08 ஜூலை 2022

“திட்டமிட்ட“ செலவு - சிறுகதை - கல்கி - 7.8.2022- பிரசுரம்

 

                                                                  “திட்டமிட்ட“ செலவு  




          
                                                    

        றாவது குறுக்குத் தெருவின் ஆரம்பத்தில், அந்தத் தண்ணீர்த் தொட்டியின் அருகே வண்டி நிற்பதைப் பார்த்தார் சிவசு. வீட்டிலிருந்து கிளம்பி ஏறக்குறைய ஒரு கி.மீ. க்கும் அதிகமாக இருக்கும் அந்த நீண்ட சாலையில் கண்ணில் பட்டது அதிர்ஷ்டம்தான்.

     பல பிரதான சாலைகளும் அவைகளுக்கான குறுக்குத் தெருக்களும்   உள்ள பகுதி அது. எந்தத் தெருவில் அவன் வந்து கொண்டிருப்பான் என்பது தெரியாதுதான். எங்காவது கண்ணில் பட்டு விடுவான் என்கிற நம்பிக்கை உண்டு. அல்லது அவனது குரலாவது கேட்டு விடும். வீட்டிலிருந்து வெகுதூரம் தள்ளி அவனைக் காண்பதுதான் அவருக்கு வசதி. இவர் வீடிருக்கும் பகுதிக்குள்ளேயே அவனைப் பார்த்து விட நேரின் கொஞ்சம் சங்கடம்தான். வீட்டு மாடியிலிருந்து நோக்கினால் அவன் வண்டியும், தானும் நிற்பது தெரிந்து விடும். ஆனால் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் இன்று வரை வாய்க்கவில்லை. அது கூடாது என்பதுதானே அவர் எண்ணம்!

     வீட்டிற்கு அருகே அவன் வரும் நேரத்தைக் கணித்து வைத்திருந்தார். அதை அனுசரித்து முன்னமே புறப்பட்டு விடுவார். அவனைச் சற்றுத் தள்ளியே சந்திக்க வேண்டும். அதுவே அவர் நோக்கம்.

     பையைக் கொடு....நான் கிளம்பறேன்....என்று நிற்கும்போது, சீக்கிரம் காய்கறி வந்தாச் சரி...என்று எடுத்து நீட்டி விடுவாள் சுகுணா.. இவரும் சட்டென்று வெளியேறி விடுவார். காலையில் நடைப் பயிற்சி செய்தது போலும் இருக்கும். அப்படியே வீட்டுக்கும் பயனாகும்.

     சமீபமாய்த்தான் இதை அவர் செய்து கொண்டிருக்கிறார். அதற்கு முன் மொட்டை மாடியில் நடப்பதுதான் வழக்கம். அங்கு நடந்த சம்பாஷனைதான் அவருக்கு இந்த ஞானோதயத்தை வழங்கியது.

     ஏன் அங்கிள்....மாமி  காய்கறி வாங்குறாங்களே...அங்க ரொம்ப விலை ஜாஸ்தியாச்சே....எப்படி உங்களுக்குக் கட்டுப்படி ஆகுது....? - என்றான் எஸ்-4 வீட்டைச் சேர்ந்த பையன் கரன். சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து பார்ப்பவன். கூர்மையான அவதானிப்பு உள்ளவன். மாடியில் நடந்து கொண்டே மொபைலில் படம் பார்ப்பான். அது போல் தன் வீட்டிற்கேற்றாற்போல மற்றவற்றையும் தேர்வு செய்வான் போல....!

     அவார்டு ஃபிலிமெல்லாம் பார்ப்பீங்களா அங்கிள்....இன்ட்ரஸ்ட் உண்டா? என்றான் ஒரு நாள்.

     ஓ! அழகா பார்ப்பனே....ஆங்குர்...நிஷாந்த்....மதிலுகள்., காஞ்சிபுரம்......ன்னு நிறையப் பார்த்திருக்கனே....என்றார் இவரும் உற்சாகம் குன்றாமல்.

     அப்போ உங்க வாட்ஸப்புக்கு சில படங்களை அனுப்பறேன்...பார்க்கிறீங்களா...? என்றவன் சொன்னபடியே சில முக்கிய படங்களை அனுப்பி வைத்தான்.

     Where is my friends home, The key, அமிதாப் நடித்த pink, கமலி ப்ரம் நடுக்காவேரி..கடைசி விவசாயி....என்று அந்தப் பையன் உபயத்தில் சில நல்ல படங்களை அவர் பார்த்து ரசித்தார். எல்லாமும் தரமாய் இருந்தன. அதன் மூலம் அவனின் ஆழ்ந்த ரசனை புலப்பட்டது. கண்ட சினிமாவைப் பார்த்து நேரத்தை வீணடிக்காமல் இருக்கிறானே?

     கரனின் அந்தக் காய்கறிக் கேள்வி இவரை ரொம்பவும் யோசிக்க வைத்திருந்தது. இது குறித்து அவருக்கும் சுகுணாவுக்குமே அடிக்கடி வாதம் வந்திருக்கிறது. வாதமென்ன...சண்டைதான்...!

     பையன் காசுன்னாலும் அதைப் பக்குவமா செலவு செய்ய வேண்டியது நம்ம பொறுப்பு.... - என்றார் ஒரு நாள்.

     ஏதாவது சொன்னால்தான் பிடிக்காதே!. எந்தப் பொம்பளை உடனே சரி என்று கணவன் சொல்வதை  ஏற்றுக் கொண்டிருக்கிறாள்? உலக நியதியாயிற்றே இது...!

     எல்லாம் பக்குவமாத்தான் செலவு செய்தாகிறது....ஃபோன்ல சொன்னா டக்கு டக்குன்னு கொண்டு வந்து வீட்டுல இறக்குறான். கடைப் பக்கம் எட்டிப் பார்க்கணும்ங்கிற அவசியமேயில்லை. வீடுவரை கொண்டு வந்து போடுறவனுக்கு கொஞ்சமாச்சும் கூட லாபம் வேண்டாமா? லேசா விலை அதிகமிருந்தா இருக்கட்டும். அலையாமக் கழியுதில்ல. அதை நினையுங்க...-என்றாள். வீட்டுக்கு வரவழைப்பதில் தாளாத பெருமை...! வச்ச ஆள் மாதிரி...!

      நீ சொல்ற “கொஞ்சமாச்சும் லாபம்” - அவன் கடைக்குப் போய் வாங்கினாலும் அவனுக்கு உண்டு. லாபமில்லாம எவனாவது வியாபாரம் பண்ணுவானா? அதையே வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்தா...மேலும் கொஞ்சம் லாபமில்லாமக் கொடுப்பானா? அவனுக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு பெட்ரோலையும் செலவழிச்சு நஷ்டப்படணும்னு? ஆனா அது நுகர்வோருக்கும் கட்டுபடியாகணுமில்ல...?

     ஆமா...வேன்ல கொண்டு வந்து கொடுக்கிறான்...இந்தப் பகுதில நாலஞ்சு வீடுகள்ல ரெகுலரா வாங்குறாங்க....நானும்தான் கவனிச்சனே...?

     கவனிச்ச சரி....கடை விலையும், இங்க கொண்டு வந்து கொடுக்கிற விலையும் எவ்வளவு வித்தியாசப்படுதுன்னு என்னிக்காவது நோட் பண்ணியிருக்கியா? மிதமான லாபமா அல்லது கொள்ளை லாபமான்னு ஒரு நாளாச்சும் கவனிச்சிருக்கியா? கடைப் பக்கம் தலை வச்சுப் படுத்திருந்தாத்தானே? எனக்குத்தான் தெரியும்...அங்க என்ன விலை...இங்க கொண்டு வந்து கொடுத்தா என்ன விலைன்னு...!  நீதான் பில்லையும், பொருளையும் சரி பார்க்கிறதேயில்லையே?

    அவன் எவ்வளவு தன் வியாபாரத்துல கவனமாயிருக்கானோ அது போல பைசா கொடுத்து வாங்குற நாமளும் கவனமாவும், கருத்தாவும் இருக்க வேண்டாமா? ? சும்மா அவன் கொடுக்கிற பில்லுக்கு எடுத்து எடுத்து நீட்டுவியா? ஊரான் வீட்டு நெய்யே...என் பொண்டாட்டி கையேன்னு..... - சற்று உஷ்ணமாகவே கேட்டு விட்டார். அடேங்கப்பா என்னா கோபம்...?

     என்ன நீங்க....நம்ம பையன் சம்பாதிக்குற காசுல நம்ம வீட்டுக்கு, நாம பொருள் வாங்குறத...ஊரான் வீடு....அது இதுன்னு அவனைப் பிரிச்சுப் பேசுறீங்க?  காதுல விழுந்தா வருத்தப் படப் போறான்.....ஆவன் காசு வேறே...நம்ம காசு வேறேயா...?

     ஒரு விஷயம் அல்லது ஒரு பேச்சு எப்படி வேண்டுமானாலும் அர்த்தப் படுத்தப்படும். அதற்கு வேணுங்கிறவன், வேண்டாங்கிறவன்ங்கிற வித்தியாசமே கிடையாது. ஒரு பேச்சுக்கு சொல்வது என்பதெல்லாம் சும்மா...! அன்றாட வாழ்க்கையில் உறவுகளோடு இயல்பாக, போகிற போக்கில், பேச்சு வழக்கில்  இப்படி எத்தனையோ பேசிக் கொள்வோம். அதையெல்லாம் குத்தமாக எடுத்துக் கொள்ள முடியுமா? சொல்லுக்குச் சொல்  கணக்கில் கொண்டால்...கதை கந்தல்தான்...!

      நீ எவ்வளவு கொடுக்கிற, வாங்குறங்கிறது அவனுக்கென்ன தெரியும்? வெண்டைக்காய் கிலோ என்ன விலைன்னு கேளு...சொல்றானா பார்ப்போம்? வேண்டாம்...ஒரு தேங்கா விலை கேளு...அதாச்சும் தெரியுதா பார்ப்பம்...! ஆள விட்டாச் சரின்னு உன் பையன் இருக்கான்...நீ வேறே....!

     என்னை நம்பித்தானே கொடுத்திருக்கான்....உங்களை நம்பியில்லையே?

     இது வேறே பீத்தப் பெருமையா...? நான் சுங்கம் பிடிப்பேன்னு நினைச்சிருப்பான். சிக்கனம் பண்ணி அவனுக்குத்தான் கொடுப்பேன். நானா எடுத்துக்கப் போறேன்? உனக்கும் எனக்கும் உள்ள முக்கிய வித்தியாசமே அதுதான்...!  உன்னை நம்பி ரூபாய்க் கட்டைத் தந்து வச்சிருக்கான். நீ உருவி உருவிக் கொடுத்திட்டிருக்கே...! கொஞ்சமாச்சும் மனசாட்சி வேண்டாம்? இதுக்கெல்லாம் கஷ்டப்பட்ட குடும்பத்துலர்ந்து வந்திருக்கணும்...அப்பத்தான் காசோட அருமை தெரியும். நாலுக்கும் ரெண்டுக்கும் பஞ்சாப் பறந்த காலம் போய் இப்ப பறக்க விடுற காலமாப் போச்சு...!  இஷ்டம்போல சூரை விட்டிட்டிருக்கே...! பையனுக்கு சிக்கனத்தை நாம கத்துக் கொடுக்காம வேறே யார் கத்துக் கொடுப்பாங்க..? ரோட்டுல போறவனா சொல்லுவான்...?

     அநாவசியமாப் பேசாதீங்க....எங்களுக்கும் பொறுப்பா இருந்துக்கத் தெரியும்...இந்தக் கொரோனா வந்த காலத்துலேர்ந்துதானே இந்த வழக்கம் வந்திச்சு...அதுக்கு முன்னாடி நீங்கதானே போய் வாங்கிட்டு வந்திட்டிருந்தீங்க...இப்பத்தான் கொரோனா போய்டிச்சில்ல...மாஸ்க்கை மாட்டிட்டு தெனமும் போய் வாங்கிட்டு வாங்க....எனக்கு ஒண்ணும் ஆட்சேபணையில்லை.... - ரோஷம்தான் அவளுக்கு. ஏதோவோர் மன உறுத்தலில் சட்டென்று மடை மாற்றி விடுகிறாள். ஒருவேளை அவளுக்கே இப்படி அள்ளிக்கொண்டு போகிறதே என்று தோன்றியிருக்கலாம். மனதிலுள்ளதை எப்படி அறிய முடியும்?

     என் தலையில் விழுந்தது பொறுப்பு. பரவாயில்லை...மாடியில் நடப்பதை வெளியில் நடப்போம் என்று நானும் கிளம்பித்தான் விட்டேன். ஆனாலும் அந்தப் பக்கத்து வீட்டுப் பையன் கரன் சொன்னது பலமாய் உறுத்துகிறதே...? மாசம் கூடி இப்படி டோக் டோக்காய் பணத்தை அள்ளி விட்டுக் கொண்டிருந்தால் எப்படி?

     நீங்க உங்க வழக்கமான கடைக்கு நேர்ல போய் வாங்கினாலும், அங்கயும் விலை ஜாஸ்திதான் அங்கிள்...அந்தக் கடைல நானும் வாங்கியிருக்கனே...!.அநியாய விலை போடறான்...அதனாலதான் ஏன் இவ்வளவு காசு இழக்கணும்னு கேட்டேன்....கூட நாலு எட்டு வச்சு மெயின் ரோட்டுக்குப் போயிட்டீங்கன்னு வச்சிக்குங்க...அங்க டெட் சீப்....மொத்தமே முன்னூறு ரூபாய்க்குத்தான் வாங்கினேன். ரெண்டு பை நிறைய...ஒரு வாரத்துக்கு வரும் எங்க வீட்டுக்கு....

     அவர்கள் வீட்டிலும் நாலு மெம்பர்தான். ஆனாலும் சலிக்காமல் தினமும் ரெண்டு காய் வைப்பாளே சுகுணா! அங்கு எப்படியோ? எப்படியானாலும் விலை அதிகம் என்பது... பொதுவான நியதியாயிற்றே?  

     இவனென்ன இப்படிச் சொல்கிறான்? அவ்வளவு கொள்ளையா அடிக்கிறான் அவன்? ஆள் வசமா மாட்டிச்சுன்னு தலைல மொளகாய் அரைக்கிறானோ? இவள் என்னடாவென்றால் வாரா வாரம் ஆயிரக் கணக்காகவல்லவா பில் பணம் கொடுக்கிறாள்? பர்சிலிருந்து உருவி உருவியல்லவா நீட்டுகிறாள்? ஆத்தோட போற தண்ணி....அய்யா குடி...அம்மா குடின்னு இருக்கிறாளே? பையன் சம்பாதிக்கும் காசு ஆழும் பாழுமாகப் போகலாமா? அதற்கும் ஒரு கன்ட்ரோல் வேண்டாமா? நாமே அவனுக்கு ஒரு சேமிப்பு வழிகாட்டியாய் இல்லாவிட்டால் எப்படி?

     அவன் சொல்வதுபோல் மெயின் ரோட்டுக்கு இவர் போக முடியாதுதான். சாலையைக் குறுக்கே கடந்து எதிர்த் திசைக்குப் போயாக வேண்டும். அங்குதான் அங்கங்கே காய்கறிக் கடைக் கொட்டகைகள். காய் கனி அங்காடி...... பழமுதிர்ச்சோலை என்று பல கடைகள். குறுக்கே வரும் வாகனங்களைத் தவிர்த்துக் கடந்து சென்று வாங்கி வருவது பிரம்மப் பிரயத்தனம். உயிருக்கு உத்தரவாதமில்லை.

     யோசித்தார் சிவசு. உன் கடைலயே நேர்ல போய் வாங்கிண்டு வரேன்...எவ்வளவு பணம் மாதங்கூடி மிஞ்சறது பார்....என்று வீராப்போடு சொல்லிவிட்டுக் கிளம்பினார். செய்து காண்பிக்க வேண்டும் என்கிற வெறி புகுந்து கொண்டது அவரிடம். ஆனால் அங்கு போகும் எண்ணம் இல்லை அவருக்கு. மனதில் வெகு நாளாய் இருந்தது வேறு.

     க்கத்து வீட்டுப் பையன் சொன்னதுபோலவே குறைந்த செலவில் ரெண்டு பை காய்கறிகள் நிறைந்து விட்டனதான். மனம் மிகவும் மகிழ்ச்சிப்பட்டது. நல்லவேளை...இந்தக் கட்டத்திலாவது வெட்டிச் செலவைத் தடுத்தோமே...!

     அய்யா....நீங்க தெனமும் வாங்குறவுக...உங்ககிட்டப் போய் அதிகமா சொல்வனா....நீங்க வழக்கமா வாங்குற கடை எதுன்னு தெரியும். கவனிச்சிருக்கேன்...எங்கிட்ட வாங்குங்க...சல்லிசாப் போட்டுத் தர்றேன்.......எதுக்கு அநாவசியமா ரோட்டுவரை நடக்குறீங்க...நீங்கபாட்டுக்கு உங்க வீட்டுலயே இருங்க...நான்தான் வருவன்ல....சத்தம் கொடுப்பனே....அந்த நாலு தெரு சந்திக்கிற முக்குலதான தெனமும் அரை மணி நேரமாவது நிப்பேன்...நிறையப் பேரு  வந்து வாங்குவாகளே....!

     எல்லாம் சரிதான்....உன்கிட்டயே வாங்கிக்கிறேன்...ஆனா ஒண்ணு....இந்த ஏரியாவுல நீ இருக்கிற போதே நான் வந்திடுவேன். எனக்குக் கொஞ்சம் காலைல நடந்தாகணும் கட்டாயம்...தெரிஞ்சிதா....ஆறே முக்காலுக்கு வருவேன்...இந்த எடத்துக்கு....உன்னையும் இதே டயத்துக்குத்தானே பார்க்கிறேன் தெனமும்....நீ எல்லாத் தெருவையும் பார்த்திட்டு நம்ம பகுதிக்கு வர எப்படியும் எட்டரை ஒன்பது ஆயிடுதுதானே....அது ரொம்ப லேட்....சொல்றது புரிஞ்சிதா...? குறைச்ச விலைக்கு, நியாயமான லாபத்தோட தரணும் எனக்கு...சம்மதமா? - கேட்டார் சிவசு. நிச்சயம் வழக்கமான கடைக்கு, இங்கே விலை குறைந்துதான் இருக்கும். சந்தேகமேயில்லை. அலைந்து விற்பவனின் உழைப்பு மிகுந்த மதிப்புக்குரியதாச்சே!. பாவம் என்று மனம் இரக்கப்பட்டது. எவ்வளவு காலமாய் அவனும் உழைக்கிறான்?

     வாடிக்கையாக ஒரு வாடிக்கை அமைந்ததில் வண்டிக்காரனுக்கும் ஒரு திருப்தி. சரிங்க சாமி.....என்று பலமாய்த் தலையாட்டினான். உண்மையில் அவனுக்கும் நல்ல விற்பனைதான். நயமான காய்கறிகள்தான். விலை மட்டுப்படாமல் சனம் வாங்குமா?

     அவன் மீது ஏற்பட்ட கருணையினால்தான் இந்த ஒப்பந்தம். என்ன அசாத்தியமான உழைப்பு? வேகாத வெய்யில் அத்தனையும் அவன் தலையில்..... வியர்வை சொரியச் சொரிய எத்தனை தெருக்களுக்கு இந்த வண்டியைச் சளைக்காமல் தள்ளுகிறான்? தொண்டை கிழியக் கிழிய ஒருவிதமான லயத்தோடு,  காய்கறிகளின் பெயர்களை ஒன்று விடாமல் சொல்லிச் சொல்லிக் கூவுகிறான். அந்தக் குரல் கேட்டாலே அவன் வந்தாச்சு என்று புரியும். ஒரு நாள் கூட ஆப்ஸென்டில்லை.

      இப்படி இந்தத் தாய்த்திரு நாட்டில் எத்தனையாயிரம் பேர்கள் வெவ்வேறு தொழில்களில் நம்பிக்கையோடு அன்றாடம் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்? திருட்டு, கொலை, கொள்ளை, ஏமாற்று  என்று இருக்கும்  வஞ்சக உலகத்தில் எந்தச் சலனத்திற்கும் ஆட்படாமல்  இதுதான் மெய் என்று சலிக்காமல் பாடம் சொல்கிறார்களே பலா்? உண்மையே கடவுள்...உழைப்பே தெய்வம்...!

     மொத்தக் காயும் வித்தாத்தான் வீடு போவேன்யா...எப்டியும் மணி ரெண்டுக்கு மேல ஆயிடும். இடைல எங்கயாச்சும் ஒரே ஒரு டீ மட்டும் சாப்பிட்டுக்கிடுவேன். அம்புட்டுத்தேன்....ரொம்ப வருஷமா இந்தத் தொழில்தான்யா நமக்கு.....

     காலம்பற டிபன்....?

     டிபன் கிபன்லாம் ஒண்ணும் கிடையாது? ரொம்பப் பசிச்சா ஒரு பழத்த உரிச்சுப் போட்டுக்கிடுவேன்.  நேரா மதியச் சாப்பாடுதான்....

     நான் அவன் வண்டியையே பார்த்தேன். இரண்டு மூன்று சாக்குகள் மெத்தை போல் விரிக்கப்பட்டு வரிசையாக, கும்மாச்சியாக அடுக்கப்பட்ட காய்கறிகள்....அதில் சாலைத் தூசி படிந்து விடக் கூடாது என்று ஒரு பெரிய அகல  பாலித்தின் தாள் போட்டு அழகாக மூடியிருந்தான். வலது மூலையில் சிறிய முருகன் படம். ஒரு முழம் பூ. அருகே எரியும் பத்தி. அதன் சாம்பல் வெளியே விழுவதுபோல் பலகை நுனித் திட்டில் செருகியிருந்தான்.  படிக்கல் தராசுதான். ஒவ்வொரு முறையும் நிறுக்கும்போது  காய் இருக்கும் பக்கமே முள் நின்றதை இவர் கவனித்தார். நிறைஞ்ச மனசு போலிருக்கு...! அவனுக்கு ஒரு டிஜிட்டல் எடைத் தராசு வாங்கிக் கொடுத்தால் என்ன? என்று தோன்றியது.

     ந்தா...பிடி....வாங்கியாச்சு.....என்றவாறே காய்கறிப் பைகளை சுகுணாவிடம் நீட்டினார் சிவசுப்ரமணியம்.

.     ரெண்டு பையையும் எப்படி சுமந்திட்டு வந்தீங்க இவ்வளவு தூரம்...? என்றவாறே வாங்கிக் கொண்டவளின் கை வெயிட் தாளாமல் சட்டென்று தாழ்ந்தது.

     நம்ம கடைலதான வாங்கினீங்க...? என்றாள்.  கவனமாயிருக்கிறாள் பாவி.       அதுலயும் சந்தேகமா? என்றார்.

     இல்ல....லேசா வாட்டமாத் தெரியுதேன்னு கேட்டேன்....!.

     இவ்வளவு தூரம் வெயில்ல தூக்கிட்டு வந்திருக்கேன்ல....அந்தச் சூட்டுக்கு பைக்குள்ள கண கணன்னு  லேசா சுணங்கியிருக்கும்... அது வாட்டமா? இதுக்கு மேலே என்ன ஃப்ரெஷ்ஷூ...? இன்னும் ஃப்ரெஷ்ஷா வேணும்னா மாடில காய்கறித் தோட்டம்தான் போடணும்...!!

     பதிலைத் தெளிவாய்ச் சொன்னார் சிவசுப்ரமண்யம்.  திட்டமிட்ட செலவு -  என்று அவர் மனம் இரு பொருளில் கூறியது. அப்பன் குதிருக்குள்ள இல்ல.... - எத்தனை நாளைக்கோ....என்றும்  அவர் வாய் முனகிக் கொண்டது...!!              

                           ---------------------------------------

 

07 ஜூலை 2022

தேய்(ப்)பவர்கள் -கல்கி - பிரசுரம் - சிறுகதை

 


தேய்(ப்)பவர்கள்    



                                          -----------  

      துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான்.

     பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்து விடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய துணிகள். பிறகு வாங்கி வந்த இடத்திற்கு பதில் சொல்ல முடியாது. பொல்லாப்பு வந்து விடும். ஒரு கையால் அதை ஜாக்கிரதையாய்ப் பிடித்துக் கொண்டே உழட்டிக்கொண்டே ஓட்டிப் போன அவர், ‘வாங்கிட்டேன் சாரே…’ என்று பதில் சத்தம் கொடுத்தார்.

     ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்னும் அவரின் இந்தசாரேமாறாமல் அப்படியே இருந்தது. ஸார் என்பதைத்தான் அப்படி நீட்டுகிறார். இது எந்த ஊர்ப் பழக்கம்? தெரியவில்லை. கொரோனா காலத்திலும் அவரது அயராத உழைப்பு.

     ஆனால் ஒன்று. வாங்கிட்டேன் என்ற அந்த பதிலில்தான் எத்தனை உற்சாகம். எவ்வளவு சந்தோஷம்.

                துணி வாங்கிட்டீங்களா?’ என்று கேட்டதன் மூலமாக, தான் சொல்லித்தான் இது நடந்திருக்கிறது என்பதாக அவன் புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால் உண்மையில் அது அப்படியல்லவே? தேவிகா சொல்லியல்லவா அது நடந்திருக்கிறது! அவள் விருப்பத்தை மீறி என்ன நடக்கக்கூடும்?

                நாளைக்குக் காலைல வந்து துணி வாங்கிக்குங்கஅயர்ன் பண்ணிக் கொடுங்க…”

     அலுவலகம் விட்டு வருகையில் அவள்தான் சொல்லியிருக்கிறாள். எத்தனை நாள்தான் அவளும் பொறுப்பாள்?

                கஞ்சி போட்டு வைக்கிறேன்வாங்கன்னு சொன்னேன்இன்னும் வந்திட்டிருக்காங்கஒரு மாசமாச்சுஇன்னைவரைக்கும் ஆளைக் காணலைஎன்ன நினைச்சிட்டிருக்கு அந்தம்மா? கல்யாணத்துக்குப் போறேன்காட்சிக்குப் போறேன்னா சொல்லிட்டுப் போயிடலாமுல்ல?  நாம வேறே ஏதாச்சும் அரேஞ்ஜ் பண்ணிப்போமில்ல? வரேன், வரேன்னுட்டு, ஒரேயடியா வராமயிருந்தா? எனக்கானா உடம்பெல்லாம் எரியுது இந்த வெயிலுக்குதாங்க முடியலைஅதான் காட்டன் சேலையைக் கட்டிண்டு போவோம்னு ஒண்ணு ரெண்டுன்னு கஞ்சி போட்டு ஏழெட்டு சேர்த்து வச்சிருக்கேன்அந்தம்மா என்னைக்கு வர்றது? என்னைக்கு நான் அதைத் தேய்ச்சுக் கட்டுறது? அதுக்குள்ளேயும் சம்மரே கழிஞ்சிடும் போலிருக்குஇவுங்க வசதிக்கு இஷ்டம் போல வருவாங்கவச்சிருந்து வர்றபோது தூக்கிக் கொடுக்கணுமோ? அடிக்கிற வெயிலுக்கு பாலியஸ்டர், ஷிஃபான்னு போடவா முடியுது? வியர்வையானா ஊத்துது! உடம்போட ஒட்டிக்கிதுபிச்சுத்தான் எடுக்கணும் போலிருக்கு…”

     அவளின் ஆதங்கம் நியாயமானதாய்த்தான் தோன்றியது. ஆனாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொறுக்கலாமோ?

                சும்மாருங்கஎன் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்நாளைக்கு நா எதைக் கட்டிட்டுப் போறதாம்?”

                வர்றேங்கம்மாஎதிர்த்த வீட்டுக்கு வருவேன். அப்போ உங்க வீட்டுலயும் வந்து துணி வாங்கிக்கிடுறேன்…”

                மறந்துடாதீங்க…”

                அதெல்லாம் மறக்க மாட்டம்மாநீங்கதான் என்னை மறந்துட்டீங்கதுணி குடுத்துக்கிட்டே இருந்தீங்கதிடீர்னு நிறுத்திப்புட்டீங்கஎன்னன்னு தெரிலவருஷம் ஓடிப்போச்சு…”

                அதெல்லாம் ஒண்ணுமில்லவாங்கவந்து வாங்கிக்குங்க…”

     இத்தனை நாள் என்னைப் போட்டு என்ன பாடு படுத்தினாள்? அப்பாடா! பிரச்னை தீர்ந்தது.

     எனக்கு அந்தப் பழைய சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.

                என்னடா, சோர்வா வர்ற?”

                ஒண்ணுமில்லப்பா…”

                ஒண்ணுமில்லன்னா? என்னத்துக்கு மூஞ்சிய உம்முன்னு வச்சிட்டிருக்கே?”

                அதெல்லாமில்லே…”

                என்ன நடந்தது சொல்லுயூனிபார்மை எங்கயாச்சும் மண்ணுல போட்டுட்டியா?”

                இல்லப்பாநீ என்னைத்தான் குத்தம் சொல்லுவேவேறென்ன தெரியும் உனக்கு?”

                பின்னே என்ன பண்ணினே சொல்லுதுணியைத் தேய்க்கக் கொடுத்தியா? இல்லியா?”

                கொடுத்தாச்சுகொடுத்தாச்சு…”

                எதுக்குடா  இம்புட்டு அலுப்பு? வாங்கிக்கிட்டான்ல…?”

                வாங்கிட்டான்வாங்கிட்டான்…”

                அப்புறமென்ன?”

                அந்த ஆளு ரொம்ப அல்ட்ராம்ப்பா…”

                என்னது அல்ட்ரானா? இதென்ன பாஷைடா? அப்டீன்னா?”

                அப்டீன்னாகிராக்கி பண்ணிக்கிறான்னு அர்த்தம்இல்லடா கண்ணு…” – தேவிகா.

                என்ன கிராக்கி பண்றான்? தேய்க்க முடியாதுங்கிறானா? வாங்கிட்டான்ல…”

                இதுக்குத்தான் சொல்றதுவீட்லயே அயர்ன் பண்ணிக்கலாம்னுயாருக்கும் முதுகு வளைய மாட்டேங்குது…”  -.

