அத விட்டிட்டு அந்தாளுக்கு நான் ஏன் பணத்தை மாத்திக் கொடுக்கணும்? என்னா வில்லங்கமோ, வெவகாரமோ…? எப்போ ஆளாளுக்குக் கொடுத்து மாத்திட்டு வாங்கன்னு ஒருத்தன் சொல்றானோ, அப்போவே அதுல ஏதோ தப்பு இருக்குதுன்னு தெரியுதுதானே…..அந்தத் தப்புக்கு நாம ஏன் உடந்த ஆகணும்? – மாயவனின் பாமர மூளைக்கு என்னவோ லேசாய் தட்டுப்பட்டது, சட்டென்று அந்தப் புள்ளியில் நிலைத்து விட்டது. அரசாங்கம் செய்றதே சரியாப் புரியல…இதுல இவங்க வேறே…?

வேலயாளுகளுக்கு லேசுல கூலியே உயர்த்திக் கொடுக்க மாட்டான் அந்தாளு…! சூரி மாமா பட்ட பாடு எனக்குத்தான தெரியும்? இப்ப மட்டும் என்ன கரிசன? வேணுங்கிற போது வேணும்..! மத்த நேரத்துல உதறிப்புடறதா? இடைல என்னத்தையாவது சொல்லி மனசைக் கலைக்கிறாங்களே…!

என் பொழப்பே நாறப் பொழப்பா இருக்கு…இதுல எதையாச்சும் செய்து போட்டு மாட்டிக்கிறவா…? ஒண்டிப்புலி…தண்டிப்புலின்னுட்டு….இவிங்க கூப்பிட்ட கொரலுக்குப் போயி நிக்கிறதுக்கா நா இருக்கேன்….நாம்பாட்டுக்கு லேத்து பட்டறை வேலயப் பார்த்திட்டு செவனேன்னு போயிட்டிருக்கேன்….யோசன சொல்ல வர்ற ஆளுகளப் பாரு….நோட்டு மாத்துறானாம்…கழுதப்பய……! காசில்லாதவன்னா கேவலமா? ஏழை பாழைன்னா எள்ளுருண்டையாப் போச்சா…? விலுக் விலுக்குன்னு வாயில போட்டு மெல்லுறதுக்கு? ஏழைக்கேத்த எள்ளுருண்டையா எனக்குள்ளது போதும்னு திருப்தியா இருக்கிறத கெடுத்துறுவானுகளோ?  நல்லது சொல்ல எவனும் கிடைக்க மாட்டாம்போல….அடுத்தவன மாட்டி விடுறதுலேயே இருப்பானுக…அதுக்குத் துணை போறதுக்கு நாலு பேரு…எச்சவன் எளைச்சவன்….போற போக்குல தப்புக்கு ஆள் சேர்க்குறானுக….நாதாரிப் பயலுக…! –பழகிய வார்த்தைகள் எல்லாம் சர்வ சகஜமாய் சமயம் பார்த்து வந்து வயிற்றெரிச்சலைக் கொட்டின.

சற்று சத்தமாகவே, கோபத்தோடு  வைது கொண்டே போய் நின்ற மாயவனை ஏதும் புரியாமல் வரிசையில் நின்றவர்கள் விநோதமாய்ப்  பார்த்தார்கள்.

---------------------------------                                               

 

 

 

 

 

18 ஜனவரி 2024

 

சிறுகதை          வாடிக்கை மறந்ததும் ஏனோ...?   பிரசுரம் ராணி வார இதழ்  (21.01.2024) சிறுகதைப் போட்டி ஆறுதல் பரிசுக் கதை     




                                                 

      ட்டுச் சட்டென்று மின்னலாய்த் திரும்பி மறைந்து விடுகிறான் அவன். என்னவொரு சுறுசுறுப்பு. அவன் சைக்கிள் போகும் வேகத்திற்கு, பின்னால் பிளாஸ்டிக் டப்பாவில் அடுக்கியிருக்கும் பால் பாக்கெட்டுகள் துள்ளிக் கீழே விழுந்து விடக் கூடாதே என்றிருந்தது இவனுக்கு. அத்தனை குதியாட்டம் டப்பாவுக்குள். அவன் பரபரக்கும் அந்தப் பகுதித் தெருக்கள் அனைத்தும் மேடும் பள்ளங்களுமாகத்தான் இருக்கின்றன. அது ஒரு தனிக் காலனி. அதிலேயே இஷ்டத்திற்கு விட்டு அடித்துக்கொண்டு போகிறான் அவன். குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த வேலையை முடிக்க வேண்டும் என்கிற கட்டாயமோ என்னவோ?

ஒரு நாள் கூட முகத்தைச் சரியாய்ப் பார்த்ததில்லை நான். அவன்தான் மின்னலாய்த் தோன்றி  மறைகிறானே…? ரொம்பப் பெரிய ஆளும் இல்லை, சின்னப் பையனும் இல்லை. அதற்காக இளைஞனும் இல்லை என்றுதான் தோன்றியது. வயது கடந்து கொண்டிருக்கும் அவனிடம் எதையோ விரட்டிக் கொண்டிருக்கும் துடிப்பு. அதனால் உண்டான பரபரப்பு. காலில் வெந்நீர் கொட்டிக் கொண்ட கதைதான்.

இவன்தான் அவனைப் பார்க்கத் துடிக்கிறானே தவிர, அவன் இம்மியும் திரும்பிப் பார்த்ததில்லை. அடுத்த வீடு, எதிர்த்த வீடு, அதற்கடுத்த வீடு என்று ஒரே குறியாய்ப் பறந்து கொண்டிருக்கிறான், காரியார்த்தமாய். கருமமே கண்ணுக்குக் கண்ணாய்…!

இன்னும் இந்த உலகத்தில் உழைப்பின் மீது தீராத, சலியாத நம்பிக்கை கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் போதும் என்கிற திடமான மனதோடு, அதில் கட்டு செட்டாகக் குடும்பம் நடத்தி, சேமித்து, உடல் நலம் பேணி, சந்தோஷித்து….இப்படி எத்தனை பேர்களுக்கு இந்த உலகம் தீர்மானமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.  கேள்விப்படும் எத்தனையோ ஊழல் அராஜகங்களுக்கு மத்தியிலும் எப்படி இவர்களால் இத்தனை திடமாக இயங்க முடிகிறது? சேர்க்கை சரியில்லேன்னா எல்லாந்தான் கெட்டுப் போகும் என்பார்களே, அதுபோல் கேள்விப்படும் எல்லாமும் சாதாரண மனிதனைச் சலனப்படுத்தி முடக்கத்தானே செய்யும்….நாம மட்டும் எதுக்கு இத்தனை கஷ்டப்படணும்? ஒரு கணம் அவனவன் நினைத்தால் போதாதா? …. ரணகளம் ஆக எத்தனை நேரம் ஆகும்? …..ஒட்டு மொத்த மனிதச் சமுதாயத்தின் பெரும்பகுதி இன்று அந்த திசையில்தானே படிப் படியாய்ப் போய்க் கொண்டிருக்கிறது? சாதாரணர்கள் எவ்வளவு காலந்தான் பொறுத்திருப்பார்கள்? அடங்கிக் கிடப்பார்கள்?

பொழுது விடிந்தால் ஒரு பக்கம் குடத்தைக் கட்டிக் கொண்டு தண்ணீருக்கு அலையும் மக்கள், தலையில் கூடையைச் சுமந்து கொண்டு காய்கறி விற்கும் பெண்கள், ஒரு கூடைப் பூவைச் சுமந்து, தெருத் தெருவாய்க் கூவி, முழம் முழமாய் விற்று, காசு பார்த்து பிறகு உலை வைக்க வீடு நோக்கி விரையும் பெண்,

ஒரு மூடை உப்பை ஈரம் தோயத் தோய சைக்கிளில் கட்டி, பாலன்ஸ் இல்லாமல் ஆட்டு ஆட்டு என்று ஆட்டிக்கொண்டே ஓட்டிச் சென்று அங்கங்கே திங்கு திங்கென்று குதித்து, தாங்கிப் பிடித்து நின்று,  படி படியாய் விற்று  உழைப்பின் மகிமையில் தன்னம்பிக்கையோடு அயராமல் காசு பார்க்கும் தொழிலாளி, வீடு வீடாய்ப் பேப்பர் போடும் பையன், இன்னும் பழக்கம் விடாமல், உயரமான கேனில் பாலைச் சுமந்து கொண்டு, கிணி கிணியென்று மணியடித்து சலிக்காமல் வீடு வீடாய் இறங்கிப்  பால் ஊற்றிச் செல்லும் வியாபாரி, அங்கங்கே ஓரமாய், தானே அமைந்த இடத்தில் மாட்டைக் கட்டி, காலப்போக்கில் அதை ஒரு கொட்டகையாக்கி, சொந்த இடமாய் வரித்து, விடிகாலை நாலு நாலரைக்கெல்லாம், சிலையாய்க் குத்திட்டு அமர்ந்து, சர்ர்ர்ர்க்……சர்ர்ர்ர்க்…….கென்று பால் கறக்கும் கறவையாளா், கறந்த பால் கறந்தபடி என்று காத்திருக்கும் வீட்டுப் பெண்மணிகள்….அடேயப்பா…இந்த உலகம் இவர்களுக்காகவல்லவா இன்னும் முறையே விடிந்து இயங்கிக் கொண்டிருக்கிறது…! இவர்கள்தானே இன்னும் நியாயங்களையும், தர்மங்களையும் மதிப்புமிக்க விஷயங்களையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்…!  அவ்வப்போது எங்கேனும் இடிஇடித்து இன்னும் மழை பொழிந்து விடுகிறதென்றால் அது இந்த தர்மாத்மாக்கள் இன்றும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் காலம் காலமான அடிப்படை ஒழுக்க விழுமியங்களால்தானே…!

சார், நின்னு போங்க….அங்க பள்ளமிருக்கு பாருங்க…? – சத்தம் கேட்டபின்னால்தான் இவனுக்கு உணர்வே வந்தது.

தினமும் வந்து போகும் இடம்தான் என்றாலும் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் நெருங்கும்போது சற்றுத் தடுமாறித்தான் விடுகிறது. ஒருநாள் அந்தப் பள்ளத்தில் கழுதை ஒன்று விழுந்து விட்டதும், கால்களை மேலே எடுத்து வைத்து, எடுத்து வைத்து விடாமல் அது சறுக்கிக் கொண்டிருந்ததும், அடடா, யாரு இதை மேலே கொண்டுவரப் போறாங்க என்று நினைத்துக் கொண்டே தான் போனதும், வீட்டில் அந்தக் கழுதை நினைவாகவே இருந்ததும்,

உங்களுக்கு வேறே பொழப்பே இல்லை….சதா இப்டி ஏதாச்சும் வேண்டாததை நினைச்சிட்டேயிருக்க வேண்டியது….மனசைத் தேவையில்லாமச் சங்கடப்படுத்திக்க வேண்டியது….எங்கிட்டப் புலம்ப வேண்டியது….வேறென்ன தெரியும் உங்களுக்கு…..?

இனிமே அழுக்குச் சுமக்க உதவாதுன்னு ஆகிப் போன கழுதைங்கன்னு சிலது இருக்குமாம்…அதுகளை வித்துடுவாங்களாம்….அந்தக் கதை தெரியுமா உனக்கு?

மூட்டையைத் தூக்கி முதுகுல வச்சா அதுபாட்டுக்கு நடக்கப் போறது…இதுல உதவாதுன்னு என்ன வந்தது? அதிசயமா இருக்கு நீங்க சொல்றது?

அப்டியில்லடீ….அதுக்கும் உதவாம ஆகிப் போகுமாம் சிலது….முதுகுல சுமையை ஏத்தினா, படக்குன்னு கால் மடிஞ்சு போயிடுமாம்….உட்கார்ந்துக்கிடுமாம்….பிறகு எழுப்பவே முடியாதாம்….சண்டிக் குதிரைன்னுதானே கேள்விப்பட்டிருக்கோம்….சண்டிக் கழுதையும் உண்டு…ஆனா அப்புறம் அது தண்டக் கழுதைதானாம்….அந்த ஸ்டேஜ்லதான் வித்துப்புடுவாங்களாம்….

அதுக்குன்னு இருக்கிற ஒரு வேலையே பொதி சுமக்குறதுதான்…அதுக்கும் அது லாயக்கில்லேன்னு ஆனப்புறம், அதை விக்கிறதுன்னா எவன் வாங்குவான்? என்னத்துக்குன்னு வாங்குவான்….அதையென்ன அடிச்சா திங்க முடியும்? தென்னந்தோப்புல உரமாப் புதைப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்….நாயைக் கூட அப்டிச் செய்வாங்களாமே…..போதும் உங்க கழுதைப் புராணம்…..….காலங் கார்த்தால எதாச்சும் சாமி ஸ்லோகம் சொன்னாலும் புண்ணியமுண்டு….- சலித்துக் கொண்டாள் அவள்.

இதுக்கெல்லாம் மனசு இறக்கப்படலேன்னா அதுல என்னடீ புண்ணியமிருக்கு? எங்கயோ முகம் தெரியாத பலபேர் விபத்துக்கள்ல இறந்து போகும் போது மனசு பரிதாபப்படுதில்லையா….அவங்க நலத்துக்காகக் கடவுள வேண்டுறதில்லையா….அது மாதிரி ஒரு ஜீவன் கஷ்டப்படும்போதும் மனசு இரங்கத்தானே செய்யணும்….

உங்களுக்கு இரங்கிறதோல்லியோ, அது போதும்….வாழ்க்கைல நேரா, கோணிக்காம இருக்கிறவா எல்லாருக்கும் மனசுல அந்த இரக்கம் இருக்கும்…இப்டி உங்களை மாதிரிச் சொல்லிக்கிறவாளுக்கு மட்டும் அது மொத்தக் குத்தகை இல்லே….

அது சரீடீ…நானென்ன இப்ப உனக்கு இரக்கமில்லேன்னா சொன்னேன்…கதையைக் கேளு….அந்த மாதிரி உதவாக்கரைக் கழுதையை பேய் வீடுகள் இருக்கில்லே….அங்கே ராத்திரிக் கட்டிப் போட்டுட்டு வந்துடுவாங்களாம்….தனியாக் கிடந்து அலறி, குடியைக் கெடுத்து, கத்தித் தீர்க்குமாம் அது பயத்துல…..காலைல போனா அந்தக் கழுதை செத்துக் கிடக்குமாம்…..அந்த வீட்டை விட்டுப் பேயும்  விலகிடுமாம்….இந்தக் கதையை எங்கேயாச்சும் கேள்விப்பட்டிருக்கியா நீ…?

கழுதைய விடுங்க…… - சொல்லிவிட்டுச் சிரித்தாள் என் தர்மபத்தினி. எனக்கா மனசைப் போட்டு அரித்தது இந்த நினைப்பு. காலம் காலமாய் ஒருவனுக்கு உழைத்த ஒரு ஜீவன், கடைசியாய் இதற்கா பயன்பட வேண்டும்? இந்தக் காரியத்திற்காக நல்ல விலைக்குப் போகும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் நான். அப்படியும் மனசாகுமா ஒருவனுக்கு? வறுமையிற் செம்மையாயிருப்பவராயிற்றே? எப்படி இதற்கு மனமுவந்து ஒப்புகிறார்கள்? மனமுவந்தா, மனசு வெறுத்தா?

கழுதைப் புராணம் அத்தோடு முடிந்தது. அந்தக் கழுதைப் பள்ளத்தில் அந்த மின்னல் இறங்கிவிடாமல் இருக்க வேண்டுமே  என்று என் மனது அரிக்க ஆரம்பித்திருந்தது இப்போது. காரணம் அவன் வேகம் அப்படி…! மனசு எது எதற்கெல்லாமோ ஏன் இப்படிப் பயப்படுகிறது? நினைத்து மறுகுகிறது?

சார்…சார்….!!! – யார் அது இப்படிக் கத்துவது? வண்டியை வேகம் குறைத்துத் திரும்பினேன்.

அந்தக் கடை வாசலில் நின்ற பெண்தான் கத்தியது.

என்னங்க…?

பால் வாங்கிறதில்லியே சார் இப்பல்லாம்….ஏன் சார் நிறுத்திப்புட்டீங்க…? பையன் கரெக்டாத்தான சார் கொண்டாந்து போட்டுக்கிட்டிருந்தான்…

அதுவா…? காலைல வாக்கிங் போறேன்லம்மா…..திரும்பி வர்ற வழிக்கு அப்டியே காசு கொடுத்து வாங்கிட்டுப் போயிடுறது….-தயங்கியவாறே என்னைப் பார்த்தது அது. பிறகு சொன்னது.

அதை எங்ககிட்ட வாங்கலாம்ல சார்….ரெகுலரா மூணு மூணு பாக்கெட் போட்டுக்கிட்டிருந்தான் பையன்….காலைல நேரத்துக்கு உங்க வீட்டுல போட்ருவான்…..சுத்தமா நிப்பாட்டிட்டீங்களே சார்….

எனக்கா படு சங்கடமாய்ப் போனது. இப்படி அந்தப் பெண் வாய்விட்டுக் கேட்கும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. முகத்தில் அசாத்திய வருத்தம்

. நீங்கள்லாம் நிப்பாட்டுவீங்கன்னு எதிர்பார்க்கவேயில்ல சார்…உங்கள மாதிரி நினைக்காதவங்கல்லாம் நாலு பேர் நிப்பாட்டிட்டா பிறகு என்னதான் செய்றது?பொழப்பு என்னதான் சார் ஆறது?  – அடடா, அந்தக் குரலில்தான் என்னவொரு துக்கம்?

சின்னப் பெண்…அல்ல..குட்டிப் பெண். இந்த வார்த்தைதான் படு பொருத்தம்.  இப்பொழுதுதான் கல்யாணம் ஆயிற்று. அதற்குள் ரெண்டு குழந்தைகளைப் பெற்றாயிற்று. மரப்பாச்சி போல் இருக்கும். சுங்குடிப் புடவை உடுத்தி பொம்மையாய், மாமியாய் நிறுத்தினால் அப்படியொரு அழகு சொட்டும். அது தன் அழகைத் தானே  உணரும் முன்னேயே அதற்கொரு திருமணத்தைச் செய்வித்து, அதைப் பிள்ளைத்தாய்ச்சியாய் நிறுத்தி, இன்று ரெண்டு பிள்ளை பெற்ற அம்மாவாகவும் ஆக்கிவிட்டார்கள். தன் இளமைப் பருவத்தை உணர்ந்து, அந்தப் பருவத்துக்கே உண்டான கனவுகளைத் துரத்தியிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.  என்னவோ தெரியாது அது முகத்தைப் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். பிடித்துப் பிடித்து வைத்தாற்போல மூக்கும் முழியுமாய்….கடவுள் இருக்கும் இடம், இல்லாத இடம் என்று பார்த்தா அழகைக் கொண்டு வைக்கிறான்?

சில ஆண்டுகளாக அவர்களிடம்தான் பால் வாங்கும் பழக்கம் இருந்தது. திடீரென்று என்னவோ அதிகம் கொடுப்பதாய்த் தோன்ற நிறுத்த வேண்டியதாகிவிட்டது. சுசீலாவின் வலுவான வாதம் என்னைத் தோற்கடித்தது.

பாக்கெட்டுக்கு ஒரு ரூபா கூட வைப்பாங்களாம். அது போக கொண்டு வந்து போட சர்வீஸ் சார்ஜாம்…..அவங்ககிட்டப் பால் வாங்கிறதுதானே அவங்களுக்குப் ப்ளஸ்…..வாடிக்கையாளரைச் சேர்க்கிறதுதானே முக்கியம்…அப்புறம் என்ன சர்வீஸ் சார்ஜ் வேறே…? – சுசீலா கணக்குப் பண்ணிக் கேட்டது புரிந்தது.

அடிக்கடி அவள் இதைச் சொல்லப் போக பிறகு எனக்கும் உரைக்க ஆரம்பித்தது. நிறையத் தண்டம் கொடுக்கிறோமோ? மத்தியதர வர்க்கப் புத்தி. தப்பில்லையே…?

மாதாந்திரக் கார்டு வாங்கினா அதுக்கு ஆபீஸ்ல  ஒரு ரேட்டு….கையில காசு கொடுத்து டெப்போல வாங்கினா அதுக்கு இன்னொரு ரேட்டு….இவங்களைக் கொண்டு வந்து போடச் சொன்னா அதுக்கு வேறொரு ரேட்டா? கொண்டுவந்து போடுறதை ஃப்ரீ சர்வீசாத்தானே செய்யணும்?பால் ரேட்டை வேறே உயர்த்திட்டு,  சர்வீஸ் சார்ஜ் பண்ணினா எப்படி? ஏதோ உங்களுக்காக நாங்க சிரமப்பட்டுச் செய்யறோம்ங்கிற மாதிரி?

மக்கள் வரிப்பணத்துல திட்டங்கள் கொண்டுவர்ற போது நாட்டுக்கு “அர்ப்பணிக்கிறார்” ன்னு ஏதோ இவுங்க பாக்கெட்டுலேர்ந்து பணம் போட்டு மக்களுக்கு நல்லது செய்றமாதிரிப் போட்டுக்கிறாங்களே அது மாதிரில்ல இருக்கு இது…..ஐம்பது வருஷமாப் பொதுச் சேவைல இருக்கேன்ங்கிறானே அரசியல்வாதி….அவன நாமளா கூப்பிட்டோம்…? அவனுக்கு வேண்டியிருந்தது, வந்தான்….அவன் சொந்தப் பொழப்பை நடத்துறதுக்காக மெனக்கெட்டுண்டு இருக்கான்….சர்வீஸ்ங்கிறது வாய்விட்டுச் சொல்லிக்கிறதா என்ன? சேவைன்னா என்ன அர்த்தம்?  அது உணரப்பட வேண்டியதில்லையா? சுயநலமில்லாததில்லையா? அப்டியா இருக்காங்க இன்னைக்கு? முதுகுவலியோட வந்து பேசறேன்…கழுத்து வலியோட வந்திருக்கேன்னு சொன்னா, உன்னை நாங்களா கூப்பிட்டோம்…உன் சுயநலம் வர்றே…மக்களை ஏமாத்தறே… அது மாதிரில்ல இது இருக்கு…..ஒரு பொருள் உற்பத்தி ஸ்தானத்துலேர்ந்து மக்களோடு கைக்கு வந்து சேர்றவரைக்கும் என்னென்ன செலவுகளெல்லாம் சேருமோ அது போல இந்த மாதிரிச் சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் காஸ்ட்லி ஆக்கிப்புட்டாங்களே? இது சரியா? அவங்க வியாபாரம் கொழிக்கணும்னா, நிலைக்கணும்னா சில சேவைகளை விட்டுத்தான் கொடுக்கணும்ங்கிற நியாயமான புரிதல் கூடக் கிடையாதா?

அடேயப்பா…! என்னவொரு புரிதல் இவளுக்குத்தான்….? எனக்குத் துல்லியமாய்ப் புரிந்து போனது. இப்படியெல்லாம் நான் யோசித்ததேயில்லை. பெரும் சொத்தை இழந்து போனதைப் போல் படக்கென்று நிறுத்திவிட்டேன் பால் போடுவதை. சுற்றிவிட்ட பம்பரம்போல் ஆடுவதுதானே நமக்கு வேலை…!

மொத்தப் பணம் கட்டாமலேயே ரெண்டு நாளைக்கு அவனாகவே வலியப் பால் போட்டுப் பார்த்தான். காசு வந்து சேரும் வழியைக் காணோம் என்று நிறுத்திக் கொண்டான். பிறகு ஒரு நாள் வந்து ரெண்டு நாள் பாலுக்கு மட்டும் வாயை மூடிக் கொண்டு காசை வாங்கிக் கொண்டு போனான். இப்படித்தான் நின்று போனது பால் வாடிக்கை.

இப்போது கேட்கிறது அந்தப் பெண். என்ன சொல்லட்டும்? அது முகத்தைப் பார்க்கவே எனக்குத் தெம்பில்லை. எனக்கொரு பெண் இருந்தால் எப்படி அதைப் பார்த்துச் சொல்வேன். அதே கதிதான். அன்றைய பொழுது இந்தச் சிந்தனையிலேயே கழிந்து போனது.

இதோ வழக்கம்போல் இன்றும் போய்க் கொண்டுதான் இருக்கிறேன். எந்தப் பகுதியில் போய் எங்கு தண்ணீர் பிடிக்கப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லைதான். சைடு கொக்கியில் கேன் தொங்கிக் கொண்டிருந்தது. அதை சோப்புத்தூள் போட்டுக் கழுவக் கூடப் பொறுமையில்லை. அந்தச் சிறிது நேரத்தில் தண்ணீர் வரும் இடத்தில் கூட்டம் குவிந்து விடுமோ என்ற டென்ஷன். வெயில் ஏறும்முன் காலாகாலத்தில் போய் நின்றோமானால், எப்படியும் ஒரு கேன் கிடைத்து விடும் நிச்சயமாய். அது என்னவோ தெரியாது…அந்த வீட்டுக்காரர்….எந்த வீட்டுக்காரரும்தான்….என்னைப் பார்த்தால் சற்று நேரத்தில்…..

இந்தாம்மா….சாருக்கு ஒரு கேனை விட்ருங்க….பிடிச்சிட்டுப் போகட்டும்….என்று சொல்லி விடுவார்கள். சொல்லப்படுபவர்களும் மறுப்பதில்லைதான். இன்றுவரை கதை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

நம்ம முகத்துல என்னவோ ஒரு களை இருக்கு….அதான்…..என்பேன் நான்.

ரிடையர்ட் ஆபீசரில்லையா…அதுவா இருக்கும்….என்பாள் சுசீலா. கிண்டல் செய்கிறாளோ என்கிற சந்தேகம் உண்டு எனக்கு….

நான் ஆபீசரா….கிளார்க்கா…..படிச்சவனா, படிக்காதவனா, கூமுட்டையா…யாருக்கு என்னடீ தெரியும்? அந்த மக்களுக்கு இரக்கம்….மணிக்கணக்காத் தண்ணிக்கு நிக்கிறபோதும், கூட இருக்கிறவங்களை விட்டுக்கொடுக்காத தன்மை….பாவம் அவரெதுக்கு நிக்கணும்…நமக்குத்தான் பாடுங்கிற கருணை….அப்டிப்பார்த்தா அந்தப் பாடு நமக்கில்லையா….அவுங்க காத்துக் கிடக்கிறபோது, நாமளும் நிக்கப்படாதா? குறைஞ்சா போயிடுவோம்….அது பாமர மக்கள்ட்ட அடியொட்டிப் போய்க் கிடக்கிற பண்பாடுடீ….மனுஷங்க அடிப்படைல ரொம்ப நல்லவங்கங்கிறதை இந்த மாதிரிச் சில வேளைகள்லதான் தெரிஞ்சிக்க முடியும்….இந்த மாதிரி சாதாரண மனுஷங்ககிட்டத்தான் புரிஞ்சிக்க முடியும்…..

அதே நம்பிக்கையோடுதான் இப்பொழுதும் போய்க் கொண்டிருக்கிறேன்.

அட…! மின்னல்….!!! – என்னவோவொரு படத்தின் நகைச்சுவை வசனம்தான் எனக்கு படக்கென்று ஞாபகத்திற்கு வந்தது.

அது அவன்தானே….இப்போது தெரிந்து மறைந்தானே…..அது அந்த அவன்தானா? கண் முன் தோன்றி கணத்தில் மறைந்து….? பின்னால் பால் டப்பா கட்டியிருந்ததே…!!! யப்ப்ப்பா….என்னா வேகம்?…..சந்து, பொந்து, இண்டு, இடுக்கு…..காற்றாய்ப் பறக்கிறானே…..? விட்டலாச்சார்யா பேய்ப் படம் தோற்றது போங்கள்….! குறித்த நேரத்தில் நிமிடம் கூட விஞ்சக் கூடாது…அவனுக்கு…அதுதானோ? அதற்காக இப்படியா?

சார்…..என்ன சார் தண்ணி பிடிக்கவா…?

திரும்பினேன்….அவன்தான்…அவனேதான்……என் முன்னால். என் கண் முன்னால்….!!

அட….நீங்கதானா?- அந்தக் குட்டிப் பெண்ணின் அண்ணனாயிற்றே இவன்…! எனக்கா ஒரே ஆச்சர்யம். திறந்த வாய் மூடவில்லை.

ஆமா சார்….நான்தான்…..ஏன் கேட்குறீங்க….? – முகத்தில் மெல்லிய சிரிப்போடு நின்றான் அவன். வேலைப் பரபரப்பு உடம்பு முழுவதும்….

இல்லீங்க…..சர்ர்ரூ…..சர்ர்ர்ரூன்னு பறந்திட்டிருப்பீங்களா……யாருன்னு குறிப்பா இன்னைவரைக்கும் நான் கவனிச்சதேயில்லை….போற போக்குல பார்க்குறதுதான்…அதான் கேட்டேன்…..

என்ன சார்..இப்டிச் சொல்றீங்க….நாந்தான் தெனமும் இந்த ஏரியால  போட்டுக்கிட்டிருக்கேன்….நான் உங்களப் பார்க்கிறேனே…..?

உண்மைலயேதாங்க சொல்றேன்….நான் நீங்கதான்னு இன்னைவரைக்கும் குறிப்பாக் கவனிச்சதேயில்லை…!!! எப்டிப் பார்த்தீங்களா?

வேறே என்ன சார் பண்றது…? பறந்து பறந்துதான் செய்ய வேண்டிர்க்கு…பையனை வேலைக்குப் போட்டா, சரியா வர மாட்டேங்கிறாங்க…..திடீர் திடீர்னு காணாமப் போயிடுறாங்க….சொல்லாமக் கொள்ளாம நின்னுடறாங்க…சம்பளம் வேறே கொடுத்துக் கட்டுபடியாகல்லே…..

அவ்வளவு கஷ்டமா? – மனசில் என்னவோ உறுத்த, அவன் முகத்தின் சுருக்கங்கள் அறிந்து கேட்டேன். காலை லேசான குளிர்ச்சியிலும் வியர்த்துக் கொட்டியது அவனுக்கு. கழுத்தில் ஒரு குற்றாலம் துண்டு. கசங்கிய பேன்ட், சட்டை….அதெல்லாம் பார்த்தா வேலை நடக்குமா?

ஆம்மா சார்….ஏரியா கூடிப் போச்சு…வீடுகள் அதிகமாயிடுச்சி….எல்லாரும் டயத்துக்குப் பால் வேணும்ப்பாங்க…டிலே ஆனா புகார் சொல்வாங்க…காலைல நாலு நாலரைக்குள்ள ஆரம்பிச்சாத்தான் ஏழுக்குள்ள முடிக்க முடியும்…. ….பசங்க நம்ம விருப்பப்படி இருக்க மாட்டாங்க சார்…எத்தனையோ பார்த்தாச்சு….வீடுகள் அதிகமாயிட்டதால, சம்பளமும் அவுங்களுக்கும் கட்டுபடியாகல்லே…நமக்கும் கொடுத்து முடியல்ல….என்ன பண்றது நாமதான் செய்தாக வேண்டிர்க்கு…..

கஷ்டந்தாங்க….. – உணர்ந்து சொன்னேன் நான்.

தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கின கடனை அடைக்கணும்….அதுக்கு அடுத்தடுத்து பிரசவச் செலவு வேறே….இந்த வேலய முடிச்சிட்டு .நான் வேறே காலேஜூக்குக் கிளம்பியாகணும்…..அதுக்கும் அடிக்கடி பணம் தேவைப்படுது..பலவகைல நெருக்குவட்டுதான் சார்..முழி பிதுங்குது…எங்க போறதுங்கிறீங்க…திருடவா முடியும்? ரொம்பக் கவனமாயிருந்தாக வேண்டிர்க்கு..சார்….இந்த பால் பிஸ்னஸ் ஒண்ணுதான் வேறே தெரியாது….கடை வியாபாரம் சொல்றாப்ல இல்ல….என்ன பண்றது சொல்லுங்க…

 – பேச்சோடு பேச்சாய் என்ன சொல்கிறான் இவன்?

என்னது….என்ன சொன்னீங்க…? காலேஜா…? நீங்க…காலேஜ் படிக்கிறீங்களா? தெரியவே தெரியாதேங்க….இத்தனை ஓட்டத்துக்கும் நடுவுல படிப்பு வேறேயா? – அவனின் கடின உழைப்பு என்னை அசத்தியது.

ஆமா சார்….உங்களுக்குத் தெரியாதா….பி.இ., செகன்ட் இயர் சார்….ஈவ்னிங் காலேஜ்ல படிச்சிட்டிருக்கேன் ….சமயங்கள்ல காலைலயும் ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கும்….பகல்லயும் போக வேண்டிர்க்கும்….இப்டித்தான் சார் கால்ல சக்கரத்தக் கட்டிட்டு ஓடிட்டிருக்கேன்…வீட்டுல எல்லாத்தையும் நான் ஒருத்தன்தான் சார் பார்த்தாகணும்…..கல்யாணத்துக்கு முன்னாடி தங்கச்சி உதவி பண்ணிச்சு….இப்போ அது பிள்ளையப் பார்த்துக்கவே சரியாயிருக்கு….அடுத்தடுத்த வீடுங்கிறதால,அப்பப்போ கடைல உட்கார்ந்து ஏதோ கொஞ்சம் வியாபாரத்தப் பார்த்துக்குது….அதும் மாமியாரும் ஒதவி பண்ணும்னு வச்சிக்குங்க.….வயசானவங்க…அவுங்கள எவ்வளவு சொல்ல முடியும்…மாப்ளை வெளியூர்ல இருக்காரு…நல்லவரு…அவ்வளவுதான்…ஏதும் எதிர்பார்க்க முடியாது….என்ன பண்றது? ஏதோ ஓடிட்டிருக்கு சார்….வரவுக்கும் செலவுக்கும் முட்டி மோதி….ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்தான் சார்….

சொல்லிவிட்டுச் சிரித்தான் அவன்….வேதனை கலந்த அந்தச் சிரிப்பை அப்படியே உள்வாங்கினேன் நான். துன்பத்திலும் எழும் நகைச்சுவை உணர்வு.  அதன் உள்ளார்ந்த சோகங்களும், வேதனைகளும் எனக்குத் துல்லியமாய்ப் புரிந்தன. நானும் இப்படிப் போராடி வந்தவன்தானே….! ஆஉறா, நம்மள மாதிரி ஒரு ஆள்…!

றுநாள்…..

என்னங்க இங்க வாங்க…….!!! – வாசலிலிருந்து கத்தினாள் சுசீலா.

என்னா, என்ன விஷயம்…? – உள்ளிருந்தமேனிக்கே கேட்டேன்.

அட, வாங்கன்னா….இங்க பாருங்க…காம்பவுன்ட் சுவத்துல பால் பாக்கெட் வச்சிருக்கு…… யாராவது மறந்து வச்சிட்டுப் போயிருப்பாங்களோ? – சுற்று முற்றும் பார்த்து பரபரத்தாள்.  

யாரும் மறந்தெல்லாம்  வைக்கல்லே….நான்தான் போடச் சொன்னேன்……எடுத்துக்கோ……

என்னாச்சு…? .ஆரம்பிச்சிட்டீங்களா பழையபடியும்…..? – கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள்.

பழசுதாண்டீ என்னைக்குமே உசத்தி…!  அதுனாலதான்….

இங்கேயிருந்து டெப்போ நடக்கிறதுக்கு அலுப்பு வந்திடுச்சாக்கும் ஐயாவுக்கு……சரியான சோம்பேஏஏஏஏஏஏறி……..!!! அப்போ தினசரி வாக்கிங்கும் அவ்வளவுதானா? கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆன கதைதான்….நீங்களும் உங்க நடைப்பயிற்சியும்….!

சொன்னால் சொல்லிக் கொள்ளட்டும்….அவள் கேலியும் ஒரு சுகம்தான். …அந்த மின்னலுக்கு ஏதோ என்னாலான சிறு உபகாரம்….அப்படிக் கூடச் சொல்ல முடியாது. ஏதோவொரு வகையிலான ஆதரவு. கொஞ்சம் காசு கூடப் போனாப் போயிட்டுப் போகுது….! .இதுதான் எனக்கான மன  நிம்மதி…மன சாந்தி…! இம்மாதிரிச் சின்ன விஷயங்களில் கூட, இணக்கமான சந்தோஷத்தை இழந்தால் எப்படி? இந்த விருப்பம்,  இந்த என் நிறைவு, எனக்கு நானே வரவழைத்துக் கொண்டது. தவற விட்டால் மனம் வேதனை கொள்ளும்.  நல்லது தோன்றினால் உடனே செய்துவிட வேண்டும். மனசு ஒரு குரங்கு.

இந்த உலகத்தில் கடுமையான, உண்மையான உழைப்பின் மீது தளராத நம்பிக்கை வைத்து இந்த வாழ்க்கையின் மீதான அதீதப் பிடிப்போடு  எத்தனை பேர் இன்னும் இப்படி இயங்குகிறார்கள்?  நினைக்க வேண்டாமா? நம்மை மாதிரிச் சாமான்யர்கள் கூட அவர்களை அடையாளம் காணவில்லையென்றால், ஆதரிக்கவில்லையென்றால் எப்படி?  அவன் ஒரு நாள் நிச்சயம் நல்ல நிலைக்கு வருவான்….அதை நான் கண்ணாரக் காணுவேன்….அது காலத்தின் கட்டாயம்…..இந்தச் சமூகத்தின் சத்திய தர்மம் அது…!

எனக்குள் உறுதியாய்ச் சொல்லிக் கொண்டேன் நான்.

                        -------------------------------------------------

 

 

 

 

12 ஜனவரி 2024

 ஜெய்ரிகி பதிப்பகத்தின் வழி திரு.சாய் ரமணா கொண்டு வரும் எனது இரு நூல்கள்.





08 ஜனவரி 2024

 தி.ஜானகிராமன் என்னும் ஆளுமை - கட்டுரைகள் நூல் - ஜெய்ரிகி பதிப்பகம் வெளியீடு - சென்னை புத்தகக் கண்காட்சி 2024 ஜனவரி வெளியீடு