20 மே 2019

“சிறுகதை” உஷாதீபன், “கா ய ம்”


“சிறுகதை”            உஷாதீபன்,         “கா ய ம்”


சொந்தக்காரனேயானாலும் மனசுல நெருக்கமா நினைச்சிட்டு அவுங்ககிட்ட யதார்த்தமாப் பேசிடக் கூடாது…..- பூங்காவுக்குள் நுழையும்போதே தன்னை நோக்கி இப்படிச் சொல்லிக் கொண்டே கோபமாய் வந்த பாலச்சந்திரனை மெல்லிய புன்சிரிப்போடு எதிர்கொண்டார் விநாயகம்.
     ஜாலியான மனுஷன். எதற்கும் அலட்டிக் கொள்ளாத போக்கு. ஆனால் ஒன்றுமில்லாததையெல்லாம் பெரிசாய் நினைத்து வருந்தும் மனது. அப்போ அலட்டிக் கொள்வதாகத்தானே அர்த்தம்…கேட்டால் ஒப்புக் கொள்ள மாட்டார். அதெல்லாம் நான் மேல போட்டுக்க மாட்டேன்…இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்ருவேன் என்பார். சொல்லிவிட்டு உடனே புலம்புவார்.
     பாலச்சந்திரனுக்கென்று ஏதாவது பிரச்னை இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதைப் பிறர் உணர முடியும். அவரைப் பொறுத்தவரைதான் அவைகளைப் பிரச்னை என்றே அவர் நினைப்பதில்லையே…? ஆனால் இன்று அப்படித் தெரியவில்லை. ஏதோ பொறுக்க மாட்டாமல்தான் கிளம்பி வந்திருப்பவர் போல் தென்படுகிறார். யாரிடமேனும் கொட்டியாக வேண்டும் என்கிற உத்வேகம், படபடப்புத் தெரிகிறதே…!
     என்ன….விநாயகம் சார்…நான் சொன்னதுக்கு பதில் எதுவும் சொல்லலியே…!  என்றார்.
     என்னவோ சொன்ன மாதிரி இருந்தது. சரியாக் காதுல வாங்கலை…. திரும்பத்தான் சொல்லுங்களேன்…..என்றார் இவர். மனுஷன் கோபப்பட்டு விடுவாரோ என்கிற பயம்.
     அதான்யா….சொந்தக்காரனே…!..வேண்டாம்…சொந்தச் சகோதரனேயானாலும் அவன்ட்டக் கூட யதார்த்தமாப் பேசிடக் கூடாது….நல்லாப் புரிஞ்ச அண்ணன்தானேன்னு நினைச்சோம்னா…அதுவே விபரீதமாப் போயிடவும் வாய்ப்பிருக்கு… நம்மச் சுத்தியிருக்கிற எல்லாரும் நம்மள சரியான கோணத்துல புரிஞ்சிட்டிருப்பாங்கன்னு முடிவு பண்ணிட முடியாதாக்கும்…விபரீதம் எப்பயும், எந்த ரூபத்துலயும் வரலாம்…..பல ரூபங்கள்….!!
     பீடிகை பலமா இருக்கு இன்னிக்கு? எதாச்சும் திகிடு முகடாக் காயம் பட்டுப் போச்சா….? விபரீதமங்கிறீரு….?
     கரெக்டா சொன்னீங்க…உண்மைலயே பெரிய காயம்தான்….பெருங்காயம்….ஆனா என்பேர்ல ஒண்ணும் தப்பில்லே….என் பேச்சை எதிராளி புரிஞ்சிக்கிட்டதுதான் தப்பாப் போச்சு…அதாவது எங்க அண்ணாச்சி…!.ஒண்ணு கவனிச்சீரா….வாழ்க்கைல பரஸ்பரம் வெளிப்படையாப் பேசுறதுனாலயும் பிரச்னை வருது…பேசாமப் போகுறதுனாலயும் பிரச்னை வருது. உடைச்சுப் பேசினா…திமிர் பிடிச்சவன்னு பேர்கட்டி ஒதுக்கிடுறாங்க….பேசாம விட்டா… தப்பாப் புரிஞ்சிக்கிறாங்க….இந்தக் கருமாந்திரத்துக்கு என்ன செய்றது? செவுத்துல போய் முட்டிக்க முடியுமா?
     வீட்டுக்கு வீடு வாசப்படிய்யா…இதெல்லாம் எல்லார் வீட்லயும் இருக்கிறதுதான்..சகஜமான விஷயம்தான்…உமக்கு மட்டுமா? …..அங்கங்க நாறிப் போய்த்தான் கெடக்கு….
     தன் பதிலில் ஏதோ கொஞ்சம் சமாதானம் அடைந்தவர்போல் பாலச்சந்திரன் சத்தமாய்ச் சிரித்தது இவருக்கே என்னவோபோல் இருந்தது.    நல்ல இருட்டு படர்ந்திருந்தது. ஒருவர் பூங்காவினுள் இருந்த எல்லா லைட்டுகளையும் வரிசையாக எரிய விட்டுக் கொண்டிருந்தார். ஒருவர் பூச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.  மாலை மணி ஏழானால் போதும்…கூட்டம் நிரம்பி விடும். எல்லா பெஞ்சுகளையும் சீனியர் சிட்டிசன்கள் நிறைத்துக் கொள்வார்கள். இன்னும் கூட நாலஞ்சு இருக்கைகளைப் போடலாம்தான். குழந்தைகளை அழைத்து வரும் பெண்மணிகள் அவர்களை விளையாட விட்டு…அங்கங்கே திட்டுகளில் அமர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். மூச்சிறைக்க ஒரு ஓரத்தில் வயதான ஒருத்தர் யோகப் பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்தார்.
     விஷயம் என்னன்னு சொல்லலியே….! – தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு கேட்டார் பாலச்சந்திரனிடம்.
     …சொல்றேன்…இன்னைக்கு மனம் விட்டுப் பேசினாத்தான் என் மன பாரம் குறையும்…யார்ட்டயாவது கொட்டியே ஆகணும்….அவ்வளவு வேதனை பத்துப் பதினஞ்சு நாளா…..? பாலச்சந்திரனின் கண்கள் கலங்கியிருந்தன. கை முடிகள் சிலிர்த்தன. காதுக்குள்ளிருந்து புகை வெளிப்படுவதுபோல் ஒரு பிரமை….ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டார்.
     ஏன்…? ஒரு மாதிரி ஆயிட்டீங்க…? என்னாச்சு…? என்ற இவர் அவர் தொடையில் ஆதுரமாய்க் கை வைத்தார். பற்றிக் கொண்டார் பாலச்சந்திரன்.
     அம்மாவை ஊருக்குக் கொண்டு விட்டாச்சு தெரியுமோ….? – இதைச் சொன்னபோது அவர் உதடுகள் நடுங்கியது. கிட்டத்தட்ட அழுதே விட்டார்.
     என்னங்காணும் சொல்றீர்….? இங்கயே இருக்கிறதுக்குத்தானே வந்தாங்க…? பிடிக்கலையா? – அதிர்ந்து போய்க் கேட்டார் விநாயகம். ஒரு மாதம் கூட இருக்காதே…என்று தோன்றியது.
     எங்கம்மா வர்றாங்க…இனிமே இங்கதான் வச்சிக்கப் போறேன்… என்கிட்டே இருக்கப் பிடிக்கும்…பழைய கதையெல்லாம்  உருகி உருகிச் சொல்வாங்க…எத்தனையோ சொல்லியிருக்காங்க…பாலக்காட்டுல இருந்த கதைகள் அநேகம். பெறகு கல்யாணம் முடிச்சு பட்ட கஷ்டங்கள்னு அடுக்கடுக்கா….இருக்கிற நாளை சந்தோஷமா வச்சிக்கணும்…என் ஒய்ஃப்பும் சரின்னு சொல்லியிருக்கா….இப்பத்தான் அவளுக்கே அந்த மெச்சூரிட்டி வந்திருக்கு…அதுல எனக்குப் பெரிய்ய்ய்ய சந்தோஷம்…மனுஷங்க முதிர்ச்சியடையறபோது ஏற்படுற அழகே தனி.…….அப்போ அவங்க உபயோகப்படுத்துற வார்த்தைகள்தான் அதுக்கு சாட்சி….இந்த முறை என் மனைவிட்ட அதைப் பார்க்கிறேன்….-பாலச்சந்திரன் எவ்வளவு அனுபவித்து இதைச் சொன்னார்?  அதற்குள் இப்படி ஒரு கேடா…?- கலக்கத்தோடு பார்த்தார் விநாயகம்.
     அவங்களுக்குப் பிடிக்காமெல்லாம் இல்ல….அதான் டாக்டரை வீட்டுக்கே அழைச்சிட்டு வந்து பார்க்கச் சொல்லி…ஊசி போட்டு…வேளா வேளைக்கு மருந்து எழுதிக் கொடுத்து….தவறாமக் கொடுத்திட்டுத்தானே இருந்தேன்….என் ஒய்ஃப்பும் பிரியமாத்தான் கவனிச்சிட்டிருந்தா….கடைசி வரைக்கும் அம்மா இங்கயே இருக்கட்டும்னு சொன்னாளே….அப்டித்தானே ஓடிட்டிருந்தது….அதுக்கு வினை வந்திடுச்சு….
     அப்டீன்னா…..?
     அங்கதான் சிக்கலே வந்ததுங்கிறேன்….ராத்திரி பூராவும் தூக்கம் வராமப் புலம்பிட்டே இருந்தாங்களா….பாத்ரூமுக்கு வேறே அடிக்கடி வந்திருது…பெட்ஃபேன் வச்சிருக்கேன்…அதை எடுத்து வச்சிப் போகத் தெரில…நம்மைக் கூப்பிடவும் கூச்சம்… .படுக்கை நனைஞ்சி போயிடுது….துணி மாற்ற வேண்டியிருக்கு….இடம் நாற ஆரம்பிச்சிடுது…டெட்டால் போட்டுத் துடைக்க வேண்டியிருக்கு….இப்டிப் பொழுது போயிடுதா….விடிஞ்சி போகுது…..நம்ம அம்மாவுக்குத்தான் செய்றோம்னு வச்சிக்குங்க…ஆனாலும் தொடர்ந்து ராத்திரித் தூக்கம் முழிக்கிறதுங்கிறது முடில….பகல்ல வேறே நாமதான் பார்க்க வேண்டியிருக்கு… சமாளிச்சிட்டேன்னு வச்சிக்குங்க….யாராச்சும் கூட இருந்தாப் பரவால்லன்னு தோணிச்சு….என் ஒய்ஃப்புதான் ஏற்கனவே தெரியுமே உங்களுக்கு…ப்பி. பீ….ஷூகர் எல்லாம் உண்டுன்னு….அவளால ராத்திரி முழிக்க முடியாது…அத்தோட மறுநாள் ஆபீஸ் போயாகணும்…இப்டி சூழ்நிலைலதான் மாத்தி மாத்திப் பார்த்துக்கிறதுக்கு ஒருத்தர் இருந்தாத் தேவலைன்னு  நினைச்சேன்…
     திருச்சில இருக்கிற உங்க  நடு அண்ணாச்சியக் கூப்டுக்க வேண்டிதானே….அவரும் ஓய்வு பெற்றவர்தானே….?
     அதான்…அந்த யோசனைலதான்…ஆனா ஒண்ணு…அவராலயும் ராத்தூக்கம் முழிக்க முடியாது….மாத்திரை போடுறவரு… பகல்ல பார்த்துக்கிடுவாரு…ஆனாலும் .வரச்சொன்னேன் அவரும் வந்திட்டாரு….சரியாப் போச்சு….இதுல என்னா பிரச்னைன்னா….அவரும் வந்தா நல்லாயிருக்கும்னு நான் எங்க பெரியண்ணன்ட்டப் பேசினேன் பாருங்க…அதுலதான் விபரீதமே வந்துடுச்சு….
     என்னன்னு….?
     நா சொன்னேன்…..நாலஞ்சு நாளா ராத்தூக்கமில்லே எனக்கு….பயங்கர டயர்டா இருக்கு….தொடர்ந்து வி்டாமத் தூக்கம் முழிச்சதுல…செத்துருவேம் போல்ருக்கு….அந்தளவுக்கு மோசமாயிருக்கு….யாராச்சும் ஒருத்தர் துணைக்கு இருந்தாப் பரவால்லன்னேன்…எங்க திருச்சி அண்ணனை மனசுல வச்சித்தான் சொன்னேன்னு வச்சுக்குங்க…அவரால ராத்தூக்கம் முழிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்….பகல்ல அவர் பார்த்துக்கிட்டாருன்னா நாம கொஞ்சம் தூங்கிக்கிடலாமேன்னு நினைச்சுத்தான் அப்டிச் சொன்னேன்….மாற்றி மாற்றிப் பார்க்கலாம்ல…. யதார்த்தமா, பேச்சோட பேச்சா “செத்துருவேம் போல்ருக்குன்னு” சொன்னேன் பாருங்க…அதுதான் பெரிய  தப்பாப் போச்சு….ஒருத்தர் துணைக்கு இருந்தாத் தேவலைங்கிற விஷயத்தோட அழுத்தத்துக்காகச் சொன்ன வார்த்தை அது…! யதார்த்தமா, தானே வாயில வந்தது… அதுக்கு மேலே அதைத் தனியாப் பிரிச்சுப் பார்க்க எதுவுமில்லே….ஆனா….அதை அப்டியே அர்த்தம் பண்ணிட்டாரு அவுரு….!
     இதுல என்னயிருக்கு…? சாதாரணமாப் பேச்சு வாக்குல எல்லாரும் சொல்றதுதானே….? அது ஒரு குத்தமா? பேச்சுக்கு நடுவுல சொல்றதையெல்லாம் பிரிச்சு எடுத்து வார்த்தைக் குற்றம் கண்டு பிடிக்கிறதுன்னா…ஒருத்தருக்கொருத்தர் சகஜமாப் பேசுறதுங்கிறதையே தொடர முடியாதே…? பரஸ்பரம் பேசிக்கிறதுல மனுஷங்களுக்குள்ள எல்லாந்தான் வந்து விழும்….சில கெட்ட வார்த்தைகள் கூட புழக்கத்துல சமயங்கள்ல வந்து விழுந்துடும்…
     உமக்குப் புரியுது…ஆனா எங்க பெரியண்ணனுக்குப் புரியலையே…அவுங்கவுங்க குடியிருக்கிற, பழகுற, வாழ்ற ஊருக்குத் தகுந்த மாதிரி, ஆட்களுக்குத் தகுந்தமாதிரி…இடத்துக்குத் தகுந்த மாதிரிப் பேச்சும் மாறத்தானே செய்யும்… வார்த்தைகளை யூஸ் பண்றது கூட ஆளுக்கு ஆள்….ஊருக்கு ஊரு…மாறத்தான் செய்யுது….அது போல செத்துருவம் போல்ருக்குன்னு யதார்த்தமா, .இயல்பா ஒரு வார்த்தை சொல்லிட்டது தப்பாப் போச்சுய்யா….எங்கயாவது இந்த அநியாயத்தைப் பார்த்திருக்கீங்களா? பிடிச்சிக்கிட்டாரு அந்த வார்த்தையை….?
அம்மாவ வச்சுப் பார்க்குறதுக்கு செத்துருவேங்கிறான்… தாயார் செத்தா பரவால்ல போல்ருக்கு… நான் எத்தனை காலம் அப்பாவ வச்சிப் பார்த்தேன்… அம்மா அங்கயிருக்கட்டும்னு அனுப்பிச்சது தப்பாப் போச்சு…பெத்த தாயாரை வச்சுப் பார்க்க மனசில்லே…போய் ஒரு மாசம் கூட ஆகல்லே…அதுக்குள்ள அழறான்….இவன் செத்துருவானாம்…இப்டிச் சொல்ல வெட்கமில்ல பாரு….ன்னு பிடி பிடின்னு பிடிச்சிக்கிட்டான்….
     செத்துருவேம் போல்ருக்குன்னு பேச்சுப் போக்குல சொன்னேன்…இல்லேங்கில…ஆனா அம்மாவ வச்சிக்க மாட்டேன்னு சொன்னேனான்னு நீங்க கேட்டுற வேண்டிதானே…? அதையேன் கேட்காம விட்டீங்க…?
     கேட்கத்தான் செஞ்சேன்….உனக்கு என்னவோ உறுத்தியிருக்கு…அதுக்கு நான் என்ன பண்ணட்டும்னு சொல்லிட்டேன்…உன் அவசரம் எனக்குப் புரியலைன்னு சொல்லிட்டேன்…சரி…பேச்சை விடுன்னு தடுத்திட்டாரு….…இதெல்லாம் என்கிட்டே சொன்னாலும் பரவால்லே….திருச்சி அண்ணன்ட்டச் சொல்லி….அதே மூச்சுல இன்னைக்குச் சாயந்திரமே ஒரு ஆம்புலன்ஸ் பிடிச்சு…நாளைக்குக் காலைல அம்மாவை சென்னை கொண்டு வந்து சேர்த்தாகணும்னு உத்தரவு வேறே…. என்னா கோபம்ங்கிறீங்க…..? மனுசங்க உலகத்தைப் படிக்கணும்னு சொல்வாங்க…அப்பத்தான் சமுதாயத்துல புழங்குற வார்த்தைகளைக் கூட  சரியா அர்த்தம் பண்ணிக்க முடியும்….சாதாரணப் பேச்சு வழக்குல என்னென்ன வார்த்தைகள் புழங்குது…அதுகளுக்கு எப்டியெல்லாம் பொருள் விலையில்லாமப் போகுது…. ஒரு வேகத்துல பேசிடுற வார்த்தைக்கெல்லாம் அப்டி அப்டியே அர்த்தம் கொள்ளக்கூடாதுங்கிறதே ஒரு பக்குவம்தானே…! அதத்தான் நா வர்றபோதே சொன்னேன்….சொந்தச் சகோதரனே ஆனாலும் ஜாக்கிரதையாத்தான்  பேசணும்னு….எவன், எதை, எப்போ, எப்டி அர்த்தம் பண்ணிப்பான்னு எவனுக்கும் தெரியாது? இத்தனைக்கும் தேர்டு பர்சன்கூட இல்லை….ஓன் ப்ரதர்….நம்ம தம்பி அப்டிச் சொல்லியிருப்பானாங்கிற புரிதல் வேண்டாம்? இதுக்குத்தான்யா இலக்கியம் படிக்கணும்ங்கிறது…மனுஷனப் பக்குவப்படுத்துற சக்தி இலக்கியத்துக்குத்தான் உண்டு….இதெல்லாம் சொன்னா எவன் கேட்கறான்?கதை படிச்சாப் போதுமாம்பான். பொழுதைப் போக்குற கதையா நினைக்கிறான் அதை. வெறும் கதை வேறே…இலக்கியம் வேறேன்னு எவனுக்கும் பிரிச்சுப் பார்க்கத் தெரில…வாசிப்பு அனுபவத்துலதானே அது தெரியவரும்… எல்லாப் பயலுகளும் சராசரியாத்தான் கெடக்குறானுங்க….! அப்டித்தான் இந்த வினை வந்தது எனக்கு….
இலக்கியம் படிக்காட்டி என்ன? சமூகப் பழக்க வழக்கங்கள் போதுமே…! மனுஷாளப் பழகியிருப்பாருல்ல….அதுல நிறையக் கத்துக்கிட்டிருக்கலாமே…சரி… விடுங்க…அப்புறம் என்ன பண்ணினீங்க….? அதச் சொல்லுங்க….
     நாங்க ரெண்டு பேரும்தான் தேடிப் போயி ஆம்புலன்ஸ் பிடிச்சோம்…அதுக்கே சென்னைலருந்து ஃபோன்ல பேசி எந்த ஏரியான்னு கண்டு பிடிச்சு, குறிப்பிட்ட வண்டியச் சொல்லி வச்சு அதையும் ஏற்பாடு பண்ணிட்டாருன்னா பார்த்துக்குங்களேன்…நாங்க போய் விசாரிக்கிறோம்…சென்னைலர்ந்து பேசினாங்களே…அவுங்களா சார்ங்கிறான் டிரைவர்…ராவோட ராவா அடிபிடின்னு  கிளம்பியாச்சு…..எங்கம்மாவுக்கானா சந்தோஷம்…பெரியவன் திரும்பக் கூப்பிட்டுட்டான்னு…இங்க அனுப்பிச்சதுல அம்புட்டு வருத்தம் அவங்களுக்கு…இருந்தாலும் நான் நல்லாப் பார்த்துப்பேன்ங்கிற நம்பிக்கை….ஆனாலும் அங்கிருந்து அனுப்பிச்சதுல அப்டியொரு புலம்பல்….என்னை இப்டி அனுப்பிட்டானேன்னு….நான்  இருக்கிறது ஒரு பாரமாப் போச்சான்னு…! எதைன்னு சொல்லச் சொல்றீங்க….? வந்தாச்சு…இருந்தாச்சு…கிளம்பியாச்சு….கண் மூடிக் கண் திறக்குறதுக்குள்ள எல்லாம் நடந்து போச்சு….பழி என் மேலே….மூத்தவன் சொல்றதுதானே நியாயமாப் படும் உலகத்துக்கு…?
     திரும்பக் கொண்டு போய் விட்டிட்டு வந்திட்டீங்கள்ல….விடுங்க….விடுங்க…பிரச்னை முடிஞ்சிது….உங்க அண்ணாச்சிக்கு நீங்க
ஊகிச்ச மாதிரி என்னவோ ஒரு உறுத்தல்…அதனாலதான் இத்தனை வேகம்…!
     என்ன சொல்றீங்க….?
     சொல்றதென்னத்த…அது அப்டித்தான்….அவர் தனக்குத்தானே செய்துக்கிட்ட தப்பு…அதை உடனடியா சரி பண்ண நினைச்சிருக்காரு….அதுக்கு உங்க தலை உருண்டிருக்கு…அவ்வளவுதான்…..நீங்க மாட்டிக்கிட்டீங்க…கடைசித் தம்பியாப் போயிட்டீங்களா…வசதியாப் போச்சு….ஈஸியாப் பேசலாமே…?
     தான் ரொம்பவும் யோசித்துப் புரிந்து கொண்டதை அவர் சட்டென்று உணர்ந்து கொண்டு விட்டதாய்த் தோன்றியது பாலச்சந்திரனுக்கு. அனுபவ முதிர்ச்சி, எண்ண முதிர்ச்சி என்பது நம்மிடம் மட்டும்தான்…என்று நினைப்பதுபோல் ஒரு அறியாமை எதுவுமில்லை. வெட்கமாயிருந்தது இவருக்கு.
     அதிகபட்சம் இன்னும் சில மாசம் இருப்பாங்களா உங்க தாயார்…அவ்வளவுதான்…அதுக்குள்ளயும் இந்தத் தப்பைப் பண்ணிட்டமேன்னு அவருக்கு மனசாட்சி அறுத்திருக்கு…உங்க அம்மாவுக்கும் பல வருஷமாப்  பழகின எடமா அது….பலரும் வீட்டுக்கு வந்து பெரியவங்க இருக்காங்களான்னு கேட்டு நலம் விசாரிச்சிட்டு, வணங்கிட்டுப் போகிற  இடமா இருந்திருக்கு….அவுங்களுக்கும் இப்ப பதில் சொல்ல வேண்டிய கட்டாயம்…..அதுல யாரேனும்….என்ன இப்டி கடைசி காலத்துல போய் உங்க அம்மாவ அங்க அனுப்பிட்டீங்கன்னு கேட்டிருக்கலாம்…நீங்க வச்சிக்கிட வேணாமா…?ன்னு ஒரு கேள்விய பேச்சு வாக்குல போட்டிருப்பாங்க…ஏன்னா வீட்டுக்கு மூத்தவருல்ல….அது இவரைப் பலமா பாதிச்சிருக்கும்… யோசிக்க வச்சிருக்கும்…. தப்புப் பண்ணிட்டமேன்னு  சங்கடப் பட வச்சிருக்கும்…அந்தச் சமயம் பார்த்துத்தான் உங்க பேச்சு….“செத்துருவேம் போல்ருக்கு…”.அதப் பலமாப் பிடிச்சிக்கிட்டாரு….. ….! அவர் செஞ்ச தப்பைப் பின்னே எப்டி மறைக்கிறது? மூத்தவராச்சே…! போதாக்குறைக்கு ரொம்ப கௌரவம் பார்க்கிறவருன்னு வேறே சொல்றீங்க… எப்டி உடனடியாச் சரி பண்றது?  மனுஷனுக்கு வயசாயிடுச்சின்னா தப்பே பண்ணக் கூடாதுன்னு இருக்கா? இல்லே…எந்தத் தப்புமே பண்ணாத…உறன்ட்ரட் பர்சன்ட் மெச்சூரிட்டியோட ஒருத்தன் இருந்துடத்தான் முடியுமா? உங்ககிட்டே அனுப்பிட்டு, உடனே திரும்ப அழைச்சிக்கணும்னா…அதுக்கு ஒரு பலமான காரணம் வேணும்ல….? அந்தக் காரணத்துல அவரோட தப்பு, தானே காணாமப் போகணும்ல….? அதுக்குத்தான் அந்த “செத்துருவேம்போல….” …இப்பப் புரிஞ்சிதா…..? ஒண்ணு நல்லாத் தெரிஞ்சிக்குங்க…எந்த மனுஷனுமே நூத்துக்கு நூறு நேர்மையாளனா இருந்திட முடியாது…தன்னை பாதிக்காத வரைக்கும்தான் நேர்மை…நியாயம்ங்கிறதெல்லாம்….பெரிய ஞானிகளுக்குக் கூட அப்டித்தான்…..அவுங்களைப் பாதிக்குதுங்கிற போது அத்தனை வருஷமா வாயைத் திறக்காதவங்க….பேச ஆரம்பிப்பாங்க….அப்போ சாதாரண மனுஷனோட பேச்சுப் போலத்தான் அதுவும் இருக்கும்…அதுக்கும் கீழ கூடத் தரம் தாழ்ந்து போகலாம்….உங்க அண்ணாச்சிக்கு நீங்க ஒரு சாக்காப் போனீங்க…அவ்வளவுதான்….
     ரொம்பக் கேவலப் படுத்திட்டாருங்க…குறைஞ்ச பட்சம் என் வயசைக் கூட நினைக்கலை….விடிகாலைல அஞ்சரைக்கு வீட்டு வாசல்ல ஆம்புலன்ஸ் போய் நின்னுடிச்சு… அம்மாவக் கொண்டு இறக்கியாச்சு….எங்கண்ணன் சொல்றாரு…..நீ புறப்படு ஊருக்கு..…நீ இருன்னு என்னையும் திருச்சிக்காரரையும் பார்த்துச் சொல்றாரு….வந்து அரை மணி கூட ஆகலைங்க…உடனே கிளம்புன்னுட்டாரு என்னை…. பார்க்கவே பிடிக்காதவர் போல நடந்துக்கிறாரு…எவ்வளவு கேவலம்ங்கிறீங்க….? ராத்திரி பூராவும் தூக்கம் முழிச்சு, உட்கார்ந்தமேனிக்கே அம்மாவப் பார்த்துக்கிட்டு வந்திருக்கானே…ஒரு நாளைக்கு இருந்திட்டுப் போகட்டும்ங்கிற சராசரி மனுஷனுக்கான இரக்கம் கூட இல்லைங்க…ஜென்மப் பகை போல கிளம்பு…கிளம்புன்னு விரட்டிட்டாரு….
     ஒரு வேகம் வந்தா எல்லாரும் அப்டித்தான்….ப்ரதர்தானே…விடுங்க…மனசுல வச்சிக்காதீங்க… - விநாயகம் பாலச்சந்திரனை சமனப் படுத்த முயன்றார்.
     அம்மாட்ட நான் ஊருக்குக் கிளம்பறேங்கிறேன்… …ஈனக் குரல்ல…இன்னைக்காவது இருந்திட்டுப் போகக் கூடாதா….உடனே கிளம்பணுமா…ங்கிறாங்க….அதயும் கேட்டுட்டு பின்னால நிற்கிறாரு…..சொல்றாங்கல்ல…இருந்திட்டுப் போன்னு ஒரு வார்த்தை சொல்லலைங்க…..? என் மனசு எப்டிக் கொதிச்சிருக்கும்…? கூனிக் குறுகிப் போனேன்….பையை எடுத்திட்டுக் கிளம்பறேன்….பின்னாடியே வாசல் வரைக்கும்  வந்து படீர்னு கேட்டை மூடி கொண்டியைப் போடுறாரு…மூஞ்சில அடிச்ச மாதிரி…..ஒரு அநாதப் பய போல அந்த வீட்டை விட்டு  வெளியேறினேன் அன்றைக்கு….அண்ணியாகட்டும்……ஒரு வார்த்தை தடுத்து சொல்லலை….சொல்ல வேண்டிய நேரத்துல தேவையானதைச் சொல்லாம விடுறதும், அமைதி காக்குறதும் கூடத்  தப்புதானேங்க…? மகாபாரதத்துல படிச்சிருக்கோம்ல…அதுல படிச்சித்தான் தெரியணுமா? நடைமுறை அனுபவம் இல்லியா?  வயிற்றெரிச்சல் தாளலீங்க...என்ன அநியாயம்ங்கிறீங்க…? இப்டியொரு கேவலத்தை என் வாழ்க்கைல நான் இதுவரை சந்திச்சதே இல்லை… அப்டிக் கேவலப்படுத்திட்டாரு…..அண்ணனாவது…தம்பியாவது….எல்லாரும் சராசரிக்கும் கீழான மனுஷங்கதான்…ஆயுசுக்கும் எனக்கு மறக்காது இது…..
     விடுங்க…விடுங்க…..அவரோட தப்பை மறைக்கிறதுக்கு உங்களை வசமாப் பயன்படுத்திக்கிட்டிருக்காரு…அவ்வளவுதான்….வீட்டுத் தலைமைங்கிற முறைல அது எதிர்க்கப்படலை…இத்தனை காலம் அப்பாம்மாவை வச்சுப் பார்த்திருக்காருங்கிற முறைல அந்தச் சலுகையாவது அவருக்கு வேண்டாமா? யாரும் வாயைத் திறக்காததுக்கு அதுதான் காரணம்….
     அதேதாங்க…வீட்டுக்குப் பெரியவரான அவர் சொல்றதுதானே எடுபடும், நிற்கும்…எல்லாரும் என்னைத்தானே தப்பா நினைப்பாங்க…. …நினைச்சிட்டாங்க….என் தங்கச்சி கேட்குது…நீ அம்மாவ வச்சிக்க மாட்டேன்னு சொன்னியாமே…நான் செத்துடுவேன் போல்ருக்குன்னு சொன்னியாமேங்குது…அப்டியே போய்ச் சொல்லியிருக்காருங்க…என்ன மெச்சூரிட்டி பாருங்க ….அண்ணியோட அசட்டு யோசனையைக் கேட்டு யோசிக்காமத் தப்புப் பண்ணிட்டு, தவியாத் தவிச்சு…எம் மேலே பழியைப் போட்டு…தான் எப்டித் தப்பிச்சிக்கிட்டார் பாருங்க…..என்ன படிச்சு என்ன பண்ணங்க…? நல்ல மனசு இல்லையே…! அவன் அப்டிச் சொல்வானான்னு ஒரு கணம் யோசிக்கலையே…! தான் பண்ணின தப்பை மத்தவங்க உணர்றதுக்கு முன்னாடியே சரி பண்ணிடனும்னுதானே நினைச்சிருக்காரு…அதுல இருந்த அவசரம் அதைக் காண்பிச்சுக் கொடுத்திருதா இல்லியா…? மனசாட்சி கூட சுய நலமாத்தான் யோசிக்கும்ங்கிறதுக்கு இதுக்கு மேலே என்ன உதாரணம் வேணும்….-சொல்லி முடித்தார் பாலச்சந்திரன். மடை திறந்த வெள்ளம் முழுதுமாய் வடிந்திருந்தது இப்போது….!
     கண்கள் பொங்கிக்  கலங்க அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் திடீர் அமைதி நிலவியது. புண்பட்ட மனசு. அடிபட்ட புறா… …தத்தித் தத்தி அடைக்கலம் தேடிக் கொண்டிருக்கிறது.  தீராக் காயமாக மாறி விடும் அபாயம்…உண்டுதான்….!
     காலம்தான் அதை நிர்ணயம் செய்ய வேண்டும்.
     தண்ணீர் குடிங்க…. – சொல்லிக் கொண்டே பாட்டிலை நீட்டினார் விநாயகம்.
     இப்போதைக்கு மனசை ஆத்துறதுக்கா?….காயம்யா அது .!!! -- சோகம் கலந்த புன்னகையோடு சொன்னார் பாலச்சந்திரன்.
                          ------------------------      
    

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...