01 அக்டோபர் 2020

காந்திஜியின் எளிமை-ஜெயமோகனின் இன்றைய காந்தி

காந்திஜியின் எளிமை

காந்திஜியின் எளிமை மிகவும் செலவேறியது என்றார் சரோஜினி நாயுடு.  அவர் மூன்றாம் வகுப்பில் செல்லும் செலவில் ஐம்பது பேர் முதல் வகுப்பில் சென்றுவிடலாம் என்று கூறினார்.

வரலாற்று ரீதியாக இதைப் பார்த்தால்…மகாராஜாக்கள், வைஸ்ராய்கள் இவர்களின் வாழ்க்கையைக் கவனித்து வந்தவர்கள் ஆரம்ப காலத் தேசத் தலைவர்கள். அவர்களை காந்திஜி எளிமையிலும், கதர்த்துணியிலும் கட்டிப் போட்டிருந்தார். உள்ளே அவர்களின் ஆத்மா ஏங்கிக் கொண்டிருந்தது. எதற்கு? ஆடம்பர வாழ்க்கைக்கு. நேரு, படேல் உள்பட யாரும் 1946 வரைகூட இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதில் தாங்கள் உயர் பதவி வகிக்கக்கூடும் என்றும் நினைக்கவில்லை. அந்த வாய்ப்பு வந்ததுமே உச்சக் கட்டக் கனவுகள் தலை தூக்கின. காந்தி அவர்களுக்குக் குறுக்கே நிற்பதாக உணர்ந்தார்கள். அவர்களுக்கிருந்த ஒரே தடை காந்திஜிதான்.

     வட்ட மேஜை மாநாட்டைக் கூட சாணி மெழுகிய தரையில் அமர்ந்து நடத்தலாம் என்றவர் அண்ணல். வைஸ்ராய் மாளிகையை மியூசியம் ஆக்கிவிடலாம் என்றார். ஆட்சி மாறியதும் அவரவர் தங்கள் மாளிகையைப் மறுசீரமைப்பு (புதுப்பிப்பு அல்ல) செய்ய லட்சங்களை அள்ளியிறைத்தார்கள். குடியரசுத் தலைவர் ராஜேந்திரப் பிரசாத் வைஸ்ராய் மாளிகையை மேலும் அழகுபடுத்தி, பல நூறு வேலையாட்களை அமர்த்தினார். மாளிகையைக் கங்கை நீரில் கழுவி வேள்விகளைச் செய்தார்.

     உ.பி. கவர்னராக இருந்த சரோஜினி நாயுடு வைஸ்ராய்க்கு சமனமான ராஜரீகத் தனி ரயிலில் சிம்லா சென்றார். முழுக்க முழுக்கப் பொன்னாலும், பட்டாலும் ஆன நகரும் அரண்மனை அது. ஒரு கேரளப் பத்திரிகையாளர் கேட்ட கேள்வி இது.காந்தி மூன்றாம் வகுப்பில்தானே சென்றார்…இதற்குத்தான் மேற்கண்ட பதிலைச் சொன்னார் சரோஜினி.

     காந்திய அறக்கோட்பாடுகளை உதறத் துடித்த காங்கிரஸின் குரல் அப்போது அப்படித்தான் ஒலித்தது. காங்கிரசுக்கு, காந்தி காலத்தில் கிட்டத்தட்ட நாலரை, அஞ்சு லட்சம் முழுநேர ஊழியர்கள் இருந்தார்கள். சம்பளம் பெறும் ஊழியர்கள். மாதம் எட்டணா அவர்களின் ஊதியம். நம்புவீர்களா? படுகேவலமான நிலையில்தான் வாழ்ந்தார்கள். வக்கீல்கள், ஜமீன்தார்கள், பட்டதாரிகளான அவர்கள் ஊர் ஊராய்ச் சென்று பணியாற்றினார்கள். வெறுந்தரையில் படுத்து உருண்டு, இரந்து உண்டு, கால் நடையாய்ச் சென்று அலைந்து பணியாற்றினார்கள்.

     நவீன இந்தியாவின் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் இந்த நாலரை லட்சம் பேரிலிருந்து வந்தவர்கள்தான். பிரேம்சந்த், பன்னாலால், தாராசங்கர் பானர்ஜி, சிவராம கரந்த், விபூதிபூஷன் பட்டாச்சார்யா நம் வத்தலக்குண்டு சி.சு.செ. இவர்களின் தியாகமே, எளிய மக்களை காங்கிரஸை நோக்கி இழுத்தது.

     காந்தி வரும்வரை காங்கிரஸில் அந்தப் பண்பாடு இல்லை. சட்ட மேதைகளும், பேராசிரியர்களும் முதல் வகுப்பில் சென்று கட்சி கட்டிய காலம் அது. வருடம் தோறும் மாநாடு போடுவதற்கு என்று மட்டுமே கூடிய காலம். அதை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றிய பெருமை அண்ணலைச் சேர்ந்தது. எப்படி இப்படிப் பல லட்சம் ஊழியர்களை இழுக்க முடிந்தது. அவரது எளிமையே அதற்கு சான்று.

     உடுத்திய எளிய உடை, சாப்பிட்ட அலுமினியத் தட்டு, படுத்த கோரைப் பாய், உடல் தேய்த்துக் குளிக்க ஒரு வெள்ளைக்கல்….இவற்றுடன் அவர்  மூன்றாம் வகுப்பில் அல்லாது வேறு எந்தப் பெட்டியில் செல்ல முடியும்.

     தன் எளிமையை காந்தி ரகசியமாய் வைத்திருக்கவில்லை. அதுவே அவரது பிரகடனம். அதன் மூலம் அவரது அறைகூவல்கள் அநேகம். மன்னர்களுக்கும், பிரபுக்களுக்கும் தெளிவாகவே அது ஒன்றைச் சொன்னது. எளியவர்களின் காலம் வந்துவிட்டது. மன்னர்களின் காலம் முடிந்து விட்டது…என்பதுதான் அது. விக்டோரியா ராணிக்கே காந்தி தன் உடை மூலம் அந்தச் சேதியைச் சொன்னார். எளிய உடையில் சென்று அவருக்கு சமானமாக  எதிரே மேஜைமுன் அமர்ந்து பேசினார். காந்திஜியின் உடையைப் புரிந்து கொண்டது சாமான்ய விவசாயியும், சமையற்கட்டுப் பெண்டிரும்தான். அங்கே பிறந்ததுதான் இந்திய ஜனநாயகத்தின் அஸ்திவாரம்.

     மகாராஜாவின்ட சர்க்கார் போயி….இனி சன்யாசியுடே சர்க்காராணு….இனி நாடாருடே சர்க்காராணு…அவனாக்கும் நம்முடெ ராஜா…ஆளு பரம யோக்யன்….

     லெட்சுமிக் குட்டியம்மே…ஓட்டுப் போட்டிருங்க….என்று காமராஜ் தூரத்தில் இருந்து உரிமையுடன் ஆணையிட்டுச் சொல்ல….பெண்ணுகெட்டு நாடாரே….என்று பாட்டி கூவுவதைக் கேட்டிருக்கிறேன்….பாட்டிக்குத் தீராத மனக்குறை அவ்விஷயத்தில்.

     காந்திக்கு அன்று அரசாங்கத் தொண்டர்களான ஜமீன்தார்களிடமிருந்து பயங்கர எதிர்ப்பு வந்தது. மிகப் பெரிய ரவுடிக் கூட்டத்தைக் கட்டி ஆண்டவர்கள் அவர்கள். படேல்தான் காந்தி பயணம் செய்யும் மூன்றாம் வகுப்புப் பெட்டிக்கு ஆட்களை அனுப்பி பாதுகாப்பு செய்தார். அப்போது கூட சரோஜினி சொன்ன வார்த்தை இது. “காந்தி 3ம் வகுப்பில் சென்றதால்தான் காங்கிரஸ் நடந்து சென்றது”

     அதற்கு இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் சொன்னார். சரோஜினிகளும், நேருக்களும் வழி நடத்தியிருந்தால், காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் இல்லாத ஊர்களுக்குச் சென்றிருக்க மாட்டார்கள்.

     நண்பர்களே, கொள்கைகளும், கோட்பாடுகளுமல்ல…தியாகமே இயக்கங்களை உருவாக்கும் ஆதார சக்தி….என்பதற்கு அண்ணலை விட வேறு என்ன உதாரணம் வேண்டும். இ.எம்.ஸின் வீட்டில் ஒரேஒரு படம் உண்டு. அது காந்திஜியின் படம்தான்.தனி வாழ்க்கையின் ஆதர்சம் அவர்.  கடைசிவரை தன் சட்டையைத் தானே துவைத்துப் போட்டு வாழ்ந்த காந்தியவாதி அவர். அதனால்தான் கட்சித் தொண்டர்கள் சிங்கிள் டீ குடித்து விட்டு கட்சி வேலை பார்த்தார்கள்.

     “பவ்யம்” என்று ஒரு சொல் உண்டு. அதற்கு எளிமை, சமர்ப்பணம் என்று சமணத்தில் பொருள் சொல்கிறார்கள். தன்னை எளிமைப் படுத்திக் கொள்வதன் மூலமாகவே பாவங்களிலிருந்து ஒருவன் விடுபட முடியும் என்று நினைத்தார் அண்ணல்.

     காந்திஜியின் இளமைப் பருவம் அவரது அம்மா அவருக்கு அளித்த  கடுமையான விரதங்கள்தான். தன் இளம் வயதிலேயே தன்னை ஒடுக்கிக்கொள்ள ஆரம்பித்தவர் காந்திஜி. தன் உடல் மீதும், மனத்தின் மீதும் தான் கொள்ளும் கட்டுப்பாடு தன்னை வலிமைமிக்கவனாக ஆக்கும் என்று கண்டடைந்தார் காந்திஜி. அரசியலுக்கு வந்த காந்தி ஆன்மீகப் பயிற்சி மிக்கவராகத் திகழ்ந்தார். தியாகம் மூலம் வெல்வதே அவரது மெய்ஞானத்தின் சாரம். இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை, சுய கட்டுப்பாடு, நுகர்வு மறுப்பு….ஆகியவை அவரது வழிமுறைகள். அவர் உருவாக்கிக்கொண்ட சத்யாக்கிரகப் போராட்ட வழிமுறை அவரது அரசியலைத் தீர்மானித்தது.

     அவரை அலைக்கழித்தது இரண்டு விஷயங்கள். ஒன்று காமம் இன்னொன்று உணவு. இவ்விரு இச்சைகளையும் வெல்லாமல் தனக்கு எந்த வெற்றியும் கைகூடாது என்று உணர்ந்த அவர் தீவிரமான விரதங்கள் மூலம் அவற்றை ஒடுக்கினார்.

     தன் உடல் மற்றும் மனம் மீதான  அவரது சோதனைகள் விரிவானவை. அதற்கான உணவுகளையும், மருத்துவத்தையும் அவரே உருவாக்கிக் கொண்டார். எளியவாழ்க்கையை நம்பினார். மானுட சமுதாயத்திற்குள் பேதமில்லாத வாழ்க்கையை நடைமுறைப்படுத்த முயன்றார்.

     காந்தியை முதன்முதலில் மகாத்மா என்று சொன்னவர் தாகூர் என்று ஒரு நம்பிக்கை உண்டு. மத்தியப்பிரதேச பழங்குடியினரான கோண்டுகள்தான் அவரை முதன்முறையாக மகாத்மா என்றார்கள். காந்திஜி அதை வெறுத்தார். கண்டனம் தெரிவித்தார். அப்படிச் சொல்பவர்களை அவர் அருகே விடவில்லை. அந்தப் பட்டம் அவரைச் சங்கடப்படுத்தியது. தன் படத்தை ஒருவர் வைத்திருப்பதைப் பார்த்து வெட்கமுற்றார். கட்டாயப்படுத்தி அதைத் தூக்கியெறியச் சொன்னார். அவரைக் கண்டமையால் தன் நோய் தீர்ந்தது என்றார் ஒருவர். அதற்கு அவமானமும், வருத்தமும் உற்றார் அண்ணல்.

     உண்மையும் அஉறிம்சையும் புராதனமான மலைகளைப் போன்றது. முடிந்தவரை நான் அவற்றைக் கடைப்பிடிக்க முயல்கிறேன். அதன் மூலம் நான் வலிமை அடைந்து கொண்டேயிருக்கிறேன்.

     ஒரு தொன்மையான தேசம். இருபது நூற்றாண்டுகளாக நிலப்பிரபுத்துவம் விளங்கிய பகுதி. முக்காற் பங்குக்கு மேல் நிலத்தில் மன்னராட்சி. வெறும் 15 வருடங்களுக்குள் ஒரு தனி மனிதர் மொத்த சமூகத்தையே ஜனநாயக அரசியலுக்குக் கொண்டுவருகிறார்… காந்தியின் காங்கிரஸ்தான் இந்திய வரலாற்றிலேயே அதிகமான பெண்களை அரசியலுக்குக் கொண்டு வந்த இயக்கம்.

     காந்தியை நம்பி லட்சக்கணக்கில் எளிய நடுத்தரவர்க்க மக்கள் அலையலையாய் சிறைக்குச் சென்றார்கள். லட்சக் கணக்கில் பெண்கள் சிறைக்குச் சென்றார்கள். வீட்டை விட்டு வெளியே செல்வதே பெரும் பாவம் என்று விலக்கப்பட்டவர்களாக, நூற்றாண்டுகளாக வாழ்ந்த பெண்கள் அவர்கள்…அப்பட்டமான சாதி வெறிப் பின்னணியில் பிறந்து வளர்ந்த லட்சக்கணக்கானவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் சேரிகளுக்குச் சென்று வாழ்ந்தார்கள். அவர்களின் கழிவறைகளைச் சுத்தம் செய்தார்கள்.

     இந்தியாவின் மக்கள் இயக்கம் காந்திஜியின் ஒத்துழையாமைப் போராட்டமே. அந்த அலை மூலம் பல்லாயிரம் வருடங்களாக நிலப்பிரபுத்துவ மனநிலையில் வாழ்ந்திருந்த இந்திய சமூகம் அரசியலாக்கப்பட்டது. அந்த அரசியல் எழுச்சியை உருவாக்கியது எது? அச்சு ஊடகங்கள் மிக மிகக் குறைவு. வானொலி பரவலாக இல்லை. ஆயிரக் கணக்கான கிராமங்களில் மின்சாரம் கிடையாது. ஆகவே ஒலிபெருக்கி இல்லை. எப்படி காந்தி இந்த தேசத்துடன் பேசி கருத்தியல் ரீதியாக மக்களை ஒருங்கிணைத்தார்.?

     அவர் தன்னையே செய்தியாக்கிக் கொண்டார். தன் வாழ்க்கையே தன் செய்தி என்று கூற ஒரு தலைவனுக்கு அபாரமான மனத் திண்மை வேண்டும்தானே? என் தனி வாழ்க்கையில் ரகசியங்கள் இல்லை என்று அறிவிக்க என்னையே ஆய்வு செய்து பார்…என்றார். இந்திய அரசியலின் நூறு வருட வரலாற்றில் ஒரே ஒரு மனிதனைத் தவிர எவருமே அப்படிச் சொல்ல முடியாது. சந்தேகம் இருந்தால் நீங்கள் நம்பும் எந்தவொரு தலைவனுடைய அந்தரங்க வாழ்க்கையையும் காந்தியின் அந்தரங்க வாழ்க்கை ஆராயப்பட்டதுபோல தோண்டித் துருவிப் பாருங்கள். அவரது ஆன்மா கதறும்..!

     காந்திஜி தன்னைத்தான் இந்தியா முழுக்கக் கொண்டு சென்றார். நூற்றுக் கணக்கான ரயில் நிலையங்களில் மூன்றாம் வகுப்புப் பெட்டியின் வாசலில் விரதத்தால் மெலிந்த கரிய உடலுடன் வந்து நின்று தன் கருணை மிக்க கண்களில் நகைச்சுவை ஒளிரும் சிரிப்புடன் மக்களை நோக்கிக் கும்பிட்டார். அதுவே இந்தியா முழுக்கச் செய்தியானது. அதுவே இந்த நாட்டை ஒன்றாகத் திரட்டி ஜனநாயக அரசியலுக்குக் கொண்டு வந்த கருத்தியல் பேரலை. அந்த இடத்தை அவருக்கு அளித்தது அவரது மகாத்மா என்ற அடைமொழி. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனே தெய்வத்துள் வைக்கப்படும்…என்று நம்பிய மரபு நம்முடைய மரவு. அந்த மரபு அவரை மகாத்மாவாக ஏற்றுக் கொண்டது. வழிபட்டது.

     நண்பர்களே, காந்தியின் எளிமை ஒரு பாவனை என்று சொல்பவரிகளிடம் நீங்கள் தயவுசெய்து கேளுங்கள். வேறு எதைத்தான் எளிமை என்கிறீர்கள் என்று? காந்தியியின் எளிமை என்பதை அவர் எப்போதும் வெளியே காட்டிக் கொண்டதல்ல என்பதற்கு அவரின் மொத்த வாழ்க்கையின் செயல்பாடுகளின் ஒவ்வொரு கணமுமே சான்று.

     புலன்களுக்கு வசப்படுதல் என்பது அகவலிமையை இழத்தல் என்று எண்ணியவர் காந்தி. ஆகவே எப்போதும் எந்த ஒரு வசதியையும், ஆடம்பரத்தையும் நிராகரிப்பவராகவே அவர் இருந்தார்.

     காந்திஜி மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தது ஒரு விளம்பரம் என்று இன்று விமர்சிக்கிறார்கள். அவர் இந்தியாவுக்கு வந்த காலகட்டத்தில் அழுக்கும் பிசுக்கும் நிறைந்த மூன்றாம் வகுப்பில் எளிய மக்களுடன் இணைந்து மாதக் கணக்கில் இந்தியாவெங்கும் சுற்றியிருக்கிறார் என்பதையும், எளிய மக்களை நெருங்கி நோக்கிய ஒரே அரசியல் தலைவர் அவர்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

     துறந்து கொண்டே வந்தார் காந்தி. அது அவரைப் பொறுத்தவரை முன்னேற்றம். ருசிக்கான உணவை, காமத்தை, வசதியான இல்லங்களை, ஒரு கட்டத்தில் வசதியான ஆடைகளைத் துறந்து எளிமையான ஆடைக்கு வந்ததும் அந்த பரிணாமத்தின் ஒரு கட்டமே. ஓர் இந்திய மனம் அடையும் இயல்பான வளர்ச்சி அது. பலரும் கவனிக்காத ஒன்றுண்டு. நேர்த்தியான உடைகள் மேல் அபாரமான பிரியம் கொண்டிருந்தவரும், அப்படி இந்தியாவெங்கும் அடையாளம் காணப்பட்டவருமான அம்பேத்கார் கூட அவரது வாழ்நாளின் மெய்ஞானம் கனிந்த இறுதிக்காலத்தில் எளிமையான உடைகளை நோக்கியே சென்றார் என்பதுதான் உண்மை.

     காந்தியின் உடை அவரை இந்தியாவின் கோடானுகோடி விவசாயிகளில் ஒருவராக அவர்களுக்குக் காட்டியது. தன்னைப் பார்க்க வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர் வெறுமே காட்சி தந்தார். அவரது தோற்றமே அவரது செய்தி. அந்த உடை அவரை இந்தியாவின் பல்லாயிரம் மெய்ஞானிகளில் ஒருவராக அடையாளம் காட்டியது. ராமகிருஷ்ண பரமஉறம்சரின், வள்ளலாரின், நாராயணகுருவின், ரமணரின் தோற்றம் அல்லவா அது? அவரைப் போல் ஆன்ம வல்லமை கொண்ட பலர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் உலகம் அறிந்தும், அறியாமலும் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவர் அரசியலுக்கு வந்தார் என்பதே காந்தி.

     காந்தியின் அபாரமான வல்லமை என்பது அனைவரையும் தனக்கு முற்றிலும் சமானமாக நடத்துவது என்பதில்தான் இருந்தது. பட்லர், வைஸ்ராய்கள், சாம்ராஜ்யங்களின் மகாராணிகள் ஆகிய மிக வலிமையானவர் எவராயினும் அனைவரும் அவர் முன் சமம்தான்.

     பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே…

     இந்தியாவுக்கு ஒரு அரசியல் சுதந்திரத்தை வாங்குவது அவரது இலக்கு அல்ல. அவரது கனவுகள் மகத்தானவை. போரில்லாத உலகத்தைப் பற்றி எண்ணினார் அவர். வளங்கள் சூறையாடப்படாத ஒரு வாழ்க்கையைக் கற்பனை செய்தார். பேதங்கள் இல்லாத மானுடத்தை உருவகித்துக் கொண்டார். அதற்குப் புலன்கள் மேல் கட்டுப்பாடும், சக மனிதர்கள் மேல் அன்பும் போதுமே என்றார். அவர்தான் அண்ணல் காந்திஜி.

                           -------------------------------------------------------------


 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...