சிறுகதை தளம் - காலாண்டிதழ் - -ஜனவரி - மார்ச் 2025
பிரசுரம் “சான்று ”
அந்தம்மா தன் ரெண்டு குழந்தைகளையும் பாண்டிச்சேரில தன் தாயார்ட்ட விட்டுட்டு இங்க வேலை பார்க்கிறதாக்கும்…- அஞ்சனா பரிதாபப்பட்டதுபோல் கூறினாள்.
அடப்பாவமே…கேட்டியா நீ? ஒராளை விட மாட்டே
போலிருக்கு…!
அந்தப் பொண்ணை எனக்குப் பிடிக்கும். குழந்தை
மூஞ்சி…! அடிக்கடி தபால் கொடுக்க வருதே…ன்னு பேசிப் பார்த்தேன். குழந்தேளை அங்க விட்டுட்டு
இங்க வேலை செய்றது பாவம்….!
அவுங்க வயசானவங்களா இருப்பாங்களே…எப்டி
சமாளிப்பாங்க…? – புதிய செய்தி அளித்த சங்கடத்தோடு கேட்டார் மந்திரமூர்த்தி.
எப்டியாச்சும் சமாளிக்க வேண்டிதான். புருஷன்காரன்
டிரைவராம். டாக்சி ஓட்டுறானாம். ஏதாவது வெளியூர் டிரிப்னு இருந்திட்டே இருக்குமாம்….அவனாலயும்
பார்த்துக்க முடியாத நிலைமை….
அடக் கடவுளே…! அம்மா ஒரு பக்கம், அப்பா
ஒரு பக்கம்…இவுங்க ரெண்டு பேருக்கும் நடுவுலே அந்த கிழவி பொறுப்புல ரெண்டு குழந்தைகளா?….அடடடடா…!
படிக்குதாம்மா…?
ஆம்மா…ஒண்ணு மூணாம் கிளாசாம்…அடுத்தது
இப்பத்தான் ஸ்கூல் சேர்த்திருக்காங்களாம்…-பாவமா இருக்கு அவுங்களப் பார்த்தா….எனக்கு
அந்தப் பொண்ணைப் பார்த்தாலே இரக்கமா இருக்கும்…ஏதாச்சும் கொடுக்கணும் போல இருக்கும்….தண்ணி
குடிக்கிறீங்களான்னு கேட்டாக் கூட வேண்டாம்னுடும்…
ஏதாவது கொடுக்க வேண்டிதானே…?
நீங்க ஏதாச்சும் சொல்வீங்களோன்னுதான்…!
இதென்ன வம்பாப் போச்சு…? நான் என்ன சொல்லப்
போறேன்? என்னமோ எல்லாத்துக்கும் என்கிட்டே கேட்டுட்டுத்தான் செய்ற மாதிரி…?
அதுக்கில்லே….அடிக்கடி ரிஜிஸ்டர் தபால்
கொடுக்க வருது…நீங்களோ சும்மா புஸ்தகம் வாங்கிட்டே இருக்கீங்க? இந்த தீபாவளிக்குக்
கூட அதுக்கு ஒண்ணும் கொடுக்கல்லே…!
அது கேட்கலியே…? கேட்டாத்தானே கொடுக்க
முடியும்?
கேட்காட்டா என்ன? நீங்களாக் கொடுக்கக்
கூடாதா? வேண்டாம்னா சொல்லப் போறாங்க?
வலிய எப்டிறி கொடுக்கிறது. அது பொம்பளப்புள்ளயா
வேறே இருக்குது…ஏதாச்சும் தப்பா நினைச்சிக்கிடுச்சின்னா….?
ஆம்மா…தப்பா நினைக்கும்…நீங்க ரொம்பச்
சின்ன புள்ள பாரு…? அறுபத்தஞ்சு தாண்டியாச்சு… ….தப்பா நினைக்குமாம். உங்க பேத்தி மாதிரி
அது….!
என்னடீ…அதப் பேத்தின்னு சொல்லி என்னை
ஒரேயடியா தொண்டு கிழம் ஆக்குற? பொண்ணு மாதிரின்னாவது சொல்லு – மந்திரமூர்த்திக்கு நடுங்கித்தான்
போனது. அஞ்சனா சொன்ன வேகத்தில் பத்து வயசு கூடிப் போனது போலிருந்தது.
ஆமா…நா சொல்றதுல என்ன தப்பு? எத்தனையோவாட்டி
போஸ்ட் ஆபீசுக்கே போயி அந்தப் பொண்கிட்டே சொல்லி தபாலையும், பார்சலையும் வாங்கிட்டு
வந்திருக்கீங்க…ரோட்டுல எங்கயோ வழி மறிச்சி, புக் பார்சலை வாங்கினேன்னீங்க…அது வீட்டுக்குக்
கொண்டு வந்து கொடுக்கிறதுக்குள்ளே உங்களுக்கு பொறுமை இருக்கிறதில்லை….பாய்ஞ்சு பாய்ஞ்சு
பறந்து போய் பணம் கட்டி வாங்குற புக்ஸை இப்படி அள்ளிட்டு வர்ற ஆசாமியை நான் வேறே எங்கயும்
பார்த்ததில்லை…புஸ்தகமா வாங்கிக் குவிச்சாச்சு….சாகுறதுக்குள்ளே அத்தனையையும் படிச்சாகணும்
தெரிஞ்சிக்குங்க…சும்மா அடுக்கி வச்சு பூஜை போட்டா…அப்புறம் என்னை எதுவும் கேட்கப்படாது…எம்மேல
பழி சொல்லப்படாது…
என்னடீ இப்டி குண்டைத் தூக்கிப் போடுறே?
சாகுறதுக்குள்ளேன்னா….அது என் கையிலயா இருக்கு? திடீர்னு வாயப் பொளந்துட்டேன்னா? இதெல்லாத்தையும்
தூக்கி வேஸ்ட் பேப்பர்காரன்கிட்டே போட்டுடுவியா? நிறுவைக்குத்தாண்டி எடுப்பான் எல்லாத்தையும்….அஞ்சுக்கும்
பத்துக்கும் போடுறதுக்கா இப்டி அருமையான புத்தகங்களா வாங்கி அடுக்கி வச்சிருக்கேன்…அத்தனையும்
பொக்கிஷங்கள்டி…கொஞ்சம் கொஞ்சமாப் படிக்கத்தான் செய்வேன்….புஸ்தகங்கள் வாங்கினா அதை
அட்டை டூ அட்டை படிச்சாகணும்ங்கிற அவசியமில்லை…அதை முதல்ல தெரிஞ்சிக்கோ….ரசனை அடிப்படைல
படிக்கிறவன் அப்படிப் படிக்க மாட்டான்….வாசிக்கப் பழகிட்டவன் நல்லாவும் தேர்ந்தெடுப்பான்…
வேறே எப்படிப் படிப்பாங்களாம்? முழுசாப்
படிக்காம அங்கங்கே மேய்ஞ்சிட்டுப் போவீங்களா? அதுக்கா ஒவ்வொரு புக்கையும் இருநூறு முந்நூறு
கொடுத்து வாங்குறது?
சில புக்சு நம்ம மண்டைல உடனே ஏறாது. சிலது
பத்துப் பக்கத்துலயே இதுல ஒண்ணுமில்லைன்னு தெரிஞ்சி போகும்…மண்டைல ஏறாத புக்ஸை எடுத்து
வச்சிட்டுப் பிறகு எப்பவாச்சும் திரும்பப்
படிக்கிறதும், உதவாத புக்கை உடனே ஒதுக்கிறதும்தான் வாசிப்போட மகிமை. சிலது வேஸ்ட்தான்…மறுக்கலை….
உதவாத புக்குன்னு முதல்லயே தெரியாதா?
காசு கொடுத்து, தண்டம் அழுது, அப்பறம்தான் தெரியுமா? நல்ல கதையா இருக்கு? கைல வாங்கி
பிறகு தூக்கி எறியணுமா? இதென்ன சித்தாந்தம்? எப்டியோ போங்க…என்ன சொன்னாலும் கேட்கப்
போறதில்லே…உங்க ரூம் பக்கம் வந்தாலே எனக்கு பயங்கர அலர்ஜியா இருக்கு….எரிச்சல் எரிச்சலா
வருது….! என்ன பைத்தியமோ…?
எதுக்கு அநாவசியமா அலட்டிக்கிறே? நானென்ன
உன்னைப் படிக்கவா சொல்றேன்…? நீ உன் வழக்கப்படி
டி.வி.பாரு…சினிமா பாரு…உன்னை யாரு தடுத்தாங்க…? என்னை என் இஷ்டப்படி விட்ரு….
இஷ்டப்படி விடாம இப்பத் தூக்கி மடிலயா
வச்சிட்டிருக்கேன்…? அதான் சுத்திவரப் புஸ்தகத் தூசிகளோட விழுந்து புரண்டிட்டிருக்கீங்களே?
எதையோ பேச வந்து…எங்கோ சென்று விட்டதை
உணர்ந்தார் மந்திரமூர்த்தி. பெண்களுக்கு, அவர்களுக்குப் பிடிக்காதவைகளைச் செய்து விட்டால்
அதை அவ்வப்போது சொல்லிக் காண்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நம்மைப் பிச்சுப் பிடுங்குவார்கள்தான்.
அதில் ஒரு குரூர திருப்தி.
ராத்திரிப் படுக்கைக்குப் போகும்வரை டி.வி.
அலறிக் கொண்டிருக்கிறதுதான். நான் என்றுமே அதுபற்றி ஒரு வார்த்தை சொல்லியதில்லை. ஒரே
ஒரு முறை மட்டும் ஒன்று சொல்லியிருந்தேன். பேசாம இதை உன் ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடேன்…என்பதுதான்
அது. அவளோடு போகும் அந்தச் சத்தம். உறாலில் அலறிப் பிடுங்கி எதற்கு என்னையும் வந்து
பதம் பார்க்க வேண்டும்?
கேட்டாளில்லை. வீட்டில் டி.வி. அதுவும்
42 இஞ்ச் டி.வி. இருக்கு என்பதே பெருமையாயிற்றே? கௌரவத்தின் அடையாளம். அதைக் கொண்டு போய் மூலையில் முடக்க முடியுமா? முடக்குவது
போல்தான் அதில் எல்லாமும் வருகின்றன என்றாலும், டி.வி ஓடிக் கொண்டிருப்பது ஆட்கள் நிறைய இருப்பதுபோலான
ஒரு கலகலப்பை ஏற்படுத்துகின்றனவே? அதுதான் அவள் நினைப்பது. பாமர ஜனங்களைக் கட்டிப்
போட ஒரு பம்மாத்துக் கருவி.
ஒண்ணு செய்யி…நாளைக்கு அந்தம்மா வந்திச்சின்னா அதுகிட்டே லைஃப்
சர்டிபிகேட் போடணும்னு அந்த மெஷினைக் கொண்டாரச் சொல்லு…வெளில போய்ப் போடுறதுக்கு பதிலா
அந்தம்மாவுக்கு ஒரு சான்ஸ் கொடுப்போம்…செய்யுதா பார்ப்போம்….ஏதோ பைசா கொடுத்தாப்லயும்
ஆச்சு..!
தாராளமாப் போடலாமே…! இ. மையத்துக்குப்
போனா அங்கே கூட்டமா இருக்கும். காசும் கூடக் கேட்க வாய்ப்பிருக்கு. போஸ்ட் ஆபீஸ் மூலமும்
போடலாம்னு சொல்லியிருக்காங்கல்ல….ஸ்டேட் கவர்ன்மென்ட், சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஓய்வூதியர்கள்
எல்லாருக்கும் உண்டுதானே…வரச் சொல்லு…! இந்த முறை இவங்ககிட்டப் போட்டுத்தான் பார்ப்பமே..!.
நல்ல வேளை…இதையாவது சொன்னீங்களே…எங்கடா…நான்
ஊருக்குப் போறேன்…அங்க போய் டிரஷரில நேரடியா மஸ்டர் போட்டாத்தான் எனக்கு திருப்தி ஆகும்,
உறுதியாகும்னு அடம் பிடிப்பீங்களே…இப்பச் சொன்னதுவே போதும்….-
என்னை ஊருக்கு அனுப்பாமல் இருத்தி வைப்பதில்
அப்படி ஒரு திருப்தி அவளுக்கு. இந்தச் சென்னைக்கு வந்து இங்கயும் இருக்க மாட்டாமல்
ஊரில் மதுரையிலும் தங்க விடாமல் பத்து வருஷமாய் அல்லாடிக் கொண்டிருக்கிறேன் நான். வாழ்க்கையில்
பிடிப்பற்றுப் போன காலங்கள் இவை. அவனவனுக்கு அவனின் சொந்த ஊர்தான் உயிர். உடல்தான்
சென்னையிலிருந்ததேயொழிய மனசு பூராவும் எனக்கு மதுரையில்தான். இப்போது இந்த லைவ் சர்டிபிகேட்டையும்
இங்கேயே இருந்து போடத் தயாராகிவிட்டேனா…மீதிச் சந்தோஷமும் பறிபோனது. ஓய்வு பெற்ற பின்பான
வாழ்க்கை அத்தனை திருப்தியில்லைதான்.
மறுநாள் ….
அவுங்க வந்திருக்காங்க…லைவ் சர்டிபிகேட்
போட…. – அஞ்சனாவின் சத்தம் கேட்டு அறையில் படுத்திருந்த நான் திடுக்கிட்டு எழுந்தேன்.
காலை பதினோரு மணி வாக்கில் ஒரு குட்டித் தூக்கம் உண்டு எனக்கு. கூடாது என்றாலும் அந்த
வயசுக்கு அசத்தி விடுகிறதே…! ஏ கிழடு…போய்ப் படு என்று விரட்டுகிறதே…!
அதுக்குள்ளயுமா? என்றவாறே…அடிச்சிப் பிடிச்சு
எழுந்தேன். என் பென்ஷன் புக்கையும், பாங்க் பாஸ் புக்கையும், ஆதார் கார்டையும் எடுத்துக்
கொண்டு போய் நின்றேன். வீட்டினுள்ளே வந்திருந்தது
அப்பெண். அது யார் கூட இன்னொன்று?
இவங்களுக்குத்தான் சார் போடத் தெரியும்..
அதான் கூட்டிட்டு வந்திட்டேன்.
இங்க வச்சுப் போடுங்க…நீண்ட டேபிளைக்
காண்பித்தேன். விளக்கைப் போட்டேன். வசதியாய் அதில் வைத்து என் ஆதார் கார்டை வாங்கிப்
பதிவு செய்து பெயரையும் அதிலுள்ளதுபோல் எழுதி, பென்ஷன் நம்பரையும் ஏற்றி…அருகில் சின்னக்
குமிழ் போலிருந்த எலெக்ட்ரானிக் ஃபிங்கர் பிரின்ட் மெஷினில் என் கட்டை விரலை வைக்கச்
சொல்லியது. விரலைத் துடைத்துக் கொண்டு வைத்து
அழுத்தினேன்.
வயசாச்சின்னா ரேகை கூட அழிஞ்சிடும், தேய்ஞ்சிடும்பாங்க…அது
உண்மையாம்மா…? சில பேருக்கு விழறதில்லையே…? கண் விழி ஃபோக்கஸ்ல எடுக்கிறாங்க…? என்றேன்.
அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல சார்….ரேகையெல்லாம்
அழியாது. நல்லா பதியுற மாதிரி வைங்க…என்றது. கட்டை விரல் நுனி முழுதும் பதிவதுபோல்
பிடித்து அழுத்தியது. பதிவு விழுந்தது. பச்சை
லைட் எரிய , எடுத்திருங்க என்றது.
கொஞ்ச நேரத்தில் என் மொபைலுக்கு ஓ.டி.பி.
வர…நான் எண்ணைச் சொல்ல…அடுத்த சில நிமிடங்களில் உங்கள் லைவ் சர்டிபிகேட் கம்ப்ளீடட்…
என்று மெஸேஜ் வந்தது.
யப்பாடீ….நிமிஷமா முடிஞ்சி போச்சே…இதுக்கு எதுக்கு
இங்கேயிருந்து எடுத்துப் பிடிச்சு, மதுரைக்குக் கிளம்பிப் போயிட்டு…அம்புட்டுக் காசு
செலவு பண்ணி? .என்றேன் நான்.
உண்மையிலேயே மனது திருப்திப்பட்டுத்தான்
போனது. என் மனையாளுக்கு நான்தான் இ.மையத்திற்கு அழைத்துக் கொண்டு போய் வருடா வருடம்
லைஃப் சர்டிபிகேட் போட்டு வருகிறேன். ஆனால் எனக்குப் போடுவதற்கு ஊருக்குக் கம்பி நீட்டி
விடுவேன். இந்தச் சாக்கிலாவது ஊர் போய் வரலாமே…என்கிற ஆசைதான்.
ஒரு வாரம் பத்து நாள் இருப்பேன். நானே
சமைத்துக் கொள்வேன். நானே சாப்பிட்டுக் கொள்வேன் என்று சொல்லக் கூடாது. நான் சமைச்சதை
நான்தானே சாப்பிடணும்…! ஓட்டல் ஒத்துக் கொள்வதில்லை. ஒரு மாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
அவர்கள் சமையலும் பிடிக்காமல் போனது. எனக்குப் பிடிக்கிற ருசியில் அளவான உப்புக் காரங்களோடு,
குறைந்த புளிப்போடு, பக்குவமாய்ச் சமைக்கக் கற்றிருந்தேன். காசும் மிச்சம். உடம்பும்
பத்திரம். வேறென்ன வேலை வெட்டி முறிக்க? சில வங்கி வேலைகள் உண்டுதான். அதை நாளுக்கொன்றாக
முடித்துக் கொள்ளலாமே? என்ன அவசரம்? எவன் கேட்க? வீடு சுத்தம் செய்வேன். அதுதான் பிரதான
வேலை. சுத்தம் சுகம் தரும். சோறு போடும். பழகியாயிற்றே?
ஆனாலும் சுதந்திரமாய் இருப்பதைப் போலான
ஒரு சந்தோஷம் எங்கும் கிடையாதுதான். ஒன்றே ஒன்று. ராத்திரியில் தன்னந் தனியே படுத்திருக்கும்போது
கொஞ்சம் பயம் வரும்தான். கதவுத் தாழ்ப்பாளைத் திறந்து வைப்போமா என்று தோன்றும். அசந்து
தூங்கி விட்டால்? எவனாவது உள்ளே வந்து கதையை முடித்து விட்டால்? என்றெல்லாம் தோன்றும்.
எல்லா லைட்டையும் அணைத்து விட்டு கண்ணைத் திறந்து கொண்டு படுத்திருப்பேன். சிறு சத்தம்
கேட்டாலும் திடுக்கென்று உலுக்கும். யாரது? என்று வீராவேசமாய்க் கத்தியிருக்கிறேன்.
ஒருத்தனுமில்லைதான். இந்த ஓட்டாண்டியிடம் என்ன இருக்கப் போகிறது என்று தெரிந்திருக்கும்
போல… ஆனாலும் அந்த ஒரு வாரம் தனியே சுதந்திரமாய், விச்ராந்தியாய் இருப்பதற்கு ஈடு இணையே
கிடையாதுதான்.
எவ்வளவும்மா…..? என்றேன் பர்சைத் திறந்து கொண்டே.
எழுபது ரூபா சார்…என்றது அந்தப் பெண்.
ரூபாய் முன்னூறு எடுத்து நீட்டினேன்.
கூடவே சொன்னேன். நான் ஒரு வாட்டி கூட உங்களுக்கு எதுவும் கொடுத்ததில்லை. எத்தனையோ தடவை
நீங்க மணி ஆர்டர், புஸ்தகப் பார்சல் தந்துட்டுப்
போயிட்டே இருக்கீங்க…நான் எதுவும் தந்ததில்ல…மனசுக்குக் கஷ்டமா இருக்கும்…இந்தத் தீபாவளிக்குக்
கூட எதுவும் உங்களுக்குத் தரலை…இதை மறுக்காம வாங்கிக்கணும்….சந்தோஷமா வச்சிக்கணும்.
ஐயையோ…அதெல்லாம் வேண்டாம் சார்….லைன்ல
தபால் டெலிவரியின்போது அப்டியே இந்த ஏரியாவுக்கு வர்றதுதானே…கூடல்லாம் காசு வேண்டாம்…கட்டணத்
தொகை எழுபது மட்டும் கொடுங்க…போதும்….. – மறுத்தது அந்தப் பெண்.
இல்ல…பரவால்ல வச்சிக்குங்க…அப்பத்தான்
எனக்குத் திருப்தியாகும். இல்லன்னா என் பொண்டாட்டி என்னைத் திட்டுவா…அவதான் உங்களைக்
கூப்பிடச் சொன்னா…சும்மா வாங்கிக்குங்க…எங்க மனத் திருப்திக்காக…
நோ..நோ..நான் வாங்குறதில்ல சார்…இந்தம்மாவுக்கு
வேணும்னா கொடுங்க…அவுங்க எனக்காகத்தான் இன்னிக்கு வந்தாங்க…
அதென்ன…நீ வாங்க மாட்டேன்னா நான் வாங்கிப்பேன்னு
…? எழுபது மட்டும் கொடுங்க சார் போதும்….
– சொல்லியவாறே நான் நீட்டியவற்றில் ஒரு நூறை மட்டும் உருவிக்கொண்டு, மீதி முப்பதை எடுத்து
என்னிடம் பதிலுக்கு நீட்டியது அந்தக் கூட வந்திருந்த பெண்.
கொஞ்சம் தண்ணி மட்டும் கொடுங்க சார்…என்றது.
அஞ்சனா கொண்டு வந்து நீட்டினாள்.
குடித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு, வெயில் ரொம்ப ஓவர் சார்…என்றது அந்தப் பெண்.
கொஞ்ச நேரத்துல உங்களுக்கு ஒரு மெஸேஜ்
வரும் சார்…லைவ் சர்டிபிகேட் சக்ஸஸ்ஃபுல்னு…அப்டி
வரலேன்னா நாளைக்கு எங்களுக்கு ஃபோன் பண்ணுங்க…சரியா…? வா…போகலாம்….
நாங்க வர்றோம் சார்…. – அந்த இரண்டு பெண்களும்
பொருத்தமான சீருடையில் அடுத்தடுத்த தங்களது பணிக்காக திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருந்தார்கள்.
நான்தான் அவர்களைப் பார்த்தவாறே ஆச்சரியம் தாளாமல் நின்று கொண்டிருந்தேன்.
இன்னும் சிலர் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள்…! மனதுக்கு திருப்தியாய் இருந்தது.
சீனியர் சிட்டிசன்சுக்கு எவ்வளவு சுலபமாக்கி
விட்டார்கள் இந்த விஷயத்தை?. வீட்டை விட்டு வெளியேறாமல், இருந்த இடத்திலேயே, நின்ற
இடத்தில் நின்று கொண்டு வாழ்வாதாரச் சான்று போட்ட திருப்தி என் மனதில். பொசுக்கென்று
முடிந்து போனதே…!
வாழ்வாதாரம் என்பது வெறுமனே நாட்களை எட்டி உதைத்து
பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பதிலா இருக்கிறது? அதன் ஆதாரம் காசிலா, மனதிலா? சீரான
வாழ்க்கைக்கு சான்று அதன் நடத்தையிலா அல்லது பணத்தை வைத்தா? அந்தப் பணியாளர்களின் கடமையுணர்ச்சியும்
நேர்மையும் என்னைச் சிந்திக்க வைத்திருந்தது.
----------------------------------