03 பிப்ரவரி 2014

வாஸந்தியின் “கடைசிவரை” நாவல் பதிவு

2014-02-04 08.16.47

 

இந்தியா டுடே-யில் தொடராக வந்த போது எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இத்தனை நாள் படிக்காமல் விட்டோமே என்றுதான் இருந்தது இந்த நாவலைப் படித்தபோது. இந்த நூலுக்காக முன்னுரையில் திருமதி ராஜம்கிருஷ்ணன் அவர்கள் சொல்லியுள்ளபடிமையக்கருவைச் சிறந்த பட்டைக் கண்ணாடிபோல் பயன்படுத்திப் பல்வேறு கோணங்களில் பெண்ணின் உரிமைகளைத் துல்லியமாகப் படம் பிடித்து அதன் முழுப் பரிமாணங்களுடன் ஸ்கேன் திரையில் பளிச்சிடுவது போலக் காட்டப்பட்டுள்ளது இந்த நாவலின் சுவாரஸ்யமான, அழுத்தமான, இறுக்கமான நடைப்போக்கும், சம்பவங்களும் நம்மால் மறக்க முடியாதது.
இந்த விஷயத்தை மையக் கருத்தாக எடுத்துக் கொண்டு இந்த நாவலை நான் படைக்கப் போகிறேன் என்று தீர்மானித்துக் கொண்ட அதே வேளையில், அந்த மையக் கருத்துக்கு ஏற்றாற்போன்ற கதாபாத்திரங்களையும், அவற்றின் குணாதிசயங்களையும் துல்லியமாக வரையறுத்து, அதற்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பாத்திரங்களையும் ஊடாடவிட்டு, அங்கே இந்த மையக்கருத்தைத் தாங்கிச் செல்லும் கதாநாயகியின் அழுத்தமான சிந்தனைகளை அப்படியே நாவல் முழுக்கத் தூக்கிச் செல்லும் பாங்கும், பொருத்தமான, புத்திசாலித்தனமான உரையாடல்களும் மறக்க முடியாதவை. நாவலைப் படிக்கும்போதே அதனில் நம்மையும் ஒரு கதாபாத்திரமாக நாம் வரித்துக் கொண்டு,நமது கேள்விகளை முன்னிறுத்த, இம்மாதிரிக் கேள்விகள் இதைப் படிக்கும் வாசகனுக்கு ஏற்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பில் அங்கங்கே அந்தச் சந்தேகங்களைத் தீர்ப்பதுபோல் விடை சொல்லிச் செல்லும்அழகு, முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பது என்ற தீர்மானத்தை நம்முள்ளே கொண்டு வருகிறது.
நாவல்கள் எழுதுவது என்பது வெறுமே வரிகளைச் சேர்த்துக் கொண்டு போவது அல்ல. மாத நாவல்கள் எழுதுவதுபோல. நிறையக் கதாபாத்திரங்களை உள்ளே நுழைத்துவிட்டாலே அது நல்ல நாவலாக வடிவம் பெற்றுவிடும் என்பதும் அல்ல. சுரத்தில்லாத சம்பவக் கோர்வைகள் என்றும் நாவலுக்கு சுவை சேர்ப்பதில்லை. எழுதி எழுதிப் பழக்கத்தினால், பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளி நாவல் என்கின்ற பெயரில் யாரும் ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்துவிட முடியும். அதனால் பயன் என்ன?
நாவல் காலத்தால் அழியாதது. வருடங்கள் கடந்தாலும் பேசப்படுவது. அதுதான் நின்று நிலைப்பது. பேசப்பட வேண்டிய நாவல்கள் பேசப்படாமல் போனதுதான் தமிழ் இலக்கிய உலகின் அபத்தமான துரதிருஷ்டம்.
இந்த நாவல் அந்த வரிசையில். அது வாஸந்தியின் “கடைசிவரை...” . தமிழ்ப்புத்தகாலயம் 1996 ல் வெளியிட்டது. தேடிக் கண்டெடுத்துப் படிக்க வேண்டிய நாவல்.

கருத்துகள் இல்லை: