27 ஜூன் 2020

ஆதவனின் “கறுப்பு அம்பா கதை” - சிறுகதை வாசிப்பனுபவம் - உஷாதீபன்



ஆதவனின் “கறுப்பு அம்பா கதை” - சிறுகதை     வாசிப்பனுபவம் - உஷாதீபன்       வெளியீடு:- “ஆதவன் சிறுகதைகள்” - கிழக்கு பதிப்பகம், சென்னை                    ------------------------------------------------------------------------------------------------------------                        
       குழந்தைக்குக் கதை சொல்லுதல் என்பது தனிக் கலை. அந்தக் காலத்துப் பாட்டிமார்கள், அம்மாக்கள், தாத்தாக்கள் நிறையக் கதைகளைக் கைவசம் வைத்திருந்தார்கள். ஒரு குழந்தை தூங்குவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்கிற கணிப்பு உண்டு அவர்களிடம். அதற்கு ஏற்றாற்போல் கதைகளை நீட்டியும், சுருக்கியும், மீதிப் பாதி நாளைக்கு என்பது போல் சொல்லியும் அல்லது மறு நாளைக்கு மீதி வைப்பது போல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழந்தைக்குப் புரியாத விதத்தில் அல்லது வியக்கும் வண்ணம் சஸ்பென்ஸ் வைத்துச் சொல்லி கதையைத் தக்க இடத்தில் நிறுத்தி குழந்தையைத் தூங்கப் பண்ணி, தங்கள் வீட்டுக் காரியத்தையும் சாதித்துக் கொண்டு விடுவார்கள். அல்லது குழந்தை தூங்கும் நேரத்தில் தாங்களும் சற்றுக் கண்ணயர்ந்து கொள்வோம் என்று அருகிலேயே படுத்து விடுவார்கள்.
       ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்ல பெரியவர்களிடம் கதைகள் தீர்ந்து போவதும் உண்டு. அம்மாதிரி நேரங்களில் சொந்தக் கதை சோகக் கதையை நேரடியாய் அதுகளின் காதில் போடாமல், அதற்கு வேறு வடிவம் கொடுத்து, வீட்டு மனிதர்களை வெவ்வேறு  உயிரினங்களாய் சித்தரித்து அல்லது கற்பனைத்து, கதைகளைச் சொல்லிவிடும் சாமர்த்தியமும் உண்டு.
       இந்தக் காலத்துப் பெரியவர்களிடம் அல்லது பெற்றோர்களிடம் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் சாமர்த்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் ஒரு சிலதான் என்று அவை ஒன்றிரண்டு நாட்களிலேயே தீர்ந்து போய்விடும் அபாய நிலைதான். அதற்கான தேவையும்  இருப்பதாகத் தெரியவில்லை. தொலைக்காட்சிகளும்,காமிக்ஸ் புத்தகங்களும், குழந்தைகளின் படிப்பும் அந்தப் பிஞ்சுகளின் நேரத்தை மூழ்கடித்துக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். அந்த மட்டும் ஆளை விட்டால் சரி என்று எல்லாவற்றையும் வளமையாக வாங்கி முன்னே பரத்தி விடும் வசதி வாய்ப்பும் இந்தக் காலத்துப் பெற்றோர்களுக்கு. ஆகையினால் பெற்றோர், தாத்தா, பாட்டிகள் மடியில் கிடத்திக் கொண்டு அன்பொழுக அவைகளுக்குக் கதைகள் சொல்லும் காட்சிகள் கண்ணிலேயே படுவதில்லை. அப்படிக் கதைசொன்ன காலங்களில் ஒழுக்க நெறிகள் அவைகளின் மனதில் இளம் பிராயத்திலேயே படிந்தன. இந்தக் காலத்திலோ நல்லவையைவிட அல்லவைகள்தான் அதிகம் படிந்து போகின்றன என்று கருத வேண்டியிருக்கிறது.
       காக்கா கதை வேண்டாம் வேறு கதை சொல்லு என்று அடம் பிடிக்கும் ரெண்டு வயதுக் குஞ்சு மாலுவுக்கு என்ன கதை சொல்வது என யோசிக்கிறான் சங்கரன். உனக்கு என்ன கதை வேணும்? என்று கேட்க அது சொல்கிறது - “கறுப்பு அம்பா கதை” வேணும் என்று.
       அம்பா என்றால் மாடு. கறுப்பு அம்பா என்றால் கறுப்பு மாடு.  அதாவது எருமை மாடு.
       வஞ்சகமும், குரோதமும் நிறைந்த பெரியவர்கள் உலகத்தை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு குழந்தைகள் உலகத்திற்குள் புகுகிறான் சங்கரன். கதை சொல்லத் தயாராகிறான்.
       நாய்க்கு அடுத்தபடியாகக் குழந்தைக்கு அதிகம் பரிச்சயமான பிராணி  எருமை மாடுதான். சங்கரன் கிராமத்தில் வளர்ந்தவன். சிறு வயதில் பெரும்பாலான நேரத்தை வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் கழித்தவன். மாட்டிலிருந்துதான் பால் வருகிறது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் நகரத்தில் வளர்ந்த பிஞ்சு மாலுவுக்கு? பால்கார மாமா சைக்கிளில் கொண்டு போடும் பால் பாட்டிலைத்தானே அது கண்ணால் கண்டிருக்கிறது?
       ரு ஊரில் ஒரு கறுப்பு அம்பா இருந்ததாம்.....என்று ஆரம்பிக்கிறான் சங்கரன். குழந்தைகளுக்கு கதை சொல்வது என்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. அதை அம்மாதிரியான நேரங்களிலெல்லாம் கஷ்டமாகவே உணர்ந்திருக்கிறான் அவன். சப்பையான விஷயங்களைக் கூட ஸ்வாரஸ்யப்படுத்திச் சொல்லும் சாமர்த்தியம் பெரியவர்களுக்கு, அதாவது கதை சொல்பவர்களுக்குக் கட்டாயம் வேண்டும். ஏனோ தானோ என்று சொல்லி விட முடியாது. குழந்தையை மதித்து, பொருட்படுத்திச் சொல்கிறோம் என்கிற உணர்வு குழந்தைக்குக் கட்டாயம் ஏற்பட வேண்டும். ஏற்படுத்தியாக வேண்டும். அது நம் கற்பனைத் திறனுக்கான சவால் என்றே கொள்ள வேண்டும்.
       கறுப்பு அம்பா மேல் மாலுக்கோ அத்தனை பிரியம். அதை வைத்துக் கதை சொல்லியாக வேண்டும். என்ன ஆச்சுன்னா.....அம்பாவுக்கு ஜலதோஷம் பிடிச்சிக்கிது....தும்மத் தொடங்குது. அம்பாவோட குட்டி பால் குடிக்க வருது. மூஞ்சியைப் பக்கத்துல கொண்டு போகறச்சேயெல்லாம் அம்பா நச்சு நச்சுன்னு தும்முது. குட்டியால பாலே குடிக்க முடியல...உடம்பு துள்ளும்போது அது மூஞ்சில பட்டு...பட்டுன்னுஅடி வேறே விழுது. வீங்கிப் போகுது. ஒரே வலி வேறே....அது பெரீசா அழ ஆரம்பிக்குது....எப்டி.....?
       ஏ(ங்)..ஏ(ங்)....ஏ (ங்).....ன்னு அழுதது..... - மாலு சொல்ல.... குழந்தையைப் பாராட்டுகிறான் சங்கரன். குட்டி அழுறதைப் பார்த்து கறுப்பு அம்பாவுக்கும் அழுகை வந்திடுது. அதுவும் ஏங்....ஏங்...ஏங்...ன்னு அழுக....ரெண்டு அழுகையையும் கேட்டு அங்கே ஒரு குதிரை வந்திச்சாம். என்ன சமாச்சாரம்னு கேட்க....ஜலதோஷம்னு விஷயத்தச் சொல்ல....எம்மேலே ஏறிக்கோ...நா...ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போறேன்னு குதிரை சொல்லிச்சாம்....உடனே குட்டிக் கறுப்பு அம்பா...நானும் வருவேன்னு அடம் பிடிச்சிதாம். ரெண்டு பேரையும் ஏத்திண்டா என் முதுகு உடைஞ்சு போகுமேன்னு குதிரை சொல்லிச்சாம். குட்டிய வேணும்னா உன்மேலே ஏத்திக்கோ நான் நடந்து வர்றேன்னு அம்பா சொல்ல...கிளம்பிப்  போனாங்களாம்.
       சொல்லிவிட்டு நிறுத்துகிறான் சங்கரன். குழந்தை தூங்கினபாடில்லை. அவனுக்கோ பொறுமை கழன்று போகிறது. கற்பனையோ ஓட மாட்டேனென்கிறது. கோபம் கோபமாய் வருகிறது. நல்லா இன்னிக்கு மாட்டிக்கிட்டோம் என்று நினைக்கிறான்.
       ஆஸ்பத்திரி  போனா கதையே வேறே. ஏற்கனவே உடம்பு சரியில்லைன்னு அங்கே பெரிய க்யூவே இருக்கு. கத்திக் கத்தி தொண்டைப் புண் வந்த கழுதை, ஊஞ்சலாடி, ஊஞ்சலாடி கழுத்து சுளுக்கிக் கொண்ட குரங்கு, நாளெல்லாம் வண்டி இழுத்து இழுத்து அயர்ந்து, உடம்பு வலி கண்டு அயோடெக்ஸ் தடவிக்கொள்ள வந்திருக்கும் காளை மாடு,ஏதேதோ செடி கொடிகளைக் கடித்துத் தின்று அஜீரணம் ஆகி வந்து நிற்கும் ஆடு, வாகனங்களின் சத்தம் கேட்டுக் கேட்டு செவிடாகாமல், காது புண்ணாகி வந்து நிற்கும் டாங்கா குதிரை, கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளலாம் என்று வந்திருக்கும் சர்க்கஸ் கரடி, எல்லாருக்கும் சலாம் போட்டுப் போட்டு தும்பிக்கை இளைத்துப் போன ஒரு ஜூ யானை....இப்படியாக நிற்க...
       அங்கேதான் ஒரு ரஸவாதம் நிகழ்ந்து போகிறது. மேற்கூறிய மிருகங்களெல்லாம் திடீரென்று சங்கரனின் ஆபீஸ் சகபாடிகளாய் மாறிப் போகிறார்கள். போட்டி,  பொறாமை, வத்தி வைத்தல், மறைவாய்த் திட்டுதல், வெட்டி ஜம்பமடித்தல், சளசள அனாவசியப் பேச்சு, கூழைக் கும்பிடு, காலை வாருகிறவர்கள்,  என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய்த் தோன்ற சங்கரனின் கதை சொல்லும் திறனில் உற்சாகம் பொங்குகிறது.
       பேஷன்டுகள் காத்துக் கிடக்க, வரிசை மெதுவாய் நகர, ஒரு குள்ள நரி தந்திரமாக கம்பவுன்டரிடம் ஏதோ கொடுத்து வரிசையை முந்திக் கொண்டு முதலில் செல்ல....கறுப்பு அம்பாவுக்குப் படுகோபம் வர, பாய்ந்து நரியின் மீது ஒரு முட்டு முட்டுகிறது.
       இங்குதான் சங்கரனுக்கு இடிக்கிறது மீண்டும். ஆபீஸ் நிகழ்வுகளை மிருகங்களுக்குச் சொல்லி கதையை மாற்ற, குழந்தைக்குப் புரியாமல் போயிருக்குமோ? கவலையுடன் பார்க்க, அது அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது. எந்த இடத்தில் பொருத்தமாகத் தூங்கியிருக்கிறது பாருங்கள். சங்கரனுக்கு மனதைப் போட்டு என்னவோ அரிக்கிறது. இந்தக் கவலை என்னவாக இருக்கும்? ஆங்...அதுதான் தன் கதையோ? அந்த அப்பாவி எருமை தான்தானோ?
       பாலோடு வரும் மனைவி  விஜியிடம் ஆதங்கமாகச் சொல்கிறான். இந்தப் பாலுக்காக எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது? குழந்தைக்குக் கதை சொல்லித் தூங்க வைப்பது லேசுப்பட்ட வேலையில்லை என்கிறான்.
       நீங்கமட்டும்தானா? குழந்தையோட பகல் சாப்பாட்டுக்கு யாரு படுறது? நான்தான் தெனமும் படுறேன்...தெனம் கதை சொல்லித்தான் தூங்கப்பண்றேன்... என்கிறாள்.
       என்ன கதை? குருவிக் கதையா? காக்காய்க் கதையா?
       அதெல்லாம் எங்கேயிருந்து சொல்றது?அதான் அம்பா கதை சொல்லிக் கெடுத்து வச்சிருக்கீங்களே? அதே மாட்டுக் கதைதான். நான்தான் அந்த மாடு....பசு மாடு.....!
       அப்டியா? நீதான் அந்தப் பசுமாடா? பசுமாடு பிறந்த கதையா, வளர்ந்த கதையா? - சங்கரன் விடாமல் கேட்க....ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கதை என்கிறாள் அவள்.
       புக்ககம் வந்த பசுமாடு சந்தோஷமாயிருக்கா....லோல்படுதா? என்று கேட்க...எல்லாப் பசுமாட்டுக்கும் என்ன நடக்குமோ அதான் எனக்கும்...இடுப்பொடிய வேலை...வேலை...வேலை.....கறுப்பு அம்பாவுக்கு இதெல்லாம் தெரியுமா, புரியுமா....என்னத்தைச் சொல்ல...எங்கபோய் புலம்ப...என்க...யாரந்தக் கறுப்பு அம்பா..? என்று இவன் கேட்க...நீங்கதான் என்று முடிக்கிறாள் மனைவி விஜி.
       கறுப்பு அம்பா கதையை ஆபீஸோடு இணைத்து உருவகித்துக் குழந்தைக்குக் கதை சொல்ல, தன்னைப் பசுமாடாக வரித்து மனைவி குழந்தைக்கு கதை சொல்லியிருக்கும் விவரம் தெரிய வர, ஜாலியாய் வெளியே சுற்றி வரும் எருமை சங்கரன்தான் என்று முடிவது...காலம் காலமாய்ப் பெண்கள்தான் பாடாய்ப் படுகிறார்கள் என்கிற உண்மையையும், ஜாலியாய்க் காலம் கழிப்பவர்கள் வீட்டு ஆண்கள் என்கிற ஆதங்கமும் வெளிப்படும்போது, உண்மைதான்...உண்மைதான் என்று நம் மனசே நமக்குச் சொல்கிறது. உருவகித்துக் கதை சொல்வதற்கும், குழந்தைக்குச் சொல்வதுபோல் அதைச் செதுக்குவதற்கும், லயிப்பாய்க் கேட்கிறதா என்பதைக் கவனித்து, அதைத் திருப்திப்படுத்துவதும் சாதாரணக் காரியமா என்ன? அந்தப் பணியை அற்புதமாய்ச் செய்திருக்கிறார் ஆதவன் இந்தப் படைப்பில்.
       ஆதவனின் இந்தக் கதை மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பதும், அதை அவர் வடித்தெடுத்திருக்கும் முறையும், உணர்த்தும் தன்மையும், ஒரு அனுபவம் வாய்ந்த படைப்பாளியின் எழுத்துத் திறமையைப் பறைசாற்றுகிறது.
              --------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...