28 ஏப்ரல் 2020

தி.ஜானகிராமனின் “வேண்டாம் பூசணி” சிறுகதை வாசிப்பனுபவம் - கட்டுரை

        தி.ஜானகிராமனின்  “வேண்டாம் பூசணி”     சிறுகதை     




வெளியீடு – காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் (தி.ஜானகிராமன் சிறுகதைகள்-முழுத் தொகுப்பு)
        தி.ஜா.ரா.வின் கதையைப் பற்றிச் சொல்ல நாமெல்லாம் ஒரு ஆளா? என்றுதான் தோன்றுகிறது. அதைப் படிப்பதற்கும்…ரசிப்பதற்குமே நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
      தகுதி இருக்கிறது என்று திருப்திப்படாமல், இல்லைதான் என்று வருத்தப்படாமல் ஆர்வம் மிகுதியில் எழுதத் தலைப்படுகிறேன். ஏதோ கொஞ்சம் ரசனையையாவது இறைவன் விட்டு வைத்திருக்கிறானே…! அம்மா, அப்பா மூலம் கிடைத்த அதை வீண் பண்ணலாமா?
      கண்ணில் நீர் துளிர்க்க, வரி வரியாய் விடாமல் படிப்பாளே அம்மா…! அந்தக் காட்சி மனதில் பதிந்திருக்கிறதே…!
      அருமை…அருமை என்று நாக்கை உள்ளுக்குள் மடித்து…கிர்…கிர்…என்று சத்தம் எழுப்புவாரே அப்பா…அது அவரின் ஆழ்ந்த ரசனையின் வெளிப்பாடுதானே…! அதில் துளியேனும் ஒட்டிக் கொண்டிருக்காதா எனக்கு?
      “வேண்டாம் பூசணி…”   - இதுதான் கதையின் தலைப்பு.
      ஆரஞ்சுப் பழத்தைப் பிழிந்து எடுத்தது போல் இருக்க வேண்டும் தலைப்பு என்பார் எழுத்துச் சித்தர் ஜெயகாந்தன். அப்படி அர்த்தப்படுகிறது இப்படைப்பின் தலைப்பு. வலியத் திணித்த தலைப்பு அல்ல. தானே வந்து பாந்தமாய் உட்கார்ந்து கொண்டது. கதை கூடி வரும்போது அந்தத் தலைப்புக்கு அப்படி ஒரு அர்த்தம் வெளிப்படுகிறது.
      யசானால் சின்னச் சின்ன  வேலைகள் கூட மனதுக்கு மாச்சலாய்த் தெரியும். உட்காருவதும், எழுவதும் கூட சிரமம்தான். அதிலும் போஷிக்க ஆள் இல்லையானால் ஏன் வாழ்கிறோம் என்றிருக்கும். உயிர் போகாதா? என்று மனம் வெறுக்கும்.
      வயதானவர்களுடைய பாடுகளை, சிரமங்களை உணர்ந்திருக்கிறீர்களா? அதை தி.ஜா.ரா. சொல்லிக் கேட்க வேண்டும்.
      வாசிப்பனுபவத்தைச் சொல்வதா அல்லது கதையையே படித்து விடுங்கள் என்று கொடுப்பதா? கதையையே படி என்றால் நமக்கிருக்கும் ரசனை எதிரணிக்கு வேண்டாமா? இருக்கும் என்பது என்ன நிச்சயம்? வெறுமே வரிகளைத் தாண்டிச் செல்பவராய் இருந்தால்? அதிகமாய் இருந்தால் சந்தோஷம். தலை வணங்கிக் கேட்டுக் கொள்ளலாம். குறைந்தால்? சொல்லி, சுட்டிக் காட்டித்தானே ஆக வேண்டும்?
      அம்மா, அப்பாவுக்கு சோறு போடுறத, அவங்க வயிறார சாப்பிடுறத, மருமகள்…அதான் மனைவி ஏசினால், வாயை மூடிக் கொண்டிருப்பவன் மனுஷனா? நடக்குதய்யா இன்னைக்கும் உலகத்துல….உலகம் தாங்குகிறதே…!
இனிமேல் சாப்பாடு சாப்பிட்டா ரத்தம் ஊறப் போகிறது? பாட்டிக்குக் கைகால்கள் எல்லாம் வீங்கி விட்டன. வருகிற கந்த சஷ்டிக்கு எண்பத்திரண்டு நிறைந்து விடுகிறது. யாராவது வந்தால் ஏதோ தேய்த்துவிட்டாற்போல் தெரிகிறது. பொழுது சாய்ந்து விட்டால் அந்த அரைப் பார்வையும் மங்கி விடுகிறது.
வாசலில், ப்ளாஸ்திரி போட்டாப்போல இப்படி சின்னதா மெழுகியிருக்கியே…? என்று சுந்தராம்பாக் கிழவி ராதைப் பாட்டியைக் கேள்வி கேட்பதோடு துவங்குகிறது கதை.
தான் தன் மாமியாருக்கு செய்த சிஸ்ருஷைகளை நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே, உனக்கு ஒரு குறையும் வராதடி அம்மா என்று  அவள் வாழ்த்தியிருந்தும் அந்த உத்தமி வாக்குக் கூடப் பலிக்கவில்லையே என்று மூன்று பிள்ளைகளையும், இரண்டு பெண்களையும் கல்லுக் கல்லாகப் பெற்றுவிட்டு இந்தக் காடு அழைக்கிற வயசில் தனியாய்க் கிடந்து அல்லாட வீங்கின காலும் வீங்கின கையுமாக….ராதைப்பாட்டி.
சாயங்காலம் திண்ணையில் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டுவிட்டால் பொழுது போவதே தெரியாது. இயந்திரம் மாதிரி கை ருத்ராட்சக் காய்களை எண்ணும். வாய் ராமாயணத்தைச் சொல்லும். ஆனால் மனம் மட்டும் பழைய முகங்கள் ஆசைகள் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும்.
மூத்த பிள்ளையைப் பார்த்து ரெண்டு வருஷம் ஆகி விட்டது. எப்போதாவது நான்கு வருஷத்திற்கு ஒரு தடவை வருவான். வந்தால் தாயாரைப் பார்க்கத் தோன்றாது. அவனுக்கு தாயார், தகப்பனார் இருவர் மீதும் கோபம். சின்னப் பிள்ளைக்கு  அதிகமாகச் செய்து விட்டார்கள் என்பது அவன் எண்ணம். இந்த மாதிரி அசட்டு எண்ணங்கள் தோன்றிவிட்டால் படைத்தவன் கூடத் திருத்த முடியாது. அதுவும் அவனுக்காகப் படாமல், பொண்டாட்டி சொல்லி ஏற்பட்டு விட்டால், அது கல்லில் செதுக்கினாற் போலத்தான்…. அவன் மனைவி “படாமணி“…!
தகப்பனார் செத்தபோது வந்தான். ஈமக் கடன் செய்ய முடியாது என்று ஒற்றைக் காலில் நின்றான். கடைசியில் நடுப்பிள்ளை அவனுக்குப் பணத்தைக் கொடுத்து செய்யச் சொன்னான். ஸ்வீகாரம் போய்விட்டோமே என்று நினைக்காமல். மூத்த நாட்டுப் பெண் வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. யாருமே அப்படித் துவேஷம் பாராட்ட மாட்டார்கள். பரம அசடுதான் அப்படிச் செய்யும். இல்லைன்னா மனுஷ ஜென்மமா இருக்காது அது…
-இதெல்லாம் பாட்டி தனக்குத்தானே அசைபோட்டுக் கொண்டு சமாதானம் செய்து கொள்ளும் மன ஆதங்கங்கள். பாட்டி அறுபது வருஷமாய்க் குடியிருந்த வீட்டில் பிதுரார்ஜிதமாய் இருக்கிறான் கடைசிப் பிள்ளை. அவன் பெண்டாட்டி சொன்ன வார்த்தை அத்தனை லேசில் மறந்து போகுமா?
அம்மாடியோவ்…வயசாவது…ஆகவாவது? ஒண்ணரைப் படி சாதம் சாப்பிடுறதே…ஆனாலும் இந்த மாதிரிப் பகாசுரத் தீனி திங்கிறதைப் பார்த்தா…எனக்குப் பயமாயிருக்கு…உங்கம்மாவுக்குப் போட்டு முடியாது…தனியாச் சமைக்கச் சொல்லுங்கோ….
சீ நாயே…! என்று சொல்லத் துப்பில்லையே இவனுக்கு? என்று ஏங்கினாள் பாட்டி.
ஏ, முண்டமே…! இந்த எச்சில் இலையை யார் தூக்கிண்டு போவா? என்று இலையை எடுத்து பாட்டி தலை மீது வீசி விட்டாள் அவள். பாட்டி அழுது கொண்டே வெளியேறி நடுப்பிள்ளை வீட்டுக்குச் சென்று சொல்லி அழுகிறாள்.
ரௌத்ராகாரமாய்ச் சீறிக்கொண்டு வருகிறான் அவன். ஏ நாயே! என்ன துளுத்துப் போச்சு கட்டை…! இனிமே வாயைத் திறந்தயோ மூட்டை கட்டி அனுப்பிச்சிடுவேன்…ஏண்டா, பெண்டாட்டியை ஆள்கிறது அழகாயிருக்குடா…மானங்கெட்டவனே…! இடுப்பில நாலு உதை விடுறதுக்கில்லாம இதென்னடா மானங்கெட்ட பிழைப்பு? கூறு கெட்டவனே…முதுகெலும்பு இல்லே உனக்கு? என்று தம்பியைப் பார்த்துச் சத்தம் போடுகிறான். அன்று முதல் பாட்டி அந்த வீட்டில் தனிச் சமையல். ஆறு மாதத்தில் அதுவும் முடிந்து போகிறது. ஏன்?
எத்தனை அழகாய்ச் சுருக்கமாய்ச் சொல்கிறார் பாருங்கள்.
“திடீரென்று உலர்த்தியிருக்கிற புடவையின் நடுவில் தானாக ஒரு கஜம் கிழிந்திருக்கும். படுக்கிற இடத்தில் ஒரு முட்டுச் சாணம் இறைந்து கிடக்கும். கரண்டிகள் மறைந்து விடும்…“
நீ செத்த இடத்தில் செங்கழுநீர் பூக்கும்டியம்மா… - மாமானாரின் ஆசீர்வாதம் பலித்ததா என்ன? திடமாய் இருந்த கிழவர் திடீரென்று மாரடைப்பு வந்து முந்திக் கொண்டு விட்டாரே…! எதுதான் நிஜமானது?
அன்று சாயங்காலம்….திண்ணையை விட்டு எழுந்தவளுக்குத் தலை கிறுகிறுவென்று சுற்ற மறுகணம் நடுவாசலில் மயக்கம் போட்டு மடேரென்று விழுந்து விட்டாள்.  மண்டையில் நல்ல அடி. ரத்தம் சடசடவென்று கொட்டிக் கொண்டிருந்தது. சாணார வைத்தியன் வந்து மருந்து போட்டு விட்டுப் போனான். நடுப்பிள்ளை நன்றாகத்தான் கவனித்தான். இரண்டு நாள் கழித்து பாட்டியின் பெண்ணும், மாப்பிள்ளையும் பக்கத்து கிராமத்திலிருந்து வந்தார்கள். வாழ்க்கையில் அடிபட்டவள்.சம்சாரி. பாட்டி அவளோடு போவது என்று முடிவாகிறது.
கடைசிக் காலத்தில் கிழவிக்குச் செய்த புண்ணியமும் கிடைக்கும். நூற்றைம்பது இருநூறு ரூபாய்ப் பாத்திரங்களும் கிடைக்கும் என்று புள்ளி போட்டு விட்டாள்.
பாத்திர வகைகளின் அழகைப் பாருங்கள்.
ஈய ஜோட்டி, ஈயச் சொம்பு, சீனாச்சட்டி, அகப்பைக்கூடு, பித்தளைச் செம்புகள், வெண்கல டம்ளர்கள், உருளி, கால் பவுனில் ஒரு சிகப்புக்கல் மோதிரம் எல்லாம் ஒரு வண்டியில் ஏறி மாப்பிள்ளை வீட்டுக்குப் போயின.  பாட்டிக்கு ஒரு மாதிரியாய்க் கஷ்டங்கள் விடிகின்றன.
பாட்டிக்கு இப்போது குனிந்து நிமிர வேண்டிய வேலை இல்லை. தண்ணீர் இழுக்க வேண்டியதில்லை. வீடு பெருக்க வேண்டியதில்லை. உட்கார்ந்த இடத்திலேயே கறி நறுக்கிக் கொடுப்பாள். இல்லாலிட்டால் காலை நீட்டிக் கொண்டு பெண்ணின் கைக்குழந்தையை இரண்டு கால் மீதும் மல்லாக்க விட்டு ஆராரோப்பாடி இட்டாச்சுக் காண்பிப்பாள். ரெண்டு பேத்திகள்.
நான் வந்து எட்டு மாசமா ஆச்சு…..! ஆச்சரியத்தோடு கேட்கிறாள் பாட்டி. அங்குதான் விழுகிறது கொக்கி..
ஆனா என்னம்மா…நீ சாப்பிட்டா இங்கே  ஆயிடப்போகுது… என்கிறாள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல். அது உறுத்துகிறது பாட்டிக்கு.
பாத்திரத்தையெல்லாம் அவளிடம் கொடுத்துவிட்டு ரெண்டு மாசத்தில் செத்துப் போகலாம் என்றால்…இப்படி இழுக்கிறதே…!
ஊருக்கு வந்து பார்த்தேன். இஞ்ச வந்துட்டதா சொன்னா…வந்தேன். அடுத்த திங்கட்கிழமை எனக்கு சஷ்டியப்தபூர்த்தி…
தீர்க்காயுசா இருடாப்பா…-பாட்டிக்கு பிள்ளையின் அறுபதாம் கல்யாணத்தைப் பார்க்க ஆசைதான். அழைத்தால்தானே…!
கல்யாணம்னு சாக்கு வச்சுண்டாவது அம்மாவை அழைச்சிண்டு போகணும்னு தோணித்தா பாரும்மா உம்பிள்ளைக்கு…என்கிறாள் மகள்.
வர வர பெண்ணும் தான் போட்ட கெடுவிற்குமேல் அம்மா பிழைப்பதைச் சுட்டிக் காட்டுவது போலப் பேசிக் கொண்டிருந்தாள். இறைவனை வேண்டுகிறாள் பாட்டி.
பூமி, ஜலம் எல்லாத்தையும் சுட்டுக் கொளுத்தறயே…! என்னையும் பொசுக்கிப்புடேன்…ஏன் என்னை வச்சுக் கொல்றே அப்பனே…!
அன்று மாலை தாழ்வாரத்திலிருந்து முற்றத்தில் இறங்கும்போது கால் தடுக்கிறது. பாட்டி இசைகேடாக விழுந்தாள். உதடு, மூக்கு என்று அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது.
அடிபட்டுக் கிடக்கும் தாயாரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதில் எத்தனை தயக்கம் எல்லோருக்கும்? அப்படியே விட்டால் போய்விடாதா? மகள் சொல்கிறாள்.
எம் பாட்டி, தாத்தா ரெண்டு பேரும் இப்படி விழுந்துதான் செத்துப் போனா….அதே மாதிரிதான் அம்மாவுக்கும் வந்திருக்கு….
டாக்டர் என்ன மளிகைக் கடைக்காரரா…கடை பூட்டினப்புறம் வியாபாரம் பண்ணமாட்டேன்னு சொல்றதுக்கு…பூட்டும் வண்டியை…. எதிர்வீட்டுப் புலி விரட்டுகிறது
மனைவி சொல்வதைப் பார்த்துத் தயங்கும் மாப்பிள்ளை.
இரவு வெகுநேரம் கழித்துத்தான் ரத்தப் பெருக்கு நிற்கிறது பாட்டிக்கு. பாட்டிக்கு லேசாக நினைவு வருகிறது.
சிவராத்திரி நாளைக்குதானே…? ஒரு காரியம் செய்றியா…? பாட்டி கேட்கிறாள்.
அறுபது வருஷமா ஒரு சிவராத்திரி விடாம கங்காதரேஸ்வரரை தரிசனம் பண்ணின்டு வந்திருக்கேன்…இந்த சிவராத்திரிதான் கடைசி சிவராத்திரியா இருக்கும்…ஒரு வண்டியை வச்சு ஊர்லே கொண்டு விடச் சொல்லு…அடுத்த சிவராத்திரி எனக்குக் கிடையாதுன்னு தோணறது…
கட்டாயமாப் போய்த்தான் ஆகணுமா…
போனாத் தேவலை….
சிவராத்திரியன்று பாட்டி நடுப்பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள். வண்டி கைலாசத்தை நோக்கிப் போவதுபோல் தோன்றுகிறது அவளுக்கு. ஈசனே…என்னை ஏமாற்றித் திருப்பியனுப்பி விடாதே…!  வேண்டாத பூசணிக்காயை நீதான் எடுத்துக் கொள்ளணும்… இவ்வளவு வயசாகி மனுஷா உயிரோட இருக்கலாமா? ஈசனே உனக்கா தெரியாது…? மனம் உருகி வேண்டுகிறது பாட்டிக்கு.
வண்டி நடுப்பிள்ளை வாசலில் நிற்கிறது.
அம்மா……!
அம்மா…!
ராத்திரிக் கண் முழிக்கணும்னு இப்பத் தூங்கறாப்போல இருக்கு….
அம்மா…அம்மா… - பிள்ளை எழுப்பினார்.
அம்மா…அம்மா… - வண்டிக்காரன் குரல் கொடுக்கிறான்.
அம்மா காதில் ஒன்றும் விழவில்லை. அம்மா கைலாசத்தில் சிவனாரின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
வேண்டாத பூசணியை இறைவன் எடுத்துக் கொள்கிறார். மொத்த வாழ்க்கையில் பாட்டியின் வேண்டுதல் இப்போதுதான் முதல்முறையாய் நிறைவேறுகிறது.
நம் மனம் கனத்துப் போகிறது.
அதிக வயது இருக்கக் கூடாது. இருக்க நேர்ந்தால் நிரந்தரமாய், அன்பாய் வைத்துப் போஷிக்க ஒரு இடம் என்று இல்லாமல் யாரும் அல்லல்படுதல் கூடாது. ராதுப் பாட்டியின் கதை நம் மனதை உருக்கி நெகிழ வைத்து விடுகிறது.
தி.ஜானகிராமனின் கதைகளின்    தனித்துவம் அதில் வரும் உரையாடல்கள். கதாபாத்திரங்களின் வழி உண்டாகும் சம்பாஷனைகள் மூலமாய் அவர்களின் குணாதிசயங்களையும், சம்பவங்களின் வீர்யத்தையும் கதையின் உருவத்தையும் அவர் கொண்டு வந்து விளக்கி நிறுத்தும் அழகு. 
அவை எழுதப் புகுந்தவர்கள், எழுதிக் கொண்டிருப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்….!                                          ------------------------------------------------



        




கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...