10 டிசம்பர் 2019

நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்னம் - பேசும் புதிய சக்தி - டிசம்பர் 2019




நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்னம் (என்னப்பா...தப்புன்னா நீதானப்பா சரியாச் சொல்லணும்...? என்னை கொறை சொல்றியேப்பா...?)
      ன்னப்பா....நீதானப்பா சொன்ன...அதாம்ப்பா அனுப்பிச்சிருக்கேன்.... கோவிச்சிக்காதப்பா... டயத்துக்கு அனுப்பிட்டன்லப்பா.... சந்தோஷமா ஏத்துக்கப்பா- இப்படிச் சொல்லிக் கொண்டேதான்  இக் கட்டுரையை ஆரம்பிக்க ஆசை. அதுதான் பொருத்தமாய் இருக்கும்.  நானாக அப்படி  நினைக்கவில்லை. அதுவாகவே அப்படி அமைந்து விட்டது. ஒருவரைப் பற்றியதான தொடர்ச்சியான நினைவுகள் நம்மையும் அப்படி மாற்றி விடுகின்றன. அவர் பெயரைச் சொன்னாலே, ஏன் அவரை நினைத்தாலே முதலில் மனதில் வருவது சபாபதி திரைப்படம்தான். டி.ஆர்.ராமச்சந்திரன் நாயகனாக நடிக்க காளி என்.ரத்னம் அவருக்கு வேலைக்காரன்.
      காளிஎன்.ரத்னத்தை  நினைக்கையிலேயே அவரது அப்பாவித்தனமான...ஊறீம்....வெகுளித்தனமான....ஊறீம்...முட்டாள்தனமான...இப்படிச் சொல்வதுதான் சாலப் பொருத்தமாய் இருக்கும். இது அவரைத் திட்டுவதல்ல... அவரை இழிவு செய்வதல்ல...அந்தக் கதாபாத்திரம் அப்படியான ஒரு காரெக்டர் என்றே நிர்ணயித்து அதற்கு யார் பொருத்தம் என்று தேடியபோது காளி என்.ரத்னம் நினைவுக்கு வர அவரே ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து  (நடித்து என்ற சொல்லும் பொருத்தமல்ல...வாழ்ந்து என்பதே நூறு சதவிகிதம் பொருந்தும்-) படம் வந்தபோது அவரே அதில் நின்றார். முகத்தில் கொஞ்சமும் புத்தியுடையவனாகத் தெரியக் கூடாது. அடி மடையனாக ஒருவன் இருந்தால் எப்படியிருக்கும்? அதுதான் இந்தக் காரெக்டர். நாடகத்தில் பம்மல் சம்பந்தம் நடித்த அந்தக் கதாபாத்திரத்தை, தான் ஏற்று சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று காளி என்.ரத்னம் ஆசைப்பட்டார். அவர் விருப்பம் போலவே அவருக்கு இந்த வேடம் கிடைத்தது. இப்பொழுது உடனே இந்த சபாபதி படத்தை யார் போட்டுப் பார்த்தாலும், காளி என் ரத்னம்பற்றி நான் இங்கே சொல்லியிருப்பது சரிதான் என்பதை உணர முடியும். அந்த முட்டாள்தனம் யாருக்கும் வராது. உண்மைலயே ஆள் இப்படித்தானோ என்பதுபோல் அசலாய் வாழ்ந்திருப்பார். கண்ணும், வாயும், சிரிப்பும், பேச்சும்....எல்லாமே ஒன்றுக்கொன்று பொருந்தி உணர்த்தி நிற்கும்.
      ஒரு படத்தின் வெற்றிக்கு நகைச்சுவைக் காட்சிகளே தூணாய் நின்று உதவும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். கதையின் மையக்கரு, அதன் போக்கு என்பதையெல்லாமும் பின்னுக்குத் தள்ளி விட்டு நகைச்சுவை ரசம் தன்னை முன்னே நிறுத்திக் கொண்டு- நான்தான் முதல் - என்று தலையை முன்னே நீட்டிப் பார்த்தது இத் திரைப்படத்தில்..
      கதாநாயகன் பெயரும், வேலைக்காரனின் பெயரும் ஒன்று என்பதுதான் படத்தின் நகைச்சுவைக்கு ஆதாரமாய் நின்ற அஸ்திவாரம்.
      எதைச் சொன்னாலும் புரிந்து கொள்ளாத, தவறாய் வேறொன்றைப் புரிந்து கொள்கிற, அப்படிப் புரிந்து கொள்வதே முட்டாள்தனம் என்று அறியாத, முட்டாள்தனம் என்றாலே என்ன என்றே தெரியாத, செய்தது தவறு என்று உணராத, (உணருபவன் என்றால் அதற்காக வருந்த நேரிடும்-அப்படி வருந்தினால் அடுத்தாற்போல் இம்மாதிரித் தவறு நிகழ்ந்து விடக் கூடாது என்று திருத்திக் கொள்ள நேரிடும், அதெல்லாம் தெரியாதவன்தானே மடையன்) அப்படி உணராமலேயே திரும்பத் திரும்ப அப்பாவித்தனமாய்த் தவறுகள் செய்து கொண்டிருப்பவனாய் (நீதானப்பா சொன்ன...சரியாச் சொல்லுப்பா...அப்பத்தான நான் சரியாச் செய்ய முடியும்...என்று எதிராளிக்கு அட்வைஸ் வேறு) அமைந்த ஒரு பாத்திரம் என்றால் அது சபாபதி படத்தில் காளி என்.ரத்னம் ஏற்றுக் கொண்டு நடித்த சபாபதி காரெக்டர்தான்.
      நடிக்க வந்து நாடக சபாக்களில் தலையைக் காட்டியபோது பெரும்பாலும் பலருக்கும் அமைந்தது பெண் வேஷம்தான். நடிகர்திலகமும் பாய்ஸ் கம்பெனியில் அம்மாதிரிப் பெண் வேஷமிட்டுக் கலக்கியவர்தான். அதுபோல் 12 வயதில் நாடக உலகிற்குள் நுழைந்த காளி என்.ரத்னத்திற்குக் கிடைத்ததும் பெண் வேஷம்தான். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் 27 ஆண்டுகள் நடிகராகவும், மேலாளராகவும் பணியாற்றி மிகுந்த அனுபவத்தோடுதான் திரைத்துறைக்குள் நுழைந்திருக்கிறார்.  1936லேயே அப்போது பிரபலமாயிருந்த இந்த பாய்ஸ் கம்பெனி ஒரு திரைப்படமும் எடுத்திருக்கிறார்கள். படம் “பதிபக்தி” டி.ஆர்.பி. ராவ் என்பவரும் இன்னொருவரும் சேர்ந்து இயக்கியது இப்படம்.
      1897ல் கும்பகோணம் அருகிலுள்ள மலையப்பநல்லூரில் பிறந்த இவர், பரமேஸ்வரய்யர் என்பவரிடம் நடிப்புப் பயிற்சி பெற்றுச் சிறந்தார். கோவலன் நாடகத்தில் காளி ரோல் ஏற்று திறம்படச் செய்ததால் அதன் பின் இவர் காளி என்.ரத்னம் என்றே வழங்கலானார். கோவை டிராமா டூரில் இருந்தபோது மனம் நெருங்கி, பரஸ்பரம் பிரியம் கொண்டு சி.டி.ராஜகாந்தம் என்ற நடிகையை மணந்தார். இவர் பழைய திரைப்படங்களில் பிரபலமானவராய்த் திகழ்ந்தார். அழுத்தம் திருத்தமாய் வசனம் பேசுவதிலும், வெடுக் வெடுக்கென்று முக பாவங்களை வெளிப்படுத்துவதிலும், கணீரென்ற குரல் வளமும் கொண்டிருந்ததால்  தொடர்ந்து வாய்ப்புக்கள் கிடைத்துக் கொண்டேயிருந்தன.  இவரும் காளி என். ரத்னமும் சேர்ந்து பிரபல காமெடி ஜோடியாக வலம் வந்தனர். அந்தக் காலத்தில் என்.எஸ்.கே. +  டி.ஏ.மதுரம் ஜோடிக்குப் பெரும் போட்டியாக அமைந்திருந்தனர். ராஜலட்சுமி என்று ஒரு மகள் உண்டு இவர்களுக்கு. பிரபல பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதனின் துணைவியார்தான் அவர்.
      காளி என்.ரத்னத்தின் சிறப்பம்சமே  நிரந்தரமாக மொட்டைத் தலையோடு நின்றதுதான். ஆனால் அந்தத் தலை எந்தப் படத்திலும் வெட்டவெளியாகத் தெரிந்ததில்லை.  நடிப்புக்கென்று விதவிதமான சிகையலங்காரம் தேவைப்படும் என அப்படியே விட்டுவிட்டார். அந்தக் காலத் திரைப்படங்களில் அவரது ஒப்பனையைச் சற்று உற்றுக் கவனித்தால், நாடகங்களில் தென்படும் அதே வகையான ஒப்பனைத் தோற்றமாய் காணப்படுவதை உணரலாம்.  அந்த மொட்டை வெளியே தெரிந்ததேயில்லை. தலைப்பா கட்டிக்கொண்டு, ஏற்றிக் கட்டிய ஒரு வேட்டி, காடா துணியில் தைத்த கையில்லாத ஒரு பனியன் போன்ற ஒரு சட்டை அல்லது ஒரு தொள தொளா சட்டை (பழம் பெரும் எழுத்தாளர் திரு. சி.சு.செல்லப்பாவின் தோற்றம் அந்த கௌரவமான இலக்கியவாதியிடம் படிந்திருந்ததை நான் கண்டிருக்கிறேன்-கையில்லாத காடாத் துணி பனியன் மற்றும் நீர்க்காவி ஏறிய ஒரு நாலு முழ வேட்டி-இதுதான் அவரது தோற்றம்) , ஒரு சின்னக் கைப்பிடி மேல் துண்டு இவைகள்தான் நடிகர் ரத்னத்தின் அடையாளம்.
      எந்நேரமும் வெற்றிலைக் காவி கமழும், வாயில் ஊறவைத்து சவைத்துக் கொண்டிருக்கும், அடக்க முடியாது வழிய விட்டு விடும் தாம்பூலம் தரித்த வாயோடு, அதிலிருந்து வழியும் சொற்களோடு,  அகன்ற வாயின் பெரிய பெரிய பற்களில் ஆளை அடையாளப்படுத்துவதுபோல் அமைந்திருக்கும் காவிக் கறை, அத்தோடு அவர் கொன்னிக் கொன்னி, கொஞ்சிக் கொஞ்சி அல்லது கெஞ்சிக் கெஞ்சிப் பேசும் முறை, அதில் அமைந்திருந்த இயற்கையான பாவம், அப்பாவித்தனம், அறியாமை, அத்தனையும் மீறிய அன்பும் நெருக்கமுமான மன உறவு,  இவையே அவரைத் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தி நிறுத்தியிருந்தன. முதல் பார்வையிலேயே முதல் படத்திலேயே பார்த்த ரசிகர்கள் காளி என்.ரத்னம் என்கிற பெயரை மனதுக்குள் பூட்டி வைத்துக் கொண்ட காலங்கள் அவை. மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படும்போதுதான் இம்மாதிரியெல்லாம் நிகழும் வாய்ப்புக்கள் உண்டு. அல்லாத பட்சத்தில் பத்தோடு பதினொன்றாகத்தானே இருந்தாக வேண்டும்.
      ஐம்பதுகள் வரையில் தொடர்ந்து திரைப்படங்களைப் பார்த்து வந்த, தமிழ் சினிமா மூத்த தலைமுறை ரசிகர்களுக்கு, இன்றைய அந்த வயதான  பெரியோர்களுக்கு காளி என்.ரத்னம் என்றால் ஏதோ அவர்களது பக்கத்து வீட்டுக்காரனைப் பார்ப்பது போன்று, அவர்கள் வீட்டுச் சொந்தங்களைப் நேசிப்பது போன்றதான நெருங்கிய உணர்வோடு, கண்களில் நீர் கசிய நீண்ட பெருமூச்சோடு “ம்ம்ம்...அது ஒரு காலம்....!“ என்றே விளித்துப் பேசி பெருமை கொள்வார்கள்.
      எம்.ஜி.ஆர் இவரைக் குரு என்று சொல்லியிருக்கிறார். நடிப்புக்கா குரு என்று தகவல் அறிவோருக்கு ஒரு சந்தேகம் வந்து கொண்டேயிருக்கும். தற்காப்புக் கலையை (Martial Arts) அவருக்குக் கற்றுக் கொடுத்தவர் காளி என்.ரத்னம்தான். அந்தவகையில் அவர் குருவானார்.
      1941 ல் வெளிவந்த சபாபதி திரைப்படம்தான் நகைச்சுவைக் காட்சிகளின் உச்சங்களைக் கொண்டவை. அத்திரைப்படத்தின் நகைச்சுவைக்காகவே மக்கள் திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். தங்கள் குடும்பக் கவலையை மறக்க, உறவுகளோடு மகிழ்ந்திருக்க, மாற்றமில்லாத பொழுதுகளை புதுப்பித்துக் கொள்ள என்று திரைப்படங்களை நாடியபோது, இவரின் படங்கள் இயல்பான ஒன்றாக, நாம் வீதிகளில் அன்றாடம் சந்திக்கும் ஒரு எளிய மனிதனின் விகல்பமற்ற சம்பாஷனை கொண்ட காட்சிப்படுத்தலாக  அமைந்திருந்தது. ஏ.வி.எம். நிறுவனம் அதற்கு முன் ஒரு திரைப்படம் எடுத்து சற்றே சரிவில் இருந்த ஒரு கால கட்டம். இப்படத்தின் வெற்றியினால் தலை நிமிர்ந்தது. பின்புதான் என்.எஸ்.கே., டி,ஏ.மதுரம் ஜோடிக்குப் போட்டி என்று காளி என்.ரத்னம்-சி.டி.ராஜகாந்தம் ஜோடியைப் பேச ஆரம்பித்தார்கள் தமிழ்த் திரை ரசிகர்கள்.
      காளி என்.ரத்னத்திற்கு அமைந்ததே அவரது அப்பாவித் தோற்றமும், அந்தத் தோற்றத்தையே நிலை நிறுத்தும் அடையாளமான பாவங்களும், அவர் ஏற்றிருக்கும் பாத்திரங்களுக்குப் பொருந்தி அமர்ந்து கொண்டன. பாகவதர் வேஷமானாலும் சரி, ஆபீஸ் பியூன் ஆனாலும் சரி, வீட்டு வேலைக்காரனானாலும் சரி...என்று எல்லாவற்றிலும் அவர்கள் இதற்கென்றே பிறந்தவர்கள் என்பதான எண்ணத்தை ஏற்படுத்தக் கூடிய விதமாக நடிப்பில் சிறந்து விளங்கினார்கள். அதே குரல்தான், அதே சேட்டைகள்தான்...என்றாலும் வசனம் பேசும் பாங்கில் நாடக அனுபவங்கள் கைகொடுக்க அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறிப் போனார்கள்.
      1940 ல் வெளிவந்த உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தில் காளி என்.ரத்னத்தின் நகைச்சுவை சொல்லத்தக்கதாய் அமைந்திருந்தது. அதற்குப்பின் அடுத்தடுத்த படங்கள் அவரது வெற்றியை உயரே கொண்டு சென்றன.
      நல்ல காலம் பிறக்குது...நல்ல காலம் பிறக்குது...என்று குடுகுடுப்பையை உருட்டியவாறே அசல் குடுகுடுப்பைக்காரனாய் அந்தக் குடிசை வீட்டு வாசலில் நின்று குரல் கொடுக்கும் அந்தக் காட்சி -  இன்று நாமும் ரசிக்கத்தக்கதாகத்தானே இருக்கிறது.
      வெளியே வருகிறாள் செல்லி...இதென்ன கொள்ளை.....? - என்று அந்த வேஷத்தைப் பார்த்து கேள்வியை வீசுகிறாள்.
      அதிருக்கட்டும்...செல்லி...சௌக்கியமா?
      ஆமா....இப்பவாவது கேட்க வந்துட்டீங்களே....? - இந்த அலுப்பு அவருக்கு அதிர்வை ஏற்படுத்த ஆதரவாய்க் கையைப் பிடிக்கிறார்.அவளுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்த, இருவரும் குடிசைக்குள் போகிறார்கள்.
      எங்க போயிட்டான் கதாநாயகன்...? - சூட்சுமமான கேள்வி.
      அது யாரு...?     ஒம் புருஷன்....!!
      ஓகோ....வெளிய போயிருக்காரு...அது இருக்கட்டும்...சரடு வாங்கித்தாரேன்னுட்டு, சரடு விட்டுட்டுத்தானே போயிட்டீங்க....
      க்கும்....சரடு கிரடுன்னு சொன்னே...நான் பெரிய்ய்ய முரடாயிடுவேன்...நான் வரும்பொழுதெல்லாம் நீங்க மஜாவுல இருந்தீங்க...இன்னொரு சமயம் பார்த்துக்கலாம்னா எனக்கு எத்தனையோ வேலை...
      வேல....பெரிய்ய்ய்ய்ய்ய வேல...!.
      அவள் தோளைத் தொட்டு...அட...நான் பகல் வேஷம் மட்டுமல்ல....ராஜாங்கத்துல உளவாளி உத்யோகம்...எத்தன பேரச் சிக்க வச்சிருக்கேன் தெரியுமா..?..-மீசையை முறுக்குகிறார்...
      என்னைய எதுலயாவது சிக்க வச்சிராதீங்க...
      நீதான் எங்கிட்ட சிக்கியிருக்கியே...உன்ன அங்க சிக்க வச்சுட்டு...நான் இங்க என்ன எண்றது? உன்ன சிக்க வைக்க மாட்டேன்...கக்க வைப்பேன்.....உற.உற்உறா....சிரிக்கிறார்.
      பிறகு குழைந்து...ம்...செல்லி...ஒரு வேல செய்றியா...?    -        என்ன...?
      உனக்கு சரடு வேணுமோ...?    -        ஆமா....கண்டிப்பா வேணும்.....
      அப்படீன்னா உன் அட்டியக் கழட்டிக் கொடு....அத அழிச்சி, கொஞ்சம் பொன்னு போட்டு, பெரிய்ய்ய்ய சரடா நெரடில்லாம செஞ்சிட்டு வர்றேன்....
      ம்.....சிரித்துக் கொண்டே திருப்தியாய் செல்லி...தாலியைக் கழட்டிக் கொடுக்கிறாள். ஜன்னல் வழியாக ஒருவன் இதைப் பார்த்து விடுகிறான்.
      கையில் வந்த அட்டியோடு....ஏவ்வ்வ்வ்வ்வ்வ்.....என்று பெரிய்ய்ய்ய்ய ஏப்பம்.
      என்ன ஏப்பம் பலமாயிருக்கு....?
      ஆமா...இது ஏப்பந்தான்.... -அட்டியைப் பார்த்துக் கொண்டே சொல்கிறார். அதிருக்கட்டும்...செல்லி நாளைக்கு...என்று சொல்லிக்கொண்டே அவள் கையை லேசாகத் தொட்டு, முத்தம் கொடுப்பதுபோல் உதட்டைக் குவிக்க, அதையும் அந்த ஆள் பார்த்து விடுகிறான். சட்டென்று அவள் சைகை செய்ய, இவர் ஜன்னல் பார்த்து சுதாரிக்க.. விலகி நின்று  குடு குடுப்பையை உருட்டி .சமாளிக்கிறார்...
      அம்மா பலிக்கவே...அம்மா பலிக்கவே...எங்கம்மா பலிக்கவே...காளி...காளி...மகமாயி....நொண்டி வீரப்பா....கருப்பண்ணசாமி ஓடிவா...எங்கருப்பண்ணசாமி ஓடி வா....காரியம் முடியும்போது ஒரு காளை வந்தது...ஒரு காளை வந்தது....அந்தக் காளையப் பார்த்துட்டு இவன் கண் கலங்கி ஐயோன்னு போறான்...ஐயோன்னு போறான்.....அந்தக் காளையை ஒழிக்க இந்தக் கன்னிதான் வேலை செய்யணும்...இந்தக் கன்னிதான் வேலை செய்யணும்...என்று அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டே உடுக்கையை உருட்டுகிறார். இந்தக் கன்னி மனம் வச்சா காரியமெல்லாம் கை கூடும்...காரியமெல்லாம் கைகூடும்....அந்தக் காளை கண்ணோட்டம் போட்டு கடுங்கோபமாப் பாக்குறான்...கடுங்கோபமாப் பாக்குறான்...அதுக்காக இந்தக் காளை பயப்படமாட்டான்...பயப்படமாட்டான்...வந்த காரியத்தை முடிச்சிட்டுத்தான் போவான்....முடிச்சிட்டுத்தான் போவான்...என்றவாறே நழுவுகிறார்.
      ஏய்...குடுகுடுப்ப....நினைச்ச காரியம் பலிக்குமாடா...? கேட்டுக்கொண்டே அந்தாள் உள்ளே வர....பலிக்குமே...பலிக்குமே....கணபத்ரகாளி, நொண்டி வீரப்பா...என் கருப்பண்ணசாமி ஓடிவா...கருப்பண்ணசாமி ஓடிவா....நெனச்ச காரியம் பலிக்க நெடுநாள் ஆகும்...நெடுநாள் ஆகும்...நாளாக ஆக நாளாக ஆக கன்னி நயம்மா வருவா...நயம்மா வருவா.... என்று தப்பிக்க முயல...அந்தாள் ஓங்கி ஒரு தள்ளுத் தள்ளுவார்...ஏய்ய்....! இந்த அலறலில் நடுங்கிப் போவார். 
என்னடா கைல...      -             குடு குடுப்பை.....
      இந்தக் கைல.....?-கேட்டுக் கொண்டே ...என்னடா மறைக்கிற....? என்று அட்டிகையைப் பார்த்துவிட்டு அதிர்ந்து...டேய்...பட்டாபி...அங்க இங்க சுத்தி என் அடி மடிலயே கைய வச்சிட்டியேடா.....என்ன தைரியண்டா உனக்கு....? என்று கேட்டுக்கொண்டே அதைப் பிடுங்கிக் கொண்டு  மொத்த ஆரம்பிப்பார்....
      வேணாம்..வேணாம்...வேணாம்...செத்துருவேன்.....அலறியடிக்க...
      இனிமே இந்தப் பக்கம்  வந்தே...ஜாக்கிரதை.....போடா...நிக்காத....நிக்காத...ஓடுறா...ஓடு...ஓடு...என்று அடித்து விரட்ட, கதவை எக்கித் தள்ளித் திறந்து ஆளை விட்டால்போதும் என்று தப்பித்து ஓடுவார்.
      இன்று இந்தக் காட்சி சாதாரணமாய்த் தோன்றினாலும், அதில் உள்ள இயல்புத் தன்மை....செயற்கைத்தனமில்லாத நடிப்பு, குடுகுடுப்பைக்காரனாய் வரும்பொழுதே தப்புச் செய்யத்தான் என்பதுபோலான  பம்மிப் பதுங்கிய வரவு, புருஷன்காரனக் கண்டதும் சட்டென்று சுதாரிக்கும் பயம், பிறகு சமாளிக்கும் வேஷம்...அடி மாறி மாறி விழ ஆளை விட்டால் போதும் என்று ஓட்டமெடுக்கும் வேகம். என்று மொத்தக் காட்சியிலும் இருக்கும் ஒரு யதார்த்தமான இயல்பான தொடர்ச்சி....நிஜ வாழ்க்கையில் காணும் காட்சிகளைப் போலவே நம்மை ரசிக்க வைக்கும்..
      ஆற்றங்கரைப் பக்கம் ரத்னம் சென்று கொண்டிருப்பார். நெற்றியில் பட்டை விபூதி பளிச்.  அவர் ஒரு பாகவதர். அன்று அமாவாசை. அமர்ந்திருக்கும் அய்யர் அவரை அழைப்பார். அடடே...வாரும் வாரும்...என்று அழைக்க...என்ன என்று இவர் போய் உட்கார...இன்னைக்கு அமாவாசை...தெரியுமோ...தர்ப்பணம் பண்ணிட்டுக் குளிச்சா புண்ணியமாக்கும் என்பார். அப்டியா...சரி...என்று தாடையைத் தடவிக்கொண்டே அவர் முன் உட்காருவார்...அப்படி அவர் உட்காருவது சவரம் செய்து கொள்ள உட்காருவதுபோல் இருக்கும். போறாதே...பக்கத்துல ஒரு பொம்மனாட்டி வேணுமே...இருந்தாத்தான் சிலாக்கியம் என்று அய்யர் சொல்ல...அப்டிங்களா...இதோ வந்துடறேன்...என்று புறப்படுவார். கொஞ்சம் தள்ளி இன்னொரு அய்யர் ஒரு தம்பதியருக்கு தர்ப்பணம் செய்து வைத்துக் கொண்டிருப்பார். மந்திரம் முடிந்ததும்...திரும்பிப் பார்க்க...ஓ...நீங்களா...வாங்க...வாங்க...என்று அழைக்க...இன்னைக்கு அமாவாசையாமே...தர்ப்பணம் பண்ணிட்டுக் குளிச்சா புண்ணியம்னு அய்யர் சொன்னார் என்று சொல்லித் தயங்குவார்...இல்ல...ஒரு பொம்பளை வேணும்னாரு அய்யர்...ஆமா...அப்படி இருந்தாத்தான கண்கண்ட பலன் கிடைக்கும் என்று அந்த அம்மாளும் சொல்ல...ஓ...அப்டியா? என்று வியந்து அதான் பக்கத்துல இவங்கள உட்கார்த்திட்டு, கொஞ்ச நேரத்துல திருப்பி அனுப்பிச்சிடுறேன்...என்று அந்தம்மா புருஷனிடம் கேட்க...ஏன்யா...இதென்ன பாத்திரமா பண்டமா...பக்கத்துல உட்கார்றதுக்கு...? சாஸ்திரத்துக்குப் பக்கத்துல உட்கார வேண்டிதானே...இப்போ சங்கீதத்துக்கு பக்கத்துல உட்காரு்ன்னா உட்கார்றதில்லையா...? என்பார். புண்ணியந்தானே...என்று அந்தாளும் தன் மனைவியை அனுப்புவார். அட, கேள்விப்பட்டதில்லையா...பொண்ணோட குளிச்சா...பாவம் மண்ணோட போகும்னுட்டு...என்று... நீ.. பாகவதரோட போய் தர்ப்பணத்த முடிச்சிட்டு வந்திடு... ..நா இதோ குளிச்சிட்டு வந்திடறேன்...என்று புறப்படுவார்.
      ரத்னம் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டுபோய் அந்த அய்யர் முன்னால் உட்கார...அவர் மந்திரத்தைச் சொல்வார்....அது புரியாமல்...இவர் சரியா சொல்லு அனுமந்தோ...என்று திருப்பிச் சொல்வார்...என்னங்காணும் அநுமந்துங்கிறீர்...என்க...வாயில நுழையலீங்க...என்பார். சரி...தனித்தனியா சொல்லுங்கோ என்று அய்யர் ஆரம்பிப்பார். மமோபாத்த...மாமாவப் பார்த்தேன்....பரமேஸ்வர தீர்த்தம்...பரங்கிக்கா நாத்தம்....எங்கானது தீர்த்தே...இங்குதான் வந்து பார்த்தேன்....ஓய்...உம்ம நாக்குல தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க...நீர் என்ன ஜாதிங்காணும்....? என்று அய்யர் கேட்க...நான் ஆண் ஜாதி...அவ பொஞ்ஜாதி...அது தெரியுதுங்காணும்...நீர் என்ன கோத்ரம்?   கோத்ரமா....நான் அவரக்கா கோத்ரம்...அவ கொத்தவரங்கா கோத்ரம்....ஓய்...நீர் தர்ப்பணம் செய்ய வந்தீரா...அல்லது சண்டை கிண்ட போட வந்தீரா....சுத்த அதிகப் பிரசங்கியா இருக்கீரே...உமக்கு தர்ப்பணம் செய்ய முடியாது...போங்காணும்...என்று விரட்டுவார்...
      தர்ப்பணம் செய்ய முடியாதுன்னா குடுத்த காசத் திருப்பிக் குடுய்யா.? ...எதுக்காகக் காசக் கொடுக்கணும்...சொன்ன மந்திரத்துக்கும் நீர் குடுத்த காசுக்கும் சரியாப் போச்சு....ஓய்...காசு வாங்காம உன்னை விட்டுட்டுப் போக மாட்டேன் நான்...ஏய்.தொடாமப் பேசுங்காணும்...ஏய்...காச கீழ வைங்காணும்...என்று மடியைப் பிடித்து இழுக்க..அந்தப் பெண்ணின் புருஷன்காரன் ஓடி வர.....அவர் ஏன்யா தர்ப்பணம் செய்ய மாட்டேங்கிறீர் என்று கேட்டு அந்த அய்யர்கள் ரெண்டு பேருக்கும் சண்டை வர, அதுதான் சமயம் என்று அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு கிளம்பி விடுவார் காளி என்.ரத்னம். சண்டை முற்றி அடிதடியாகிக் கட்டி உருள....இவர் போயே போய் விடுவார்...
      இந்த மாதிரிக்  காட்சிகள் நாற்பதுகளில் வந்த திரைப்படங்களில் ஒன்றிரண்டு அங்கங்கே தென்பட்டாலும் யாரும் அப்போது அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சினிமாவில் வரும் வெறும் நகைச்சுவைக் காட்சிகளே என்கிற எண்ணத்தில் நடிகர்களின் நகைச்சுவையை ரசிக்கவே செய்தார்கள். கடந்து போனார்கள். காளி என்.ரத்னத்தின் நகைச்சுவைக் காட்சிகளில் இம்மாதிரி சில என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் போட்டியாக அந்தக் கால சினிமாவில் அமைந்தன என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள். யாரும் யார் மனதையும் கஷ்டப்படுத்தியதில்லை. ஏதுமறியாத முட்டாள் ஒன்றைப் பேசினால் எப்படியிருக்கும் என்பதற்கடையாளமாய் அமைந்த மேற்கண்ட பதிலிருக்கும் வசனங்கள் அந்தப் பாத்திரத்தின்  அறியாமையின் அடையாளங்களாகவே இருந்து அந்தக் காட்சிகளுக்கு மெருகூட்டின. பாமர மக்களின் வாய்ச் சவடால்களின் திசைகளைக் கோடிட்டுக் காட்டின.
      சபாபதி திரைப்படம்தான் காளி என்.ரத்னத்திற்கு ஆஉறா என்று பெயர் வாங்கிக் கொடுத்த படம். காரணம் படம் முழுவதும் அவரது நகைச்சுவைதான் மேலோங்கியிருந்தது. துளியும் புத்திசாலித்தனம் தெரியாத, மடையனாய்ப் பேசக் கூடிய, நடந்துகொள்ளக் கூடிய தன்மையோடு கூடிய அந்தக் கதாபாத்திரம் நாயகனுக்கும், அவருடைய வேலைக்காரனுக்கும் ஒரே பெயரைக் கொண்டதாய் அமைந்தது. ஆம், அந்தப்படத்தில். சபாபதி என்பதுதான் இருவரின் பெயரும். டி.ஆர்.ராமச்சந்திரன் சொல்வதையெல்லாம் தப்புத் தப்பாகப் புரிந்து கொண்டு தப்பாகவே செய்து கொண்டிருப்பார் காளி என்.ரத்னம். செய்வதையும் செய்து விட்டு, அவரிடம் நீ புரியும்படியாச் சொல்லுப்பா...என்று வேறு சொல்வார். ப்ளடி ஃபூல் என்று அவர் இவரைப் பார்த்துத் திட்ட, அப்படீன்னா என்னாப்பா....? என்று இவர் அப்பாவியாய்க் கேட்க...அப்படீன்னா கெட்டிக்காரன்னு அர்த்தம் என்று சொல்லி வைப்பார். டி.ஆர்.ஆர் -உடன் இருக்கும் அவரது நண்பரையே ஒரு சமயம் ப்ளடி ஃபூல் என்று சொல்லி விடுவார். என்னடா இப்படிச் சொல்றே? என்று திடுக்கிட்டுக் கேட்க, நீதானப்பா சொன்ன...ப்ளடிஃபூல்னா கெட்டிக்காரன்னு என்று விகல்பமில்லாமல் சிரிப்பார்.
      பேட்மிட்டன் விளையாடக் கிளம்புவார். போய் அந்த பூட்ஸை எடுத்திட்டு வா...என்று சொல்ல இரண்டு பூட்ஸ்களை வெள்ளித்தட்டில் வைத்து மரியாதையாகக் கொண்டு வந்து தருவார். என்னடா செருப்ப இப்டித் தட்டுல வச்சிக் கொண்டு வர்றே...? என்று கேட்க...நீதானப்பா சொன்ன...என்க...போடா ஃபூல்...ஏதாச்சும் தின்ற வஸ்துவை தட்டுல வச்சுக் கொண்டாடான்னா....என்று திட்ட....இனிமே புரியற மாதிரிச் சொல்லுப்பா...தப்புன்னா நீதானப்பா சரியாச் சொல்லணும்...என்னைக் கொறை சொல்றியேப்பா...என்று திருத்துவார். இப்டி நம்மளையே திருத்தறானே என்று எந்த முதலாளிக்கும் கோபம் வராது. அந்த மாதிரியான ஒரு காரெக்டர்தான் அவர் சபாபதி படத்தில் ஏற்றுக் கொண்ட வேலைக்காரன் சபாபதி பாத்திரம்.
      வெளில மழை பெய்யுது...சரி...டென்னிஸ் இன்னிக்கு இல்ல...கார்ட்ஸ் விளையாடலாம்.என்று நண்பர்கள் சொல்ல, .. போய் கார்ட்ஸ் எடுத்திட்டுவா...என்று அனுப்ப... போஸ்ட் கார்டு ஒன்றைக் கொண்டு வந்து தருவார். டர்ன் தி டேபிள்....என்றால் விஷயத்தை மாற்றிப் போடு என்று பொருள்.பேச்சு வாக்கில் ராமச்சந்திரன் நண்பர்களிடம் அப்படிச் சொல்லி வைக்க, அது தனக்குச் சொன்னதாக எடுத்துக் கொண்டு, சடாரென்று முன்னால் இருக்கும் டேபிளைக் கவிழ்த்துப் போட்டு விடுவார். சட்டுச் சட்டென்று எந்தத் தாமதமுமின்றி முதலாளி சொல்லும் வேலைகளைத் தான் சரியாகச் செய்வதாய் நினைத்துக் கொண்டு தப்புத் தப்பாகவே செய்து கொண்டிருப்பார். இந்தப் படம் முழுவதும் இவரது நகைச் சுவை ரசிக்கத்தக்கதாக இவருக்காகவே அமைக்கப்பட்ட காட்சிகளாய் இருக்கும்.  திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும் விதமாய் அமைந்திருந்தது அது ஏ.வி.எம்.மின் மிகச் சிறந்த வெற்றிப் படமாக அமைந்து அந்த நிறுவனத்தை நிமிர்ந்து எழச் செய்தது.
      ஒருமுறை சென்னையில் ஒரு நாடகத்தை காளி என் ரத்தினம் பார்த்தார். அப்பொழுது பம்மல் சம்பந்தம் அந்த நாடகத்தில் வேலைக்கார சபாபதியாக நடித்தார். பார்த்து பரவசமடைந்த ரத்னம் தன் நடிப்பாற்றலை செழுமைப்படுத்திக் கொள்ள அமைந்த சிறந்த வாய்ப்பாக அதைக்  கருதினார். இதன் -,விளைவை 1941-ல் வந்த 'சபாபதி' திரைப்படத்தில் காளி என் ரத்தினம் நடிப்பில் நாம் இன்றும் கண்டு ரசிக்கிறோம்.இப்பொழுதும் நகைச்சுவையை விரும்புபவர்கள் ஆதி முதலான நடிகர்களைத் தேர்வு செய்து பட்டியலிட்டுப்  படங்களைப்  பார்த்து ஆய்வு செய்யத் தொடங்கினால் அது காளி என்.ரத்னத்திலிருந்துதான் தொடங்கியாக வேண்டும். இன்றைய இளைய தலைமுறை அவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதற்காக அவரை அறவே ஒதுக்கிவிட்டுக் கடந்து போகுதல் என்பது நகைச்சுவை என்கிற கலை தர்மத்திற்கு செய்யும் துரோகமாக அமையும்.  
     
      காளி என்.ரத்னம் நடித்த எந்தப் படமும் நகைச்சுவையில் சோடை போனதேயில்லை. சி.டி.ராஜகாந்தத்துடன் ஜோடி போட்டு வெற்றிக் கொடி நாட்டினார். தொடர்ந்து பல படங்களில் அவரது நகைச்சுவைக் காட்சிகள் கொடிகட்டிப் பறந்தன.  கூடவே ஏழுமலை போன்ற வேறு சில நகைச்சுவை நடிகர்களும் அவரோடு சேர்ந்து பங்களிப்பு செய்திருந்தாலும்  அவரது செயல்திறனே முன்னின்றது. மிகச் சிறந்த இயக்குநர்கள் இயக்கிய படங்களிலெல்லாம் அவர் நடித்துள்ளார் என்றால் அந்த இயக்குநர்களது தேர்வாக இவர் இருந்திருக்கிறார் என்பதுதான் முக்கியமாக இங்கே கவனிக்கத்தக்கதாகிறது. வால்மீகி இயக்கிய சுந்தர்ராவ் நட்கர்னி, பொன்முடி திரைப்படத்தை இயக்கிய எல்லீஸ் ஆர்.டங்கன், தேவதாசி இயக்கிய எம்.எல்.டாண்டன், போஜன், ஆதித்தன் கதை படங்களை இயக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் மற்றும் எல்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் அந்தக்கால திறமைமிகு இயக்குநர்களாகத் திகழ்ந்தவர்கள். ஜூபிடர் பிக்சர்ஸ் படமான ஸ்ரீமுருகன் திரைப்படத்திலும் ஆரவல்லி-சூரவல்லி சி.வி.ராமன் என்பவர் இயக்கிய படத்திலும் அர்த்தனாரி என்கிற பி.யு.சின்னப்பா, என்.எஸ்.கே.யுடன் டி.ஆர்.ரகுநாத் இயக்கிய படத்திலும் காளி என்.ரத்னத்தின் பங்கு முக்கியமானது. ஜூபிடர் பிக்சர்ஸ் படத்தில்தான் எம்.ஜி.ஆர். மற்றும் கொன்னப்ப பாகவதர்  ஆகிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது.
      மிகக் குறுகிய காலத்தில் நிறையப் படங்களில் நடித்து, தொடர்ச்சியாக தன் பங்களிப்பைச் செய்து, நகைச்சுவைக் காட்சிகளைத் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் மிகவும் விரும்பும் வண்ணம் இயங்கி வந்த காளி என்.ரத்னம் ஆகஸ்ட் 1950 ல் காலமானார் என்கிற செய்தியை நாம் அறியும்போது தொடர்ந்து இருந்து வந்திருந்தால் இன்னும் பல குணச்சித்திரக் கதாபாத்திரங்களையும் கூட அவர் ஏற்றுச் சிறப்புச் செய்திருக்க முடியும் என்று நமக்குத் தோன்றுகிறது.நகைச்சுவை நடிகர்கள் எந்த வேடத்தையும் ஏற்றுப் பொருந்தச் செய்யும் திறமைசாலிகளாய்த்தான் எப்போதும் வலம் வந்திருக்கிறார்கள்.   தனது 52-வது வயதில் மரணமடைந்த காளி என்.ரத்னம் கடைசியாக நடித்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் வெளிவந்த பொன்முடி.
      மூத்த தலைமுறையினரே அதிகம் கேள்விப்படாத படங்கள் இவர் நடித்தவை. நாடகங்களில் நடித்த காலங்களில், மேலாளராகப் பணியாற்றியபோது இவரது ஒருங்கிணைப்பில் அனுபவம் பெற்ற  பழம் பெரும் நடிகர்களான கே.பி.கேசவன், எம்.ஜி.ராமச்சந்திரன், பி.யு.சின்னப்பா மற்றும் எம்.ஜி.சக்ரபாணி போன்றவர்கள் பின்னாளில் ரொம்பவும் பிரபலங்களாக மாறி வெற்றிக்கொடி நாட்டினார்கள்.
      நகைச்சுவை நடிகர்கள் மொத்தத் திரைப்படத்தில் சிறு பங்களிப்பைச் செய்பவர்கள்தானே என்று எண்ணிவிட முடியாத பல்நோக்குத்  திறமைசாலிகளாய், கதை நாயகனிலும் மேம்பட்ட அனுபவமுள்ளவர்களாய், நாயகர்களே அறிந்து கூட நடிக்க அஞ்சுபவர்களாய், போட்டியாளர்களாய் பலரும் வலம் வந்த களம்  நம் தமிழ்த் திரையுலகம்...!!!
                                    ------------------------------------------------------
     
     
     

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...