                எனக்குத்தான் வளைய மாட்டேங்குதுநீ கொஞ்சம் வளைச்சுப் பார்க்க வேண்டிதானே…”

                நாந்தான் தெனமும் சமையக்கட்டுல வளைச்சிட்டிருக்கேன்லஇதுக்கு நீங்கதான் வளைக்கணும்…”

                உங்க சண்டைய விடுங்கப்பாஇந்த ரெண்டு துணியத் தூக்கிட்டு மாங்கு மாங்குன்னு அங்கேயிருந்து வந்திட்டியாக்கும்ங்கிறாம்ப்பா அவன்…”

     தேவிகா அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். தலையை வருடிக் கொடுத்தாள்.

                அப்டியா சொன்னான்? என்ன திமிர் அவனுக்கு…?” – தேவிகாவின் ஓங்கிய குரல்.

     படபடத்த அவளை அமைதியாக் நோக்கினேன் நான். ‘சரிசரிவிடு…’

                என்ன நீங்க..விடுங்கிறீங்க…? துணி தேய்க்கக் கொடுத்தா பேசாம வாங்கிக்கிட வேண்டிதானே அவன் வேலைஅத விட்டிட்டு இதென்ன பேச்சு…”

                ஏய்நீ என்ன? இதுக்குப் போயி இவ்வளவு டென்ஷனாரே? ஒவ்வொரு சமயம் அப்டித்தான்அவன் என்ன டென்ஷன்ல இருந்தானோஅன்றாடங் காய்ச்சி அவன்ஏதோ சின்னப்பயதானேன்னு சொல்லியிருப்பான்இதெல்லாம் ஒரு குத்தமா? இந்தக் கொரோனா காலத்திலும் இப்டி உழைக்கிறானே வீட்டோட முடங்காம?  

                அதெப்படிங்கஅவசரத்துக்குத்தானே இந்த ரெண்டு துணி? யாராச்சும் பத்திருபதுன்னு தூக்கிக் கொடுத்தனுப்புவாங்களா? வீடு வீடா அவன் வந்துதானே வாங்கிக்கிறான்? தூக்கிட்டுப் போய்க் கொடுக்கிறோம்னா அதை அவசரம்னு புரிஞ்சிக்க வேண்டாமா? இப்டியா பேசுறது? ஒரு நாளைக்கு ரெண்டு துணி கொடுத்தா அதென்ன இளப்பமா? கேவலமா? எல்லா நாளுமா பத்திருபதுன்னு கொடுக்க முடியும்? ரெண்டே ரெண்டு. அதுவும் யூனிபார்ம்னுதானே கொடுத்தனுப்பினது? வாடிக்கையான அவன் இதைச் சொல்லக் கூடாதுல்ல…? ரெண்டு துணிக்கான காசு பத்து ரூபான்னா அது பணமில்லியா? அதுக்கு மதிப்பில்லியா? எந்த வீட்லயும் இந்த மாதிரி என்னிக்காச்சும் ரெண்டு துணி கொடுத்தே இருக்க மாட்டாங்களா? எல்லாரும் எப்பவும் இருபது, முப்பதுன்னுதான் துணி கொடுப்பாங்களாக்கும்? அப்பத்தான் இவுரும் வாங்குவாராக்கும் அய்யா? இதெல்லாம் வேண்டாத பேச்சில்ல?”

     அசந்து போனேன் நான். இதற்கு இவ்வளவு அர்த்தங்களா? வாயடைத்துப் போனேன்.

                எப்பவுமே ஒருத்தரையே சார்ந்து இருந்தா இப்படித்தாங்கஇதெல்லாம் வரத்தான் செய்யும்இதுக்கு ஒரு வழி பண்ணினாத்தான் ஆகணும்…”

     சொன்னாள். சொன்னதுபோல் செய்தும் விட்டாள்.

     எங்கு போய் ஆளைக் கூட்டி வந்தாளோ? எப்படித் தேடிக் கண்டு பிடித்தாளோ? யாரிடம் சொன்னாளோ? தெருக் கோடியில் பரந்த மரத்தடியில் ஒரு அயர்ன் வண்டி. ஆளா இல்ல…? அவளே சொல்லிக் கொண்டாள்.

     ஏம்மா துணி கொடுக்கலை…? அவனும் கேட்கவில்லை.

     எத்தனை வருடங்கள் ஓடிப் போயின? வாசலில் வண்டியை ஸ்டான்ட் போட்டு பூட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தவன்தான்அதற்குள் அந்தச் சத்தம்.

                யம்மா…”

                யாரு…?”

                அயர்னுங்க ஸார்…”

                அயர்னா? வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தேன்.

                அடடே…! நீங்களா? வாங்கம்மா…”

                ஆமாங்கய்யாதுணி தர்றீங்களா…?”

                துணியா..தர்லாமேதேவிகாஏய் தேவி….! அந்தம்மா வந்திருக்காங்க…” – பதட்டத்தில் என்னவோ சொன்னேன். இதென்ன கஷ்டம் ஆக்கப் பொறுத்து ஆறப் பொறுக்காத கதையாய்

                துணி இல்லன்னு சொல்லுங்க…” உள்ளேயிருந்து சைகை மூலம் தெரிவித்தாள்.

                துணி இல்லியாமேம்மா…”

                இல்லீங்களா…? சரிங்கய்யாஎங்கண்ணாச்சிக்கு ஒடம்பு முடில.....கொரோனா வந்திருச்சு...புள்ளைகளப் பார்த்துக்க ஆளில்ல...அதுக்குப் போயிட்டேன்அதான் வரமுடிலீங்கய்யா…”

                அப்டியா? ஒரு மாசம் போல ஆச்சு போலிருக்கு?”

                ஆமாங்கய்யாஎங்க அத்தைட்டக் கூடச் சொல்லி விட்டிருந்தேன்வெவரம் சொல்லிப்புடுன்னுஅது வீடு தெரிலன்னு திரும்பி வந்திடுச்சி…. …அடுத்த வாரம் வாரேன்எடுத்து வச்சிருங்கதேய்ச்சுத் தாரேன்இதான்யா எங்க பொழப்பே...விட்ர முடியுமா? ” – சொல்லி விட்டு நகர்ந்தது அது.

     உள்ளே வந்தேன். அவரவர் பாடு அவரவர்க்கு. ஒரு சின்ன வருமானம் என்றாலும் விட முடிகிறதா? சிறுகச் சிறுக காசு பார்த்துத்தான் ஜீவனமே...! அன்றாடப் பாடு..பட்டால்தான் தெரியும் .! பாவம்தான்...!

     துணிகளை அந்தாள்ட்டக் கொடுத்தாச்சுன்னு சொல்ல வேண்டிதானே? ஏன் இப்படிப் பயப்படுறீங்க…?”

                எனக்கு பயமான்னு கேட்குறியே? நீ வந்து சொல்ல வேண்டிதானே? உள்ளேயிருந்து சைகை காண்பிக்கிறே?”

     எனக்கு பயமா? எதுக்கு?   பயமா? அல்லது தயக்கமா?

     மீண்டும் வாசலில் சத்தம்.

                அய்யாஅம்மா கஞ்சி போட்டு எடுத்து வைக்கிறேன்னு சொல்லியிருந்தாகய்யா பாவம்சேலைக இருக்குதான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கய்யா…”

                சொல்லுங்கசொல்லுங்கசொல்லிடுங்க…” உள்ளேயிருந்து விரட்டினாள் தேவிகா.

                நீங்க வரலேன்னுட்டு அடுத்த தெருவுல ஒருத்தர் இருக்காருல்லஅவர்ட்டக் கொடுத்து வாங்கியாச்சு…”

                அப்டீங்களா? ஆகட்டுங்கய்யாபரவால்லஅடுத்த வாரம் வாரேன் எடுத்துவச்சிருங்கதேய்ச்சுக்கொடுக்கிறேன்என்னங்கய்யாகண்டிப்பா வந்திடுறேன்இனி எந்த வேலையுமில்லமறக்காம எடுத்து வச்சிருங்கஅம்மாட்டச் சொல்லிடுங்கஉள்ளாற வேலையா இருக்காக போலிருக்குஇந்தக் கொரோனா பல வகைல கஷ்டப்படுத்திருச்சிய்யா...நிறைய வாடிக்கைக இல்லாம ஆயிடுச்சி...பாதிக்குப் பாதி வருமானம் போச்சு...நம்மம்மா என்னைத் தவிர வேறே யார்ட்டயும் கொடுக்க மாட்டாகநாந்தேன் வந்து வாங்கிட்டுப் போவேன்அவுக சொல்றப் பிரகாரம் தெளிவா அயர்ன் பண்ணிக் கொடுப்பேன்அதுனால எங்கிட்டத்தான் கொடுப்பாகஅம்மாட்ட மறக்காமச் சொல்லி வையுங்க சாமி….அடுத்த ஞாயித்துக்கெழம வந்திடுறேன்ஒவ்வொரு வாடிக்கையா கொறையுது தெய்வமே...நீங்களும் கைவிட்ராதீக....”-தழுதழுக்கும் குரல் என்னை நெகிழ்த்தி விட்டது. காலமெல்லாம்  உழைத்து உழைத்து உருக்குலைந்து தேயும் இம்மாதிரி எத்தனை மனிதர்கள் இந்த உலகில்?

     எவ்வளவு நம்பிக்கை?  எங்கிட்டதான் கொடுப்பாக...எங்கிட்டதான் கொடுப்பாக....எத்தனை தடவை சொல்லும் இதை? பாவமாய் இருந்தது எனக்கு.என் வறுமை கலந்த ஆரம்ப கால வாழ்க்கை ஞாபகம் வந்து மனசைக் குடைந்தது.  தளர்ந்த நடையோடு போய்க் கொண்டிருக்கும் அந்தப் பெண் வறுமையின் அடையாளமாய்....!

     அட கடவுளே! கடைசியில் பழி எனக்குத்தானா?  கூடவே இதுவும் உறுத்த ஆரம்பித்தது.

     அடுத்த வாரம் யாரிடம் கொடுப்பது? சட்டென்று வந்து விழுந்த கேள்வி.

                யம்மாஅயர்ன் துணி கொண்டு வந்திருக்கேன் தாயீ…”

     வாசலில் அவன்  குரல்!!                                                                                                                                                                                                                                                                                ----------------------------------      

 

                உஷாதீபன்,                                                                    எஸ்.2 – இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172)                                   மேத்தா’ஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                       ராம் நகர் (தெற்கு)12-வது தெரு, ஸ்ருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில்,                   மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188)