22 மே 2014

“காட்சிப்பிழை”- ஏப்ரல் 2014 சினிமா ஆய்விதழில் எனது எம்.ஆா்.ராதாபற்றிய “அவருக்கு நிகர் அவரே…!” என்ற கட்டுரை

10151191_10200874286298045_1188220222_n 5344917129_99e426f246_t 5597115002_08eaa12f71_t sg005 downloadmrradha-175x250 

ந்தந்தத் திரைப்படத்தின் கதாநாயகர்களுக்குரிய சம அந்தஸ்தோடு தன்னுடைய வில்லன் பாத்திரத்தையோ, தந்தை கதாபாத்திரத்தையோ அல்லது வேறு எதையுமோ மதிப்போடும், கௌரவத்தோடும் செய்து வந்தவர். தனக்கான அந்தஸ்தை இம்மியும் விட்டுக் கொடுக்காதவர். தன்னிலிருந்து மாணவர்களாகக் கிளைத்தவர்கள்தானே என்ற தன்மையில் அவர்களையும் மதித்து, உடன் கைகோர்த்து, தன் திறமையைத் தடம் மாறாது தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டவர்.

குரலுக்கான மாடுலேஷன், அதாவது சட்டுச் சட்டென்று ஏற்ற இறக்கங்களோடு, கேலியும், கிண்டலுமாக, சந்தோஷமும், கோபமுமாக, முறைப்பும் வெறுப்புமாக என அந்தந்த வேஷங்களின் வசனத்திற்கேற்ற அர்த்த பாவங்களோடு பேசி, அநாயாசமாய் தன்னுடைய நடிப்பை சகஜமாக வெளிப்படுத்தியவர். மற்றவர்களெல்லாம் பிரயத்தனப்பட்டபோது, இந்தக் குரல் வளம் இவருக்கு மட்டுமே இஷ்டத்துக்குக் கை கொடுத்தது எனலாம்.

கஷ்டப்பட்டு ஒரு பாத்திரத்தைச் செய்தார், கடுமையான உழைப்பு, என்றெல்லாம் சொல்லவே முடியாது.. எந்த வேஷத்தையும் சுலபமாய்ச் செய்துவிட இவரால் முடியும் என்ற பிரமிப்பை ஊட்டியவர். அவர் செய்தது அந்தந்தப் பாத்திரங்களாக அமைந்தது என்பதுதான் சரி. வேறு யார் செய்திருந்தாலும்….என்ற கேள்விக்கே இடமில்லை. . நடிப்பு என்பது இயல்பாக, உடம்போடு ஒட்டிப் பிறந்ததாய், ரத்தத்தோடு ஊறியதாய் வந்து நின்றது. அந்தந்தக் கதாபாத்திரமாகவே ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள்.

படத்துக்குப் படம் கேட்ட அதே குரல்தான், வெளியே எங்கு கேட்டாலும் ஒரு கணம் நின்று உன்னிப்பாய்க் கவனிக்க வைத்து, ரசிக்கத் தோன்றும். இறுதிவரை யாருக்கும் அது அலுக்கவில்லை. அவர் திரையில் தோன்றினாலே ஆரவாரம் எழுந்தது. நாயகனை ரசிக்கும் உள்ளங்கள் தன் ஆப்த நடிகருக்கு வில்லனானாலும், அதையும் ரசித்தது.

சிவாஜி ரசிகனாகட்டும், எம்.ஜி.ஆர். ரசிகனாகட்டும் அல்லது ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். இப்படி யாராக இருந்தாலும் அவர்களையெல்லாம் விழுந்து விழுந்து பார்க்கக் கூடிய ரசிக சிகாமணிகள் அந்தக் குறிப்பிட்ட திரைப்படத்தில் கூடவே இருந்து கழுத்தறுக்கும், கடைசிவரை கெடுதல் செய்யும் வில்லனாக இவரைப் பார்த்தபோதும், இவரின் வருகையைத் திரையில் ஆவலோடு எதிர்நோக்கினார்கள். வரவேற்றார்கள். அவரின் கலாட்டாவை தங்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆரவாரமாய்த் தட்டி ரசித்து மகிழ்ந்தார்கள்.

செய்த வேஷங்கள் இவராலேயே நின்றன. வேறு யாரையும் நினைக்க முடியாததாய் பேறு பெற்றன. ஒரு முழுப்படத்தின் நாயகனின் ஒட்டு மொத்த இருப்பை விட, சில காட்சிகளில் மட்டும் தோன்றி மறைந்தாலும் ரசிகர்களின் மனதில் ஆழமாய் நின்றார். அந்தக் காட்சிகள் மீண்டும் வராதா என்று ஏங்க வைத்தார். இயக்குநர் எதிர்பார்த்த வடிவத்தை விட ஒரு படி மேலே போய் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்து முடித்தார். திருப்தியோடு செய்து கொடுத்தார். அந்தக் குறிப்பிட்ட படத்தை நினைக்கும்போதெல்லாம் அவரின் வேஷத்துடன் கூடிய உருவம்தான், அதாவது அந்தக் காரெக்டர்தான் சட்டென்று மனதில் தோன்றியது ரசிகர்களுக்கு..

இவன் ஒழிய மாட்டானா என்றும், ஏன் வந்தான் என்றும் தாய்மார்கள் மனதிற்குள் சபிக்கும்முகமாக அந்தத் திரைப்படத்தோடு ஒன்றிப் போய் பார்த்து வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு, , தனக்கான இடத்தை எந்தவித சிரமமுமில்லாமல், தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வெற்றிப்படிகளிலேயே நிலைத்து நின்றவர் இவர்.

நடித்த படங்கள் அநேகம். வேஷங்களும் அநேகம். அத்தனையையும் சொல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒன்றைச் சொன்னாலே மற்றவற்றையெல்லாம் தேடத் தோன்றும். சே…! இப்டி ஒருத்தரை இத்தனைநாள் தவற விட்டுட்டமே…? என்று இளம் தலைமுறை வருந்தக் கூடும். நல்ல ரசிப்புத் தன்மை இருக்குமேயானால்…!

சொல்லப் போவது ஒரே ஒரு திரைப்படத்தின் உயிர்நாடியான முக்கிய கதாபாத்திரத்தின் சிரஞ்சீவித் தன்மையைப்பற்றி.. அதை அப்படி ஆக்கியவர்பற்றி. வேறு யார் செய்திருந்தாலும் அந்த அளவுக்கு சோபிக்காது. வேறு யார் ஏற்று நடித்திருந்தாலும், பிரத்தியேகப் பயிற்சியில்லாமல் அல்லது இயக்குநரின் பாடம் இல்லாமல், தனக்குத்தானே கற்பனை வளம் இல்லாமல் அத்தனை பொருத்தமாக அந்தக் கதாபாத்திரத்தைச் செய்வது கடினம். அப்படியே செய்தாலும், செய்த நடிகர் நினைவில் வந்துகொண்டேயிருப்பார். அந்தக் கதாபாத்திரம் மட்டுமே நினைவில் வராது. எனவே இவர் ஒருவர்தான் இத்தனை கனகச்சிதமாக, அநாயாசமாக, அசால்ட்டாக இந்த வேஷத்தைச் செய்ய முடியும் என்று நான் உறுதியாகக் கூறுவேன்.

படத்தின் தலைப்பே இவர் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் தாங்க முடியாத, கொடூரச் செயல்பாடுகளின் தீவிரத்தைத் தாங்கியதுதான். கதையே இவரின் கெடுதல்களை வைத்துத்தான் நகரும். கண்ணி பிரியப் பிரிய சிக்கல் விழுந்துகொண்டேயிருக்கும். அதைப் பார்த்துப் பார்த்து இவர் ஆனந்தப்பட. இவரின் பாவங்கள் இவரையறியாமல் கூடிக் கொண்டேயிருக்கும். இவரது மனைவி அதைச் சுட்டிக் காட்டியிருந்தும், அவரையும் அடக்கி, அவரது பேச்சுக்களைப் புறந்தள்ளிவிட்டு, தான் நினைப்பதைத் தொடர்ந்து செய்து கொண்டே போவார். செய்த பாவங்கள். அதை மனதார உணர்ந்து வருந்தும்போது, தான் கொடுமை இழைத்த தன் மகனைக் கூடக் கண்கொண்டு பார்க்க முடியாத அவலம், அதற்காக அவருக்குக் கடைசியில் கிடைக்கும் மன்னிப்பு. இதுதான் அந்தத் திரைப்படத்தின் தலைப்பு. அந்த நடிக மேதை நடிகவேள் எம்.ஆர்.ராதா. அந்தப் படம் புத்தா பிக்சர்ஸ் பாவமன்னிப்பு.

தன் மேடை நாடகங்களிலே நாத்திக வாதங்களை உரக்கச் சொல்லிப் பெயர் பெற்றவர் நடிகவேள். எதிர்ப்புக்களைப் பொருட்படுத்தாது தொடர்ந்து முன்னேறியவர். மேடையில் செருப்பு வந்து விழுந்தபோது, அது தன் நடிப்புக்குக் கிடைத்த பரிசு என்று பெருமைப்பட்டவர்.

அப்படிப்பட்டவர் ஏற்றுக் கொண்ட, பக்திபூர்வமான, நெற்றியில் பட்டையும். கழுத்தில் ருத்திராட்சக் கொட்டையும் அணிந்து, குடுமியாய்த் தலையை முடிந்து கொண்டு வலம் வந்த கதாபாத்திரத்தில் தன் அனுபவம் வாய்ந்த திறமையான நடிப்பாற்றலால் படத்தை உச்சிக்குக் கொண்டு சென்று நிறுத்தினார்.

