06 டிசம்பர் 2018

சோழன் மின்னூல் / பதிப்பகம் நேர்காணல்





சோழன் மின்னூல் பதிப்பகம்   (மலேசியா)              நேர்காணல்      
------------------------------------------------------------------------------------------------------------------------------------                                                                                       
கேள்வி – 1
தற்போது நீங்கள் எழுதத் தொடங்கியுள்ள நூலின் / புனைவின்  பெயர் என்ன?
பதில் -  முதலில் சோழன் மின்னூல் பதிப்பகத்திற்கு எனது அன்பான வணக்கங்கள். ஒரு படைப்பாளியிடம் அவன் எழுதத் தொடங்கியுள்ளதாக ஒரு சிறுகதையோ, நாவலோ, கட்டுரைத் தொடரோ என்று ஏதேனும் ஒன்று மட்டும் துவக்கப்பட்டு விரிந்து நடைபயின்று கொண்டிருப்பதில்லை. காரணம் சிறுகதைக்கான கருவும், அதற்கான துவக்கமும், ஒரு நாவலுக்கான பயணமும் அல்லது சமுதாயத்தில் பாதிக்கக் கூடிய விஷயங்களுக்கான கருத்துக்களும், எண்ண அலைகளின் ஓட்டங்களில்  விடாது இயங்கக் கூடிய ஒரு எழுத்தாளனிடம் தொடர்ந்து பயணம் செய்து கொண்டேயிருக்கின்றன. எந்தவொரு படைப்பாளியும் ஒரு சிறுகதையை எழுதிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஒரு நாவலிலும் கண்டிப்பாகக் கால் பதித்திருப்பார் என்றே பெரும்பாலும் கூற முடியும்.  ஆடிய கால்கள் நிற்பதில்லை என்பது போல் இது நடந்து கொண்டேயிருக்கும். கண்ணுக்கு முன்னால் நடைபெறும் அநியாயங்கள், தவறுகள் இவைகளின் உறுத்தலினால் இரண்டு சிறுகதைகள் நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், எனது துறை சார்ந்த சர்வீஸ் அனுபவங்களை முன்னிறுத்தி நீல.பத்மநாபனின் “மின் உலகம்“ நாவலைப் போல் குறைந்த, நூற்றைம்பது பக்க அளவில் கட்டு செட்டாக ஒரு நாவலை எழுதி முடித்து விட வேண்டும் என்று இப்போது நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
கேள்வி – 2
அந்த நூல் ஆக்கம் எழுதத் தூண்டுகோலாக இருந்தது எது?
பதில் – இளம் பிராயம் முதல் பெற்றோர்களின் ஒழுக்க விதிகளுக்குக் கட்டுப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பட்ட ஒருவன், வாழ்க்கைப் படகைச் செலுத்துவதற்கு பணம் சம்பாதித்தல் என்று இந்தச் சமுதாயத்தின் ஏதேனும் ஒரு தடத்தில் கால் பதிக்கும்போது, அங்கு இவன் அதுநாள் வரை வளர்ந்து ஆளாகியிருந்த ஒழுக்க நெறிகளுக்கு முற்றிலும் முரணான சூழல் நிலவுவதைப் பார்த்து விட்டுவிடவும் முடியாமல், இருந்து வெற்றி கொள்ளவும் இயலாமல், தன்னளவில் தனக்கு பாதிப்பில்லாமல் இருந்து மீள்வதே மிகப் பெரிய சவால் என்பதாக உணர்ந்து மாதச் சம்பளம் என்கிற வட்டத்துக்குள் கிடந்து உழன்று போகும் அவலமும் தன்னளவில் அவன் தன்னையே வெற்றிகரமாக முன்னிறுத்திக் கொள்வதுமான அனுபவங்களே இந்த நாவலுக்கான தூண்டுகோல்.
கேள்வி – 3
இதனை எழுதத் தொடங்கியபோது உங்களுக்கு ஏற்பட்ட சவால்கள் எது போன்றவை?
பதில் – சவால்கள் என்பது இந்த நாவல் வெளிவந்த பின்பு எழும் பிரச்னைகளின் மூலமாகத்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்போதைக்கு இந்த நிர்வாக அமைப்பின் சீர்கேட்டினை, அதாவது இருக்கும் விதி முறைகள் எல்லாமும் சரியாக இருந்தாலும்  அதை நிறைவேற்றம் செய்வதில் மனித வக்ரங்கள் ஊடாடுவதால் ஏற்படும் சீர்கேட்டினை, வழுவாது சொல்லிச் செல்வதுதான் இதற்கான சவாலாக அமையும்.
கேள்வி 4
முக்கிய சவால் எதுவாக இருந்தது? அந்த சவால்களைக் கடக்க என்னவெல்லாம் செய்தீர்கள்?
பதில் – சவால்கள் என்பதே நாம் கண்கூடாகக் காணும் விஷயத்தை அல்லது செயல்பாட்டை சீர்மையாக நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள்தான். இந்த சமுதாயத்துக்கு, மக்களுக்குப் பயன்படுவதுபோல் ஒன்றை நேர்மையாக, முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றால், அதற்கு என்னென்னவெல்லாம் தடையாக நின்று அதனை நீர்த்துப் போகச் செய்கின்றன என்பதான விஷயங்களை முழுமையாக உள்வாங்குதலும், அப்படியெல்லாம் நிறைவேற்ற இயலாது என்று எதிர்த்து நிற்றலும், அதனால் எதிர்கொள்ளும் சங்கடங்களும், கஷ்டங்களுமான அனுபவங்கள்தான். இதனைக் குறிப்பிட்டு, இது மட்டும்தான் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டி நகர்ந்து போக இயலாது. எதிர்கொள்ளப்படும் எல்லாமே சவால்கள்தான் எனும்போது அதை முழுமையாகப் பதிவு செய்வது என்பதே ஒரு மிகப்பெரிய சவாலாகத்தான் அமையும் என்று கருதுகிறேன்.
கேள்வி 5
சமூக ஊடகங்களில் உங்களது செயல்பாடுகளை எவ்வாறு வகுப்பீர்கள்?
பதில் – இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளுக்கே என்னைப் பொறுத்தவரை முன்னுரிமை. சமுதாயத்தைப் பாதிக்கக் கூடிய விஷயங்களுக்கு நியாயமான பார்வையில், ஏற்கப்படும் என்று கருதுவேனேயாகில்  ஆதரவைத் தெரிவித்தல்.
கேள்வி 6 –
ஃபேஸ்புக் எழுத்தாளர்களுக்கும் எழுத விரும்புவோருக்கும் எவ்வாறு உதவியுள்ளது? உங்களுக்கு?
 பதில் – எனது இலக்கியம் சார்ந்த தொடர்ந்த செயல்பாடுகள் ஃபேஸ்புக் எழுத்தாளர்களுக்கு உவப்பானதாயிருக்கின்றது என்பதை என்னால் உணர முடிகிறது. ஐயாயிரம் நண்பர்கள் வைத்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களே தொடர்ந்து ஃபேஸ்புக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம் பதிவினை ரசிக்கிறார்கள்….கருத்துப் பதிவிடுகிறார்கள்…இதைவிட எழுத வேண்டும் என்கிற ஆர்வமுடையவர்கள் இதனால் ஊக்கமடைகிறார்கள் என்பது இங்கே முக்கியமாகிறது. இவர்களின் எதிர்பார்ப்பு இருக்கிறது என்கிற எண்ணமே நம் இலக்கியச் செயல்பாட்டை ஊக்கப்படுத்தவும், இதழ்களில் வந்துள்ள படைப்புக்களின் விபரங்களை அவர்களுக்குச் சொல்லவும், முடிந்தால் பதிவிடவும்…அதன் மூலம் இரு தரப்புமே ஊக்கம் பெறுவதும் முகநூலால் ஏற்பட்ட நட்பு வட்டத்தின்பாற்பட்ட ஊக்கச் செயல்பாடாக அமைந்து மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கேள்வி 7
கிண்டிலில் மின்னூல் அல்லது பிடிஃப்பில் நீங்கள் வாசிப்பதுண்டா?
பதில் – பிடிஎஃப்பில் வாசிப்பது என்பது எப்போதோ வந்து விட்டது. டாப்லட் என்ற ஒன்று இருப்பதே அந்த வாசிப்பிற்காகத்தான். இதனால் வலைத் தளத்தில் கொட்டிக் கிடக்கும் ஏராளமானவைகளைத் தேடிக் கண்டடைந்து நமது டாப்லெட்டில் சேகரித்து வைத்துக் கொண்டு  தினசரி படித்து வருவதும், வெளியே கிடைக்காத பல புத்தகங்கள் குறிப்பிட்ட தலைப்பிலான வலைத்தளங்களில் காணக் கிடைப்பதும், ஒரு சிறிய கையகலக் கருவிக்குள் எண்ணிக்கையிலடங்கா பொக்கிஷங்களை வைத்திருப்பதும், நினைத்த போது நினைத்த நேரத்தில் சட்டென்று அந்தப் பக்கத்திற்குச் சென்று படிக்க உதவுவதும் இப்படியான ஏராளமான வாசிப்பு அனுபவம் பிடிஃஎப்  பதிவுப் புத்தகங்களால் கிடைத்திருக்கிறது. 
கிண்டிலில் மின்னூல் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது என்றே சொல்வேன். அதன் மூலமாக படைப்பாளிகள் தங்களது லேட்டஸ்ட் புத்தகங்களை ஏற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். சில பல பழைய புத்தகங்களும் கூட முழுவதுமாகத் தரவிறக்கம் செய்து சேமித்துப் படிக்கும் வகையில் கிண்டில் அமைந்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. புதிய புத்தகங்கள் சாம்பிளாகச் சில பக்கங்கள் கிடைப்பதும், கொஞ்ச நாள் கழிந்த பொழுதில் விலை குறைக்கப்பட்டு, குறைந்த விலையில் அதிகப் புத்தகங்களை வாங்கிப் படிக்க வசதியாக அமேசான் தளத்தில் கிடைப்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். எதிர்காலம் அச்சுப் புத்தகங்களிலிருந்து விலகி முழுவதுமாக இதற்குள் வந்து விடும் வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது.
கேள்வி – 8
கிண்டில் வாசிப்பதில் உங்கள் அனுபவம் எப்படி?
பதில் - பலருக்கும் கையில் அச்சுப் புத்தகமாக வைத்துப் படித்தால்தான் திருப்தி. காரணம் அவர்கள் விரும்பும் வரிகளைக் கோடிட்டு முக்கியப்படுத்துவதும், குறிப்பாகப் பயன்படுத்திக் கொள்ள உதவுவதுமாக அது உதவுகிறது. ஆனால் கிண்டில் வாசிப்பதில் சின்னச் சின்னப் பக்கங்களாக விறுவிறுவென்று நகர்ந்து போவதை உணர்ந்து நாம் படிக்கையில் ஒரு உற்சாகம் நம்மைக் கூடவே இழுத்துச் செல்கிறது. மிகப் பெரிய நாவலாயினும் கூட, அப்பாடி….இவ்வளவு பெரிசா….? என்ற பிரமிப்பு பார்வையளவில் ஏற்பட வாய்ப்பில்லை. சாம்பிளாகத் தரப்படும் சில பக்கங்களைப் படித்து விட்டுப் பிடித்திருந்தால் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இல்லையென்றால் விட்டுச் செல்லலாம். அதுபோல் விலை அதிகம் என்று கருதினால் பொறுத்திருக்கலாம். தமிழ்ப் புத்தகங்களுக்கு கிண்டிலின் ஆரம்ப காலம் இது என்பதால் சில மாதங்களிலேயே புத்தகங்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன என்பது இங்கே முக்கியத் தகவலாகிறது. இது எல்லாவற்றிலும் விட வீட்டில் லைப்ரரி என்று அலமாரியில் அடுக்கி வைத்து, அவை படிக்கப்படாமல் தூசியேறி, தினம் தினம் அவற்றை நாம் கடந்து செல்கையில் அவை நம்மைப் பார்த்துச் சிரிப்பதும், என்று என்னைப் படிக்கப் போகிறாய் என்று அவை நம்மோடு பேசுவதும்,  குறைபட்டுக் கொள்வதும், உன்னிடம் காசு இருக்கிறது என்கிற திமிரில்தானே இப்படி என்னை வாங்கி பெருமைக்கு அடுக்கியிருக்கிறாய் என்று அவை எள்ளி நகையாடுவதும் ஆகிய பழி பாவங்கள் இல்லாமல் போகின்றன இந்தக் கிண்டில் மூலம்.
கேள்வி – 9
சமகால இலக்கியத்தில் கிண்டில் மூலம் வாசிக்கும் பழக்கம் இப்போது எவ்வாறு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில் ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றன. மிகவும் குறைவான அளவிலேயே புத்தகங்கள் நகர்கின்றன எனலாம். ஓரிரு மாதங்களிலேயே புத்தகங்களின் விலை குறைக்கப்படுவதே இதற்குச் சான்று. மக்கள் அச்சுப் புத்தகங்களைக் கையில் ஏந்திக் கொண்டு படிப்பதில்தான் இன்னும் சுகம் காண்கின்றார்கள். ஆனால் தமிழ்ப் புத்தகங்களுக்காக ஏங்கி நிற்கும் வெளிநாட்டில் வாழ்வோருக்கு இந்தக் கிண்டில் புதிய வெளியீடுகள் பெரிய மகிழ்ச்சியைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். புதிய புதிய படைப்பாளிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களின் புத்தகங்களை வாங்கிப் படிக்க ஏதுவாக கிண்டில் அமையும். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பிரபலமான படைப்பாளிகளின் புத்தகங்கள் கிண்டிலில் கிடைக்கின்றன. சமகால இலக்கியம் இப்போதுதான் சின்னச் சின்னப் புத்தகங்களாக கிண்டிலில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. இதிலும் முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றுஅச்சுப் புத்தகங்களை விட இவை விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதுதான். என்ன ஒன்று என்று நினைத்தால் வாங்கிப் பரிசளிக்க முடியாது….படித்து முடித்து அடுத்தவருக்கு தானமாகக் கொடுக்க முடியாது. மீள வராமல் போனாலும் பரவாயில்லை என்று தெரிந்தே  இரவல் வழங்க முடியாது. அப்படியான வாசிப்புப் பழக்கத்தைப் பரப்பும் வழிமுறைகள் சற்றுக் குறைவு இதில்.
கேள்வி 10 –
கிண்டில் வாசிப்பு அதிகரித்தால் அச்சில் வாசிப்பு பாதிக்கப்படுமா?
பதில் – கண்டிப்பாக. ஆனால் அதற்கு வெகுநாட்கள் ஆகும். இன்னும் புத்தகக் கண்காட்சிகளுக்குக் குறைவில்லையே தமிழ்நாட்டில். விற்பனையும் சொல்லிக் கொள்ளும்படியாகத்தானே இருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் புத்தகங்கள் என்பதே வலைத்தளத்தில் படிப்பது என்பதாக அமைந்து விடும் என்றுதான் தோன்றுகிறது.
கேள்வி 11 – கிண்டில் வாசிப்பு, பதிப்புப் படைப்பாளியை எவ்வாறு பாதிக்கும் என்று கருதுகிறீர்கள்?
பதில் – கிண்டில் வாசிப்பு பதிப்பாளரை எவ்வாறு பாதிக்கும் என்று கேட்கிறீர்களா? பாதிக்கத்தான் செய்யும். ஆனால் அதற்கு சற்றுக் காலம் பிடிக்கும். ஏனெனில் காலம் காலமாகப் பதிப்புத்  தொழிலில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதை ஒரு குலப் பெருமையாகவே கருதிச்  செய்து கொண்டிருக்கிறார்கள். சிறந்த புத்தகங்களை வெளியிடுவது, சிறந்த படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் படைப்புக்களை வாங்கிப் போடுவது என்பதே பெருமையான விஷயமாகக் கருதுபவர்கள் இவர்கள். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இவைகளுக்கெல்லாம் அச்சுப் புத்தகங்களை வழங்குவதுதானே உகந்ததாக இருக்கும். அப்படியிருந்தால்தானே மாணவர்களை, ஆய்வாளர்களை எளிதில் அவர்களின் பணிகளைத் தடையின்றிச் செய்ய உகந்ததாக அது அமையும். அதற்குப் பதிப்பகங்கள்தான் பெரிதும் உதவி நிற்கின்றன. வலைத் தளங்களின் மூலமும் இதனிலும் அதிகமான வேகத்தில் எளிதில் எல்லோரையும் சென்றடையச் செய்யலாம்தான். ஆனால் அது கல்வியளவில் சற்றுக் காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. ஆகையால் பதிப்பாளர்களை கிண்டில் போன்ற புத்தக வரவுகள் பாதிக்கவே செய்யும் கொஞ்சம் கொஞ்சமாக. பதிப்புப் படைப்பாளியை என்ற சொற்றொடரை, புத்தகமாகவே போட விரும்பும் படைப்பாளியை என்று கொண்டால் அவரையும் கிண்டில் வரவு மெல்ல மெல்ல பாதிக்கும்தான். ஆனால் அதற்குக் காலம் பிடிக்கும்.
கேள்வி – 12
ஒரு வாசகனாக கிண்டில் வாசிப்பு உலகத்தை எதிர்காலத்தில் நீங்கள் ஆதரிப்பீர்களா?
பதில் – எதிர்காலத்திலென்ன…இப்போதே ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தரமான இலக்கியப் புத்தகங்களை வாங்குவதும், இலவசமாகக் கிடைப்பதைத் தரவிறக்கம் செய்து படிப்பதுமே இப்போது என் வழக்கமாக இருக்கிறது. எனது 13-வது சிறுகதைத் தொகுப்பான ”முரண் நகை” என்ற புத்தகத்தை முதன்முறையாக கிண்டிலில்தான் இப்போது நான் வெளியிட்டிருக்கிறேன். அதற்கு தமிழ்நாட்டில் விட வெளிநாடுகளில் எப்படி ஆதரவு கிடைக்கிறது என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அதைப் பொறுத்து அடுத்தடுத்து கிண்டிலில் என் படைப்பாக்கங்களைப் புத்தகமாக வெளியிடுவதுதான் என் எதிர்காலத் திட்டம். அத்தோடு எந்தப் பதிப்பகம் நம் புத்தகத்தைப் போடும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை இல்லை. ராயல்டி தரவில்லை என்கிற மனக்குறையும் கிடையாது. யாரிடமும் எந்த வருத்தமும் இல்லை என்கிற விட்டேற்றியான சந்தோஷம் நிலைக்கிறது.
கேள்வி – 13
கிண்டில் மின்னூலுக்கான எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில் – வளமாக இருக்கும். ஆனால் சற்றுக் காலம் பிடிக்கும். நம் மக்களை அவர்கள் காலம் காலமாய்ப் பழகிய பழக்கங்களிலிருந்து வெளியே கொண்டு வருவது அத்தனை எளிதல்ல. வீட்டில் ஒரு அறையையே முழுவதுமாய் அடைத்துக் கொண்டிருக்கும் மொத்தப் புத்தகங்களின் பல்லாயிரக் கணக்கான பக்கங்கள் ஒரு கையடக்க ஆன்ட்ராய்ட் மொபைலில் ஒரு ஓரமாய் சத்தமேயில்லாமல் அமிழ்ந்து கிடக்கும் வசதியை எல்லோரும் சீக்கிரமே உணரத்தான் போகிறார்கள். அந்தக் காலம் இது ஒன்று போதும் எனக்கு என்று ஒரு தீவிர வாசகனை, ஒரு புத்தக விரும்பியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும். அந்த நாள் இனிய நாளாக நம் எல்லோருக்கும் கட்டாயம் அமையும்.
கேள்வி 14 –
அச்சுப் பதிப்பகம் எவ்வாறு பாதிப்படையும் என்று கருதுகிறீர்கள்?
பதில் – மேற்குறித்த கேள்விகளுக்கான பதில்களிலேயே இக்கேள்விக்கான பதிலும் அடங்கியிருக்கிறது. அச்சுப் பதிப்பகம் படிப்படியாகத் தேவையின்றிப் போகும். அச்சுப் பதிப்பகத்தார்கள் படைப்பாளிகளின் மின்னூல்களை விற்பனை செய்து தரும் நிறுவனங்களாக மாறுவார்கள். படைப்புக்களை வாங்கி, மின்னூல்களாக  மாற்றும் பணியை அவர்களே செய்வார்கள். அதி்ல் பிற வியாபார நடைமுறைகளைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டே தீரும். ஆனாலும் பரவாயில்லை என்று வெவ்வேறு விதமான நடைமுறைகள் எதிர்காலத்தில் முளைத் தெழக் கூடும். இவ்வாறாக மின்னூல்களின் அவசியம் அதிகமாகி அச்சுப் பதிப்பு என்பது தன்னைத் தானே படிப்படியாக மறைத்துக் கொள்ளும்.
கேள்வி – 15
தொலை நோக்கில் மின்னூல் உலகம் நாம் வாழும் உலகை எவ்வாறு பாதிக்கப் போகிறது என்று நினைக்கிறீர்கள்?
பதில் – வாழும் உலகை எவ்வாறு பாதிக்கும் என்றால் புத்தகங்களா மொத்த உலகையும் ஆட்கொண்டிருக்கிறது? அது ஒரு பகுதி..அவ்வளவுதான். இந்த உலகம் அனுபவங்களால் சூழப்பட்டது. மனிதர்கள் சுய அனுபவங்களால் பக்குவப்பட்டவர்கள். வாழ்க்கை அனுபவ சாரங்கள் அவர்களைப் பட்டை தீட்டியிருக்கின்றன. அதனை எழுதி வைத்தவர்கள் குறைவு. அதைப் படிப்பவர்கள் அதனிலும் குறைவு. எனவே மின்னூல் உலகம் என்பது பதிப்பு உலகத்தைப் படிப்படியாகப் பாதிக்கும். காலத்திற்கேற்றாற்போல் பதிப்பாளர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கும். நாம் வாழும் உலகு மின்னூல் உலகாக சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருப்பதை, விடாது கவனித்து உடன் பயணிக்கும் மக்கள் உலகின் போக்கினுக்கேற்றாற்போல் தங்களை எளிதாக மாற்றிக் கொள்வார்கள். மாட்டேன் என்றால் பின் தங்கி விடுவார்கள்.
கேள்வி – 16
கிண்டில், பிடிஎஃப்பில் நீங்கள் வாசித்த நூல்கள்….?
பதில் – கிண்டிலில் இப்போதுதான் நானும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். விமலாதித்த மாமல்லனின் “புனைவு என்னும் புதிர்” என்ற நூல் என்னைக் கவர்ந்த முதல் புத்தகம். எழுத்தாளனால் அவன் காணாத உலகை எப்படித் தன் கற்பனையில் காண முடிகிறதோ அதே போல, தீவிர வாசகன் அவனுக்குக் காட்டப்படும் உலகை, அதுவரை அவன் கண்டிராத போதிலும் சட்டெனப் பிடித்துக் கொள்கிறான் என்கின்ற ஆழ்ந்த ரசனையின்பாற்பட்ட விஷயத்தை உள்ளடக்கிய புனைவு என்னும் புதிர் என்ற இப்புத்தகம் சமீபத்தில் நான் படித்ததில் என்னைக் கவர்ந்த முக்கியமான ஒன்று.
பிடிஎஃப்பில் நிறையப் படித்திருக்கிறேன். படித்துக் கொண்டுமிருக்கிறேன். மகா பெரியவரின் “தெய்வத்தின் குரல்” இன்றும் அனுதினமும் நான் படித்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய நூல்.
கேள்வி 17 – மிக அண்மையில் எழுத வந்திருக்கும் கவிதை, புனைவு வகைமைகளில் உங்களை மிகவும் கவர்ந்தவர்கள்?
பதில் – நான் மணிக்கொடிக் கால எழுத்தாளர்களிலிருந்து ஜெயகாந்தன் வரையிலும் பிறகு ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என்றும் விடாது தொடர்ந்து படித்து வருபவன். அவர்களின் எழுத்து கவர்ந்த அளவு தற்போதைய இளம் படைப்பாளிகளின் எழுத்துக்கள் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஓரொரு சிறுகதைகள் என்று வேண்டுமானால் சொல்லிப் போகலாம்.மேலும் பாலுணர்ச்சி சார்ந்த விஷயங்கள் கருத்தூன்றிச் சொல்லப்படுகின்றன. அதில் எனக்கு ஒப்புதல் இல்லை.  கவிதைகளில் என்னைக் கவர்ந்தவர் யவனிகாஸ்ரீராம். அவரது கவிதைகளுக்கு நான் எப்போதும் ஆழ்ந்த ரசிகன்.
கேள்வி 18
அவர்களுடைய ஆக்கங்களை நீங்கள் வாசித்தது அச்சிலா, கிண்டிலிலா…,?
பதில் - அச்சில்தான். காரணம் அவர்களின் அச்சில் வந்த புத்தகங்கள்தான் கிண்டிலில் வலம் வருகின்றன.
கேள்வி 19 –
கிண்டிலில் நீங்கள் வாசிக்க விரும்பும் நூல் வகைகள்…?
பதில் – அதிலென்றால் வகைமைகள் மாறி விடப் போகிறதா என்ன? கைக்கு சுமையில்லாமல் சேர்த்து வைக்கலாம் என்பதுதானே….பல்லாயிரம் பக்கங்களையும் சின்ன இடத்தில் அடக்கி விடலாம் என்கிற வசதிதானே…..அச்சில் எதையெல்லாம் படிக்க விரும்புகிறோமோ அதுவே கிண்டிலிலும் வரப்போகின்றன. வந்து கொண்டிருக்கின்றன….அப்படியான கதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வு நூல்கள்… மொழி பெயர்ப்புகள் .என்கிற வகை மாதிரிதான்..கிண்டிலிலும் நான் வாசிக்க விரும்பும் நூல்கள்.
கேள்வி 20 –
நீங்கள் பல்லாண்டுகளுக்கு முன் வாசித்த, மீண்டும் கிண்டில்/ பிடிஎஃப்பில் வாசிக்க விரும்பும் நூல்…?
 பதில் - தி.ஜா.ரா. வின் “மோக முள்”, ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்….இப்படி நிறைய…உண்டுதான். நூல் என்றுதானே கேட்டிருக்கிறீர்கள்….! இரண்டே அதிகம்……
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
   .


இமையம் சிறுகதைத் தொகுப்பு “சாவு சோறு”

ஏற்கனவே உயிர்மையில் படித்ததுதான் என்றாலும் பிறகும் நினைப்பு வரும்போதெல்லாம் 
 தேடித் தேடிப் படிக்கிறோம். அப்படித்தான் படித்தேன் இன்று. முதல் கதையைப் படித்ததுமே மனசு நடுங்கிப் போனது. இதயம் இன்னும் படபடத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கும் பல கிராமங்களில் சாதி வெறி எப்படித் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது? என்று நினைக்க வைத்தது. முதல் கதையைப் படித்து முடித்து, அதன் பாதிப்பு அடங்கவே ரெண்டு நாள் ஆகும்போல்தான் தெரிகிறது. மனசு உள்ளுக்குள் அழுது கொண்டே இருக்கிறது. எண்ணி எண்ணிப் புழுங்குகிறது. எல்லா மக்களும் சந்தோஷமாயும், ஒற்றுமையாயும், சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இம்மாதிரியான நிகழ்வுகளையும், செய்திகளையும் அறிய நேரிடும்போது தங்களுக்குள் நொறுங்கித்தான் போவார்கள்.
“சாவு சோறு - அதுதான் நான் படித்த முதல் கதை. அது வெறும் கதையல்ல. அந்த மக்களின் அவல வாழ்க்கை. புத்தகத்தின் பெயரும் அதுதான். க்ரியா வெளியீடு. இன்று கைக்குக் கிடைத்தது. இமையத்தின் ஆழமான எழுத்து மனசைப் பிழிய வைக்கிறது. அற்புதமான படைப்பாளி. அவரின் எந்தப் படைப்பையும் சோடை சொல்லவே முடியாது. நான் அதிகம் விரும்பிப் படிக்கும் படைப்பாளிகளுள் அவரும் ஒருவர்.
மீதமுள்ள ஒன்பது கதைகள் இன்னும் என்னெல்லாம் பாடுபடுத்தப் போகிறதோ என்னை...! கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டிய முக்கியமான சிறுகதைத் தொகுப்பு ”சாவு சோறு”

LikeShow more reactions

04 டிசம்பர் 2018

க.நா.சு.வின் “அவரவர் பாடு” நாவல் வாசிப்பனுபவம்


Just now
க.நா.சு.வின் “அவரவர் பாடு” நாவல் வாசிப்பனுபவம்
----------------------------------------------------------------------------------------------
,படிப்பதும், படிக்காததும் அவரவர் பாடு.
---------------------------------------------------------------------
சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து “அவரவர் பாடு” என்கிற இந்நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு என்கிறார் க.நா.சு.
க.நா.சு. நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக நற்றிணை பதிப்பகம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள நாவல் இது.
இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை என்று சொல்கிறார். எழுதிப் பார்க்கிறேன். அது நன்றாய் வருவதும், வராததும் சொல்வதற்கில்லை என்பதாயும், படிப்பதும், படிக்காததும் உங்கள் பாடு என்பதாயும் க.நா.சு. பாணியிலேயே இதைக் கொள்ளலாம். அப்படி சாதித்து விட்டேன், இப்படி எழுதித்தீர்த்தேன் என்பதெல்லாம் கிடையாது. கடை விரித்திருக்கிறேன், கொள்வதும், கொள்ளாததும் உங்களின் விருப்பம், அது தன் தரத்தைப் பொறுத்துத் தானே நிற்கும் அல்லது காணாமல் போகும் என்பதே அது.
அவர் உயிரோடிருந்தால் நிச்சயம் இப்படித்தான் சொல்வார். ஏனென்றால் எழுதியது யார் என்று பார்க்காது, எழுத்து என்ன சொல்கிறது, அந்தப் படைப்பு நன்றாக வந்திருக்கிறதா, தரமானதா, இல்லையா என்று தாமரை இலைத் தண்ணீராய் விலகி நின்று, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று விமர்சனம் செய்தவர் அவர். விமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நின்றவர். அது தன் படைப்போ, பிறர் படைப்போ அதுபற்றிக் கேள்வி இல்லை. எழுத்து என்ன சொல்கிறது என்பதே விடை.
அம்மாதிரியான நிலைப்பாடே அவர்கள் மீது நாம் மதிப்புக் கொள்ளச் செய்யும் விஷயமாக இருக்கிறது. இங்கே நாம் என்று சொல்வது இப்படிப் பலரும் அவரது கருத்துக்கு ஒப்புமை உடையவர்களாகவே இருப்பார்கள் என்கிற நம்பிக்கையில்தான். ஒரு நல்ல புத்தகத்தை அப்படித்தான் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அந்த மதிப்பு மரியாதையின்பாற்பட்டே என்னதான், எப்படித்தான் எழுதியிருக்கிறார் பார்ப்போமே என்று வாங்கிப் படிக்கத் தோன்றுகிறது. அப்படி வாங்கி, ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டதுதான் இந்த ”அவரவர் பாடு”.
பின்னோக்கு (ஃப்ளாஷ் பேக்) உத்தியில் தீவிரமாக யோசித்து, படிப்படியாக வடிவமைத்து, முதலில் உதிக்கும் கதையின் ஆரம்ப மர்மம் விலகாதபடிக்கு, அடுத்தடுத்து தவிர்க்க இயலாமல் உருவாகும் மர்மங்கள் சேர்ந்து கொண்டே போவது போல் காட்சிகளை உருவாக்கி, பார்வையாளனை இருக்கையின் நுனியிலேயே வைத்திருப்பதுபோல் திரைக் கதையை அமைத்து, முழுத் திரைக்கதையும், அடுத்தடுத்த காட்சிகளும், வசனங்களும் மனதிற்குள்ளேயே மொத்தத் திரைப்படமாகப் பதிய வைத்துக் கொண்டு, படப்பிடிப்பு செய்தால், ஒரு சிறந்த மர்மக் கதையாக அந்த நாளில் வந்த ”அந்த நாள்” போல் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகும் நல் வாய்ப்பு இந்நாவலுக்கு உண்டு.
ஒரு எழுத்தாளன் கதை கேட்பது போலவும், கதையின் எல்லா நிகழ்வுகளையும் அறிந்தவனும், அவற்றின் பலவற்றிற்கும் காரணமாக இருந்தவனும், மொத்தக் கதையையும் அவரிடம் மனமுவந்து சொல்பவனுமாகிய சம்பந்தம் என்கிற கதாபாத்திரம் வழியாக இந்த மர்ம நாவலை முன் வைக்கிறார் க.நா.சு.
அத்தனை நிகழ்வுகளையும் அடுத்தடுத்த காட்சிகளாய், படம் பிடித்ததுபோல் தெளிவாகச் சொல்லிச் செல்லும் சம்பந்தத்தின் கூடவே அந்த எழுத்தாளரோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம்.
மனிதனுடைய எல்லாத் தவறுகளுக்கும் ஆசைதான் பிரதானம். ஆசையின்பாற்பட்டு செய்யத் துணியும் முதல் தவறு, பின் அதனால் ஏற்படும் மோசமான விளைவு, அடுத்தடுத்த தவறுகளுக்கு வழி வகுக்கிறது. ஒன்றை மறைக்க ஒன்று, அந்த இன்னொன்றை மறைக்க வேறொன்று என்று ஆசை துன்பமாய் உருவெடுத்து ஆடுவதைக் கண்டு வெதும்பி, இந்த எல்லாத் துன்பங்களிலிருந்தும் எப்படியாவது விடுபட்டால் போதும் என்கிற முடிவில், இதுதான் கடைசி, இதற்குப்பின் எல்லாக் கஷ்டங்களும் விலகி விடும் என்கிற நம்பிக்கையில்,இறுதி என்று நினைத்துக் கொண்டு செய்யும் காரியங்களைத் தவறாகவே செய்து, பின் அதற்கும் ஏற்படும் மோசமான விளைவுகள், ஒருவன் வாழ்க்கையை எப்படியெல்லாம் இந்த உலகின் வெளிச்சத்திலிருந்து பிரித்து வைத்து ரகசியமான குகைக்குள்ளேயே நகர்த்திக் கொண்டு போகிறது என்பதை அருமையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் நாவல் இது.
கதை மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும்போது, நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் எல்லாவற்றையும் அந்த எழுத்தாளன் வழி விடுவித்துக் கொள்ள நாம் முயல்கின்றோம். இது இப்படித்தானே இருக்க வேண்டும், இருக்க முடியும் என்றும், அவர் இவர்தான் என்றும் நாம் ஊகிக்க முயலும் நேரங்களில் அது அந்த எழுத்தாளர் வழி நமக்குப் புலப்படுகிறது.
தெளிவான கதை சொல்லல். வார்த்தை ஜாலங்கள் இல்லாத யதார்த்தமான நடை. செய்திருக்கும் முயற்சியில் கடைசி வரையிலுமான ஆழ்ந்த ஈடுபாடு இதுவே இந்த நாவல்.
தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்துக்க நிகராக நிற்க வேண்டும் என்று கவலைப்பட்டு, பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து தந்த பெருமகனார் திரு க.நா.சு.
அவரது இந்த அவரவர் பாடு நாவலைப் படிப்பதும், படிக்காததும், அவரவர்பாடு

03 டிசம்பர் 2018

காப்பாற்றியசுருக்கெழுத்து (காசு, துட்டு, மணி…மணி…!!)





காப்பாற்றியசுருக்கெழுத்து (காசு, துட்டு, மணி…மணி…!!)
*************************************************************************************
 எஸ்.எஸ்.எல்.சி., ஆண்டுத் தேர்வு முடிந்த மறுநாளே வேலைக்குப் போய்விட்டேன் நான். எங்களூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருந்த ஒரு சிற்றூரின் ரைஸ் மில்லில்  பில் போடும் வேலை. நாற்பது ரூபாய் சம்பளம். அப்போது அது எங்கள் குடும்பத்திற்கு அத்தியாவசியத் தேவையாய் இருந்தது. நடந்து போய்விட்டு நடந்தே திரும்பி விடுவேன்.
என்னோடு படித்தவர்கள் எல்லோரும் கல்லூரிக்குப் போய்விட்டார்கள். எனக்கு அந்த வசதி இல்லை. நான் மட்டும் எங்கள் தெருவில் தனித்து விடப்பட்டேன். தன்னுடைய வருமானத்திற்கு அப்பா ஆறு குழந்தைகளைப் அதுவரை படிக்க வைத்ததே பிரம்மப் பிரயத்தனம். அது ஒரு தனிக் கதை.
ஒழுங்காகப் படித்தேனா என்பது வேறு. படித்தேன். மண்டையில் எவ்வளவு நின்றதோ அந்த அளவுக்கு. அதுதான் இந்தச் சினிமாப் பைத்தியம் போட்டு ஆட்டி வைக்கிறதே…! முழுப் பரீட்சைக்கு முதல் நாள் இரவு சினிமாப் பார்த்தவன் நான்.  விளங்குமா? பாஸ் பண்ணினேன். பாதிக்குப் பாதி மார்க். அம்புட்டுத்தான்.
எனக்கு காசு வாங்கிக் கொள்ளாமல் கணக்கு சொல்லிக் கொடுத்தார் கிருஷ்ணசாமி வாத்தியார். அது என் அப்பாவின் உழைப்பை நினைத்து, எங்கள் குடும்பத்தை எண்ணி…..அவரது மட்டற்ற கருணை என்னைக் காப்பாற்றியது.
“கஷ்டப்பட்டுப் படிக்கணும்டா….நல்ல  வேலக்குப் போயி,சம்பாதிச்சு,  அப்பா…அம்மாவ உட்கார்த்தி வச்சுக் காப்பாத்தணும்….” –அன்றைய தாரக மந்திரம் இதுதான்.
பாஸ் பண்ணிட்டியா….போடா…போ…போய் எனக்கு ஒரு இங்க் பாட்டில் வாங்கிண்டு வா…. – இதுதான் அவர் என் மொத்த டியூஷனுக்கும் வாங்கிக் கொண்ட ஃபீஸ்…..அம்மாதிரி ஆசான்களை இன்று எங்கும் காண முடியாது. தெய்வமாய் வணங்க வேண்டியவர்கள்.
ரொம்ப நேரமா யோசிச்சு, கஷ்டப்பட்டுத் தப்பா போடுறீயேடா….என்று சொல்லிக் கொண்டே  காதைப் பிடித்துத் திருகுவார்…இப்போது நினைத்தாலும் வலிக்கிறது. அந்த உறுத்தலில்தான் பரீட்சை முடிந்த மறுநாள் வேலைக்குப் போனேன் நான்.
நாற்பது ரூபாய் சம்பளத்தில் பத்து ரூபாய் டைப்ரைட்டிங் பள்ளிக்குக் கட்டணமாய்க் கொடுப்பேன். ஐந்து ரூபாய் என் கைச் செலவுக்கு. மீதி இருபது ரூபாயை அப்படியே அம்மாவிடம் கொடுத்து விடுவேன். எண்ணிச் சுட்டு விண்ணப்பம் என்று ஒரு சொலவடை உண்டு. அம்மா அந்த வருமானத்தை  வீட்டின் தேவைக்கு அத்தனை அழகாய்ப் பயன்படுத்துவாள். அதெல்லாம் இன்றிருப்பவர்களுக்கு தலை கீழாக நின்றாலும் படியாது. வாழ்க்கையின் செம்மையை, அதன் நுணுக்கத்தை அப்படி உணர்த்தினார்கள் நம் முன்னோர்கள்.
தட்டச்சுப் பள்ளியின் பிரின்சிபால் “செல்வம்” . அவரின் அன்பு அளப்பரியது. தினம் ஒரு மணி நேரத்திற்குத்தான் ஃபீஸ் கட்டியிருப்பது. ஆனால் அங்கேயே கிடப்பதுதான் என் வேலை. வரும் ஜாப் டைப் அத்தனையையும் அடித்துக் கொடுத்துக் கொண்டே இருப்பேன். அது அவருக்குப் பெரும் உதவியாயிருந்தது. எனக்கும்தான். சமயங்களில் சினிமாவுக்கு அவரிடமே காசு வாங்கிக் கொண்டு  போய் விடுவேன். சொந்த அண்ணன் மாதிரி அவர். பள்ளியே கதியாய்க் கிடந்ததும், தொடர்ந்து தட்டச்சுப் பணியையே செய்து கொண்டிருப்பதும், வரும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதான பழக்கத்தை ஏற்படுத்தியது. இன்ஸ்ட்ரக்டர் ஆனேன். சம்பளமில்லாத வேலைக்காரனாய் இருந்தேன். மனமொன்றிக் கிடந்த காலம். வீடு…வீடு விட்டால் இன்ஸ்டிட்யூட். இவ்விரண்டு இடங்களில்தான் என்னைப் பார்க்கலாம்.அந்த நடைமுறை தட்டச்சு  ஆங்கிலம், தமிழ்த் தேர்வுகளைச் சுலபமாய்த் தேர்ச்சி பெறுவதற்கு எனக்கு வழி வகுத்தது.
அப்போதே எங்களூர் குட்டி நூலகத்தில் சென்று படிப்பது என்பது எனது மற்றும் நண்பர்களின் வழக்கமாயிருந்தது. நாங்கள் முதலில் தேடிப் படிப்பது தினத்தந்தி “சிந்துபாத்” சித்திரக் கதைதான். இது இளம் பிராயத்திலிருந்தே ஆரம்பித்த வியாதி. ஆண்டிப் பண்டாரம் பாடுகிறார்.  பிறகு அங்கு புத்தகங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்தோம்.
அக்ரஉறாரத்தின் பல வீடுகளின் லைப்ரரி டோக்கன்கள் எங்களிடம்தான் இருக்கும். அப்போதிருந்த நூலகர்களுக்கெல்லாம் தான் பணியாற்றும் நூலகத்தில் எந்தெந்த எழுத்தாளர்களின் நூல்கள் என்னென்ன இருக்கின்றன என்பதெல்லாம் மனப்பாடமாய்த் தெரியும். ரேக்கில் அடுக்கியிருப்பவைகளில் எந்த வரிசையில், எத்தனாவது புத்தகமாய், என்ன எண்ணோடு அவை வீற்றிருக்கும் என்பதைத் துல்லியமாய்ச்  சொல்லும் சாதுர்யம் அவர்களிடம் இருந்தது. அத்தனை அர்ப்பணிப்பு.  கேட்லாக்கில் தேடி, வரிசையாய், ஒவ்வொரு எழுத்தாளராய் எடுத்துப் படித்திருக்கிறோம்.
அந்த நாட்களிலேயே அதாவது அறுபத்தியேழுக்குப் பிறகான காலங்களில் என் அண்ணா மூலமாய் எனக்கு  அறிமுகமானது  நா.பா. அவர்களின் “தீபம்” இலக்கிய இதழ். நான் ஐந்து இதழ்கள் வாங்குவேன். அந்த இதழ்களுக்கான தபாலோடு போஸ்டரும் வரும். எப்படியோ ஒரு தட்டி ஏற்பாடு செய்து, அதில் அந்தச் சின்னப் போஸ்டரை ஒட்டி மாடியில் எல்லோர் பார்வையிலும் படும்படி தொங்க விட்டேன் நான். தீபத்தின் வாசகன் நான். எங்களூர் ஏஜென்ட். அவ்வளவு பெருமை.    ஒன்றை மட்டும் எனக்கு வைத்துக் கொண்டு மீதி நான்கை. நண்பர்களுக்குக் கொடுத்து விடுவேன். அது நான் படித்த தட்டச்சுப் பள்ளியில் நிகழ்ந்தது. அங்கு படிக்க வந்த மாணவர்கள் சிலர் அந்தப் பழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். தீபம் இதழில் பின்னாளில் என்னுடைய ஓரிரு கவிதைகளும் பெரிய அளவிலான துணுக்குகளும்  வந்திருக்கின்றன. அதில் வல்லிக்கண்ணன் எழுதிய “சரஸ்வதி காலம்“ என்ற தொடரை எடுத்து பைன்ட் செய்து வைத்திருக்கிறேன் நான்.
நா.பா.வை நினைக்கும்போது சி.சு.செ.யை நினைக்காமல் முடியாது. அதைத் தனிப் பத்தியாகத்தான் எழுத வேண்டும். இங்கே சொல்ல வந்தது எப்படி சுதாரித்து மேலே வந்தேன்  என்ற கதையை. காசு…துட்டு…மணி…மணி……
உங்கள் கதை என்ன அவ்வளவு முக்கியமானதா என்று யாரும் நினைத்து விட வேண்டாம். நிச்சயம் முக்கியமானதுதான். ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் காலூன்றுவதற்கு எல்லோருமே இளம் வயதில் சுதாரித்தாக வேண்டும் என்பதுதான் உண்மை. அது என் தந்தையிடமிருந்து, தாயாரிடமிருந்து எனக்குப் படிந்தது.
சுருக்கெழுத்து படித்தேன். பெரியகுளம் சென்டரில் தேர்வு எழுதப் போன போது அங்கிருக்கும் சினிமாத் தியேட்டரே மனதில் நின்றது். ரிசல்ட்? அதைச் சொல்ல வேறு வேண்டுமா?
ஒரு கட்டத்தில் மதுரைக்குக் குடி பெயர்ந்தோம் நாங்கள். என் அண்ணா மூலம் அங்கு ஒரு மிகப்பெரிய தட்டச்சுப் பள்ளியில் எனக்கு வேலை கிடைத்தது. நான் முதன் முதல் பேன்ட் அணிந்து போனது அங்கேதான். அதுவும் சொந்தமாய் எனக்கே எனக்கு என்று தைத்த பேன்ட் அல்ல. அண்ணாவின் பேன்ட் எனக்குப் பொருத்தமாய் இருந்ததால் அதை அணிந்து கொண்டு போனேன். புதிதாய் பேன்ட் போட்டுக் கொண்டவன் என்று யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். அது நாற்பது மிஷின்கள் இருக்கும் பெரிய தட்டச்சுப் பள்ளி. அதுக்கு நான் இன்ஸ்ட்ரக்டர். நான் அங்கே பயிற்றுவிப்பாளனாக சேர்ந்த பிறகு ரிசல்ட் சதவிகிதம் கூடியது. அது பிரின்ஸிபாலுக்கு. மகிழ்ச்சியைத் தந்தது.   மதுரைக்கு சுற்று வட்டாரத்திலுள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு பாதிக் கட்டணம் அறிவிக்கலாம் என்று ஒரு யோசனையை அமுல்படுத்தினோம். கூட்டம் எகிற ஆரம்பித்துவிட்டது. எக்கச் சக்கமான மாணவர்கள் சேரப் போக, ஷிப்ட் முறையில் பணியாற்ற இன்னொருவரை வேலைக்கு நியமிக்க வேண்டியிருந்தது. அப்படி என்னோடு வந்து சேர்ந்தவர்தான் நண்பர் ராஜகோபால்.அவர் இப்போது இல்லை. எனக்கும் அவருக்கும் ரொம்பவும் ஒத்துப் போனது. நாங்கள் இருவரும் சேர்ந்து அந்தப் பள்ளியை உச்சிக்குக் கொண்டு போனோம். எங்களிடம் முழுப் பொறுப்பையும் விட்டு விட்டார் முதல்வர். அர்ப்பணிப்போடு வேலை செய்தோம்.
காலம் இப்படியே போய்விடுமா? இது போதுமா என்கிற கேள்வி விழுந்தது. சட்டென்று சுதாரித்து சுருக்கெழுத்தை மீண்டும் கையிலெடுத்தேன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் அசுரத் தனமாய் உழைத்து, மேல்நிலை (Higher Grade) வெற்றி பெற்றேன். பிறகு அதே பள்ளியில் சுருக்கெழுத்திலும் பாடம் எடுக்க ஆரம்பித்தேன்.
வெறும் எஸ்.எஸ்.எல்.சி.யை வைத்துக் கொண்டு குப்பை கொட்ட முடியாது என்ற உறுத்தலில் நான்கு Higher Grade களை (தட்டச்சு மற்றும் ஆங்கிலம்) கல்வித் தகுதியாகச் சேர்த்துக் கொண்டு சர்வீஸ் கமிஷன் எழுதினேன். அப்போது சுருக்கெழுத்துக் கல்வி மதிக்கப்பட்ட காலம்.
இந்தத் தட்டச்சுப் பள்ளியில் பணியாற்றி வந்த காலத்தில் இடையிடையில் எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச் நியமனத்தில் இன்டர்வியூ சென்று வந்த நான் சுமார் ஐந்தாண்டு காலம் அரசு அலுவலகங்களில் சுருக்கெழுத்தாளராகப் பணியாற்றி அனுபவம் பெற்றேன். கடைசியாக நான் வேலை பார்த்தது தமிழ்நாடு பூமிதான வாரியம். பின்னர் அது R.D.L.A. டிபார்ட்மென்டோடு மெர்ஜ் செய்யப்பட்டது. அங்குதான் என் அனுபவம் என்னை மிகுந்த தகுதியுள்ளவனாக ஆக்கியது.
வெள்ளைக்காரக் கலெக்டரிடம் பி.ஏ.வாக இருந்து அனுபவம் பெற்ற தமிழ்நாடு பூமிதான வாரியத்தின் சேர்மனான திரு பூபதி அவர்களிடம் சுருக்கெழுத்தாளனாகப் பணியாற்றிய அனுபவம் என்னைப் புடம் போட்டிருந்தது. சர்வீஸ் கமிஷன் வேலை கிடைத்ததும், என்னை விடமாட்டேன் என்று சொல்லி பயமுறுத்தினார் அவர். என் மீது அளவற்ற அன்பு கொண்டவர். அவரோடு தமிழ்நாடு முழுவதும் விடாமல் முகாம் சென்ற அனுபவம் எனக்கு. கையில் ஒரு போர்ட்டபிள் டைப்ரைட்டரோடு பின்னாலேயே அலைந்து கொண்டிருப்பேன். இரவு பகல் பாராமல் வேலை பார்ப்பேன். அந்த அளவுக்கான கடுமையான உழைப்பு இன்று எங்கே போனது என்று எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது.
ஒரு முறை மதுரை  காந்தி மியூசியத்தில் நடந்த கவர்னரின் ஆலோசகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நோட்ஸ் எடுக்கும் பணி எனக்கு ஒதுக்கப்பட்டது. சேர்மனோடு சென்று திறம்பட கவனமாய் அந்தப் பணியை முடித்துக் கொடுத்தேன். எல்லாம் இறைவன் சித்தம்.
அது கவர்னர் ஆட்சிக் காலம். தமிழ்நாட்டில் திரு பி.டி.தவே, திரு எஸ்.ஆர்.சுப்ரமண்யம் ஆகிய இருவர் கவர்னரின் ஆலோசகர்களாக இருந்தார்கள் அந்நேரம். அப்பொழுதுதான் டி.என்.பி.எஸ்.ஸி. ரிசல்ட் வந்தது. 1976. முதன் முறையாக நாளிதழில் க்ரூப் 4-ன் ரிசல்ட்களை வெளியிட்டது அரசு. நம்பிக்கையோடு என் எண்ணைத் தேடினேன். கிடைத்தது. அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். என் விடா முயற்சிக்குக் கிடைத்த வெற்றி அது. ஸ்டெனோகிராபர் அப்பாய்ன்ட்மென்ட் கைக்கு வந்தது.
சாதாரண அறிவுள்ளவன்தான் நான். சராசரிக்கும் கீழானவன். ஆனால் என்னை உயர்த்தியது எனது உழைப்புதான். நம்பிக்கையோடு முடியும் என்று எண்ணி இறங்கி அதற்காகக் கடுமையாக உழைப்பது என்பது என் பழக்கமாய் இருந்தது. அது என் குணாதிசயங்களில் ஒன்றாகப் படிந்திருந்தது.  
கால் காசானாலும் கவர்ன்மென்ட் காசு. அரைக் காசானாலும் அரசாங்கக் காசு….
அது கைக்கு எட்டாமல் போய்விடுமோ என்று நான் பயந்ததுதான் எனக்கு ஏற்பட்ட வெறி.  எனது உழைப்புக்கும் வெற்றிக்கும் காரணம் அந்த பயம் தந்த வெறிதான்.  வெறும் எஸ்.எஸ்.எல்.சிக்கு இதுபோதாதா? போதும்தான். அது எப்படி வெறும் எஸ்.எஸ்.எல்.சி ஆகும். அப்பா அதற்காக எவ்வளவு உழைத்து தன் வியர்வையைச் சிந்தியிருக்கிறார். அது இமாலய சாதனையல்லவா? அதை அத்தனை சுலபமாய்ச் சொல்லி விட முடியுமா? அவர் உழைப்பை மதிக்காமலா?
சம்பாத்தியத்திற்கு ஒரு நிரந்தர வேலையைத் தேடி, வீட்டிற்கு உதவுபவனாய் வாழ வேண்டும் என்கிற வெறியே என்னை அங்கு கொண்டு நிறுத்தியது.
வாங்கும் சம்பளத்தில் மிகச் சிறு தொகையை என் செலவுக்கு வாங்கிக் கொண்டு மீதியை அப்படியே அம்மாவிடம் கொடுத்து விடுவேன். எனக்கு அது போதும் என்று நினைத்தேன். அதிக பட்சம் என் செலவு ஒரு சினிமா. சில பத்திரிகைகள். வேறு மாதிரிக் கன்னா பின்னாவென்றெல்லாம் செலவு செய்யத் தெரியாதவன். அதிகமாய்க் காசு கையிலிருப்பதை இடைஞ்சலாய் உணர்பவன். பொறுப்பு விட்டது என்று அம்மாவிடம் கொடுத்து விடுவதே என் வழக்கமாய் இருந்தது.
திருமணம் ஆன பின்னால் என் மனைவி கேட்டாள். ஏதாவது சேமிப்பு வச்சிருக்கீங்களா?   உதட்டைப் பிதுக்கினேன் அவளிடம்…..!!!!
                    ------------------------------------------------



02 டிசம்பர் 2018

என் இசை ரசனை



         








          





 




சின்ன வயதில் சினிமாப் பார்க்கும் பழக்கம் எனக்கு அதிகம் இருந்தது.  . வாரம் தவறினாலும் சினிமாப் பார்ப்பது தவறாது. அதிலும் குறிப்பாக நடிகர்திலகத்தின் படங்கள் என்றால் தவறவே விட மாட்டேன்.வீட்டுக்குத் தெரிந்து பார்ப்பது. தெரியாமல் பார்ப்பது என்று இப்பழக்கம் தொடர்ந்தது.அதனால் படிப்பிலும் கோட்டை விட்டேன். வாசிப்பவர்கள் மனதில் தோன்றும் இக்கேள்விக்குப் பதில்  சொல்லாமல் இருந்தால் எப்படி?
            நான்  நடிகர்திலகத்தின் தீவிரமான ரசிகன். அவரது கட்டபொம்மன் வசனம் - அதுதான் ஜாக்சன் துரையைச் சந்திக்கும் கட்டம் - அப்படியே எனக்கு மனப்பாடம். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் இவ்வசனத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்பார்கள் சிலர். ஒன்றிரண்டு முறை அதுவும் நடந்திருக்கிறது.
பேசு...சும்மாப் பேசு...என்று பெரியண்ணா  வற்புறுத்துவான். எனக்கு கூச்சம் அதிகம். அந்தக் கூச்சத்தோடேயே ஒரு முறை அவ்வசனம் முழுவதையும் பேசி முடித்ததாக நினைவு.அந்தக் கூச்சம் இன்றுவரை தொடர்கிறது.
             சா்வீசில் இருக்கும் காலத்தில் கூட பெண் பணியாளர்களை நேருக்கு நேர் பார்த்ததில்லை நான். அங்கும் இங்குமாக நோக்கிக் கொண்டேதான் பேசுவேன். கூச்சம் ஒழுங்கின் அடையாளம் என்கிற வகையில் அதன் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு.
            இன்று நான் எழுத்தை எனது பொழுதுபோக்காக, பழக்கமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதற்குக் கூட அது ஒரு காரணமாக இருக்கலாம். யாரையும் முகம் கொண்டு பார்க்க வேண்டாமே...! பேப்பரும், பேனாவுமோடு தனிமை கிடைத்தால் போதுமே...! (இப்போது கணினி) .
         கொஞ்சம் குரலுமுண்டு எனக்கு. கொஞ்சும் குரல்  அல்ல. டி.எம்.எஸ்.மாதிரி அப்டியே பாடுறியே என்று சொல்லியிருக்கிறார்கள் நண்பர்கள் சிலர். புகழுரைதான். பஞ்சாயத்துப் பள்ளியில் படிக்கும் போது வகுப்பில் பாடச் சொல்வார்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தெரிந்ததைச் செய்து காட்ட வேண்டும். என்னைப் பாடச் சொல்லியபோது நான் “சத்தியமே...லட்சியமாய் கொள்ளடா....தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா...” என்ற பாடலைப் பாடினேன். அந்தப் பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நீலமலைத் திருடனில் குதிரை மீது பவனி வந்துகொண்டே நடிகர் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார். வெற்றிப்படம் அது. சபாஷ் என்று டீச்சர் சொல்ல .... எல்லோரும் கை தட்டினார்கள்.
           அப்பொழுதே எனக்குக் கொஞ்சம் சங்கீத ரசனை உண்டு. சினிமாப் பாடல்களிலேயே கர்நாடக சங்கீத ராகங்களில் போடப்பட்ட பாடல்கள் என் மனதை ஈர்த்தன.  அது கர்நாடக சங்கீத ராகம் என்று அப்போது எனக்குத் தெரியாது.
              திரு ஜி.ஆர்.ராமநாதன் இசை அமைத்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நாலைந்து இசைக் கருவிகளைக் கொண்டே காலத்துக்கும் அழியாத பாடல்களைத் தந்தவர் அவர்.
             குறிப்பாக சிவாஜி பானுமதி நடித்த அம்பிகாபதி படத்தின் அரசவைப் போட்டிப் பாடல் காட்சி....சிந்தனை செய் மனமே....என்று துவங்கும் கல்யாணி ராகப் பாடல்...என்னை மிகவும் கவர்ந்தது. அதில் நடிகர் திலகம் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அழகும், கண்மூடி இறைவனைத் துதித்துக் கொண்டு பாட ஆரம்பிக்கும் பாங்கும், பாடலின் ஒவ்வொரு வார்த்தைக்கும், வரிக்கும் அவர் வாயசைக்கும், நாக்கு அபிநயிக்கும்  அழகும்....காணக் கண்கொள்ளாக் காட்சி. நூறென்ன...ஆயிரம் கூடப் பாடுவேன்...என்கிற தன்னம்பிக்கை மிளிற, ஆசை ஆசையாய்ப் பாடுவார்....கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நூறாகி விடும் அமராவதிக்கு. எழுந்து முகம் காட்டிவிட, சிருங்கார ரசம் பாடி விடுவார் அம்பிகாபதி..
.            இங்கே ஒட்டக்கூத்தரான நம்பியார்தான் மகாவில்லன். 3 சோழ மன்னர்களின் அரசவையில் ஒரு இலக்கியவாதியாகத் திகழ்ந்தமையும், மன்னனின் குழந்தைகளைப் பாதுகாத்த பெரும் பொறுப்பையும் ஏற்றவர் என்பதுதான் ஒட்டக்கூத்தருக்கான பெருமை. ஆனால் இந்தப் படத்தின் ஒரு காட்சியின் தீவிரம், நம்பியார் ரூபத்தில் ஒட்டக்கூத்தரையே காலத்துக்கும்   பழிவாங்கிவிட்டது . 
          அம்பிகாபதியின் தந்தை கம்பர் பெருமானாக எம்.கே.ராதா நடித்திருப்பார். விழுந்து வணங்க வேண்டும் போலிருக்கும் அவரைப் பார்க்கையில். அதிலும் அவரது குரல் ரொம்பவும் நம்மை உருக வைக்கும். தொண்ணூற்று ஒன்பதுதான் ஆகியிருக்கிறது....என்று ஒட்டக்கூத்தர்  பழியோடு எழுந்து நிற்க....போட்டியில் தோற்றான் அம்பிகாபதி என்று முடிவு  சொல்ல, காத்திருந்த மன்னர் கடூரமாக வெறுப்பை உமிழ, அந்தக் கட்டத்தில் கம்பரான எம்.கே.ராதா பதறும் பதற்றம் இருக்கிறதே...அதை வார்த்தைகளில் சொல்லி மாளாது...மன்னரிடம் மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடுங்கள் என்று கெஞ்சிக் கதறும் காட்சி, .  பார்க்கும் நெஞ்சையெல்லாம் உருக்கி விடும். 
          இட்ட அடி நோக...எடுத்த அடி கொப்பளிக்க....என்று ஒரு காட்சியும் உண்டு இப்படத்தில். வட்டில் சுமந்து மருங்கசைய...என்று அம்பிகாபதி பாட...மகனின் மன நிலையை உணர்ந்த கம்பர்....பயந்து போய்....பழி வந்துவிடுமோ என்று அஞ்சி....சரஸ்வதி தேவியை வணங்கி...கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று....கூவுவார்.....என்று அதைத் தொடர....பொறிக்கும் வெயிலில் கொட்டிக் கிழங்கைக் கூடை நிறையச் சுமந்து  கொண்டு சரஸ்வதி தேவியே ஒரு கிழவி ரூபத்தில் அங்கே நுழைய.....இறையருள் மிகுந்த அந்தக் காட்சியை எவரும் மறக்க முடியாது..அந்தக் காட்சிக்குத் தேர்வு செய்து போட்டிருக்கும் கிழவி, வெள்ளையுடையோடு அவர் வந்து நிற்கும் காட்சி- மெய் சிலிர்ககும். ..கம்பர் நிம்மதிப் பெருமூச்சு விடும் அந்தக் கணம்....நம் மனதும்...அப்பாடி...அம்பிகாபதி காப்பாற்றப்பட்டான் என்று அவனது தந்தை கம்பருக்காகக் கனிந்து நிற்கும். 
கர்நாடக இசை சினிமா மூலம்தான் எனக்குப் பரிச்சயமானது. அதிலிருந்துதான் அசலுக்கு வந்தது. 
             எங்களூர் வத்தலக்குண்டில் நாங்கள் குடியிருந்த வாடகை வீட்டிற்கு ரெண்டு வீடு தள்ளி ஒரு பணக்காரக் குடும்பம் இருந்தது. அந்தக் காலத்தில் டிரான்சிஸ்டர் வைத்திருந்தால் அவர்கள் பணக்காரர்கள். அந்த வீட்டுக்காரர் தினமும் ராத்திரி ஒன்பதே முக்கால் மணிக்கு டெல்லி வானொலியைத் திருகி விடுவார். அதிலிருந்து கர்நாடக சங்கீதம் வழிந்து கொண்டிருக்கும்.கம்பி அழி போட்ட நீண்ட திண்ணையில் லைட்டை அணைத்து விட்டு, தெரு விளக்கின் மெல்லிய வெளிச்சம் படர்ந்திருக்க, இருட்டில் தரையில் படுத்துக் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கண்ணை மூடி  ரசித்துக் கொண்டிருப்பார் அவர். விடாமத் தெனமும் கேட்கிறாரே....என்று கவனித்து அடுத்த ரெண்டாவது வீடான எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தெருவிளக்கின் படிப்பிற்கிடையே நானும் அந்த இசையை உன்னிப்பாகப் பல சமயம் கவனித்திருக்கிறேன். நீண்ட ஆலாபனைகள் அப்போது எனக்குப் பெரும் அலுப்பைத் தரும். இப்டி இழுத்திட்டிருந்தா...எப்பத்தான் பாட்டை ஆரம்பிக்கிறது....என்று நினைப்பேன். எப்டித்தான் இதையெல்லாம் ரசிக்கிறாங்களோ என்றும் நினைத்திருக்கிறேன். 
          அந்த அமைதியான பொழுதில் ஆரம்பத்தில் என்னை ஈர்த்தது வயலின் இசைதான். ஆலாபனைக்குப் பின்னே அப்படியே நெறி தவறாமல் அதில் இழைகிறதா என்று கவனிக்க ஆரம்பித்தேன். பிறகு காலப் போக்கில்தான் பாடலில் ஆர்வம் வந்தது. இன்னொன்று....அப்போதும் மிருதங்கத்தின் தனி ஆவர்த்தனம் எனக்குப் பிடித்தமானதாய் இருந்தது. கச்சேரியில் பலரும் எழுந்து கான்டீனுக்குப் போகும் நேரம் அது. தனி ஆவர்த்தனம் முடிவதற்குள் ராத்திரி டிபனை முடித்து வந்து விட்டால் பிறகு துக்கடா கேட்பதற்கு ஏதுவாகும் என்று புறப்பட்டு விடுவார்கள். 
              மிருதங்க வித்வான்களின் மனசு என்ன பாடு படும் என்று வருத்தமாய் இருக்கும் எனக்கு. ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை என்றுதான் தோன்றுகிறது.  பாடகரின் , அல்லது வயலின் வித்வானின் தாளத்திற்கேற்ப, கன கச்சிதமாக வாசிப்பதிலேயே கவனமாய் இருப்பார். வெளுத்து வாங்கும் எத்தனையோ வித்வான்களின் தனி ஆவர்த்தனத்தைக் கேட்டு மிரண்டு போயிருக்கிறேன் நான். பாடகர் மூன்று மணி நேரம் பாடிச் சம்பாதிக்கும் பெயரைத் தனக்குக் கிடைத்த அந்த  அரை மணி நேரத்தில் தனதாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம், அர்ப்பணிப்பு பலருக்கும் உண்டு. 
                 பெரிய பாடகராக வேண்டும் என்பதுதான் என் மனமார்ந்த ஆசை. வறுமையின் பிடியில் அது சாத்தியமில்லாமல் போயிற்று. இந்த வயதில், இந்த ஜென்மத்தில்  ஆழ்ந்த ரசனையோடு நின்று போயிற்று. 
                இப்போதும் மொட்டை மாடியில் நடந்து கொண்டே நானாக வாய்விட்டுப் பாடிக் கொள்ளும் பொழுது சுற்றிலும் வெகுதூரத்திற்கு என் பாடலைக் கேட்க  ஜனத்திரள் மிகுந்திருப்பதாகக் கற்பனை செய்து கொள்வேன். தினமும் இப்படி நினைத்துக் கொள்வதில் அப்படி ஒரு ஆத்ம திருப்தி எனக்கு. 
                 நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு சஞ்சய் சுப்ரமண்யன்....!!! 
                                                 --------------------------------

01 டிசம்பர் 2018

எடை போடுபவன் - பத்தி









எடை போடுபவன்
               ங்கள் தெருவில் தினமும் காலையில், பொழுது விடிந்தவுடனேயே...அதாவது ஏழு மணியைப் போல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்....இதை ஏன் பொழுது விடிந்தவுடனேயே என்று சொல்கிறேனென்றால் அந்த நேரம் அவனைப் பொறுத்தவரை பொருந்தாத நேரம்...மற்றும் வீடுகளிலுள்ளோருக்கும் சற்றும் பொருந்தி வராத நேரம்...ஆனால் இதையெல்லாம்  பொருட்படுத்தாது (அல்லது அவனின் மனதில் தோன்றவேயில்லையோ என்னவோ) நியமமாகத் தினமும் அவன் வந்து கொண்டேயிருப்பான். என் பிழைப்பு அது...என்னை என்ன செய்யச் சொல்றீங்க... என்பதாய். 
                 பேப்பர்...பேப்பர்....பழையபேப்பர்...பிளாஸ்டிக்....இரும்பு......என்று விடாது கத்திக் கொண்டே வருவான். தெரு ஆரம்பத்தில் நுழைகிறான் என்றால் தெருக் கடைசியில் இருக்கும் எங்கள் வீட்டுக்குள் கேட்கும் அந்தச் சத்தம். அவன் வருகையை வைத்து நேரம் குறித்துக் கொள்ளலாம். எனக்குத் தெரிய அந்த நேரத்தில் அவனிடம் யாரும் பழைய பேப்பர் எடுத்துப் போட்டதாய்த் தெரியவில்லை.  அப்படி உண்டென்றால் அவன் அத்தனை சீக்கிரம் தெருக் கடைசியை அடைந்திருக்க முடியாது. 
                     காலை நேரத்தில் எல்லோரும் வீட்டு வேலைகளில் கவனமாய் இருப்பார்களே...பழைய பேப்பர், சாமான்களை ஒழிப்பதிலா கருத்தைச் செலுத்துவார்கள்? இது அவனுக்குத் தெரியாதா? இந்த நேரத்தில் போனால்  வியாபாரம் போணியாகாது என்பதை  உணர வேண்டாமா?
                            பெரும்பாலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களைத்தான் வீட்டிலுள்ளோர் இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுப்பார்கள். அதுவும் கூடக் கடந்து போய்விடக்கூடும். இனி இடமில்லை என்கிற நிலையில் அடைத்து அடைத்து வைத்து, அவர்களுக்கே பொறுமை கழன்று  என்றேனும் ஒருநாள் திடீரென்று இந்தக் குரல் கேட்டு விழிப்புற்று தூக்கிக் கொடுத்து  இடத்தைக் காலி செய்து விடுவதும் உண்டு. 
                               பேப்பர்...பேப்பர்....பழைய சாமான்...இரும்பு....பழைய துணி....பால் பை....என்று இடைவிடாது கத்திக் கொண்டே வருவான். காது கிழிவது போலிருக்கும் அவன் சத்தம். ஆனாலும் பிழைப்பைப் பார்த்தாக வேண்டுமே....அவன் பாடு அவனுக்கு.
                                    ஏங்க...இந்த நேரத்துல வர்றீகளே...வீட்டு வேலைய விட்டிட்டு இந்தக் காலை நேரத்துல யாராவது பழைய பேப்பர எடுத்துப் போட்டிட்டிருப்பாங்களா...? ஒரு பதினோரு மணி...மதியம் ரெண்டு மணிக்கு மேலேன்னு வந்தீங்கன்னா....உங்களுக்கு    லாபமா இருக்கும்....இப்ப யாரும் போட மாட்டாங்களே...?
                            அவன் கேட்டதேயில்லை. அந்தத் தெருவில் நுழைந்து மீண்டால்தான் ராசியோ என்னவோ...? வேறு சிலரும் வரத்தான் செய்கிறார்கள். வேறு நேரத்தில்....அந்த நுட்பம் இவனுக்கு மட்டும் தெரிவதில்லை. எடை போடுபவனுக்கு வீட்டு வாசிகளின் மனங்களை எடை போடத் தெரிய வேண்டாமா?
                                 சார்...பேப்பர்...பழைய பேப்பர் இருக்குங்களா....உடைஞ்ச ப்ளாஸ்டிக் சாமான்...இரும்பு..... - என்னிடமும் கேட்டிருக்கிறான். தலை தெரிந்தால் கேட்டு விடுவான். உண்மையைச் சொல்கிறேன்...நான் ஒரு நாள் கூட அவனிடம் போட்டதில்லை. 
                            சார் நம்பகிட்டப் போட்டு ரொம்ப நாளாச்சு.... - என்பான் . என்றோ இவனிடம் போட்டிருப்போமோ...என்று யோசிப்பேன் . இப்படிச் சொல்வது அவன் பண்பாடு போலும்....
  கடையில் ஒரு சாமான் வாங்கச் சென்றால், அது இல்லையென்றால்....இல்லைஎன்ற வார்த்தையைச் சொல்ல மாட்டார்கள்....தீர்ந்திருச்சு என்று கூடச் சொல்வதைக் கேட்க முடியாது.  வரணும் சார்...என்பார்கள்...இல்லையென்றால் சாயங்காலம் வாங்க சார் என்பார்கள்....ஆர்டர் போட்டிருக்கு என்று சொல்வதும் உண்டு....ஆனால் தங்கள் கடையில் ஒருவர் கேட்கும் பொருள் இல்லை என்று யாரும் சொல்வதில்லை. அது ஒரு வகைப் பண்பாடு....வியாபாரம் பெருக வேண்டும் நிலைக்க வேண்டும் என்று நல்ல வகையில் மட்டுமே நினைக்கத் தெரிந்தவர்கள். அப்படித்தானே விரும்ப முடியும்.  
                    அதுபோல....அவன் “ரொம்ப நாளாச்சு“ என்றுதான் சொல்கிறான்.  என்னிடம் போட்டதேயில்லை என்று ஒரு முறை கூடச் சொன்னதில்லை.   இந்த உலகத்தில் எவரிடமிருந்தும் நாம் எதையும் கற்றுக் கொள்ள முடியும். எங்கேனும் ஒரு சின்ன ஸ்பார்க் நமக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். 
அவனுக்கு நான் ஒரு வழி செய்தேன். என்னாலான உதவி.... மனதோடு செய்த அது அவனுக்குப் பெருகியது....இன்று அவன் இந்த வியாபாரத்தில் பெரிய கில்லாடி. 
அது எனக்கு ஒரு கதையானது.   “முதல் போணி“         
                           

உஷாதீபன் ஓவியமாய்....