23 ஜூலை 2019

“நாணயம்” – மெலட்டூர் விஸ்வநாத் - சிறுகதை - வாசிப்பனுபவம் - கணையாழி தொகுப்பு-1965


“நாணயம்” – மெலட்டூர் விஸ்வநாத் - சிறுகதை - வாசிப்பனுபவம்
வெளியீடு:- கணையாழி தொகுப்பு-1965 ஜூலை – 1966 ஜூலை (ஆகஸ்ட் இதழ்)                      -----------------------------------------------------



       கணையாழி இலக்கிய இதழ் – அதன் ஆரம்பம் முதலான இதழ்களைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. 1965 ஜூலை முதல் 1966 ஜூலை வரையிலான தொகுப்பினைப் படிக்கும் ஆர்வத்தில் எடுத்தேன். மெலட்டூர் விஸ்வநாத் எழுதிய கதையைப் படித்ததில் அதன் வாசிப்பனுபவம்
நான்காம் பாரம் படித்த சேகருக்கு வேலை கிடைக்கவில்லை. அவனும் எத்தனையோ இடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பத்தான் செய்கிறான். பதில் வருவதில்லை. பதில் வந்து நேர்காணலுக்குப் போனாலும் தேர்வாவதில்லை. அவன் சோர்ந்து போகிறான். தன் பிழைப்பு இப்படியே ஆகிவிடுமோ என்று ஐயுறுகிறான். பெற்றோருக்கு காலத்துக்கும் பாரமாக இருந்து விடுவோமோ என்று பயப்படுகிறான். எங்காவது ஓடிப் போய்விடலாமா என்றும் யோசிக்கிறான்.
       தந்தையின் பேச்சு அவனை மேலும் சோர்வடைய வைக்கிறது. அவனோட இங்கிலீஷ் ரொம்பப் புவர்…டைப்பும் முடிக்கலை…எவன் வேலை தருவான் உன் பிள்ளைக்கு? என்று மனைவியிடம் கோபப்படுகிறார். தாயார் உங்களுக்குத் தெரிந்த இடத்தில் ஏதாச்சும் சொல்லி வையுங்களேன் என்கிறாள்.
       நடுவில் ஒரு மாதத்திற்கு ஒரு இடத்திற்கு வேலைக்குப் போகிறான். பிறகு அதுவும் முடிந்து போகிறது.இப்படி நாயாய்  அலைகிறானே என்கின்ற ஆதங்கம் அத்தோடு பயமும் என அவன் தந்தைக்கும் மனதுக்குள் நடுக்கம் இல்லாமலில்லை. அவர்  அவன் தாயாரிடம் சொல்வதுபோல் சொல்கிறார்.
       யாரும் தைரியத்தை இழந்து மதியீனமாய் நடந்து கொண்டுவிடக் கூடாது…..
       படிக்கிற காலத்தில் ஊதாரித்தனமாய் இருந்ததற்காக வருந்துகிறான் சேகர். ஊர் சுற்றுதல், சினிமாப் பார்த்தல், தேர்வு பற்றிக் கவலைப்படாமல் கிரிக்கெட் ஆடுதல், அதுபற்றிய சர்ச்சையில் ஈடுபடுதல் என்று வீணாய்ப் போன பொழுதுகளை எண்ணி வருந்துகிறான்.
       அந்த மில்டன் கம்பெனியில் சொல்லி வைங்களேன்….என்கிறாள் தாய்.   உன் பி்ள்ளையை அங்கே உள்ளயே விடமாட்டானாக்கும்….என்று ஏளனம் செய்கிறார் தந்தை.   காதில் விழும் இவன் மிகவும் நொந்து போகிறான். தன் அலட்சியமான இருப்புதானே அப்பாவை இப்படிப் பேச வைக்கிறது என வருந்துகிறான்.
       தந்தை வேலைக்குச் சென்ற பின் மனசு மிகவும் கவலை கொண்டு, பதட்டமாகி, உடம்பெல்லாம் வியர்த்து வியர்த்து….ஒரு நிலைக்கு வர முடியாமல் தவித்து, வெளியே கிளம்பிப் போய் ஒரு கடையில் எலிப்பாஷாணத்தை வாங்கி வீடு திரும்பி, தன் அறைக்குள் புகுந்து கொள்கிறான்.
       இனி வேலையைப்பற்றிக் கவலையில்லை…படிப்பைப்பற்றிக் கவலையில்லை.  தாய் தந்தையர்க்குப் பாரமில்லை…. என்று நினைத்தவாறே பொட்டணத்தைப் பிரித்து நடுங்கிய கரத்தோடு வாயருகில் கொண்டு செல்லும்போது கதவு தடதடக்கிறது.
       திறந்தால் அந்தக் கடைக்காரன்.   என்னப்பா எவ்வளவு நாளா இந்த வேலை? கொஞ்ச நேரத்துக்குன்னு கடைல சின்னப் பையன வச்சிட்டுப் போனா, செல்லாத நாலணாவக் கொடுத்து அவன ஏமாத்தியிருக்கே…? உன் பின்னாடியே நான் வரக் கண்டு சரியாப்போச்சு…. என்று கத்துகிறான்.
       மேற்கொண்டு கலாட்டா  செய்துவிடப்போகிறானே என்று மேஜையைத் திறந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த காசைப் பொறுக்கி நாலணாத் திரட்டி நீட்டுகிறான்.  
முதல் வாட்டியாச்சேன்னு விடுறேன். இன்னொரு தடவை இப்டி செஞ்சே…அப்புறம் நா மனுஷனா இருக்க மாட்டேன்… என்று எச்சரித்துவிட்டு கடைக்காரன் திரும்பி நடக்க,காலில் ஏதோ தட்டுப்பட, அதை எடுத்து…
       இந்தாய்யா…நீ பெரிய கவர்னர்ல்ல…உனக்கு தபால் வந்திருக்குது என்று அதையும்  எடுத்து விசிறியடித்துவிட்டு நகர்கிறான்.
       நடுங்கியபடியே அதைத் தரையிலிருந்து எடுத்துப் பார்க்கும் சேகருக்கு மகிழ்ச்சி.  அட…போன மாசம் வேலைக்குன்னு போயிருந்த தேர்வாச்சே…இது…
       “சென்ற மாதம் நடந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். மாதம் நூறு ரூபாய் சம்பளத்தில் உங்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறோம். உழைப்புக்குத் தகுந்தபடி முன்னேற வாய்ப்பு உண்டு. ஆனால் ஐந்தாண்டுகள் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும்….“
       கண்ணீர் அந்தக் கடிதத்தை நனைக்கிறது. பாஷாணப் பொட்டலம் மன்னிப்புக் கோருவதுபோல் அவன் காலடியில் விழுகிறது.
       கதைச் சுருக்கம் இவ்வளவுதான். ஆனாலும் சில நல்ல விஷயங்களைப் போதிக்கிறது இக்கதை. படிக்கிற காலத்தில் அது ஒன்றே கருத்தாக இருந்து கல்வியில் முன்னேற வேண்டும். வேறு வழியில் கவனங்களைச் சிதற விடக் கூடாது….அப்படியிருந்தால் எதிர்காலத்தை இழக்க நேரிடும்…தொடர்ந்த முயற்சியை எப்பொழுதும் கைவிடக் கூடாது. உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். எந்நிலையிலும் நமக்கும், நம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையர்க்கும் பாதகமாய் இருப்பதுபோலான முடிவுகளை எடுக்கக் கூடாது. நம் தோல்வியினால் மனம் சோர்ந்து விடாமல் வாழ்க்கையில் நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்து முன்னேற வேண்டும். உண்மையான உழைப்பிற்கும், முயற்சிக்கும் என்றேனும், எங்கேனும் உரிய மரியாதை கிடைத்தே தீரும் என்பது போன்றதான பல விஷயங்களை இந்தக் கதை நமக்குச் சொல்கிறது.
       நாணயமாய் இருத்தலும், நாணயத்தை மதித்தலும், நா நயத்தோடு பேசுதலும், செயல்படுதலும் ஆகிய அனைத்து ஒழுக்க நிலைகளும் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்பதை இந்தச் சின்னஞ்சிறு கதை நமக்கு போதிக்கிறது.
       அறுபதுகளில் மேன்மை மிக்க சமுதாயமாக விளங்கிய கால கட்டத்தில் எழுதப்பட்ட சீரிய சிந்தனையை முன் வைக்கும் இக்கதை, அன்றைய தேதிகளில் இலக்கிய இதழ்களில் இடம் பெறுதல் என்பதான நடவடிக்கைகள், மதிப்பு மிக்கதாய், தனி அந்தஸ்தைத் தருவதாய், சிறந்த சிந்தனைகளைக் கொண்ட  படைப்புக்களுக்கு என்றுமே தனி மரியாதைதான் என்பதை உறுதி செய்வதாய் அமைந்துள்ளது.
       கணையாழியின் 1965 ம் ஆண்டு இதழ்களைப் படிக்கும்போது எப்படியிருந்த சமுதாயம், எப்படியிருந்த மக்கள், எப்படியான உயர்ந்த விஷயங்களைத் தாங்கி நின்ற சிந்தனைகள், படைப்புக்கள், எத்தனை அக்கறையான நல்ல விஷயங்களை உள்ளடக்கிய இதழ்கள் என்பதாக நம் எண்ணங்கள் விரிந்துகொண்டே போகின்றன. ஆவணங்களாய்ப் பாதுகாக்கத் தோன்றுகின்றன.
       அந்த நாளும் வந்திடாதோ…? என்கிற ஏக்கமே மிஞ்சுகிறது. இன்றைய சமுதாயத்தின் நாணயம் குறித்து நம் சிந்தனை நம்மை வேதனை கொள்ளச் செய்கிறது. ஒரு சின்னஞ் சிறு கதை என்னவெல்லாம் எண்ணங்களைக் கிளறி விட்டு விட்டது?
                                  ------------------------------------------------
      
      

கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...