25 ஜூன் 2012

“போதுண்டாசாமி…!“ சிறுகதை

(உயிரோசை இணைய இதழ் – 25.06.2012 வெளியீடு)

படம்

ப்போ அதுதான் உன் பிரச்னையா?...

கேள்வி வந்ததும் திடுக்கிட்டுப் போனான். யாரு…யாரு…? தனக்குத்தானே கேட்டுக் கொண்டு முன்னும் பின்னுமாகத் திரும்பினான். நெஞ்சுக்குள் வேகமான லப் டப். இடது மார்பைப் பிடித்துக் கொண்டான். ஏதோ வந்து அழுத்தமாகக் குத்திட்டு உட்கார்ந்திருப்பதுபோல்…!

ஆம் என்றும் சொல்ல முடியவில்லை. இல்லை என்றும் மறுக்க முடியவில்லை. ஆம் என்று சொன்னால் சிரிக்கக்கூடும். இத்தன நாள் குழம்பிக்கிட்டிருந்ததுக்கு இன்னைக்குதான் விடை கிடைச்சுதாக்கும் என்று கேலி பேசக் கூடும். விடை கிடைச்சிட்டதுங்கிறதுனாலயே நீ செய்தது சரின்னு ஆயிடாது. தப்பு தப்புதான்….என்று சொல்லவும் கூடும்.

அன்னைக்கே இதை நான் உன்கிட்ட சொன்னேன். நீதான் என்னை ஒதுக்கிட்டே.. …யாருன்னு கூடக் கண்டுக்கலை….இன்னைக்கு மாதிரித் தேடியிருந்தேன்னா என்னைக் கண்டு பிடிச்சிருப்பே…செய்யலை…உன் கண்ணை அது மறைச்சிருச்சு….

என்னைக்கே….? எது மறைச்சிருச்சு? என்ன சொல்றே?

பார்த்தியா,பார்த்தியா டிராமாப் பண்றியே…? என்னைக்குன்னு தெரியாதா உனக்கு? உண்மையிலேயே தெரியாதா? ஏனிப்படி புழுகறே? உன் மனசுக்கு நீயேபொய்யாஇருக்காதே…அந்தஅன்னைக்கேதான்…கையைநீட்டினஅன்னைக்கு…போதுமா…நல்லாநினைச்சுப்பாரு…வேணாம்…வேணாம்…வேண்டாம்னு மூணு வாட்டி சொன்னனே….காதுலயே விழலையாக்கும்….எப்டி விழும்? பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தமாதிரி நின்னே அன்னைக்கு….என் நினைப்பு எப்டி வரும்? அதான் கண்ணை மறைச்சிருச்சின்னேன்… அதுக்கப்புறம்தான் நான் மூலைல கிடக்கனே… அப்பயும் கவனிக்கல நீ…அதான் முடிஞ்சு போச்சேன்னு நானும் விட்டுட்டேன்…செய்றத செய்தாச்சுன்னா அதுக்கப்புறம் வர்றத அனுபவிச்சிதானே ஆகணும்…கூப்பிடறபோது போவோம்னு நானும் இருந்திட்டேன்….

அப்போ இப்ப நீ கூப்பிட்டுத்தான் வந்தியா?

பின்ன…, ? ஒரு கணம் நினைச்சாப் போதாது…வந்திரமாட்டேன்?

வந்தாயிற்று. இப்பொழுது கோபப்பட்டுப் புண்ணியமில்லை. மறந்ததுபோல் இருக்கக் கூடாது….அது சரி வராது.

அப்டியெல்லாம் இல்ல…நீ எப்பவும் மனசுல இருந்திட்டேதான் இருக்க…உன்ன ஒதுக்கிட்டு எதைத்தான் செய்ய முடியும்…? விட்ருவியா நீ? கண்கொத்திப் பாம்பால்ல பார்த்திட்டிருக்கே?

என்ன இப்படி மொட்டத்தனமாப் பேசற? நீ அன்றாடம் செய்ற காரியத்துக்கெல்லாமா நா குறுக்க வந்திட்டிருக்கேன்? நீ, நீபாட்டுக்கு இருக்க…நா நான்பாட்டுக்கு இருக்கேன்…நா எப்ப வருவேன், எப்பப்ப தவறாம வருவேன்னு உனக்கே நல்லாத் தெரியும்…அப்டியும் இப்டி மறைச்சுப் பேசறியே…நா அப்டிப் பார்த்திட்டிருக்கிறதுனாலதான் நீ இந்த அளவுக்காவது ஜாக்கிரதையா இருக்க…அது தெரியுமா?