நடிகர்திலகம், ஜெமினிகணேசன், எஸ்.வி.சுப்பையா, பாலையா, நாகையா சாவித்திரி, தேவிகா, எம்.வி.ராஜம்மா என்று திறமையான, லட்சணமான பல நடிக நடிகையர்கள் அந்தந்தப் பாத்திரங்களுக்கு என்று பொறுக்கி எடுத்துத் தேர்வு செய்யப்பட்டவர்களாய் கருத்தாய் பவனி வந்து அழகு சேர்த்தாலும், இப்படத்தைப் பொறுத்தவரை சிறந்த நடிகருக்கான விருதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டால் நான் நடிகவேளுக்குத்தான் என்று உறுதியாய்ச் சொல்வேன்.

நடிகர்திலகமே முறைத்தாலும் கேட்கமாட்டேன். அவர் அப்படியெல்லாம் செய்யமாட்டார். ஏனெனில் அடுத்தவரின் திறமையை உணர்ந்த தன்னம்பிக்கை கொண்ட இமயம் அவர். நடிகவேளின் கல்லூரியில் பயின்றவர்.

நான் இத்தனை அழுத்தமாகச் சொல்வதற்குக் காரணம், பாவ மன்னிப்பு படத்தில் எம்.ஆா்.ராதாவின் பாத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும், அந்த அவசியத்தை உணர்ந்து, இயக்குநரின் எதிர்பார்ப்புக்கும் விஞ்சி, நடிகவேள் அதைத் திறமையாய் நிறைவேற்றியிருந்தார் என்பதும்தான்.

ஆளவந்தார் என்ற அந்தக் கொடூரமான கதாபாத்திரம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது எல்லோர் மனதிலும். பஞ்ச கட்சமும், தொள தொளா பைஜாமாவும் அணிந்து கொண்டு உடலைத் துவளவிட்டு நின்று, திறமையான உடல் மொழியோடும், அர்த்தபூர்வமான பாவனைகளோடும், ஏற்ற இறக்கமான குரல் வளத்தோடு தன் கிண்டலையும், நையாண்டியையும், கோபத்தையும் சரளமாய் வெளிப்படுத்தி, திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் நமக்கு உற்சாகத்தையும், சிலிர்ப்பையும் ஏற்படுத்தும். அவரது கண்கள் நடிக்கும் நடிப்பு நம்மைப் பயப்படுத்தும். உன்னிப்பாய்க் கவனித்தால் இது தெரியும்.

இந்தப் பாவி எப்டியெல்லாம் பேசுறாம்பாருய்யா….என்னெல்லாம் கெடுதல் பண்ணுறான்….? விளங்குவானா? என்று வாய்விட்டு சபித்து, ரசித்தார்கள் ரசிகர்கள். அதுதான் அவருக்கான பாராட்டு. அந்தக் காரெக்டராகவே அவரைக் கண்டு இறுதியில் சினிமா என்கிற உணர்வுக்கு வந்து, அபாரம்யா…அபாரம் என்று கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

எவ்வளவுதான் இப்படிச் சொன்னாலும், அவர் நடிப்பை அவரின் அற்புதக் குரலோடு, நெளிவு சுளிவு கலந்த உடல்மொழியோடு ஆழமான ரசனையோடு கண்ணாரக் கண்டால்தான் திருப்தியாகும். அதாவது வெளியே எங்கேனும் ஒலிச்சித்திரமாய் அவர் குரலைக் கேட்கும்போது, மனதிற்குள் அந்தக் காட்சி படமாய் ஓட வேண்டும். அதுதான் ஆழமான ரசனை என்பேன். இதே பாத்திரத்தை வேறு நடிகர் என்றால் எப்படிச் செய்திருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே முடியாது. தோன்றாது.

பாவ மன்னிப்பு திரைப்படத்தின் வசனம் எம்.எஸ்.சோலைமலை. தொழிலாளி வர்க்கச் சிந்தனையுள்ள திரைப்படங்களுக்கு அற்புதமாகக் கதை வசனம் எழுதுவதில் வல்லவர் இவர். பதிபக்தி படத்திற்கு இவர்தான் வசனம். அந்தப் படத்தில் இவரின் திறமை படம் முழுக்க நன்கு வெளிப்பட்டிருக்கும்.

பாட்டாளிச் சிந்தனையில் கூர்தீட்டி வசனம் எழுதும் இவர், தீமையே உருக்கொண்ட ஒரு முதலாளியாயிருப்பவன் எப்படியெல்லாம் வன்மத்தோடு சிந்திப்பான், செயல்படுவான் என்று நினைத்துப் பார்த்து, அதற்கு எம்.ஆர்.ராதா அவர்கள் இருந்தால் அங்கே எப்படி வசனம் மிளிர வேண்டும் என்று கச்சிதமாக வார்த்தைகளை வடித்திருப்பார்.. அப்படியும் பல இடங்களில் இது ராதா அவர்களே அந்தந்த இடத்தில் சொந்தமாகப் பேசிய இடைச் செருகல்களாகத்தான் இருக்கும் என்று பார்வையாளர்களுக்குத் தோன்றும்.

பாவ மன்னிப்பு படத்தில் ஸ்ரீமான் ஆளவந்தார் என்ற பிள்ளேவாள் கேரக்டரில் நடித்திருப்பார் எம்.ஆர்.ராதா. நாயகனுக்கு சரிக்குச் சமமாகப் பெரும்பாலான காட்சிகள் இவரதுதான். காரணம் கதை அப்படி. இயக்குநர் ஏ. பீம்சிங் படக்குழுவினர் வடிவமைத்த அற்புதமான கதையமைப்பும், காட்சிகளும் கொண்ட திரைக்காவியம் இது.

முதல் காட்சியிலேயே இருக்கும் கிண்டலையும் கேலியையும் கவனித்தால் தெரியும். ஆத்திகனாய் தன்னைச் சமூகத்துக்குக் காண்பித்துக் கொண்டிருக்கும் வேடதாரி ஒருவனின் மன வெளிப்பாடு எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.

மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் வாசலில்….ஒரு காட்சி…..

அம்மாாாாாா….மதுரை மீனாட்சி….கஞ்சி காமாட்சி….காசி விசாலாட்சி….

அய்யா…..

யார்றா…..?.

ரெண்டு கண்ணில்லாதவன்யா…

என்னா பாவம் செய்தியோ….ரெண்டு கண்ணும் இல்ல……ப்ப்போடா……!!!.

சற்றுத் தள்ளி, பொறு…பொறு…இதோ வந்திட்டேன்…உங்களுக்கெல்லாம் மிட்டாய்…பிஸ்கட்டு….எல்லாம்…. – ஃபாதர் ஜேம்ஸ் (எஸ்.வி.சுப்பையா) குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குகிறார்.

இந்தாப்பா….. – எம்.வி.ராஜம்மா கையில் அர்ச்சனைக் கூடையோடு வெளிப்படுகையில் அந்தப் பிச்சைக்காரனுக்குக் காசு போடுகிறார்.

வா…மரகெதம்……வா…. என்று சொல்லிக்கொண்டே .ஃபாதர் ஜேம்ஸைப் பார்த்து விடுகிறார் ஆளவந்தார்.

அட…ஜேம்ஸூவா….

ஆளவந்தாரா?

வாய்யா….வாய்யா….அப்பா யப்பா யப்பா….ரொம்ப நாளாச்சுய்யா….நாற்பத்தி அஞ்சு வருஷத்து ஃபிரண்டுல்ல…..

சௌக்கியமா ?…. ஜேம்ஸ். கேட்கிறார்…

சவுக்கியமா இருக்கிறேன்…ஏதோ மீனாட்சி தயவால….ஆமா… என்ன அங்க ஜனங்களோட மோதிக்கிட்டிருக்கே…….?

வெள்ளத்துனால பாதிக்கப்பட்ட ஏழை ஜனங்களுக்கு கொஞ்சம் துணிகள்லாம் வாங்கிக் கொடுத்திட்டிருக்கேன்….

சுச்சுச்ச்சுச்ச்…….பொதுத் தொண்டு….உனக்குச் சின்ன வயசிலேயிருந்து இதே கொணம்…அது சரி….உனக்கென்ன பொண்டாட்டியா பிள்ளையா….ஒண்ணும் இல்ல….. பத்து லட்ச ரூபா இருக்கு…அத வச்சு ஏதோ செஞ்சுக்கிட்டிருக்கே…நமக்கு அப்டி முடியுமா…பொதுத் தொண்டு செய்றதுக்கு….நமக்குப் பின்னால பாரு….பொண்டாட்டி, ரெண்டு பிள்ள….டிரைவரு…..இதுக்கெல்லாம் சோறு போடோணுமே…..

வாங்கண்ணா….

ம்…..என்ன கோயிலுக்குப் போய் ஆண்டவனைத் தரிசனம் பண்ணிட்டு வர்றீங்களா?

ஆமா,பின்ன என்ன? ஞானபண்டிதன் கோயிலுக்கு வெள்ளிக் கெழமையானா நான் போறேன்…நீ ஞாயித்துக் கெழமையானா மாதா கோயிலுக்குப் போறே…..வாரம் பூரா செய்ற பாவத்த, ஒரு நாளாவது சாமிகிட்டப் போயி சரிப்படுத்தணுமில்ல…

ஆமா ஆளவந்தார்…வாரத்துல ஒரு நாள் ஆண்டவனுக்கு….அவரால படைக்கப்பட்ட ஏழை எளியவங்களுக்கு உதவி செய்ய பாக்கி ஆறு நாள்….

உனக்கு ஆறு நாள் போதாது…அறுபது நாள் வேணும்ய்யா….

ஜேம்ஸ் அண்ணாவுக்கு எப்பவும், யாருக்காவது ஏதாவது உதவி செய்துக்கிட்டேயிருக்கணும்…அப்பதான் அவருக்குத் திருப்தி…..

அப்போ, பொன்னகரத்து நன்கொடை சம்பந்தமா நாளைக்கு வரட்டுமா ஆளவந்தார்?

ச்சே…ச்சே….நன்கொடை விஷயமா நம்பகிட்ட வர்ற வேலை வேணா…..அது கெட்ட வியாதியப்பா…எவனாவது இளிச்சவாயனப் போய்ப் பாரு…..

என்னாங்க இது…?

நீ சும்மாயிரு மரகெதம்…உனக்கென்ன தெரியும்? ஒரு நாளைக்கு நன்கொடை கொடுத்தா, வருஷம் பூரா வந்து நிப்பான்…அப்புறம் கொடுக்கலேன்னா ஒழிக….ஒழிக….ஒழிகன்னு கத்துவான்…..

எஜமான், பொன்னகரம் நமக்குச் சொந்தமான எடம்…நம்ம எதுவும் பணம் கொடுக்கலேன்னா, ஜனங்கள்லாம் சேர்ந்து நம்மளத் திட்டுவாங்க…. – வேலைக்காரர் ராமாராவ்….

போடா….நம்ப எடத்துலதானடா இருக்குறானுங்க அவுனுக….

அதான் வாடகை வாங்குறோமில்ல….

உறாங்… வாடகை….குடிசைக்கு நாலணாத் தர்றான்…பெரிய்ய்ய வாடகை….

அப்போ ஜேம்சு…நீ போயிட்டு வா….நீ அந்த வேலைக்குத்தான் லாயக்கு…..எனக்கு ஒரு வைர வியாபாரி வந்திருக்கிறான்…அவன் விஷயமா இன்னைக்கு முடிக்கோணும்….நா போயிட்டு வர்றேன்….. மாணிக்கம்பிள்ள….எடு காரை……

வர்றேண்ணா….. – ஆளவந்தாரின் மனைவி மரகதமும் விடைபெற்றுக் கொள்கிறார்.

இந்தக் காட்சியைக் கவனித்தீர்களா ? ஆளவந்தார் எத்தனை வஞ்சக உள்ளம் படைத்தவர் என்பதை அவர் சம்பந்தப்பட்ட முதல் காட்சியிலேயே அங்கங்கே அழுத்தமாகத் தொட்டு அவரது கீழ்மைக் குணத்தைப் பறைசாற்றுவதுபோல் வசனம் எழுதப் பட்டிருக்கிறது பாருங்கள்.

பால்ய கால நண்பனானாலும், தற்செயலாய்ச் சந்தித்த அந்த நண்பரை, எதிர் கொள்ளும் விதமும், அவரது இருப்பையும் ஃபாதர் என்கிற அந்தஸ்தையும் மதிக்காமல், கேலியாக, நையாண்டியோடு பேசும் தன்மையும், இறை பக்தியின்பாற்பட்டு வெளிப்படுத்தும் போலித்தனத்தையும் கொண்டே இந்தக் கதாபாத்திரம் எவ்வாறு இனி வரும் காட்சிகளில் எடுத்துச் செல்லப்படும் என்பதை நடிகவேளின் அனுபவமான நடிப்பாற்றலினால் ஆரம்பத்திலேயே நமக்கு உணர்த்துவதைப் பார்த்தீர்களா?

சற்று யோசித்துக் பாருங்கள்….இந்தக் காரெக்டருக்கு ராதாண்ணன்தான் லாயக்கு என்று முடிவு செய்த பின்னால்தான் வசனங்கள் சரளமாக அவருக்கேற்றாற்போல் கற்பனை வளத்தோடு வந்து விழுந்திருக்கும் என்கிறேன் நான். திரைக்கதையையும், காட்சிகளையும் பொருத்தமான நடிகர்களாலும், அவர்களின் அபரிமிதமான நடிப்பாற்றலினாலும்தானே செதுக்கிச் செதுக்கிச் சித்திரமாக்க முடியும்? நல்ல காய்கறிகளான வசனங்களை, சுவையாகச் சமைத்துப் போட வேண்டுமே? என் கூர்மையான வசனங்கள் கணேசனின் அற்புதமான நடிப்பினால்தான் பெருமைபெற்றது என்று கலைஞர் சொல்லவில்லையா?

ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொருவகையான நடிப்பாற்றல் இருந்தது அப்போது. ஆனால் எந்தவகையானாலும் அந்தவகைப்பாட்டில் தன்னைக் கொண்டு கச்சிதமாய்ப் பொருத்திக் கொண்டு களைகட்ட முடியும் என்று நிரூபித்தார்கள் அவர்கள். அந்த மாதிரி இடத்தில், தன்னைத் திருத்தமாக ஸ்தாபித்துக் கொண்டவர் நடிகவேள் அவர்கள்.

இன்னும் ஒரு காட்சி. இதுவும் சொல்லப்பட்டால்தான் நிறைவாய் இருக்கும். படிப்பவர்களுக்கு, ச்சே…! நாம இப்டிப் புகுந்து புகுந்து பார்க்காமப் போயிட்டமே என்ற வருத்தம் வரும். வரி வரியாப் படிக்கிற போதுதான் அருமை தெரியுது என்று உணர முடியும்.

ஆளவந்தாருக்குச் சொந்தமான இடம் பொன்னகரம். அங்கு நிறைய ஏழை எளியவர்கள் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறார்கள். அங்கு ஒரு இலவச வைத்தியசாலையும் இருக்கிறது. அதை நடத்துபவர் இஸ்மாயில் என்ற பெரியவரும் (நாகையா), சுப்புசாஸ்திரி (கொத்தமங்கலம் சுப்பு) என்ற அவரது உடன்பிறவா சகோதரரும். அவர்களால் வளர்க்கப்பட்டவன்தான் ரஉறீம். அந்தக் குப்பத்து ஜனங்களுக்குப் பேருதவியாய்ச் சேவை செய்வதைத் தன் கடனாகக் கொண்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன்.

அந்த இடத்தை ஆலை கட்டும் நிமித்தம் ஒரு துரைக்கு விற்பதாகப் பேசி, அவரை அழைத்துக் கொண்டு அந்தக் குப்பத்துக்கு வருகிறார் ஆளவந்தார்.

அதோ தெரியுது பாருங்கோ மதில் சுவரு….கடேசில….அதுவரைக்கும் மை ப்ளேஸ்…மொத்தம் நாப்பது ஏக்கரா…..இவ்வளவு எடம் இந்த நாட்டுல ஒரு பயலுக்கும் கெடையாது….

எல்லாம் கோயில் சொத்து…… - வேலைக்காரர் ராமாராவ்.

டே….

ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கீங்கன்னு…..

பொன்னகரம்னு பேரு….யப்பா….ரொம்பத் திமிருடா……..

யார் துரையா?

ச்சே….ச்சே…இந்தப் பொன்னகரத்துப் பசங்களுக்குத்தான்….நான் மொதலாளி வர்றேன்…ஒருத்தனாவது கும்பிடலடா….

ம்ம்….ஒண்ணுக்கு ரெண்டா வாடகை குடுக்கிறாங்கல்ல…எப்டிப் கும்பிடுவாங்க….

பெரிய்ய்ய்ய வாடக….குடுக்குறாங்க…போடா….இவங்க நூறு வருஷம் வாடகை கொடுக்கிறதும் சரி, துரை இப்போ விலைக்கு வாங்கப் போறாரே இந்த எடத்தை….அதுக்கு ஈடாகாது?

கமின்…கமின்…..

வெல் மிஸ்டர் ஆளவந்தார்….ஐ வில் பே வாட் எவர் யூ டிமான்ட்….பட்…உறவ் யூ எவிக்ட் ஆல் த திங்ஸ்…..?

வாட்…வாட்….தொரை என்னா சொல்றாரு…புரியலியே…?

இந்த எடத்தை சர்க்கரை ஆலை கட்டறதுன்னு முடிவு செய்துதான் பல லட்சம் போட்டு விலைக்கு வாங்குறேன்….ஆனா இந்தக் குடிசைகளெல்லாம் எப்படிக் காலிபண்ணிக் கொடுக்கப் போறீங்கன்னு….கேட்குறாரு….

என்னா கேள்வி இதப்போய்க் கேட்டுக்கிட்டு….ஏழைங்க பாவம்…..என்னா காங்கிரீட் கட்டடமா? ஒரு தீக்குச்சில காலி பண்ணிடுவேன்…..

சொல்லிக் கொண்டே ஒரு குடிசை முன்னால் போய் நிற்கிறார். அங்கே ஒரு ஓரமாக ரஉறீம் (நடிகர்திலகம்) ஒருவருக்கு சகிச்சை செய்து, தலையில் கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

யார்ரா வீட்டுக்குள்ள….?

அப்பா வெளிய போயிருக்காருங்க…..

உங்கப்பனக் கேட்கலடா நா…..பெரிய மனுஷன் வந்திருக்கேன்….கட்டில இழுத்துப் போடு…கடைல போயி ரெண்டு கலர் வாங்கினு வா…..

துரை…சிகரெட்டா, சுருட்டா…?

நோ…தாங்க்ஸ்…..

பழக்கமில்ல போலிருக்கு…ஏண்டா நிக்கிறே…கலர் வாங்கிட்டு வாடா…. – ரஉறீமைப் பார்த்துக் கத்துகிறார்.

வேலையிருக்குங்க……

மிஸ்டர்ஆளவந்தார்….டேஸ் ஆர் சேஞ்ச்டு…நவ் இட் ஈஸ் நாட் ஆன் ஈஸி ஜாப் டு எவிக்ட்…..

யேஸ்…யேஸ்….என்னா சொல்றாரு….?

இந்தக் காலத்துல குடிசைகளக் காலி பண்றது அவ்வளவு சாதாரண விஷயமில்லேன்னு சொல்றாரு….

நீங்க ஒரு நல்ல துரை….உறாங்……கை நீட்டி அட்வான்ஸ் வாங்கிட்டனேன்னு பயப்படுறார் போலிருக்கு….டாக்குமென்ட்ல டைம் போட்டு எழுதித் தர்றேன்….நான் காலி பண்ணித் தர்றேன்….உங்களுக்கென்ன? டாய் பெருமாளு….

அய்யா…..

தொரையக் கார்ல ஏத்து……- சொல்லிவிட்டு ரஉறீமின் முன் வந்து நிற்கிறார்.

ஏண்டா டாய்…வேலையிருக்கா? பெரிய்ய்ய ஆஃபீசர் மவன்….வேலையிருக்காம் வேலை…….தலவலித் தைலம் விக்கிற பசங்களெல்லாம் பல லட்சம் பெறக் கூடிய இந்த எடத்துல உங்கள வாடகைக்கு விட்டேம்பா.ர்றா…என்னச் சொல்லணும்….உங்கொப்பன் வீட்டுச் சொத்தா? இல்ல உங்க பாட்டன் வீட்டுச் சொத்தா? இல்ல உன் முப்பாட்டன் வீட்டுச் சொத்தா?

பெரியவரே, மரியாதைக் குறைவாகப் பேச வேண்டாம். ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு….நீங்கள் கேட்ட அதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கிறேன். இந்த இடம் யாருடையது? உங்களுடையதா? அல்லது உங்கள் அப்பனுடையதா? அல்லது உங்கள் முப்பாட்டனுடையதா? யாருக்குச் சொந்தம்?

டாய்ய்ய்…பெருமாளு….என்னா ஸ்பீடாப் பேசறான் பார்த்தியா?

ஒரே கேள்விதான்….நல்லா நாக்கப் பிடுங்கிக்கிறமாதிரிக் கேட்டுப்புட்டான்….ஒருவேளை இந்த எடத்தினுடைய பூர்வீகமே அவனுக்குத் தெரியுமோ?

இவன் யார்றா பூர்வீகத்தப்பத்திக் கேக்குறவன்…..? இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா பன்னெண்டு வருஷம் ஆயிடுச்சி…இந்த எடமே எனக்குச் சொந்தம்னு சொன்னாலும் சொல்லுவான்…..

சொல்லப் போறான்…..

பெரியவரே எதுவும் யாருக்கும் இங்கு சொந்தமில்லை….இந்த மண்ணையெல்லாம் வளைத்துக் கொள்ளும் மன்னாதி மன்னனாக நீர் இருந்தாலும், , முடிவில் இந்த மண்ணில்தான் போய் புதைய வேண்டும்….

யாரு…நானா மண்ணுல புதையறேன்….என்னையா மண்ணுல புதைக்கிற…..டாய்….என்னடா பேசுற….என்னையா மண்ணுல புதைக்கிற….டாய்…..இரு பார்த்துக்கிறேன்….டாய் ….- பெரிய அளவில் கத்திக் குடியைக் கெடுத்து கலாட்டா பண்ணி தையாத் தக்கா என்று குதிக்க, தற்செயலாய் ரஉறீமின் கை அவர் தலைப்பாகையில் பட்டு அது கீழே விழுந்து விடுகிறது. . ரஉறீம் செய்வதறியாது அமைதியாகிறான்.

இதற்குள் என்ன கலாட்டா என்று இஸ்மாயில் அவர்கள் நாலு பேர் பின் தொடர அங்கு வந்து விடுகிறார்.

ரஉறீம்…என்னப்பா அவர்ட்டப் போயி தகராறு வச்சிக்கிறியேப்பா…அவர் யாருன்னு தெரியுமா? இந்தாங்க… இதல்லாம் மனசுல வச்சிக்காதீங்க….

அப்பா…நா ஒண்ணுமே செய்ல……அவர்தான் என் கையப்பிடிச்சிக்கிட்டு இப்டிக் கலாட்டா பண்ணிக்கிட்டிருக்காரு…..இவர் என்ன தெரியுமா சொன்னாரு…இந்தக் குப்பத்தை யாருக்கோ வித்துட்டாராம்…இங்க உள்ளவங்களையெல்லாம் காலி பண்ணப் போறாராம்….

ஆமாண்டா…இப்பவும்தாண்டா சொல்றேன்….இது என் சொந்த எடம்டா….நான் விப்பேன்…இடிப்பேன்…கொளுத்துவேன்….அதக் கேட்க நீ யார்றா?

ஏ, குப்புசாஸ்திரி, பெரியுமன்ஷன்னு குடிவக்கச் சொன்னே…நீ சொல்லு நியாயம்?

பிள்ளேவாள்…இந்தக் குப்பத்துலே எங்களுக்கெல்லாம் இஸ்மாயில் அண்ணன்தான் தெய்வம் மாதிரி….

அண்ணனா?

ஆமா…எதுவாயிருந்தாலும் அவர்ட்டயே சொல்லுங்க….

என்னாய்யா….நீர் அய்யரு…சாயபுவப்போயி அண்ணன்றே….நம்ம ஜாதி என்ன ஆச்சாரம் என்ன?

மன்னிக்கணும்…இந்தக் குப்பத்துல நான் என்ன ஜாதி. அவரென்ன ஜாதி, இந்த மக்களெல்லாம் என்ன ஜாதி,அப்டீன்னெல்லாம் யோசிக்கிறதுக்கே நேரமில்லாமப் பழகிட்டோம்…..

நேரமில்லயா….அதவிட வேறென்ன வேலைய்யா உனக்கு? ஏளனமாய்க் கேட்கிறார்.

எங்க வேலயெல்லாம் எல்லார் வீட்லயும் அடுப்புப் புகையணும்…பக்கத்துல இருக்கிறவங்க நோய் நொடி இல்லாம இருக்கணும்…அநாவசியமா ஜாதி மதம்னு பேசிக்கிட்டு அலையக் கூடாது…அதுதான் எங்க வேலை….

வேலை மட்டுமில்லே…அதுதான் எங்களுக்கு வேதமும் கூட – சாஸ்திரி சொல்கிறார்.

அய்யய்ய….என்னாய்யா அய்யரே…வேதத்தையே மாத்துறீரே….?

நான் மாத்தல பிள்ளேவாள்…காலம் அதை மாத்திடுது…..

ஏன்யா….நீ இங்க தலைவனா இருக்கிறதா, தொண்டனா இருக்கிறதா?

அய்யா, அவர் இருந்தா என்ன, நான் இருந்தா என்ன….இந்த பாருங்க….எந்தக் காரியத்தையும் யாரு செய்றாங்கங்கிறது முக்கியமில்லே…செய்ற காரியந்தான் முக்கியம்….

ரஉறீம்ண்ணே…நம்ப நரிமேடு சின்னச்சாமிக்கு ஒடம்புக்கு ரொம்ப முடில…

அப்டியா? – வைத்தியப் பெட்டியொடு கிளம்புகிறான் ரஉறீம்.

பார்த்துக் கொண்டே இருந்த ஆளவந்தார் கிண்டலடிக்கிறார்…

டாக்டர்…..போறாரு இப்பத்தான்……ஒன் மகன்ட்டச் சொல்லி வை…அவன் நடக்கிறது ஒண்ணும் எனக்குப் புடிக்கல…..உறாங்….பொழைக்கிறதுக்கு வழி பார்க்கச் சொல்லு….அடியாளாயிடுவாம் போலிருக்கு….தொப்பியத் தட்டறான் அவன்…அதோட இந்தக் குப்பத்தையும் காலி பண்றதுக்கு வேண்டிய ஏற்பாடு பண்ணுங்க…நம்மகிட்டத் தகராறு வச்சிக்காதிங்க…..அய்யரே…சாயந்திரமா வந்து பாரு….பெருமாளு பின்னாடியே வா…ரெண்டாளக் கூட்டிக்கிட்டு……...

இதைப் படிப்பவர்கள், ஆழ்ந்து ரசித்தவர்கள், அப்படியே ராதாவின் பாஷையிலே நீங்களே சொல்லிப் பாருங்கள். அவர் நடிப்பைக் கண்முன் கொண்டு வந்து பாருங்கள். அப்பொழுதுதான் பாவமன்னிப்புப் படத்தில் அவரின் ஸ்பெஷாலிட்டி தெரியும். இந்த வசனங்களையும், அவரது நடிப்பையும். வேறு எந்த நடிகரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பதுதான் சத்தியம்.

இதே ராதாதான் இருவர் உள்ளம் படத்தில் பத்துக் குழந்தைகளுக்கு அப்பனாய், பயந்த சுபாவம் உடைய வக்கீலாய், ரங்காராவின் பிள்ளையாய், நமக்கே பாவமாய் அற்புதமாய் நடித்தார். படித்தால் மட்டும் போதுமாவில் கல்யாணத் தரகராய் வருவார். பார் மகளே பார் படத்தில் நட்டுவனார் நடராஜனாக வருவார். பாத காணிக்கை படத்தில் மிலிட்டரி ரிடையர்டாக டக்கு டக்கு என்று உறிட்லர் மீசையோடு வந்து அமர்ந்து அவர் பேசும் அழகே அழகு.. பச்சை விளக்கில் வெட்டி ஆபீசராய் வருவார். பாலும் பழமும் படத்தில் தேவாங்கு ராக்கெட் லேகியம் தயாரிப்பார். கர்லாக்கட்டை சுற்றுவார். சாய்ராமையும், கருணாநிதியையும் ஏமாற்றி அமர்க்களப்படுத்துவார். பாகப்பிரிவினையில் சிங்கப்பூர் சிங்காரமாய் வந்து வெளுத்து வாங்குவார். ரத்தக்கண்ணீர் படந்தான் அவரது மாஸ்டர் பீஸ். அதையே ஒத்த, அதே வீச்சும் விறைப்போடுமான வேஷத்தில் நல்ல இடத்து சம்பந்தம் படத்தில் சௌகாரின் கணவராக வந்து பிரமாதப் படுத்துவார். எம்.ஜி.ஆர். படங்களிலெல்லாம் வில்லன்தான்.ஆனாலும் யாருக்கு அலுத்தது? நடிகவேளின் நடிப்புத்திறன் எவருடனும் ஒப்பிட முடியாதது. அவருக்கு நிகர் அவரே…!

-----------------------------------

 

.

கருத்துகள் இல்லை: