15 நவம்பர் 2020

“எதிர்வினை“ சிறுகதை பேசும் புதிய சக்தி, தீபாவளி மலர் 2020

                            “எதிர்வினை“      சிறுகதை        



       ப்பொழுதெல்லாம் அவர் என்னோடு அதிகம் பேசுவதேயில்லை. திடீரென்று பேச்சு நின்றுபோனது. அதற்கு அதுதான் காரணமாய் இருக்கும்.. ஆனால் அதை எப்படி வாய்விட்டுக் கேட்பது...அவராகச் சொன்னால் சரி... அதைக் கிளறுவது அத்தனை நாகரீகமல்ல.                                                                     என்னிடம் அதையெல்லாம் அவர் சொல்லியிருக்கவே வேண்டாம்தான். ஏதோவோர் உந்துதலில் தோன்றியிருக்க வேண்டும். சொல்லி விட்டார். இப்போது ஏன் சொன்னோம் என்று வருந்துகிறாரோ? ஒன்றும் பிரச்னையில்லை...நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூடச் சொல்லி விடுவோமா? அவரைச் சந்திக்கும்போது சுமுகமாய், சகஜமாய்ப் பேசினாலே போதுமே என்று தோன்றியது. அப்படியெல்லாம் மனிதர்களை ஒதுக்குவது என்றால் ஒருத்தரும் மிஞ்ச மாட்டார்கள் இந்த உலகத்தில். குறையில்லாத மனிதன் யார்?              வெறும் குறையாக  அவர் நினைத்திருந்தால் இதைத் தன்னிடம் சொல்லியேயிருக்க மாட்டாரே...? குற்றமாகவல்லவோ நினைக்கிறார்! அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார் என்பது புரிகிறதே...! எனக்கும் எந்த யுக்தியும் தெரியவில்லைதான். ஆறுதல் மட்டும் சொல்லலாம். ஆனால் அது அவரைச் சமாதானப் படுத்துமா தெரியவில்லை. வெறும் ஆறுதல் வார்த்தைகள் அவரைத் தேற்றாது என்றுதான் தெரிந்தது. பரிகாரம் வேண்டும் என்பதுபோல் பேசினார். பரிகாரம் என்பது என்ன? படையல் போட்டு இறைவனைத் துதிப்பதா?நூறு பேரை அழைத்து சாப்பாடு போட்டு மகிழ்விப்பதா? ஆயிரம் பேருக்கு தானம் பண்ணுவதா?  அவர் சொல்லும் பரிகாரம் பதிலுக்கு பதில்.

       தன் தவறுகளுக்கெல்லாம்....இல்லை இல்லை...குற்றங்களுக்கெல்லாம் பதிலுக்கு பதில் தக்க தண்டனையை அனுபவித்தால்தான் தன் மனம் ஆறும் என்பது அவர் எண்ணமாக இருந்தது. அந்த தண்டனையில் தான் உயிர் இழந்தாலும் போகட்டும் என்கிற முடிவுக்கே வந்து விட்டார். மனிதனின் மனசாட்சி பேச ஆரம்பித்துவிட்டால் பிறகு எதுவும் முன்னே நிற்க முடியாது. இப்போது அவர் அதற்குக்  கட்டுப்பட்டவராக இருக்கிறார். அதன் சொல்படி கேட்க முனைகிறார். அது விலங்கிட்டு இழுத்துச் செல்லும் பாதையில் சென்று கொண்டிருக்கிறார். அதில் அவருக்கு திருப்தி தெரிகிறது. நான் தயார், என்னை என்னமும் செய்து கொள் என்று என்றோ அதற்குத் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டார். இது காலம்வரை அவருள்ளே பதுங்கியிருந்த அது, செய்யும் சேட்டைகளையெல்லாம் கமுக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த அது, இப்போதுதான் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

       அந்த வேகத்தில் அவரின் பலம் குன்றிப் போனது. தான் வாழ்ந்த வாழ்க்கை வீண்...தனக்கு வழிகாட்டியாக யாரும் அமையவில்லை...வீட்டிலுள்ளோரும் தன்னை முறைப்படுத்தவில்லை. தன் வழிமாறிப் போவதையும் யாரும் கண்காணிக்கவில்லை...இது தவறு என்று யாரும் தன்னைத் தடுத்து நல்வழிக்குத் திருப்பிவிடவில்லை. அப்படி அமைந்தவர்கள்தான் சீர்பட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் உலகம் போற்றும், பலரும் மெச்சும் மகான்களாக உருமாறியிருக்கிறார்கள். எதுவும் தனக்கு அமையவில்லை. தான் ஒரு துரதிருஷ்டசாலி. வழிகாட்டியில்லாமல் எப்படி ஒரு ஊர் போய்ச் சேருவது?

       என்னென்னவோ சொல்கிறார் அவர். உறவினர்கள் மேல், நண்பர்கள் மேல், சுற்றத்தின் மேல் அவருக்கு நிறையக் கோபமிருக்கிறது. எல்லோரும் இந்த உலகத்தில் சுயநலக்காரர்கள். அவரவர் வழியும், நலமும்தான் அவரவருக்கு அக்கறை. மற்றவர்களைப் பற்றி எவருக்கும் நினைத்துப் பார்க்க நேரமில்லை. தாயானாலும் சரி, தந்தையானாலும் சரி, அவரவர் பாடுதான் அவரவருக்கு. செடி தானே வளர்ந்து மரமாகும் என்கிற நினைப்பு. மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்கிற கிடப்பு. என் கோபங்களை நான் எவரிடமும் காட்ட முடியாது. என் நியாயங்களை நான் எவரிடமும் புலம்பிப் பயனில்லை. அவனவன் தன்னைத்தானே கூர்ந்து நோக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான திறனை அவனவனே தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏற்றம், இறக்கம் இப்படி எல்லாவற்றையும் புரிந்தவனாக அவனே இருந்தாக வேண்டும். ஒருவன் உருப்பட அதுவே வழி. அன்றி மனம் போன போக்கில் ஒருவன் இருக்க ஆரம்பித்தால் இந்த உலகம் அவனை எங்கெங்கோ தறி கெட்டு இழுத்துக் கொண்டு போய் சாக்கடையில் தள்ளி விடும். அதில் விழுந்து முக்குளித்த பின்னால்தான் அவனால் எதையும் உணர முடியும். தவறுகளை உணரும் அந்தத் தருணம் காலம் கடந்த ஒன்றாக இருக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயம். ஒரு தத்துவ ஞானியைப்  போல் அவர் இப்போது தன்னை வரித்துக் கொண்டு புலம்ப ஆரம்பித்திருந்தார். ஆனால் அதில் ஒரு நிதானம் இருந்தது. எல்லாவற்றையும் அவர் கடந்து விட்டார் என்கிற புரிதல் இருந்தது.

       ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எத்தனையோ ரகசியங்கள். அது இல்லாத மனிதனே கிடையாது. எல்லா மனிதர்களுக்கும் இரண்டு பக்கங்கள். அந்த இன்னொரு பக்கம் பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியாததாய்த்தான் இருக்கும். அது அவனோடேயே இருந்து அழிந்து போகும் ரகசியங்கள் அடங்கியது. நல்லவையும், தவறுகளும் கொண்டது. தவறுகள்தான் அப்படியென்றால் நல்லவையுமா? என்ற கேள்வி எழலாம். பல நல்லவைகள் மற்றவரிடம் சொல்ல முடியாதவையாய் இருந்திருக்கின்றன. இருக்கின்றன. அது அந்த மனிதனின் மன சாந்திக்கானதாய் அமைகிறது. அவனுக்கு மட்டுமே அமைந்த ஆத்ம திருப்தியாய் அடங்கி ஓய்கிறது.                அப்படி எதையாவது இவர் என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கலாம். பதிலாக அந்த ரகசியமான பகுதியை வெளிப்படுத்தியதுதான் இப்போது சங்கடமாய்ப் போயிற்று அவருக்கு. ரொம்பவும் மனசாட்சி உறுத்தப் போய்த்தான் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன விஷயங்களையெல்லாம் அப்படியே துடைத்து எறிந்து விட்டுப் போகும் மனிதர்கள், அதை ஒரு விஷயமாகவே கொள்ளாதவர்கள், தவறாகவே நினைக்காதவர்கள் என்றுதான் ஏராளமாய் இந்த உலகில் பலரும் இருக்கிறார்கள். தொடர்ந்து சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவரால் அது முடியவில்லை. அதைப் பிறரிடம்  வெளிப்படுத்துவதன் மூலம் அதற்குத் தீர்வு கண்டு விட முடியுமா என்ன? எதிராளியிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சின்ன ஆறுதல் கிடைக்கலாம். அவ்வளவே. கொஞ்சம் மனபாரம் குறையலாம். தீர்வு? அதற்கு எதிர்மறையான நல்ல விஷயங்களில் ஈடுபடுவதன் மூலமாக மட்டுமே அதிலிருந்து விடுபட முடியும். ஒருவேளை இதை உணர்ந்தும் அவரால் விடுபட முடியவில்லையோ என்னவோ? நல்ல விஷயங்களில் ஈடுபட்டாலும், திரும்பத் திரும்ப அந்தக் குழிக்குள்ளேயே வந்து விழுபவராய் இருக்கலாம்.

       இப்படியே அந்தத் தவறுகளை நினைத்து நினைத்தே தன்னை உருக்கிக் கொள்ளப் போகிறாரா? தினமும் அழுதுகொண்டே இருக்கப் போகிறாரா? அதன் மூலமாக அந்த வாதனை தீரும் என்று நம்புகிறாரா? அது சாத்தியமில்லையே...எண்ணங்கள் மனதில் பயணித்துக் கொண்டிருக்கும்வரை அதுவும் இருந்து கொண்டுதானே இருக்கும். எதுவுமே நினைவிலில்லாத மறக்கும் வியாதி நம்மைத் தொத்திக் கொள்ளுமானால் அதிலிருந்து விடுபடலாம். அல்லாதவரை எதுவும் சாத்தியமேயில்லையே...!                                                    அதற்கான வடிகாலாய் அவர் என்னைத் தேர்ந்தெடுத்ததில் ஒரு நியாயமிருக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நான் ஒன்றும் மிகுந்த நேர்மையாளனோ, ஒழுக்க சீலனோ இல்லை. மனித வாழ்க்கையில் பலருக்கும் நேரும் தவறுகள் எனக்கும் நேர்ந்திருக்கின்றன. பலருக்கும் உண்டான அனுபவங்கள் எனக்கும் கிடைத்திருக்கின்றன. ஆனால் அதை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொண்டோம், எதை உணர்ந்து விலகினோம், எதை நினைத்துத் தவிர்த்தோம் என்பதெல்லாம்தான் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டுப்  போகின்றன. படுகுழி-யில் விழுவது ஒரு வகை. படுகுழி என்று தெரிந்தவுடனேயே விலகி ஓடி விடுவது இன்னொரு வகை. இரண்டாவது வகையில் எப்படியோ தப்பித்தவன் நான்.                                                           நானும் கொஞ்சம் சபலத்திற்கு ஆட்பட்டவன்தான். ஒரு முறை மட்டும், இந்த முறை மட்டும் என்று நெருங்கியவன்தான். ஆனால் அந்த நெருங்குதலிலும் ஒரு கவனமும், நிதானமும் எனக்கிருந்தது. அது எப்படி என்னிடம் வந்தது, எப்படி என்னைத் தடுத்தது எனக்குத் தெரியாது. பயம் அதிகமாய் உள்ளவனால் தவறுகள் செய்ய முடியாது.                                                                                            என்னிடமே இந்தக் கண்றாவியைப் போய் இந்த மனுஷன் எதற்குச் சொன்னார் என்றுதான் இருந்தது எனக்கு. இப்போது என்னைவிட்டு நான் இதைப் போக்க வேண்டுமென்றால் யாரிடமாவது சொல்லித்தான் ஆக வேண்டும் போல் இருக்கிறதே என்று துறுதுறுக்கிறது மனம். கங்கையில் போயா குளித்துக் கழுவ முடியும்? உங்களிடம் சொல்லாமல் முடியாது போலிருக்கிறதே!.                                                            ந்த அளவுக்கு இந்த பலவீனம் உங்கள்ட்ட எப்படிப் படிஞ்சிச்சு...? என்று அதன் ஆதிமூலத்தைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் கேட்டேன் நான். ரொம்பவும் எளிய மனநிலையில்  நின்று சொல்ல ஆரம்பித்தார். தாவதுங்க...சின்ன வயசுல...எங்கூர்ல நாங்க ஃப்ரென்ட்ஸ் சில பேர் சாயங்காலம்போல வாக்கிங் போவோம். ரெண்டு கி.மீ. தொலவில் ஒரு டூரிங் டாக்கீஸ்  இருக்கு. அதுவரைக்கும் போயிட்டு அங்க கொஞ்ச நேரம், அதாவது படம் போடுற வரைக்கும் நின்னுட்டு வர்றது எங்க பொழுதுபோக்கு. அப்படி நடக்கைல அங்கங்க குட்டி குட்டியா பாலங்கள் இருக்கும். கீழே வாய்க்கால் ஓடிட்டிருக்கும். ஓரமா தென்ன மரப்புல வெளிக்கிருந்திட்டு, அங்க வந்து குண்டி கழுவுவோம்.  ரெண்டு பக்கமும் ஆட்கள் உட்கார்ந்து பேசுற மாதிரி மேடை கட்டி வச்சிருப்பாங்க...அதுல வழக்கமா உட்கார்ந்து பேசுவோம். அப்டி ஒரு நா பேசிட்டிருக்கைல பக்கத்துல வேறே ரெண்டு பேர். அதுல ஒராளு...ஒண்ணு சொன்னாரு....என்னவோ தப்பாப் பேசுறாருன்னு மட்டும் தெரிஞ்சிச்சு...அந்த வயசுல....பிற்பாடு யோசிச்சப்பத்தான். ...அந்தாளு எவ்வளவு பெரிய அசிங்கத்தச் சொல்லியிருக்கான்னு  புரிஞ்சிது....ஆனா அந்தப் பேச்சு அப்டியே மனசுல நின்னு போச்சு.... இன்னைவரைக்கும் துடைக்கவே முடில....அத நாமளும் ஒரு வாட்டி பார்த்துப்புடணும்னு மனசு நோங்கிச்சு.....இதுக்கு நான் என்ன செய்ய?                       ஒருத்தன் சொன்னது இப்டியா தீயாப் பத்திக்கும்?   அப்போ அது ஏற்கனவே என் மனசுல இருந்திருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன். அதை இன்னொரு அடையாளம் மூலம் உணர்த்தினது அந்தாள்தான். இந்த உணர்ச்சி மட்டும் படிச்சவன், படிக்காதவன்ங்கிற வித்தியாசம் பார்க்கிறதில்லை. எல்லார்ட்டயும் நீக்கமற நிறைஞ்சிருக்கு....அந்தக் குழிக்குள்ள சிலர் விழுந்திடுறான் காலத்துக்கும். பலர் அதை துல்லியமா உணராததுனால கடந்து போயிடறாங்க...நான் மாட்டிக்கிட்டேன்....இந்த உணர்ச்சிக்கு அடிமையானதுக்கு நான் யாரைக் குறை கூற முடியும்? தாய் தந்தையரையா? அவர்கள் சேர்ந்த நேரத்தையா? அந்தக் கணம் அவுங்க மனசுல என்ன இருந்ததுங்கிறதையா? யார் இருந்தாங்கங்கிறதையா? எந்த அளவுக்கு அவுங்ககிட்ட இதோட தீவிரம் பரவியிருந்ததுங்கிறதையா? எதையுமே அறுதியிட்டு யாராலயும் சொல்ல முடியாது. யாரையும் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டிட முடியுமா?                                                                               எப்போ அது தப்புன்னு தெரிஞ்சிதோ, அதப்பத்தி மேற்கொண்டு யோசிக்காமே விட்ர வேண்டிதானே....?             எங்க விட முடிஞ்சிது...அதுதான் பிசினா ஒட்டிக்கிடுச்சே....அன்னைலர்ந்து எந்தப் பொம்பளையப் பார்த்தாலும் அந்த நெனப்புதான் வந்தது எனக்கு. கற்பனை மனசுல ஓட ஆரம்பிச்சிடுச்சு...அந்தாள் சொன்னத நினைச்சு...நினைச்சு...மனசு அப்பப்போ சந்தோஷப்படுது....அவர் சொன்னத நாமளும் எப்படியாச்சும் செய்து பார்க்கணும்னு மனசு துடிக்க ஆரம்பிச்சிடுச்சி....எனக்கு அழகாயிருக்கிற ஆம்பளைங்களப் பார்த்தாலே என்னவோ செய்யுங்க....சின்னப்புள்ளைலயே அப்படி ஒரு மனசு இருந்திச்சு. அதக் கிளறி விட்டது இந்த சம்பவம்தான். இவர் எதைச் சொல்ல வருகிறார் என்பதாக எனக்குள் சிந்தனை ஓட....இதென்னடா அநாச்சாரம்...இந்தாள்ட்டப் போய் பேச ஆரம்பிச்சதே தப்பால்ல போச்சு என்றிருந்தது. பிறகு அவர் படிப்படியாகத் தன் பழக்க வழக்கங்களைச் சொல்ல ஆரம்பித்தார். கூடப் படிக்கும் விமலநாதன்ங்கிற பையனோடு என்ன மாதிரி உறவு இருந்தது என்றும், அவனும் தன்னைப் புரிந்து கொண்டு எப்படி ஒத்துழைத்தான் என்பதையும் சொன்னார். அப்போது அவர் முகத்தில் இருந்த மலர்ச்சியும், அந்தப் பையனிடம் இருந்த பிரியத்தையும், அவனை இறுக்கமாகக் கட்டிப்பிடித்து, விடாது முத்தமழை பொழிந்ததையும், அவனிடமிருந்த ஒரு வாசனை தனக்கு வெறியேற்றியதையும் கனவுலகில் இருப்பதுபோல் விவரித்தார்.  வீட்டிற்குக் கூப்பிட்ட போது அவன் வந்ததையும், இருவரும் தனியாக மாடிக்குச் சென்று அங்கு மறைவில் அமர்ந்ததையும், ஆண்கள் என்பதால் யாரும் சந்தேகம் கொள்ளவில்லை என்றும். மாடித் தனிமை.பல தவறுகளுக்கு இடமளித்தது என்றும் சொன்னார். .பள்ளியில், பெல் அடித்து எல்லோரும் வெளியேறியபின் பல நாட்கள் வகுப்பில் தாங்கள் இருவர் மட்டுமே அமர்ந்திருந்ததையும், க்ராஃப்ட் பீரியடில் தனித்துப் போய் மறைந்து கொண்டதையும்...ஆறு, ஏழு, எட்டு என்று வகுப்புகளில் விடாமல் தொடர்ந்த அந்தப் பழக்கம் பிறகு விடுபட்டுப் போனதும், அவன் பள்ளி மாறி விட்ட நிலையில் தன்னை சந்திப்பதைத் தவிர்த்ததையும், கல்வியில் அவனுக்கு அதீத கவனம் வந்துவிட்டதையும், விலாவாரியாக அவர் எடுத்துரைத்த போது அருமையான நண்பன் என்றும், என் இளம் பிராயக் காலத்தை மிகுந்த சந்தோஷத்திற்குள்ளாக்கியவன் என்றும் சொல்லி முடித்தார்.                                                     அன்று ஆரம்பித்த அந்தப் பழக்கம், தொடர்ந்து தன்னைத் தவறுகளே செய்யத் தூண்டி இன்றுவரை சீரழித்திருக்கிறது, தவறுகளுக்குள் மனிதன் சென்று மாட்டிக் கொள்ளக் கூடாது...அது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு கடைசிவரை கொண்டு சென்று சாவின் விளிம்பில் நிறுத்தி விடும் என்றார்.                                  அந்தப் பையன்தான் போயிட்டானே...பிறகென்ன ஆச்சு....? என்றேன் நான்.                             எங்க வீட்டுக்கு நாலு வீடு தள்ளி ஒருத்தி இருந்தா. அவுங்க அம்மா, ரெண்டு அண்ணனுங்க, அவளுக்கு ஒரு தங்கச்சி...நா பாட்டுக்குத்தான் இருந்தேன். அவள நான் ஏறெடுத்தும் பார்த்ததில்ல...அவளாத்தான் என்னைத் தேடி வந்தா....பாடத்துல சந்தேகம்னு சொல்லிட்டு வந்து நின்னா....என்கிட்ட சந்தேகம் கேட்கற அளவுக்கு நான் அத்தனை படிப்பாளியும் இல்ல....அம்பது மார்க் எடுக்கிறதுக்கே திணர்றவன் நான். நல்லாத்தான் படிப்பேன். ஆனா எக்ஸாம் உறால்ல போய் உட்கார்ந்தா எல்லாம் மறந்து போயிடும். பாதி பாதிதான் ஞாபகம் வரும். அப்பயே படிப்புல கான்ஸன்ட்ரேட் பண்ண முடியாத மக்கு ஸ்டூடன்டாத்தான் இருந்தேன். இப்டி நெனப்பு பூராவும் தறிகெட்டுக் கிடந்திச்சின்னா....? பிஞ்சில பழுத்தவனாயிட்டேன். நாம்பாட்டுக்கு செவனேன்னு இருப்பம்னு நினைச்சா....கிரகம் நம்மள விடுதா? அதுவா வந்து ஒட்டிக்கிது....                                                   பாடப் புஸ்தகத்தக் கைல வச்சிட்டு, வாசக் குழாய்ல தண்ணி பிடிக்க வர்ற தெலுங்குப் பொண்ண சைட் அடிக்கிறது....அவ சிரிச்சிக்கிட்டே நெளிஞ்சி நெளிஞ்சி போறதுல ஒரு கிக்கு. பிடிக்கலைன்னா முறிக்க வேண்டிதான....செய்யாதுங்க...நம்மளயும் பார்க்க ஆளிருக்கேங்கிற சந்தோஷம்....சாதாரண அழகு கூட தூக்கலாத் தெரியும் அப்போ....!                                                                                     பாடப் புஸ்தகத்தக் தூக்கிட்டு இப்ப இவள யாரு வரச்சொன்னா? எங்கிட்ட வந்து கேட்குற அளவுக்கு நான் நல்ல படிப்பாளின்னு இவளுக்கு எந்தக் கிறுக்கன் சொன்னான்? அவங்க வீ்ட்டுக்கே அவுங்க மூத்த அண்ணனத் தேடி ஃப்ரென்ட் ஒருத்தர் வருவாரு....அவரே ஒரு வாத்தியார்தான். ஆனா ஒண்ணு...அவர் பி.டி. வாத்தியாரு....பாடம் சொல்லித் தர்றவர் இல்ல....அதோட அண்ணன்களுக்கும் அம்புட்டு அறிவு பத்தாது...ரெண்டு பயலுகளும் என்னவோ பேருக்குப் படிச்சிட்டு, எங்கடா வேல கெடைக்கும்னு அலைஞ்சிட்டு இருந்தானுவ.....மூத்தவன் மலேரியா இன்ஸ்பெக்ட்ரா கொஞ்ச நாள் அலைஞ்சான். அடேங்கப்பா...டெம்ப்ரரியாக் கெடச்ச அந்த வேலைக்கே என்னா பந்தாங்கிறீங்க....வாசப்படில அவன் சைக்கிள் ஏற்ரதும், அத்தன பேரும் நின்னு ஊருக்கே கேட்குற மாதிரி சத்தமா டாட்டா சொல்றதும், அந்தத் தெருவுலயே அவனுக்குத்தான் மொதல்ல அரசாங்க வேல கிடைச்சிருக்காம்...ஓட்டைத் தொண்ணூறு ரூபாய்க்கு இந்தப்பாடு... ரெண்டு மாசமோ மூணு மாசமோ...!

       அந்தக் காலத்துல அது பெரிசுதான்னு வச்சிக்குங்க...ஆனாலும் என்னவோ சர்வீஸ் கமிஷன் எழுதிப் பாஸாகி வேல வாங்கிப்புட்டாப்புலல்ல அலட்டலாயிருக்கு.... மொதல்ல அவன் எத்தன நாள் வேலைக்குப் போறான்னு பார்ப்போம்....பெறகு நானும் வேணும்னா நின்னு டாட்டா காண்பிக்கிறேன்...ன்னு நான் நெனச்சிக்கிட்டேன். அவனே ஒரு ஒதவாக்கரை...ஊர் சுத்தி...அங்கங்க போய் ஆத்தங்கரை ஆலமரத்தடில நின்னுக்கிட்டு, பொடிப் பசங்களோட குண்டு வெளையாண்டுக்கிட்டுக் கெடப்பான்....தீப்பெட்டிப் படம் சேர்ப்பான்...புளியங்கொட்டையச் சேர்த்துக் கொண்டாந்து அவங்கம்மாட்டக் கொடுப்பான்...அது அதுல காசு பார்க்கும்...

       இப்ப இந்தக் கத போதும்னு நினைக்கிறேன். சொந்தக் கதைக்கு வருவோம்...பாடப் புஸ்தகத்தத் தூக்கிட்டு அடிக்கடி வர ஆரம்பிச்சா....எந்தப் பாடத்துல எந்த எடத்துலன்னு கேப்பேன்...அத அவ சுட்டிக் காண்பிக்கும்போது...இதுவா...இதுவா...இதுவான்னு மாத்தி மாத்திக் காண்பிச்சு...என் விரலை நான் நகர்த்த...இல்ல இது...இல்ல இது...ன்னு அவளும் கையை நகர்த்த, அவ விரல் என் கைல பட, என் கை அவ விரலத் தொடன்னு யப்பாடீ...அந்தக் கணமிருக்கே....அதைச் சொல்லிப் புரிய வைக்கவே முடியாது...அப்டியே தொத்திக்கிச்சு ரெண்டு பேருக்கும்...இத்தனைக்கும் ஆளு செவப்பில்ல....சுத்தக் கருப்பும் இல்ல...நாவப்பழம் மாதிரி பளபளன்னு இருப்பா...அந்தப் பளபளப்பப் பார்த்திட்டு கைபோடாம எவனாலும் இருக்க முடியாது....என் கை படராத எடமில்ல அவ உடம்புல....ஆளு தளுக்கு புளுக்குனு இருப்பாளா....விட்ட கைய எடுக்கவே மனசு வராது. பிசைஞ்சிக்கிட்டே இருக்கணும்னு ஒரு வெறி.  வீட்டுல யாரும் இருக்க மாட்டாங்க....அம்மா கடைக்குப் போயிட்டு வர்றேன்னு வெளில போயிருப்பாங்க...இல்ல பக்கத்து வீட்டுக்குப் பேசப் போயிருப்பாங்க....அதென்னவோ அமைஞ்ச நேரம் பூராவும் அப்படித்தான். அம்மா அவுங்க வீட்டக் கடந்து போறதப் பார்த்திட்டுத்தான் இவ ஓடி வர்றான்னு தெரிஞ்சிது.                                                                                      எங்கம்மாவுக்கு சுத்தமா சந்தேகம்ங்கிறதேயில்ல...அந்தளவுக்கு எங்களுக்கு வயசு வந்திட்டதா அம்மா நினைக்கலயோ என்னவோ...? ஆனா ஒரு நாளைக்கு அவுங்க வீட்டுல வேல பார்க்கிற அன்னம்ங்கிற வேலைக்காரிக்குத் தெரிஞ்சி போயிருச்சி. அந்தச் சந்தேகத்துலதான் அவ எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கா...நடுக்கூடத்துல  இடது ஓரம் இருக்கிற ரூம்ல நான் அவள இறுக்கி அணைச்சி கிஸ் அடிச்சிட்டிருந்தேன்.   அந்த அறைல இருந்த லைட் வெளிச்சம் கூடத்துல ஒரு கதவு அளவுக்கு விழுந்து அதுல எங்க ரெண்டு பேரோட இறுக்கம் நிழலாப் படிய அதப் பார்த்திட்டா அவ....அம்மா இல்லீங்களே...ன்னு நான் அங்கிருந்தபடியே  பதில் சொல்ல....விறு விறுன்னு போயிட்ட அவ, அவுங்கம்மாட்டப் போயிச் சொல்லிட்டா....        அந்தப் பி.டி. மாஸ்டர்னு சொல்லுவேனே...அவன் சாயங்காலம் வந்தபோது, இவளுக்குப் படீர்...படீர்னு அடி விழுந்திருக்கு கன்னத்துல....உண்மைதானான்னு எதுவும் விசாரிக்காமே எப்டி அந்த வேறொருத்தன அடிக்க விட்டாங்க அவுங்க அம்மான்னு எனக்கு ஆச்சரியம். அண்ணன்காரன் கண்டிச்சாலும் பரவால்ல...ஒரு மூணாமத்தவன் இதச் செய்றான்னா அவனுக்கு அந்த வீட்ல எந்த அளவுக்கு உரிமை இருக்கணும்னு பார்த்துக்குங்க....எங்கம்மாட்டயோ, என்கிட்டயோ அவுங்க ஒரு வார்த்தை கேட்கல....அடுத்த கொஞ்ச நாள்லயே அவுங்க வேறே ஊருக்கு மாறிப் போயிட்டாங்க....சப்புன்னு போயிடுச்சி எனக்கு...                             அவுங்க குல தெய்வக் கோயில் இருக்கிற ஸ்தலத்துலயே இருந்திடுவோம்னு புறப்பட்டுப் போயிட்டதாப் பேசிக்கிட்டாங்க...அந்தம்மாவோட புருஷன்காரன் அங்கதான் இருந்தான்....அவ எப்டித்தான் என்ன மறந்தாளோ....எப்டித்தான் பிரிஞ்சாளோ....? எத்தன தடவ அவளோடக் கட்டிப் புரண்டிருக்கேன் தெரியுமா? சொல்லி மாளாது. சினிமாக்கெல்லாம் கூட்டிப் போயிருக்கேன். மேல் வரிச மூலைலதான் உட்காருவோம். அப்பத்தான் யாரும் தலய உசத்திப் பார்க்க மாட்டாங்கன்னு....பார்த்தாலும் இருட்டுல என்னா செய்றோம்னு எவனுக்கும் தெரியாது. எல்லாத்துக்கும் எடம் கொடுத்தா அவ. அம்புட்டு ஆச அவளுக்கு.  ஆனா எதுவும் யாருக்கும் தெரியாது..அந்த வேலைக்காரி கண்டு பிடிச்சதத் தவிர..                                                    ..அதுக்குப் பெறவு சில வருஷங்கள் கழிச்சி நான் அவள தஞ்சாவூர்ல பார்த்தேன். நீ சுசித்ராதானே....ன்னு  கேட்டபோது....அந்த முகத்தக் கண்கொண்டு என்னால பார்க்க முடில....ஏன் ஓடுற....கொஞ்சம் நில்லு...உன்கிட்டப் பேசணும்னு தடுத்தேன்...விறு விறுன்னு என்னக் கடந்து போயிட்டா....விரட்டிக்கிட்டே போனேன். ஒரு சின்னூண்டு வீட்டுக்குள்ள போய் புகுந்துக்கிட்டா....வீடா அது? ஒட்டுக் குடிசை....புருஷன்காரனோட எடுத்துக்கிட்ட போட்டோவெல்லாம் இருந்திச்சு. பார்க்கவே பரிதாபம். எதுவும் கேட்காம....கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்திட்டு வந்தேன். முதல்ல வாங்க மறுத்தா...இத உங்க பெரியண்ணா வந்து கொடுத்திட்டுப் போனதா சொல்லிக்கோ...ன்னு திணிச்சிட்டு வந்தேன். அதுதான் நா அவளக் கடைசியாப் பார்த்தது. இப்ப அவ எப்படி, எங்க இருக்கான்னு தெரியாது.....                                                                              பெறவு நாங்களும் ஊர் மாறிட்டோம். டவுனுக்கு வந்த பிற்பாடு வேல தேடுறதுல கவனமாயிட்டேன் நா. ஆனாலும் விட்டுச்சா கெரகம்....அங்க எங்கக்கா பையன் ஒருத்தன் மாட்டினான். செக்கச் செவேல்னு இருப்பான்.  நீ பொம்பளயா இருந்தீன்னா உன்னத்தாண்டா கல்யாணம் பண்ணிக்குவேன்னு ஒரு நா சொன்னேன். அதுலர்ந்து அவன் எனக்கு நெருக்கமாயிட்டான்.. எங்கூடவே அலைஞ்சான். நான் என்ன செஞ்சாலும் சும்மாயிருந்தான். எல்லாத்துக்கும் வளஞ்சு கொடுத்தான். பயங்கர சந்தோசம் எனக்கு. அவனுக்கா புதுசா எதயோ கண்டுட்ட மகிழ்ச்சி. இப்டியெல்லாமா இருக்குன்னு நினைச்சிட்டு அவனுக்கு நாளடைவுல ருசி வந்திடுச்சி. அப்புறம் கேட்கணுமா....நாகமும், சாரையும் பிணைஞ்சு கெடக்குற மாதிரித்தான். பொம்பள தலை ஜடை மாதிரித்தான் சுத்திக்கிட்டுக் கெடப்போம்.....அவனுக்குப் படிப்புமில்ல...ஒண்ணுமில்லயா...என்ன விட்டா வேறே கெதியும் இல்ல...அப்பப்ப காசு, தீனி, சினிமா... கெடைக்குதுல்ல.... கொடுக்கு மாதிரியே திரிஞ்சான். வெறுமே உட்கார்ந்திருக்கைல கூட என் மடிலதான் கெடப்பான்...                                                     பெறவு எனக்குக் கல்யாணம் ஆயிப் போச்சு....அப்புறமாச்சும் சும்மா இருந்திருக்கணும்ல...கட்டுன பொண்டாட்டிக்குத் துரோகம் பண்ணலாமா...? பண்ணக் கூடாதுதான்...ஆனா பண்ணு...பண்ணு...ன்னு சொன்னாப்ல பொழுதன்னிக்கும் என்னோட சண்டை போட்டுட்டேயிருந்தா அவ....நா எதச் சொன்னாலும் எதிர்த்தும், மறுத்துமே பேசினா...ஆளு சோக்காத்தான் இருப்பா...தள...தளன்னு....ஆனாலும்...மனுசனுக்குப் பத்த மாட்டேங்குதுல்ல...வெளில மேய்ஞ்ச பயலுக்கு....நோங்கத்தான செய்யும்....தொடுப்பு இல்லாத மனுசன் யாரு இந்த ஒலகத்துல....                 நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனார். அவர் பாஷையே மாறிப் போனதை இப்போதுதான் நானே உணர்ந்தேன். குடும்பச் சண்டை இல்லாத வீடு எது? மனைவியோடு என் வாழ் நாளில் நான் சண்டையே போட்டதில்லை என்று யாரேனும் சொன்னால் அது பொய் என்பது உலகத்துக்கே தெரியுமே...! பிறகு அதற்காக அவளைப் பழி வாங்கி்னேன் என்பதுபோல் சொல்கிறாரே....! கேட்டதுதான் கேட்டோம்...முழுதும் கேட்டு விடுவோம் என்று நானும் லயித்து விட்டேன்தான். தொடர்ந்தார் நண்பர்....                                                     ஏழை வீட்டுப் பிள்ளன்னு சொல்லிட்டு பழைய வாட்ச்மேன் கொண்டு விட்டான். கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்கு அதுக்கு...ஆனா புருஷன்காரன் சரியில்ல போல்ருக்கு....ஒண்ணும் வேல வெட்டிக்குப் போகாத நிலைல இப்டி வந்திருக்கு...வந்த எடத்துல, வேலையப் பார்த்தமா...போனமான்னுல்ல இருக்கணும்...அதென்ன என் மேலயே ஒரு பார்வை....கண்டாங்கிச் சேல கட்டிக்கிட்டு...ஆளு ஒரு மாதிரித்தான் இருந்தா! லட்சணமான முகம்....ஒதுக்கிற ஆளுல்ல...அந்தப் பல் வரிசயும், பெரிய்ய்ய கண்ணும், உதட்டோரச் சிரிப்பும், ஓரப் பார்வையும்...ஏதோ திட்டமிட்டுத்தான் நுழைஞ்சிருப்பாளோ...! எம் பொண்டாட்டிக்காச்சும் புத்தி வேணாம்...அவகிட்டயேவா காப்பியக் கொடுத்தனுப்புறது...? ஐயாட்டக் கொடு.....!                              சரிதான்...இது பெரிய பங்களா....நான் முதலாளி...அம்மா காபி கொடுத்தனுப்புறாங்க...டிரேல வச்சு சர்வன்ட் கொண்டு வந்து கொடுக்குது....வௌங்குமா....வந்தமா...வச்சமான்னு நகர வேண்டாம்...அதென்ன நின்னுட்டே என்னப் பார்த்திட்டேயிருக்கிறது? லூஸோ....? அவள லூசுன்னு நெனச்சேன்னா நான்தான் லூசு.....!       வட்ட டம்ளர வாங்க நிக்கிறாளாம். போ...போ... நா கொடுத்திக்கிறேன்....                                                                அவ அப்டி பாத்ரூம்ல குளிச்சிட்டிருக்கைல...ஒதுங்குனா பாரு ஓரமா...! அடிப் பாதகத்தி....! எய்ம் பண்ணித்தான் நுழைஞ்சிருக்கியா...? என்னா தைரியம் உனக்கு....? நெனச்சிட்டே அப்டியே அள்ளி எடுத்து மொகர்ந்தேன் பாருங்க....சினிமாக் கதாநாயகி மாதிரி வளைஞ்சி கொடுக்கிறாய்யா அவ....அவ...முன் பக்கம் பின் பக்கம்னு எதுக்கும் தயாராத்தான் இருந்தா...! தோல்லயும் என்னனோ ஒரு மணம் அசாத்தியமா...! அது ஒரேயடியா சுகம்னும் சொல்ல முடியாது....நாத்தம்னும் சொல்ல முடியாது....அவ போனப்புறமும் அந்த மணம் என்கிட்ட இருந்திச்சே....?அழிக்கவே மனசு வரல்லயே...! எம் பொண்டாட்டிட்ட சண்டை போடுறதுக்கும் அதுக்கும், அந்த மணம் வெறியேத்திச்சு எனக்கு...அவள வச்சே உன்னை அழிக்கிறேண்டி...பழியாக் கிடந்தது மனசு... ராத்திரி படுக்கைல எம் பொஞ்சாதி கண்டுபிடிச்சிட்டான்னா? ஈரத் துணியால ஒடம்பத் துடைச்சேன். வாய நல்லாக் கழுவிக் கொப்புளிச்சேன்....காறிக் காறித் துப்பி்னேன்...என்ன நீங்க...எச்சிப்பிசாசு பிடிச்சிருச்சான்னு கேட்டா? அடிப் பாவி...எதுவும் கவனிச்சிருப்பாளோ...?அதான் உண்மை... பயம் வந்திடுச்சு எனக்கு.       ஆனா எங்க விடுது ஆச....மறுநா அவ வேலைக்கு வந்தப்பவும், அதுக்குப் பெறவும் தொடரத்தான் செய்திச்சு....விடமுடிலயே....எதுக்கும் தயாராயிருந்தா அவ.....ஒரு நா...யாருமில்லாத நேரத்துல ரூமுக்குள்ள படுக்கையவே விரிச்சிட்டா....சும்மா வாங்க...பயப்படாதீங்கங்கிறா....? அன்னைக்கும் புகுந்து வெளையாடிட்டேன்னு வச்சிக்குங்க....அவ என் வீட்டுல ஆடாத ஆட்டமில்ல....எனக்கு குளிப்பாட்டி, சோப்புத் தேச்சு விட்டிருக்கா...உடம்பு துடைச்சு விட்டிருக்கா....எதிர உட்கார்ந்து சோறு போட்டிருக்கா....எல்லாத்துக்கும் தோதா அமைஞ்சிச்சு அந்த வீட்ல.....                             ஆனா பாருங்க...அவ பண்ணின ஒரு சின்னத் தப்பு சட்டுன்னு அவளக் காண்பிச்சுக் கொடுத்திருச்சு....அப்டி பீத்தலா அவ செய்வான்னு நா எதிர்பார்க்கல... எண்ணெய் திருடுறது, ஜீனி திருடறது, ரவை, அரிசி எடுத்துக்கிறது...இப்டியெல்லாம் செய்ய ஆரம்பிச்சப்போதான் எம்பொண்டாட்டி பார்த்திட்டா....                         எனக்கோ பரிதாபமாயிருந்தது. விட்ரு...போனாப் போவட்டும்...பாவம்...இல்லாமைதானே....கேட்டிருந்தாலும் நீ கொடுத்திருப்பேதான்...அது தெரிலயே அவளுக்கு...இனிமே இப்படிச் செய்யாதேன்னு சொல்லி விட்டிடு....அப்டின்னேன்....கேட்கல.... சரி சொன்னமாதிரித் தெரிலை. யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் ஒரு நாள் பட்டுன்னு வேலையை விட்டு நிறுத்திட்டா....நாளைலேர்ந்து       நீ வரவேணாம். இன்னும் ரெண்டு நா கழிச்சு வந்து வேலை பார்த்த நாளுக்கு சம்பளத்த வாங்கிக்க.....- முடிச்சிட்டா கதய....அவளுக்கானா எம்புட்டு கெத்து...சரின்னு போயிட்டா...நீ இல்லாட்டி இன்னொரு எடம்....!                                      ஒருவகைக்கு நல்லதுதான்னு வைங்க....இல்லன்னா என்னைக்காவது ஒரு நா நானும் கேவலப்பட்டிருப்பேன்...இதுலயே ஒரு சந்தேகம் உண்டுதான் எனக்கு. என் தொடுப்பு தெரிஞ்சிதான் இப்டி செய்திட்டாளோன்னு? தீய விஷயங்கள நெருங்கவே கூடாது...பக்கத்துலயே வச்சிக்கக் கூடாது...இருந்தா ஆபத்துதான். நாமென்ன புராண காலத்து ரிஷியா...? அவுங்களே தவறிட்டதா படிச்சிருக்கமே...! சாதாரண மனுசன் என்ன செய்ய முடியும்? அதுலயும் இந்தக் காமம் இருக்கே...அது ஆயுசு முழுக்கக் கூடவே வந்திட்டிருக்குமாக்கும்...அவ எம்பேர்ல சந்தேகப்பட்டு நிறுத்தினாளோ...அல்லது அவ சாமான் திருடுறதப் பார்த்திட்டு நிப்பாட்டினாளோ எனக்குத் தெரியாது. நிறுத்திப்புட்டா படக்குன்னு...அது எனக்கும் வாகாப் போச்சு....விட்டது சனின்னு இருக்க ஆரம்பிச்சிட்டேன்.....என்னோட அத்தன நெருக்கமா இருந்த அவ, அதுக்குப் பெறவு எங்க வீட்டுப்பக்கம் தல வச்சுக் கூடப் படுக்கலைன்னா பார்த்துக்குங்களேன்...இப்ப வேல பார்க்கிற எடத்துல வேறே யாரயாச்சும் பிடிச்சிருப்பாளோ என்னவோ...பொம்பளைல குதிரை ரகம்னு ஒண்ணு சொல்லுவாங்க...அது எதுக்குமே, எப்பயுமே அடங்காதாம்....அப்டியோ என்னவோ...எவன் கண்டான்...நா தப்பிச்சண்டா சாமி....! - சொல்லி முடித்தார்.                                                                     அப்போ ரிபு கையைப் பிடிச்சு அழைச்சிட்டுப் போயி சாவு விளிம்புல விடல உங்கள...சரிதானே...!? என்றேன் நான். என்ன சொல்றீங்க நீங்க..? என்றவர்...தானும் ரிபு பற்றிப் படித்திருப்பதாகச் சொன்னார்.                       இதுன்னில்ல...வேறே கெட்ட பழக்கங்களுமே இந்த ரிபுவுல சேரும்...அது நம்ம இந்த பூமில பிறக்கிறபோதே உடம்போட வந்தது. குடிக்கு அடிமையாகுறது....தீனிக்கு அடிமையாகுறது...உறக்கத்துக்கு அடிமையாகுறது..வேறே போதைக்கு அடிமையாகுறது....பெண் பித்தனா மாறிப் போறதுன்னு பலதும் இருக்கு....ஒரு வேளை அந்தச் சிந்தனைகளும் இடை இடைல என்கிட்ட இருந்ததுனாலதான்...விடுபட்டுச்சோ என்னவோ...                          அதற்குப் பிறகுதான் என் வாழ்க்கை சீராக ஆரம்பித்தது என்றும், முழுக்க முழுக்க மனைவியிடமே கவனம் செலுத்த ஆரம்பித்தேன் என்றும், அவளின் அளவிடமுடியா அன்பு தன்னைக் கட்டிப் போட்டு அடிமையாக்கி விட்டது என்றும், இதுநாள் வரை அவள் உடம்பே கதி என்று தான் கிடப்பதாகவும் அதுவே தனக்கு இன்னும் அலுக்கவில்லை என்றும், அவளும் என்றும் மறுத்ததில்லை என்றும் அந்த மறுப்பற்ற தன்மைதான் என்னை குற்றவுணர்ச்சிக்கு இன்று ஆளாக்கியிருக்கிறது என்றும் சொல்லி முடித்தார்.                                இந்த அக்கறையை முன்பே காண்பித்திருக்கலாமே என்று தோன்றியது எனக்கு. இப்போதுதான் அவசியம் வந்ததோ! என்று நினைக்க ஆரம்பித்தேன்.                                                                    மனசாட்சி பேச ஆரம்பிச்சிடுச்சில்ல....இனிமே உங்களால தப்புப் பண்ண முடியாது என்றேன் நான்.             உண்மைதான்...ஆனா செய்த தப்புக்கு சிலபேருக்கு மன்னிப்பே கிடைக்காது போல்ருக்கு...-என்றார் உடனே.       என்ன சொல்றீங்க...?  என்றவாறே அவரைத் தீவிரமாய் நோக்கினேன். முகத்தை வேறொரு புறம் திருப்பிக்கொண்டு நிதானமாய்ச்  சொன்னார்.... என் பெண்டாட்டியின் நடவடிக்கைகளே இப்ப வித்தியாசமா இருக்குடா....!                                                                                                                                                                                                                                                                      ------------------------------------                                  

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...