03 ஜனவரி 2021

சந்தித்தேன்-சிந்தித்தேன்-கவிஞர் கண்ணதாசன்-வாசிப்பனுபவம்-

சந்தித்தேன்-சிந்தித்தேன்-கவிஞர் கண்ணதாசன்-வாசிப்பனுபவம்-உஷாதீபன்             வெளியீடு:- கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை-17.


      2021-ம் ஆண்டில் நான் படித்த இரண்டாவது புத்தகம் இது. தடையில்லாமல் படித்துச் செல்வதற்கு, கவித்துவத்தோடு, மடை திறந்த வெள்ளமாய் எழுதிச் செல்லும் கவியரசர் கண்ணதாசன் புத்தகத்தை விட வேறு எது சிறந்ததாய் இருக்க முடியும்? அந்தக் கவிதை நடையும், கொஞ்சும் தமிழும், குழந்தை உள்ளமும், எல்லோரையும் நல்லவராய்ப் பார்க்கும் பண்பும், அரவணைத்துச் செல்லும் அழகும் அவருக்கு இந்த வாழ்க்கையில் சொல்ல ஏராளமாய் இருந்திருக்கிறது என்பதை நமக்குப் புலப்படுத்துகிறது. இவரைச் சந்தித்தேன், அவரைப்பற்றியே சிந்தித்தேன் என்று மடமடவென்று பலரைப்பற்றியும் பொழிந்து தள்ளியிருக்கிறார்.

      காலையிலும், மாலையிலும் இரவிலும் அவரைச் சந்திக்கவும், அவரோடு பேசவும், அவரிடம் உதவிகள் கேட்டுப் பெறவும் என்று ஏராளமான பேர்கள் காத்துக் கொண்டேயிருந்திருக்கிறார்கள். வி.ஐ.பி.க்கள் பலரும் இவரைத் தேடி வந்திருக்கிறார்கள். இவரும் அம்மாதிரிப் பலரைத் தேடிச் சென்றிருக்கிறார். செல்லுமிடமெல்லாம் செல்வந்தர்கள், வணிகர்கள், கல்வியாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகை நிருபர்கள், உதவி கேட்டு வருபவர்கள், சிபாரிசுக் கடிதம் வேண்டி நிற்பவர்கள் என்று பலதரப்பட்டவர்களும் கவிஞரை நேரில் சந்திப்பதில், உரையாடுவதில், நிகழ்ச்சிக்கு அழைப்பதில், விருந்துபசாரம் செய்வதில், கண்ணும் கருத்துமாகக் கவனித்து தங்குமிடம் ஏற்பாடு செய்து காவலாய்க் காத்திருந்து கவிஞர் முழுத் திருப்தி கொள்ளும் வகையில் பணிவோடும், அன்போடும் உபசரித்து உறவினரில் ஒன்றானவராய் சிறப்பித்து அனுப்பியிருக்கிறார்கள்.

      அப்படியான பலரையும் அவர்களின் நற்குணங்களையும், அரவணைப்பையும் நன்றியோடு நினைவு கூர்ந்து நினைவில் நின்றவர்களையெல்லாம் ஒருவர் விடாமல், ஏற்றத் தாழ்வு பார்க்காமல் தன் எழுத்தின் மூலம் சிறப்புச் செய்து தக்க பதிவுகளை முழு மனதோடு வழங்கி, எதிர்காலம் அறியும்படி செய்து, அத்தனை பேரின் அன்புக்கும் பாசத்திற்கும் உரியவராய் விளங்கியிருக்கிறார் கவிஞர்.

      சந்தித்த மனிதர்களைப்பற்றியெல்லாம் சிந்தித்து அவர்களின் நல்லவைகளைப் பதிவு செய்து, அதனின்று தான் எவ்வளவு பாடம் கற்றுக் கொண்டேன் என்றும், எத்தனையெத்தனை அனுபவங்களைப் பெற்றேன் என்பதையும், மனதில் எள்ளளவும் களங்கமின்றிக் குழந்தை உள்ளத்தோடு கவியரசர் விளக்கியிருக்கும் வரிகள், படிக்கும் நமக்கு மிகுந்த மதிப்பையும், மரியாதையையும் அவர் மீதும், அந்த மா மனிதர்கள்  மீதும் ஏற்படுத்துகின்றன.

      எவ்வளவு பண்பாடுடைய மனிதர்களெல்லாம் அப்பொழுது இருந்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது, இன்று அதனின்றும் இந்தச் சமுதாயம் எவ்வளவு மாறிப்போய் சீர்கெட்டுக் கிடக்கிறது என்று நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை.

      வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை எல்லாம் தான் தாங்கிக் கொண்டு இன்பங்களை எல்லாம் உடன் பிறந்தோருக்குப் பங்கு வைக்கும் சத்திய தேவதையாய் வாழ்ந்து கழித்த நடிகை டி.ஆர்.ராஜகுமாரியைப் பற்றி உருக்கமாய் நினைவு கூர்கிறார்.

      குடும்பப் பெண்ணாக நடித்தால் மயக்கம் தரக்கூடிய உருவம். குடும்பத்துக்காகவே வாழ்ந்து தன்னைக் கரைத்துக் கொண்டவர். எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை என்று நடிகை தேவிகாவைப்பற்றி மனமுருகத் தெரிவிக்கிறார்.

      அவர் முதலமைச்சராக இருந்தபோது சுவாமி ஐயப்பன் படம் வெளியானது. சோவியத் யூனியனுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த அவர், போகின்ற வேகத்தில் அந்தப் படத்திற்கு வரி விலக்கு உத்தரவு போட்டுவிட்டுப் போனார். அவர்தான் திரு.அச்சுதமேனன்....என்ற அரிய தகவலைத் தருகிறார்.

      நல்ல நண்பனாக ஒருவன் கிடைத்துவிட்டால் அவனை எந்த விலை கொடுத்தும் எம்.ஜி.ஆர். காப்பாற்றிக் கொள்வார். அவரை ஒழிக்க ஒருவன் முயல்கிறான் என்றால், அவர் முயற்சி செய்யாமலே  அவன் அழிந்து போகிறான். அவருடைய ஜாதகம் அசுர ஜாதகம். அந்த ஜாதகத்தோடு ஒட்டிக் கொண்டு விட்டதால் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அவர் நாடாளும் நல்லமைச்சராக ஆக முடிந்தது. இது திரு.ஆர்.எம்.வீரப்பன்பற்றி.

      ஏழு ஸ்வரங்களுக்குள் பாடலை நான் எங்கே கேட்டாலும் அப்படியே மெய்மறந்து நின்று விடுவேன். முறையான சங்கீதப் பயிற்சி உள்ளவர் என்பதால் எளிய கர்நாடகத்தில் வாணியின் குரல் ஒலிக்கும்போது அதன் சுகமே அலாதி. வாணியின் தோற்றத்தைப் பார்ப்பவர்கள் அவர் கலை உலகத்தில் இருப்பவராக நம்ப மாட்டார்கள். அழகானவர், திருத்தமானவர், குடும்பப் பாங்கானவர். அடக்கமும் அமைதியும் கொண்டவர் என்று பாடகி வாணி ஜெயராமுக்குப் புகழாரம் சூட்டுகிறார்.

      தமிழில் இலக்கண சுத்தமாக எழுதும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் என்று வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனை நினைவு கூர்கிறார்.

      விவேகானந்தரின் முகத்தைப் பார்த்த ராமகிருஷ்ண பரமஉறம்சர் சாரதாதேவியாரிடம் சொன்னாராம். சாரதா...நரேந்திரன் அதிக நாள் தாங்க மாட்டான்...அதுதான் எனக்கு சின்ன அண்ணாமலையைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றியது. ரத்தக் கொதிப்பு அதிகமாக உள்ளவர்கள் தலையில் தொடர்ச்சியாகப் பச்சைத் தண்ணீரைக் கொட்டக் கூடாது. கொதிப்பு ஏறிவிடும். அவர்கள் அருவியில் குளிக்கக் கூடாது...அதுதான் காரணமோ? என்று எண்ணி வருந்துகிறார்...சின்ன அண்ணாமலையின் அறுபதாம் நிறைவு விழா அப்படித்தான் முடிந்தது...என்பதை நாம் நினைவுக்குக் கொண்டு வருகிறோம்.

      இன்று தமிழ்ப்பட நட்சத்திரங்களில் பத்துக்கு ஒன்பதுபேர் அவரால் அறிமுகப் படுத்தப்பட்டவர்கள். ரஜினிகாந்த், கமலஉறாசன் உட்பட அகால மரணமடைந்த நடிகை Shoba உட்பட. பாலச்சந்தர் வெற்றியில் மயங்குவதில்லை.தோல்வியில் கலங்குவதில்லை. அக்கௌன்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்த பாலச்சந்தர், திரையுலகில் நுழைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை வாழ வைத்திருக்கிறார். எத்தனை பேர் நன்றியோடு இருப்பார்களோ தெரியாது என்கிறார்.

      இன்னும் வி.என்.சிதம்பரம், கடும் உழைப்பால் உயர்ந்த விஜயா வேலாயுதம் ஐயா, டாக்டர் உறண்டே, டாக்டர் சௌரிராஜன், வானதி திருநாவுக்கரசு என்று பலரையும் நினைவு கூர்ந்து புகழ்ந்துரைக்கிறார்.

      குறிப்பாக எம்.எஸ்.விஸ்வநாதனைப் பற்றிச் சொல்லும்போது ஊமைத்துரையின் கனவு என்று வருகிறதேண்ணே...அவன் வெள்ளைக்காரனா? என்று விகல்பமின்றிக் கேட்டதையும், காபூல் நகரில் தங்கி இருந்தபோது இங்கிருந்துதான் கஜினி முகம்மது நம் நாட்டின் மீது படையெடுத்தான் என்றபோது, யாரண்ணே கஜினி முகம்மது? என்று கேட்டதையும்...அவனுக்கு உயிர் மூச்சே இசை மட்டும்தான்...அதுதான் அவன் உலகம்....என்று நெக்குருகிச் சொல்கிறார்.

      வரிசையாக இருபத்தியேழு படங்கள் வெள்ளி விழாக் கொடுத்துவிட்டு, இப்பொழுதுதான் ஒரு சொந்தவீடு வாங்கியிருக்கிறார். அவருக்கு செய்யும் தொழிலே தெய்வம்....என்று தாசரி நாராயணராவைப்பற்றிப் பெருமையோடு பகிர்கிறார்.

      இப்புத்தகம் முழுக்க....ஒரே மூச்சில் படித்து முடிக்க மனம் மிகுந்த  ஆசையோடு பயணித்தது. இன்னும் பலரைப்பற்றியும், குறிப்பாக திரு.கே.வி.மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி, புஷ்பலதா, கனக சுப்ரமணியம், ஜவஉறர் மில் பழனியப்பா, திருமதி சௌந்தரா கைலாசம், சீனி.விசுவநாதன், எம்.பி.சுப்ரமண்யம், ராயவரம் வயிரவன் என்று பல வி.ஜ.பி.க்களையும், திருப்பதி வெங்கடாஜாபதி, குருவாயூரப்பன் என்று தரிசித்த அனுபவங்களையும் அவர் விதந்தோதியிருக்கும் விதம் படிக்க படிக்க எப்படிப்பட்ட ஒரு அற்புதமான மனிதரை, தெய்வீகக் கவிஞரை, அன்பு மனம் கொண்டவரை, பாசம் மிகுந்தவரை, தமிழ்நாட்டை, இந்த மக்களை, சினிமா உலகத்தை நேசித்தவரை நாம் சீக்கிரமாய் இழந்து விட்டோம் என்று நம் மனம் ஏக்கமுறுகிறது.

      கவிஞர் கண்ணதாசனின் இப்புத்தகத்திலுள்ள பத்திகள், தொடர்ந்து குமுதத்தில் எழுதப்பட்டவை என்று அறியப்படுகிறது. எத்தனை பதிப்புகள் கண்டது என்று சொல்வதற்கேயில்லை. இருபது பதிப்புகள் வரையிலான குறிப்புகள் புத்தகத்தில் காணப்படுகின்றன. இன்றைய தேதியில் அவை இன்னும் எத்தனை தாண்டி விற்பனையில் விஞ்சியிருக்குமோ? கல்கியின் பொன்னியின் செல்வனைப் போல, சாண்டில்யனின் நாவல்களைப் போல விற்பனையில் என்றும் உச்சமாய் ஜெயகாந்தனின் எழுத்துக்கு இருக்கும் மகிமையைப் போல, கவிஞரின் எழுத்தும் காலத்தால் மறக்கப்படாதது. மறக்கக் கூடாதது. அது என்றும்  வற்றாத ஜீவநதி என்று சொன்னால் அது மிகையாகாது.  

                              ----------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...