என்னத்த மறைக்கிறது? எதை மறைக்க முடியுது உங்கிட்ட….உன்னைத் தவிர்த்திட்டு எதையுமே செய்ய முடியலையே…?

அப்டியெல்லாம் அனாவசியமாச் சொல்லாதே….உன் காரியங்கள் எல்லாத்துலயும் நா குறுக்கே வர்றதில்லே…அது உனக்கே நல்லாத் தெரியும்…அப்டியிருந்தும் அடிக்கடி நீ இப்டி வெறுக்கிற மாதிரிப் பேசுறது நல்லால்லே…

அது கிடக்கட்டும், இப்ப எதுக்கு வந்தே…?

பார்த்தியா…பார்த்தியா…மறுபடியும் தப்புப் பண்றே….நாந்தான் சொன்னனே நான் இன்னைக்குப் புதுசா வரல்லே…அன்னைக்கு வந்ததுதான்னு….

அதெல்லாம் இல்லே…அன்னைக்கு வந்திருக்கலாம்…ஆனா அதுக்கப்புறம் நீ இல்ல…எனக்கு நல்லாத் தெரியும்….திரும்பத் திரும்ப அன்னைக்கு வந்தேன், அன்னைக்கு வந்தேன்னு சொன்னதையே சொல்லாதே….எனக்குக் கோபம் வரும்….

நா வந்தாலே உனக்கு சமீப காலமாக் கோபம்தானே வருது…பிடிக்கலையே…அதான் சொன்னேன் என்னை ஒதுக்கி வச்சிட்டேன்னு…

ஒதுக்கி வச்சிட்டேன்னு ஒத்துக்கிறேல்ல…ஒத்துக்கிறேல்ல? அப்றம் எதுக்கு வாயைத் திறக்கிறே? மூடிட்டுக் கிடக்க வேண்டிதானே…?

நா அப்டித்தானே கெடந்தேன்…இப்ப நீதானே கூப்டே…நானாவா வந்தேன்…?

என்னது நா கூப்டனா? எப்போ? – குழப்பமாய்த்தான் இருந்தது.

எப்போவா….? அது…வந்து….வந்து…..ம்ம்ம்…ஞாபகம் வந்திருச்சு…..அமாவாசை சொன்னானே….அப்போ…..

இவனுக்கு சுருக்கென்றது. ச்ச்ச்சே…! அதக் கேட்டுட்டியா நீ….?

என் காதுலயும் விழுந்திருச்சே….!

அது ஒண்ணுமில்லே…அவன் எதையோ நினைச்சிட்டுச் சொல்றான்…

எதையோல்லாம் இல்லே…அவனுக்குத் தெரிஞ்சதைச் சொல்றான்…

தெரிஞ்சதை என்ன தெரிஞ்சதை? பெரிஸ்ஸ்ஸா அவனுக்கு எல்லாம் தெரியுமோ?

தெரியுமோஓஓஓஓஓஓன்னு எங்கிட்ட எதுக்கு நீட்டறே? அவன்ட்டயே கேட்டிருக்க வேண்டிதானே?

என்னத்தைக் கேட்கச் சொல்றே…? அவனே ஒரு டமாரம்…பட்டுப் பட்டுனு எல்லாத்தையும் போட்டு உடைச்சிருவான்…அவன்ட்ட மனுஷன் பேச முடியுமா? கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கணும்….

அப்டின்னா?

சொன்னா சொல்லிட்டுப் போறான்னு விட வேண்டிதான்….

அவன்ன்னு இல்லே…இதை யாரு சொன்னாலும், சொல்லியிருந்தாலும் நீ அப்டித்தான் விட்டாகணும்….

ஆம்மா…இதையெல்லாம் சொல்றதுக்கு அவனுக்கு என்ன தகுதி? அவனென்ன பெரிய யோக்யனா? கடைஞ்செடுத்த ஃப்ராடு…..உடம்பெல்லாம் கை அவனுக்கு…

அவன் ஃப்ராடுதான்…அவனொன்ணும் தன்னைப்பத்தி உயர்வா சொல்லிக்கலையே…கேட்டாலும், ஆமா நா அப்டித்தான்னுவான்….என்ன பண்ணுவே? எவன் யோக்யன்னுவான்….அதுக்கும் மேலே கேட்க ஆரம்பிச்சேன்னா அம்புட்டுக் கதையையும் எடுத்து விட்ருவான்….ஆகையினால அவன்ட்ட இந்த அளவுல நீ நிறுத்திண்டது சரிதான்….அது கெடக்கட்டும்…அப்டி அவன் என்னதான் சொன்னான்?

பார்த்தியா…பார்த்தியா…திரும்பவும் அதை என் வாயாலே பிடுங்கப் பார்க்கிறே நீ….

என்னதான் சொன்னான்…சொல்லேன் கேட்போம்….

நீங்கள்லாம் எப்டி இருந்தவங்க சார்ன்னாங்…..

இவ்வளவுதானா?

எப்டி இருந்தவங்க இப்டி ஆயிட்டீங்கன்னான்…

என்னவோ காமெடி டயலாக் மாதிரி இருக்கு….

காமெடிதான்…என்ன பண்றது…அவன் வாயால கேட்க வேண்டிருந்திச்சே….

அப்புறம்?

நீங்கள்லாம் இப்டி மாறுவீங்கன்னு நினைக்கவேயில்ல சார்….உங்கள என் வாழ்க்கைல ரெண்டு விதமாப் பார்த்திட்டேன் சார்ன்னான். கடைசி வரைக்கும் அசையாம இருப்பீங்கன்னு நினைச்சா, மாறிட்டீங்களே சார்….ன்னு வருத்தப்பட்டுச் சொன்னான்….எனக்கு ரொம்பச் சங்கடமாப் போச்சு அப்போ….

ஏன்…? இப்டிக் கேட்டுட்டானேன்னா?

அவன் ஆரம்பம் முதலே நா மோசம்தான்னு காண்பிச்சவன்….அவன் மனசுல நாம உயரத்துல இருந்தோம்…..நம்மள பக்தி சிரத்தையா வச்சிருந்தான்…..அப்டிப்பட்டவன் நம்மள டொம்னு போட்டு உடைக்கிற போது…..

உடைச்சானா, தோள்ல கை போட்டானா…?

அவன்தான் எனக்கு ரொம்ப வருஷமா ஃப்ரெண்டாச்சே…ஃப்ரெண்ட்ஷிப் வேறே…இது வேறே….

அப்போ தோள்ல கை போட்டாங்கிறதுதான் சரி….சேர்ந்து கைகோர்த்துண்டு தீர்த்தமாடப் போக வேண்டிதானே…..அடுத்து அதா இருந்தாத்தானே ஸ்வாரஸ்யம்….அப்பத்தானே எல்லாம் பொருந்தி வந்தமாதிரி இருக்கும்…

நீங்க ரொம்பத்தான் கிண்டல் பண்றீங்க…அப்டியெல்லாம் நீங்க சொல்ற மாதிரி நா மோசமாகலை…அவனும் அங்கல்லாம் என்னைக் கூப்டுற ஆளும் இல்லை….இத வாய்விட்டுச் சொல்லிட்டானேயொழிய நம்ம மேல அவன் வச்சிருக்கிற மதிப்பு ஒண்ணும் அவனுக்குக் குறைஞ்சு போயிடலை…

இப்போ நா ஒண்ணு கேட்கிறேன்….அவனுக்கும் இதெல்லாம் தெரிஞ்சிருக்கேன்னு நீ சங்கடப்படுறியா? இல்ல தெரிஞ்சத இப்டி வாய்விட்டுச் சொல்லிப்புட்டானேன்னு வருத்தப் படுறியா?

ரெண்டாவதுக்குத்தான்….வாய மூடிட்டுக் கெடப்பானா…அவன்பாட்டுக்கு விட்டேத்தியாப் பேசுறான்…

அவன் அப்டி ஆள்தானே….அவன்ட்ட வேற எந்த மாதிரி எதிர்பார்க்க முடியும்?

இருந்தாலும் இதையெல்லாம் இவன் வாயாலே கேட்க வேண்டிர்க்கே…அதான்….

அப்டித்தான் வரும்…வேறெப்படி ஆகும்? அவன் நிக்கிற சாக்கடைக்குள்ளல்ல நீ இறங்கினே…? அதுதானே உண்மை…?அப்போ கேட்டுத்தானே ஆகணும்…அங்க நிக்கிறவாள்ல யாராச்சும் பேசித்தானே ஆகணும்…எல்லாரும் அமைதியா உன்னைப் பார்த்திண்டிருப்பாளா? இல்ல, இவனெப்படி இங்க வந்தான்னு அதிசயிக்கணுமா? அவங்க உன் எடத்துக்கு வந்திருந்தா உனக்கு மரியாதை செய்வா…நீ அவுங்க எடத்துக்குல்ல போயிருக்கே…அப்போ வரவேற்பு அப்டித்தான் இருக்கும்…பொறுத்துக்கத்தான் வேணும்….

அவன் சாக்கடைக்குள்ள பல வருஷமா குளிச்சிண்டிருக்கான்…நா இறங்க மட்டும்தான் செய்தேன்…..அதுக்குள்ளே என்னை வீட்டுக்குப் போடான்னு அனுப்பிச்சிட்டா….

மனசு வருத்தமாப் போச்சாக்கும்…அவனமாதிரி செழிப்பாப் பார்க்க முடியலையேன்னு…?

அட, அதல்லாம் இல்ல….நானா எதையும் எப்பவும் தேடிப் போனதில்ல…வாய்விட்டு எங்கயும் வழிஞ்சதுமில்ல…

அப்போ…? அதுவாக் கிடைச்சதை வேண்டாம்னு சொல்லலை…அப்டித்தானே?

இதுக்கு அவனே பரவால்ல போலிருக்கே? அவனாவது நா ரிடையர்ட் ஆகி ரெண்டு வருஷம் கழிச்சிதான் கேட்டான்…நீ உள்ள உட்கார்ந்து கேட்டுட்டேல்ல இருக்கே….

நா ஒண்ணு கேட்கறேன்…வீட்டுக்குப் போற நேரத்துல ஏன் அதுல இறங்கினே? இத்தன காலம் கழிச்சாச்சோல்லியோ? அப்டியே பல்லைக் கடிச்சிண்டு வந்திருக்க வேண்டிதானே….

வந்திருக்கலாம்தான்…என்னவோ சபலம்….சூழ்நிலை என்னை மாத்திடுத்து….அது நாள் வரை அப்டி அள்ளிக் கொட்ற இடத்துல நா இருந்ததில்லே….அதிகாரம் பண்ற பெரிய எடமா இருந்து கழிச்சாச்சு…கடைசி நேரத்துல அங்க மாத்திட்டா…..போமாட்டேன்னு சொல்ல முடியுமா? உள்ளுர்தானேன்னு போய்ச் சேர்ந்தேன்…

போய்ட்டேல்ல….உன் அடையாளத்தை ஏன் தொலைச்சே…?

நானும் சராசரி மனுஷன்தானே…..எல்லாருக்கும் தலைமையா உட்கார்ந்திருக்கிற எடத்துலே நாந்தான் எல்லாம் செய்ய வேண்டியிருந்தது.அது உள்பட…!…அதையும் சேர்த்துத்தான்…செய்து தொலைச்சேன்….இந்தக் காரியத்துலயும் நா வரதுக்கு முன்னாடி என் இடத்துல இருந்தவாளாலே நிறைய பிரச்னைகளைச் சந்திச்சிருப்பா போலிருக்கு அங்க…நா வந்தபின்னாடி அப்படியாப்பட்டது ஒண்ணும் தலையெடுக்கலை…எல்லாம் நியாயமாப் போச்சு…நாமதான் கிரமமா செய்திடுவோமே எல்லாத்தையும்…..அனாவசியமா அடுத்தவாளோடுதுக்கு ஆசைப்பட மாட்டமே….எல்லாரும் சமம்தான்னு அவாவாளுக்கு உரியது போய்ச் சேருரப்போ என்ன பிரச்னை வரப்போகுது…இதையும் ஆபீஸ் வேலைல சின்சியரா இருக்கிற மாதிரி எவ்வளவு பர்ஃபெக்டா பண்றான் பாருய்யான்னு பெருமையாப் பேசிண்டா…ஆனா மனசுக்குள்ள சந்தோஷமில்லே…குடிச்சிட்டு எவ்வளவு அழகா ஆடுறான் பாருய்யான்னா ஒருத்தனப் பார்த்துப் பெருமைப் பட்டுக்க முடியுமா? அதுபோலதான்…அதுனால அவாளும் எதுவும் கண்டுக்கலை…எங்கிட்ட வாய்விட்டு யாரும் எதுவும் கேட்டதில்லை….ஒரு சரியான ஆள் தப்புப் பண்ணினா அதுல கூட பெர்ஃபெக் ஷன் இருக்கும் போலிருக்குன்னு விட்டுட்டா….இவன் இருக்கிறது நமக்கு ஒரு சேஃப்டிதான்னு நினைச்சிருப்பா…ஊழல் பண்றவா நல்ல புத்திசாலியான, திறமையான வக்கீலுக்குக் கொட்டிக் கொடுத்து பக்கத்துலயே வச்சிக்கிறதில்லியா…? அதுபோலதான்…

நீயும் ருசி கண்ட பூனையாயிட்டே…அதையும் சொல்லூஊஊஊஊஊஊஊ…..

அப்டித்தான்னு வச்சிக்கயேன்…. – சொல்லிவிட்டு லேசாகச் சிரித்துக் கொண்டான். அது அசட்டுச் சிரிப்பாய்த் தோன்றியது. இதற்கு முன் எப்பொழுதும் இம்மாதிரியெல்லாம் எங்கும் சிரித்ததில்லை. என்ன இப்படிச் சிரிக்கிறோம் என்றிருந்தது. அசட்டுச் சிரிப்பானாலும் அதற்கும் ஒரு நல்ல சிட்சுவேஷன் வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் தத்ரூபமாய் இருக்கும் போலிருக்கிறது.

என்ன…? நீ சிரிக்கிறது உனக்கே கேவலமாயிருக்கா…?

திடுக்கிட்டுப் போனான். ச்ச்ச்சே…இதப் பக்கத்துல வச்சிக்கிட்டு எதையுமே செய்யக் கூடாது போலிருக்கே….எப்டி மறந்தேன்…?

எங்கூடத்தானே இப்பப் பேசிட்டிருக்கே….உன் முக பாவங்களையெல்லாம் நா கவனிச்சிட்டேதானே இருக்கேன்…..

கவனிச்சா கவனிச்சிக்க போ….நடந்தது நடந்து போச்சு…இப்ப என்ன செய்யச் சொல்றே…?

எல்லாருக்கும் குறையில்லாமப் பிரிச்சிக் கொடுத்தேன்னு பெருமையாச் சொல்லிக்கிறே…நீயும் ஏன் எடுத்துண்டே? உன் பங்கு வேண்டாம்னு சொல்லிக் கொடுத்துட வேண்டிதானே? இல்லைன்னா உன் பங்கையும் சேர்த்து அவுங்களுக்குப் பிரிச்சு அளந்திருக்க வேண்டிதானே..உன் பங்கை நீ எடுத்துண்டதுனால உனக்கும் மனசுல ஆசை வந்திருக்குன்னுதானே அர்த்தம். நீயும் கையை நீட்டுறதுக்குத் தயாராயிட்டேன்னுதானே பொருள்.

போதும் நிறுத்து…இத்தனை விலாவாரியா உன் கிட்டே யாரு கேட்டா? இதெல்லாம் எனக்குத் தெரியாதா? தெரிஞ்சிதான் இந்தத் தவறு நடந்து போச்சுன்னுதானே நானே சொல்றேன்…

எங்கிட்ட எதுக்குக் கத்தறே? அந்த எடத்துக்கு நீ போனது தப்பில்லே…அந்த மாதிரிக் காரியமெல்லாம் எனக்கு ஆகாது…அந்த வேலையை மட்டும் வேறே யார்ட்டயானும் கொடுத்திருங்கோன்னு சொல்லியிருக்கணும்….அப்டிச் சொல்லியிருந்தயானா இன்னைக்கு இந்த அபவாதம் வந்திருக்காது….

அபவாதம் என்ன அபவாதம்? அவன் சொல்லிட்டா அதுக்குப் பேரு அபவாதமா? யாரு சொல்றான்னு ஒண்ணு இருக்கில்லியோ?

இந்த மாதிரி விஷயங்கள அவன மாதிரி ஆள்தான் சொல்லுவான்…தெரிஞ்சவங்க எல்லாரும் சொல்வாங்களா? சிலர் மனசுக்குள்ளயே நினைச்சுப்பாங்க…சிலர் வேறிடத்திலே சொல்வாங்க…ஏன்னா அவுங்க மனசுக்கு ஒரு ஆறுதல் வேணுமோல்லியோ…வேற சிலர் இதிலென்ன இருக்கு…இன்னைக்கு இதெல்லாம் சாதாரணம்னு விட்டிடுவாங்க…

அப்போ எல்லாருக்கும் தெரிஞ்சிதான் இருக்கும்னு சொல்றியா?

தெரியாம…? இதென்ன ரகசியமா செய்த காரியமா? பப்ளிக்கா செய்ததுதானே? ஒரு ஆபீஸ்ல ஒருத்தருக்கொருத்தர் வாய்விட்டு வேணா சொல்லிக்காம இருக்கலாம்…வெளிப்படையாத் தெரியாம இருக்கலாம். அதுக்காக அது நடக்கவே இல்லைன்னு சொல்லிட முடியுமா? நீதான் நல்லா கலந்திருக்கியே….இப்பப் பேசி என்ன புண்ணியம்? அங்க நுழைஞ்சவுடனேயே நான் சொன்னமாதிரி செய்திருந்தீன்னா கடைசிவரைக்கும் நிமிர்ந்து நின்னிருக்கலாம்….அல்லது சராசரியாவாவது இருந்திருக்கலாம். இப்போ? சராசரிலயும் கேடு கெட்ட சராசரியாப் போயிட்டு புலம்பி என்ன புண்ணியம்?

ச்ச்ச்சே…!இது கூடப் பேச ஆரம்பிச்சதே தப்பு….ஒண்ணுன்னா ஒன்பது இழுத்து விடுறதே…?

இப்போ என் மேலயே உனக்குக் கடுப்பு வரும்…எனக்குத் தெரியாமலா?நமக்கு எது பொருந்துமோ அதை மட்டும்தான் நாம செய்யணும். நமக்குன்னு ஒரு இயல்பு இருக்கோல்லியோ? அந்த இயல்பை நமக்கு நாமே உணருரோமோ இல்லியோ மத்தவா நல்லா உணர்ந்து வச்சிருப்பா…அந்த நோக்குலதான் நம்மைப் பார்ப்பா….நாம அதுலர்ந்து பிரள்றபோது ச்ச்சீ…இவனும் இவ்வளவுதானான்னு துப்பிடுவா…

நாந்தான் சொல்றனே…எல்லாரையும் நான் என் விருப்பத்துக்கு வேலை வாங்கணுமானா, டிலே இல்லாம முடிக்கணுமானா, வெளிக்காரியங்களைத் தடங்கல் இல்லாம நடத்தணுமானா, இதெல்லாம் செய்துதான் ஆகணும்…அப்பத்தான் ஆபீசே சுமுகமா இருக்கும்….நம்ம வழியா வர்றதால நியாயமாத்தான் இருக்கும்ங்கிற சமாதானத்துல, நம்பிக்கைல, வேலைகள் தடங்கலில்லாம நடக்கும்…சிறந்த நிர்வாகம்னு பேர் எடுக்கிறதுக்கே இன்னைக்கு இதெல்லாத்தையும் சேர்த்து கட்டி இழுத்திண்டுதான் போக வேண்டிர்க்கு…இல்லைன்னா எனக்குப் பொருந்தாதுன்னு ரிசைன்தான் பண்ணனும்…அது முடியுமா…? மாதச் சம்பளம்ங்கிற வட்டத்துக்குள்ள சிக்கிண்டிருக்கமே…?

ரொம்ப நியாயமாப் பேசறதா நினைப்பு போலிருக்கு….நம்மளோட தப்பை மறைக்கிறதுக்கு எப்டியெல்லாம் சப்பைக்கட்டு கட்டிக்கிறோம்…அதுதான் சுயநலம்….இதுக்கு அவனே பரவால்லயே….நா இப்டித்தான்னு வெளிப்படையா இருக்கானே….

அவனும் நானும் ஒண்ணா…? திரும்பத் திரும்ப அப்டியே பேசிண்டிருக்கியே? அவன் நின்ன வட்டத்துக்குள்ள போனது தப்பாப் போச்சு…அதுதான் இப்போ குத்துது…குடையுது….

அப்போ கடைசியா என்ன சொல்லவர்றே…? பன்னியோட சேர்ந்த நாயும் பீயத் தின்னுதான் ஆகணும்ங்கிறது சரியாத்தானே போச்சு….

ச்ச்சே…! இதுக்கு அவனே பரவால்ல போலிருக்கே….மனசுக்குள்ள உருவமில்லாம உட்கார்ந்திட்டு என்ன கேள்வி கேட்குது? இதுவே நம்ம பிராணன வாங்கிடும் போலிருக்கே…?

நான் ஒண்ணும் சொல்ல வரல்லே…அதான் எல்லாத்தையும் நீயே சொல்லிட்டியே….!

ஆக, இத்தனை நாள் எல்லாரோட மனசுலயும் நீ அப்டி இருந்ததைப் பத்தி உனக்குக் கவலையில்லே…இன்னைக்கு அந்த அமாவாசை அதை வாய்விட்டுப் பகிரங்கமாக் கேட்டதுதான் தப்பாப் போச்சு…..அதுதான் உன்னை உறுத்தறது…அப்டித்தானே…?

இத்தனை வருஷமா சம்பாதிச்ச பேரு எப்டி நிமிஷத்துல போயிடுத்து பார்த்தியா? அது திட்டமிட்டு நீ சம்பாதிச்சதில்லே…உன் இயல்பாவே இருந்தது. உன் ரத்தத்தோட ஊறினதாக் கெடந்தது. ரத்தத்தோட ஊறினதுன்னா அவனால எப்டித் தப்புப் பண்ண முடியுது….புராணத்துல பெரிய பெரிய ரிஷிகளெல்லாம் கூட தங்களோட தவ சிரேஷ்டத்தை சில அல்ப விஷயத்துல இழந்துடலையா…இது எம்மாத்திரம்….?

விரும்பிச் செய்தாலும், விரும்பாமச் செய்தாலும், தெரிஞ்சு செய்தாலும், தெரியாமச் செய்தாலும், சொல்லிச் செய்தாலும், சொல்லாமச் செய்தாலும், ஒரு முறை செய்தாலும், பலமுறை செய்தாலும், அடுத்தவாளுக்காகச் செய்தாலும், நமக்காகச் செய்தாலும், நிர்ப்பந்தத்துக்காகச் செய்தாலும், நிர்பந்தமில்லாமச் செய்தாலும், சூழ்நிலைல தடுமாறிச் செய்தாலும், சூழ்நிலை தெரிஞ்சே செய்தாலும், பகல்ல செய்தாலும், ராத்திரி செய்தாலும், தூக்கத்துல செய்தாலும், விழிப்புல செய்தாலும், வாயாலயும், மனசாலயும், எண்ணங்களாலயும், தப்பாச் செய்றதெல்லாமும் தப்புதான். தப்பு தப்புதான். வர்ர்ட்ட்ட்டா……….!!!

நெஞ்சு சற்று வேகமாய் அடித்துக் கொள்வது போலிருந்தது இவனுக்கு. அங்கேயும் இங்கேயும் கையை மாற்றி மாற்றி மார்பில் வைத்துத் தேடினான் அதை. மூளை கொதிப்பதைப் போலிருந்தது. ஒரு வேளை அங்கு போய் உட்கார்ந்திருக்குமோ? அதுதான் இந்தக் கொதிப்புக் கொதிக்கிறதோ? இரு கைகளாலும் தலையை அழுத்தமாய்ப் பிடித்துக் கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்தான்.

உனக்கெல்லாம் இது தேவையா?

எங்கிருந்தோ ஒரு அசரீரிக் குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருந்தது.

---------------------------------------------

கருத்துகள் இல்லை: