11 டிசம்பர் 2018

இமையத்தின் செல்லாத பணம்-கட்டுரை - திரு ஜெயமோகன் இணைய தளத்தில்

இமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்


imaiyam

ரு நாவலைப் படித்து மனசு பொறுக்காமல் நான் அழுதது இதுவே முதல் தடவை. எனது வாசிப்பு அனுபவத்தின் இத்தனை ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வு.  ஆழ்ந்து அனுபவித்து உள்ளேயே அமிழ்ந்து போன அவலம். அந்தந்தக் கதாபாத்திரங்களின் தத்ரூபமான சித்தரிப்பினைக் கண்டு வியப்பது, நாவல் நிகழ்கின்ற கால கட்டத்தின் சமூக நடைமுறைகள், பேச்சு வழக்குகள், இயற்கை நிகழ்வுகள், சித்தரிக்கப்பட்டிருக்கின்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறைகள், கதை நிகழ்கின்ற சூழல் இப்படிப் பலவும் ஒரு தேர்ந்த வாசகனை அவனது தீவிர வாசிப்பில் கட்டிப் போட்டு விடுகின்றன. அதனிலும் முழுக்க முழுக்க யதார்த்த உலகில் ஒரு நாவல் பயணிக்கிறதென்றால், அந்த உலகம் வாசகனுக்குப் பெரிதும் பரிச்சயமானதாய் அமைந்து போய்விட்டால், ஊடே தானும் நடைபயில்வது  என்பது எளிதான விஷயமாகி விடுகிறது. நாம் ஒன்று இப்படி எழுத முனையவில்லையே என்று நினைத்து ஏங்கும் அளவுக்கு கடைசிவரை கொண்டு நிறுத்திவிட்டுத்தான் ஓய்கிறது.
இந்த நாவலுக்கான இரண்டு வரிக் கதையை இருநூறு பக்கங்களுக்குக் கொண்டு செலுத்த முடியுமா என்று நிச்சயம் எழுத ஆரம்பித்த அந்தக் கணத்தில் படைப்பாளிக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால் இந்த சமூகத்திலுள்ள அன்றாட நிகழ்வுகள், அவலங்கள், நெறி கொண்டோரும், நெறி தவறியவர்களும் கலந்துதான் வாழ்ந்தாக வேண்டும் என்கின்ற நடைமுறை யதார்த்தங்கள்,  ஒழுக்கக் கேடுகள், அதனால் ஏற்படும் விளைவுகள், அதில் பாதிக்கப்படுவோரின் தீராத சோகங்கள், நிர்வாக நடைமுறைகளில் இருக்கும் சீர்கேடுகள், அதற்குஈடு கொடுக்க முடியாமல் சீரழியும், பலியாகும் எளிய மக்களின் பாடுகள்… இப்படிப் பலவற்றையும் ஒவ்வொன்றாக, பகுதி பகுதியாக நினைத்துப் பார்க்க முற்படுகையில் இதனை இப்படிச் சொன்னால்தான் அழுத்தம் பெறும், உறைக்கும், வாசக மனதில் தாக்கங்களை ஏற்படுத்தும், சமூகத்துக்கான எச்சரிக்கையாக அமையும், சமூக நீதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த உந்துதலாகி உதவும் என்பதாகப் பலவும் ஆசிரியரின் எண்ணச் சிடுக்குகளில் வலம் வந்து தெளிவு பெற்றிருக்கலாம்.
பண மதிப்பு ஒழிப்பு நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட நாட்களில் மதிப்பிழந்த காகிதங்கள், மறைத்து வைக்கப்பட்டிருந்த நோட்டுக்கள் கிழித்து எறியப்பட்டுக் கேட்பாரற்று வீதியோரங்களில் குப்பையாய்க் கிடந்த நாட்களில் மக்களில் பலர் பார்த்து வயிறெறிந்தும், சிரித்துக் கொண்டும் சென்ற காட்சிகள் எதுவுமே கூட வரப்போவதில்லை என்கின்ற இந்த அநித்தியமான வாழ்க்கையின் உண்மையைப் பரைசாற்றுவனவாக அமைந்தன. அதே சமயத்தில் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக அது திகழ்வதைத் தவிர்க்க முடியாத வகையில் பயன்பட வேண்டிய நேரத்தில் வேண்டியவர் கையில் இல்லாமல் போவதும், தேவையில்லாதோர் கைகளில் அநாவசியமாய்த் தேங்கி நிற்பதும், தேவையுள்ளோர் கையில் மதிப்பின்றித் திகழ்வதும்,  கொடுக்கும் மனசிருந்தோர் ஆயினும், கேட்காமல் என்ன கொடுப்பது என்ற கௌரவத்தின்பாற்பட்ட விஷயமாய் நின்று புழக்கமின்றி அடைந்து போவதும், இந்தப் பணம் என்னென்னமாதிரியான மனநிலைகளையெல்லாம் ஏற்படுத்துகிறது, மனிதர்களை எப்படியெல்லாம் நல்லதற்கும் கெட்டதற்கும் ஆட்டி வைக்கிறது என்கின்ற சிந்தனைகளையெல்லாம் தூண்டி விட்டு  நம்மை நிலை கொள்ளாமல் அடிப்பதில் முக்கியப் பங்கு வகித்து நிற்கிறது என்கின்ற நிகழ் யதார்த்தம் நம்மால் புறந் தள்ள முடியாத உண்மையாய் நிலைக்கிறது.
பணம் எப்படி வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறதோ அதுபோல் அது இருந்தும் பயனில்லை என்பதான ஒரு சந்தர்ப்பத்தையும் அது அடைந்து நிற்கையில் மனித மனங்கள் சஞ்சலமின்றி விதியின் விளையாட்டை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.  அல்லது இதெல்லாம் விதி என்று எளிய மனம் அதற்கு விடை தேடி ஆறுதல் கொள்கிறது. விதியை மதியால் வெல்லலாம் என்று விதித்த விதி பற்றி அறியாமலேயே மனிதன் செயலில் முனையும் பொழுது, அத்தனை பாடுகளையும் வாங்கிக்கொண்டு அவனைச் சீரழித்து கடைசியில் அதுதான் வெல்கிறது. தன் செயல்களுக்கான முரண்கள் அத்தனையையும் ஒதுக்கி விட்டு கடைசியில் முடியாது தணிந்தகாலையில் விதியின் மீது பழியைப் போட்டுவிட்டு ஆறுதல் அடைகிறான் மனிதன்.
இந்த உலகில் நிச்சலனமாய் ஓடிக் கொண்டிருக்கும் அமைதியான வாழ்க்கையை அநாவசியமாய்க் கெடுத்துக் கொண்டு சீரழியும் மனிதர்கள் பலர். காரணம் அறியாமல் அல்லது அறிந்து அதற்கு ஒரு காரணத்தைச் சொல்லி அல்லது வெறுப்பில்தன்னைத்தானே நொந்து கொண்டு எதிர்மறையாய்ப் பேசி, எதிர்மறையாய் நடந்து மேலும் மேலும் தவறிழைத்து. தன்னைத் தானே தன் இழி செயல்களின் மூலம் வருத்திக்கொள்வது மட்டுமல்லாமல் சார்ந்தவர்களையும் கஷ்டப்படுத்தி அவர்களின் நிம்மதியையும் குலைக்கிறான். தவறு செய்து விட்டோம் என்கின்ற மனசாட்சியின் உந்துதலில் எரிச்சல் பட்டு அதற்கான காரணங்களை எதிராளிகளின் மீது சுமத்தி அவர்களையும் நிம்மதியின்றி அடித்து, மேலும் மேலும் தவறுகளைச் செய்து கொண்டே தொடர்கிறான்.  தொடர்ந்த தவறுகள், இழி செயல்கள் ஒன்று அவனை அல்லது அவனைச் சார்ந்தவர்களில் ஒருவரை அல்லது சிலரைப்  பலி வாங்கும்போது அவனது தாகம் அடங்குகிறது. அல்லது வேறொரு முடிவிற்குக் கொண்டு நிறுத்துகிறது.
இந்த நாவலில் நிகழும் ஒரேயொரு சம்பவம் அதன் அத்தனை கதாபாத்திரங்களையும் உலுக்கி விடுகிறது. அந்த சம்பவமும் அதன் தொடர்ச்சியான தொடர்புடைய நிகழ்வுகளும்தான் நாவலை படிப்படியாக இழுத்துக் கொண்டு செல்கிறது. சம்பவத்துக்கு ஆதரவான அல்லது ஆதரவில்லைபோல் சொல்லிக் கொள்கின்ற மற்றும் அதற்கு எதிரான மனிதர்களோடு நாமும் கூடவே கடைசி வரை பயணிக்கிறோம்.
குடும்பத்தினர் விரும்பாத ஒருவனைப் படித்த மகள் சிற்சில கட்டாயத்தின்பேரில் ஏற்றுக் கொள்ள, தவிர்க்க இயலாத நிலையில் பெற்றோர் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து விட்டு விலகிக் கொள்கிறார்கள். நீயே கதி, நீயின்றி எனக்கு வாழ்க்கையில்லை என்று ஒருவகையான வன்முறையை அவள் மீது  விடாது அவன் திணித்திடும்போது அந்த வன்முறை தந்த மனச் சிக்கல்களில் உழன்று இப்படி ஒருவன் தன்னை நாடி வாழ்க்கையைச் சீர் குலைத்துக் கொள்கிறானே என்கிற பெண்ணுக்கேயுரிய இரக்க சுபாவத்தில் மனம் நெகிழ்ந்து அவள் அவனை ஏற்றுக் கொள்கிறாள். எந்தவகையிலும் ஒரு பெண்ணுக்குத் தகுதியானவன் அல்ல அவன் என்று பகிரங்கமாய் உணர்ந்திருந்தும், தன் மீது அவன் கொண்டிருந்த வெறித்தனமான பிரியமும், காதலும் கண்டு கசிந்து உருகி, தன் வாழ்க்கையின் தியாகமாய் அது இருந்தாலும் போகட்டும் என்று அவனை அவள் அடைந்து விட, பிறகும் வெவ்வேறு ரூபங்களில்  அவனின் ஆட்டங்கள் தொடர்கின்றன.
தான் மோசமானவன்தான் என்றாலும், தன்னை தன்னுடைய குற்றங் குறைகளோடு ஏற்றுக் கொள்ளாதவர்களை அவன் வெறுக்கிறான். தன்னைச் சார்ந்தவர்களே அதைச் சுட்டிக் காட்டும்பொழுது மனிதத் தன்மையற்றவனாய், மிருகத் தனமாய் மாறி விடுகிறான். தவறு செய்கிறோம் என்று உணர்ந்திருந்தும், அதிலிருந்து வெளிவர முடியாதவனாய் அந்தத் தவறுகளின்மேல் எரிச்சல்பட்டு, தன்னைத் தானே வெறுத்தவனாய் அதிலிருந்து மீள முடியாமல், அதனை நியாயப்படுத்தி, அதற்கு பிறர் மேல் குற்றம் சுமத்தி, தன் மனதுக்கு ஒவ்வாத சமாதானம் தேடி, அதிலும் நிம்மதி அடைய முடியாதவனாய் மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் சாதாரணனாய்க் கிடந்து சீரழிகிறான்.
பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் தீவிரமாய் அவனால் தன் மீது திணிக்கப்பட்ட வன்முறையைத் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொண்டு, அவனையும் தன் அன்பினால் நல்வழிப்படுத்த முடியாமல், சந்தோஷமான வாழ்க்கையையும் வாழ ஏலாமல், நாளும் பொழுதும் அடுத்தவரை நாடி நிற்கும் நிலைக்கு மானம் கெட்டு, மதி கெட்டுத் தள்ளப்பட்டு கேவலப்படுகையில் இப்படி ஒரு அவலத்தைத் தேடிக் கொண்டதற்கு முழுப் பொறுப்பு தானே என்கின்ற முடிவினில் தன்னைத் தானே எரித்துக் கொள்ளும் அவளின் நியாயம் அவனை அப்பொழுதேனும் புரட்டிப் போடுகிறதா என்றால் அதற்கும் பலனில்லாமல்தான் போய்விடுகிறது.
நா செய்யல….நா கொளுத்தல…. இந்த ரெண்டு வார்த்தைகளைத்தான் கடைசிவரை சொல்கிறான். அவள் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டாளா அல்லது அவன் தீ வைத்ததை மறைக்கிறாளா என்பது கடைசிவரை தெளிவு படுத்தப்படாவிடினும் தெரிந்து போய்விடுகிறது. ஆனாலும் இந்த நிகழ்வு அப்படித்தான்  போகும் என்பதில் ஆசிரியர் உறுதியாக நிற்பது நம்மையும் திருப்திப்படுத்துகிறது. பெற்றோர்களின் நல்ல வார்த்தைகளைப் புறக்கணித்து தான் வலியத் தேடிக் கொண்ட அவலத்தை உணர்ந்து, நொந்து இனியும் தன்னால் அவர்களுக்கு எந்தக் கேடும் வந்து விடக் கூடாது என்று கடைசியில் அவள் தன் வாக்குமூலத்தை வெகு சாமர்த்தியமாய் வழங்குகிறாள்.
மதியம் மூன்று மணிக்கு சமைத்துக் கொண்டிருந்தேன். அடுப்பில் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. உப்பு பாட்டிலை எடுக்கத் திரும்பினேன். மேடையிலிருந்த மண்ணெண்ணெய் கேன் சாய்ந்து குழம்பிலும் அடுப்பிலும் கொட்டியதும் தீ பிடித்துக் கொண்டது. நான் கத்தினேன். டி.வி. பார்த்துக் கொண்டிருந்த என் கணவர் ஓடிவந்து என் மீது தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்தார்.  சாக்கை என் மீது போர்த்தி மருத்துவமனைக்கு ஆட்டோவில் கூட்டிச் சென்றார். தீ விபத்து எதிர்பாராதவிதமாய் நடந்தது. நான் கொளுத்திக் கொள்ளவில்லை. என் கணவரும் என்னைக் கொளுத்தவில்லை….இதற்கு யாரும் காரணம் இல்லை.
கையில் பத்து லட்சம் பணத்தை வைத்துக் கொண்டு வழக்கு நடத்த அலையும் தந்தை நொந்து போகிறார். இந்த நெலமைலயும் என்னைத் தலை குனிய வச்சிட்டா…சாவட்டும்…அவ சீக்கிரம் சாவறதுதான் நல்லது. புருசன் ஆச போவலை அவளுக்கு. ரோட்டுப் பொறுக்கிக்கே இம்மாம் விசுவாசம்…. என்று பொது இடத்தில் கதறுகிறாள் தாய்.
அந்தப் பொண்ணு தப்புப் பண்ணல. சரியாத்தான் செஞ்சிருக்கு…அவனுக்கு விடுதலயக் கொடுக்கல…சாகுற மட்டும் தண்டனையைக் கொடுத்திருக்கு…இனி ஒவ்வொரு நிமிஷமும் அவன் சாவான். ஒங்க பொண்ணு நல்ல பொண்ணு …கொலகாரனயே காப்பாத்தி விட்டிருக்கு….நல்லவங்களுக்குத்தான் அந்த மாதிரி மனசு வரும். ஒரு உசுரக் கொன்னுட்டான் அவன்…ரெண்டு உசுர அநாதையாக்கிட்டான்.எந்தத் தாயும் பெத்த புள்ளைங்களை விட்டிட்டு சாவ மாட்டா…மீறி சாகுறான்னா அவ மனசு எப்பிடி வெந்திருக்கும்? எனக்குத் தெரியும்…நான் பட்டிருக்கேன்….- கான்ஸ்டபிள் ஆனந்தகுமாரின் இந்த வார்த்தைகள் விளக்கமாய் முன் வைக்கப்படும்போது  ரேவதியின் தாய் தந்தையரோடு சேர்ந்து நாமும் அழுகிறோம்.
இந்த நாவலிலேயே இரண்டு உச்ச கட்டமான, மிக முக்கியமான  இடங்கள் நம் கவனத்தை அதி தீவிரமாய் ஈர்ப்பவை.  ஒன்று…ரேவதியின் கணவன் ரவி தன் சார்பாய் எடுத்து வைக்கும் நியாயம்… இன்னொன்று கடைசியாய் தாய் அமராவதி தன் பெண்ணின் வெந்த சடலத்தைப் பார்த்துக் கதறும் காட்சி.
இவ்வளவு புத்திசாலித்தனமாப் பேசுறானே…வெறும் ஆட்டோ ஓட்டுற இவன், இப்டிப் பேச எங்க கத்துக்கிட்டான்….இந்த புத்திசாலித்தனத்த நல்ல நடப்புக்கு மாத்தியிருந்தான்னா எல்லாரும் சந்தோஷமா இருந்திருக்கலாமே என்று மருமகள் அருண்மொழி நினைத்து வருந்துகிறாள்.
se
அத்தியாயம் 12 முழுக்க அவளுக்கும், ரவிக்கும் இடையே நடக்கும் சம்பாஷனைகள் வெகு அற்புதம். அதை வெறும் எழுத்துத் திறன் என்று கொள்வதற்கில்லை. உண்மையிலேயே அந்த மாதிரி நடப்பியல் கொண்ட ஒருவன் எப்படியெல்லாம் பேசுவான் என்பதை அப்படியே வரிக்கு வரி வடித்தெடுத்திருக்கிறார் எழுத்தாளர் இமையம்.
ஐயப்பன் சாமி மேல சத்தியம்…நான் செய்யல…..
அப்டீன்னா அவ தீயே குளிக்கலேன்றியா…?
மண்ணெண்ணெய் ஊத்தியிருந்தா இவ்வளவு வெந்திருக்காது. ஆட்டோவுக்கு ஊத்துற டீசல ஊத்திக்கிட்டா…. என்று ஆரம்பிக்கிறது அவனின் வாய்மொழி…..நீ இப்டி ஆட்டோ ட்யூ கட்ட வச்சிருக்கிற பணத்தை எடுத்து செலவழிச்சா அப்புறம் நா செத்துடுவேன் என்கிற அவளிடம் சரி…செத்துப்போ…என்று விடுகிறான். ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்…வெளையாட்டுக்கு என்று விட்டுக் குலுங்கி அழுகிறான். பொறுக்கியா இருக்க எனக்கு மட்டும் என்ன ஆசையா? என்று கேட்கிறான். நான் பொறுக்கிதான்…ஆட்டோ ஓட்டுறவன்தான். தண்ணி அடிக்கிறவன்தான். அடிக்கடி சண்ட பிடிச்சி போலீஸ் போறவன்தான்…சோத்துக்கு இல்லாத நாயிதான்…இத்தன வருஷத்துல  ஒங்க யார்ட்டயாவது எதிர்ல நின்னு பேசியிருக்கனா…நீங்க எல்லாரும் பெரிய படிப்புப் படிச்சவங்க…பெரிய வேல…பணம் உள்ளவங்க…எல்லாம் இருக்கு உங்ககிட்ட. ஆனா பெரிய மனசு மட்டும் இல்ல…
தன்  கேள்விகளால் அருண்மொழியை அடித்து நொறுக்குகிறான் ரவி. நான் சல்லிப் பயதான். சல்லிப்பய சல்லிப் பயலாத்தான் இருப்பான்…ஆனா பெரிய மனுசன் பெரிய மனுசனா இருக்கணுமா இல்லியா? – அவனின் கேள்விகள் ஒவ்வொன்றும் நம்மையே உலுக்கி எடுத்து விடுகிறது. நான் தெனம் அவ ஒடம்புலதான் அடிச்சேன். நீங்க மனசுல அடிச்சுட்டீங்க….எங்கிட்ட பணம் இல்ல…ஒங்ககிட்டே இருந்திச்சி…அதனால நீங்க எம்மாம் அசிங்கப்படுத்தினாலும் அவ ஒங்ககிட்டே வந்திட்டிருந்தா… பணத்தாலதான் அவ அசிங்கப்பட்டா…இனிமே அந்த அசிங்கம் இல்லே…
அவள வேலைக்கும் அனுப்ப மாட்ட…நீயும் சம்பாரிக்க மாட்ட…சம்பாரிக்கிறதக் குடிச்சிப்புட்டும் வருவ…கடசில சட்டமும் பேசுவ… ஒனக்கு மூள பூராவும் கிரிமினலா இருக்கு….போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிப் போயி நல்லா கிரிமினலாப் பேசக் கத்துக்கிட்டே….- அருண்மொழி ஆத்திரம் தீர வார்த்தைகளை வீசுகிறாள்.
ஆட்டோகாரன ஏன் கட்டினேன்ன கேட்டு தெனம் தெனம் அசிங்கப்படுத்தினீங்க…அந்த அவமானம்தான் அவள எரிச்சிது….அத அவளுக்கு உண்டாக்கனது யாரு…. என்கிறான் அவன்.  ஒருத்தன் நொண்டியாப் பொறக்குறான்…ஒருத்தனுக்குக் கண்ணு தெரில…ஒருத்தன் கருப்பா இருக்கான்…ஒருத்தன் செவப்பா இருக்கான்…ஒருத்தன் நல்லாப் படிப்பான்…ஒருத்தனுக்கு படிப்பு ஏறாது…என்னா செய்ய முடியும்? அது மாதிரி எனக்கு வாய் அதிகம்…கோபம் அதிகம்…அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்கும் பொழுது அருண்மொழி சொல்கிறாள்.
திருடனுக்குத்தான் சட்டம் நல்லாத் தெரியும்….ஒவ்வொரு திருடனுக்கும் ஒரு நியாயம்…. என்ற மனதிலிருந்த கசப்பையெல்லாம் வார்த்தையாக்குகிறாள். ஒரு வக்கீல் போல் அடுக்கடுக்காக தங்கு தடையில்லாமல் எப்படி இவனால் இப்படிப் பேச முடிகிறது? ரேவதி தீக்குளித்தது பற்றி யாராவது கேள்வி கேட்டால், கேட்பவரின் வாயை அடைப்பதுபோல் தயாராய் பதில் வைத்திருக்கிறானே? என்று வியக்கிறாள்.
மூணு நாள் ரேவதியோட அப்பா பத்து லட்சத்தக் கைல வச்சிட்டு அலையுறாரு. இத முன்னாடி கொடுத்திருந்தா பத்து ஆட்டோ வாங்கியிருப்பன்…நானும் ஓனர் ஆகியிருப்பன்…ட்யூ கட்ட முடியாம தவிச்சிருக்க மாட்டன். சண்ட வந்திருக்காது…பணக் கஷ்டம் வந்திருக்காது….எங்கிட்ட இல்லாத மாதிரி ஒங்க கிட்டயும் பணம் இல்லாம இருந்திருந்தா…அவ தீக்குளிச்சிருக்க மாட்டா….என்று விட்டு என்னப் பெத்த அம்மா சாவப் போறாக்கா….என்று கதறுகிறான்.   படிக்கும் நாமும் கண் கலங்கி விடுகிறோம்…
இது நான் வெகு சுருக்கமாக இங்கு அளித்திருக்கும் விளக்கம். இமையம் விரித்திருக்கும் அழகைப் பார்த்தால் மனசு உருகி உருகி ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விடுகிறது. இதுபோல் கடைசியில் ரேவதியின் எரிந்த பிரேதத்தைப் பார்த்து விட்டு அவள் தாய் அமராவதி கதறும் காட்சியும் நம்மால் மறக்க முடியாதது.
தூங்கிட்டியா அம்மா? தூங்கு…இனி ஒனக்கு எந்தத் தொந்தரவும் இல்ல…தப்பு செஞ்சிட்டோமேன்னு இனி நீ அழுவ மாட்ட…எந்த நாயும் இனி ஒன்ன அடிக்க முடியாது. அம்மாவுக்குத் தெரிஞ்சிருமோன்னு இனி நீ எதையும் மனசுல போட்டு மறைக்க வேண்டியதில்ல….எங்கம்மாகிட்ட சொல்லிடாதீங்கன்னு யார்ட்டயும் கெஞ்ச வேண்டிதில்ல…இனி எந்த நாயும் ஒம் மூ!ஞ்சில காறித் துப்பாது…எந்தப் பொறுக்கி பேசுற கெட்ட வார்த்தையும் ஒங் காதுல விழாது….இனிமே எம் பொண்ணுக்குத் தூக்கந்தான்…இனி அவ வாய் பேசாது. ஒடம்பு அசயாது. அவ நிழலு மண்ணுல விழாது. ஒன் உசுரு அடங்குனா நல்லதுன்னு என் வாயலேயே சொல்ல வச்சுட்டியே…நீ சாவலடி…என் தங்கமே…உன் அம்மா செத்தாத்தான் நீ சாவே…என் உசுரு இருக்கு மட்டும் நீ என் நெஞ்சல இருப்பம்மா….எம் பொண்ணே நல்லாத் தூங்கு…என்று  இடைவெளியில்லாமல் அந்தத்தாய் புலம்பும் புலம்பல் நம்மையெல்லாம் உலுக்கி எடுத்து விடுகிறது.
ushadeepan
உஷாதீபன்

இதைத்தான் ஆரம்பத்தில் நான் சொன்னேன். எந்த நாவலும் படித்து  இப்படி அழுததில்லை என்று. இந்த நாவலின் பலமே இந்த நாவலுக்கான அவலம்தான். அது நிகழும் இந்தச் சமுதாயச் சீர் கேடுதான். இதற்கு சமுதாயம் என்ன செய்யும்? என்று கேட்கலாம். அப்படி ஒரு தத்தாரியான பொறுக்கியை வளர்த்தெடுத்ததும், இப்படியொரு குடும்பப் பெண்ணைச் சீரழித்ததும், நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கௌரவமான குடும்பத்தின் அமைதியைக் கெடுத்துச் சீர் குலைத்ததும்…..இன்றைய சமுதாய நடைமுறைகளின் சீரழிவு அல்லாமல் வேறு என்ன? அங்கங்கே ஒவ்வொரு குடும்பங்கள் இம்மாதிரியான ஒழுக்கக் கேடான நிகழ்வுகளால் சீர் குலைந்து கொண்டுதானே இருக்கின்றன? நம்மால் மறுக்க முடியுமா?

செல்லாத பணம் இமையம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

09 டிசம்பர் 2018

“மாறுபடும் வாசிப்புப் பழக்கம்” - பத்தி


                        
             




   மாறுபடும் வாசிப்புப் பழக்கம்”
வேகமான வாசிப்பு என்பது எனக்கு எப்போதும் சாத்தியமானதில்லை. தீவிர வாசிப்பு மன நிலையில், வரி வரியாகக் கடந்து செல்கையில் குறைவான பக்கங்களையே நான் கடந்திருக்கிறேன். அது ஒரு தகுதிக் குறைவு என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் ஆளுக்கு ஆள் வாசிக்கும் முறைகள் மாறுபடுகின்றன. வெறுமே பக்கங்களைக் கடந்து போவது என்பது வேறு. உணர்வு பூர்வமாயக் கடப்பது என்பது வேறு.  
சிலர் ஒரே நாளில், அதுவும் சில மணி நேரங்களில் இருநூறு, இருநூற்றைம்பது பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தைப் படித்து முடித்து விட்டதாகச் சொல்கிறார்கள். எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும்.. எவ்வாறு அவ்வளவு விரைவாகப் படிக்கிறார்கள் என்று யோசிப்பேன். இன்றும் யோசித்துக் கொண்டேதான் இருக்கிறேன். அதில் எனக்கு ஒப்புதலில்லாமல்தான் இருக்கிறது. படிப்பது வேறு பறப்பது வேறு.
எந்த அளவுக்கு அந்தப் புத்தகத்தை அவர்கள் உள் வாங்கியிருக்க முடியும் என்று யோசனை போகிறது. . அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஐம்பது பக்கங்களுக்கு மேல் நகர்ந்ததில்லை நான். இருநூறு பக்க நாவலோ, கட்டுரையோ, சிறுகதைத் தொகுப்போ, கவிதையோ அல்லது வேறு எதுவோ… குறைந்தது நான்கைந்து நாட்கள் ஆகிவிடும். சமயங்களில் ஒருவாரம் தாண்டிக் கூடச் சென்றிருக்கிறது.
இந்த ரேஞ்ச்ல போனா என்னைக்கு எங்கிட்ட இருக்கிற புஸ்தகத்தையெல்லாம் படிச்சு முடிக்கிறது? என்று வருத்தம் மேலிடுகிறது. இப்படி வாங்கிக் குவித்திருக்கிறோமே என்று மனதில் சோகம் மண்டிக் கொள்கிறது. ஆயுசையும், உடல் நலத்தையும் கொடு கடவுளே என்று மனம் வேண்டுகிறது.
வாழ்க்கையில் மன நலமும், உடல் நலமும்தான் முக்கியம். மற்றதெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அது சரியாக இயங்கிட, இலக்கியம் பெருமளவு உதவி செய்கிறதுதான்.
வாசிப்புப் பழக்கமுள்ளவர்கள், கதையை மட்டும்  மனதில் வைத்துக் கொண்டு படித்து நகர்வது என்பது வேறு. உணர்வு பூர்வமாய்க் கடந்து செல்வது என்பது வேறு. ஏதேனும் ஒரு கதாபாத்திரமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வோ மனதை வெகுவாக பாதித்ததென்றால் அந்த இடத்தில் நின்று போகிறது என் வாசிப்பு. அப்படியான மனிதர்களை, அந்தமாதிரியான சம்பவங்களை நாமும் நம் வாழ்க்கையில் ஏதோவொரு கட்டத்தில் சந்தித்திருக்கிறோம்தானே என்று நினைக்க ஆரம்பித்து விடுகிறேன். இதைவிடக் கடுமையான வார்த்தைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேனே என்று எண்ணுகிறது மனம்.  அந்தச் சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொண்டோம் என்று சிந்தனை போகிறது.  கிடைக்காத அனுபவங்களைப் படிக்க நேர்கிறபோது மனது வியந்து நிற்கிறது. பெருத்த சங்கடம் கொள்கிறது.
அசோகமித்திரன் இந்தச் சங்கடம் என்கிற வார்த்தையை நிறையப் பயன்படுத்துகிறார். எளிய மக்கள் அன்றாடம் அவர்களின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சங்கடங்களைக் கண்டு மிகுந்த மனவேதனையுறுகிறார். சின்னச் சின்னச் சங்கடங்கள் என்று ஏராளமாய் நினைத்துப் பார்க்கிறார்.
ஓடிப்போய் ஏறும் முன் பஸ் நகர்ந்து விடுவது…அது கடைசி பஸ்ஸாக இருப்பது, வரிசையை மீறிக் கொண்டு முந்திப்போய் தண்ணீர் பிடிப்பது, அதனால் தனக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போவது, வீட்டு வேலைகளையெல்லாம் முடித்து விட்டு அவதி அவதியாகக் கிளம்பி வெளியேறுகையில் தடுக்கி விழுவது, கால் கடுக்கக் காத்துக் கிடந்து கடைசியில் தன் முறை வருகையில் மண்ணெண்ணெய் இல்லாமல் போவது…எதிர்பாராவிதமாய் வைத்திருந்த கொஞ்சப் பாலும் கொட்டிப் போவது…சின்னத் தேவைக்குக் கூடக் காசில்லாமல் அவதியுறுவது….இப்படி ஏராளமான சங்கடங்களை அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்கும் சாதாரண சாமான்யர்களின் வாழ்க்கைப் பாடுகளை நினைத்து அவர் படும் வேதனை….அவரைக் மிகுந்த கருணையும், அன்பும், இரக்கமும் கொண்ட மனிதராகக் காட்டுகிறது எனக்கு.  அதுதான் வாழ்க்கை பூராவும் விடாமல் அவரை எழுத வைத்திருக்கிறது என்று எண்ணி மனம் நெகிழ்கிறது..
அதே உணர்ச்சியில்தான் என் வாசிப்புப் பழக்கத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நான் நின்று போகிறேன். அந்த அலைகளிலிருந்து மீள எனக்கு சில மணி நேரங்கள் ஆகிவிடுகின்றது.. ஏன், சமயங்களில் சில நாட்கள் கூட முடிந்து போகிறது.. இதனால் புத்தகங்கள் தேங்கி விடுகின்றன. கடந்து செல்கையில் என்னைப் பார்த்து இளிக்கின்றன. காசிருக்குங்கிற தெம்புல வாங்கி அடுக்கிட்டியாக்கும்? என்று கேலி செய்கின்றன.
வேகமாகப் படிக்கும் திறன் என்று சொல்கிறார்கள் பலர். அது வெறுமனே படித்து முடிப்பது என்பதுதான் என் கணிப்பு. எண்ணிக்கையைக் குறைப்பதற்கு வேண்டுமானால் அது உதவலாம். பறவைப் பார்வையாய்….இதானே இந்தப் புத்தகம்…என்று சொல்வதற்கா படிப்பது? பழம் பெரும் எழுத்தாளர்கள் அப்படியா எழுதி வைத்திருக்கிறார்கள்? அந்த எழுத்து இன்றைக்கு எத்தனை பேரிடம் மிளிர்கிறது? திரும்பத் திரும்பப் படிப்பதற்குத்தானே அவைகள்! நினைத்த கணத்தில் வரிசையிலிருந்து சட்டென்று உருவி அந்த வரிகளை வாசித்தாக வேண்டாமா? ஆத்ம திருப்தி அதில்தானே…!
ஆனால் ஒன்று. ஒரு புத்தகத்தை நாம் படிக்க ஆரம்பிக்கும்போது அது சட்டென்று நம்மை உள்ளிழுத்துக் கொள்ள வேண்டும். அப்படியானால்தான் அது கடைசிவரை போகும். அந்தத் திறன் அந்த எழுத்துக்கு இல்லையென்றால் சரி…இதானா… என்று பக்கங்களைத் தாண்டி அங்கங்கே மேய்ந்து, கடைசி முடிவைப் படித்து, மூலையில் கடாசிவிடத் தோன்றும். வாங்கிக் குவித்த புத்தகங்களில் பல அப்படி இருந்திருக்கின்றன.
புத்தகங்களைத் தேர்வு செய்வது  என்பது ஒரு கலை. நமக்குத் தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும். வரும் விமர்சனங்களைப் படித்து அதில் எது சிறப்பு என்று குறித்துக் கொள்ள வேண்டும். சகட்டுமேனிக்கு வாங்கிக் குவித்துவிட்டு பிறகு அவஸ்தைப்படுவதில் அர்த்தமில்லை. எனக்கு அந்த அவஸ்தை இருந்தது. இப்பவும் அவ்வப்போது நான் ஏமாறுவதுண்டு. கொஞ்சம் சுதாரித்துக் கொண்டிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்புறாத் தூணியும்” அஃகம் சுருக்கேலும், நவம் புத்தகமும், குஷ்வந்த்சிங்கின் “பாகிஸ்தான் போகும் ரயிலும்” ந.சிதம்பர சுப்ரமணியனின் “மண்ணில் தெரியுது வானமும்” தொ.மு.சி.யின் “புதுமைப்பித்தன் வரலாறும்“  இப்போது என் கையில் என்றால் நானும் தேறியிருக்கிறேன் என்றுதானே பொருள்?
இங்கே பிறிதொன்றையும் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. படிச்சிட்டேன் என்று சொல்லி புத்தகங்களை மற்றவருக்குக் கொடுத்து விடுவது சிலரின் வழக்கமாய் இருக்கிறது. வேறு சிலரும் படிக்க அது உதவும் என்றாலும்….ரசனையின்பாற்பட்டு நினைவுகளை அசை போடுகையில், குறிப்பிட்ட அந்த இடத்துல என்னமா எழுதியிருப்பார்…? என்று எண்ணிப் பார்க்கையில் சட்டென்று அந்தப் புத்தகம் கைக்கு வேண்டியிருக்கிறதே…? பின்பு அதை எப்படித் தூக்கிக் கிடாசுவதாம்? அல்லது கொடுத்து விடுவதாம்?
இரவல் கேட்பவர்கள், வாங்கிச் செல்பவர்கள் எத்தனை பேர் அதைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்? இரவல் கொடுத்தவர்கள் எத்தனை பேர் அதனை நினைவு வைத்திருக்கிறார்கள்? நான் என்னுடைய புத்தகங்களை நூலகங்களுக்குத்தான் கொடுத்திருக்கிறேன். அங்கே அது தொடர்ந்து பலருக்கும் பயன்பட வாய்ப்பிருக்கிறதுதானே? என் கண்ணெதிரே நகர்ந்து கொண்டிருக்கிறதே…!
சமீபத்தில் சிங்கப்பூரில் இருக்கும்  பிரபல பெண் எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்கள் தன்னுடைய புத்தகங்களை இவ்வாறு நூலகங்களுக்கு வழங்க விரும்பிக் கேட்டார். தடி தடியான புத்தகங்கள். மொத்தச் சிறுகதைகள், பெரிய நாவல், பயணக் கட்டுரைகள் என்று. திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதினைப் பெற நான் நாமக்கல் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்க நேர்ந்தது. அது 2014. அவரது ஒரு புத்தகமும் அந்தப் பரிசினைப் பெற்றிருந்தது. அப்போது அவரைச் சந்திக்க நேர்ந்தது.  நட்பு ஏற்பட்டது. என் உறவினில் ஒருவரைச் சந்தித்தது போன்ற நிறைவு.
இஃமெயிலில் அவர் இந்தக் கோரிக்கையை என்னிடம் வைத்த போது, தாராளமாய்ச் செய்யலாமே என்று அவரது புத்தகங்களை மதுரை ஆயுதப்படைக் மைதான நூலகத்திற்கு வரவழைத்துக் கொடுத்தேன். அது இருப்புப் பதிவேட்டில் ஏறி, இன்று பலருக்கும் பரந்த வாசிப்பிற்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.
எல்லாம் சரிதான்…தலையணை தலையணையாய் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொண்டு, கொலு வைத்தது போல், அவ்வப்போது தூசி தட்டித் தட்டி அடுக்கி வைப்பதில் என்ன பயன்? படித்துக் கரைய வேண்டாமா? புதிது புதிதாய் வேறு சேர்ந்து கொண்டேயிருக்கிறது…இன்று புத்தகங்கள் வரும் வேகத்திற்குப் படிப்பது, படித்து முடிப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாய் இருக்கிறது.
முன் பதிவு சலுகையில் நல்ல நல்ல புத்தகங்களை வேறு போட்டு விடுகிறார்கள். வாங்காமல் முடிவதில்லை. நாள் பூராவும் உட்கார்ந்து படித்தாலும் முடியாது போலிருக்கிறதே….! அவ்வப்போது ஏதாவது எழுதியாக வேண்டியிருக்கிறது. கொஞ்சம் நானும் பழகியிருக்கிறேனே….! படிச்சா போறாது….எழுது…எழுது என்று மனது துடிக்கிறதே…! என்ன செய்யலாம்? விழுந்தாயிற்று….கடைசி மூச்சு வரை இப்படித்தான் கழியும் போலிருக்கிறது…..
வாங்கோ…இந்தக் காயை நறுக்கிக் கொடுங்கோ….இன்னைக்கு அவியல்… கூப்பிடுவது காதில் கேட்கிறதா….?
கொஞ்சம் வீட்டுக்கும்தான் உபயோகமாய் இருப்போமே…!!!!
                ---------------------------------------------------------


08 டிசம்பர் 2018

புத்தனாவது சுலபம், (எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை வாசிப்பனுபவம்) உஷாதீபன் ----------------------------------------------------------------- ஒரே ஒரு சிறுகதையைப் படித்து விட்டு அதன் வாசிப்பனுபவத்தை மன நிறைவோடு, சொல்லியே ஆக வேண்டும் என்கிற உந்துதலோடு, பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் திருப்தியும், நிறைவும், ஒரு பெரிய நாவலைப் படித்து முழுமையாக உள்வாங்கி மொத்த நாவலின் காலகட்டத்தையும், நிகழ்வுகளையும் அடுக்கடுக்காக மனதில் வைத்து, ஒரு புத்தக விமர்சனமாக முன் வைக்கும் நிகழ்வில் கிடைப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. சிறுகதைகள் அதன் முழு உள் கட்டமைப்போடு உருவம், உத்தி, உள்ளடக்கம் என்கிற இலக்கணங்களோடு அமைந்து மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்பதான அனுபவம் அந்தப் படைப்பினைப் படிக்கும்போதே ஒரு தேர்ந்த வாசகனுக்கு ஏற்பட்டுப் போகிறது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணமெல்லாம் சிறுகதைக்கு இல்லை என்கிற கருத்தும் உண்டு. இலக்கணமெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். சொல்ல வந்த விஷயம் என்ன? அதை எழுதிய முறை என்ன? அது தந்த நிறைவென்ன? என்பதை மட்டுமே பார்ப்பது என்று கொண்டோமானால் ஆழ்ந்த ரசனையின்பாற்பட்டு, படைப்பினில் சொல்லப்படும் விஷயத்தின்பாற்பட்டு நம்மின் அனுபவச் செறிவு நமக்கு உணா்த்தும் அர்த்தங்கள் அநேகம். பெரும்பாலும் படைப்பாளிகளுக்கிடையே ஏதோ ஒரு ஒற்றுமை எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்றே தோன்றுகிறது. அது வெவ்வேறு மொழிகளில் ஆன வாசிப்பனுபவத்தின்பாலான பாதிப்போ, அல்லது வாழ்நிலைகளில் ஏற்பட்டுவிட்ட ஒற்றுமையோ, அல்லது படைப்பனுபவத்தில் ஏற்பட்டுவிட்ட தவிர்க்க முடியாத எண்ணச் சுழல்களோ, ஒருவர் முந்தி ஒருவர் பிந்தி எனப் பல சமயங்களில் பின் தங்கும் நிலை வந்து விடுகிறது. மனதில் தோன்றும் எண்ணங்களெல்லாம் ஒரு உருவகமாகி கதையாக உருப்பெறும் காலகட்டம் ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு விதமான அவகாசத்தைக் கொடுக்கிறது. இந்தக் கால அவகாசத்தில்தான் ஒரு தேர்ந்த அனுபவப் படைப்பாளி ஒரு இன்றைய படைப்பாளியைவிட ஓட்டத்தில் முந்திக் கொள்கிறார். வாழ்வனுபவங்களும், மனக் குமுறல்களும், மனப் புழுக்கங்களும், ஏற்படுத்தும் தாக்கங்கள், உந்துதல்கள் ஒரு சரியான வடிவத்தில் உறுப்பெற்றால்தான் படைப்பாளி தன் எண்ணங்களுக்கான துல்லியமான உருவம் கிடைத்துவிட்டதாக திருப்தி கொள்ள முடியும். இல்லையென்றால் இதை எப்படிச் சொல்வது என்பதிலேயே காலம் கழிந்து போகும் வாய்ப்புண்டு. அந்த மாதிரிச் சமயங்களில்தான் ஒரு முதிர்ந்த, மூத்த படைப்பாளி முந்திக் கொள்கிறார். சே! நாம நினைச்சதை இந்த மனுஷன் எவ்வளவு அழகா சொல்லிட்டான் பார்யா? நாம எழுதியிருந்தாக் கூட நிச்சயமா இவ்வளவு அழகாக் கொடுத்திருக்க முடியாதே...என்று எண்ணி ஏங்க வைத்து விடுகிறது அநேகப் படைப்புக்கள். இதில் என்ன ஒரு சந்தோஷம் என்றால் நம் மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு சரியான வடிவம் கிடைத்துவிட்டதில் ஒரு திருப்தி. என்னே அற்புதம்... இதை இவர் எழுதினதுதான் சரி, நம்மால இந்தளவுக்கு நிச்சயமா முடியாது என்று தோன்றுவதில் கிடைக்கும் ஒரு நிறைவு. ஆமாம்....ஒரு தேர்ந்த வாசகன் அப்படித்தான் நினைக்க முடியும்... அப்படித்தான் நினைக்க வேண்டும் என்பேன் நான். அதுதான் நல்ல வாசகனாய் இருக்கும் ஒரு படைப்பாளியை வளர்க்கும் லட்சணம் என்றும் சொல்வேன். நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்வதா என்று நினைப்பதில் பொருளல்ல. ஒரு நல்ல படைப்பினை மனம் விட்டுப் பாராட்டும் பாங்கு அது. நிறையப் பேரிடம் அது இல்லைதான். அதனால்தான் ஒளிவு மறைவாய் குறைத்து மதிப்பிடுவது, அது இது என்றெல்லாம் மனதுக்குத் தோன்றுகிறது. ஒரு நல்ல படைப்பாளி பிறிதொரு நல்ல படைப்பினை மனம்விட்டுப் பாராட்ட வேண்டும். அது அவனின் தன்னம்பிக்கையின் அடையாளம். அப்படியெல்லாம் நாமும் தேடினால்தான் சிறந்த படைப்புக்களைக் கண்டடைய முடியும். சிறந்த படைப்புக்களைத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும். அப்படியான ஒரு அனுபவம்தான் சமீபத்தில் எனக்குக் கிட்டியது. அந்தப் படைப்பு இரண்டு மூன்று மாதங்களாகவே மனதில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. திரும்பத் திரும்பப் படிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறது என்று பிரமிக்கத்தான் வைக்கிறது. இப்படியே பிரமித்துக் கொண்டேயிருப்பதிலேயே காலம் கழிந்து விடுமோ என்றும் தோன்றுகிறது. என்று அம்மாதிரி ஒரு படைப்பினை நாம் எழுதுவது, மற்றவர் பாராட்டுவது? அந்த மட்டும் அம்மாதிரி எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறனாவது இருக்கிறதே என்று ஒரு சமாதானம். ஆனால் அப்படியான அந்த நல்ல படைப்பை அந்த மதிப்பிற்குரிய படைப்பாளி ரொம்பவும் அநாயாசமாக எழுதி, இந்தா பிடி என்று எறிந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. நிச்சயம் அந்தக் குறிப்பிட்ட படைப்பிற்கு அவர் சிரமப்பட்டிருக்கப் போவதில்லை. எழுதுகோல் ஓடுகிற போக்கில் எழுதி முடித்த ஒன்றாகத்தான் அது இருக்கும். அவரின் வாசிப்பு அனுபவமும் எழுத்து அனுபவமும் அப்படி! ஆனாலும் அது நமக்கு அதிசயம். நமக்கு என்பதைவிட எனக்கு. அதுதான் சரி. இன்னமும் புதிரை விடுவிக்காமல் இழுத்தால் பொறுமையைச் சோதித்ததாகிவிடும். சொல்லி விடுகிறேன். திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் கணையாழி ஏப்ரல் 2011 இதழில் எழுதியுள்ள புத்தனாவது சுலபம் என்கிற சிறுகதைப் படைப்புதான் அது. அறிவியல் தொழில்நுட்பம் பெருகியுள்ள இக் காலகட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள் நாடுகளிலும், வெளி நாடுகளிலும,; சுறு சுறுப்பாகவும், வேகமாகவும், பரபரப்பாகவும், நிற்க நேரமின்றியும், ஓட்டமெடுத்த போக்கிலும், காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டதுபோல மென்பொருள் பொறியாளர்களாகவும், வேறு பல தொழில்நுட்ப அறிவியல் பணிகளிலும், ஓயாது ஒழியாது பணியாற்றிக் கொண்டு லட்ச லட்சமாக அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணிக்கையிலடங்கா இவர்களுக்கு நடுவே உள்ளூரிலேயே படிப்பை முடித்து விட்டும், படிப்பைப் பாதியில் விட்டு விட்டும், படிக்க வசதியில்லாமலும், அடுத்து என்ன செய்வது என்கிற லட்சிய நோக்கு எதுவுமில்லாமல, எந்தவிதமான தீர்மானங்களும் இல்லாமலும், ஒரு பெருங்கூட்டம் வெறுமே அலைந்து காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது என்பதும் இங்கே ஒரு தவிர்க்க முடியாத உண்மையாய் இருக்கிறது. படித்து முடித்து வேலை தேடும் ஒரு இளைஞன், படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெறுமே திரியும் இளைஞன், இப்படி எல்லோருமே பெற்றோர்கள் சம்பாதித்து அக்கறையாய் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பின் மகிமை அறியாமல் அதனை மனம் போன போக்கில் அன்றாடம் சும்மா இருந்து வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். குருவி சோ்ப்பது போல் வியா்வை சிந்தி சோ்த்த சேமிப்புப் பணம் இது என்கிற மகிமை அவா்களுக்குத் தெரிவதில்லை. மகிமையா அப்படீன்னா என்ன? கிலோ என்ன விலை? என்று கேட்பார்கள் நம்மிடம். ஏதாவது சொல்லப் புகுந்தால் ஏம்ப்பா இப்டி மொக்க போடற? என்று புதிய பாஷை பேசுவார்கள். வழக்கில் இல்லாத எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்ட ஒழுக்கமில்லாத வார்த்தைகள் இவர்களிடம் சர்வசாதாரணமாகப் புழங்கிக் கொண்டிருக்கும். கேட்டால் உங்களுக்கு உங்கள் பையன்மேல் சந்தேகம் வரும். இவன் தடம் புரண்டு கொண்டிருக்கிறானோ என்று பயம் எழும். இவர்கள் தற்காலத்தில் பேசும் வார்த்தைகள் அம்மாதிரி ஒழுக்கப் பிறழ்வின் அடையாளங்கள்தான். வெட்டியாய்த் திரிபவனுக்குப் பெற்ற தாயின் முழு ஆதரவு. அவனின் பிறழ்தல்களைக் கண்டு கொள்ளாத, அதனை ஒழுங்குபடுத்தும் கடமையை மறந்த, எல்லாம் சரியாப் போகும் என்கிற மெத்தனமான மனப்போக்குக் கொண்ட விட்டேற்றியான கண்மூடித்தனமான ஆதரவு. அப்படியான ஒரு இளைஞனின் மனப்போக்கும், தான்தோன்றிச் செயல்களும், அதனைக் கண்டிக்காத தாயாரின் அரவணைப்பும், அதனைக் கண்டு அருகிலிருந்தும் அவனை நல்வழிப்படுத்த முடியாத தந்தையின் மனக்குமுறல்களும் மனப் புகைச்சல்களும் ஒருங்கே அமைந்த கட்டு செட்டான படைப்புதான் திரு எஸ்.ரா. வின் புத்தனாவது சுலபம். இந்தக் கதையைப் போல் இதற்கு முன் எத்தனையோ சாதனையைச் செய்திருக்கிறார் எஸ்.ரா. அவர்கள். அவரது நடந்து செல்லும் நீரூற்றும் குதிரைகள் பேச மறுக்கின்றன என்கிற படைப்பும், தரமணியில் கரப்பான் பூச்சிகள் என்கிற சிறுகதையும், ஒரு நகரம், சில பகல் கனவுகள் மற்றும் பி. விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள் என்ற சிறுகதைகளும் என்றும் மறக்கமுடியாத படைப்புக்களாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றன. இவைகளையெல்லாம் படித்து விட்டு, எழுதினால் இப்படி எழுத வேண்டும் இல்லையென்றால் வெறும் வாசகனாக மட்டும் இருந்தால் போதும் என்றே நான் நினைத்திருக்கிறேன். பல்வேறு மொழிகளிலான தொடர்ந்த வாசிப்பனுபவமும், சிறு பிராயம் முதலான படிப்பனுபவமும், விடாத எழுத்தனுபவமும்தான் இப்படியெல்லாம் அதிசயிக்கத்தக்க படைப்பினை ஒரு படைப்பாளியிடம் உருவாக்குகின்றன. எத்தனை பேருக்கு நடைமுறை வாழ்க்கையில் இவை சாத்தியமாகின்றன. குறைந்தபட்சம் இவற்றையெல்லாம் கண்டடையும் திறனாவது இருக்கிறதே என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். புத்தனாவது சுலபம். ஆம். இன்றைய குடும்பச் சூழ்நிலைகள் ஒரு தந்தையை அந்த அளவுக்கான நிலைக்குத்தான் தள்ளிக் கொண்டிருக்கின்றன. மிகவும் பண்பட்ட, சாத்வீகமான, விவேகமிக்க ஒரு மனநிலை இந்தக் கதையில் சொல்லப்படும் நிகழ்வுகளால் ஒரு குடும்பத்தின் பொறுப்பு மிக்க தந்தைக்கு அநாயாசமாக நிச்சயம் ஏற்பட்டுப் போகும். தலைமுறை இடைவெளி, மாறிவிட்ட உலகமயமாக்கலின் தாக்கம் வீட்டுக்குள்ளும் தவிர்க்க முடியாமல் பரவிவிட்ட பரபரப்பு நிலை, கலாச்சாரச் சீரழிவுகளின் மாயைகளில் அமிழ்ந்து போகும் இளைய தலைமுறை, அவற்றினைக் கண்கொண்டு பார்த்துக்கொண்டே அந்த நசிவினை உணர்ந்து கொண்டே தடுக்க இயலாக் கையறு நிலை, வயதும் அனுபவமும் கற்றுத் தந்த மேன்மைகளை எடுத்து முன் வைத்து தன் வாரிசுகளைப் பண்படுத்த இயலாத, அதே சமயம் கண்முன்னே எல்லாமும் சீரழிந்து கொண்டிருக்கிறதே என்கிற ஆதங்கத்தில் ஏற்படும் அர்த்தமுள்ள, ஆனால் அர்த்தமற்றதாகக் கருதப்படும் கோபதாபங்கள், குடும்பமே தீவாக மாறிப்போனதும், மொழியே மறந்து போகுமோ என்கிற அளவுக்கான அன்றாடப் பரஸ்பர உரையாடல்கள் நின்று போய் வீட்டில் ஒருவரை மற்றவர் ஒரு மூன்றாம் மனிதனைப் போல் பார்த்தும் பார்க்காமலும் கடந்து, வார்த்தைகளும், பேச்சுக்களும் தானாகவே குறைந்து போன மயான அமைதி, இவை இவையெல்லாம் உனக்கு நல்லது, இவற்றையெல்லாம் என் வழிதான் நீ தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு மூன்றாமவன் மூலம் நிச்சயமாக நீ இவற்றையெல்லாம் அறிந்து தெளிய முடியாது, வாழ்க்கையில் எல்லாவிதமான அனுபவங்களும் உனக்குக் கிடைத்துவிடப் போவதில்லை, பிறர் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும்தான் நீ எல்லாவற்றையும் அறிந்து பண்பட வேண்டியிருக்கும் என்று பெற்ற மகனையே இழுத்து உட்கார வைத்து உய்த்துணர வைக்க முடியாத நிலை, இப்படியெல்லாம் இருக்கும் தன் மகனைக் கண்மூடித்தனமாக எதையும் கண்டு கொள்ளாமல் ஆதரிக்கும் தாய், எல்லாம் போகப் போகத் தானே சரியாகும் என்று பொத்தாம் பொதுவாய் எல்லாவற்றையும் மன்னித்து ஒதுக்கி விடும் மனநிலை, இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம்தான் இந்தப் படைப்பைப் பற்றி. வார்த்தைகளைச் சின்னச் சின்னதாக அடுக்கிச் சடசடவென்று கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு கூடவே நம்மையும் இதமாகக் கை பிடித்து அழைத்துச் செல்கிறது. அருண் என்ற அந்தப் பையனின் செயல்களும், அவற்றைக் கண்டும், கேட்க நினைத்துக் கேட்க முடியாமலும், மூன்றே மூன்று பேர் இருக்கும் ஒரு குடும்பத்தில் தனித்து விடப்பட்டு ஏங்கி நிற்கும் ஒரு தந்தை. அய்யோ, இப்படியெல்லாம் நடக்கிறதே, இவற்றைத் தடுக்க முடியவில்லையே, இது எங்கு போய் நிற்குமோ என்று நினைத்து நினைத்துப் பொறுமி தனக்குத் தானே பேசிக் கொள்ளும் ஒரு தந்தையின் மன ஆதங்கங்கள் இந்தச் சிறுகதையில் மிக அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இன்ஜினியரிங் படிப்பை கடைசி வருடம் டிஸ்கன்டினியூ செய்த தன் மகனை இனி என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க, பார்க்கலாம் என்கிறான் அவன். எவ்வளவு பொறுப்பற்ற வார்த்தை அந்தப் பார்க்கலாம். ஒரு தந்தையின் மனது இந்த வார்த்தையில் நிச்சயம் நொறுங்கிப் போகும்தான். கடைசி வருடம் ஒரு படிப்பை ஒரு பையன் விட்டுவிடுவது என்பதே அவனிஷ்டத்திற்குச் செய்யும் செயல்தானே? அதையே தடுக்க முடியாத நிலைதான் இன்றைய குடும்பங்களில் உள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த இடம். பெற்றோர்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டு தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளும் இளைய தலைமுறை. வயதானவர்களைக் கண்டால் உண்டாகும் வெறுப்பு. முதுமை எல்லாருக்கும் பொது என்பதை உணராத மனநிலை. அப்படி என்ன வீட்டின் மீது வெறுப்பு என்கிற வார்த்தைகள் இதை நமக்கு உணர்த்தி வேதனைப் பட வைக்கிறது. யாரோ ஒருவரிடம் மணிக்கணக்காகப் பேசும் உனக்கு எங்களோடு ஏன் சில வார்த்தைகள் பேச முடியவில்லை. அந்த அளவுக்கா நாங்கள் வெறுத்துப் போய்விட்டோம். நன்றி கெட்ட உலகம் இது. அதற்கு இன்றைய இளைஞர்கள் சாட்சிகளாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான மன ஆதங்கங்களையும், ஏமாற்றங்களையும் பெற்றோர்களுக்கு உண்டாக்கி அவர்கள் மகிழ்--------------------------------------------


புத்தனாவது சுலபம், (வாசிப்பனுபவம்)   எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதை                      -----------------------------------------------------------------                                           

ரே ஒரு சிறுகதையைப் படித்து விட்டு அதன் வாசிப்பனுபவத்தை மன நிறைவோடு, சொல்லியே ஆக வேண்டும் என்கிற உந்துதலோடு, பகிர்ந்து கொள்வதில்  கிடைக்கும் திருப்தியும், நிறைவும், ஒரு பெரிய நாவலைப் படித்து முழுமையாக உள்வாங்கி      மொத்த நாவலின் காலகட்டத்தையும், நிகழ்வுகளையும் அடுக்கடுக்காக மனதில் வைத்து, ஒரு புத்தக விமர்சனமாக முன் வைக்கும் நிகழ்வில் கிடைப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. 
சிறுகதைகள் அதன் முழு உள் கட்டமைப்போடு உருவம், உத்தி, உள்ளடக்கம் என்கிற இலக்கணங்களோடு அமைந்து மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்பதான அனுபவம் அந்தப் படைப்பினைப் படிக்கும்போதே ஒரு தேர்ந்த வாசகனுக்கு ஏற்பட்டுப் போகிறது. 
இப்படித்தான் இருக்க வேண்டும்   என்கிற இலக்கணமெல்லாம் சிறுகதைக்கு இல்லை என்கிற கருத்தும் உண்டு.      இலக்கணமெல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும். சொல்ல வந்த விஷயம் என்ன? அதை எழுதிய முறை என்ன? அது தந்த நிறைவென்ன? என்பதை மட்டுமே பார்ப்பது என்று கொண்டோமானால் ஆழ்ந்த ரசனையின்பாற்பட்டு, படைப்பினில் சொல்லப்படும் விஷயத்தின்பாற்பட்டு நம்மின் அனுபவச் செறிவு நமக்கு உணா்த்தும் அர்த்தங்கள் அநேகம்.
பெரும்பாலும் படைப்பாளிகளுக்கிடையே ஏதோ ஒரு ஒற்றுமை எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்றே தோன்றுகிறது. அது வெவ்வேறு மொழிகளில் ஆன வாசிப்பனுபவத்தின்பாலான பாதிப்போ, அல்லது வாழ்நிலைகளில் ஏற்பட்டுவிட்ட ஒற்றுமையோ, அல்லது படைப்பனுபவத்தில் ஏற்பட்டுவிட்ட தவிர்க்க முடியாத எண்ணச் சுழல்களோ, ஒருவர் முந்தி ஒருவர் பிந்தி எனப்  பல சமயங்களில் பின் தங்கும் நிலை வந்து விடுகிறது.
மனதில் தோன்றும் எண்ணங்களெல்லாம் ஒரு உருவகமாகி கதையாக உருப்பெறும் காலகட்டம் ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு விதமான அவகாசத்தைக் கொடுக்கிறது. இந்தக் கால அவகாசத்தில்தான் ஒரு தேர்ந்த அனுபவப் படைப்பாளி ஒரு இன்றைய படைப்பாளியைவிட ஓட்டத்தில் முந்திக் கொள்கிறார்.
வாழ்வனுபவங்களும், மனக் குமுறல்களும், மனப் புழுக்கங்களும், ஏற்படுத்தும் தாக்கங்கள்,  உந்துதல்கள் ஒரு சரியான வடிவத்தில் உறுப்பெற்றால்தான் படைப்பாளி தன் எண்ணங்களுக்கான துல்லியமான உருவம் கிடைத்துவிட்டதாக திருப்தி கொள்ள முடியும். இல்லையென்றால் இதை எப்படிச் சொல்வது என்பதிலேயே காலம் கழிந்து போகும் வாய்ப்புண்டு. அந்த மாதிரிச் சமயங்களில்தான் ஒரு முதிர்ந்த, மூத்த படைப்பாளி முந்திக் கொள்கிறார். சே! நாம நினைச்சதை இந்த மனுஷன் எவ்வளவு அழகா சொல்லிட்டான் பார்யா? நாம எழுதியிருந்தாக் கூட நிச்சயமா இவ்வளவு அழகாக் கொடுத்திருக்க முடியாதே...என்று எண்ணி ஏங்க வைத்து விடுகிறது அநேகப் படைப்புக்கள். 
இதில் என்ன ஒரு சந்தோஷம் என்றால் நம் மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு சரியான வடிவம் கிடைத்துவிட்டதில் ஒரு திருப்தி. என்னே அற்புதம்... இதை இவர் எழுதினதுதான் சரி, நம்மால இந்தளவுக்கு நிச்சயமா முடியாது என்று தோன்றுவதில் கிடைக்கும் ஒரு நிறைவு. ஆமாம்....ஒரு தேர்ந்த வாசகன் அப்படித்தான் நினைக்க முடியும்... அப்படித்தான் நினைக்க வேண்டும் என்பேன் நான். அதுதான் நல்ல வாசகனாய் இருக்கும் ஒரு படைப்பாளியை வளர்க்கும் லட்சணம் என்றும் சொல்வேன்.
நம்மை  நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்வதா என்று நினைப்பதில் பொருளல்ல. ஒரு நல்ல படைப்பினை மனம் விட்டுப் பாராட்டும் பாங்கு அது. நிறையப் பேரிடம் அது இல்லைதான். அதனால்தான் ஒளிவு மறைவாய் குறைத்து மதிப்பிடுவது, அது  இது என்றெல்லாம் மனதுக்குத் தோன்றுகிறது. ஒரு நல்ல படைப்பாளி பிறிதொரு நல்ல படைப்பினை மனம்விட்டுப் பாராட்ட வேண்டும். அது அவனின் தன்னம்பிக்கையின் அடையாளம். அப்படியெல்லாம் நாமும் தேடினால்தான் சிறந்த படைப்புக்களைக் கண்டடைய முடியும். சிறந்த படைப்புக்களைத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
அப்படியான ஒரு அனுபவம்தான் சமீபத்தில் எனக்குக் கிட்டியது. அந்தப் படைப்பு இரண்டு மூன்று மாதங்களாகவே மனதில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. திரும்பத் திரும்பப் படிக்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறது என்று பிரமிக்கத்தான் வைக்கிறது. இப்படியே பிரமித்துக் கொண்டேயிருப்பதிலேயே காலம் கழிந்து விடுமோ என்றும் தோன்றுகிறது. என்று அம்மாதிரி ஒரு படைப்பினை நாம் எழுதுவது, மற்றவர் பாராட்டுவது?
அந்த மட்டும் அம்மாதிரி எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறனாவது இருக்கிறதே என்று ஒரு சமாதானம். ஆனால் அப்படியான அந்த நல்ல படைப்பை அந்த மதிப்பிற்குரிய படைப்பாளி ரொம்பவும் அநாயாசமாக எழுதி, இந்தா பிடி என்று  எறிந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. நிச்சயம் அந்தக் குறிப்பிட்ட படைப்பிற்கு அவர் சிரமப்பட்டிருக்கப் போவதில்லை. எழுதுகோல் ஓடுகிற போக்கில் எழுதி முடித்த ஒன்றாகத்தான் அது இருக்கும். அவரின் வாசிப்பு அனுபவமும் எழுத்து அனுபவமும் அப்படி! ஆனாலும் அது நமக்கு அதிசயம். நமக்கு என்பதைவிட எனக்கு. அதுதான் சரி. இன்னமும் புதிரை விடுவிக்காமல் இழுத்தால் பொறுமையைச் சோதித்ததாகிவிடும். சொல்லி விடுகிறேன்.
திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் கணையாழி ஏப்ரல் 2011 இதழில் எழுதியுள்ள புத்தனாவது சுலபம் என்கிற சிறுகதைப் படைப்புதான் அது.
அறிவியல் தொழில்நுட்பம் பெருகியுள்ள இக் காலகட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள் நாடுகளிலும், வெளி நாடுகளிலும,; சுறு சுறுப்பாகவும், வேகமாகவும், பரபரப்பாகவும், நிற்க நேரமின்றியும், ஓட்டமெடுத்த போக்கிலும், காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டதுபோல மென்பொருள் பொறியாளர்களாகவும், வேறு பல தொழில்நுட்ப அறிவியல் பணிகளிலும், ஓயாது ஒழியாது பணியாற்றிக் கொண்டு லட்ச லட்சமாக அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணிக்கையிலடங்கா இவர்களுக்கு நடுவே உள்ளூரிலேயே படிப்பை முடித்து விட்டும், படிப்பைப் பாதியில் விட்டு விட்டும், படிக்க வசதியில்லாமலும், அடுத்து என்ன செய்வது என்கிற லட்சிய நோக்கு எதுவுமில்லாமல, எந்தவிதமான தீர்மானங்களும் இல்லாமலும், ஒரு பெருங்கூட்டம் வெறுமே அலைந்து காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது என்பதும் இங்கே ஒரு தவிர்க்க முடியாத உண்மையாய் இருக்கிறது.
படித்து முடித்து வேலை தேடும் ஒரு இளைஞன், படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெறுமே திரியும் இளைஞன், இப்படி எல்லோருமே பெற்றோர்கள் சம்பாதித்து அக்கறையாய் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பின் மகிமை அறியாமல் அதனை மனம் போன போக்கில் அன்றாடம் சும்மா இருந்து வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். குருவி சோ்ப்பது போல் வியா்வை சிந்தி சோ்த்த சேமிப்புப் பணம் இது என்கிற மகிமை அவா்களுக்குத் தெரிவதில்லை. மகிமையா அப்படீன்னா என்ன? கிலோ என்ன விலை?  என்று கேட்பார்கள் நம்மிடம். ஏதாவது சொல்லப் புகுந்தால் ஏம்ப்பா இப்டி மொக்க போடற? என்று புதிய பாஷை பேசுவார்கள். வழக்கில் இல்லாத எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்ட ஒழுக்கமில்லாத வார்த்தைகள் இவர்களிடம் சர்வசாதாரணமாகப் புழங்கிக் கொண்டிருக்கும். கேட்டால் உங்களுக்கு உங்கள் பையன்மேல் சந்தேகம் வரும். இவன் தடம் புரண்டு கொண்டிருக்கிறானோ என்று பயம் எழும். இவர்கள் தற்காலத்தில் பேசும் வார்த்தைகள் அம்மாதிரி ஒழுக்கப் பிறழ்வின் அடையாளங்கள்தான்.
வெட்டியாய்த் திரிபவனுக்குப் பெற்ற தாயின் முழு ஆதரவு. அவனின் பிறழ்தல்களைக் கண்டு கொள்ளாத, அதனை ஒழுங்குபடுத்தும் கடமையை மறந்த, எல்லாம் சரியாப் போகும் என்கிற மெத்தனமான மனப்போக்குக் கொண்ட விட்டேற்றியான கண்மூடித்தனமான ஆதரவு. அப்படியான ஒரு இளைஞனின் மனப்போக்கும், தான்தோன்றிச் செயல்களும், அதனைக் கண்டிக்காத தாயாரின் அரவணைப்பும், அதனைக் கண்டு அருகிலிருந்தும் அவனை நல்வழிப்படுத்த முடியாத தந்தையின் மனக்குமுறல்களும் மனப் புகைச்சல்களும் ஒருங்கே அமைந்த கட்டு செட்டான படைப்புதான் திரு எஸ்.ரா. வின் புத்தனாவது சுலபம்.
இந்தக் கதையைப் போல் இதற்கு முன் எத்தனையோ சாதனையைச் செய்திருக்கிறார் எஸ்.ரா. அவர்கள். அவரது நடந்து செல்லும் நீரூற்றும் குதிரைகள் பேச மறுக்கின்றன என்கிற படைப்பும், தரமணியில் கரப்பான் பூச்சிகள் என்கிற சிறுகதையும், ஒரு நகரம், சில பகல் கனவுகள் மற்றும் பி. விஜயலட்சுமியின் சிகிச்சைக் குறிப்புகள் என்ற சிறுகதைகளும் என்றும் மறக்கமுடியாத படைப்புக்களாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றன. 
இவைகளையெல்லாம் படித்து விட்டு, எழுதினால் இப்படி எழுத வேண்டும் இல்லையென்றால் வெறும் வாசகனாக மட்டும் இருந்தால் போதும் என்றே நான் நினைத்திருக்கிறேன். பல்வேறு மொழிகளிலான தொடர்ந்த வாசிப்பனுபவமும், சிறு பிராயம் முதலான படிப்பனுபவமும், விடாத எழுத்தனுபவமும்தான் இப்படியெல்லாம் அதிசயிக்கத்தக்க படைப்பினை ஒரு படைப்பாளியிடம் உருவாக்குகின்றன. எத்தனை பேருக்கு நடைமுறை வாழ்க்கையில் இவை சாத்தியமாகின்றன. குறைந்தபட்சம் இவற்றையெல்லாம் கண்டடையும் திறனாவது இருக்கிறதே என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
புத்தனாவது சுலபம். ஆம். இன்றைய குடும்பச் சூழ்நிலைகள் ஒரு தந்தையை அந்த அளவுக்கான நிலைக்குத்தான் தள்ளிக் கொண்டிருக்கின்றன. மிகவும் பண்பட்ட, சாத்வீகமான, விவேகமிக்க ஒரு மனநிலை இந்தக் கதையில் சொல்லப்படும் நிகழ்வுகளால் ஒரு குடும்பத்தின் பொறுப்பு மிக்க தந்தைக்கு அநாயாசமாக நிச்சயம் ஏற்பட்டுப் போகும். தலைமுறை இடைவெளி, மாறிவிட்ட உலகமயமாக்கலின் தாக்கம் வீட்டுக்குள்ளும் தவிர்க்க முடியாமல் பரவிவிட்ட பரபரப்பு நிலை, கலாச்சாரச் சீரழிவுகளின் மாயைகளில் அமிழ்ந்து போகும் இளைய தலைமுறை, அவற்றினைக் கண்கொண்டு பார்த்துக்கொண்டே அந்த நசிவினை உணர்ந்து கொண்டே தடுக்க இயலாக் கையறு நிலை, வயதும் அனுபவமும் கற்றுத் தந்த மேன்மைகளை எடுத்து முன் வைத்து தன் வாரிசுகளைப் பண்படுத்த இயலாத, அதே சமயம் கண்முன்னே எல்லாமும் சீரழிந்து கொண்டிருக்கிறதே என்கிற ஆதங்கத்தில் ஏற்படும் அர்த்தமுள்ள, ஆனால் அர்த்தமற்றதாகக் கருதப்படும் கோபதாபங்கள், குடும்பமே தீவாக மாறிப்போனதும், மொழியே மறந்து போகுமோ என்கிற அளவுக்கான அன்றாடப்  பரஸ்பர உரையாடல்கள் நின்று போய் வீட்டில் ஒருவரை மற்றவர் ஒரு மூன்றாம் மனிதனைப் போல் பார்த்தும் பார்க்காமலும் கடந்து, வார்த்தைகளும், பேச்சுக்களும் தானாகவே குறைந்து போன மயான அமைதி, இவை இவையெல்லாம் உனக்கு நல்லது, இவற்றையெல்லாம் என் வழிதான் நீ தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு மூன்றாமவன் மூலம் நிச்சயமாக நீ இவற்றையெல்லாம் அறிந்து தெளிய முடியாது, வாழ்க்கையில் எல்லாவிதமான அனுபவங்களும் உனக்குக் கிடைத்துவிடப் போவதில்லை, பிறர் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும்தான் நீ எல்லாவற்றையும் அறிந்து பண்பட வேண்டியிருக்கும் என்று பெற்ற மகனையே இழுத்து உட்கார வைத்து உய்த்துணர வைக்க முடியாத நிலை, இப்படியெல்லாம் இருக்கும் தன் மகனைக் கண்மூடித்தனமாக எதையும் கண்டு கொள்ளாமல் ஆதரிக்கும் தாய், எல்லாம் போகப் போகத் தானே சரியாகும் என்று பொத்தாம் பொதுவாய் எல்லாவற்றையும் மன்னித்து ஒதுக்கி விடும் மனநிலை, இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம்தான் இந்தப் படைப்பைப் பற்றி.
வார்த்தைகளைச் சின்னச் சின்னதாக அடுக்கிச் சடசடவென்று கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு கூடவே நம்மையும் இதமாகக் கை பிடித்து அழைத்துச் செல்கிறது. அருண் என்ற அந்தப் பையனின் செயல்களும், அவற்றைக் கண்டும், கேட்க நினைத்துக் கேட்க முடியாமலும், மூன்றே மூன்று பேர் இருக்கும் ஒரு குடும்பத்தில் தனித்து விடப்பட்டு ஏங்கி நிற்கும் ஒரு தந்தை.  அய்யோ, இப்படியெல்லாம் நடக்கிறதே, இவற்றைத் தடுக்க முடியவில்லையே, இது எங்கு போய் நிற்குமோ என்று நினைத்து நினைத்துப் பொறுமி தனக்குத் தானே பேசிக் கொள்ளும் ஒரு தந்தையின் மன ஆதங்கங்கள் இந்தச் சிறுகதையில் மிக அற்புதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
இன்ஜினியரிங் படிப்பை கடைசி வருடம் டிஸ்கன்டினியூ செய்த தன் மகனை இனி என்ன செய்யப் போகிறாய் என்று கேட்க, பார்க்கலாம் என்கிறான் அவன். எவ்வளவு பொறுப்பற்ற வார்த்தை அந்தப் பார்க்கலாம். ஒரு தந்தையின் மனது இந்த வார்த்தையில் நிச்சயம் நொறுங்கிப் போகும்தான். கடைசி வருடம் ஒரு படிப்பை ஒரு பையன் விட்டுவிடுவது என்பதே அவனிஷ்டத்திற்குச் செய்யும் செயல்தானே? அதையே தடுக்க முடியாத நிலைதான் இன்றைய குடும்பங்களில் உள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த இடம்.
பெற்றோர்களிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டு தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளும் இளைய தலைமுறை. வயதானவர்களைக் கண்டால் உண்டாகும் வெறுப்பு. முதுமை எல்லாருக்கும் பொது என்பதை உணராத மனநிலை. அப்படி என்ன வீட்டின் மீது வெறுப்பு என்கிற வார்த்தைகள் இதை நமக்கு உணர்த்தி வேதனைப் பட வைக்கிறது. யாரோ ஒருவரிடம் மணிக்கணக்காகப் பேசும் உனக்கு எங்களோடு ஏன் சில  வார்த்தைகள் பேச முடியவில்லை. அந்த அளவுக்கா நாங்கள் வெறுத்துப் போய்விட்டோம். நன்றி கெட்ட உலகம் இது. அதற்கு இன்றைய இளைஞர்கள் சாட்சிகளாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான மன ஆதங்கங்களையும், ஏமாற்றங்களையும் பெற்றோர்களுக்கு உண்டாக்கி அவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது அவருக்கு. சத்தியமான உண்மை என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.
அவன் மாமா வாங்கித் தந்த பைக்கில் அவன் பறந்து கொண்டிருக்கும் காட்சி ஒரு கழுகு அவனுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது போல எண்ணவைத்து இவரைப் பயம் கொள்ள வைக்கிறது. அவன் சிகரெட் பிடிப்பதும், பியர் குடிப்பதும், கடன் வாங்குவதும், லாலியும் பீலியுமாக அடுத்தவர் சட்டையைப் போட்டுக் கொள்வதும், முடியின் நிறத்தை மாற்றிக் கொள்வதும், ஒரு பெண்ணின் பின்னால் சுற்றுவதாக அறிய நேர்வதும், தன் வீட்டில் தான் பார்க்க வளர்ந்த ஒருவன், இப்பொழுது தான் பார்க்காத ஒரு ஆளாக மாறிக் கொண்டிருப்பதை நினைத்து வேதனை கொள்கிறார் தந்தை. என்னே இழிநிலை. இன்றைய பல இளைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். தான் அனுமதிக்கக் கூடாது என்று தடுத்து வைத்திருந்த அத்தனையையும் இந்த உலகம் அவனுக்குப் புசிக்க கொடுக்கிறதே என்று குமுறுகிறார். அற்புதமான வரிகள். கதையைச் சொல்லும் விதத்தில் அது எத்தனை மெருகேறுகிறது என்பதற்கு இந்த இடம் சரியான உதாரணம். 
படிப்பைப் பாதியில் விட்ட அவனைப்பற்றி அவன் பெற்றோர்களுக்கு எத்தனை வருத்தம் இருக்கும் என்பதை எந்த இளைஞனும் உணருவதில்லை. அதுவரை செலவழித்த பணம் பற்றியும், அந்தப் பணத்தின் சேமிப்பு அருமை பற்றியும், இப்போதைய கால விரயம் பற்றியும், அநேகப் பெற்றோர்கள் புழுங்கிச் சாகிறார்கள். ஆனால் அதுபற்றி இந்த இளைஞர் கூட்டத்திற்குக் கிஞ்சித்தும் கவலையில்லை. அப்படின்னா அப்படித்தான். அதுக்கு இப்ப என்ன பண்ணச் சொல்ற? இதுதான் அவர்களின் கேள்வி. ஒழுக்கமற்றுப் போன இளைஞர்கள். அதுபற்றிக் கவலைகொள்ளாத மனங்கள். தான் இளைஞனாய் வாழ்ந்த காலத்துக்கும், இப்பொழுதுக்கும் எத்தனை வித்தியாசம்? இது கதையில் வரும் அந்தத் தந்தை ஒருவரின் பிரச்னை மட்டுமல்ல. இந்த சமுதாயத்தின் பிரச்னை. ஒட்டு மொத்தச் சமுதாயத்தின் படிப்படியான சீரழிவுப் பிரச்னை.
இப்படியான எண்ணங்களோடு சிக்கித் தவிக்கும் ஒரு தந்தை. ஒரு வேளை தன் நினைப்பெல்லாம் தவறோ என்று கூடத் தடுமாறுகிறார். இன்றைய எல்லாத் தந்தைகளுக்கும் இருக்கும் தடுமாற்றம்தான் அது. அதனால்தான் பலரும் ஆவது ஆகட்டும் என்று விலகி நிற்கிறார்கள். நம் கையில் என்ன இருக்கிறது, நடப்பது நடந்தே தீரும்...என்று பொருமிக் கொண்டிருக்கிறார்கள். இரவில் தூக்கமில்லாமல் பையனைப் பற்றியும், அவனின் முன்னேற்றம் பற்றியும், எதி்ர்காலம் பற்றியும் அலமந்து கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் புத்தனாவது சுலபம் என்கிற பொருத்தமான தலைப்பின் மூலம் அந்த விலகல் மன நிலையை, ஸ்திரமாக ஸ்தாபிக்கிறாh; எஸ்.ரா. அவர்கள்.
அம்மாவோடு அவனுக்கு இருக்கும் நெருக்கம், சகஜ நிலை, தன்னிடம் இல்லாமல் போனதிலான ஆதங்கம், அவரும் அவனும் ஒன்றாக வெளியில் போனதும், சிரித்துப் பேசிக் கொண்டதும், ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டதுமான கடந்த காலங்களை நினைத்து ஏக்கம் கொள்ள வைக்கிறது.
தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து அவன் தனக்கான தகவல்களைப்; பகிர்ந்து கொள்ளாததையும், தன் மனைவியிடம் மட்டும் சொல்லிப் போவதும், சொல்லாமல் கொள்ளாமல் வெளியூர் கூடச் சென்று வருவதும், ஒரு வாரம் பத்து நாட்கள் என்று வராமலிருப்பதும், அவைகுறித்து விசாரிக்கும்போது மகனின் சார்பாக ஒரு தாய் தயங்காமல் பொய்களைச் சொல்வதும், இவரை வெறுப்பான மனநிலைக்குத் தள்ளுகிறது. அம்மாக்கள் மகன்களுக்காக நிறையப் பொய் சொல்கிறார்கள். பிள்ளைகளின் பொருட்டு அடிக்கடி சண்டையிட்டு மனக் கசப்பு கொள்கிறார்கள். இதுதான் இன்றைய நிதர்சனம்.
இன்றைய அநேகப் பெற்றோர்களின் நிலை இதுதான். ஒரு தேர்ந்த படைப்பாளிக்கு இருக்கும் அற்புதமான எழுத்துத் திறமை நம்மை பிரமிக்க வைக்கிறது. நான் நிறையக் குழம்பிப் போயிருக்கிறேன் என்று முடிக்கிறார். பல பெற்றோர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். தலைமுறை இடைவெளி அவர்களை அப்படி நகர்த்தி ஒரு வனாந்திரத்தில் தன்னந்தனியே  நிறுத்தி வைத்திருக்கிறது. வயதானவர்கள் முகத்திற்குப் பின்னே கேலி செய்யப்படுகிறார்கள். பெற்ற மகனோடு சேர்ந்து கொண்டு கட்டிய மனைவியாலும் ஒதுக்கப்படுகிறார்கள். கடைசிவரை அவர்தான் நமக்குத்துணை என்கிற ஆழமான புரிதல்கூட நடுத்தர வயதிலான பெண்மணிகளுக்கு இருப்பதில்லை. இதனால் மூன்று பேர், நான்கு பேர் உள்ள குடும்பம் தனித் தனி தீவுகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தினமும் உறக்கமின்றித் தவிக்கும் தகப்பன். படுக்கையில் புரண்டு கொண்டே பல எண்ணச் சிதறல்களில் வாழ்க்கையின் மீதிப் பொழுதுகளை எப்படிக் கழிக்கப்போகிறோம் என்கிற மிரட்சி. போதிய பணம் இருந்தும் ஆதரவற்ற நிலை. சொந்தங்களின் கருணையைத் தேடும் மனம். நீங்கள் தகப்பனாகும் நாளில் என்னைமாதிரிப் பலவற்றையும் உணர நேரிடும் என்கிற பொருள்பட ஒரு சித்தாந்த நிலைக்குப் போகிறார் இக்கதையின் தந்தை. காலம் இப்படிப் பல தந்தைகளைத் தனிமைப் படுத்தி, மிரட்டி, கூனிக் குறுக வைத்திருக்கிறது என்பதுதான் இன்றைய நிதர்சனமான உண்மை.
புத்தனாவது சுலபம் சிறுகதையைப் படித்ததன் மூலம் ஒரு சிறந்த, மென்மையான, இலக்கிய நயம் வாய்ந்த, நீரோடை போன்ற தெளிந்த நடைகொண்ட, ஒரு உயர்தரமான படைப்பைப் படித்து முடித்த அனுபவமும், படைப்பாளியான திரு எஸ்.ரா. அ்வர்களின் மீது மதிப்பும் நம் மனதில் பெருக்கெடுக்கிறது. இந்த மனம் லேசாகி உலக பந்தங்களிலிருந்து வெகு தூரம் விலகிச் சென்று நின்று விடுகிறது. எல்லாமும் மாயை என்கிற வெற்று வெளிதான் மிஞ்சுகிறது. ஏற்கனவே புத்தனாகி விட்டவர்கள் இந்த லௌகீக வாழ்க்கையில் ஏராளம். புத்தனாகிக் கொண்டிருப்பவர்கள் அநேகம். இந்தப் படைப்பைப் படிப்போர் அந்த மனநிலைக்குத் தள்ளப்படுவது நிச்சயம். வாழ்க்கையில்  இம்மாதிரியான எழுத்துக்களும், கூடவே கிடைக்கும் செழுமையான அனுபவங்களும்தான் மனிதர்களை இப்படி எங்கோ இட்டுச் சென்று நிறுத்தி விடுகிறது. அது ஞான நிலை. மோன நிலை. மனிதர்கள் தன்னிலிருந்து தன்னை விலக்கிப் பார்த்துக் கொள்ளும் பக்குவத்தை எய்த வேண்டும். அங்கேதான் ஞான நிலை கைகூடுகிறது. புத்தனாவது சுலபம் அந்த ஏகாந்த நிலைக்கு நம்மை இழுத்துச் செல்கிறது. 
இதைப் போல் இன்னும் நிறைய ஆகச் சிறந்த படைப்புக்களை அவர் தந்துகொண்டே இருக்க வேண்டும். அதையெல்லாம் ஆழ்ந்து அனுபவித்துப் படித்து ரசிப்பதற்கு என்னைப் போல் பல்லாயிரம் வாசகர்கள் எப்போதும், எந்நேரமும், ஆவலாய் தயாராய்க்  காத்திருக்கிறார்கள்.
                     ----------------------------------------------


அய்யா…தெரியாதைய்யா ராமாராவ்…! கட்டுரை


கட்டுரை                   உஷாதீபன்                                                               
 அய்யா…தெரியாதைய்யா ராமாராவ்…!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
     

 



மிழ் சினிமா மறக்கடித்த நடிகர்கள் எத்தனையோ பேர். அதில் கதாநாயக நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள் என்ற வரைமுறை எதுவும் கிடையாது. அப்படியாக வரையறுத்தும் அந்தக் கால நடிகர்கள் எவரும் நடிக்கவுமில்லை. எந்த வேஷமானாலும் சரி என்று எல்லாவற்றிலும் சோபிக்கத்தான் செய்தார்கள். முப்பத்தைந்து வயது நடிகர் அறுபத்தைந்து வயது அப்பா வேஷம் கட்டினார். நாற்பதுக்கு மேல் ஐம்பதைத் தொட்டவர்கள் கூட நாயக வேஷத்தில் சோபித்தார்கள். கனமான கதையும், வலுவான காட்சிகளும், திறமையான இயக்கமும் எல்லோரையும்,     எல்லாவற்றையும் தூக்கி நிறுத்தியது.
     ஆனாலும் அந்தந்தக் கால கட்டத்திலேயே காணாமல் போனவர்கள்தான் அதிகம். வேஷம் குடுங்க என்று தொங்கி நிற்காமல் அதுவாய்த் தேடி வரும்போது மனமுவந்து ஏற்றுக் கொண்டு, அது சிறிசோ, பெரிசோ, ஈடுபாட்டோடு செய்து கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டார்கள். கொடுத்த, கிடைத்த சம்பளம் அப்பொழுதும் ஒரு பொருட்டுதான் என்றாலும், அதை விட ஏற்றுக் கொண்ட வேஷங்கள் மனசாந்தி அளிப்பதாய், ஆத்மார்த்தமானதாய் உணரப்பட்டதால் கூலி பின்னேதான் நின்றது.
     என்னதான் இயக்குநர் சொல்லிக் கொடுத்தாலும், கதையோடு பொருந்திய காட்சிகளை அமைத்தாலும், மனுஷன் இப்டியா அந்த வேஷத்தோட, அந்தக் கதாபாத்திரத்தோட பொருந்துவாரு? என்று எண்ணி வியக்கும்படியாகத்தான் பல நடிகர்கள் திறமையோடு இருந்தார்கள்.
கதையோடு பொருந்திய…..என்று சொன்னேன். அதாவது நாயகன், நாயகியை உள்ளடக்கிய மொத்தப்படத்தின் கதையம்சத்தோடு, ஒட்டி, உறவாடிப் பயணிக்கும் வகையில்தான் நகைச்சுவைக் காட்சிகளும் அமைக்கப்பட்டன. கதையோட்டத்தின் முக்கியமான நிகழ்வுகளுக்கும், அதன் திருப்பங்களுக்கும் உதவும் வகையில்தான் சிரிப்பை, கேளிக்கையை முன்னிறுத்தும் படக் காட்சிகளும் அமைந்தன. வாய்ப்பளிக்கப்பட்ட அம்மாதிரி நகைச்சுவைக் காட்சிகளில், தங்களின் அகடிதகடனா சாமர்த்தியத்தை அச்சாக வெளிப்படுத்தி, படம் முடிந்து வெளியே செல்கையில் தங்களையும் சேர்த்துப் பேசி மகிழ்ந்து, அதற்காகவே, அவருக்காகவே  இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று சொல்லும் வண்ணம் திறமைசாலிகளாக மிளிர்ந்தார்கள்.
அப்படியான நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத் தகுந்தவர் எஸ்.ராமாராவ். பெயரே புதிதாய் இருக்கிறதே என்று இன்றைய, ஏன் நேற்றைய தலைமுறை ஆட்கள் கூட நினைக்க வாய்ப்பிருக்கிறது. இன்றைய பையன்களுக்கு சுத்தமாய்த் தெரியாது எனலாம். அவர்களுக்குத்தான் எம்.ஜி.ஆர்., சிவாஜி., ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் என்று ஒரு சிலரைத் தவிர வேறு எவரையும்…தெரியவில்லையே?
இவர்தானப்பா தங்கவேலு…..டணால் தங்கவேலுன்னு சொல்லுவாங்களே…அவர்தானே? இந்த…கல்யாணப் பரிசு படத்துல வந்து, பொய்யாச் சொல்லுவாரே…அந்தத் தங்கவேலுதானே…. – என்று கேட்கும் பையன்கள்தான் இன்று இருக்கிறார்கள். இவர்களிடம் போய் ராமாராவ் என்றால் முழிக்காமல் என்ன செய்வார்கள்? என்.டி.ராமாராவா? ஆந்திரா சி.எம்மா இருந்தாரே…அவரா? என்று கேட்கிறார்கள். அந்த மட்டும் அவரையாவது தெரிந்து வைத்திருக்கிறார்களே…என்று பெருமை கொள்ள வேண்டியிருக்கிறது. அது ஜெனரல் நாலெட்ஜாம்….!
யாரு…அப்ளாச்சாரியா…? என்று கேட்பவர்களும் உண்டு. இந்தப் பெயரைச் சொல்லி இவரைத்தான் கேட்கிறார்களா? என்று சந்தேகம் வருவதும் உண்டு. எப்படி இவருக்கு இந்தப் பெயர் வந்தது என்று இன்றுவரை தெரியவில்லை. எந்தப் படத்தில் இந்தப் பெயரிலான பாத்திரத்தை ஏற்றார் என்ற விபரமும் கிடைக்கவில்லை. இல்லை, தலையில் வட்ருபி அடித்து, பாதி மண்டைக்குப் பின்னால் தழைய இறக்கிய முடியைக் கொத்தாகப் பிடித்துச் சுருட்டி முறுக்கிட்டு கட்டுக் குடுமியாய்த் தொங்க விட்டு,  அசல் அய்யராய் வந்து அசத்தினாரே அதனால் இந்தப் பெயர் வந்திருக்குமோ    என்று எண்ணுபவர்களும் உண்டு.
வேஷம் கட்டினால் மட்டும் போதுமா? பாஷை வர வேண்டாமா? அட்சர சுத்தமாய் பிராம்மண பாஷையை அதே பாணியில் பேசி அசத்தும்போதுதானே, அது ராமாராவ் இல்லை, அந்தப் படத்தின் ஒரு ஆசிரியர் கதாபாத்திரம் என்பது பார்வையாளர்கள் மனதில் நிற்கும்? ஆசிரியர்தான் நின்றாரேயொழிய ராமாராவ் என்கிற நடிகர் அல்ல.
நின்றதா? நின்றதாவா? என்னய்யா கேள்வி இது? வாழ்ந்ததைய்யா…வாழ்ந்தது….இந்த ராமாராவை நினைக்கும்போது நமக்கு நினைவில் வரும் கதாபாத்திரம் தெய்வப்பிறவி படத்தில் ஆரம்ப ஆசிரியன் என்ற வாத்தியார் வேஷத்தில் வந்து களை கட்டியதுதான். குட்டையான உருவத்தில், பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு தலையில் நரைத்த கட்டுக் குடுமியோடு ஒரு மூக்குக் கண்ணாடி சகிதம் நெற்றியிலும் கைகளிலும் விபூதிப்பட்டை பளபளக்க வந்து சர்ர்ர்ரு…..புர்ர்ர்ரு…..என்று அழுத்தம் திருத்தமாய், ஒரு ரைமிங்கோடு பேசும் பிராம்மண பாஷை வசனங்கள் அத்தனை கலகலப்பூட்டின அந்தப் படத்தில். இப்போதும் இந்தக் காட்சிகளைப் போட்டுப் பார்க்கும் போது ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் இது மாதிரி ஒரு காட்சி இன்றுவரை வரவில்லையே என்ற ஏக்கம்தான் நிகழ்கிறது.
இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் தெய்வப்பிறவி படத்தில் அமைந்திருக்கும் நகைச் சுவைக் காட்சிகளுக்கு ஈடாக இன்றுவரை வேறு ஒரு திரைப்படம் வரவில்லை என்றே சொல்லலாம். நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு டணால் தங்கேவேலு சதா சீட்டுக் கட்டு விளையாடுவதும், அதனால் வீட்டில் மனைவியோடு ஏற்படும் களேபரமும், சண்டையும், சச்சரவும்…சொல்லி முடியாத அரட்டைக் கச்சேரி நகைச்சுவைக் காட்சிகள்.
அறிமுகமாவதே…. ஒரு குறிப்பிட்ட வார்த்தையை, பேச வாய் திறக்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டு ஆரம்பித்தவாறே வருவார் ராமாராவ்.  அதுவே அவரின் பட்டப் பெயராகி, நிலைத்து அவரைப் பிரபலப்படுத்தி  வைத்தது. அப்படியானதொரு சுவையான நகைச்சுவைக் காட்சி ஒன்றைக் கீழே காணுங்கள்.
அது தங்கவேலுவின் வீடு. நண்பர்களோடு சேர்ந்து வீட்டில் சதா சீட்டுக் கச்சேரி நடத்திக் கொண்டிருப்பது அவரின் பொழுது போக்கு. பொழுதை இப்படி வெட்டியாய்க் கழிக்கிறீர்களே என்று மனைவியோடு பெரிய சண்டை வந்து ஒரே அமர்க்களம் ஆகும். அந்தக் காட்சி வேறு. இங்கே நான் சொல்ல வந்தது ஐந்தாறு வெட்டி ஆபீஸ் நண்பர்களோடு டணால் தங்கவேலு சீட்டுக் கச்சேரி நடத்திக் கொண்டிருக்கும்பொழுது சடேரென்று அங்கு பரபரப்பாய் வந்து மேஜைக்கு நட்ட நடுவில் குறுக்கே விழுவார் அப்ளாச்சாரி. தெய்வப் பிறவி படத்தின் படு ஸ்வாரஸ்யமான காட்சி இது….
அட…என்னா…யார்றாது குறுக்க வந்து விழுறதுன்னு எல்லோரும் வாசலைப் பார்க்க மடேரென்று வந்து விழுவார் ராமாராவ். ….
அய்யா..தெரியாதய்யா…கடன்காரன் இந்த வழில கரெக்டா வருவான்னு…என்ன பண்றது…வந்துட்டன்…என்னப் பார்த்துட்டன்….தலேல சொடேர்னு அடிச்சிருவான்னு பயந்து நான் இங்க ஓடியாந்துட்டன்….என்ன பண்றதுஃ
என்ன பண்றது? கொஞ்ச நேரம் பேசாம இருக்கிறது…இந்தச் சாரல நம்மளால சகிக்க முடியலைய்யா…-சொல்லிக் கொண்டே தெறித்த எச்சில்துளிகளைத் தங்கவேலு நீளமாய்த் துடைத்து விட்டுக் கொள்வார்.
என்ன பண்றதுாாாா… எழுதிக் கொடுத்துர்றது….
முடியுமோ…நானோ ஆரம்ப ஆசிரியன்…சம்பளம் கம்மி…..
வேணும்னா இங்க உட்கார்ந்து ஆடுறது ஒரு சுத்து ரம்மி….
நன்னாருக்கு போங்கோ…நான் ஆசிரியன் இங்க ரம்மி ஆடலாமோ….?
நன்னா மூணு சீட்டு ஆடலாமே….!
பேசாம இருங்கோ…பேசிண்டே போறேளே…பேசாம இருங்கோன்னா…நீங்க சொல்லுங்கோ…நியாயமா இது…என்னை ரம்மி ஆடச் சொல்றாளே….நியா…!-பேசிக் கொண்டே கூர்ந்து பார்த்துவிட்டு….யார்றா இவன்? மனோகரனா இது…?
ம்…மனோகரன்…ராயப்பிரியன், புருஷோத்தமன்….பத்மாவதி...விஜயா….
பேசாமிருங்கோ…இதென்ன நாடகமா இது? அந்தண்ட போங்கோ……தள்ளிப் போங்கோன்னா…தள்ளுங்கோ…ஏண்டா மனோகர்…நீயுமாடா இந்தத் திருதுராஷ்டிரா கூட்டத்துல சேர்ந்து சூதாட ஆரம்பிச்சுட்டே….
யோவ்…கையெல்லாம் நீட்டாதே…யோவ் ஆடினா என்னய்யா…ஆடினா என்ன? அவங்கப்பன் மாதிரி செவுரு ஏறிக் குதிச்சானா? திருட்டுத் தனம் பண்ணினா? ஜெயிலுக்குப் போனானா? ஐயா அப்பனுக்குப் பிள்ள தப்பிப் பொறந்திருக்கான்யா…சீட்டாட்டத்தோட விட்டுட்டான்…
அதுவும் எங்களமாதிரி பெரிய மனுஷாளோட….
நீங்க பேசாம இருங்கோ…நீங்கபாட்டுக்குப் பேசிண்டே போறேளே….ஏண்டா மனோகர்…உங்க அண்ணி என்னைப் பார்க்கிறபோதெல்லாம், மனோகரக் கவனிங்கோ..மனோகரக் கவனிங்கோன்னு கதர்றாடா…..உன்னோட படிச்ச ராமு இன்ஜினீரிங் கோர்ஸ் முடிச்சுட்டான்….அதப் பார்த்தாவது உனக்குப் புத்தி வர வேண்டாமோ….
யோவ்…எவன் எப்டிப் போனா எனக்கென்னய்யா…? என்னைப்“ பத்தி ஏதாவது இருந்தாச் சொல்லும்….இல்ல…? – இது கள்ளபார்ட் நடராஜன்.
சொடேர்னு அடிச்சிருவ….என்ன பண்றது? காலம் மாறிப் போச்சோல்லியோ…?
மாறிச்சோ, மாறலியோ…யாரைய்யா கேட்குறீரு….?
நீங்க பேசாமிருங்கோ…நீங்கபாட்டுக்குப் பேசிண்டே போறேள்….
யோவ்…கடன்காரனுக்கு பயந்துதான இங்க ஓடியாந்தீரு…
வந்த எடத்துலதான இந்தக் கண்றாவியப் பார்த்தேன்….
அதிகமாப் பேசாத…கடன்காரன்ட்ட இந்தப் பணத்தக் கொடுத்திட்டுப் மரியாதையாப் போய்ச் சேரும்…. – பணத்தை நீட்டுகிறார் ஒருவர்.
பணமா…நானா? வாங்குவேனாடா…? அதவிட அந்தக் கடன்காரன்ட்ட மாட்டிக்குவன்டா… சொடேர்னு தலைல அடிச்சாலும் பட்டுக்குவன்டா….என்னண்ட படிச்ச குழந்தைகள் நீங்க சூதாடி ஜெயிச்ச பணத்தை நான் கை நீட்டி வாங்குவனாடா…? அதவிடப் பட்டினி கிடந்து பிராணனை விட்ருவன்டா…
ம்….சொல்லாதீர்…செய்யும்……ம்ம்ம்…..ஆடுங்க….நீங்க ஆடுங்க…. –
வெளியேறி விடுகிறார் ஆசிரியர்.
சிறந்த நீதியைக் கடைசியாய்ச் சொல்லும் இந்தக் காட்சியில் எஸ்.ராமாராவும், டணால் தங்கவேலும் ஒரு ரைமிங்கோடு இழுத்து இழுத்து விடாமல் தொடர்ச்சியாக வசனம் பேசும் காட்சி பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். பிராம்மண பாஷையை அழுத்தந் திருத்தமாய் ராமாராவ் பேசுவதும், அதைக் கேலி செய்வதுபோல் அதே ரைமிங்கோடு தங்கவேலு பதில் சொல்லுவதும், மூச்சு விடாமல் இருவரும் தொடர்ந்து பேசிக் கொள்ளும் இந்தக் காட்சியை நாம் படத்தில் பார்த்து ரசித்தால் மட்டும் போதாது. ஒருவருக்கு மற்றொருவர் அதே வசனங்களை அதே பாணியில் பேசிப் பார்த்துச் சிரித்துக் கொண்டால்தான், இந்தக் கடினமான காட்சியில் எவ்வளவு நகைச்சுவை புதைந்து கிடக்கிறது என்பது புரியும்.
இந்தப் படத்தில் நடித்ததிலிருந்து ராமாராவுக்கு இந்தப் பட்டப் பெயர் நிலைத்தது. அதுதான் ”அய்யா தெரியாதைய்யா ராமாராவ்…..” அவரை நினைவு கூறுபவர்கள் இப்படிச் சொல்லித்தான் அவரை அழைக்க ஆரம்பித்தார்கள். அவரது அடுத்தடுத்த படங்களிலும் அவர் பெயரை இப்படியே டைட்டிலாகப் போடவும் ஆரம்பித்தார்கள்.
300 க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்தவர் ராமாராவ். மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் சச்சுவுக்கு அப்பாவாக, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக அவர் நடித்திருக்கும் கதாபாத்திரம் அத்தனை அற்புதமானது. சுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை ரகசியத்தை உணரும் காட்சிகளில் பெண் கொடுக்க வந்த இடத்தில் கண்ணியம் கருதி நாகையாவோடு சேர்ந்து அவர் அமைதி காக்கும் காட்சிகள் கண்ணியமானவை.
சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷூக்குப் பி.ஏ.வாக வருவார். இவரின் இன்னொரு நினைவு கூறத் தக்க படம் இருவர் உள்ளம். இரண்டாம் கல்யாணமாக ஒரு இளம் பெண்ணை மணந்து கொண்டு அவள் அழகுக்கு மயங்கி அந்தப் பெண்ணின் தகப்பனோடு இவர் சமரசம் செய்து கொள்ளும் காட்சிகள் ரசிக்கத்தக்கவை. அந்தப் பெண்ணின் தகப்பனாக வருபவர் ஏ. கருணாநிதி. அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் “சோடா சுப்பையா…” . வெறுமே உட்கார்ந்து தின்னும் அவருக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று இரவல் வாங்கி வந்த நெக்லஸ் திருடு போய்விட்டதென்று சொல்லி, அந்தக் கடனை அடைக்க வீட்டில் மனைவியையும், மாமனாரையும் குடிசைத் தொழில் செய்து உழைக்க வைத்துச் சம்பாதிக்கச் செய்து, அந்தக் கடனை அடைத்து விடுவார். மனைவியை அப்பளம் போடச் செய்து, ராமாராவ் வெளியில் சென்று விற்று வருவார். மாமனார் கருணாநிதியை தேன் கூடு போடச் செய்து தேனீ வளர்க்க ஏற்பாடு பண்ணி, தேன் சேகரிக்க வைப்பார். திருட்டுத் தனமாய் அவர் தேன் எடுத்து நக்கும்போது, மறைந்திருந்து கல்லை விட்டெறிந்து தேன் கூட்டைக் கலைக்கச் செய்து, தேனீக்கள் கருணாநிதியைக் கொட்டி அதகளப்படுத்த….அந்தக் காட்சியில் வலி பொறுக்க முடியாமல் கருணாநிதி குதி குதி என்று குதிக்க, அதற்கு ஜதி சொல்லி இவர் தாளம் போட்டு ரசிக்க….தியேட்டரே கலகலக்கும் இந்தக் காட்சிகளில்.
சின்னச் சின்னக் காட்சிகள்தான். ஆனாலும் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதுபோல் நடித்திருப்பார்கள் அந்தக் கால நகைச் சுவை நடிகர்கள். அவர்களில் முக்கியமானவர் ராமாராவ். பாவ மன்னிப்பு படத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு நம்பிக்கையான வேலைக்காரராக வந்து அவருக்குக் கீ கொடுத்து கெடுதலுக்குத் தூண்டி விடுவார். தில்லானா மோகனாம்பாளில் கூட மனோரமா நாடக ட்ரூப்பில் இருக்கும் ஒருவராக, வந்து போவார். மனோரமா, சண்முக சுந்தரத்தை அவர் நாயனத்தில் ஒரு பாட்டு வாசிக்கச் சொல்ல…வாசிங்க….என்று ஆர்வத்தோடு இவர் சொல்லும் அந்தக் காட்சி மறக்க முடியாதது.
300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், மூத்த தலைமுறையைச் சேர்ந்த பெரியவர்களுக்குத்தான் இவரைத் தெரியும். இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் இவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் நடிப்பு என்கிற கலைக்குள்ளே நுழைந்து கற்றுக் கொள்ள வேண்டுமாயின் அறுபதுகள்….எழுபதுகள் வரை என்று கூடச் சொல்லலாம்…தமிழ் சினிமாவில் இருந்த அனைத்து நடிகர்களையும், ரசித்து ரசித்துப் பார்த்து அனுபவித்து உணர்ந்து, ஆழ்ந்து உள்வாங்கினாலே, சிறந்த நடிப்புப் பயிற்சி கைகூடும் என்று சொல்வேன். அந்த வரிசையில் “அய்யா தெரியாதைய்யா ராமாராவ்…” என்கிற எஸ்.ராமாராவ் தவிர்க்க முடியாத நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களில் ஒருவராகிறார். ராமாவ் 1987 ம் ஆண்டு காலமானார். இறக்கும் வரையில் கூட அவ்வப்போது சில படங்களில் கொஞ்சம் இடைவெளியோடு என்றுதான் சொல்ல வேண்டும், நடித்துக் கொண்டுதான் இருந்தார் அவர். குறிப்பாக சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் அவரின் பங்கெடுப்பு குறிப்பிடத்தக்கவையாய் அமைந்திருந்தன எனலாம்.
                     -------------------------------------------------------------