01 ஆகஸ்ட் 2019


செய்யாறு தி.தா.நாராயணனின் சிறுகதை “சடையன்”  - வாசிப்பனுபவம்-உஷாதீபன்
வெளியீடு – கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை-87. (தொகுதி-“ஜக்கம்மா சொல்றா“)
நம் வீட்டிலேயே நாம் அறிவுரையாக அல்லது தெரிந்து கொள்ளட்டும் என்று ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னால் அது நம் பையனுக்கோ அல்லது மகளுக்கோ குற்றமாகப் படத்தான் வாய்ப்புகள் அதிகம். காரணம் அறிவுரைகளாக அவர்கள் எதையும் விரும்புவதில்லை. எப்பப் பார்த்தாலும் ஏதாவது அட்வைஸ்… என்று முனகுவார்கள், சலிப்பார்கள் அல்லது முகத்தைத் திருப்பிக் கொண்டு போவார்கள்.  அதையே ஒரு மூன்றாவது நபர் சொல்லும்போது அது அவர்களுக்கு நியாயமாகப் படும். இதத்தான நம்ம அப்பன் சொன்னான் என்று அப்போதும் உள்ளுக்குள் உணர மாட்டார்கள்.. இது இயற்கை.
நாம் மென்மையாகச் சொன்ன அதே உபதேசம், எதிராளியிடமிருந்து கடுமையாக வந்தால் கூட அமைதியாக ஏற்றுக் கொள்வார்கள். யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். பிறகு தானே தன் அனுபவத்தில் கண்டது போல் சொல்லிக் கொள்வார்கள்.
இந்த உலகத்தில் யாரும் யாரையும் எதையும் சொல்லித் திருத்தி விட முடியாது. அவரவர் அனுபவத்தில் கண்டு கொண்டால்தான் உண்டு. என்ன ஒன்று எனில், நாம் சொல்லும்போது பின்பற்றாதவர்கள், தாங்களாக உணரும்போது சில நஷ்டங்களுக்குப் பின் உணர்ந்திருப்பார்கள். அதைப் பொருட்படுத்த மாட்டார்கள். தலைமுறை இடைவெளியில் வந்த கோளாறு இது.
இந்தக் கதையில் (சடையன்) அந்தப் பையன், வாத்தியார் முரணாகச் சொல்லக் கூடிய விஷயத்தின் கேலியைப் புரிந்து கொண்டு அதையே சவாலாக எடுத்துக் கொண்டு உண்மையோடு உழைக்கிறான். அபூர்வமாய்த்தான் சிலர் இப்படி அமைவார்கள். அதற்கு வாழ்க்கையின் வறுமை பெறும் உதவி செய்கிறது. புடம் போடுகிறது.
எந்த விஷயம் பலராலும் மறைமுகமாகக் கேலியாகப் பேசப்படுகிறதோ  அல்லது வயிற்றெரிச்சலாக உணரப்படுகிறதோ, அந்த விஷயத்தை எதற்கு இத்தனை மெனக்கேடு தேவையில்லையே….என்று சொல்லிக்  கேலி செய்கிறார் ஆசிரியர்.ஒரு ஆசிரியர் அப்படிச் சொல்லக் கூடாது. அதுவே தவறு.  ஆனால் ஒரு சிலரிடம் கோணல்கள் இருக்கத்தானே செய்கின்றன.  ஆசிரியரின் அந்தக் கூற்று  அவன் மனதில் முள்ளாகக் குத்தி அவன் முயற்சியைக் கிளறி விடுகிறது. அந்த முயற்சியின் வெற்றியாக அவன் ஜெயித்து நிற்கும்போது, தான் ஊக்கமாக செயல்பட அந்த ஆசிரியர்தான் காரணம் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறான் சடையன். காரணம் அந்தத் தீயை அவனுள் மூட்டியவர் அவர்தானே!  அந்தப் பள்ளிக்கும் நற்பெயர் வாங்கிக் கொடுக்கிறான். கேலி செய்த அந்த ஆசிரியரே, அவனது அபார உழைப்பைப் பற்றியும், அவன் அடைந்த வெற்றியைப் பற்றியும் பெருமையாக வாய்விட்டு, மனம்விட்டுப் பேசிப் பாராட்டுகிறார்.
டேய்…உன்னை எவண்டா இவ்வளவு மார்க் எடுக்கச் சொன்னான்…நீங்கள்லாம் கவர்ன்மென்டோட செல்லப் பிள்ளைங்கடா…பாஸ் மார்க் எடுத்தாலே போதும், மெடிகல் காலேஜ்லயே கூப்பிட்டு சீட் கொடுப்பாங்க… என்று கிண்டலாகச் சொல்கிறார் கணக்கு வாத்தியார். கிளாஸ் பசங்களெல்லாம் சிரிக்கிறார்கள். சடையன் அழுகிறான்.
இத்தனைக்கும் டியூஷன் வைக்க வசதியில்லாத பையன். வகுப்பில் சந்தேகமாய்க் கேட்டுக் கேட்டு, வாத்தியாரைப் பிடுங்கி எடுத்து, தெளிவு பெற்றுக் கொள்கிறான். அந்த மட்டுக்கும் கேட்கும் சந்தேகங்களுக்கு அலுக்காமல் சலிக்காமல் சொல்லித் தர, தெளிவு படுத்த ஒரு பள்ளியில் சில ஆசிரியர்களேனும் இருக்க மாட்டார்களா என்ன? நாலுக்கு ரெண்ட பழுது இருக்கத்தானே செய்யும்?
இவனுக்கு இதே வேலையாப் போச்சு…பாடம் நடத்துற போதெல்லாம் பராக்குப்  பார்த்திட்டு, அப்புறம் நம்மப் போட்டு உசிரை எடுக்கிறது…இதெல்லாம் தெளியணும்னா சாயங்காலம் டியூஷனுக்கு வரணும் தம்பி…ஒரு வாட்டிதான் நடத்த முடியும்… என்று தனிச் சம்பாத்தியத்தில் கவனமாய் இருக்கிறார்கள் பலர். ஏற்கனவே படிக்க வசதியில்லாத சடையன் என்ன பண்ணுவான்? முடிந்த வரை ஆசிரியர்களை அனத்தி எடுத்து, தெளிவு பெற்றுக் கொள்கிறான். அதற்கும் பையன்களின் கேலிதான்.
எதுவுமே இவன் மண்டைல ஏறாதோ…? என்னடா இப்டிச் சந்தேகம் கேட்கிறான்?
ஆண்டவன் உங்கள மட்டும்தான் அறிவோட படைச்சானோ…எங்களயெல்லாம் இல்லையோ…மனதிற்குள் கனலும் நெருப்பு. அமைதிப் போர் துவக்குகிறான் சடையன். அது அவனை வெற்றியில் கொண்டு நிறுத்துகிறது.
சடையா…வாப்பா….! நீதாண்டா தமிழ்நாட்டிலேயே அதிக மார்க் எடுத்திருக்கே…1194 மார்க். நம்ம ஸ்கூலுக்கே உன்னால பெருமைப்பா…
மாவட்டக் கல்வி அலுவலர் தன் பங்கிற்கு ரெடியாகக் கொண்டு வந்திருந்த லட்டை அவன் வாயில் திணிக்க, உதவியாளர் அதை .ஃபோட்டோ எடுக்கிறார். அவனுடைய பாட ஆசிரியர்கள் ஒவ்வொருவரையும் சடையன் பணிவாய் வணங்குகிறான்.
சொல்லுங்க சடையன்…இதை எப்படிச் சாதிச்சீங்க…?
நான் பாஸ் பண்ணினதுக்கு என்னுடைய ஆசிரியர்கள், தலைமையாசிரியர், இவங்க எல்லாருடைய ஒத்துழைப்புதான்  சார் காரணம். ஆனா தமிழ்நாட்டுலயே அதிக மதிப்பெண் எடுத்ததுக்கு இவங்க யாரும் காரணம் இல்ல சார்…
அதிர்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் கப்சிப்.  தலைமையாசிரியர், சி.இ.ஓ., ஒருத்தரையொருத்தர் பார்த்து வியக்கின்றனர். சடையன் தொடர்கிறான்.
அந்த ஃபயர் எப்படி வந்திச்சுன்னு கேட்டீங்கல்ல சார்…அதுக்கு இவர்தான் காரணம்….என்று கணக்கு வாத்தியாரைக் காண்பிக்கிறான்.
மாணவர்கள் கூட்டம் ஓ…! என்று கத்தி பலமாகக் கைதட்டி, விசிலடிக்கிறது. கணக்கு வாத்தியார் அந்த இடத்தை விட்டு அவசரமாய் வெளியேறுகிறார்.
அவர் அன்று சொன்னது தவறுதானே…!
“உந்துதல்” என்ற தலைப்பில் இந்தக் கதை இலக்கிய பீடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது நியாயம்தானே…!!!
ஒரு சோறு பதம் காண்பித்து விட்டேன். தி.தா.நா.வின் மீதிக் கதைகள் எப்படியிருக்கும் என்று நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். வாங்கிப் படியுங்கள்.
----------------------------------------------------

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...