12 அக்டோபர் 2020

வீதிக்கு(ள்) வந்த வினை - சிறுகதை

    

 வீதிக்கு (ள்) வந்த வினை

  ன்றைய ஞாயிறு விடுமுறையன்று,பொழுது விடிந்தும் விடியாத நேரத்தில்  வாசலில் காலிங் பெல் அடித்தது. டிங்…டிங்.. என்று இரண்டே ஒலியில்  சுருக்கமாய் இல்லாமல் ஒரு நீண்ட இசையாய் எழும்படி  தேர்வு செய்து வாங்கி மாட்டியிருந்த அந்தக் கருவி நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கூட எழுப்பி விடும் விதமாய் தொல்லையாய் உணரப்பட்டது. இந்த வாழ்க்கையில் பல சங்கடங்களை நாமே வருத்திக் கூட்டி அனுபவிக்கிறோம்தான். மொத்த வாழ்க்கையில் மனிதன் இம்மாதிரிப் புற விஷயங்களில் ரொம்பவும் கருத்தாகவும், கவனமாகவும் இருப்பதற்கென்றே ஒரு தனி அனுபவம் வேண்டும்.

      யாருன்னுதான் போய்ப் பாரேன்…..என்று கணேசன் சொல்ல….ஏன் நீங்க போய்ப் பார்க்கக் கூடாதா….? என்று உடனடியாக மறு கேள்வி விழ, ஏன் கேட்டோம் என்று இவனையே நொந்து கொண்டு எழுந்து வேட்டியைச் சரி செய்து கொண்டு போய்க் கதவைத் திறந்தான்.

      குட் மார்னிங்…. காலைல தொந்தரவு பண்ணிட்டேனா…?- கேட்டுக் கொண்டே, ஒரு நிமிஷம் இப்டி வர்றீங்களா….? என்று இவனை கார் ஷெட் பக்கம் அழைத்தார் அவர். அதிசயமாய் என்ன இவர் வந்திருக்கிறார்? இந்த வழியே வீதியில் செல்லும்போது திரும்பி ஒரு பார்வை கூடப் பார்க்க மாட்டாரே? அதைக்கூடக் கௌரவமாய் நினைப்பவராயிற்றே?-எண்ணியவாறே கீழே இறங்கினான்.                                                  அந்தக் காலை நேரம் காற்று சற்று பலமாய் வீசிக் கொண்டிருக்க வீதியில் பறக்கும் செத்தை குப்பைகளோடு சேர்ந்து புழுதியும் கிளம்பிப் பறந்து இடம் மாறிக் கொண்டேயிருந்தன. அந்த நகரின் மற்ற எல்லாத் தெருக்களுக்கும் லிங்க் ரோடாக இருந்தது இவன் வசிக்கும் தெரு. சற்று நீண்ட வீதிதான். எத்தனை இடங்களை இணைக்கும் பாலமாய் விளங்குகிறது?  அதனால் போக்குவரத்து இரவு பகல் வித்தியாசமில்லாமல் இருந்து கொண்டேயிருக்கும். ஜனப் புழக்கம் அதிகமிருக்கும்.. பல சமயங்களில் இரவுத் தூக்கம் பாழாகும்.

      ஷெட்டில் போய் ஓரமாய் நின்றார்கள். அவரின் பாதுகாப்பு உணர்வு புரிந்தது இவனுக்கு.  கார் வாங்குகிறேனோ இல்லையோ, ஷெட் கட்டியாயிற்று. பதின்மூன்றரை அடி நீளம் இருக்கு. ஒரு சின்ன மாருதி நிறுத்த முடியாது…? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டு ஷெட் போட்டுவிட்டான்.

      என்ன சார்…இந்தக் காலை நேரத்துல…. ? என்று வியப்போடு கேட்டான். அவர் பெயர் பன்னீர்செல்வம். இவன் வேலை பார்த்த துறையின் அதிகாரி. இவன் உதவியாளராக இருக்க அவர் அதிகாரியாகத் திகழ்ந்தார். மனுஷனிடம் லேசில் ஒரு கையெழுத்து வாங்கி விட முடியாதாக்கும். . ஒவ்வொன்றிலும் நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்று சந்தேகம் கொள்வார். எல்லாமும் திருப்தியுற விளக்கிய பின்னாலும் சந்தேகப்படுவார். எதற்கும் இருக்கட்டும், அப்புறம் போடுறேன் என்று கையால் கோப்புகளைத் தள்ளி வைப்பார். அடச் சே…! இந்தாள்ட்டப் போய் நின்னம்பாரு…என்று இருக்கைக்கு வந்து சலித்து உட்கார்ந்த நாட்கள் எத்தனையோ…!                                                                      இப்டி சந்தேகப்பட்டீங்கன்னா ஆபீசை எப்டி ரன் பண்றது….? என்று கேட்டே விட்டார் மேலாளர். அன்று அந்தக் குறிப்பிட்ட ஒரு கோப்பு மட்டும் உடனே கையெழுத்தானது. மத்ததெல்லாம் கிடப்புதான். கோப்போடு திரும்பி நடக்கும் நம்மையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்..! அவசரப்பட்டுட்டமோ என்றும் ஏமாத்தி வாங்கிப்புட்டானோ…என்றும்…நாற்பது பணியாளர்களுக்கு சம்பளப் பட்டியல் போட்டால் ரிஜிஸ்டரையும் கருவூலத்திற்கு அனுப்பும் பட்டியலையும் வரி வரியாய், எழுத்து எழுத்தாய் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் ஒப்பமிடுவார். நின்று வாங்குவது கடினம். வைத்து விட்டு, போடுற போது போடட்டும் என்று வந்துவிடுவதுதான். அதுதான் அவரது ஆத்மார்த்த விருப்பம்.

      எதுக்கு இந்தாளெல்லாம் ஆபீசரா வர்றாரு….? எங்கயாவது ஒரு டம்மி போஸ்ட்ல போய் உட்கார வேண்டிதானே…இந்த மாதிரி முக்கியமான ப்ராஜக்ட்ல இப்டி ஆசாமிகளையெல்லாம் போட்டா வௌங்கினாப்லதான்….வேல ஜரூரா நடந்திரும்…..

ஒரு முறை அலுவலகப் பணியாளர்களிடம் சத்தமாய் இவன் அலுத்துக்கொண்டது எப்படியோ அவர் காதுக்கும் மேலிடத்துக்கும் போய்விட்டது. அங்கே சிரித்ததாகச் சொன்னார்கள். இந்தாள் அதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை. சரியான கல்லுளிமங்கன்.

இன்று இவனே மேலாளராக இருக்கையில் தேடி வந்திருக்கிறார். சுற்று முற்றும் பார்த்துத் தயங்கியவாறே நின்ற அவர்…அங்கே பாருங்க… என்றார்.

எங்க சார்…..உங்க மச்சினன் வீட்டையா….? அதுக்கென்ன….? என்றான். இங்கிருந்து பத்துப் பன்னிரெண்டு வீடுகள் தள்ளியிருந்தது அது.

நல்லா கவனிச்சு…உற்றுப் பாருங்க… என்றார் மீண்டும்…முகத்தில் கலவரம்.

என்ன…ஒண்ணுமில்லியே….வாசலுக்கு நேரே மேலே பால்கனி…அதானே….? – இவன் கண்ணுக்கு ஒன்றும் படவில்லைதான்.

அந்த பல்ப்பை கவனிச்சீங்களா….சிவப்புக் கலர்லே….!

அப்போதுதான் இவனுக்கு உறுத்தியது….அது…. அட…ஆமா….! அதென்ன சார்…சிவப்புப் பேப்பரைச் சுத்தி வச்சமாதிரி….மங்கலா...நைட் லாம்ப் போல...கண்ணுக்குக் குளிர்ச்சியா பச்சை, ப்ளூன்னு போட வேண்டிதானே...எதுக்கு ரெட் கலர்...?

அதான் அங்க விபரீதம்….தெரியுதா இப்ப….! அந்த வீட்ல தப்பு நடக்குது சார்… தப்பு நடக்குது….எனக்கே இப்பத்தான் தெரிய வந்தது….- சொன்ன போது அவர் முகம் இருண்டு போனது. அது ஒரு சின்ன அடையாளம் வர்றவங்களுக்கு... ஏற்கனவே ரொம்பக் கவலைப் பட்டிருந்தால்தான் அப்படி உடனடியாக இருண்டு கறுத்துப் போகும் என்று தோன்றியது எனக்கு. முகத்தில் பயமும் படர்ந்திருந்தது.

தப்பு நடக்குதுன்னா ….? – புரிந்தும் புரியாமல் கேட்டான். மனதில் எதுவோ ஓடியது.

என்ன சார் இப்டிக் கேட்குறீங்க….? புரியலையா உங்களுக்கு?  அபச்சாரம் சார்… …பெரிய்ய்ய அநாச்சாரம்  நடக்குது அங்க……. ….நம்ப சப் டிவிஷன் முனியாண்டில்ல….அதான் சார்ஃபர்ஸ்ட் கிரேடு டிராஃப்ஸ்ட்மேன்…தாடண்டார் நகர்ல இருக்காரே….அவரு ஒரு கோஷ்டியா தெனமும் வாக்கிங் போவாங்க….நம்ப ஏரியாவக் கடக்கும்போது கவனிச்சிருப்பார் போல்ருக்கு….உடனே எங்கிட்ட இதுக்குன்னு வந்து சொல்லிட்டுப் போறாரு…..உடனடியா கவனிங்கன்னு….அதான் ஓடியாந்தேன்……நினைச்சா உடம்பெல்லாம் நடுங்குது சார்…ஏன்தான் இப்டி வாடகைக்கு விட்டனோ….? என் புத்திய செருப்பால அடிக்கணும்…இதுலேர்ந்து எப்டி மீளப் போறனோ….பயமாயிருக்கு சார்….நீங்கதான் காப்பாத்தணும்…

மனுஷன் வந்து நிற்பது அவருக்கு மட்டுமில்லாமல் அந்தத் தெருவுக்கே…தெருவா அது...நீண்ட வீதியாயிற்றே! நடக்க நடக்க முடியாத வீதியாயிற்றே...!  அதுவும் இவன் குடியிருக்கும் அந்த வீதியிலே, என் வீட்டுக்குக் கொஞ்ச தூரத்திலே, பாதகமான ஒன்றாகவல்லவா இருக்கிறது? இத்தனை நாள் இவன் கவனித்ததேயில்லை. எத்தனையோ முறை அந்த வழியில் வண்டியில் போகிறான்…வருகிறான்… கண்ணுக்குப் பட்டதில்லை….எப்படிப்படும்? அதுதான் இரவில் நடக்கும் விஷயமாயிற்றே…? இப்பொழுதுதான் உறைத்தது ஒன்று. ராத்திரி பனிரெண்டுக்கு மேல் அடிக்கடி ஆட்டோ போகும், வரும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கிறதே என்று ஒருநாள் யோசித்திருக்கிறான். எப்பொழுதும்  இரவு சற்றே அடங்கிப்போகும் …லிங்க் ரோடுதான் என்றாலும் அதற்கும் ஒரு ஓய்வு உண்டுதானே…! இப்போது சமீப நாட்களாய் அடிக்கடி சத்தத்தோடும் இரைச்சலோடும்…..மாடியில் நடக்கும் வேளைகளில் கூட கண்ணில் பட்டிருக்கிறதுதான் அந்தச் சிவப்பு விளக்கு…ஆனால் புத்தியில் உறைத்ததில்லை. .என்ன ஒரு தீவிரமான அடையாளம்…? கௌரவமானவர்கள் குடியிருக்கும் அந்தப் பகுதியில், எவரையும் லட்சியம் செய்யாமல், தைரியமாய் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து, அதுவும் ஓரமான, ஒதுக்கமான அல்லது ஜன சஞ்சாரமேயில்லாத, யாரும் லேசில் அறிய முடியாத பகுதி என்று கூட இல்லாமல் (அப்படியிருந்தாலும் அது தப்புதான்…) நட்ட நடு வீதியில் தைரியாய் இப்படி ஒரு விபரீதமா? எனக்கு படபடவென்றது. அடாவடியான ஆளாய் இருக்குமோ? என்ன வாடகைக்கு விட்டார் இந்த மனுஷன்? வினையை விலைக்கு வாங்கிட்டு? இருக்கும் ஆபீஸ் பிரச்னை போதாது என்று இதுவேறா?

தெருவின் பிரதிநிதி இவன். என்ன ஒரு கேவலம்? என் பகுதியின் ஒவ்வொரு அசைவுகளும் எனக்குத் தெரிந்திருக்க வேண்டாமா? தெரியவில்லையே...அப்புறம் என்ன ஆள் நான்?   வெட்கப்பட்டது மனது. வெட்டி கௌரவத்துக்கா ஒரு போஸ்ட்?

எத்தனை அக்கறையாய் அந்த நகரை நிர்மாணித்தது? வீடுகள் வர வர, ஒவ்வொருவராய்ச் சேர்த்து, நலச் சங்கம் அமைத்து, தெரு விளக்கு, தண்ணீர்க் குழாய், பஸ் வசதி…சாலை வசதி,  சாக்கடை, பூங்கா என்று பண்ணி, அலையாய் அலைந்து உருவகப்படுத்தி வைத்திருக்க….நோகாம நொங்கு திங்கிற வேலை…இது…அதுவும் இப்படியொரு அநியாயம்? அடுக்குமா? அதுநாள் வரையிலான நலச் சங்க உழைப்பு என்னாவது?

நீங்கதான் இந்தத் தெருவுக்கு ரெப்ரஸென்டேடிவ்….உடனடியா இதைச் சங்கத்தோட கவனத்துக்குக் கொண்டு போய் நாளைக்கே அவுங்கள விரட்டியாகணும்…இல்லன்னா படு கேவலமாயிடும்… - இவன் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சும் பாவனையில் சொன்னார் பன்னீர். பிறகு தொடர்ந்தார்....

மாட்டேன்….மாட்டேன்னேன் சார் என் மச்சினன்ட்ட…கேட்டானா…? வற்புறுத்தி சாவியத் திணிச்சிட்டுப் போயிட்டான்…இப்ப நான் மாட்டிக்கிட்டேன்…. –என் தலைல நானே மண்ணை வாரிப் போட்டுக்கிட்டேன்…. – நிறுத்தாமல் புலம்பினார்.

நலச் சங்கத்துக்கு சந்தாக் கொடுங்க…என்று சொன்னபோது நாலு தரம் அலையவிட்டுத்தான் தந்தார். கூட்டத்துக்கு வாங்க… என்று தல தலையாய் அடித்துக் கொண்டபோது கௌரவம் பார்த்தார். ஆபீஸர் நானு…இவங்களோட போய் உட்கார்றதா….? பொதுப்புத்தி இன்னும் மண்டையில் ஏறவில்லை அவருக்கு.

ரிடையர்ட் ஆனா எல்லாப் பயலுகளும் பென்ஷனர்தான்….அதுல மேலென்ன, கீழென்ன…? இவர் மட்டும்தான் ஆப்பீசரா…? நாங்கள்லாம் இல்லயா…? என்னா ஆளு இவரு…இப்டியிருக்காரு…? இவர்ட்ட எப்டி வேலை பார்த்தீங்க…? – எத்தனையோ பேர் சங்கக் கூட்டங்களில் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதையேன் கேட்குறீங்க…? என்று ஆரம்பித்தால் கதை கதையாய்ச் சொல்லலாம்தான். பொது வெளியில் அது உகந்ததல்ல….என்று அமைதி காத்திருக்கிறேன். அவரின் கௌரவம் பாதுகாத்திருக்கிறேன்.

இப்போது இதைப் போய்ச் சொன்னால் என்ன சொல்வார்களோ? சொல்வதென்ன…அதற்காக இதைச் செய்யாமல் முடியுமா? தெருவுக்கான, அந்த நீள் வீதிக்கான, ஏன் அந்த நகருக்கான பொது நலம் சார்ந்த விஷயமாயிற்றே….? குடியிருப்போர் கொந்தளிப்பார்களே…! சாம்பலுக்குள் கனன்று கொண்டிருக்கும் நெருப்பாய் இருந்தால்?

யாரைக் கேட்டுட்டு சார் வாடகைக்கு விட்டாரு….? சங்கத்துல சொன்னாரா…?– மறுநாளைய சங்கக் கூட்டத்தில் இந்தக் கேள்வி விழத்தான் செய்தது. கேள்வி கொஞ்சம் ஏடாகூடமானதுதான் என்றாலும் அப்படிக் கேட்டது எல்லோரையும் ரசிக்கத்தான் வைத்தது. எப்படியோ கூட்டம் ஸ்வாரஸ்யமாய் நடந்தால் சரி என்று நாலுபேர் இருக்கத்தானே செய்வார்கள்? ஒவ்வொருத்தரும் அவரவர் சொந்த வீட்டை வாடகைக்கு விடுவதற்கெல்லாமா சங்கத்தைக் கேட்க முடியும்? என்ன அபத்தம் இது?

அதானே பார்த்தேன்…கேள்வி கேட்காம வெறுமனே ஒப்புத்துக்கிட்டா எப்டி? – எப்போதும் தமாஷாகவே ஒரு விஷயத்தை எதிர்நோக்கும்  பஞ்சாயத்துப் பாண்டுரங்கன் இப்படிச் சொன்னார். அவர்தான் வீடு கட்டும் ப்ளான்களுக்கெல்லாம் அப்ரூவல் வாங்கிக் கொடுப்பது…வீட்டு வரி நிர்ணயம் செய்து கொடுப்பது…இப்படியான பணிகளைச் செய்பவர்….நல்ல சில்ரை…..அவர் இப்படி கட்டன்ரைட்டாகக் கேள்வி கேட்பது சரியில்லைதான். இருந்தாலும் சங்கத்தின் மெம்பர் என்கிற முறையில் கேட்க உரிமையிருக்கிறதுதானே…!

வாடகைக்கு விடுறதுக்கெல்லாமா சங்கத்துல சொல்வாங்க….? அது அவுங்கவுங்க இஷ்டம்…..அதிலெல்லாம் தலையிட முடியாது…

அப்போ அவங்க பிரச்னையை அவங்கதான் பார்த்துக்கணும்….தீர்த்துக்கணும்…

மந்த்லி மீட்டிங் ஒண்ணு கூட அட்டென்ட் பண்ணினதில்ல அந்தாளு…இப்போ பிரச்னைன்னவுடனே வர்றாராக்கும்…?.-

உங்க வீட்டுக்கு எதிர்த்தாப்ல மாடில குடியிருந்த ஒருத்தர் காலி பண்ண மாட்டேன்னு அடம் பிடிச்சாரே…அப்ப அந்த விவேகானந்தன் சார் சங்கத்துக்கா வந்தாரு….அவரேதானே முயற்சி பண்ணித் தீர்த்துக்கிட்டாரு….அத மாதிரித்தான் இவரும் பண்ணிக்கணும்….

அது ஒரு தனிக்கதை....கெட்ட பெயர் வராமல் தப்பிய கதை.

இருக்கட்டும் சார்…எல்லாராலயும் அப்டி  இருக்க முடியுமா? சக்தியில்லாதவன் நாலுபேர் இருக்கத்தானே செய்வான்... அவங்களுக்கு ஆதரவு கொடுக்கிறது நம்ம கடமைதானே…ஒரேயடியா அப்டிக் கையை விரிக்க முடியுமா…?

ஒரு நூறு ரூபா தர மாட்டாருங்க… அவரு….ஆண்டுச் சந்தா….வெறும் நூறுதான்னு சொல்லிப் பார்த்தாச்சு….அதுக்கே மூக்கால அழுதாரு உங்க ஆபீசரு….போனாப் போகுதுன்னு நாலு தடவை அலைய வச்சுத் தர்றாரு….இப்போ….? வகையா மாட்டிக்கிட்டாருல்ல அய்யா…? ரொம்ப ஜாக்கிரதையா இருக்கிறதா தன்னை நினைச்சிக்கிறவங்கல்லாம் இப்டித்தான் எதுலயாவது  மாட்டிக்கிட்டு முழிப்பாங்க….

சரி விடுங்க…..அவரே தீர்த்துக்கிறமாதிரி பிரச்னையா இப்ப அது இல்ல…பொதுப் பிரச்னை….நாமதான் தீர்த்தாகணும்..இல்லன்னா நமக்குத்தான் அசிங்கம்… என்ன செய்யலாம் சொல்லுங்க…? –வெட்டிப் பேச்சு ? விஷயத்தை அழுத்தமாய் முன் வைத்தான்.

கணேசன் சாருக்கு அவசரத்தப் பாரு…? அவர் தெருவுல்ல…அதான்…பதர்றாரு….

பதறாம…? பின்ன என்ன செய்றது? விஷயம் அப்படிப்பட்டதுல்ல…? சாவகாசமாப் பார்த்துக்கலாம்ங்கிற மாதிரியா இருக்கு …? போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கணும் சார்….

போலீசு……கம்ப்ளெயின்டா…? கத கெட்டுது போங்க….

வேஸ்ட்ங்கிறீங்களா…….?

வேஸ்ட் கிடையாது…முயற்சிக்கலாம்…நடந்திடுச்சின்னா நல்லதுதானே…? உறுதியாச் சொல்ல முடியாது....உள் குத்து என்ன இருக்கோ...யார் கண்டது?

நீர் ஒராளு போதும்யா…எதையும் முட்டுக்கட்டை போடுறதுக்கு…. – மறுபடியும் வாயைத் திறந்தார் பாண்டுரங்கன். கூட்டத்தைக் கலகலப்பாக்குவது அவர் பணி.

உமக்கென்ன பேசுவீரு….இருந்த எடத்துலயே சில்ரை பழுக்குது….உம்ம விட்டா வேறே ஆளு கிடையாது….பஞ்சாயத்தையே கைக்குள்ள வச்சிருக்கீரு…-போக்குவரத்துத் துறை பாண்டியராஜன் எப்பொழுதும் பாண்டுரங்கனைக் கிண்டலடிப்பது வழக்கமான ஒன்று. காசும் காசும்தானே கை கோர்த்துக் கொள்ளும்.

கடைசியில் அந்த ஏரியாவுக்கான வடபகுதிக் கன்ட்ரோல் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெயின்ட் எழுதிக் கொடுப்பது என்று தீர்வானது. தலைவர், செயலர், காசாளர் மற்றும் ரெண்டு மூன்று இ.சி. மெம்பர்கள் கூடிச் செல்வது….

பெட்டிஷனா…?சரி…சரி…அப்போ…அதுவரைக்கும்…அமோகம்தான்…..என்று சொல்லிக்கொண்டே வெடிச் சிரிப்புச் சிரி்த்தார் பாண்டுரங்கன்.  கையில் கன்னா பின்னாவென்று காசு ஏறுபவனுக்குத்தான் இப்படி விட்டேற்றியாய்ச் சிரிப்பு வரும்  என்று தோன்றியது கணேசனுக்கு. வெற்றிலைக் காவி ஏறிய அந்த வெட்டிச் சிரிப்ப வெறுப்பை ஏற்படுத்தியது.

இரவு கூட்டம் முடிந்து வெளியே வந்து வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது பன்னீர்செல்வம் கேட்டார்.

இப்பயே  பெட்டிஷன் எழுதி எல்லார்கிட்டயும் கையெழுத்து வாங்கியிருக்கலாமில்ல…? வெறுமே கூடிக் கலையறதுக்கா சங்கம்….? ஆளுகள அப்புறம் பிடிக்கிறது சிரமமாச்சே…!

அவருக்கிருக்கும் அவசரம் புரிந்தது. சர்வீஸ்ல இருந்தபோது தன் கையெழுத்தைப் போட என்னமா யோசிப்பார் இந்த மனுஷன்? இப்போ அடுத்தவன் கையெழுத்துக்குப் படுற அவசரத்தப்பாரு....?

என்ன ஒரு அலுப்பு இவருக்கு….சரியாய் ஆட்களை விசாரிக்காமல் வாடகைக்கு விட்டு விட்டு இப்போது மட்டும் அவசரப்பட்டால் எப்படி?

இப்போ இந்த விஷயத்துக்காக இவன்ட்ட வந்து நிக்க வேண்டிர்க்கேன்னு நினைச்சிருப்பாரோ…? ஓட்டை கௌரவம்...!

அவரின் அவசரம் புரிந்தது. கூடவே அந்த வேதனையையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டோமே என்ற கலவரம் அவர் முகத்தில் அகலாது கிடந்தது. நாளைக்கே வெளியேத்தியாகணும் என்று நின்றவருக்கு சங்கத்தின் சாவகாசமான நடவடிக்கை திருப்தியளித்திருக்காதுதான். என்ன செய்யலாம்? இவனும் யோசிக்க ஆரம்பித்தான்.

அன்றிரவு தூக்கம் பிடிக்கவே வெகு நேரமானது. கண்ணயர்வதற்கு முன் ஒன்று உதித்தது மூளையில். முடி வெட்டிக் கொள்ளச் செல்லும் சலூன் சண்முகம் ஒரு முறை ஒரு விஷயம் சொல்லியிருந்தார் .அது அப்படியே பசுமையாய் மனதில் நின்று போயிருந்தது. அது அவருக்கு ஏற்பட்ட கடுமையான அனுபவம். ஆனால் அவரால் முடிந்தது அது. நம்மால் முடியுமா? நம்மால் என்றால் இதை இந்தப் பன்னீர்செல்வத்தை நம்பிச் செய்யலாமா? செய்தால்  கடைசிவரை திடமாய் நிற்பாரா? எதற்கும் முயற்சித்துப் பார்த்தால் என்ன? பாவம், பார்க்கவே பரிதாபமாயிருக்கிறது அந்தாளை….நம் பகுதியில் வேறு குடியிருக்கிறார்….இந்த விஷயம் நீண்டு கொண்டேயிருந்தால் அவருக்கும் அசிங்கம்…நமக்கும் அசிங்கம்…எவனாவது எதையாவது கேட்டு வைத்தால்? தெருப்புழுதி தலையில் அபிஷேகம் ஆன கதையாகி விடாதா?

என்ன சார்…ஸ்ட்ரீட் ரெப்ரசன்டேடிவ்ங்கிறீங்க…வெறுமே பார்த்திட்டிருக்கீங்க? இப்டியே போச்சுன்னா அப்புறம் உங்களுக்கும் இதுல பங்கு இருக்குன்னு எவனாவது உளறி வைக்கப் போறான்….? சட்டுப்புட்டுன்னு காரியத்தை முடிக்கப் பாருங்க…

 நாலு வீடு தள்ளியிருக்கும் நாகரத்தினம் இப்படித்தான் சொன்னார். என்னைக் கேட்கிறாரே…ஏன் இவருக்குத் தொடர்பிருக்கக் கூடாதா? எனக்குத்தான் இருக்கணுமா? …அடுத்தவன இப்டி சுலபமாக் கேள்வி கேட்கறது மூலமா தன்னோட தப்பை மறைச்சிக்கலாமில்ல… ஒருத்தன்? எவன் யோக்கியம்னு யாரு கண்டது? எவனத்தான் நம்ப முடியுது இந்தக் காலத்துல….? கணேசனின் மனசு கலங்கியேயிருந்தது. ஆபீசிலும் நிம்மதியில்லை. வீடு வந்தாலும் நிம்மதியில்லை. இந்தத் தெருப் பிரதிநிதி பொறுப்பை ஏன் ஏற்றுக் கொண்டோமென்றிருந்தது. அன்றாடம் ரயிலில் போவதும், வருவதுமே ஒரு பெரிய அலுப்பாய் இருக்கிறது. இதில் வாரத்தில் ஒரு நாள் ஓய்வாய் இருப்போமென்றால் அதற்கும் வழியில்லை. பிரச்னைகள் தனக்கென்று உதிக்கிறதோ? பொறுப்பேற்கும் இடமெல்லாம் ஏதாவது பிரச்னைகளா? பிரச்னை இருந்தால்தான் மனிதன் எதிர் நீச்சலடிக்க முடியும். எதுவுமே இல்லையென்றால் அந்த வாழ்க்கை சுவாரஸ்யப்படாது. அதில் சுரத்தேயிருக்காது.

நினைத்தான் இப்படி. ஆனாலும் சலூன் சண்முகத்தின் அந்த நடவடிக்கை மனதுக்குள் உந்திக் கொண்டேயிருந்தது. ஒரு தடாலடி பண்ணினாலென்ன?

றுநாள்  காலையில் முதல் வேலையாக வீரணனைக் கூப்பிட்டு விட்டான்.

போற வழிக்கு கம்மாப் பக்கம் வீரணன் இருந்தா நான் வரச் சொன்னேன்னு சொல்லுங்க….-மாடு குளிப்பாட்டப் போகும் மாயக்காளிடம் சொல்லி அனுப்பினான். கிராமம் கலந்த இடம் அது. பக்கத்தில் ஒரு சின்னஞ்சிறு கிராமம். அங்கிருக்கும் சனம் இங்கே குளிக்க வரும். கண்மாய் ஆடு மாடு குளிப்பாட்ட, மனிதர்கள் குளிக்க என்று கோலாகலமாயிருந்தது. தண்ணீர் இருக்கும்போதுதானே....! அங்கு தண்ணீர் இருந்தால்தான் இவன் இருக்கும் பகுதி வீடுகளுக்கு தண்ணீர் ஏறும். ஏற்கனவே கீழே கீழேதான் போய்க் கொண்டிருக்கிறது. வந்த புதிதில் அப்படியாயிருந்தது. கிணற்றில் குனிந்து கையால் தண்ணீரை அள்ளும் தூரத்தில். மனசுக்கு எவ்வளவ சந்தோஷமாயிருந்தது. இன்று? மூன்று சென்ட்...மூன்று சென்ட் என்று பிரித்து நெருக்க நெருக்கமாய்ய வீடுகள் குவிந்து விட்டன. தண்ணீரும் இருநூறு அடிக்குக் கீழே. காலக் கொடுமை.....!

வீரணன் இவன் அங்கு வீடு கட்டுகையில் வாட்ச்மேனாக இருந்தவர். பொருட்களுக்கு அத்தனை பாதுகாப்பு. சீலிங் இருபத்தியோரு நாள் ஊறல் என்றால் அதற்கு ஒரு நாள் குறைந்தாலும் இன்ஜினியரையே அனுமதிக்க மாட்டார். கட்டடம் பேஸ்மென்ட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஏற ஏற வளரும் பக்கச் சுவர்களுக்கு அனுதினமும் சொரியச் சொரியத் தண்ணீர் அடிப்பார். பகலில் வேலை நடக்கும்போது பெரிய இரும்பு  தகர பேசினில் தண்ணீர் நிரப்பி செங்கல்களை அதில் போட்டு முக்கி ஈரம் சொட்டச் சொட்ட  அனுப்புவார். செங்கலை நனைக்காமல் வைத்தால் வேலையாட்களைத் திட்டித் தீர்த்து விடுவார்….

நா என்னாத்துக்குய்யா இங்க வாட்ச்மேனா இருக்கேன்… சாமான்களுக்குப் பாதுகாப்பு மட்டும்தான்னு நெனைச்சீங்களா…அதான் இல்ல….உங்கள மேய்க்கிறதும்தான் என்னோட வேலை….ஓனரு அந்த உத்தரவ எனக்குக் கொடுத்திருக்காரு… வேலை நடக்கைல .நா பார்த்திட்டுத்தான் இருப்பேன்….என்று ஓங்கியடிப்பார். ஒன்றுக்கு நாலு, அஞ்சானால், அதாவது ஒரு தட்டு சிமிண்ட், நாலு தட்டு மணல்... அளவு மாறினால் விடமாட்டார்.....கத்தித் தீர்த்து விடுவார். விஷயம் என் காதுக்கு வந்துவிடும்.

…மனசாரக் காசு வாங்கறீங்கள்ல….அப்போ உண்மையா வேலை செய்ங்கய்யா…அஞ்சு மணிக்கே கையக் கழுவுறீங்க…? .ஒரு நாளைக்காவது உங்க துட்டை நாளைக்குத் தர்றேன்…அப்புறம் தர்றேன்.னு அந்த ஐயா இழுத்திருக்காரா…? என்னைக்காச்சும் உங்களுக்கு ரெண்டு வேளைக்கும்  வடை காப்பி இல்லாம இருந்திருக்கா….? சைட்டுக்கு வர்றப்பல்லாம் என்னமாச்சும் வயித்துக்கு  வாங்கிட்டுத்தானய்யா வர்றாரு…வெறுங்கையா வந்திருக்காரா எப்பவாச்சும்? நிலை வச்ச அன்னைக்கு எல்லாத்துக்கும் எப்டித் திருப்தியா கறிச்சோறு போட்டாரு….யாராச்சும் செய்வாகளாய்யா இந்தக் காலத்துல….? காசுன்னு பார்க்காம வாரி எறைச்சாரில்ல….அப்டி ஆளுகளுக்கு உண்மையா உழைக்கணும்யா….அப்பத்தான்யா வாங்குற காசு நிக்கும்….திங்குற சோறு செரிக்கும்…

போடுகிற போட்டில் வேலையாட்கள் கப்சிப் காராவடை என்று ஆகிப் போவார்கள். பழியாய்க் கிடப்பார் வீட்டு வேலை நடக்கிற இடத்தில். எப்பொழுது சாப்பிடப் போகிறார், வருகிறார் என்று தெரியவே தெரியாது. உறங்குகிறாரா என்பதே சந்தேகமாயிருக்கும்.

வீடு முடிந்து கிரஉறப் பிரவேசம் நடந்து, குடி வந்து  இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் வீரணனின் தொடர்பு உண்டுதான். வருஷா வருஷம்…தீபாவளி…பொங்கல் என்று…..அவருக்கு கொடுப்பதில் என்றுமே மனம் சுணங்கியதில்லை. ஒருவருக்குக் கொடுப்பது என்பதே மகிழ்ச்சியான விஷயம்தானே…! கொடுத்துப் பார்த்தால்தான் தெரியும் அந்த இன்பம்…சுசீலா மனம் நிறையக் கொடுப்பாள். அது அவள் கை நிறைய வரும். வேட்டி. துண்டு, பணம், ஸ்வீட், காரம் என்று தடபுடல் பண்ணுவாள். தாயீ...நீங்க நல்லாயிருக்கணும்...வீரணனின் ஆழ் மனதிலிருந்து வாழ்த்து வரும்.

ரெம்பச் சந்தோசம் சாமி…ரெம்பச் சந்தோசம்….என்று நாம் கொடுக்கும் துணிமணிகளையும், பண்டங்களையும் இனிப்புகளையும் கையணைத்து வாங்கிக் கொண்டு கும்பிட்டுவிட்டுப் புறப்படும் அழகே தனி. காபி சாப்டிட்டுப் போங்க…என்று மேலும் உபசரித்தால்…சரிங்க சாமி….என்று பிகுப் பண்ணாமல் அமர்ந்து கொள்வார். ஆளுகளைப் புரிந்து பதவாகமாய் ஆற்றி, அவர் தூக்கிக் குடிக்கும் அழகே தனி. சொன்னாலும் கேட்கமாட்டார்…அலம்பி வைத்து விடுவார். உங்க வீட்டுக் காபி ரொம்ப இஷ்டம்…அதான்…!.வாட்ச்மேன் என்றால்…ஏழை என்றால் அவனுக்கு நாக்கு ருசி இருக்கக் கூடாதா என்ன…? விரும்பி உண்பவனுக்குத்தான் கொடுக்க வேண்டும். வேண்டி நிற்பவர்களுக்குத்தான் வழங்க வேண்டும்.

சாமீஈஈஈஈஈஈஈஈஈ………

வாசலில் நீட்சியாய்க் குரல் வந்ததும் வீரணன்தான் என்று தெரிந்தது. இந்த ஞாயிற்றுக் கிழமை ஓய்வு அவ்வளவுதான் என்று முடிவு செய்து கொண்டான்.

உள்ளே அழைத்து நலம் விசாரித்து விட்டு விஷயத்தைச் சொன்னான். மோவாயில் கைவைத்து வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தார் வீரணன்..

ஆமா சாமி…நானும் கவனிச்சேன்….என்னமோ மாதிரித் தெரியுதே….அய்யாட்டச் சொல்வமான்னு நெனச்சிட்டிருந்தேன்….நீங்களே கேட்டுப்புட்டீக….வெளியேத்திர வேண்டிதான்…..எனக்கு ஒரு மணி நேரம் டயம் கொடுங்க…இதோ வந்திர்றேன்….. சொல்லி விட்டு சட்டென்று எழுந்து ஓடினார்.

பன்னீர்செல்வத்திற்குச் சொல்லி விட்டான். கொஞ்ச நேரத்தில் வந்து விட்டார். வேறொரு ஏற்பாடு…என்று சொல்லி விஷயத்தைச் சொன்னான். பயந்ததுபோல், அரைகுறையாய்ச் சம்மதிப்பது போல் தலையாட்டினார்.

இந்த மனுஷன நம்பி இறங்கலாமா என்று சந்தேகம் வந்தது இவனுக்கு.

ஒரு மணி நேரம் என்று சொல்லிவிட்டுப் போன வீரணன் மதியத்திற்கு மேல்தான் வந்தார். கூட ஒரு ஆளைக் கூட்டி வந்திருந்தார். பார்க்கவே கொஞ்சம் நடுக்கமாய்த்தான் இருந்தது. தேவையா என்று கூடத் தோன்றியது. இவனுக்கே அப்படியென்றால் பன்னீர் சாருக்குக் கேட்க வேண்டுமா?

கொஞ்சம் உள்ளே வாங்க…என்று வீட்டு அறைக்குள்ளேயே இவனை  உரிமையோடு அழைத்துக் கொண்டு போனார்.

என்னங்க…ஆளப் பார்த்தா பகாசுரன் மாதிரியிருக்கான்…பெரிய ரௌடியா இருப்பான் போலிருக்கு இவன்ட்டல்லாம் சொல்லி ஒண்ணுக்கு ரெண்டா இழுத்து விட்டுக்கணுமா….யோசிங்க…. அறிஞ்சே தலையக் கொடுக்கிறதா…?

வாய மூடுங்க...காதுல விழப்போகுது! அப்போ இன்னும் கொஞ்ச நாளைக்கு வியாபாரம் அமோகமா நடக்கட்டும்னு விட்ருவமா? என்றான். ஆபீசராய் இருந்த அவரிடம் என்றும் இப்படிப் பேசியதில்லை.  இப்போது ரெண்டு பேரும் வெளியாட்கள்தானே…? அதாவது அவர் ஓய்வூதியர்தானே…? அதனால்தான் சற்றே தைரியமாய் வார்த்தைகளை விட்டான்.

முதல்ல என்ன சொல்றான்னு கேட்போம்…..என்றார் கொஞ்சம் தயங்கி. அதுவே பெரிசு.

நானும் அதத்தான் கேட்கப்போறேன்….எடுத்த எடுப்புல  போய் அடிச்சு ஒடைச்சிட்டு வாங்கன்னா சொல்லப் போறேன்… என்றேன் கடுப்பாக.

வீரணன் ஆரம்பித்தார்….

சார்…ரெண்டு பேரும் போவோம்….விறு விறுன்னு உள்ளே போய் தடாலடியா இருக்கிற சாமாஞ்செட்டெல்லாம் அள்ளி வெளிய எறிஞ்சிட்டு ஆளுகளையும் பத்தி விட்டிட்டு, வீட்டைப் பூட்டி சாவியக் கொண்டாந்து உங்க கைல ஒப்படைச்சிருவோம்….அதிக பட்சம் ஒரு மணி நேரந்தான்…..ஆனா ஒண்ணு…போலீசு…கேசுன்னு போகக் கூடாது….அப்டியே  கமுக்கமா முடிச்சிக்கிறணும்….சம்மதமா சொல்லுங்க…..

கணேசன் பன்னீர்செல்வத்தின் முகத்தைப் பார்த்தான். முகத்தில் அவருக்கு முத்து முத்தாய்….ஊறீம்…தொப்பலாய்….இந்த வார்த்தைதான் சரி….. கேட்ட மாத்திரத்தில் வியர்த்து வழியும் இவர் இந்த வழிமுறைக்கு சரி சொல்லப் போகிறாரா என்ன? பார்த்தால் தெரியவில்லையா?

சொல்லியனுப்புறேன் வீரணன்……என்றான் கண்களைக் காண்பித்தவாறே.

புரிந்து கொண்ட அவர்…சரி…சாமீ……என்றுவிட்டு டீக்காசு வாங்கிக்கொண்டு  அந்தாளோடு கிளம்பிப் போனார். யோசனையோடு இவனும் படுக்கைக்குப் போனான். நல்ல அயர்ந்த தூக்கம்...என்னென்னவோ கெட்ட கனவுகள். படுப்பதற்கு முன் சொல்லும் ஸ்லோகமும், தியானமும் விட்டுப்போனது ஞாபகத்திற்கு வந்தது.

றுநாள் காலை….

அதே காலிங் பெல் இவனையும்,எங்கள் வீட்டையும் ஒரு நீள இசையோடு எழுப்பியது. கதவைத் திறந்தால் அந்த அதிசயம்.....

ரெண்டு வீடு தள்ளிய எதிர்வீட்டுக்காரரான கஜேந்திரன்…..அருமையான நண்பர்...

என்ன சார்….ஆட்கள வெளியேத்தியாச்சுல்ல….என்றார் அதிகாரமாக….. அதிர்ந்தேன்.

இவருக்கு எப்டி…இது....? புரியாமல் விழித்தான்.

நீங்க இது சம்பந்தமாத்தான் அலைஞ்சிட்டிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாது சார்... தெரிஞ்சிருந்தா உங்களுக்காக அன்னைக்கே சொல்லியிருப்பேன்….சரி...முடிச்சிட்டுச் சொல்வோம்னு இருந்திட்டேன்...அது பன்னீர் சார் வீடுன்னும் தெரியாது. நான் என்ன பண்ணினேன்….என்னவோ நம்ம தெருவுல தப்பு நடந்திட்டிருக்கு போல்ருக்கேன்னு …என் தம்பிக்குப்  பேசினேன்… …எதாவது உடனடியாப் பண்ணனும்னு சொன்னேன்.

.ஞாபகமில்லயா சார்….அன்புச்செழியன்னு சொல்வேனே…  மறந்திட்டீங்க...!  சென்னைல போலீஸ்ல இருக்கான்னு சொல்லியிருக்கேன்…நல்ல பேரு அவனுக்கு…. கமிஷனர்ட்டச் சொல்லி ஏற்பாடு பண்ணியிருக்கான் … …கம்பலாபுரம் போலீஸ் ஸ்டேஷன்தானே இன்சார்ஜ்…உடனே பேசிட்டாங்க… அங்கிருந்து....ராவோட ராவா ஒரு எஸ்.ஐ., நாலு போலீஸ்…அதிரடியா வந்து ஆளுகள அடிச்சுப் பத்தி அள்ளிப் போட்டுட்டுப் போயாச்சு... …..விடியறதுக்குள்ள எல்லாம் ஓவர்……தெருவே பார்த்துச்சே சார்....                    அப்டியா...சூப்ப்ப்பர்....ஆச்சரியமாயிருக்கே...! எனக்கு ஒண்ணுமே தெரியாது. அசந்த தூக்கம்....நீங்க பெல் அடிச்சபோதுதான் முழிச்சேன்.....-வியப்பு விலகாமல் நின்றான்.           இனி இந்த ஊர்ல எங்கயுமே தலகாட்டக்கூடாதுன்னு சொல்லி   விரட்டியாச்சு...….. கூறிவிட்டு வெடிச் சிரிப்புச் சிரித்தார் கஜேந்திரன். திருதிருவென்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஓரே இரவில் இது சாத்தியமாகியிருக்கிறது. என்ன ஆச்சரியம்?  போலீஸ் பவர்...! பனி போல் விலகிவிட்டதே...!

இறுக்கமாக அவரது கைகளைப் பற்றிக் கொண்டான்.. அடுத்தாற்போல் அந்தத் தெருவுக்கு அவர்தான் பொருத்தமான ரெப்ரசென்டேடிவ். தகுதியான, வலுவான பிரதிநிதி.  என்று இவன் மனம்  அப்போதே சொல்லிக் கொண்டது.....                                         ஒரு வாரம் போய்விட்டது.அலுவலகம் போவதும்,வேலையில் மூழ்குவதுமாய் நாள் ஓடியதே தெரியவில்லை. ஆ னால் மனதிலிருந்த       அந்த இன்னொரு  ஆச்சரியம் இன்றுவரை அகலவில்லை இவனுக்கு.                                                          பன்னீர்செல்வம் சார் இவனிடம் வந்து இதுபற்றி, இன்றுவரை இந்த நிமிஷம்வரை ஒரு வார்த்தை சொல்லவில்லை.!! ஏன்...வீட்டு வாசல் பக்கமே, அந்த வழியிலேயே ஆளைக் காணவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்...! இவரா செய்தாரு...சொல்றதுக்கு? என்று நினைத்து விட்டாரோ?                                                           அல்லது     அது வீதிக்கு வந்த வினை....என்று விட்டு விட்டாரா? மனிதர்களின் சுயநலம்தான் எப்படியெப்படியெல்லாம் வேலை செய்கிறது? நினைத்துக் கொண்டான். அவருக்கான பிரச்னை மட்டுமா அது? தெருவுக்கான பிரச்னையல்லவா? பிரதிநிதியான இவனுக்கு ஒரு தலைவலி தீர்ந்தது என்றிருந்தது. பிரச்னைகளை எதிர்நோக்குவதே தன் வாழ்க்கை என்றாகிவிட்டதோ என்று சலிப்பு ஏற்பட்டது.

 

                   

 

 

     

                                                                    

 

கருத்துகள் இல்லை: