13 ஆகஸ்ட் 2019



“கொஞ்சம் வெள்ளையப்பம்  தள்ளுங்க…”                                           
நடிகர் சாரங்கபாணி                          
------------------------------------------------------------------------------------  
        “கொஞ்சம் வெள்ளையப்பம் தள்ளுங்க….” – இந்த வசனம் யாருக்கேனும் நினைவிருக்கிறதா? பழைய தமிழ்த் திரைப்படங்களைத் தேடித் தேடிப் பார்த்து ரசிப்பவர்களுக்கு நிச்சயமாக நினைவிருக்கும். தொண்ணூறுகள் வரையில் தியேட்டர்களில் அவ்வப்போது பழைய திரைப்படங்கள் போடுவது என்கிற நடைமுறை இருந்து வந்தது. புத்தம் புதிய காப்பி என்றும் மெருகு குலையாத புத்தம் புதிய காப்பி என்றும் நகர்ப்புறங்களிலும், கிராமப் புறங்களிலும் படு உற்சாகமாய் விளம்பரம் செய்து திரையிடுவார்கள்.. வீதி வீதியாய் போஸ்டர் ஒட்டிய வண்டியைத் தள்ளிக் கொண்டு டமர டமர டம் என்ற கொட்டுச் சத்தத்தோடு  வந்து நோட்டீஸ் விநியோகிப்பார்கள்.  ஒரு புதிய படம் ரிலீஸ் செய்து சில மாதங்கள் ஓட்டி அதன் பிறகு அடுத்த வரவை எதிர்நோக்கி இருக்கும் இடைப்பட்ட காலங்களில் இம்மாதிரி பழைய கருப்பு-வெள்ளைப் படங்களைக் கொண்டு வருவது என்பது நகரங்களில் நடைமுறையிலிருந்தது. அதிக பட்சம் இந்தப் படங்கள் இரண்டு வாரங்களுக்குத் தாங்கும். எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த திரைப்படங்களுக்கு இந்த உத்தரவாதம் உண்டு எனில், ஸ்டார் வேல்யூ கருதாமல் திறமையான இயக்கத்தில் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து, திறம்படக் காட்சிகளை அமைத்து, இனிமையான இசையையும் கொடுத்து, ஜனரஞ்சகமான வெற்றிப் படங்களாய் வலம் வந்த, முக்கிய பட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட  வேறு பல பழைய  திரைப்படங்களும் இந்த வரிசையில் சேரும். ரசிகர்கள் வேறுபாடு இன்றி, குடும்பம் குடும்பமாய்ப் போய் இந்தத் திரைப்படங்களை விரும்பிப் பார்த்ததால், இவையும் அவ்வப்போதைய மறு வருகையில் நல்ல வசூலைக் குவித்தன.
       ஒரு கட்டத்தில் பழைய திரைப்படங்களைத் திரையிடுவது என்கிற வழக்கம் அறவே அற்றுப் போனது. காலங்கள் பலவிதமாய்க் கடந்து போன நிலையில், இப்போது கைக்குள்ளேயே உலகம் வந்து விட்டது..! நினைக்கும் எதையும் அந்தக் கணத்திலேயே கையடக்கமாய் கைபேசியில் நிறுத்தி, யூ ட்யூப்பில் கொண்டு வந்து பார்த்து மகிழும் வசதி வாய்ப்புகள்.
       ஆனால் அந்த, தியேட்டரில் பார்க்கும்  பழைய திரைப்பட ரசனை இன்று அப்படியே இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறி. எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். எத்தனையோ தொழில் நுட்ப வசதிகள் வந்திருக்கலாம். எந்த வசதி வாய்ப்பும் இல்லாத அந்தக் கால கட்டத்தில் (அதாவது ஐம்பது, அறுபதுகளில்-ஏன் எழுபது, எண்பதுகளையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்) தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் தரம் என்பது, முப்பதுகள் முதல் அறுபதுகள் வரையில் தமிழ் இலக்கிய உலகில் எழுதப்பட்ட மதிப்பு மிக்க படைப்பாளிகளின் மணி மணியான சிறுகதைகள், நாவல்கள் இவைகளுக்கு ஒப்பான உயர் தரம் வாய்ந்தவை என்று சொன்னால் அது மிகையாகாது..
       சென்னையில் விஜயா-வாஉறினி (ஆரம்பத்தில் விஜயா ப்ரொடக் ஷன்ஸ்) என்றொரு ஸ்டுடியோ இருந்தது. நாகிரெட்டி என்ற மதிப்பு மிக்க பெரியவர் அதன் பட அதிபர். பின்னர் நாகிரெட்டி-சக்ரபாணி கூட்டுத் தயாரிப்பு. அந்த நிறுவனம் பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்தது. மாயா பஜார், மிஸ்ஸியம்மா, எங்க வீட்டுப் பிள்ளை என்று. இன்றும் அவ்வப்போது தொலைக்காட்சியில் இப்படங்கள் போடப்படும்போது வீட்டு வேலைகளை ஒதுக்கிவிட்டு ஆர்வமுடன் பார்க்க அமரும்   மிகுந்த ரசனைக்குரியதாக இத்திரைப்படங்கள் விளங்குகின்றன. வெளி வந்து அறுபதாண்டு காலம் கடந்து விட்ட நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நேரம் போவதை மனதில் கொள்ளாது அமர்ந்து ஆழ்ந்து ரசிக்கும் சிறந்த கதையமைப்பும், காட்சிகளும், என்றும் அலுக்காத பாடல்களும் கொண்டவையாக இத்திரைப்படங்கள் விளங்குகின்றன. அவற்றில் நடித்த நடிக நடிகையர்களும் படத்தோடு அத்தனை பொருந்திப்போய் அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே ரசனையோடு  வாழ்ந்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்து காலத்தால் அழியாத காவியங்களாய் அவைகளை மாற்றி நிர்மாணித்தார்கள்.
       அப்படிப்பட்ட ஒரு படம்தான் விஜயா புரொடக் ஷன்ஸ்  தயாரிப்பில் வந்த மிஸ்ஸியம்மா. எல்.வி.பிரசாத்தின் இயக்கத்தில் வந்த வெற்றிப் படம் இது. நடிகை ஜமுனாவிற்குப் பெயர் பெற்றுத் தந்த படம். ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் வெளியானது. தெலுங்கில் என்.டி.ராமராவும், தமிழில் ஜெமினிகணேசனும் நாயகர்கள். எ்ல்.வி.பிரசாத்தின் இயக்கத்தில் உறிந்தியிலும் வெளிவந்தது.
இந்தத் திரைப்படத்தில்தான் கே.சாரங்கபாணி ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  காரியம் ஆக வேண்டும் என்று நாடி வருபவர்களிடம் பணம் கறப்பது அவர் வேலை. பணம் கைக்கு வந்துவிட்டால் சொன்ன வேலையைச் செய்து கொடுத்து விடுவார். அதற்காக எடுத்த எடுப்பில் அவர் உபயோகிக்கும் வார்த்தைதான் இந்த “கொஞ்சம் வெள்ளையப்பத்தைத் தள்ளுங்க…”  - வெள்ளையப்பம் என்பது பணம். அதை அவர் நெளிந்து குனிந்து, குரலைச் சற்றுத் தாழ்த்தி முகத்தைக் கோணிக்கொண்டு ரகசியமாகக் கேட்கும் விதமே அலாதி.  நகைச்சுவை என்பது உடம்போடு ஒட்டியிருக்கும் அவருக்கு. அவரின் சுள்ளென்ற வாய் திறந்த குழிச் சிரிப்பு யாராலும் மறக்க முடியாதது.
திரையில் பார்த்தவுடனேயே சிரிப்பை வரவழைக்கும் நடிகர்கள் பலர். அதில் ஒருவர் கே.சாரங்கபாணி. போதாக்குறைக்கு குரல் வேறு அவருக்கு வெகுவாக ஒத்துழைக்கும். ஒரு அரை டவுசரைப் போட்டு சட்டையை இன் பண்ணிக் கொண்டு அறிமுகமாகும் காட்சியே தமாஷ்தான்.
காலில்லாத நொண்டி சாமி…தர்மம் பண்ணுங்க….என்று சொல்லிக் கொண்டே சாவித்திரியும், நம்பியாரும் ஒரு பூங்காவில் வைத்து சீரியசாகப் பேசிக் கொண்டிருக்கையில் இடையில் வந்து கை நீட்டுவார். யார்றா இது குறுக்கே வந்துட்டு…என்று சொல்லிக் கொண்டே அவர் கையில் காசைத் திணித்து, விரட்டுவார் நம்பியார். பிறகு ஜெமினியோடு நீங்களே சமரசம் பண்ணி வைங்க…ஒண்ணு என் பணத்தைத் திருப்பித் தரச் சொல்லுங்க…இல்லைன்னா என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க…என்று சொல்லிக் கொண்டிருக்கையில் அங்கேயும் குறுக்கே வந்து கையை நீட்டுவார்…அப்போதும் பணத்தைத் திணிப்பார் நம்பியார்.
முடியுமென்றால் முடியாது…படியுமென்றால் படியாது….என்ற ஏ.எம்.ராஜாவின் இனிமையான  பாட்டு இந்த இடத்தில். ஜெமினி பாடுகையில், கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்துவிட்டு, தலைத் தொப்பி, கையில் ஊன்றியிருந்த குச்சி ஆகிய பிச்சைக்கார வேஷத்தைக் கலைத்து விட்டு, வெறும் அரை டிராயரோடும், இன் பண்ணிய கட்டம் போட்ட சட்டையோடும் தோளில் தொங்க விட்ட ஆர்மேனியப் பெட்டியோடு இந்தப் பாடலின் இசைக்கேற்ப அவர் கச்சிதமாய், அளவெடுத்து ஆடிக் கொண்டே பிச்சையெடுக்கும் அந்த ஆரம்பக் காட்சியே பெரும் கலகலப்பு. அவரது இருப்பே அந்தப் பார்க்தான். ஒரு சிறு துணி மூட்டை. ஆர்மோனியப் பெட்டி. இதுதான் அவர் சொத்து. இழுத்துக் கட்டிய வேட்டி. தலைத் தொப்பி. யாரேனும் வருவதுபோலிருந்தால் சட்டென்று கண்களை மூடிக்கொண்டு, ரெண்டு கண்ணும் தெரியாத குருடன் தாயே….என்று நடித்து கைகளை நீட்டி விடுவார். ஜெமினி அவருக்கு வைத்திருக்கும் பெயர் “பொய் தாத்தா”.
அதெல்லாம் சரி…வெள்ளையப்பம் என்று சொன்னீர்களே…அது பற்றி…… என்று கேட்கிறீர்கள்தானே….வருகிறேன்…..காட்சிகள் மாற மாறத்தானே சொன்னது வரும்.
எம்.டி.பாலு, கேர் ஆஃப் போஸ்ட்மாஸ்டர்ங்கிற பேர்ல ஏதாவது லெட்டர் வந்திருக்குதா?  என்று போஸ்டாபீசில் ஜெமினி கேட்டுக் கொண்டிருக்கும்போது அந்த சந்நியாசிக் கும்பல் பாடிக் கொண்டே தெருவில் நுழையும். நாலைந்து பேர் தாடியும் மீசையுமாய் சீதாராம்…ஜெய சீதாராம்… என்று கையில் திருவோட்டோடு பாடிக் கொண்டே வருவார்கள். தலையாயவர் நம் பொய் தாத்தா சாரங்கபாணி. படா சிரிப்புதான் போங்கள். இந்தப் படமெல்லாம் இதுவரை யாரேனும் பார்க்காமல் இருந்தீர்களென்றால் தயவுசெய்து உடனே யூ.ட்யூபில் போட்டுப் பார்த்து விடுங்கள். அந்தளவுக்கு  ரசனை மிகுந்த கலகலப்பான திரைப்படங்கள் இவைகள்.
உள்ளே விகாரம், வெளியில பாரம், உலகமெலாம் வெறும் டம்பாச்சாரம்…              தன்னமில்லாத தலைவரென்பாராம், தலையில மிளகாய் அரைச்சிடுவாராம்….                    காரியம் சாதிக்கக் காக்கா பிடிப்பாராம்…காரியம் முடிஞ்சா டேக்கா கொடுப்பாராம்…           சீதாராம் ஜெய சீதாராம்…சீதாராம் ஜெய சீதாராம்…                                                டிப்பு டாப்பு டம டூப்பு டமாரம், கலிகாலம் நம்ம கிரகச்சாரம்…                                  சீதாராம் ஜெய சீதாராம்….
இந்தப் பாடலும் ஆட்டமும்  நம்மை ரொம்பவும் ரசிக்க வைக்கும். இதைப் பாடியவரும் சாரங்கபாணிதான். சுவை மிகுந்த இந்தக் காட்சியில் பண்டார வேஷத்தில் இருப்பது இவர்தான் என்று ஜெமினிக்குத் தெரியாது.
கைநிறையக் காசு சேர்ந்ததும், பார்க்குக்கு வருவார். அங்கு ஜெமினியிருப்பார். உடனே அவரிடம் கண்ணை மூடிக் கொண்டு பிச்சை கேட்பார். ஆள் நல்லா திராணியா இருக்க…போய் வேலை செய்தா என்ன? என்பார் ஜெமினி. வேலை வேணாம் சார்…என்றவாறே தாடியைப் பிய்க்க…அடடே நீதானா..? எனக்கு வேலை கிடைச்சிடுச்சு. எங்கூட கொஞ்சம் வர்றியா? என்பார் ஜெமினி. வேண்டாம் சார்…இந்த வேலையே போதும்…என்பார் சாரங்கபாணி. கேவலமாத் தெரிலயா இது? என்று கேட்க…கேவலமாயிருக்கலாம்…ஆனா இதுல இருக்கிற குஷி வேறே எதுலயும் கிடையாதாக்கும்…என்று சொல்ல…இப்டியே இரு….அரசாங்கம் பிச்சை ஒழிப்பு செய்திட்டிருக்கு..இன்னும் கொஞ்ச நாள்ல உங்களையெல்லாம் பிடிச்சு…கொண்டு போயி பிச்சைக்கார விடுதில தள்ளிடுவாங்க…என்க….ஐயையோ…அப்ப நான் உங்ககூட வர்றேன்….என்று கிளம்பி விடுவார். ரங்காராவ் நடத்தும பள்ளியில் சாவித்திரியும், ஜெமினியும் ஆசிரியராய்ச் சேருவார்கள். கணவன்-மனைவி என்று பொய் சொல்லி வேலையைப் பெற்று விடுவார்கள். அந்தப் பொய்க்குத் துணை சாரங்கபாணி. அந்தப் பொய்யை ஜாக்கிரதையாய்ப் பாதுகாக்கணும் என்று அவரை உடன் அழைத்துச் சென்றிருப்பார் ஜெமினி. அந்த இடத்திலிருந்து அவரது பெயர் லோகிதாசன்.
அந்தப் பள்ளியில் டணால் தங்கவேலு ஆசிரியர். அத்தோடு அவர் ஒரு துப்பறியும் சிங்கம். அதாவது துப்பறியம் ராஜூ. ஜெமினியையும், சாவித்திரியையும் கேள்விகளால் துளைத்தெடுத்து நோண்டிக் கொண்டேயிருப்பார். இந்தச் சந்தேகம் வர, சாரங்கபாணி காரணமாய் இருப்பார். உண்மையைச் சொல்லாவிட்டாலும், அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் சுதந்திரமாய்ச் சென்று, நின்று விசாரிக்க அனுமதிப்பது அவர்தான். அதுக்குத்தான் “கொஞ்சம் வெள்ளையப்பத்தைத் தள்ளுங்க….” இது வேறையா…சரி…இந்த புடி….என்று பணத்தை எடுத்து கையில் திணிப்பார் தங்கவேலு. அவரது வேட்டை ஆரம்பிக்கும்….
கதாநாயகனாக ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், அதிகம் ஏற்றது காமெடி வேஷங்கள்தான். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து கழுதையை இழுத்துக் கொண்டு பயந்தவாறே அந்தக் காட்டுக் குகைக்குள் செல்வதும் அங்கே கொதிக்கும் நீர் அடங்கிய குளத்தை ஒரு மரப் பாலத்தின் மூலம் பயந்து செத்துக்கொண்டே கடப்பதும், நிறைந்து கிடக்கும் செல்வங்களைக் கண்டு வாயைப் பிளந்து பிரமித்து, அவற்றை திணிக்க முடியாமல் அள்ளி மூட்டை கட்டிக் கொண்டு வெளியேறுவதும் சுவை மிகுந்த காட்சிகள்.  பொதுவாக இம்மாதிரி காமெடி வேஷங்களில் நடித்தவர்கள் பிற கதாபாத்திரங்களைச் சுலபமாய்ச் செய்து விடுவார்கள்.  சாரங்கபாணி தந்தை வேடமிட்டுப் பல படங்களில் நடித்திருக்கிறார். அறிவாளி, நவராத்திரி என்று. அநாயாசமான நடிப்பு அவைகள்.   
அறிவாளி படம் ஒரு படித்த திமிர் பிடித்த பெண்ணை அடக்குவதான ஆரம்ப உள் அமைப்புக் கொண்ட கதை. அந்தப் பெண் பானுமதி. அவரது தந்தை சாரங்கபாணி. மாப்பிள்ளை என்று சொல்லிக் கொண்டு டி.ஆர்.ராமச்சந்திரன் மூலம் சாரங்கபாணிக்கு அறிமுகமாவார் நடிகர்திலகம். 1963 ம் ஆண்டு வந்த இப்படத்தை ஏ.டி.கிருஷ்ணசாமி என்பவர் இயக்கியிருப்பார். எஸ்.வி. வெங்கட்ராமன் இசையில் அத்தனை பாடல்களும் இனிமை..மிஸ்டர்….என் கோபம் பொல்லாது…ஜாக்கிரதை…இதுதானா பி.ஏ.டிகிரி யோக்யதை…. மற்றும் ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்…பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்…அறிவும் திறமையும் வேணும்…எதுக்கும் அறிவும் திறமையும் வேணும்…என்ற இரண்டு இனிமையான பாடல்களோடு…அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே…வள்ளுவன் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே…. என்ற அற்புதமான காலத்தால் அழியாத பாடலும் இதில் உண்டு. டி.எம்.எஸ்ஸின் கணீர்க் குரலில்…இப்பாடல்கள் நடிகர்திலகத்திற்கு கன கச்சிதமாய்ப் பொருந்தி…அவரது தெளிவான வாயசைப்பு உச்சரிப்பில் அவரே பாடுவது போன்றதான திருப்தியை நமக்கு வழங்கி…நம்மை மெய் மறக்கச் செய்யும். இதெல்லாம் போதாது என்று குயில் குரல் கொண்ட  ஒரு பெண்மணி கதாநாயகியாய் இருக்கையில் அதைச் சொல்லாமல் விட முடியுமா?  பானுமதிதான் அது. அதன் இனிமைபற்றிச் சொல்லியா தெரிய வேண்டும். ஏற்கனவே அம்பிகாபதியில் “கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளம் மானே…காவியமோ…ஓவியமோ கன்னியிளம் மானே…” என்று ஒரு பாடல் நம் செவிகளில் காலத்துக்கும் அழியாமல் ஓடிக் கொண்டிருக்கிறதுதானே…! அந்தத் தேனினும் இனிய குரலுக்குச் சொந்தமான அவர் இதில் ”கூவாத இன்பக் குயில் கூவும்….என் வாழ்வெல்லாம்….”என்று ஒரு பாட்டுப் பாடியிருப்பார் பாருங்கள். தேடி உடனே கேட்டு விடுங்கள். அப்போதுதான் மோட்சம் கிட்டும். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…!
சாரங்கபாணியை மாமா என்று உரிமையோடு அழைத்துக் கொண்டு நடிகர்திலகம் நெருங்கும்போது…அன்போடு வரவழைத்து விசாரிக்க ஆரம்பிப்பார் சாரங்கபாணி. அதற்கு முன்னதாக ஒரு மாப்பிள்ளை விசாரிக்க வந்திருப்பார். ஒருவர் பெண் பார்க்க வந்திருப்பதாக என்னத்தே கன்னையா மாடியில் இருக்கும் பானுமதியிடம் சொல்லிவிட்டு, அவரது மிரட்டல் தாங்காமல் தப்பித்து, மாடிப்படிகளில் தலைதெறிக்க உருண்டு புரண்டு குலை நடுங்கி வந்து நிற்பார். மகளின் தோழி அழைத்து வந்த அந்த மாப்பிள்ளை மாடிக்குச் செல்லத் தயாராவார். சாரங்கபாணி ஆசிர்வதிப்பார்.
தோழி வந்து சாரங்கபாணியிடம், அது கீழே வரதாகத் தெரிலயே…
அந்தப் பழக்கந்தான் இல்லியே….
…அது வெட்கப்படுது போல…..
வெட்கம்…வெட்கம்…இருக்கும்…இருக்கும்….தம்பி…மாடிக்குப் போயி….
ஓ…யெஸ்…நானே மீட் பண்ணிட்டு வந்திடறேன்….
ஒன்டர்ஃபுல் ஐடியா…..விஷ் யு குட் லக்…..
தேங்க்யூ… - என்று விட்டுக் கிளம்புவார் வந்திருக்கும் மாப்பிள்ளை. 
தோழியிடம் சாரங்கபாணி… லல்லி…நீ செய்த உதவிக்கு…நீ செய்த உறல்ப்புக்கு…நீ செய்த அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு வெரி வெரி தாங்க்ஸ்….….என்பார்..
பானுமதியின் தோழி நோமென்ஷன் என்று சொல்லிக் கிளம்ப…
மாப்பிள்ளை போயிருக்காரு….என்னா மரியாதை நடக்கப் போகுதோ….என்று பெருமூச்சு விடுவார் சாரங்கபாணி. இந்தக் காட்சி நடிப்பில் அவர் சற்றே கவலையோடு வசனம் உச்சரிக்கும் விதம் அருமை…அருமை….
தலையில் பூச்செடி கவிழ்ந்து தொங்க…மாடிக்குப் போன மாப்பிள்ளை அலங்கோலமாய்க் கீழிறங்குவார்.
மிஸ்டர் பிள்ளை…. (தம்பீ….!)
பொண்ணாய்யா இது…பேய்…சார் பேய்….இந்த மாதிரி வேலைய எந்தப் பொண்ணுதான் துணிஞ்சு செய்வா…
ஷட்டப்….வாயை மூடு….என் பொண்ணுக்கென்ன….? அது சகலகலாவல்லி…அதுக்குத் தகுந்தவனா நீ இல்ல…அதனால இந்த அலங்ங்ங்க்க்க்காரம்…. என்று கூறுகையில் அருகில் நிற்கும் என்னத்தே கன்னையா இடுப்பில் கை வைத்துக் கொண்டு முதலாளிக்கு ஆதரவாய் கம்பீரமாய் தனக்குள்  சிரிப்பார். சாரங்கபாணி தீர்மானமான கௌரவ நடிப்பு வேறு எவருக்கும் வராது.
அடுத்தாற்போல்  பெண் பார்க்க நடிகர் திலகம் வருவார். காட்சிகள் இப்படி நகரும். மேலே கூறப்பட்ட வசனத்தில் தந்தை ஸ்தானத்தில் நின்று சாரங்கபாணியின் உச்சரிப்பும், பாவங்களும், நம்மை அத்தனை உற்சாகப்படுத்தவும், சிரிக்கவும் வைக்கும்.
கை பிடித்து கடிமணம் புரிய ஒருவர் வந்திருக்கிறார்….என்று போய் நிற்பார் சிவாஜிகணேசன்.
யாரது?
அடக்கி ஆளவந்தார்….ஆண்டார் மகன்….அழகு சிங்கபுரம்….
அவர் எங்கேயிருக்கிறார்? – என்று கேட்க…
தன்னையே உச்சி முதல் பாதம் வரை காண்பிப்பார் நடிகர் திலகம்.
அடடடடா….தம்பி நீங்களா….வாங்க…வாங்க…வாங்க….உட்காருங்க…..உட்காருங்க….என்று டி.ஆர்.ராமச்சந்திரன் சொல்லியிருந்த அடையாளங்களைப் புரிந்து கொண்டு அவரை வரவேற்று அமர்த்துவார் சாரங்கபாணி.
எத்தனை நாளாச்சு….?
எத்தன நாளாச்சா….எத்தன வருஷமாச்சுன்னு கேளுங்க மாமா…நானு இங்க ஒரு விவகாரம் விஷயமா…வந்தேன். வந்த இடத்துல….விவாகம் விஷயமா ஒரு விவரம் கிடைச்சது…
நம்ப டான்ஸ் மாஸ்டர்…..
என் ஃபிரெண்டு….
அதான் நம்ப டான்ஸ் மாஸ்டர்….
என் ஃப்ரெண்டு….என்று மீண்டும் அழுத்த…
ச்சரி… என்று ஒத்துக் கொள்வார். மகளின் திருமணம் அத்தனை முக்கியம் என்பது அந்த ச்சரி…என்கிற அட்ஜஸ்டமென்டில் தெரியும்.
என் ஃப்ரெண்டு….ஏக் லவ்….எல்லாம் விவரமாச் சொன்னான்…..எல்லாக் கண்டிஷன்களுக்கும் நான் தயார். ஆனா இந்த அன்பளிப்பு…காணிக்கை….இந்த விஷயம் மாத்திரம் கொஞ்சம் விபரமாச் சொல்லுங்க…
அறுபது வேலி நிலம்…… என்று ஆரம்பிப்பார் சாரங்கபாணி. சாதாரண வசனங்களையே எப்படி உச்சரிக்கிறோம், அதன் மூலம் அதை எப்படி அர்த்தப்படுத்துகிறோம், அதன் மூலம் அவைகளுக்கு என்னவெல்லாம் பொருள் கொள்ள முடிகிறது, அது எத்தனை ரசனைக்குள்ளாகிறது என்பதையெல்லாம் தங்கள் நடிப்பின் மூலம் ஸ்தாபித்தார்கள் பழம் பெரும் நடிகர்கள். அந்த நடிப்பின் சிகரத்திலே நின்று தங்களை நிலை நாட்டிக் கொண்டவர்கள் பலர். அவர்களின் முக்கியமானவர் திரு கே.சாரங்கபாணி.
மாடியில் கதவை அடைத்துக் கொண்டு வெளியில் வராமல் அடைந்து கிடக்கும் மகளை மென்மையாக அழைத்து அழைத்துக் கேட்காமல் பிறகு அழுத்தமாக அதே சமயம் கோபமாகக் கூப்பிடும் முறையில் அந்தக் குரலிலேயே பலவித வித்தியாசங்களைக் காண்பிக்கும் அந்த அர்த்தம் பொதிந்த குரல் வளம் கொண்டவர் இவர். இதற்கான பயிற்சி அவர்களுக்கு நாடகங்களிலிருந்து கிடைத்தது. நான் சொல்லும் படம் நவராத்திரி. அதில் சாவித்திரிக்குத் தந்தை அவர்.
நளினா…..நளினா….என்று முதலில் சத்தமாய் அழைத்து, கூப்பிடுவதற்கு ரெஸ்பான்ஸ் இல்லாமல் இப்படிக் கிடக்கிறாளே என்று நளி….னா…..என்று அழுத்தமாய் மாடியைப் பார்த்து அவர் அழைக்கும் பாங்கு நம்மை சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைக்கும். தான் பார்த்திருக்கும் பையனும், மகள் காதலிக்கும் ஆனந்தும் இருவரும் ஒருவரே என்பதை அறிந்து சந்தோஷத்துடன் அச் செய்தியைச் சொல்ல மாடிக்கு ஓடுவார். அதற்கு முன் தன் கல்யாணம் குறித்து எந்த அவசர முடிவும் எடுத்து விட வேண்டாம் என்று தந்தையின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டுச் செல்லும் காட்சியில் சாரங்கபாணியின் அதிர்ச்சி கலந்த நடிப்பு, ஒரு தந்தையின் ஸ்தானத்தில் நம்மை இருக்க வைத்து, தவிக்க வைக்கும். பாத்திரங்களுக்கு அப்படிப் பொருந்திப் போய் அது வெறும் நடிப்பல்ல…வாழ்க்கை என்கிற அளவுக்கு உணர வைத்தார்கள் பழம் பெரும் நடிகர்கள். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்தான் நம் கே.சாரங்கபாணி. சதாரம், என் மனைவி ஸ்ரீதரின் சுமைதாங்கி ஆகிய  படங்களில் இவரின் பங்கு குறிப்பிடத்தகுந்தது.
தில்லானா மோகனாம்பாளில் பாலையாவுக்கு சரி சமதையாக மேளகாரராக அவர் வருவார். வசனம் என்று அதிகமில்லையாயினும்,மோகனாவின் நாட்டிய நிகழ்ச்சியின்போதும், சண்முகசுந்தரத்தின் கோயில் கச்சேரி வாசிப்பின்போதும் பாலையாவும், சாரங்கபாணியும் மேளத்தில் வெளுத்து வாங்கும் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கதாயிருந்தது. அசல் மேளகாரர் தோற்றார் போங்கள். அதற்கு முன்பே கொஞ்சும் சலங்கை படத்தில் சாரங்கபாணி மேள வித்வானாய் நடித்திருந்த அனுபவமும் அவருக்கு உண்டு.
1904 ல் பிறந்த அவர் கும்பகோணத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1984 ல் மறைந்தார் ஒரு சிறந்த நடிகரைத் தமிழ்த் திரையுலகம் வெகு சீக்கிரம் இழந்து நின்றது. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார் என்கிற எண்ணிக்கை மிகவும் குறைவுதான். (ஒரு தகவல் இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் என்று சொல்கிறது. நம்பத்தகுந்ததாக இல்லை) சாந்தா சக்குபாய் 1939 ல் வந்த இத்திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். 1935 முதல் 1975 வரை நடித்திருக்கிறார் என்று தெரிய வருகிறது. எந்தக் கதாபாத்திரமென்றாலும் ஏற்கும் திறமையும், கச்சிதமாய் நிறைவேற்றும் அனுபவமும் நிறைந்த இம்மாதிரியான பழம் பெரும் நடிகர்கள் பலருக்கு, தொடர்ந்து சினிமா வாய்ப்பு என்பது இல்லாமலேயே இருந்தது என்பதுதான் பெரிய துரதிருஷ்டம். அதற்காக அவர்கள் தங்கள் சுய மரியாதையை இழந்து பட வாய்ப்புக்களுக்காகப் போய் கையேந்தி நின்றார்கள் என்கிற சரித்திரமில்லை. திறமைசாலிகள் எப்போதுமே தங்கள் சுய மரியாதையை விட்டுக் கொடுப்பதில்லை. எந்தச் சாதாரணமான அல்லது வறுமையான சூழலில் இருந்தாலும் அவர்களின் தன்மானம் என்பது மட்டும் அவர்களிடம் அழியாச் சொத்தாக நிலைத்திருந்தது. அதனால்தான் சின்னஞ்சிறு பாத்திரமென்றாலும், வந்து, கேட்டு, மதிப்போடு அழைத்துக் கொண்டு போனவர்களுக்கு திருப்தியாய் செய்து கொடுத்தார்கள்.வருமானத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல். தாங்களும் மனநிறைவு அடைந்தார்கள்.அந்தக் காலத்தில் நடிப்புக்கான சம்பளம் என்பதும் குறைவாகத்தானே இருந்தது. ஆனால் கௌரவம்?  சாரங்கபாணியின் கடன் வாங்கிக் கல்யாணம், கள்வனின் காதலி, குடும்ப கௌரவம், யார் பையன், சதாரம், சந்திரலேகா, நான் பெற்ற செல்வம் போன்ற பழைய திரைப்படங்கள் என்றும் நம் நினைவிலிருந்து அழியாதவை. கடைசியாக ஒன்று.
சபாபதி என்று 1941 ல் வந்த திரைப்படம் அது. அதில் தமிழ் வாத்தியாராக நடித்திருப்பார் சாரங்கபாணி. பஞ்சகட்சம் கட்டி, கோட்டுப் போட்டு, தலைப்பாகையிட்டு, ஒரு குடையையும் கட்கத்தில் இடுக்கிக் கொண்டு, மூக்குப் பொடியையும் ஏற்றிக்கொண்டு நடந்து வந்து,  அவர் வகுப்பில் பாடம் எடுக்கும் அந்தக் காட்சி என்றுமே மறக்க முடியாதது. குறளுக்கு அர்த்தம் சொல்லிக் கொடுப்பதைப் பாருங்கள் –
       
எங்கே சொல்லுங்க பார்ப்போம்…..அகர முதல….                                              
அகர முதல….      
இது மாணவர்களாகிய குழந்தைகள்                                                எழுத்தெல்லாம்……                                                                         எழுத்தெல்லாம்                                                                          
ஆதி பகவன்……                                                                                 ஆதி பகவன்….                                                                            முதற்றே உலகு……                                                                                
முதற்றே 
புரிஞ்சிதா….?                                                                              புரிஞ்சிது சார்…..!                                                                             

பொதிந்துள்ள  நகைச்சுவையை… நீங்களே புரிந்து கொள்ளுங்கள்…!!!                                                

















-------------------------------------------------------



      


கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...