25 மே 2025

 

சிறுகதை      “ஒரு சொல் கொல்லும்”    தினமணி கதிர்-25.05.2025  பிரசுரம்





சிவநேசன் தன் அறையில் அமர்ந்து கொண்டு ஜன்னல்வழி  வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். குறிப்பிட்டு ஒன்றைப் பார்க்கிறோம் என்றில்லாமல் அங்கும் இங்குமாக அவர் பார்வை அலைந்து கொண்டிருந்தது. அது தன் நிலையற்ற மனதைக் குறிப்பதாக அவருக்குத் தோன்றியது. ஒரு தண்ணீர் லாரி வர, எதிரே ஒரு பள்ளி வாகனம் கடக்க முயன்று தயங்கியது. அதற்குள் இரண்டு மூன்று ஆட்டோக்கள், டூ வீலர்கள், ஒரு வேன் என்று சேர்ந்து விட்டன.  உள் ஒடுங்கிய இந்தப் பகுதியிலேயே இவ்வளவு நெரிசல் என்றால் மெயின் ரோடில் எப்படியிருக்கும் இந்நேரத்தில் என்று நினைத்துக் கொண்டார்.

இத்தனை டிராஃபிக்கையும் கடந்துதான் நேற்று அங்கு சென்றது என்பதை நினைத்தபோது, எதற்காக அப்படித் திடீரென்று சென்றோம் என்று நினைக்கத் தலைப்பட்டார். எத்தனையோ விஷயங்களை யோசித்துச் செய்தாலும், சில சமயங்களில் சில விஷயங்களில் வழுக்கி விடுகிறோம். ஏதோவொரு உற்சாகத்தில் அல்லது எதையுமே யோசிக்காமல், தன் நிலை மீறி ஒன்று நடந்து விடுகிறது.

அது அப்போதைக்கு அசட்டு உற்சாகத்தை அளித்து திருப்தி கொள்ளச் செய்கிறது. பிறகுதான் அதை ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கிறது. மறுக வைக்கிறது.  ஒரு அல்ப சந்தோஷத்திற்குப் பலியாவதைப் போல, மூளையை அடகு வைப்பதைப் போல அபத்தம் வேறு எதுவுமில்லை.

அவரவர் இயல்புக்குப் பொருந்தாத ஒரு விஷயத்தில் தலையைக் கொடுப்பதுபோல் ஒரு முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை. எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக அதன் தாக்கத்தில் நாமும் அறிந்தோ அறியாமலோ அதற்குப் பலியாகிவிடுகிறோம்.

போயும் போயும் ஒரு காப்பி சாப்பிடுவதற்காக அங்கு செல்வார்களா? அப்படி என்ன நாக்கு ருசி இழுக்கிறது அடக்க மாட்டாமல்? காரில்தானே செல்கிறோம் என்கிற குஷியா? அல்லது பையன் அழைத்துவிட்டானே என்கிற உள்ளூரத் தோன்றிய சந்தோஷமா?

அவன் எங்கே அழைத்தான்..தான் அல்லவா வாயிழந்து சொன்னோம்? புறப்படும்போது “கிளம்புப்பா…” என்றானே…அது விரும்பிச் சொன்னதா அல்லது தொலையுது என்று சொல்லி வைத்தானா?

நான் போய் லாகின் பண்ணிட்டு சைன் போட்டுட்டு வந்திடறேன். இந்தா…என்று அவன் காப்பி டோக்கனை நீட்டிய போது…இந்த வயதில் இது தேவையா? என்று ஒரு கணம் மனதில் தோன்றியதே…அதுதான் சரியோ? தேவையில்லாமல் தனக்குத்தானே மனதுக்குள் மகிழ்ந்துகொண்டு விச்ராந்தியாகக் கிளம்பி வந்துவிட்டேனோ? அவனுக்குப் பிடிக்கவில்லையோ? அத்தனை சுதந்திரமாகக் கேட்டிருக்கக் கூடாதோ? அந்த உரிமை எடுத்தது தவறோ?

ஏனோ அன்றைய காஃபி அவருக்கு ருசிக்கவில்லை. எப்பொழுதும் அவருடன் உட்கார்ந்து அவனும் காப்பி குடித்துவிட்டுத்தான் சேம்பருக்குள் செல்வான். நேற்று ஏன் தனக்கு மட்டும் டோக்கனைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டான். அதுவே அவருக்கு உணர்த்தியதோ?

எந்தக் கணமும் நிதானம் தவறக் கூடாது என்று நினைத்துக் கொள்பவர்தான். ஆனால் சமயங்களில் பிசகிப் போகிறது.

ப்பா….! 

என்ன இது இத்தனை சத்தமாக வருகிறது குரல்….? -சந்துருவா இப்படி அழைக்கிறான்? சற்றே ஆச்சரியமாகத்தான் இருந்தது சிவநேசனுக்கு.

அறைக்குள்ளிருந்து அவன் காதல் மனைவி மல்லிகாவும் திரும்பிப் பார்க்கிறாள். யாரை?…அவரை….! அவன் என்ன கேட்கப் போகிறான் என்பதை அவளும் அறிவாளோ? ராத்திரி என்ன பூஜை நடந்ததோ?

அப்படியானால் அவளும் எதிர்பார்த்துத்தான் இருக்கிறாள் – என்ன இது புதுவித நாடகம்?

தன் அப்பாவிடம் வாழ்நாளில் ஒரு முறை கூட… தான் இப்படிக் குரலெடுத்துப் பேசியதில்லை என்பதை நினைத்துக் கொண்டார் சிவநேசன். பேசுவதென்ன…எதிரே நின்றதேயில்லைதான். அந்த மரியாதையும் மதிப்புமே வேறு ரகம்.இப்போது அவர் பிள்ளை அந்த எல்லையைத் தாண்டியிருக்கிறான்.

என்னப்பா…? என்றார் அவனைத் திரும்பிப் பார்க்காமலே….

நேத்து நீ ஏன்ப்பா எங்க செக் ஷன் மானேஜர்ட்ட அப்படிச் சொன்னே?

இதென்ன புதுக் கேள்வியாய் இருக்கிறது? எதிர்பாராத கேள்வி. அவனுக்காய்த் தோன்றிய கேள்வி. இவர் நினைத்தே பார்க்காத கேள்வி.  ஒரு யதார்த்தத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறான்.

எப்படிச் சொன்னேன்? – புரியாமல் கேட்டார் சிவநேசன்.

அதாம்ப்பா….கலெக்டர் ஆபீஸ்ல கிளார்க்கா இருந்து ரிடையர்ட் ஆனேன்னு சொன்னியே…? அந்தக் கண்றாவியைத்தான் கேட்கிறேன்…

ஒரு கணம் ஆடிப் போனார் சிவநேசன். கண்றாவியாமே? என்ன பேச்சு இது?

ஆமாம்…சொன்னேன்…அதுக்கென்ன இப்போ….?

அது ஏம்ப்பா அப்படிச் சொன்னே? கவர்ன்மென்ட் சர்வீஸ்லருந்து ரிடையர்ட் ஆனேன்னு பொதுவாச் சொல்ல வேண்டிதானே? இதுகூடவா தெரியாது?

                  இப்படிச் சொல்ல வேண்டிதானே என்று அவன் கேட்டது கூடப் பரவாயில்லை. ஆனால் அடுத்தாற்போல் சொன்னானே? இது கூடவா உனக்குத் தெரியாது என்று. அதைத்தான் இவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

                   திரும்பி அவனை ஒரு முறை முறைத்தார் சிவநேசன். என்னடா வார்த்தையெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு? – என்றார்.

                    இதிலென்னப்பா தப்பு இருக்கு? பொத்தாம் பொதுவாச் சொல்லிட்டுப் போக வேண்டிதானேன்னு சொல்றேன். நீ கிளார்க்கா இருந்தியா, அக்கௌன்டன்டா இருந்தியான்னா அவுங்க கேட்டாங்க…? கவர்ன்மென்ட் சர்வீஸ்னா முடிஞ்சி போச்சு….!

                 கிளார்க் என்று சொன்னது தப்பாய்ப் போயிற்றா? கௌரவக் குறைச்சல் ஆகிப் போனதோ அய்யாவுக்கு?

                     எழுபது வயது எட்டப் போகும் தனக்கு  இவன் சொல்லித் தருகிறான். என் புத்தியை செருப்பால அடிக்கணும். எல்லாம் அந்தக் காப்பி ஆசையினால் வந்தது. நினைத்துக் கொண்டார்.

அவர்கள் ஐ.டி. கம்பெனி கான்டீனில் காப்பி இவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று இவர் எதிர்பார்க்கவேயில்லை. பிரம்மாண்டமாய் இருந்தது அந்த வளாகம். ஊரே உள்ளுக்குள் இருந்தது. ஒரு பில்டிங்கிலிருந்து இன்னொன்றுக்குப் போகப் பாலம் கட்டியிருந்தார்கள். லட்சம் பேருக்கு மேலே வேலை பார்ப்பாங்க போல்ருக்கு என்று பிரமித்தார் இவர்.  புறப்பட்டு வந்ததே தப்போ என்று கூட ஒரு கணம் தோன்றியது. அந்த இளைஞர்கள், இளைஞிகள் கூட்டத்தின் நடுவே முதிர்ந்த கிழமாய்த் தான் போவதே கூச்சத்தை அளித்தது இவருக்கு. தெரியாத்தனமா வந்துட்டமோ?

அந்த மாதிரிக் காப்பி குடித்து வருஷங்களே ஆயிற்று. சில லீவு நாட்களில் அவன் தன் மனைவியையும்   அம்மாவையும் கூட்டிக் கொண்டு கோயிலுக்குக் கிளம்பும்போது இவர் உடன் சென்றிருக்கிறார். கோயிலின் நீண்ட க்யூவில் நிற்க இவருக்குப் பொறுமை இருந்ததில்லை. இப்டி உட்கார்றேன்…நீங்க போய் தரிசனம் பண்ணிட்டு வாங்கோ…என்று ஒரு மூலையில் அமர்ந்து விடுவார். இருக்குமிடத்திலிருந்தே கோபுரத்தைப் பார்த்து ஒரு கும்பிடு…அத்தோடு சரி…அவர் பக்தி.

            இதுக்கு வந்தே இருக்க வேண்டாமே? – என்றான் ஒரு நாள் சந்துரு.

            நா நீங்க போயிட்டு வாங்கோன்னுதானே சொன்னேன். உங்கம்மாதானே வம்படியா என்னை இழுத்தா? எனக்கு இந்தக் கூட்டத்துல புகுந்து வெளில வரவெல்லாம் பொறுமை கிடையாது. அப்டியெல்லாம் கும்பிட்டாகணும்னு ஆசையும் இல்லை.  அதுக்குள்ளயும் ஒண்ணுக்கு நெருக்கும். உன்னைக் கூப்பிட முடியாது பாதில…எல்லா சந்நிதியும் நீங்க கும்பிட்டு முடிச்சு…வெளில கிளம்பற வரைக்கும் நான் அடக்கிண்டு அடில பிடிச்சிண்டு உட்கார்ந்திருக்க முடியுமா? அப்புறம் ஏதாச்சும் ஒரு ஓட்டலத் தேடிப் போகணும்…அவன்ட்ட வெறுமே டாய்லெட்டை யூஸ் பண்ண முடியுமா? ஒரு காப்பியைச் சாப்பிடணும்….எதுக்கு இந்தச் சங்கடமெல்லாம்? அதான் நான் வர்றதில்லை….நம்மால ஒருத்தருக்குச் சங்கடம் வேண்டாம்ங்கிறதுதான் இதோட தாத்பர்யம்….!

            அதற்குப் பிறகு அவன் அவரை அழைப்பதேயில்லை. சகதர்மிணி அழைத்தாலும் மறுத்து விடுகிறார் இவர்.  இந்த பாரு…என்னை வம்புல மாட்டி விடுறதே நீதான். உன்னைக் கூப்பிட்டா நீ கிளம்பிப் போ…நான் தடுத்தனா, இல்லேல்ல? …நான் தடுத்தாத்தான் நீ நிற்கப் போறியா?  என்னை ஏன் கூப்பிடுறே? எந்த எடத்துலயும், யாருக்கும் பாரமா இருக்க நான் விரும்பல…புரிஞ்சிதா?

            எல்லாச் சாமியையும் கும்பிட்டாச்சு…கும்பிட்டவரைக்கும் போதும்…இப்போ எனக்கு மனசுதான் சாமி. இதுதான் இவர் பதில். ஆனாலும் வெளியே கிடைக்கும் அந்தக் கள்ளிச்சொட்டான காப்பிக்காக ஏங்கியிருக்கிறார். மாதத்தில் சில நாட்கள் கிடைக்கும் அந்தக் காப்பி ருசி அவரைக் கலைத்துப் போட்டிருந்தது என்பதே சரி.

            அதே காப்பி ருசியில்தான் இப்பொழுதும் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். சிவனே என்று வீட்டில் இருந்திருந்தால் இப்பொழுது இந்தக் கேள்வி உண்டா? எல்லாப் பயலுகளுக்கும் பொண்டாட்டி முன்னே தைரியம் வந்து விடுகிறது. அது அவள் மீது பாய்கிறதா என்றால் இல்லை. அவளுக்குக் காண்பித்துக் கொள்ளும் விதத்தில் மற்றவர்கள் மீது பாய்வதுதான் விசேஷம். பஞ்சணை மந்திரம் என்பது அங்கங்கே பலிக்கத்தான் செய்கிறது.. ஆனால் அதற்கும் ஒரு தராதரம் வேண்டாமா? லிமிட் என்பது இல்லையா? புதிதாக வந்த அந்தப் பெண்ணிடம் இத்தனை ஆண்டுகளாய் உடனிருக்கும் அப்பன் இளப்பமாய்ப் போனேனா?

            நேற்றுப் பிறந்த இந்தப் பயல் எனக்குச் சொல்லித் தருகிறான்? ஏம்ப்பா கிளார்க்குன்னு சொன்னே என்று!  கிளார்க் என்று சொல்வது என்ன கேவலமா? கௌரவக் குறைச்சலா? எதைத்தான் கேவலம் என்று இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்?இவனாய்ச் சொல்கிறானா அல்லது அந்தப் பெண் சொல்லிக் கொடுத்ததா?  பிச்சையெடுப்பது, திருடுவது…இதுதானே உலகத்தில் கேவலம்.  குமாஸ்தா உத்தியோகம் எப்படி இவர்களுக்குக் கேவலமாய்த் தெரிகிறது?

            கவர்ன்மென்ட் ஆபீஸ்ல குமாஸ்தான்னா அது கேவலமாப் போயிடுச்சா…உனக்கு?அதுதாண்டா இத்தனை வருஷம் நமக்குச் சோறு போட்டிருக்கு…!

            அவன் சொல்றதுல என்ன தப்பு? அறுபது வயசுவரைக்கும் குமாஸ்தாவாவே இருந்து ரிடையர்ட் ஆனேள்னு அவங்களுக்குத் தெரியணுமா? அதான் பிரமோஷனே வேண்டாம், வெளியூர் போட்டுடுவான்னு  உள்ளூர்லயே கிடந்து குப்பை கொட்டியாச்சு. அந்தப் பெருமை நமக்கு மட்டும் தெரிஞ்சாப் போறாதா?  ஊருக்கே தெரிஞ்சாகணுமான்னு கேட்கிறான்…இதிலே தப்பென்ன இருக்கு சொல்லுங்கோ…? –

            தான் கேட்க வேண்டியதை அம்மாவே கேட்டு விட்டாள் என்று சந்துரு அவ்விடத்தை விட்டு அகன்றான்.  அவன் கேள்வி அவள் பதிலில் உறுதிப்பட்டு விட்டது போலும்…!

            கவர்ன்மென்ட் சர்வீஸ்னு சொன்னாப் போதுமேன்னு சொல்றாருப்பா…வேறொண்ணுமில்லே…! – அந்தப் பெண் மல்லிகாவும் தன் பங்குக்கு. இப்படிச் சொல்லிவிட்டு கொல்லைப் பக்கம் போய் விட்டது. அவனுக்கு சப்போர்ட் போலிருக்கு…நினைத்துக் கொண்டார் இவர்.

ருக்மணி பையனோடு சேர்ந்து கொண்டு கும்மியடிப்பது ஒன்றும் அவருக்குப் புதிதல்லதான். இதைச் சொல்லியிருக்காவிட்டாலும் அவள் அபிப்பிராயம் அதுவாய்த்தான் இருக்கும் என்று இவரால் ஊகிக்க முடியும்.

இந்தக் கிளார்க் சம்பளத்துலதாண்டி அவனை வளர்த்து ஆளாக்கி, படிக்க வச்சு, கல்யாணம் பண்ணி, இந்த வீட்டைக் கட்டி…

போதும் போதும் ஆரம்பிச்சிடாதீங்க…உங்களை யாரும் பொறுப்பில்லாதவர்னு சொல்ல வரலை….போற எடமெல்லாம் அதைச் சொல்லிக்க வேண்டாமேன்னு சொல்றான். நம்ம பையன்தானே…சொன்னாக் கேட்கப்படாதா?

நம்ம பையனாச் சொல்லியிருந்தாப் பரவால்லடி…அப்டித் தெரிலயே…. – இதைச் சொல்லத்தான் நினைத்தார். வாய் வரவில்லை. அதுக்கு இன்னொரு ஸ்பெஷல் யுத்தம் ஆரம்பிக்கும்.. ஆனாலும் ருக்மணி உணர்வாள் அவர் எண்ணங்களை. நம்ம பையனே ஆனாலும் அப்படிச் சொல்லலாமா? சொல்ல நினைக்கலாமா? அப்டியானா நாம அவனை சரியா வளர்க்கலேன்னு அர்த்தம்….! -இப்படித்தான் நினைக்க முடிந்தது அவரால்.

கல்யாணத்துக்கு சம்மதிக்கும்போது தெரிலயாமா கிளார்க் பையன்னு…? அவுங்க அப்பா வெறும் ஜோஸ்யர்தான். உட்கார்ந்து சாப்பிட்டவர்தான். கிராமங்களுக்குப் போய் காரியம் பண்ணி வச்சிட்டு, அரிசி,  பருப்பு, வாழைக்காய், தட்சிணைன்னு வாங்கிண்டு வந்தவர்தான்.  அவரென்ன உத்தியோகத்துக்கா போனார்? நல்ல ஃபேமிலியான்னுதானே பார்த்தோம்? வெறுமே ஜோஸ்யம் பார்த்துப் பிழைச்ச குடும்பம்னு நாமளா அந்தஸ்து குறைவாவா நினைச்சோம்? முடிச்சு வைக்கலை? இப்போ நான் கிளார்க்கா இருந்தது கௌரவக் குறைச்சலாப் போச்சாக்கும் அவங்களுக்கு?  என் முப்பத்தஞ்சு வருஷ சர்வீஸ்ல ஒத்தப் பைசா நான் லஞ்சம் வாங்கினதில்லை…மிஸ்டர் கிளீன்ம்பாங்க என்னை…அது கௌரவமா தெரிலயோ நம்ம பயலுக்கு? எல்லாம் போலிகளைக் கண்டு ஏமாறுகிற உலகம்….!

               மெதுவாப் பேசுங்கோ…அந்தப் பொண்ணு காதுல விழப் போறது…அப்புறம் தலைய விரிச்சுப் போட்டுண்டு ஆட ஆரம்பிச்சிடும்…சின்னஞ் சிறுசுங்க…ஏதோ பேசித்து…விடுங்க…!

இந்தப் பேச்செல்லாம் அவனாப் பேசலடி…அது சொல்லித்தரதாக்கும்…அப்டியும் இருக்கலாமே?  இவனா அப்படிக் கேட்கிற பையனில்லை…புதுப் பொண்டாட்டி மோகத்துல  புத்தி பிரண்டு கிடக்கு அவனுக்கு…!

            அனுபவமில்லாமே…என்னவோ உளர்றதுகள்.. விட்டுத் தள்ளுங்கோ…நாமளே ஈரப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்க வேண்டாம்…- வீட்டுல எப்பப் பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமா இருந்தா அண்டை அசல்ல என்ன நினைப்பாங்க…? விடுங்க…விட்டு ஒழிங்க….!  நாலு சுவத்துலர்ந்து சத்தம் வெளில போகப்படாது…

            விட்டு எங்க ஒழிக்கிறது? அப்டி ஒழிக்கணுமானா நாம தனியாத்தான் போகணும்…இது என் வீடு…நான் கவர்ன்மென்ட் லோன் போட்டுக் கட்டின வீடு…போகணுமானா அவுங்கதான் வெளில  போகணும்…சொல்லிடுவமா…நான் ரெடி…… - ஒத்தைக்கு நின்றார் சிவநேசன்.

ஆரம்பிச்சுட்டீங்களா? என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டாள் ருக்மணி.

            தன்மானத்தை உசுப்பி விட்டதாய் உணர்ந்தார் இவர்.. தன் தகப்பனார் காலம் பூராவும் ஓட்டலில் வேலை பார்த்துத்தான் தன் ஆறு பிள்ளைகளையும் காப்பாற்றினார் என்பதை ஊர் உலகம் பூராவும் பெருமையாய்ச் சொல்லியிருக்கிறார் இவர். எந்தவொரு இடத்திலும் அவர் ஓட்டல் தொழிலாளி என்பதைச் சொல்லக் கிஞ்சித்தும் இவர் தயங்கியதில்லை. பெருமையாய்த் தலை நிமிர்ந்துதான் சொன்னார். அதுபற்றிக் குறைவாய் நினைத்ததுமில்லை. அதைக் கேட்ட பலருமே பெருமையாய்த்தான் பேசியிருக்கிறார்கள். அப்பாவை உழைப்பாளி என்றும் வறுமையிற் செம்மையாகக் குடும்பம் நடத்தியவர் என்றும்தான் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். மனிதனை மனிதன் மதித்த காலம் அது. ஏழை பணக்காரன் என்ற ஏற்ற இறக்கமெல்லாம் இல்லாமல் கௌரவமானவனா, ஒழுக்கமானவனா, ஒழுங்காய்க் குடும்பத்திற்காக உழைத்துப் பாடுபட்டவனா, பெற்ற பிள்ளைகளைக் கரையேற்றியவனா என்று பார்த்துத்தான் மரியாதை செய்து பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.  

இவன் என்னடாவென்றால்…நேற்று முளைத்தவன்…இன்று என்னைப் பார்த்து இந்தக் கேள்வி கேட்கிறான்.  சொந்த புத்தி வேண்டாம்? சொல் புத்தியிலா ஆடுவது? சீர் தூக்கிப் பார்க்க வேண்டாமா? அவளே சொன்னாலும் இவன் யோசிக்க வேண்டாமா? சொல்லக் கூடாதது நாக்கு நுனிக்கு வந்தாலும் நிறுத்தத் தெரிந்தவன்தான் மனுஷன்.

            அடங்காமல் கொதித்துப் போய் அமர்ந்திருந்தார் சிவநேசன். அறைக்குள் போய் ஒடுங்க அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. இன்னும் இன்றைய விளையாட்டில் மீதம் இருக்கிறது என்பதாக அவர் மனம் எதையோ எதிர்நோக்கியது. தன் தந்தையின் கௌரவத்தில் மதிப்பில்லாதவன் என்ன பிள்ளை? அணிப்பிள்ளை, தென்னம்பிள்ளை?

            இருந்தாலும் நீ அப்படிச் சொல்லியிருக்க வேண்டாம்ப்பா …மொட்டையா, பொதுவாச் சொல்லிட்டுப் போலாமே…ஐ.ஸீ.ன்னு தலையாட்டிட்டு விடப் போறாங்க…அதுக்கு மேலே தோண்டவா போறாங்க?  -இப்படி அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனிடமிருந்து மறுபடியும் பதில் வரும் என்று இவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பெண்டாட்டி சொன்னதைச் சரிக்கட்டுகிறானோ?  திரும்பி அவன் முகத்தை இப்போதுதான் தீர்க்கமாய்ப் நோக்க முற்பட்டார் சிவநேசன். இதற்கு இவ்வளவு விளக்கம் தருபவனுக்கு, ஏதோ சொன்னார்…என்னவோ சொல்லிட்டார்…போகட்டும் என்று விட்டுவிடத் தெரியாதோ? அதை இப்படி எடுத்துப் பிடித்துச் சொன்னால்தான் மனசு ஆறுமோ? நல்ல பிள்ளைகளடா?

            ஆபீசுக்குக் கிளம்பும்போது ஷூவை மாட்டிக்கொண்டே சத்தமாகச் சொன்ன சந்துருவை நோக்கினார் இவர்.! இப்போது இது அவனாகப் பேசுவது என்றுதான் தோன்றியது. சற்று முன் சொன்னதை அதைப் பேசும் முன் யோசித்திருக்க வேண்டாமா? வாய் புளிச்சிதோ, மாங்கா புளிச்சிதோன்னு அவன் புதுப் பொண்டாட்டி கேட்டான்னா… கேட்டிருந்தா, காதுல வாங்கிட்டு கிளிப்பிள்ளை மாதிரியா என்கிட்டே வந்து அப்படியே பகருவான்? அறிவில்ல? அவளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவன் கடமையில்லையா? பதிலாக அப்படியே டிட்டோவாகத் தன்னிடமா வந்து ஒப்பிப்பது? முட்டாள்…! பொண்டாட்டிக்கு சின்சியரா இருக்காம் போல்ருக்கு…!!

            எஸ்.சந்துரு  B.E.(EEE) என்ற பளபளக்கும் நாமகரணத்தோடு கழுத்தில் அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தின் “பெத்தப் பெயரோடு“ ஐ.டி.கார்டு தொங்க  வாசலில் இறங்கப் போன அவனை நிறுத்தி சிவநேசன் கேட்டார் இதை.  மனதில் வெகு நாளாக நெருடிக் கொண்டிருந்த குறை. இதுவே தக்க சமயம்….

            படிச்சது இராமாயணம்…இடிக்கிறது பெருமா கோயில்னா  நீ ஒத்துக்குவியா? – உன் படிப்பையும் நீ பார்க்கிற கம்ப்யூட்டர் உத்தியோகத்தையும் சம்பந்தப்படுத்தித்தான்  கேட்கிறேன்…படிப்புக்கேத்த, அது சார்ந்த, கௌரவமான, தகுதியான வேலதானா? குறைவான கல்வித் தகுதியோட கம்ப்யூட்டரப் படிச்சுட்டு வந்த லட்சக்கணக்கான பேருக்கு நடுவுல ஒருத்தனாத்தான் நீயும் வேலை பார்க்கிறே…இது சரியா? இது போதுமா?  யோசிச்சிக்கிட்டே போ. தாத்பர்யம் புரியுதா பாரு…  ராத்திரி வந்து பதில் சொல்லு…அப்புறம் அதிலுள்ள ஓட்டையையெல்லாம் நான் சொல்றேன் - என்று விட்டுத் தன் அறையை நோக்கிப் போனார் சிவநேசன். அவரது மனம் சமனத்திற்கு வந்திருந்தது இப்போது.  பையன் சார்பாக தன் மனதிலிருந்த தாளாத குறையை சரியான சந்தர்ப்பத்தில் தக்க சமயத்தில் வெளிப்படுத்தி விட்டதாகவே அவர் உணர்ந்தார். வயசிருக்கே…இன்னும் எவ்வளவோ மேலே போகலாமே!  என்று அவர் மனம் ஆதங்கமாய்ச் சொல்லிக் கொண்டது.

            முகத்தில் கலவரத்தோடு ஸ்தம்பித்து நின்றான் சந்துரு. மற்ற இருவரின் முகங்களும் அவனையே வெறித்தவாறு  நோக்கியிருந்தன.

                                                ----------------------------------------------

           

 

 

           

 

             

 

             

கருத்துகள் இல்லை: