02 ஜனவரி 2021

யானை டாக்டர் - ஜெயமோகன் - வாசிப்பனுபவம்

யானை டாக்டர் - ஜெயமோகன் - வாசிப்பனுபவம் -உஷாதீபன்                          



 வெளியீடு - தன்னறம், குக்கூ காட்டுப்பள்ளி, புளியனூர் அஞ்சல், சிங்காரப்பேட்டை-635307, கிருஷ்ணகிரி மாவட்டம். (தொடர்புக்கு-98438 70059).

      யானைகளின் உடல் நிலையைப் பேணுவதற்காக இவர் உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. அவர் டாக்டர் கே./ டாக்டர் திரு.கிருஷ்ணமூர்த்தி. தன் வாழ்க்கையையே யானைகளின் நலனுக்காக அர்ப்பணித்தவர். அவைகளின் ஒவ்வொரு அசைவையும், நகர்தலையும், பார்வையின் பொருளையும் உணர்ந்தவர். சமிக்ஞைகளைப் புரிந்தவர். அவரின் அன்பார்ந்த நேசத்தை அவைகளும் உணர்ந்திருந்தன. இவர் நமக்கு ஆபத்தில்லாதவர். பாதுகாப்பானவர், நம்மைப் பாதுகாக்கவென்றே தன்னை அர்ப்பணித்தவர். தன் வாழ்வில் எந்த சுயநலத்தையும் கருதாமல், தனக்கென்று ஒரு குடும்பம் என்று கூடக் கொள்ளாமல் நம்மைப் பாதுகாக்க, பராமரிக்க என்று இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர் என்று உணர்ந்து இவர் மீது அளவிலா அன்பு செலுத்தின.

     உடலில் ஒரு சிறு நோவு என்றாலும் இவர் இருப்பிடம் தேடி வந்தன. இரவானாலும், பகலானாலும், பனி பெய்யும் பொழுதானாலும், மழையும் புயலும் என எது நிகழ்ந்தாலும், எத்தனை மைல் தூரமானாலும்,  நமக்காக இவர் உண்டு என்று அவர் இருப்பிடம் நோக்கி வந்து தஞ்சம் புகுந்தன. தன் உறவுக்கு, தன் குட்டிக்கு, தன் இனத்தில் உள்ள எவருக்கும் எனினும் இவரிடம் சென்றால் நமக்கு நலம் உண்டு என்று அன்பு செலுத்தின. நம்பி வந்து நின்றன. அந்த நம்பிக்கையை அளித்தவர் அவர். டாக்டர் கே. அதற்காக அவர் பெரும்பாடு பட்டிருக்கிறார். நிறைய உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். தன்னலம் கருதாது செயல்பட்டிருக்கிறார். தன் சந்தோஷங்களை இழந்திருக்கிறார். விரும்பித் துறந்திருக்கிறார். யானைகளின் நலனே தன் நலன் என்று வாழ்ந்திருக்கிறார். தன் பொழுதுகளை, நாட்களை, மாதங்களை, வருடங்களை  தன் மொத்தக் காலங்களை, எனக் கணக்கில் கொள்ளாது தியாகம் செய்திருக்கிறார்.

     அன்பின் சின்னமாய் அவர் விளங்கினார். அரவணைப்பின் ஆதாரமாய் நின்றார். மனிதன் தன்னை, இந்த இயற்கையை, பிற ஜீவராசிகளை தன் மேன்மையான குணத்தை ஆதாரமாய்க் கொண்டு ஆழமாய் நேசிக்க முடியும், அவற்றை அரவணைத்து நலம் காக்க முடியும். தன் பார்வையாலும், புன்னகையாலும், கையசைவினாலும்,உடல் மொழியினாலும் அவைகளை ஈர்க்க முடியும். நேசத்தைப் புரிய வைக்க முடியும். தன் அன்பை வெளிப்படுத்த முடியும். அதன் ஆழத்தை, உண்மையை உணர வைக்க முடியும் என்று செய்து காட்டினார். அந்தச் செயலில் எந்தச் சுயநலமும் இல்லை. எந்த விளம்பரமும் இல்லை. யாரும் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. தூய அன்பின் வெளிப்பாடு அது. நான் நினைத்தேன். செய்கிறேன். இதைச் செய்வதில் நான் மன நிம்மதி அடைகிறேன். என் ஆத்மா சாந்தி பெறுகிறது. என் இதயம் பெருமிதமடைகிறது. மனம் பொங்கி வழிகிறது. இது எனக்கு இறைவன் வகுத்த விதி. அவன் போட்டுக் கொடுத்த பாதை. என் ஆழ் மன உணர்வினையே நான் பிரதிபலிக்கிறேன். அதுவே எனக்கு இறைப்பாதையை வகுத்துக் கொடுத்தது. இது நான் மனமுவந்து செல்லும் பாதை. முனைப்போடு மேற்கொண்ட புனிதப் பயணம். என் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை இது தொடரும்.

     இந்த யானைகளே என் நண்பர்கள். என் உடன் பிறப்புக்கள். இதுவே என் வாழ்க்கை....இவையன்றி என்னால் தனித்து வாழ இயலாது. தனித்து இயங்க இயலாது. தனித்து என்னை உணரவே இயலாது.

     ந்தக் காட்டைப் புரிஞ்சிக்கிட்டாதான் இங்க எதையாவது செய்ய முடியும். காட்டைப் புரிஞ்சிக்கணும்னா காட்டிலே வாழணும். இங்க வாழணும்னா,அந்த உலகத்துலே இருக்கிற பணம், புகழ், அதிகாரம், லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் உதறிட்டு வரணும். இவங்களை விட்டா நமக்கு வேறே சொந்தம் எதுவுமி்ல்லேன்னு இருக்கணும். போய்யா...போய்ப் பாரு...அந்தா இருக்கானே செல்வா...அவனை மாதிரி வேறு ஒரு சொந்தக்காரன் உனக்கு இருக்க முடியமா? அந்த நிமிர்வும், அந்தக் கருணையும், அற்பத்தனமே இல்லாத கடல் போல மனசும், அதை அறிஞ்சா மனுஷன் ஒரு பொருட்டா?

     மனிதனின் கீழ்மைகள் எண்ணிலடங்காதவை. இந்தக் காட்டுக்கு வரும் சிலரின் கீழான செயல்பாடுகள் - ஒவ்வொரு நாளும் முகத்திலறைந்ததுபோலக் காணக் கிடைக்கும் கொடுமை - வழி தோறும் குடித்துக் கும்மாளமிடுவதும், வாந்தி எடுப்பதும், மலைச்சரிவுகளின் மௌன வெளியில் காரின் உறாரனை அடித்துக் கிழிப்பதும், முடிந்தவரை உச்சமாக காரின் ஸ்டீரியோவை அலறவிட்டுக் குதித்து நடனமாடி, ஓங்கிக் குரலெடுத்துக் கெட்டவார்த்தைகளைக் கூவுவதும்....பாட்டில்களை உடைத்து எறிவதும், - கீழ்த்தரமான பச்சை சுயநலம் தெறிக்கும் - மனிதப் புழுக்கள். உடைந்த பாட்டில்களின் சிதறல்களால் எத்தனை யானைகள் எவ்வளவு துயரத்துக்கும்,துன்பத்துக்கும் ஆளாகியிருக்கின்றன. உயிரிழந்திருக்கின்றன. எவ்வளவு உடல் வேதனைக்கு ஆளாகி மீள முடியாமல் தவித்திருக்கின்றன? எந்த மிருகத்தை விடவும் யானைக்கு அந்த கண்ணாடிச் சிதறல்கள் மிகவும் அபாயகரமானது என்பதை யாரேனும் உணர்ந்திருக்கிறார்களா?

     இதுபோன்ற எண்ணிலடங்கா வேதனைகளைத் தாளாமல்தான் என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என்று சொல்லாமல் சொல்லி கருணை மழை பொழிகிறார் டாக்டர் கே. அவருக்கு பத்மஸ்ரீ விருதிற்காக முயல, அது கடைசி நிமிடத்தில் நழுவிப் போன தகவல் மிகவும் வேதனையாய் உணரப்பட்டபோது, துளியும் அதனைப் பொருட்படுத்தாத ஒரு புன்னகையே அதற்கு பதிலாகிறது. அந்தோ நிற்குதே, அந்த யானைக்கு உன்னைத் தெரியும்ங்கிறதை நீ பெரிசா நினைச்சேன்னா, டெல்லியிலே யாரோ ஒரு காகிதத்துலே எழுதிக் கையிலே கொடுக்கிறதைப் பெரிசா நினைக்கத் தோணுமா?

     நான் உங்கள வெளியே கொண்டு போகணும்னு நெனச்சேன் டாக்டர். இங்கே இப்படியொரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை இருக்கும்னு எனக்குத் தெரியாது. இப்படிப் புத்தம் புதுசா ஒரு உலகத்தைப் பார்க்கப் போறோம்னு நான் நினைக்கலை.....

     இங்க வந்து குடிச்சு வாந்தி பண்ணி பீர்பாட்டிலை உடைச்சு யானை காலுக்கு போட்டுட்டு போறானே அவனும் நம்ம சமூகத்திலேதான் டாக்டர் வளர்ந்து வர்றான். அவன்தான் ஐ.டி.கம்பெனிகளிலேயும் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளிலேயும் வேலை பார்க்கிறான். மாசம் லட்ச ரூபா சம்பளம் வாங்கறான். கொழ கொழன்னு இங்லீஷ் பேசறான். அதனால பிறவி மேதைன்னு நினைச்சிக்கிறான். தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கையிலேதான் இந்த நாடும் இந்தக் காடும் எல்லாமும் இருக்கு. அவங்களிலே ஒரு பத்து பர்சன்ட் ஆட்களுக்கு இப்டி ஒரு மகத்தான வாழ்க்கை, இப்டி ஒரு தெய்வீக உலகம் இருக்குன்னு தெரியட்டும்னுதான் முயன்றேன். இப்டி ஒரு ஐடியலிஸத்துக்கும் இன்னும் நம்ம சமூகத்திலே இடம் இருக்குன்னு காட்ட முற்பட்டேன். இன்னும் இங்கே காந்தி வாழறதுக்கு ஒரு காலடி மண்ணிருக்குன்னு சொல்ல நினைச்சேன்...ஒரு பத்துப் பேரு கவனிச்சாப் போருமே டாக்டர்....

     பெரும் லட்சியவாதம் மனிதர்களின் அந்தரங்கத்தில் உறையும் நல்லியல்புகளைச் சென்று தீண்டும்...காந்தியின் வலிமை அங்குதான். அந்த ஊற்றின் ஈரம் எங்கேனும் ஓரிடத்தில் இன்னும் இருக்கும்தான்.

     அந்த நன்னெறியினை நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறது இந்த “யானை டாக்டர்“.  வெறும் கதையல்ல இது. வாழ்க்கை நெறி. ஒரு புனிதமான வாழ்வியல்.  ஒவ்வொரு மனிதனின் கவனத்திலும் சென்று ஆழப் பதிய வேண்டிய  அறநெறிச் சாரம்.

                           -----------------------------------------------------

 

 

23 டிசம்பர் 2020

“மனச் சாய்வு““ஜெயந்தன்-சிறுகதை வாசிப்பனுபவம்

“மனச் சாய்வு“ஜெயந்தன்-சிறுகதை வாசிப்பனுபவம்




னசாட்சி உள்ளவனாகப் படைப்பாளி இருக்க வேண்டும். உள்ளொன்றும் புறமொன்றுமாக இருத்தல் நல்லதல்ல. தன் உண்மையைத் தானே அறிந்திருத்தல் அவசியம். தான் எங்கே நிற்கிறோம் என்பது புரிந்திருக்க வேண்டும்.

அதை நியாயமாய் எவன் உணர்கிறானோ அவனே தன் பயணத்தை திடமாய்த் தொடர முடியும். புற வாழ்க்கைச் சிக்கல்கள் அவனைக் கட்டிப் போடாமல் இருந்தால். அம்மாதிரித் தன் எழுத்து வன்மையை உணர்ந்து நகர்ந்த படைப்பாளிகள் மிகச் சிலர்தான். அவர்கள் அவர்களிடத்தில் ஆணித்தரமாய் நின்றார்கள். அவர்களைத் தேடி வருபவர்கள் வந்தார்கள்.

இப்படி ஒருவர் வீர்யமாய்த் தொடர்ந்து எழுதுகிறாரே…அவரைப் பார்க்க வேண்டுமே….என்று அறிந்து பாராட்டி…நீங்கள் நம் இதழில் தொடர்ந்து எழுத  வேண்டும் என்று சொன்னார் அந்தப் பிரபல வார இதழின் ஆசிரியர். அந்த மாதிரி ஒரு கௌரவம் கிடைக்க வேண்டும் படைப்பாளிக்கு.

அப்படியொரு ஆணித்தரமான எழுத்து வன்மை அமைய  வேண்டும். எடுத்துக் கொண்ட கருவை முதலில் தான் உள்வாங்கி, அசை போட்டு, தெளிவு பெற்று –கையில் பேனாவை எடுத்தால்தான், சொல்ல வந்ததை, சொல்ல நினைத்ததை  பிறத்தியாருக்கும் தெளிவாகச் சொல்ல முடியும். தனக்கே புரியாமல் எழுதப் புகுந்தால், என்ன சொல்றான் இந்தாளு? என்று சுலபமாய் நகர்ந்து விடும்-ஒதுக்கி விடும் அபாயம் நிறைய உண்டு.

இவர் ஒரு போதும் அப்படியிருந்ததில்லை. ஆணித்தரமாய் சொல்கிறேன்-கேட்டுக்கோ – என்று எழுதியவர். பொட்டில்  அறைந்ததுபோல் படீர் படீரென்று முன் வைத்தவர். அவனவன் பக்கம் அவனவன் நியாயம் என்பது உண்மையானால், அதை அவரவர் நிலையில் வாதிட்டு வெற்றி கண்டவர்.

அழுத்தம் திருத்தமான எழுத்து என்று சொல்வது வெறும் வாய் வார்த்தையல்ல. இவரின் படைப்பில் கல்வெட்டுப் போல் பதிந்து ,  அதுதான். இவர மாதிரி  இவர்தான். இவர் மட்டும்தான்.அதுதான் வித்தியாசமான, தனித்துவமான எழுத்து. மிகக் குறைவாக இருந்தாலும் காலத்துக்கும் பேசப்படும் எழுத்து.

“மனச் சாய்வு” என்ற கதையாடலுக்கு இவ்வளவு முகமன் சொல்லி ஆரம்பித்தால்தான் அந்தப் படைப்பாளிக்குப் பெருமை. திறமை மிகுந்தவர்களைக் கொண்டாடும் மனம்  வேண்டும். நாம் செய்யாததை, செய்ய நினைத்து ஆகாததை, இவர் செய்து விட்டார்…எப்படியோ பதிவாகிவிட்டது எழுத்துலகில்.  அந்தவகையில் திருப்தியோடு நிறைவு கொள்ள வேண்டும். அந்த மேம்பட்ட மனநிலையில் இந்தக் கதையாடல்:-

ஒரு கதையைப் படிப்பதும், ஆழ்ந்து ரசிப்பதும் பெரிதல்ல. அதை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும்போது எவ்வாறு முன் வைக்கிறோம் என்பதே முக்கியம். படைப்பாளி எழுதியதுபோலவே சொல்லி விடுவது சரியா? எதை மையப்படுத்தி அந்தக் கதையைக் கட்டமைத்திருக்கிறார்  என்பதை உணர்ந்து அந்தக் குறிப்பிட்ட கருத்தை அங்கங்கே எப்படியெப்படித் தொட்டுச் செல்கிறார் என்பதை ஊன்றிக் கவனித்து, அப்படியான நகர்த்தல் மூலம் சொல்ல வந்த கருத்து எவ்வாறு பலம் பெறுகிறது எப்படித் தன்னை முகிழ்த்துக் கொள்கிறது என்பதை வாசக மனத்தில் ஆழப் பதியும்படி நிலை நிறுத்துவதுதான் கதை சொல்லியின் தலையாய பணி.

சிதம்பரநாதன் அந்தப் பெண்ணைக் கூர்ந்து கவனித்தார். பெண் மூக்கும் முழியுமாக இருக்கிறாளே தவிர குறிப்பிட்ட ஜாதியாக எந்த முத்திரையும் இல்லை.

கோவிச்சுக்காதேம்மா. இவன் அப்பாவோட பேசுறதுக்காக ஒரு புள்ளி விவரம் தேவைப்படுது. உங்க ஜாதி பெயர் என்ன?

அந்தப் பெண் பட்டென்று அழுத்தம் திருத்தமாக பொட்டில் அடித்தாற்போல் சொன்னாள்:-“பறையர்”

அப்பா தங்கள் காதல் கல்யாணத்துக்கு தடை சொல்றார் என்று ராஜசேகரன் சொல்ல, என்ன பிரச்னை என்று இவர் கேட்க ஜாதி என்று ஒரே வார்த்தையில் அவன் சொன்னது இப்போது சுரீரென்றது இவருக்கு.

ஒரு கணம் திகைக்கிறார். மறுகணம் சபாஷ் என்கிறது மனம். எத்தனையோ தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பதவியினால், பொருளாதார மேம்பாட்டினால் மேலே வந்த பிறகு தங்கள் ஜாதியைப் பற்றிச் சொல்லக் கூச்சப்படுகிறார்கள். அல்லது மெதுவாய்ச் சொல்கிறார்கள். மறைக்கிறார்கள். மெல்லிய தொனியில் உறரிஜன் அல்லது எஸ்.ஸி., என்று சொல்லக் கேட்டிருக்கிறார். இவள் பரவாயில்லையே…பட்டென்று சொல்கிறாளே….இந்த அமைப்பை உடைத்து நொறுக்குகிறவரை எங்கள் கோபாக்னி தணியாது என்று இப்படி உரத்துச் சொல்கிறாளோ…? ஒருவகையில் இது சவாலும் கூட….

சரி…சேகர்…உங்கப்பாட்டப் பேசறேன்…..

தாங்க்யூ பெரியப்பா…..

நீ போய் நீபாட்டுக்கு உன் வேலைகளைப் பார்த்திட்டு இரு…பிரச்னையை ஆரம்பிக்காதே…அவுங்க ஆரம்பிச்சாலும்…பெரியப்பா வர்றாருன்னு சொல்லிடு….

ஒரு பிரச்னைக்கு எத்தனையோ கோணங்கள் உண்டே…! எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோணங்கள்.ரேகை சாஸ்திரம் சொல்வது போல் ஒருவனுடைய கைரேகை போல் வேறொரு கைரேகை இருக்கவே இருக்காது. ஒரு கோடாவது மாறியிருக்கும். கூட இருக்கும்….குறைய இருக்கும்…இருந்தே தீரும்….பிரச்னை மனிதர்கள் இடையேயும் இப்படித்தான்.

தன் வீட்டுக்குப் போன ராஜசேகரன் பெரியப்பா சொல்படியே அமைதி காக்கிறான். ஆனால் வீட்டில் பாட்டி என்று ஒருத்தி இருக்கிறாளே…பெரியப்பா வரும்முன் காரியம் மிஞ்சி விடுகிறது. பாட்டிகள் பிரச்னைகளின் மேல் விவாதங்களை வைப்பவர்கள். தாங்கள் இதுகாறும் தலையில் சுமந்தவைகளை, பிறர்பால் ஏற்றி வைக்க நினைப்பவர்கள். தங்களது சென்ற காலத்தை நியாயப்படுத்திப் பேசுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே சந்தோஷம்.

நான் சொல்றனேன்னு கோவிச்சுக்காதடா ராஜா….உலகத்துல படிச்சவன்தாண்டா  முட்டாள்….

ஆமாம் பாட்டி…..

என்ன ஓமாம்….இல்லாட்டி உன் புத்தி ஏன் இப்டிப் போகுது?

இருமல் எப்டியிருக்கு பாட்டி…?

ஒரு மட்டா தூக்கிட்டுப் போகாமக் கெடக்கு….இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்காமப் போய்ச் சேரலாமே…?

மணப்பாற முறுக்கு வாங்கிட்டு வந்திருக்கேன் பாட்டி…அம்மாட்ட கேட்டு ஒரு பத்து வாங்கிக்க…..

தங்கை சாந்தா சிரிக்க… அம்மா பிரவேசிக்கிறாள்.

வாயை மூடுடி…அவன் திமிர்தண்டமாப் பேசுறான்…இவ சிரிக்கிறா…..அவன் செய்ற வேலைனால நாளைக்கு உனக்கு என்ன ஆவும்னு தெரியுமா? தெரிஞ்சா சிரிப்பு வருமா….? ஒனக்காகத்தாண்டி எங்க அடி வயிறு கலங்குது….ஒரு கீழ் ஜாதியக் கட்டினவன் வீட்டுல எவன்டி வந்து பொண்ணு கேப்பான்….

ஏன் அவளுக்கும் அந்த ஜாதியிலேயே மாப்ள தேடுவான்… - இது பாட்டி.

பாத்தா போச்சு பாட்டி…..

விளக்கமாத்தால அடிப்பேன் நாயி…வாயை மூடுடா…..

சரி…இவர்கள் கிடக்கட்டும். அசலான பிரச்னை அப்பாதான். அவர்  என்ன சொல்லப் போகிறார்?

அப்பா வந்தாச்சு…. – தங்கை சாந்தா.

அப்பாவோடு இந்த விவாதம் எப்படிப் போகும் என்பதை எவராலும் யூகிக்க முடியாது. யூகித்தாலும் எழுதியவர் எவரும் கிடையாது. எந்த இடத்தில் நெருடல் என்பதை எவரும் தெளிவுறப் பகன்றது கிடையாது. எப்படியானாலும் ஏற்றுக் கொள்வது கடினம் என்றுதான் பிரச்னைகள் பயணித்திருக்கின்றன.ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்றுண்டு….அதுதான் ஜாதிப்புத்தி…..அது எல்லோருக்கும் உண்டு. அங்கும் உண்டு…இங்கும் உண்டு. எங்கும் உண்டு என்பதனால்தானே பிரச்னையே…!

எப்போ வந்தே…?

கொஞ்சம் முன்னாடிதாம்ப்பா…….

நீ மட்டும்தான் வந்தியா…?

ராஜசேகரன் அப்பாவை அமைதியாய்ப்  பார்க்கிறான்.

இல்ல…உன் வருங்கால மனைவியையும் கூட்டிட்டுத்தான் வந்திருக்கியான்னு கேட்டேன்…

கோபத்தை அடக்கி வாசிக்கிறாரோ…தாக்குதலை ஆரம்பத்திலேயே கடுமையாக்கும் யுக்தி.

நீங்க இப்டி வரவேற்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா கூட்டியாந்திருப்பேன்….

ஒரு விஷயம் ஒரு குடும்பத்தில் எப்படி வெடிக்கும்….பெரியோர்கள் மத்தியில் அது எப்படி விகசிக்கும்…படிப்படியாக எப்படி வளரும்….? காட்சிப்படுத்தல் என்பது என்ன அத்தனை சுலபமா? இயல்பான தன்மையிலே பிரச்னையை மையமாக வைத்து படிப்படியாக அது தன் முதிர்ச்சியை நோக்கி நகர்தல் அல்லது நகர்த்துதல்-இதில்தான் படைப்பாளியின் எழுத்துத்திறனே அடங்கியிருக்கிறது.

என்னடா சொன்னே…? என்று மகனைப் பார்த்துத் திரும்பி முறைக்கிறார் நாகசுந்தரம்.

என்னங்க இது…வந்ததும் வராததுமா? – அம்மா இடையே பாய்கிறாள். எல்லாம் நீங்க செஞ்ச வேலைதான். நீங்க சீர்திருத்தம்…சீர்திருத்தம்னு பேசினீங்க…அவன் செஞ்சுட்டான்….இப்ப மொறச்சு என்ன பண்ண? – அம்மா பேசுவதை மகன் பிடித்துக் கொள்கிறான்.

நீங்க ஒரு போலின்னா எங்களுக்கும் அதையே சொல்லிக் கொடுத்திருக்கணும்…

என்னடா போலி?

ஜாதி இல்லே…மதம் இல்லேன்னு நாள் பூரா பேசுறது….கலப்புக் கல்யாணம்தான் அசல்னு சொல்றது. தனக்குன்னு வந்தா மட்டும் சீறுறது…..

காலம் பூராவும் புதிய சித்தாந்தம் பேசியவர் விட்டுக் கொடுப்பாரா என்ன…? நாகசுந்தரம் ஒன்றும் அத்தனை மசிந்தவரில்லை.

இப்பவும் அதையேதாண்டா சொல்றேன். கலப்புக் கல்யாணம் செய்யலாம்தான். ஆனா கலாச்சார மோதல் இல்லாம செய்யணும்…

ராஜசேகரன் யோசிக்கறான். இதென்ன புதுசா ஒண்ணு சொல்றாரு…இதுநாள்வரை இதச் சொன்னதில்லையே….! புது சிந்தனையா…? அல்லது  புது சாக்கா….?

வெங்காயம்….ஒரு ஜாதி சைவமா இருக்கு.  இன்னொண்ணு அசைவமாயிருக்கு. ஒருத்தன் சாராயத்த சொர்க்கம்ங்கிறான். இன்னொருத்தன் அதைப் பாவம்ங்கிறான். நியாய அநியாயம் ஒரு பக்கம் கெடக்கட்டும்….ஒரு ஜாதி அன் கல்ச்சர்டா இருக்கு…இன்னொன்ணு பெரும்பாலும் எல்லாரும் படிச்ச கல்ச்சர்டா இருக்கு…நாம் அவங்களுக்கு என்ன சாம்பார் வைக்கிறது? அவுங்க நமக்கு என்ன கொழம்பு வைப்பாங்க…? அவுங்க சொந்தக்காரங்க நாலு பேரு நாளைக்கி கன்னங்கரேல்னு மேல் சட்டடையில்லாம> நம்ம நடு வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்தா பொருத்தமாயிருககுமா? சோபாவுல கால் வச்சி குந்திக்கி்ட்டு வெத்தில எச்சியை எங்க துப்புறதுன்னு தெரியாம முழிச்சா எப்படியிருக்கும்? அட அதுதான் போகட்டும்…சமயல் கட்டுல சம்பந்தி அம்மாக்கள் என்னா பேசிக்கிறது? கலப்புத் திருமணம் நடக்கட்டும்…முதல்ல அது ஒரே கலாச்சார எல்லைக்குள்ள இருக்க ஜாதிக்குள்ள நடக்கட்டும்…..

ராஜசேகரன் நினைக்கிறான். இந்தியாவில் ஜாதிப் பகைமை பெருமளவு மறைந்து விட்டாலும், திருமணக் கலப்பில் இன்னும் பிரிந்துதான் கிடக்கிறது.

கலாச்சாரம் ஒண்ணுதான் உங்க பிரச்னைன்னா இந்த விஷயம் சுலபமா முடிஞ்சி போகும்ப்பா….அவுங்க நம்மள விட மேம்பட்டவங்க…அவங்க தாத்தா ஸ்சூல்  தலைமையாசிரியர். அப்பா தாசில்தார். அண்ணன்  ஆர்மில கேப்டன்…அக்காவும் ஒரு டாக்டர்…அமெரிக்காவுல…அவுங்க யாரும் நம்ம வீட்டு சோபாவுல உட்கார்ந்துக்கிட்டு வெத்தல எச்சிய எங்க துப்புறதுன்னு முழிக்க மாட்டாங்க….

நாகசுந்தரம் விதிர்த்துப் போகிறார். குடும்பமே அவரைப் பார்க்கிறது. என்ன சொல்லப் போகிறார்?

ஆடிப் போகிறார் நாகசுந்தரம். தோற்றுப் போய்விட்டோமோ?

சட்டென எழுந்து வேகமாகவும் வெறுப்பாகவும் சொல்கிறார்.

அதெல்லாம் சும்மாடா….என்னதான் ஆனாலும் ஜாதிப்புத்தின்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யும்…- விருட்டென்று இடத்தைக் காலி பண்ணுகிறார்.

ராஜசேகரன் எழுந்து குளியலறைக்குப் போகிறான். பெரியப்பாவுக்குத் தந்தி கொடுக்கணும். நினைத்துக் கொள்கிறான். வரவேண்டாம்…திருமணம் நிச்சயமாகிவிட்டதென்று.

அகரமுதல்வன் சொல்கிறார்….மானுட இருட்டிலிருந்து சம்பவங்களைப் பொறுக்கியெடுத்து எல்லைகளற்ற மேன்மையான வெளிச்சத் தோற்றத்துக்கு  அழைத்துப்போகும் சிறப்பம்சம்தோடு எண்ண எழுச்சி மிக்க படைப்பாளி  ஜெயந்தன்.

கதைகள் எப்போதும் நமக்கு ஆறுதலைத் தரக்கூடிய ஒரு தனி உலகம். இது ஓரான் பாமுக். ஜெயந்தனின் தேர்ந்தெடுத்த இந்தச் சிறுகதைத் தொகுப்பு….இந்தத் தனிச் சிறப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.

                ---------------------------------------------------------------

 

 

 

 

 

 

21 டிசம்பர் 2020

“முருங்கை மர மோகினி” சிறுகதை-கு.அழகிரிசாமி - வாசிப்பனுபவம் - உஷாதீபன்

                                                                உஷாதீபன்,                                            “முருங்கை மர மோகினி” சிறுகதை-கு.அழகிரிசாமி    -                                                                வாசிப்பனுபவம் - உஷாதீபன்            வெளியீடு:- கு.அழகிரிசாமி கதைகள் சாகித்ய அகாதெமி                             




   

                இக் கதையை எழுதிய பின்னால்தான் எனக்கு நன்றாகக் கதை எழுத வந்துவிட்டது என்று பலரும் சொல்ல ஆரம்பித்தார்கள் என்று மகிழ்ச்சியடைகிறார் திரு.கு.அழகிரிசாமி. தெரிந்தோ தெரியாமலோ பலரும் அப்படிச் சொல்லியிருந்தாலும், இந்தக் கதையைப் பாராட்டியவகையில் எனக்குள் ஒரு மகிழ்ச்சி வரத்தான் செய்தது என்றும் சொல்லி  திருப்தியடைகிறார்.

                வாழ்க்கையில் நல்லவர்களுக்குத்தான் அதிகச் சோதனை வரும். அவர்கள் தங்கள் நேர்மையை விட்டொழித்து, தவறு செய்வதற்கு என்னென்ன கேடுகள் வருமோ அத்தனையும் வந்து ஒருவனை ஆட்டிப் படைக்கும். எந்தவொரு துன்பத்திற்கும் மனம் கலங்காமலும், சோர்ந்து போகாமலும், மன திடத்துடன் கஷ்டங்களை எதிர்கொண்டு, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வோம் என்கிற தாரக மந்திரத்தோடு வாழ்ந்து கழிப்பவர்கள் ஏராளம்.

                என்னதான் ஆனாலும் சராசரி மனிதனுக்கு அந்தத் திடம் காலத்துக்கும் கூட வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவனை அடித்து வீழ்த்த ஏராளமான சோதனைகள் ஏற்பட்டுப் போய், தன் கஷ்டங்களிலிருந்து தப்புவதற்காக, விடுபடுவதற்காக, தவறு என்னும் படுகுழியில் மனிதன் வீழ்ந்து விடுகிறான்.

                ஒரேயொரு முறைதானே செய்தால் என்ன என்றும், யாருக்குத் தெரியப் போகிறது என்றும், இதனால் என்ன நஷ்டம் எதிராளிக்கு வந்துவிடப் போகிறதென்றும் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டு அந்தத் தவறைச் செய்யத் துணிகிறான். ஆனாலும் அடியொட்டிப் போய்க் கிடக்கும் அவனது நேர்மையுணர்வு, பெற்றோர்கள் மூலமாய் வந்த நன்னெறி, காலம் காலமாய்ப் பாதுகாத்து வந்த நல்லுணர்வு, ஒழுக்கம் அப்பொழுதும் அவனை விடாமல் துரத்தியடித்து, அவன் மனசாட்சியைக் கிழித்தெறிகிறது.

                ச்சே…புத்தி கெட்டுப் போய் செய்திட்டனே….என்றும், கடைசி நேரத்துல இப்படித் தடுமாறிட்டனே என்றும் வருந்தி, மனம் நொந்து…எந்த லாபத்திற்காகச் செய்தானோ அதை அடையவும் முடியாமல், அனுபவிக்கவும் இயலாமல் அந்தத் தவறைச் சரிசெய்யவும் வழியில்லாமல் ,மனசாட்சி உறுத்தியெடுக்க, கேவலம்…இது இல்லாமல் மனுஷன் வாழ்ந்திருக்க முடியாதா…? இதற்குப் போயா இப்படி நடந்து கொண்டேன் என்று எண்ணி எண்ணி வேதனைப் பட்டு… செய்த தவறுக்காக உள்ளுக்குள்ளேயே புழுங்கி…தன்னைத்தானே சக மனிதர்களிடமிருந்து ஒதுக்கிக்கொண்டு….மறுபடியும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முயல்கிறான்.

                வாழ்க்கையில் நல்லவர்கள் தவறு செய்யக் கூடாது. தவறே செய்யக் கூடாது. என்ன கஷ்டம் வந்தாலும் சரி, எந்தவிதமான சோதனை வந்தாலும் சரி….எல்லாவற்றையும் அனுபவித்து நொந்து நூலாய்ப் போனாலும் சரி….மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு, மாறுபட்டு நேர்மையாய் இருந்தோம் என்கிற திருப்தி இருக்கிறதே…அதற்கு ஈடு…இணை இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. இறைவனின் சந்நிதானத்தில் நிற்பதற்குச் சமம்.

                கு.அழகிரிசாமியின் இந்த “முருங்கை மர மோகினி” கதையைப் படிக்கும் போது நம் மனதில் தோன்றுவது பல. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு…… நல்லவன் ஒரு ரூபாய் திருடினாலும் ஒரு கோடி திருடியதற்குச் சமானமாய் தவறை நினைத்து நினைத்து  மாய்ந்து போவான்….ஏனென்றால் காலத்துக்கும் அவன் நல்லவனாய் இருந்து என்றோ ஒரு முறை, எந்த விதி வசத்தினாலோ தவிர்க்க முடியாமல் ஒரு தவறை நிகழ்த்தி விடுகிறான். அதைச் செய்துவிட்டு ஐயோ…இப்படிச் செய்து விட்டோமோ என்று அவன் மனம் படும் பாடு இருக்கிறதே…அது சொல்லி மாளாது.

                இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்த தொழிலாளியாக வாழும் மேன்மைக்கு ஈடு இணையே கிடையாது இந்த உலகத்தில். சந்தோஷம் என்பது எங்கிருக்கிறது…அவரவர் மனத்தில்தான். அதுபோல்தான் திருப்தி என்பதும். போதுமென்ற மனமே பொன் செயும் மருந்து.

                அப்படித்தான் இருந்தார் பலகாரக்கடை நல்லபெருமாள் பிள்ளையும்…..காலக் கிரகம்…அவரைக் கொண்டு எங்கோ நிறுத்தி விட்டது. தெரியாத்தனமாய் ஒரு தப்பைச் செய்து விட்டு அவர் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே….!

என்ன பெரிய இது….அப்டியென்ன தப்பைச் செய்துட்டோம்…ஊரு உலகத்துல எவனுஞ் செய்யாதத…? போய்யா….எவன்யா யோக்கியம் இன்னிக்கு….? நீயும் செஞ்ச…நானும் செஞ்சேன்…போவியா….! பெரிஸ்ஸா சொல்லிட்டு வந்திட்ட….? இது இந்தக் காலப் பேச்சு….எதற்கும் அஞ்சாத பேச்சு….!

அதாவது நல்லதற்கல்ல…தீயதைச் செய்ய அஞ்சாத நெஞ்சம். அதையே பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளும் காலம். அதுவே தனது சாதனை என்று நினைக்கும் காலம் கூட. தப்பு என்று தெரிந்தும் அதைப் பாராட்டி மகிழும் உடனிருப்போர்…! தட்டிச் சொல்ல ஆள் இல்லாததால் மேலும் மேலும் நிகழும் தவறுகள். அதுவே வாடிக்கையாகிப் போகும் அவலம். இதுதான் இன்றைய உலகம்.

பலகாரக்கடை நல்லபெருமாள் பிள்ளை தானுண்டு, தன் தொழில் உண்டு என்றுதான் இருந்தார். காலக்கிரகம் அவரைப் புரட்டிப் போட்டு விட்டது. திடீரென்று உடம்பு சரியில்லாமல் போனது அவருக்கு. ரெண்டு மூன்று மாசம் அவரைப் படுக்கப்போட்டு விட்டது. அதில் தொழில் கொஞ்சம் படுத்துவிட்டது. கொஞ்சமென்ன…நிறையத்தான்…கையிலுள்ள காசு, சேமிப்பு என்று எல்லாம் கரைந்து போயின.  அந்த நஷ்டத்தை ஈடு கட்ட, அன்றாடம் செய்யும் பலகாரங்களில் வித்தியாசம் தெரியாமல் (அதாவது யாரும் கண்டுபிடித்து விட முடியாத வகையில்) தன் சாமர்த்தியத்தைக் காட்டினார் பிள்ளை. மக்களையா ஏமாற்ற முடியும்? அவர்களின் கைத்தராசு என்ன அப்படி சாதாரணப்பட்டதா? எடை துல்லியமாய் உணருமே…! புகார்கள் எழாமலில்லை. பலகாரங்கள் மெலிந்து போனதைக் கண்டு பிடித்து விடுகிறார்கள்தான். தப்பு செய்தல் என்பது அங்கேயிருந்து, அதிலிருந்து  ஆரம்பிக்கிறது பிள்ளைக்கு.

மனசு நொந்துதான் போகிறது அவருக்கு. மனிதன் தன் எண்ணங்களினாலும், செயல்களினாலும் பலவீனப்படும்போது…அதைவிட உடல் ரீதியாக,மன ரீதியாக பலவீனமாகிப் போகும்போது….அந்தக் காலம் பார்த்துத்தான் அந்தச் சனி வந்து புகுந்து கொள்கிறது. என்ன செய்ய….? அதுவும் போயும் போயும் ஐந்தாறு முருங்கைக்காய்களுக்கா நல்லபெருமாள் பிள்ளை அப்படி சபலப்பட வேண்டும்? பட்டு விட்டாரே…! முருங்கை மர மோகினி அவரை ஆட்டுவித்து விட்டதே…!

வருடக் கணக்காய் ஐரணக் கவுண்டர் வயற்காட்டுக் கிணற்றில் விடிகாலை தவறாமல் குளித்து வரும் பிள்ளைக்கு, அப்பொழுது பார்த்தா அந்தக் காய்கள் கண்ணில் பட வேண்டும்? அவரைக் கொடிகளுக்கு நடுவே…அதிகப் பிஞ்சும் இல்லாமல், அதிக முற்றலும் இல்லாமல் பக்குவமாய்  பளபளவென்று என்னமாய் அழகுபடத் தொங்குகின்றன?  சபலப்பட்டுவிட்டது அவர் மனசு. தினமும் பொழுது விடியும் முன் முதல் ஆளாய்க் குளிக்க வரும் தனது செயல் யாருக்குத் தெரிந்து விடப் போகிறது?

இந்த நாலைந்து காய்களைப் பறிப்பதனால் யாருக்கு என்ன நஷ்டம் வந்து விடப் போகிறது? மனது இப்படி நினைக்க ஆரம்பித்தால் போதாதா? ஐரணக் கவுண்டர் என்ன பெரிய நட்டமா பட்டுவிடப் போகிறார்?

அது இல்லைதான். ஆனாலும் அந்த மாதிரி நஷ்டம் எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்கான அடையாளம்தானே அந்தச் செருப்பு…? அந்த ஒற்றைப் பழைய செருப்பை ஏன் அங்கே அப்படிக் கண்ணுக்குப் பளீரென்று தெரிவதுபோல் கட்டித் தொங்கவிட வேண்டும்? மானமுள்ளவனுக்கு இது போதும் என்று நினைத்திருப்பாரோ?

மானம் பார்ப்பவன் திருட மாட்டான். திருடினால் செருப்படிதான்…என்பதற்கான அடையாளம்தானே…! பெரிய்ய்ய்ய வேலியா வேண்டும்? இந்த ஒன்று போதாதா? அது கண்ணுக்கு உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. என்றாலும் மனசு முடிவு செய்து விட்டதே, என்ன செய்ய…? சோத்துல உப்புப் போட்டுத் தின்னும் இன்னிக்கு மனசு ஏன் இந்தப் பாடு படுது இதைச் செய்ய? பிள்ளையால் அந்த ஆசையை ஒதுக்கவே முடியவில்லை.

ன்ன….வேகு வேகுன்னு போனீக….குளிக்கலையா….? –

இவளை யாரு இந்தக் கேள்வியெல்லாம் கேட்கச் சொன்னா….? பேசாம வேலையப் பார்க்க மாட்டா போல்ருக்கு… இந்தா புடி….வழில வரைல  வாங்கினேன்…சாம்பார் வையி……உடம்பு ஒரு மாதிரியிருக்கு…ஜாதோஷம் புடிச்சுக் கெடக்கு…அதான் திரும்பிட்டேன்….

ஒரு பொய்யை மனைவி முத்தம்மாளிடம் சொல்லி….அப்படியும் நடுக்கம் தீராமல் தவிக்கிறார் பிள்ளை. இனிமேல் திரும்பவும் கிணற்றுக்குக் குளிக்கப் போக முடியாது. பல் தேய்த்த வேப்பங்குச்சியை ஒரு வேளை கிணற்றின் பக்கமாய்ப் போட்டு விட்டோமோ? அது கவுண்டர் கண்ணில் பட்டுவிட்டால்?

மனம் என்ன பாடு படுகிறது பாருங்கள்…? இதற்குத்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன். தவறே செய்யாதவன், வாழ்க்கை பூராவும் அப்படியே கழித்து விட வேண்டும் என்று.  ஒரே ஒரு தப்பு செய்து பெயரைக் கெடுத்துக் கொண்டவர்கள் நிறையப்பேர்.  சர்வீஸில் கடைசி நேரத்தில் தப்பு செய்து மாட்டிக் கொண்டவர் உண்டு. கடைசி காலத்தில் மனம் பிறழ்ந்து அதனால் கேவலப்பட்டவர் உண்டு. நம்ம செய்த தப்பெல்லாம் யாருக்குத் தெரிஞ்சிருக்கப் போகுது என்று நினைத்துக் கொண்டு தப்பித்தவர்களும் உண்டு. ஆனால் அந்த மனசாட்சி? லேசில் அறுபட்டுப் போகுமா என்ன? செய்த சில தப்புக்களை தனக்குத்தானே மறைத்துக் கொண்டு அல்லது மறந்ததுபோல இருந்து கொண்டு, தனக்குத்தானே பொய்யாய் நேர்மை பேசிக் கழிக்கும் ஆத்மாக்களும் உண்டு. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் கனிந்திருக்க – அம்மாதிரி நிலையில் ஒருவன் தவறு செய்யாமல் திடகாத்திரமாய், இரும்பு மனநிலையில் இருக்கிறானா, இருந்து இயங்குகிறானா என்பதே முக்கியம். இந்தக் கதை இப்படிப் பலவற்றையும் எழுப்பி விட்டு விடுகிறது.

யாருக்கு வேணும் இந்த சாம்பாரு….? சாம்பார் இல்லாம சாப்பிட முடியாதா என்ன? பெரிய்ய்ய்ய சாம்பார் வச்சிட்டியாக்கும்…? வேறே ரசம்…கிசம் வச்சிருக்கியா….? அதக் கொண்டா…இந்த முருங்கைக்காய் சாம்பார் வேண்டாம்….

என்னாது? சாம்பார் வேண்டாமா? நீங்கதான ஆசப்பட்டு வாங்கியாந்தீக…? உங்களுக்காகத்தான் வச்சேன்… இப்ப வேணாம்னா எப்டி….? என்னாச்சு உங்களுக்கு…? – முத்தம்மாளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவளுக்கென்ன தெரியும்…அவர் மனதிலுள்ள தவிப்பு…? மனுசன் என்னா பாடு பட்டுக்கிட்டிருக்கான்…போவியா….!

இந்த முருங்கக்காய் என்ன தங்கப் புதையலா…? அப்டியென்ன ஆசை துள்ளுது….? – மனசுக்குள் நினைத்துக் கொண்டே கீரைச் சாதத்தை விழுங்கிக் கொண்டிருந்தார் பிள்ளை.

முத்தம்மாள் தன் கணவரின் ஜாதோஷத்தை உத்தேசித்து கவனமாய் செய்து வைத்திருந்த மிளகு ரசத்தை எடுத்துவர உள்ளே போனாள்.

மனசுக்கு வேலி போட பெரிய்ய்ய்ய வடக்கயிறா வேண்டும்? ஒரு சின்ன நூல் போதுமே…! அந்த நூல் கூட வேண்டாமே…!  அப்படியெல்லாம்  முடியாமல்தானே மனிதன் தவிக்கிறான்? – நல்ல பெருமாள் பிள்ளையை நினைத்து நாமும் பரிதாபம் கொள்ளத்தான் செய்கிறோம். கூடவே நம்மையும் சுதாரித்துக் கொள்கிறோம்.

கிணற்றைச் சுற்றிலும் அங்கங்கே நிற்கும் தென்னை மரங்களில் ஏறி எவனும் காய்களைப் பறித்து விடக் கூடாது என்று அதன் உடம்பில் குறிப்பிட்ட உயரத்தில் கம்பி வேலியைச் சுற்றி வைத்திருக்கும் ஐரணக் கவுண்டரின் ஜாக்கிரதை…திருட வேண்டும் என்று தீர்மானம் செய்து விட்டவனுக்கு ஒரு பொருட்டா என்ன….?

அதுபோல் நல்ல பெருமாள் பிள்ளையின் மனது அந்த ஐந்தாறு முருங்கைக்காய்களின் மேல் வைத்த ப்ரீதி…அவரைத் திருட வைத்துவிட்டதுதானே…! மோகினியாய் நின்று என்ன ஆட்டம் போட்டுவிட்டது அவர் மனதில்.  தொங்கும் ஒற்றைச் செருப்பை அப்படி ஒதுக்கி விட்டு, காய்களைச் சத்தமின்றிப் பறித்து விடும்போது ஒரு கிளை ஒடிந்து போக, அந்தச் சத்தமே வேட்டுச் சத்தம் போல் அவரை உணர்ந்து பதற வைக்கிறது. தவறு செய்யும் மனதின் தவிப்பு. யாரோ கமலைக்கு மாடு ஓட்டி வருவது உணர, பறித்த காய்களை கக்கத்தில் நெட்டுக் குத்தலாக நிறுத்தி மறைத்து வைத்துக் கொண்டு, துண்டை விரித்து தோளில் போட்டுப் பரத்தி, விடுவிடுவென்று அவர் வீடு வந்து சேரும் அந்த நேர நடுக்கம்,  அவரோடு சேர்த்து நம்மையும் பதறத்தான் வைக்கிறது. பாவம்…சபலப்பட்டுட்ட, அல்ப ஆசைக்கு உட்பட்டு விட்ட  அந்த மனுஷன் பிடிபட்டுக் கொண்டு விடக் கூடாதே என்று….!

ஆனால் மனசாட்சிதானே வெல்கிறது கடைசியில். மனிதனுக்கு நீதி மனசாட்சியில். அதற்கு மீறிய கோர்ட் என்று ஒன்று உண்டா என்ன? அதை வென்றவர்கள் யார்?

இலக்கியம் நமக்கு எத்தனையோ பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது. இந்த வாழ்வில் நம் அனுபவ எல்கை என்பது மிகக் குறைவு. ஆனால் அனுபவப்பட்டு அதைப் பதிவு செய்து வைத்திருக்கும் பெரியோர்களின் எழுத்துக்களைப் படிக்கும்போது, நம் மனம் முதிர்ச்சி பெறுகிறது. இந்த சமூகத்திற்கு நாமும் மிகுந்த பக்குவமுள்ள ஒரு பிரஜையாக உருப்பெறுகிறோம். சிறந்த விவேகியாக வாழப் பழகிக் கொள்கிறோம்.

திரு கு.அழகிரிசாமியின் இந்த முருங்கை மர மோகினி இப்படி பலப்பல எண்ணங்களை விரித்து நம்மைப் புடம் போட்டுக் கொள்ள உதவுகிறது. என்றால் அது சத்தியம்.

----------------------------------------------------------------------------------------------------------------------