11 அக்டோபர் 2018

“எளைச்சவன்“ - சிறுகதை - உயிர் எழுத்து மாத இதழ்


“எளைச்சவன்“ - சிறுகதை - உயிர் எழுத்து மாத இதழ்                  
------------------------------  ----------     
மாயவன் சைக்கிளைக் கஷ்டப்பட்டு  மிதித்துக் கொண்டிருந்தான். சுற்றுக்கு ஒரு முறை கடக்…கடக் என்று சத்தம் வந்து கொண்டிருந்தது. செயின் லூசாக இருக்கிறது. அடையாக அப்பிக் கிடந்த அழுக்குகளை அகற்றாமல் திருப்பத்திலிருந்த ஒர்க் ஷாப்பில் கழிவு எண்ணெயை எடுத்து பல் சக்கரத்தில் விட்டது தப்பாய்ப் போயிற்று. சாலையில் செல்பவர்கள் இவனையும் வண்டியையும் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனார்கள். மனதுக்குள் சிரிப்பு.
அது என்னவோ கிடக்கட்டும்… இப்போது காரியம் ஆனால் சரி… என்று அவன் பார்வை வரிசையாய் நிற்கும் கடைகள், நடுவே வீடுகள், வெட்ட வெளிகள், பெட்ரோல் பங்கு, பெரிய கட்டடங்கள்…என்று அலசிக் கொண்டே போயின.
இன்று அவனுக்கு நாலாயிரம் ரூபாய் வேண்டும். அஞ்சாயிரத்து சொச்சம் சேர்ந்திருப்பதாக மனதில் இருந்தது. பாஸ் புத்தகத்தைப் பார்த்து சரி பார்த்துக் கொள்வோம் என்றால்  கணக்கு வைத்திருக்கும் உப்பிலியம்மன் கோயில் கிளை பாங்குக்குள் நுழையவா முடிகிறது. வரவு பதிய வழியில்லை. அது முடியாமல் போய் ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. சம்பளக் காசை லேத்துப் பட்டறை அண்ணாச்சி பூதலிங்கம் எப்படியோ அங்கே இங்கே மாற்றியோ, புரட்டியோ ரெண்டு தவணைகளாகக் கொடுத்து விட்டார். தன் பாடு சில்லரைப் பாடு என்று அறிந்தே கொடுத்தது போலிருந்தது. அம்புட்டு சில்லரை எங்கிருந்துதான் கிடைத்ததோ, அல்லது வீட்டில் சேமிப்பாய் வைத்திருந்தாரோ… திரட்டிக் கொட்டிக் கொண்டு வந்தது போல்தான் இருந்தது.
இந்தா புடி உன் சம்பளக் காசு…..என்று கொண்டு வந்து சில்லரையும் நோட்டுமாகக் கொட்டினார். சம்பளப் பணம் அந்த மாதம் சம்பளக் காசாக வந்தது. எப்பொழுதும் அந்த மாதிரி ரூபத்தில் மாதச் சம்பளத்தை அவன் பார்த்ததில்லை. தாமதிக்காமல் கொடுத்து விட வேண்டும் என்கிற உந்துதல்தான் அப்படிச் செய்ய வைத்து விட்டதோ என்று தோன்றியது மாயவனுக்கு. ஐநூறு ஆயிரம் செல்லும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, பள்ளிகளில் அதை வாங்க மாட்டேன் என்று விட்டார்கள். குறிப்பிட்ட தேதிவரை கொடுக்கலாம் என்றாலும், அவர்கள் வாங்கத் தயாராய் இல்லை. அரசாங்கம் சொல்வதைக் கேட்பதா, இவர்கள் சொல்படி நடப்பதா? பிள்ளையின் படிப்புப் போய்விடுமே என்று பயம்.
பொண்ணுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட என்று சில்லரைகளை எண்ணி எடுத்துக் கொண்டு போனபோது, அத்தனை சந்தோஷமாக வாங்கிக் கொண்டது ஆச்சரியமாயிருந்தது. அவர்களே ஒன்றும் சொல்லாதபோது ஏன் வலியக் காரணம் சொல்ல வாயைத் திறக்க வேண்டும் என்று கமுக்கமாய் இருந்துவிட்டான். எட்டாயிரத்தில் மூணு போனது.
ஊரெல்லாம் நோட்டு மாற்ற அல்லாடும்போது, தான் மட்டும் உறாய்யாக இருப்பதாய்த் தோன்றியது. தெருவிலும், சாலையிலும் அரக்கப் பரக்க கூட்டம். அம்புட்டு சனம் தினசரி வீதிக்கு வந்தது ஆச்சரியப்படுத்தியது. பாங்குகளில் நீண்ட வரிசை. பொம்பளை ஆம்பிளை வித்தியாசமில்லாமல் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு கதியே என்று நின்றார்கள். வெயில் கொளுத்தியது.  ரேஷன் கடைகளில் கூட சர்க்கரைக்கும், மண்ணெண்ணெய்க்கும் இம்புட்டுக் கூட்டம் பார்த்ததில்லை. அதாவது வாரத்தில் அல்லது மாதத்தில்  ஒரு நாள், இருநாள்தான். பிறகு தீர்ந்து விடும். இது தீராத கூட்டமாய் அல்லவா இருக்கிறது? பணம் எடுக்கும் ஏ.டி.எம்.கள் பூட்டிக் கிடந்தன. செக்யூரிட்டியும் இல்லை. பணம் இருந்தால்தானே  பாதுகாப்புக்கு ஆள் வேணும். வெறும் மிஷினுக்கு எதுக்குப் பாதுகாப்பு என்று விட்டு விட்டார்கள். பணம் கட்ட, மாற்ற என்று ஓயாத ஒழியாத கூட்டம். ராத்திரி வரிசைக்குக் கல்லுப் போட்டு வந்து நிற்பதாய்ச் சொல்கிறார்கள். இருக்கட்டுங்க, அதனாலென்ன என்றும் காதில் விழத்தான் செய்கிறது. யாரும் அதை மறுத்தும் பேசாததுதான் அதிசயம். தேவை அப்போதைக்குப் பணம். புத்தியில் அது மட்டும்.
இருபது தேதி தாண்டிய இந்தப் பொழுதில்தான் பணத் தேவை அந்த மாதத்தில் வந்திருக்கிறது.  காரணம் மல்லிகாவின் பள்ளிக் கட்டணம்தான். இல்லையென்றால் மாதக் கடைசி வரை ஓட்டியிருப்பான். மீதிக் காசு குடும்பச் செலவுகளுக்கான முன் மாத பாக்கி மற்றும் அந்த மாதத் தேவைகளுக்கென்று தீர்ந்து போய்விட்டன.
ஜோதியை டாக்டரிடம் கூட்டிப் போக வேண்டும். மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுக்க வேண்டும். எல்லாமும் தீர்ந்து போய் நான்கு நாட்களுக்கு மேல் ஆகிறது. ஒரு வாரம் எந்த மருந்தும் சாப்பிடாமல் டாக்டரிடம் போய் நின்றால் அவர் அது சரியில்லை இது சரியில்லை என்று மேலும் மருந்து மாத்திரைகளைக் கூட்டி விடக் கூடும். கறாரான டாக்டர் பத்ரி. நறுக்கென்று கத்தரித்தாற்போல் பேசுவார்.
நான் சொல்றபடி செய்யலேன்னா அப்புறம் எதுக்கு எங்கிட்டக் கூட்டிட்டு வர்றே? என்பார். அவரிடமே மாத்திரைகள் இருந்தால் எடுத்து நீட்டி, கொண்டு போ என்று சொல்பவர்தான். அந்த மனசு உண்டு. அதே உரிமையில்தான் கண்டிக்கவும் செய்வார்.
ஏன்யா, ஃபீஸைத்தான் குறைச்சு வாங்கிக்க முடியும். மருந்துகளையும் நானே எப்பவும் தந்திட்டிருக்க முடியுமா? வந்திச்சுன்னா…இருந்திச்சுன்னா தாராளமா எடுத்திட்டுப் போ….இல்லன்னா நீதான உம்பொஞ்சாதிக்கு வாங்கிக் கொடுக்கணும்….
மாத ஆரம்பத்தில் பத்து தேதி வாக்கில் போனால் அவரிடம் மருந்துகள் இலவசமாய் கிடைக்க வாய்ப்பு உண்டு. மருந்துக் கம்பெனிக்காரர்கள் அந்த முதல் வாரத்தில்தான் அதிகம் வருகிறார்கள் அவரிடம். இப்பொழுது இருபது தேதி தொட்டு விட்டது.  இலவச மாத்திரை மருந்திற்குக் கண்டிப்பாய் வழியில்லை.
இருக்கும் சேமிப்பையும் எடுத்துத்தான் ஆக வேண்டும். நாளைக்குள்ளாகவாவது ஜோதியை டாக்டர் முன் கொண்டு நிறுத்தியாக வேண்டும். குளிர்காலம் வேறு. மேலுக்கும் கீழுக்கும் ஜிவ்வு…ஜிவ்வு என்று இழுக்கிறது. ராத்திரி விடும் குறட்டையைப் பார்த்தால் பிராந்தியமே அதிர்கிறது. எங்கிருந்துதான் இவளுக்கு இப்படிச் சளி கட்டியதோ? எதைச் சாப்பிட்டாலும் மூச்சிழுக்கிறதே…? எந்திரிச்சு உட்கார்ந்தால் தடால் என்று சாய்கிறாளே…! இந்தத் தீனிக்கே உடம்பு இப்படிக் கனத்தால், போன மாசம் வரை அந்த சிலோன்காரர் பங்களாவில் வேலை பார்த்தாளே…அங்கேயே தொடர்ந்திருந்தாளானால்…ஆளைப் பிடிக்க முடியாது போலிருக்கிறதே…!
நீ கறியும் மீனுமாத் தின்னுட்டு வந்திர்றே…வளர்ற பிள்ளைக்கு ஒழுங்கா சாப்பாடு போட வேணாமா…நாளைக்குக் கட்டிக் கொடுக்கிற பொம்பளைப் பிள்ளைல்ல அது… புஷ்டியா, பார்வையா இருந்தாத்தான எவனாச்சும் சரியின்னு தலையாட்டுவான்….சொங்கியா நொடிச்சுப் போச்சுன்னா…..?
ஆத்தாடி…பொண்ணு மேலதான் எம்பூட்டு கரிசன….? நா ஒண்ணும் திங்கலையா அப்டி…நீயே கண்ணுபட்ருவ போலிருக்கே…! இந்தா…அவுகளும் திரும்பவும் எலங்கைக்கே போறாகளாம்…அந்தய்யா மட்டும்தான் போவாகன்னு நினைச்சிருந்தேன்…அந்தம்மாவும் போகுதாம்…பங்களாவ யாரோ ரியல் எஸ்டேட்காரவுகளுக்கு விலை பேசிப் புட்டாகளாம்…ஆளுக வந்து எடத்தப் பார்த்துட்டெல்லாம் போயிட்டாக….தோட்டம் பூராவும் எடுத்திருவாக போலிருக்கு…இனிமேட்டு அங்கொரு கூடாரத்தப் போட்டு உட்கார்ந்திருவாக…சீட்டுக் குலுக்கல் நடக்கப் போவுதாம்ல…பேசிக்கிறாகய்யா….நாமளும் ஒரு சீட்டு சேர்ந்து வப்பம்யா…?
போடீ, போக்கத்தவளே….எவன்ட்டயாவது கொடுத்து ஏமாறுறதுக்கா? இங்க சோத்துக்கே தாளமாயிருக்கு?
சரி விடு…அவுக குடும்பத்தோட கிளம்பிட்டாக...என் பொழப்பு போச்சு….
அதான பார்த்தேன். அந்தம்மாவப் பத்தி கூட அப்டி இப்டிப் பேச்சு வந்திச்சில்ல…அவரு சிலோன்ல இருக்க…இது யார் கூடவோ போகுது வருதுன்னு…அதான் கை நழுவிடுமோன்னு இழுத்திட்டுப் போறாராக்கும்…..
அந்த வம்பெல்லாம் எனக்குத் தெரியாது….அவுக போறாக…அம்புட்டுத்தான்….இந்த மாசத்தோட கணக்கு முடிச்சாச்சு…..
இல்லைன்னாலும் உன் உடம்புக்கு இனியும் உன்னால  வீட்டு வேலைக பார்க்க முடியும்னு எனக்குத் தோணல….பேசாம வீட்டுலயே கெட…அதான் சரி…
கெடக்கலாம்யா…ரூவா…ரெண்டாயிரம் எவன் தருவான்….எஞ்சோறும் அங்க கழிஞ்சிச்சில்ல….இப்போ…? காசும் போச்சு…..என் வயித்துப்பாடும் சேர்ந்திச்சு…..
அட விடு புள்ள…பார்த்துக்கலாம்….. – என்னவோ தைரியத்தில் சொல்லி விட்டான் மாயவன். ஆனாலும் ஜோதி கொண்டு வந்த ரெண்டாயிரம் எத்தனை உபயோகமாய் இருந்தது. சுளையாய் அது இப்போது இல்லை. பாங்கில் இருக்கும் அஞ்சுல நால எடுத்து டாக்டருக்கும் மருந்துக்கும் வீட்டுச் செலவுக்கும் கொடுத்து இந்த மாதத்தை ஓட்டி விடலாம்தான். அப்புறம்? சிங்கி அடிக்க வேண்டிதானா?
யோசித்துக் கொண்டே கடந்து கொண்டிருந்த மாயவனைத் தடுத்து நிறுத்தியது ஒரு குரல்.
மாயி…அங்க எங்க போயிட்டிருக்க….? – குரல் கேட்டுச் சட்டென்று வண்டியிலிருந்து இறங்கினான். கிழட்டுத்தனமாய் உளட்டியது வண்டி..
காத்தும் குறைஞ்சு போச்சா….? அடக் கடவுளே…என்றவாறே யார் என்று குரல் வந்த திக்கைப் பார்த்தான்.
அங்க எங்கப்பா போறே….பாங்குக்கா…? அதெல்லாம் வரிசை குமரன் தியேட்டர் வரைக்கும் போயிருச்சி….இனிமே போயி நீ நின்னு பணம் எடுக்கவா…? பாதிப் பேருக்குக் கூடக் கிடைக்காது….ஆனாலும் சனம் நம்பி நிக்குது….. ரெண்டாயிரம்தான் கொடுக்குறாகளாமுல்ல… ….நீ எம்புட்டு எடுக்கணும்…
…கிடைக்கிறத வாங்கிக்கிட வேண்டிதான்…என்னா செய்றது? வம்பாத்தான் இருக்கு…சண்டைக்கா நிக்க முடியும்…? நம்ம பணத்தை நாம எடுக்க முடில பாரு….என்னா கொடுமடா இது…!
அதெல்லாம் விடு…நா ஒரு வழி சொல்றேன் இங்க வா…. – சற்றே குரலைத் தாழ்த்தி அழைத்தான் ராசப்பன்.
என்ன என்பது போல் வண்டியை ஸ்டான்ட் போட்டு விட்டு அருகில் போனான் மாயவன்.
நம்ம நெல்லு மண்டிக்காரரு ஒண்டிப்புலி இருக்காருல்லப்பா… அவுக ஆளுகளுக்கெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா ரூவாயக் கொடுத்து மாத்திட்டு வரச்சொல்றாராம்…நேரா அவர்ட்டப் போ… தர்றத வாங்கிட்டு நோட்டு மாத்திக் கொடு  கையில காசு வாயில தோசை …….போ…ஓடு….
 சரி…அதுனால எனக்கென்ன பிரயோசனம்…? – புரியாமல் முழித்தான் மாயவன். தன்னுடைய அவசரத் தேவை எப்படிப் பூர்த்தியாகும்?…புரியவில்லை அவனுக்கு. கைமேல காசுன்னா சரியாப் போச்சா…? எனக்கு நாலுல்ல வேணும்…?
அட நா சொல்றன்ல…நீ போய்யா உடனே…அவரு சொல்வாரு விவரம்…இங்க போய் மிஷினு முன்னாடி நின்னு ஒண்ணும் பிரயோசனமில்ல…இந்த வழியப் பாரு…இருக்கிற கைக்காச எதுக்குச் செலவழிக்கிற? அழுத்துய்யா வண்டிய….!
என்னத்தையோ சொல்லி மனசைக் கலைக்கிறானே! ….மாயவனுக்குப் போவதா இருப்பதா தெரியவில்லை. நம்ம பணமிருக்க அடுத்தவனிடம் போய் ஏன் நிற்க வேண்டும்? ஆசை காட்டுறானோ? – புத்தி கேள்வி கேட்டது.
