17 டிசம்பர் 2020

“மெச்சியுனை...” - தி.ஜானகிராமனைப்பற்றி அவர் மகள் - உமா சங்கரி -வாசிப்பனுபவம் - உஷாதீபன்

மெச்சியுனை...” - தி.ஜானகிராமனைப்பற்றி அவர் மகள் - உமா சங்கரி -வாசிப்பனுபவம் - உஷாதீபன் - வெளியீடு - க்ரியா பதிப்பகம், திருவான்மியூர், சென்னை-41


       தி.ஜா.வின் அருமை பெருமைகளை அவரது வாரிசுகள் விடுத்து வேறு யார் ஆத்மார்த்தமாகக் கூறிவிட முடியும்? அவர் மகள் உமா சங்கரி அவர்கள் இந்தப் புத்தகத்தில் தன் தந்தை பற்றிய நினைவுகளைப் பிரியமும், பாசமுமாய்ப் பகிர்ந்து கொள்கிறார். தி.ஜா. நூற்றாண்டில், அவரது நினைவைப் போற்றும் வகையில் இந்தப் புத்தகம் வெளி வந்திருப்பது மிகவும் பொருத்தமும் பெருமைக்குரியதுமாகும்.  

       அவர் இறந்த பிறகு தலைமுறை இடைவெளிகள் தாண்டி விட்டன. எப்படியிருப்பார், எந்த மாதிரி வாழ்ந்தார் என்பது பலருக்கும் தெரியாதிருக்கும். அதனால் கைவசம் இருக்கும் புகைப்படங்களை வைத்து ஒரு ஃபோட்டோ ஸ்டோரி செய்யலாம் என்று இதை உங்கள் முன் வைக்கிறேன் என்கிறார் திருமதி உமா சங்கரி.

       தி.ஜா.வின் பல்வேறு கோணங்களிலான அருமையான புகைப்படங்கள், அதில் வெளிப்படும் அவரது தீட்சண்யம், எளிமை, சிந்தனை, பொறுப்புணர்வு என்று பல அற்புதமான பாவனைகளில் படங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தி.ஜா.வின் பெற்றோர்கள், அவரின் அண்ணா ராமச்சந்திர சாஸ்திரிகள், அண்ணாவும் மன்னியும் (ராஜலட்சுமி) சேர்ந்து நிற்கும் புகைப்படம், தி.ஜா.வின் இரண்டாவது சகோதரி ருக்கு அத்தை அவர் மடியில் அமர்ந்திருக்கும் உமா சங்கரி, மூன்றாவது சகோதரி காமாட்சி அத்தை கணவருடன், தி.ஜா.வின் கடைசி சகோதரி குஞ்சு அத்தை அவர் பேரனுடன், மூத்த சகோதரி ராதை என்று சிலிர்ப்போடு கண்டு மகிழும் முக்கியமான புகைப்படங்களைக் கவனமாக இந்நூலில் சேகரித்துத் தந்திருக்கிறார் திருமதி உமாசங்கரி அவர்கள்.

       தி.ஜா.வுக்கு நான்கு சகோதரிகள், ஒரு அண்ணா. பெரியப்பாவான அவர் தி.ஜா.வை விட இருபது வயது பெரியவர்.. நான்கு சகோதரிகளில் ஒருவரைத் தவிர மற்ற மூவரும் மூத்தவர்கள்.

       அந்தக் காலத்தில் பிராமணக் குடும்பங்களில் அப்பாவை அண்ணா...அண்ணா (ஏன்னா...இப்டி வாங்கோளேன்... ஏன்னா....கூப்பிடுறது காதுல விழலியா என்பதாகக் கேட்டிருப்பீர்கள்-அந்த அன்னா இது)  என்று அம்மா அழைப்பதைப் பார்த்து வீட்டில் குழந்தைகள் முதற்கொண்டு அப்பாவை  அப்படியே கூப்பிட்டுப் பழகியிருப்பார்கள். அப்பாவின் இரண்டாவது சம்சாரத்தை அவரது குழந்தைகள் அம்மா...அம்மா என்று அழைக்காமல்...சித்தி...சித்தி...என்று அழைப்பதையும் கூடப் பார்த்திருக்கக் கூடும். குழந்தே.....குழந்தே...என்று அப்பாவை பாட்டி அழைப்பதைக் கேட்டிருப்பீர்கள். தி.ஜா.வும் அப்படித்தான் அழைக்கப்பட்டிருக்கிறார்.

       தி.ஜா. தினமும் பூஜை செய்துவி்ட்டுத்தான் சாப்பிடுவார். என்றும் திருவள்ளுவர் கோயில் என்றழைக்கப்படும் சிவன் கோயிலில் (எப்படி அந்தப் பெயர் வந்தது என்று தெரியவில்லை என்கிறார்) பூஜைக்கான மலர்களைப் பறித்து எடுத்துக் கொண்டு போவோம் என்று குறிப்பிடுகிறார். 1921 ஜூன் 28 தி.ஜா.வின் பிறந்த தேதி.ஊர் தேவங்குடி.

       இரண்டாவது சகோதரி ருக்மணி. ருக்கு அத்தை. பதினேழு வயதிலேயே கணவரை இழந்து, தலை மொட்டை போட்டு, சில ஆண்டுகளுக்குப் பிறகு தன் ஒரே பெண் குழந்தையையும் இழக்கிறார். இவர் மேல் மிகுந்த அனுதாபம் உண்டு அப்பாவுக்கு என்றும் இன்னுமுள்ள இரண்டு சகோதரிகளில் ராதை அத்தைக்கும் கணவரை இழந்த போது தலை மொட்டை அடிக்கப்பட்டதென்றும், ராதை அத்தை சீக்காகக் கிடந்தபோது இனி பிழைக்க மாட்டார் என்று குஞ்சு அத்தையையும் கல்யாணம் செய்து கொடுக்க, கடைசியில் கணவர் இறந்தபோது கடைசி அத்தைக்கு மொட்டை அடிப்பதைத் தடுத்துவிட்டார் தி.ஜா. என்ற செய்தியைப் படிக்கும்போது, கடைசிக் காரியங்களின் போது அங்கே நின்ற திருலோக சீத்தாராமை மீறிக்கொண்டு பாய்ந்து தி.ஜா. அதைத் தடுத்தார் என்று பேராசிரியர் கல்யாணராமனின் சொற்பொழிவில் கேட்டதை இங்கே நினைவு கூற வேண்டியிருக்கிறது.

       சமூகவியல் துறையில் தமிழ்நாட்டு கிராம வாழ்க்கை ஆய்வுக்காக வெளி நாட்டிலிருந்து வந்திருந்த கத்லீன் காஃபுடன்  ஏற்பட்ட பழக்கமும், அவருடன் உமாசங்கரி அவர்களும், அவரது அம்மாவும்  எடுத்துக் கொண்ட புகைப்படமும் தி.ஜா.இசை பயின்ற உமையாள்புரம் சுவாமிநாதய்யர் படமும், பிறகு இசை தொடர்ந்த பத்தமடை  சுந்தரம் ஐயர் படமும் பார்க்கும்போது நம் மனதில் மதிப்பு மிகு எண்ணங்கள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. மதராசில் இருந்தபோது வாரத்தில் இரு நாட்கள் இசை கற்றுக் கொடுப்பவர் ஒரு வாரமாகக் காணவில்லையே என்று சைக்கிள் எடுத்துக் கொண்டு தேடிப் போகையில் அவர் சாவு ஊர்வலம் வரும் காட்சி கண்டு திடுக்கிடலும்,  அ்ந்த நிகழ்வுக்குப்பிறகு  இனி நான் பாடவே மாட்டேன் என்று தி.ஜா. இருந்ததும் நினைக்கையில் மனம் மிகுந்த துக்கமடைகிறது.

       அப்பாவின் எழுத்துக்களில் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் அப்படியொரு மயக்கமுண்டு என்று சொல்லி அவரது “அவலும் உமியும்“ கதையைப் படித்து அழுததையும், தாகூரின் வீடு திரும்புதல் கதையை தி.ஜா.ரேடியோவில் பணியாற்றியபோது வாசித்ததைக் கேட்டு கதையில் ஆழ்ந்து மூழ்கி, பிழியப் பிழிய அழுததை நினைவு கூர்கிறார். பெ.கோ.சுந்தரராஜன், சிட்டி மாமாதான் அப்பாவை ரேடியோவுக்கு மாற வைத்தவர் என்றும் தெரிவிக்கிறார். மதராஸ், ஆல் இந்தியா ரேடியோவின் கல்வி ஒலி பரப்புப் பகுதியில் 15 வருடங்கள் பணியாற்றிவிட்டு, தில்லியில் 15 வருடங்கள் பணியாற்றியிருக்கிறார் தி.ஜா. குழந்தைகளுக்கான நூற்றுக்கணக்கான கல்வி நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

       1960 ல் சேவா ஸ்டேஜ் குழுவினருடன் (எஸ்..வி. சகஸ்ரநாமம்) பம்பாய் நாடக விழாவிற்குப் போனது, நாலு வேலி நிலம், வடிவேலு வாத்தியார், தேரும் ஊரும், டாக்டருக்கு மருந்து என்று 4 நாடகங்களை எழுதிக் கொடுத்திருக்கிறார் தி.ஜா. மதராசில் இருக்கும்போது ஜப்பானுக்கு ரேடியோவில் ஒரு பயிற்சிக்காகச் சென்றது, ஜப்பான் மிகவும் பிடித்த நகரம் என்று மிகுந்த ஆர்வத்தில் பயண அனுபவமாக “உதய சூரியன்“ என்கிற பயண நூல் எழுதியது, சிட்டி மாமா, கலாசாகரம் ராஜகோபால் இவர்களுடன் சேர்ந்து தலைக்காவிரி வரை பயணம் செய்து “நடந்தாய் வாழி காவேரி” எழுதியது, என்றும், குள்ளன் மற்றும் அன்னை நாவல்கள் மொழி பெயர்ப்பில் வெளியிட்டது என்று தகவல்கள் நீண்டு கொண்டே போகின்றன இந்நூலில்.

       ஒரு பிரபல எழுத்தாளர் தி.ஜா.வை “சாப்ட் போர்நாக்ராபி” என்று விமர்சித்தது தி.ஜா.வை மிகவும் வருத்தியதாகவும், செக்ஸ் என்பது மனிதனின் அடிப்படை விஷயம் , அதை நம் சமூகம் மூடி மறைத்து ஒடுக்கி விகாரப்படுத்துகிறது ஒழுங்காக இருப்பதுபோல் பாசாங்கு செய்கிறது என்கிற பார்வையில் தான் எழுதுவதைப் புரிந்து கொள்ளாமல் இப்படிச் சொல்கிறார்களே என்று வருந்தியதாகவும் தெரிவிக்கிறார் உமா சங்கரி. காமம் என்பது அன்பின் ஒரு அம்சம் என்று தி.ஜா. சொல்லியிருப்பதை நாம் உணருகையில் மெய் சிலிர்த்துப் போகிறது நமக்கு. பிரசார இலக்கியத்திலிருந்து விலகி நின்று கொண்டு, சமூகப் பிரச்னைகள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதை எழுதுவதையே தன் கடமையாகக் கொண்டு தேர்ந்த உரையாடல் உத்தி மூலம் யதார்த்த திசையில் பயணித்தார் தி.ஜா. என்று நிறுவுகிறார்.

       வீட்டில் எல்லோரோடும் உட்கார்ந்து கலகலவென்று பேசி மகிழ்வதையும், குறிப்பாகக் குழந்தைகளோடு குழந்தைகளாக அவர் விளையாடும் காட்சியைக் கண்டு ரசிக்க வேண்டும் என்றும் அவர் போன பின்பு வீட்டில் அந்த சிரிப்பே இல்லாமல் போனது என்றும் வருந்திச் சொல்கையில் நம் மனதையும் அந்தத் துக்கம் பிடித்துக் கொள்கிறது.

       வாசகர் வட்டம் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியுடன், ஆர்.கே.நாராயணனுடன், தலைக்காவிரியில், வெங்கட் சாமிநாதனுடன், இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு கூட்டத்தில், கோமலுடன் ,பூர்ணம் விஸ்வநாதனுடன், ராஜாஜியுடன், லா.ச.ரா.வுடன், ஆ.மாதவனுடன், நீல.பத்மநாபனுடன், தீபம் நா.பா.வுடன் என்று அரிய புகைப்படங்கள் கொட்டிக் கிடக்கும் இப்புத்தகம், இலக்கிய வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு பொக்கிஷம் என்று கூறலாம்.

       கெட்டி அட்டையில் தி.ஜா.வின் ஓவிய உருவத்துடன், வழவழப்பான தாளில் பளபளவென்று அழகுற அச்சிடப்பட்டு சிறந்த ஆவணமாக வெளியிடப்பட்டிருக்கும் இப்புத்தகத்தைக் கையில் ஏந்திப்  படிப்பதே நமக்கு ஒரு பெருமை. அவரது
நூற்றாண்டில் “மெச்சியுனை” வெளியிட்ட தி.ஜா.வின் மகள் திருமதி உமாசங்கரி மிகுந்த பாராட்டுக்குரியவர்.  

                            -------------------------------

                                        

 

 

11 டிசம்பர் 2020

“தடங்கள்“- நாவல் - எம்.ஏ.சுசீலா - வாசிப்பனுபவம் - உஷாதீபன்

தடங்கள்“- நாவல் - எம்.ஏ.சுசீலா - வாசிப்பனுபவம் - உஷாதீபன்              வெளியீடு: மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-1.



       நாவல் கலை என்பது மிகப் பெரிய கப்பல் கட்டுவது போன்றது...அது உங்களுக்குக் கை வருகிறது என்று  ஜெயமோகன் ரப்பர் நாவல் எழுதி முடித்திருந்தபோது சுந்தர ராமசாமி கூறினார். இயற்கையுடன் மனிதனின் போர், இயற்கையுடன் ஒத்திசையும் மானுட வாழ்க்கை...என்பதாக ஞானி அவர்கள் விரித்துரைத்தார். நாவல் என்பது மக்களால் பெரிதும் விரும்பப்படும் இலக்கிய வடிவமாக இருந்து வருகிறது என்று சொல்லலாம். புனைகதையாக உருப்பெறுதல் உரை நடையாக எழுதப்படுதல்....இவையே இன்றைய நாவல்களின் இயல்புகளாயிருக்கின்றன.

       நாவல் என்றால் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களோடு அறிமுகமாகி, அந்தக் கதாபாத்திரங்களின் குண விசேஷங்களின் வழி சிறு சிறு நிகழ்வுகளோடு நகர்ந்து அங்கங்கே கதையின் சம்பவங்களுக்கேற்ப வெவ்வேறு அறிமுகமும், முக்கியத் திருப்பங்களுமாக மாறி, ஆழமாகவும், அழுத்தமாகவும் விரிந்து ஒரு இடத்தில் தன் முடிவைத் தானே தேடிக் கொள்ளும் அர்த்தபூர்வமான ஆவணமாகத் திகழும்  வகை என்று கொள்ளலாம்.  நாவலுக்கான படிமங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது ஒரு வகையிலான புரிதல். தேவைக் கேற்றாற்போல் ஒவ்வொன்றும் வேறு வேறு மாற்றங்களைக் கண்டுதான் வந்திருக்கின்றன. வடிவ ரீதியாகவும் மாறியிருக்கின்றன. வாசக மனத்தைக் கொள்ளை கொள்ளும் விதமாய் புதிய முயற்சிகளாய் பிரமிக்க வைத்திருக்கின்றன.

       ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் தன் பார்வையிலேயே கதையைச் சொல்லிக் கொண்டு போவதாய் நாவல் விரிந்திருக்கிறது. ஒரே ஒரு கதாபாத்திரமும், அதைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளுமாயும்  கதை வந்திருக்கிறது. மிக நீண்ட நெடுங்கதைகளாய்த் தோற்றமளித்து, நாவல் என்கின்ற பெயரினைத் தாங்கி, அரிய, புதிய சம்பவங்களாலும், சம்பாஷனைகளாலும் நிமிர்ந்து நின்ற படைப்புக்களும் உண்டு. வெவ்வேறு கால கட்டங்களில் பல்வேறு விதமான முயற்சிகள் இவ்வாறு நடந்தேறியிருக்கின்றன. பெரியவர் க.நா.சு. தன் நாவல்களில் இவற்றைப் பரீட்சை செய்து பார்த்திருக்கிறார் என்பதை அவரை விடாது படித்தவர்கள் உணர்வார்கள்.

       பேராசிரியர் திருமதி எம்.ஏ.சுசீலா அவர்கள் “தடங்கள்” என்ற இந்த நாவலை புதிய முயற்சியாய், வடிவ ரீதியாய் மாற்றங்களைப் புகுத்தி, இரு பெண்களுக்கு இடையில் நிகழும் மின்னஞ்சல் தகவல் பரிமாற்றங்களாய் விரித்து, உடன் பணியாற்றியவர்கள், மாணவிகள் மற்றும் அன்றாட வாழ்வின் உடன் பயணித்தவர்களின் வாழ்க்கைச் சிக்கல்களை, நேர்ந்த அபாயங்களை, நிகழ்ந்த நல்லவைகளை, ஏமாற்றங்களை, துயரங்களை என்று பகிர்ந்து கொண்டு, மிகப் பரந்த மனதோடும், உதவும் கரங்களோடும், அவர்களோடு பயணித்த, அவர்களுக்கு உதவியாய் முனைப்போடு செயல்பட்ட வெவ்வேறு சம்பவங்களை நினைவு கூர்ந்து, சரம் சரமாய்க் கோர்த்து, அழகான, மணமுள்ள ஒரு கதம்ப மாலையாய் நம் முன்னே காட்சிப் படுத்தியிருக்கும் அழகு கடந்து வந்த பாதையில் பதிந்த  தடங்களாய் நம் மனதில் அழியாது இ்ந்த நாவலை நிற்க வைக்கிறது.

       நந்தாவுக்கு சிந்து எழுதும் கடிதமாய்த் துவங்கி, சித்ராவின் வாழ்க்கைப் பயணம் பற்றியதான பரிமாற்றங்களாய் விகசித்து, வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு பெண்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் துயரங்களைச் சந்திக்க நேர்கிறது, உடல் ரீதியாயும், மன ரீதியாயும், பொருளாதார ரீதியாயும், வாழ்க்கைப் பயணம் எத்தனை கரடு முரடான பாதைகளில் எதிர்பாரா இலக்குகளில் நம்மை இழுத்துக் கொண்டு போய் விடுகிறது என்பதைக் கண்ணுறும்போது, இம்மாதிரியான அரிய படைப்புக்களால், இலக்கியம் மனிதனைப் பக்குவப்படுத்தலில், சிறந்த விவேகியாய் மாற்றுதலி்ல் எத்தனை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நம்மால் ஆத்மார்த்தமாய் உணர முடிகிறது.

       பிரம்புப் பின்னல் போட்ட ஒற்றை சோபாவில் உட்கார்ந்தபடி, கல்லூரியின் வெளிவாசல் வரை பந்திப்பாயை உதறி விரித்துப் போட்டது போல ஒரே சீராக நீண்டு கிடக்கும் பாதையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன் என்று படைப்பாளி எழுதும்போது, தன்னோடு பயணித்த பெண்களின், மாணவிகளின் வாழ்க்கையையும் அதே அளவுக்கு நீ்ண்டு கூர்ந்து நோக்கியிருக்கிறார் என்பதை நாம் அறிகிறோம்.

       சோலையம்மா தன் மகன் மீது வைத்திருந்த பாசம், அதற்கு நேர் மாறாய் அமைந்த அவளின் கணவன், அவனின் குடி மூர்க்கம், அதனால் ஏற்படும் சோலையம்மாவின் கொலை, இந்த அவலங்களை நந்தா சிந்துவுக்கு பதிலஞ்சலைாய் எடுத்துரைக்கும்போது நம் மனது உருகிப் போகிறது. எளிய மனிதர்களின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத அவலமும், போதிய பொருளாதாரத் தன்னிறைவு இல்லாத நிலையில் வாழ்க்கை தாறுமாறாய்க் கழன்று கொள்ளும் பயங்கரமும் நம் மனதை வேதனை கொள்ள வைக்கிறது.

       குடும்பங்களில் ஏற்படும் இவ்வாறான வன்முறை, உறவு ரீதியான பாலியல் வன்முறைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் வன்மம், கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் இளம் பிராயக் கனவுகள், ஏக்கங்கள், அதனால் ஏற்படும் அத்து மீறல்கள், ஏமாற்றங்கள், இவை பலவற்றிலுமிருந்து மீண்டு எழுந்து, தனக்கான ஒரு தனிப் பயணத்தை ஏற்படுத்திக் கொள்ளும் திறமை, தன்னை உணர்ந்த நிலையில் தன்னைச் சார்ந்தவர்களின் மனப்போக்கினைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, தன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளும் திறமை, கல்லூரி, படிப்பு, காதல், திருமணம் என்று வெவ்வேறு நிலைகளில் ஏற்படும் சங்கடங்களை, பயத்தோடு எதிர்நோக்குதலும், அவற்றை வெற்றி கொள்ள முடியாமல், உதவியை நாடும் மனத்தோடும், தாண்டித் தப்பித்துச் செல்லும் சாமர்த்தியத்தோடும் மாணவிகளின்  வாழ்க்கைப் பாதை எப்படியெல்லாம் திசை மாறி எங்கெங்கு அவர்களைக் கொண்டு நிறுத்தி விடுகிறது என்பதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் இருவரின் கடிதப் பரிமாற்றங்களாய் ஆசிரியர் சொல்லிச் செல்லும்போது நமக்குக் கிடைக்கும் புதிய வாசிப்பு அனுபவத்தின் அருமையை, அதன் செழுமையை ஆழ்ந்து  உணரமுடிகிறது.

       வெவ்வேறு விதமான சிறுகதைகளை ஒன்று சேர்த்து அவை ஒரு நாவல் உருப் பெறும்பொழுது அங்கு ஒரு மிக நீண்ட வாழ்க்கைப் பயணம் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து போகிறது என்கிற உண்மைதான் அது. எந்த நாவலுமே சிறுகதைகளை உள்ளடக்காததாய் இருந்ததில்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம். ஐநூறு, அறுநூறு பக்க நாவல்களிலே  குறைந்தது ஏழெட்டு சிறுகதைகளாவது பொருத்தமாய்ச் செருகப்பட்டிருக்கும் திறமையை ஒரு தீவிர வாசகன் எளிமையாய் கண்டு பிடித்து விட முடியும். ஆனால் கதையின் போக்கில் அது எவ்வாறு பொருந்தி நிற்கிறது என்பதிலேயே அது நாவல் என்கிற வடிவத்திற்கு செழுமை சேர்த்திருக்கிறது என்பதை வலுவாய் உணர்த்தப்படும்பொழுது ஒரு நல்ல வாசகன் சமாதானமாகிறான்.

       மாடசாமிக்கு ஆயுள் தண்டனை வந்துவிடுமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் சோலையம்மாவின் பிள்ளை முத்துவைப் பல வகையிலும் காப்பாற்றியாக வேண்டியிருக்கிறது. பம்பாயில் இருக்கும் என் சிநேகிதியின் குடும்பத்திற்கு அவளை அனுப்பி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று நந்தா சிந்துவுக்கு எழுதும் அந்த அஞ்சலைப் படிக்கும்பொழுது, அவளின் கருணை மனம் நம்மை நெகிழச் செய்து விடுகிறது. நம் வாழ்க்கை மட்டும்தான் என்று இல்லாமல் நம்மை நம்பியோரின் வாழ்க்கையும், நம்மைச் சார்ந்தோரின் வாழ்க்கையும் என்று சிந்திக்கும், செயலபடும் பெண்களின் மனங்களைப் படம் பிடித்துக் காட்டும் நெறி, படைப்பாளியின் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்துகிறது.

       கடைசிவரை மனைவியின் மீது, அவளின் அப்பழுக்கற்ற செயல்களின் மீது சந்தேகம் கொள்ளும் கணவன், அவளை நிம்மதியில்லாமல் அடிக்கும் வன்மம், அவளின் தாய்மையின் மீதே ஒரு கட்டத்தில் சந்தேகம் கொள்ளும் தன்மை..இப்படியான சம்பவங்கள் சித்ரா, சந்திரன் என்கிற கதாபாத்திரங்களின் வழி மிகுந்த மனச் சோர்வையும், வருத்தத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி, எப்பொழுது இந்தப் பெண் இதிலிருந்து முற்றிலுமாக விலகப் போகிறாள், விடுபடப் போகிறாள் என்கிற எதிர்பார்ப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது.

       பொதுச் சேவையில் மனமுவந்து ஈடுபடும் வாணி, வெளியில் சொல்ல முடியாத மன நெருக்கடிக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை, வயதிலும், படிப்பிலும், வாழ்க்கை அனுபவத்திலும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டபிறகும் தன் இடம் எது, தன் தேவை என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியாதவளாய் நிற்கும் மாலா, தனபாலனை விட்டு முத்தரசி நிரந்தரமாய்ப் பிரிந்து வேறொரு அரசுக் கல்லூரியில் பணியாற்றச் செல்லும் தீர்வு, குடும்பங்களில் இன்றைக்கும் நிகழும் எத்தனையோ வன்முறைகளில் பெண்கள் பலியாகிறார்கள் என்பதும் அது மறைக்கப்பட்டு விடுகிறது என்பதும், ரமணியின் சாவை நாம் படித்துணருகையில் நம்மை வேதனை கொள்ளச் செய்கிறது.

       நந்தா சிந்துவுக்கு செந்தாமரை பற்றி எழுதும் கடிதம், கல்லூரி நாட்களில் தான் எழுதிய கவிதைகளைப் பத்திரப்படுத்தி, தன்னிடமுள்ள கவித்துவம் வற்றி விடாமல் தொடர்ந்து காப்பாற்றி பெரிய கவிதாயினியாய் வளம் பெறும் தாழை என்கிற செந்தாமரை கல்லூரியில் நடக்கும் முத்தமிழ் விழாவில் பங்கு கொள்ளும் வெற்றி, தமிழ் கேட்டு வளர்ந்த மண்ணில் தானே அரங்கத்தில் அமரும் பெருமை மிகு நிகழ்வ என்று மறக்க முடியாத அனுபவமாய் விரிகிறது செந்தாமரையின் பயணம்.

       பிறந்த வீட்டுக்குப் பணம் அனுப்பியே ஆக வேண்டும் என்று கணவன் மதனிடம் ஒற்றைக் காலில் நின்று வாதிடும் மனைவி  ரமணி. இந்தக் கல்யாணம் நடந்ததிலே அவளுக்கு ஒப்புதலே இல்லை...கல்யாணமே பண்ணிக்காம அப்பா அம்மாவோட இருந்தே வாழ்க்கையைக் கழிச்சிடணும் என்றுதான் அவள் ஆசைப்பட்டா என்று ஜமீலா சொல்லும்போது இந்தப் பெண்களுக்கு அவரவர் வாழ்க்கையில் எப்படியெல்லாம் துன்பங்கள் வந்து விடுகிறது என்றும், காலம் காலமாய் பெண் என்கிற ஜென்மம் ஒடுக்கப்பட்டே வந்திருக்கும் கொடுமையை நினைத்து நம் மனம் வேதனை கொள்கிறது. குடும்பத்தில் கணவன்களால் ஏற்படும் தொடர்ந்த வன்முறைகளைப் பொறுக்க முடியாத மென்மையான மனது படைத்த பெண்கள் ஒன்று தற்கொலை செய்து கொள்கிறார்கள், அல்லது அந்தக் கொடுமையை வெளியில் சொல்ல முடியாமல் அமைதி காத்து, அனுபவித்து, கொஞ்சம் கொஞ்சமாய்த் தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள். ரமணிக்கு அந்த முடிவுதான் ஏற்படுகிறது.

       தன்னை சுதந்திரமாக நிறுத்திக்கொள்ளும் பெண், ஆணின் பொய் முகங்களைக் கிழித்தெறியத் துடிக்கும் தைரியமான மனம் படைத்த பெண்கள், எவனுக்கும் சிக்காமல் தன்னைப் பொறுப்பாய்ப் பாதுகாத்துக் கொள்ளும் தைரியசாலிகள், ஆசைகளே துன்பத்திற்குக் காரணம் என்று அறிந்துணர்ந்து, எளிய வாழ்க்கையை மேற்கொண்டு நிம்மதியை நாடும் ஜீவன்கள் என்று இப்படிப் பல்வேறு கதாபாத்திரங்களை நாவலினூடாகத் திறம்பட ஓடவிட்டு, தன் எழுத்துப் பயணத்தை மொழி பெயர்ப்பின் வழி என்று மட்டுமல்லாது புனைவின் வழியும் வெற்றி கொள்ள முடியும் என்பதை இந்தத் தடங்கள் நாவல் மூலம் நீக்கமற நிரூபித்திருக்கிறார் திருமதி எம்.ஏ.சுசீலா அவர்கள். இந்த நாவலுக்கான களமாய் மதுரை மாநகரம் அமைந்து, அதில் இந்தக் கதாபாத்திரங்கள பவனி வரும் அழகு, அந்த நகரை நன்கறிந்த வாசகர்கள் , சுவாரஸ்யமாய்ப் படித்து மகிழவும், அவர்களும் இணைந்து பயணிக்கவும் பேருதவியாய் விளங்குகிறது.

       இவரது யாதுமாகி என்கிற முதல் நாவல் வெளிவந்து அது சமீபத்தில்  ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது என்கிற செய்தி இவருக்குப் பெருமை சேர்ப்பது. ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்” , “அசடன்” போன்ற அரிய மொழி பெயர்ப்புகளைத் தமிழுக்குத் தந்த பெருமைகி்குரியவர்.  மொத்தம் ஏழு மொழி பெயர்ப்பு நூல்களில் “அசடன்” நாவலுக்கு கனடா இலக்கியத் தோட்ட விருது பெற்றவர்.  மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக தமிழ்ப் பேராயத்தின் ஜி.யூ.போப் விருது, நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது ஆகிய மூன்று விருதுகளை  இவர் பெற்றிருக்கிறார். பெண்ணியம் சார்ந்த ஆறு கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். கதை நிகழும் கல்லூரியும், கதை மாந்தர்களாய் உலவும் ஆசிரியர்களும், மாணவிகளும் ஒரு புதிய அனுபவமாய், கல்லூரி நிகழ்வுகளை மையமாய் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களை வெறும் பொழுது போக்கு அம்சங்களாய் அமையாமல், கருத்துள்ள வாழ்க்கைப் பயணத்தை நமக்கு போதிப்பதாய் மொத்த நாவலும் ஆழமான சம்பவக் கோர்வைகளாய் அழகுறக் கோர்க்கப்பட்டிருப்பது நமக்கு மிகுந்த திருப்தியளிக்கிறது.

       இரு தோழிகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் கடிதங்களாய் (மின்னஞ்சல்) இந்த நாவல் புதிய உத்தியில் அமைந்திருப்பதும், நாவலின் கதாபாத்திரங்களின் வாழ்க்கை நிகழ்வுகள் பின்னோக்கு உத்தியில் செழுமையான உரையாடல்களோடு  திறம்படக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும், இந்த நாவலுக்காக வெற்றியாக அமைகிறது என்பது திண்ணம்.

                                  ----------------------------------------------------------

 

 

             

 

05 டிசம்பர் 2020

ஜெயந்தனின் “இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்”–சிறுகதை – வாசிப்பனுபவம்-உஷாதீபன்

 

 

ஜெயந்தனின் “இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்”–சிறுகதை – வாசிப்பனுபவம்-உஷாதீபன்


தொகுப்பு– ஜெயந்தன்-அரும்புகளை/ தொகுதி / வெளியீடு:- நர்மதா பதிப்பகம், தி.நகர். சென்னை-17.

                                  -------------------------------------------------------

       கால்நடை ஆய்வாளராக இருந்து ஜெயந்தன் சேகரித்த அனுபவங்கள் அநேகம்.

       மனிதனுக்கு வைத்தியம் பார்ப்பது என்பதே பெரிய விஷயம். இவரு நல்ல டாக்டரா? நல்லா பார்ப்பாரா? உறவி டோசேஜா போட்டுத் தள்றாரே…! அனுபவஸ்தர் மாதிரித் தெரிலயே…? சின்ன வயசுக்காரரா இருக்காரே…! – இப்படிப் பல.

       மாட்டுக்கு வைத்தியம் பார்ப்பதென்றால்? அதுவும் கடைக்கோடி கிராமத்துக்கு வேலையாகி, அங்கு கால்நடை ஆய்வாளராகச் சென்று  திக்கு திசை தெரியாமல் அமர்ந்தால்?

       எந்த நம்பிக்கையில் மக்கள் தங்கள் ஆடு, மாடுகளைக் கொண்டு வந்து நிறுத்துவார்கள்? இதையெல்லாம்தான் செய்யணும்…இதையெல்லாம் செய்யக் கூடாது என்று அவர்களிடம் எப்படிச் சொல்வது? அவர்களை எப்படி நம்ப வைப்பது? அவர்களின் நம்பிக்கையை எப்படிப் பெறுவது?

       இவைகளெல்லாம் இருக்கிறதோ இல்லையோ…அந்த மனிதர்களை ஒதுக்கி விட முடியுமா? இந்த மாதிரி அறியாதவற்றிற்கெல்லாம் அவர்கள் மீது கோபம் கொண்டு அவர்கள் மனிதப் பண்பற்றவர்கள் என்று கொள்ள முடியுமா?

       கிராமத்து அழகை ரசிக்க ஒரு தனி மனசு வேண்டும். அவர்களின் மொழியே தனி. நாம் திருத்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் பல வார்த்தைகளை அவர்கள் கொச்சையாக உச்சரிப்பார்கள். அப்படியான ஓரிரு சுருக்க வார்த்தைகளில் பெரிய பொருள் அடங்கியிருக்கும். இவை ஒவ்வொன்றையும் நுணுகிப் பார்த்து, அவைகளை ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி நம்மைப் பக்குவப் படுத்திக் கொண்டோமென்றால், நம்மை அவர்களோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளலாம்.

       கால்நடை ஆய்வாளரான ராகவன் அப்படித்தான் படிப்படியாக அந்த மக்களை அறிந்து கொள்கிறான். உணர்ந்து நிதானிக்கிறான். முதல் முறையாக அந்தக் கிராமத்தைப் பார்த்த அவனுக்கு தலை சுற்றிக்கொண்டுவர சொல்லாமல் கொள்ளாமல ஓடிப் போய்விடலாமா என்று கூடத் தோன்றுகிறது.

       போஸ்டிங் போட்ட ஊர் இது. ஒப்புக்கொள்ளாமல் என்ன செய்வது? ஒரு ஆறு மாசமாவது இருந்து கழித்துவிட்டுத்தான் வேறு ஊர் இட மாறுதலுக்கு விண்ணப்பம் கொடுப்பது சாத்தியம். அதுவும் இதனிலும் மேம்பட்டதாக அமையும் என்பது என்ன நிச்சயம்? இந்த இடம்தான் வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்க முடியுமா? அல்லது கிடைத்துத்தான் விடுமா?

       இன்று நண்பர்கள் நான்கு பேர் அவனைப் பார்க்க வந்திருக்கிற விசேஷத்தில், அனுபவித்த சங்கடங்களெல்லாம் இனிய நினைவுகளாக இப்போது மாறியிருப்பதை அவர்களோடு பகிர்ந்து கொண்டான் ராகவன்.

       அந்த கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு பார்பர் ஷாப். அங்கு போய் அமர்ந்திருக்கும் வேளையில்… ரத்தம் தெரிய ஷேவிங் நடந்து கொண்டிருக்கும் காட்சி….அப்டீங்கிறதுக்குள்ள சட்டுன்னு அசையுறீங்க…செத்த நேரம் கமுக்கமா இருக்க மாட்டீகளா…ன்னு பார்பர் ஒருவனை சமாளிக்க.. நான் ஷேவிங் செட்டை ஊர்லயே மறந்திட்டு வந்திட்டேன். சரி…அடுத்தவாட்டி போறவரைக்கும் உள்ளூர்லயே அட்ஜஸ்ட் பண்ணுவோம்னு போய் நின்னா…ரணகளமாயிருக்கு அங்க….பரவால்லன்னு உட்கார்ந்தா அந்தாளுக்குப் போர்த்துனதையே  எனக்கும் போர்த்துறான். நாத்தம் தாங்காம, வேற துணியில்லையான்னு கேட்டேன். உடனே இப்டித் திரும்பி, அப்டித் திரும்பி சட்டுன்னு ஒண்ணைப் போர்த்தி விட்டுட்டான். கண்மூடித் திறக்கிறதுக்குள்ள எம்மேல வெறே துணி. அதுவும் என்னவோ வாடைதான். சரி கழுத கெடக்குன்னு பொறுத்தக்கிட்டேன். ஷேவிங் முடிச்சி, எழுந்து நின்னா முதல்ல எனக்குப் போர்த்தினாம்பாரு…அது அவன் இடுப்புல….அசந்து போனேன்….என்னடா விஷயம்னு பார்த்தா…அவன் கட்டுன வேட்டிய எனக்குப் போர்த்தியிருக்கான்….

       ஏண்டா…அன்டர்வேர்…கின்டர்வேர் எதாச்சும் போட்டிருந்தானா இல்லையா…?

       அதான் எனக்குச் சந்தேகம்….அது இருந்தா ஏன் அந்தத் துண்டைச் சுத்துறான்….-எல்லோரும் சிரிக்கிறார்கள்.

       ஆபீசுக்கு வர…..தீவிர கால்நடை அபிவிருத்தித் திட்டம், செயற்கைமுறை கருவூட்டு நிலையம்….என்று போர்டைப் படிக்கிறார்கள் நண்பர்கள்.

       ஒராள் மாட்டைப் பிடித்துக் கொண்டு வந்து நின்று  அதை இன்னொரு மாடு குத்திவிட்டதாகச் சொல்ல, என்ன கை மருந்து போட்டீங்க என்று கேட்க…அடுப்புக்கரி, சீனி, கொஞ்சம் ஒட்டட, மூணையும் ஒண்ணா அரச்சுத் தடவுனேன்….

       ஆஸ்பத்திரி இருக்கைல இப்டி கை மருந்துங்கிற பேர்ல எதையாச்சும் செய்றதா…அதான் அந்த எடம் பச்சப் பசேல்னு இருக்கேன்னு சந்தேகப்பட்டுக் கேட்டேன்….

       என்னமோ எங்க பழக்கங்க….. – வரும்போகும் ஆட்களெல்லாம் இந்த வார்த்தையையே சொல்லுகிறார்கள்….என்னமோ எங்க பழக்கங்க….!

       ஒரு எருமை மாடு வந்து போய், பிடியில் அடங்காமல் தவ்வி ஓடி விடுகிறது. அந்த எருமையை மனித உறவில் நிறுத்திக் கொண்டு திட்டித் தீர்க்கிறார்கள. ஒருவன் தத்துவார்த்தமாய் –

       இந்தக் கழுதகிட்ட இந்தப் பாலு மட்டும் இல்லன்னா மனுஷன் இத கழுதையாக் கூட மதிக்க மாட்டான்….

       பன்னிரெண்டு மணிக்கு மேல் புறப்பட யத்தனித்தபோது…ஒருவன் காளமாட்டுக்கு வயிறு ஊதிக்கிட்டு ரொம்ப டேஞ்சரா இருக்குதுன்னு வந்து நிற்கிறான். எத்தன நாளா?ன்னு கேட்க…

       ஒரு வாரமாவே இருக்குது சார்…இந்தா சரியாப் போவும்…அந்தா சரியாப் போவும்னு இருந்தேன். வெத்தல சாத்தயும், விருவ நெய்யும் குடுத்திட்டிருந்தேன்…கடைசில இப்படியாயிடுச்சி…(விருவம் என்பது பன்றி)

       வயிறு ஊதியிருக்கிறதுக்கும் பன்னி நெய்க்கும் என்னா சம்பந்தம்?

       என்னமோ எங்க பழக்கமுங்க….. –

       அவன் புறப்பட, நண்பர்கள் நாங்களும் வருகிறோம் என்க….கிளம்புகிறார்கள். மாட்டிற்கு வயிறு நான்கு பகுதிகளாய் இருக்குமாம். காற்று உப்புசத்திற்கு ரூமன் என்னும் பகுதி. அந்தப் பகுதியிலிருந்து அடைத்திருக்கும் காற்றை துளை போட்டுத்தான் வெளியேத்தணும்….அப்ப சரியாகும்…

       அந்த வீட்டை அடைய மாட்டைச் சுற்றிக்கொண்டு பெரும் கூட்டம். நெருப்புக் கனலை மாட்டிற்கு முன்னால வைத்து கருவாட்டையோ எதையோ போட்டு புகை கிளப்பிக்கொண்டிருக்க, ஒரு பெண் முறத்தில் இருந்து புடைத்த சாம்பலை மாட்டின் மீது கொட்ட, மாட்டின் கழுத்தில் ஏதோ பச்சைக் கொடி மாலையாய்க் கிடக்க…ஒரே அமர்க்களம்.

       மாடு கண்டிஷன் ரொம்ப மோசமா இருக்கு….வயித்தப் பொத்து, காத்த எடுக்கணும்…. – சொல்கிறான். ஒருவேளை மாடு போய்விட்டதென்றால் நாமதான் கொன்னுட்டோம் என்றல்லவா சொல்வார்கள்.?

       எ்னது வயித்தப் பொத்தணுமா…?  -  மாட்டுக்குச் சொந்தக்காரன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே மாடு சாய்ந்து விடுகிறது. மாட்டைச் சுற்றி நின்று கை கோர்த்துக் கொண்டு ஒப்பாரி வைக்கக் கிளம்பி விடுகிறார்கள். கூட்டம் சற்று நேரத்தில் கலைகிறது

       ரொம்பக் கைராசி….வந்து கை வைக்கிறதுக்குள்ள மாடு போயிடுச்சி…. – ஒரு கிழவியின் ஆசீர்வாதம்.

       நான்கைந்து பேராகச் சேர்ந்து கிழக்கு நோக்கிப் போகிறார்கள். என்ன என்று பெட்டிக்கடைக்காரரிடம் கேட்க….கேதத்துக்குப் போறாங்க…மாடு செத்துப் போச்சில்ல…..அதான்… - மனுஷன் செத்தாலும், மாடு செத்தாலும் கேதந்தான் அந்த கிராமத்துக்கு. சிரிக்கிறார்கள்.

       டேய் நம்ம ராகவன் வேல செய்ற கிராமத்துல மாடு செத்தாலும் கன்டலன்ஸ் போவாங்கடா… - ஊரில் சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் நண்பன்.

       ஒரு நாள் காலையில் ஏழு ஏழரை இருக்கும். தண்டோரா போட்டுக்கொண்டு ஒருவன்…சேனாபதி செத்துட்டாரு…சேனாபதி செத்துட்டாரு…..டம….டம….டம….டம…டட்…டட்…..

       என்னாடாது…நேத்துவரைக்கும் குத்துக்கல்லாட்டம் இருந்த ஆளு…ஊருக்கு அந்த ஒரே சேனாபதிதான். அந்தாளு செத்துட்டாரா? எந்தச் சேனாபதிடா…?

       அந்த சேனாபதிதான்…சேனாபதி செத்துட்டாரு…சேனாபதி செத்துட்டாரு…. அடப்பாவி மவனே…!

       நாந்தான் கல்லாட்டம் நிக்கிறனடா…எந்தச் சேனாபதியச் சொல்ற? சேனாபதியே நிறுத்திக் கேட்கிறார்.

       யார்ரா தண்டரா அடிக்கச் சொன்னது?

பெரசன்டுங்க….

பஞ்சாயத்து பிரசிடென்டைப் போய்க் கேட்டதும்தான் உண்மை தெரிகிறது. நம்ம ஜனாதிபதியே இறந்து போய்ட்டாருன்னு…. – ஆத்தாடீ…இன்னும் என்னென்ன கதைதான் இருக்கு? கெக்கலித்து, விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

காட்டுப் பக்கம் வருகிறார்கள் நண்பர்கள். கம்பஞ்செடியைப் பார்க்கிறார்கள். கம்பங் கதிர்….ஓடிப் போய் ஒரு கதிரை ஒடிக்கிறான் ராகவன். முற்றிய கதிரெல்லாம் அறுத்து முடித்து, பிஞ்சுகள் மட்டும் அப்படியே…

காட்டுக்காரன் கண்டா வெரட்டப் போறான்….

நாம என்ன எடத்தையேவா தூக்கிட்டுப் போறோம்…வயக்காடு அப்டியேதான இருக்கு…-சிரிப்பாய்ச் சொல்லிக் கொண்டு ஆளுக்கொன்றாய்.பறித்து, சிலுப்பி, திருகி, உமியை ஊதிவிட்டு, மணிகளைக் கையில் குவித்துக் கொண்டு ருசித்து உண்கிறார்கள். பச்சைப் பாலோடு தொண்டையில் இறங்க ருசியாய்த்தான் இருக்கிறது கம்பங்கதிர்.

பக்கத்துக் கிணற்றிலிருந்து திடீரென்று ஒரு உருவம். அட…பெருமாள் கவுண்டர்… - குளித்துவிட்டு வருகிறாரா….?  அவருடைய காடல்லவா இது…! திட்டுவாரோ..?

ஏம்ப்பா..படிச்ச புள்ளைங்கதானா நீங்க…இப்டி ஆளுக்கு நாலு கதிரக் கைல பறிச்சு வச்சித் தின்னா நல்லாவாயிருக்கு? – கேட்பாரோ….கதிரை மறைப்பதற்குள் நெருங்கி விடுகிறார்.

கம்பு திங்கிறீங்களா ஐயா….ரெண்டு நாளைக்கு முந்தி வந்திருந்தா முத்துன கதிரா கிடைச்சிருக்கும்… சொல்லிக் கொண்டே போய்க்கொண்டிருந்தார் அவர். ஈரத் துண்டு போர்த்தின முதுகுதான் அவர்களுக்குத் தெரிந்தது.

அவர்கள் பிறந்து வளர்ந்த நகரத்திற்கென்று ஒரு நாகரீகம் உண்டு. . பக்கத்து வீட்டுக்காரனை பத்து வருஷமானாலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லை என்பதான சமூகம். அடுத்த வீட்டில் இழவு விழுந்திருந்தாலும், இவர்கள் வீட்டு ரேடியோ அலறிக் கொண்டிருக்கும். கூடிக் கூடி மணிக்கணக்கில் கதையளக்கிற பெண்கள், கடைசியில் ஒரு குடம் தண்ணீருக்கு அடித்துக் கொள்வார்கள். அந்த நாகரீகத்தில் பிறந்த இந்த இளைஞர்கள்…அழையா விருந்தாளியாய், கேளாமலே எடுத்துக் கொண்ட விருந்தைக் கூட பொருட்படுத்தாது கௌரவமாய் ஏற்று புன்னகையோடு போய்க் கொண்டிருக்கும் கவுண்டரின் கிராமிய உபசரிப்பு. இந்த அனுபவம் இவர்களுக்கு முற்றிலும்  புதிது.

அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஒரு வேளை தாங்கள் காலையிலிருந்து இந்தக் கிராமத்தார்களைப் பற்றிப் பேசிப் பேசி செய்த கேலிக்கும், கிண்டலுக்கும் இந்த பெருமாள் கவுண்டர் ஏதும் பதில் சொல்லிவிட்டுப் போகிறாரோ?

இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள்… - என்ன ஒரு அருமையான உணர்த்தல்? ஜெயந்தனின் கருக்கள் எல்லாமே சொல்ல வந்த விஷயத்தை அழுத்தம் திருத்தமாய், பொட்டில் அறைந்ததுபோல்தான் நிறுவியிருப்பார். கிராமத்து மனிதர்களின் விகல்பமற்ற தன்மையையும், அறியாமையையும், ஆட்களை உணர்ந்து கௌரவமாய் நடத்தும் தன்மையையும்…..இதற்கு மேல் வேறு எப்படித்தான் சொல்லிச் செல்வது…?

அது என்னமோ எங்க பழக்கமுங்க….!!!

                           -----------------------------------------------------------