எதுக்காக அவரு தன் பணத்த மத்தவங்ககிட்டக் கொடுத்து விடணும்…? அவரே கொண்டுட்டுப் போய் நேரடியாக் கொடுக்க வேண்டிதான….எதுக்கு ஆளுகளத் தேடுறாரு? ஒரு வேள இம்புட்டுப் பணமான்னு சந்தேகப்படுவாகளோ…அதுக்காகச் செய்றாரோ…? கண்ணு போட்ருவாகன்னு ஒளிவு மறைவாச் செய்யப் பார்க்குறாரோ? பாங்குல ஒரே ஆளு, முழுக்க மாத்த முடியாதுன்னுட்டு மண்டி ஆளுகளாப் பொறுக்கி அனுப்புறாரோ…? –கேள்வியாய்த்தான் பிறந்தது. வேறு ஒன்றும் புலப்படவில்லை  மாயவனுக்கு. இருக்கிறவனும் இல்லாதவனும் சேர்ந்துல்ல கஷ்டப்படுறானுக….! ஆனா நம்ம கஷ்டம் தீராத கஷ்டமாச்சே…!
அவரு சொல்வாரு விவரம்னானே… மாத்திக் கொடுத்தா ஏதாச்சும் கிடைக்குமா இருக்கும்.  அதத்தான் ரகசியமாச் சொல்றானா இவன்…? – யோசித்துக் கொண்டே வண்டியை உருட்டினான் மாயவன். காற்று நன்றாய் இறங்கியிருந்தது. இனி கிண்ணென்று அடித்துக் கொண்டுதான் வண்டியில் ஏற வேண்டும். இதோடு ஏறி அமர்ந்தால் பஞ்சர்தான்.
“சிவனாண்டி ரிப்பேர் கடையில்“ ஸ்டான்ட் போட்டான்.
அண்ணே காத்தடிக்கணும்…..
காதில் வாங்காதது போல் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தான் சிவனாண்டி.
இதென்ன கத்தையா வச்சு எண்ணிக்கிட்டிருக்கான்….? அதிசயமாய்ப் பார்த்தான் மாயவன். அவ்வளவு பணத்தை ஒருவர் கையில் பார்க்கவே சற்று பயமாயிருந்தது.
நானே அடிச்சிக்கிறவா….? பம்ப்பை எடுக்கப் போனான். Nஉறாஸ் மூலம் காற்றடிக்கும் வசதி இல்லை அங்கு.
அதையும் காதில் வாங்கியவனாய்த் தெரியவில்லை. நோட்டு எண்ணுவதில் அத்தனை மும்முரம். உடம்பெல்லாம் வேறு வியர்த்துக் கிடந்தது. என்னாச்சு?
மாயவன் ஃப்ரன்ட் வீலுக்கும்> பேக்குக்கும் காற்றை நிரப்பிக் கொண்டு எடுத்த இடத்தில்  பம்ப்பை வைத்தான். அவன் பணம் எண்ணுவது மனசை உளட்டியது.
அண்ணே சில்லரை அப்புறமாட்டு தர்றேன்…. என்றான் சிவனாண்டியைப் பார்த்து… கைக்குக் கை மாறும் நோட்டுக்கள் அலைக்கழித்தன.
அப்போதும் திரும்ப வில்லை அவன் பார்வை. காதில் விழுந்ததா இல்லையா? சந்தேகமாயிருந்தது.
எண்ணிய நோட்டுக்களுக்கு நூல் சுற்றினான் சிவனாண்டி. அத்தனையும் ஐநூறு ரூபாய் நோட்டுக்கள். மஞ்சள் பையில் வைத்து வாயைக் கட்டினான்.
ஏது சிவனாண்டி அண்ணனுக்கு இம்புட்டுப் பணம்? ஒரு நா கூட அவர்ட்ட இப்டிப் பார்த்ததில்லையே….? – மாயவனுக்கு எதுவும் புரியாமல் குழப்பமாய் இருந்தது. இவனும் ராசப்பன் சொன்னமாதிரி என்னமும் செய்வானோ? எல்லாம் துணிஞ்சிட்டாய்ங்களா? வெத்து வேட்டெல்லாம் பணத்தோட அலையுது? பணம் எவன் மனசையும் மாத்திடும்தானே…! அப்பாவி சப்பாவி பலியாவுறானுகளா…?
அவனென்னடா என்றால் ஒண்டிப்புலிட்டப் போங்கிறான்…இங்க என்னடான்னா இம்புட்டுப் பணம் எண்றான்…? ஒரு வேளை அவரும் சிவனாண்டிட்டப் பணம் மாத்தக் கொடுத்திருப்பாரோ…? அடிக்கடி இந்தாளை அங்க பார்த்திருக்கனே…? அப்டியிருக்குமோ? கேட்ருவமா…? இல்ல வேறே என்னவாச்சுமா இருந்தா…வம்பால்ல போயிரும்…? – ஒரு திடீர் முடிவில் வாய் நுனி வரை வந்து விட்ட வார்த்தைகளை அடக்கிக் கொண்டான் மாயவன். காரியத்தில் அங்கிருந்த தீவிரம் இவன் வாயைக் கட்டிப் போட்டது.
அவன் கையில் இருக்கும் பணத்தைப்பற்றி நாம் ஏன் நோண்ட வேண்டும்? கேள்வி பிறந்தது. வந்த வேலை என்ன….? பணம் எடுப்பது….அதற்கு நீண்ட வரிசை என்று சொன்னான் ராசப்பன். இவ்வளவு நேரத்தில் போய் நின்றிருந்தாலும் பத்து முப்பது பேராவது குறைந்திருக்கும்.  பாழாய்ப் போன சைக்கிள் மக்கர் பண்ணி விட்டது. நின்றாலும் கிடைக்காது என்றானே…? அப்படியானால் பணத்திற்கு என்ன செய்வது? ஜோதியின் ஆப்பரேஷனைத் தள்ளிப் போட வேண்டியதுதானா? அவளுக்கு உடம்பில் என்னென்ன வியாதியெல்லாம்தான் இருக்கிறது? சளியை நீக்க மருந்து சாப்பிட்டாள் இத்தனை நாள். அது கொஞ்சங் கூடக் குறைந்த மாதிரியில்லை. முன்னாடி இருமி…இருமி உள்ளேயே வச்சிப்பா…இப்பப்போ காறிக் காறித் துப்புறா…அதுதான் கண்ட பலன்…இப்போ புதுசா ஒண்ணு சொல்றாரே டாக்டரு…என்னவோ தொண்டை ஆபரேஷன்றாரு…ஒண்ணும் புரிய மாட்டேங்குது இந்த மர மண்டைக்கு….என்னா கருமமோ…கெரகமோ…? விட்ற முடியுமா?, எனக்கிருக்கிற ஒரே துணை அவதான…!
யோசித்துக் கொண்டே வண்டியை உருட்டிக் கொண்டிருந்தான் மாயவன். ஓட்ட வேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை. இப்படிப் போனால்தான் யோசிக்க முடியும் என்று மனசு சொல்லியது. பலவித யோசனையில் நெஞ்சு படபடத்தது.
ஃபோன் மணி அடித்தது. அப்போதுதான் பையிலிருக்கும் செல் ஞாபகமே வந்தது. அது கூட இத்தனை நாள் அவனிடம் இல்லை. இருந்த ஒன்றை வீட்டிலேயே வைத்திருந்தான். எதாச்சும் அவசரமாய்ப் பேச வேண்டுமென்றால் பேன்ட் பாக்கெட்டிலிருந்த குறிப்பு நோட்டை எடுத்து நம்பரைப் பார்த்துக் கொண்டு ஏதாச்சும் கடையில் போய் நின்று ஒத்த ரூபாய்க் காசு போட்டு வீட்டுக்குப் பேசி விடுவான். அந்த மிஷினைக் கூடப் பல கடைகளில் எடுத்து விட்டார்கள் இப்போது. எதோ ஒன்று பஸ் ஸ்டான்ட் பக்கம் மட்டும்தான் இருந்தது. எதுக்கும் அவசரமென்றால் அங்குதான் ஓடுவான். இந்த செல் ஓசியாய்க் கிடைத்தது. சிலோன்காரர் கொடுத்தாருன்னு கொண்டு வந்து கொடுத்தாள் ஜோதி.
அவுக எலங்கைக்குப் போறாகல்லயா…இந்தா வச்சிக்கன்னு அந்தய்யாதான் கொடுத்தாக….வாங்கிக்க…வாங்கிக்கன்னு நாலு வாட்டி அந்தம்மா சொன்னப் பெறவுதான் நானே கைய நீட்டினேன்….
இத வச்சிட்டு இலங்கைக்கு வா…வான்னு உன்னைக் கூப்பிடப் போறாக….என்றான் இவன்.
ஏன்யா…இம்புட்டு உடம்பு முடியாதவள எங்கனயாச்சும் யாராச்சும் கூப்பிடுவாகளா? கூறாத்தான் பேசுறியா நீ…? எனக்கு கிஃப்ட்டு கொடுத்திருக்காகய்யா…என்று சொல்லி விட்டு வெள்ளந்தியாய் ஜோதி சிரித்தது கண்முன்னே வந்தது……
சிந்தனை தடைபட எங்கு வந்திருக்கிறோம் என்று நோக்கினான் மாயவன்.
பாங்க் வாசல். சற்றே கூட்டம் குறைந்திருந்தது. பரவால்லியே…!  
என்னா…பார்த்திட்டு நின்னுட்டே…போய் வரிசைல நில்லுய்யா…ஆளுக சேர்ந்திரும்…! ராத்திரி ஒன்பது பத்துக்கு மேல ஆவும்…பணம் புதுசா வச்சிருக்காக…மிஷினுல…போய் நில்லு, கிடைக்கும்….- யாரோ ஒருவர் சொல்லிக் கொண்டே வேட்டியை விலக்கி உள் அன்ட்ராயரில் பணத்தைச் செருகிக் கொண்டே போனார். ஆனா ரெண்டாயிரந்தான்….பார்த்துக்க…. –சொல்லிக் கொண்டே  அவனைப்  பார்த்து வக்கணை காண்பித்தார்.
என் கணக்குல காசு இருக்கு…அத எடுக்கத்தான புறப்பட்டு வந்தேன்….அத விட்டிட்டு அந்தாளுக்கு நான் ஏன் பணத்தை மாத்திக் கொடுக்கணும்? என்னா வில்லங்கமோ, வெவகாரமோ…? எப்போ ஆளாளுக்குக் கொடுத்து மாத்திட்டு வாங்கன்னு ஒருத்தன் சொல்றானோ, அப்போவே அதுல ஏதோ தப்பு இருக்குதுன்னு தெரியுதுதானே…..அந்தத் தப்புக்கு நாம ஏன் உடந்த ஆகணும்? – மாயவனின் பாமர மூளைக்கு என்னவோ லேசாய் தட்டுப்பட்டது, சட்டென்று அந்தப் புள்ளியில் நிலைத்து விட்டது. அரசாங்கம் செய்றதே சரியாப் புரியல…இதுல இவங்க வேறே…?
வேலயாளுகளுக்கு லேசுல கூலியே உயர்த்திக் கொடுக்க மாட்டான் அந்தாளு…! சூரி மாமா பட்ட பாடு எனக்குத்தான தெரியும்? இப்ப மட்டும் என்ன கரிசன? வேணுங்கிற போது வேணும்..! மத்த நேரத்துல உதறிப்புடறதா? இடைல என்னத்தையாவது சொல்லி மனசைக் கலைக்கிறாங்களே…!
என் பொழப்பே நாறப் பொழப்பா இருக்கு…இதுல எதையாச்சும் செய்து போட்டு மாட்டிக்கிறவா…? ஒண்டிப்புலி…தண்டிப்புலின்னுட்டு….இவிங்க கூப்பிட்ட கொரலுக்குப் போயி நிக்கிறதுக்கா நா இருக்கேன்….நாம்பாட்டுக்கு லேத்து பட்டறை வேலயப் பார்த்திட்டு செவனேன்னு போயிட்டிருக்கேன்….யோசன சொல்ல வர்ற ஆளுகளப் பாரு….நோட்டு மாத்துறானாம்…கழுதப்பய……! காசில்லாதவன்னா கேவலமா? ஏழை பாழைன்னா எள்ளுருண்டையாப் போச்சா…? விலுக் விலுக்குன்னு வாயில போட்டு மெல்லுறதுக்கு? ஏழைக்கேத்த எள்ளுருண்டையா எனக்குள்ளது போதும்னு திருப்தியா இருக்கிறத கெடுத்துறுவானுகளோ?  நல்லது சொல்ல எவனும் கிடைக்க மாட்டாம்போல….அடுத்தவன மாட்டி விடுறதுலேயே இருப்பானுக…அதுக்குத் துணை போறதுக்கு நாலு பேரு…எச்சவன் எளைச்சவன்….போற போக்குல தப்புக்கு ஆள் சேர்க்குறானுக….நாதாரிப் பயலுக…! –பழகிய வார்த்தைகள் எல்லாம் சர்வ சகஜமாய் சமயம் பார்த்து வந்து வயிற்றெரிச்சலைக் கொட்டின.
சற்று சத்தமாகவே, கோபத்தோடு  வைது கொண்டே போய் நின்ற மாயவனை ஏதும் புரியாமல் வரிசையில் நின்றவர்கள் விநோதமாய்ப்  பார்த்தார்கள்.
---------------------------------                                                                 


கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...