13 அக்டோபர் 2018

“ஆளும் வளரணும்-பொது அறிவும் வளரணும்”-அரங்கம்-நாடகம்-தினமணி சிறுவர் மணி



அரங்கம்  ”ஆளும் வளரணும்…பொது அறிவும் வளரணும்…”                                                   ************             
காட்சி – 1     
இடம் – வீடு  -   மாந்தர் – சீனிவாசன், சாவித்திரி, கண்ணன் மற்றும் மகேஷ்
சாவித்திரி - …..டேய்…பசங்களா….ரெண்டு பேரும் வாங்க…..
கண்ணன் மற்றும் மகேஷ் – என்னம்மா….? (ஒருசேரக் கேட்டுக்கொண்டு அம்மா முன் வந்து நிற்கின்றனர்.)
சாவித்திரி – கடைக்குப்போய் கால் கிலோ புளி….கால் கிலோ மிளகாய் வற்றல் வாங்கிட்டு வாங்க…. …குமரன் ஸ்டோர்ஸ்...தெரியுமில்ல…அங்க வாங்கினாப் போதும்…..ரோட்டைக் கடந்து எதிர்க் கடைக்குப் போகக் கூடாது…வண்டிகள் வரும்….சரியா…..?
சொல்லிக் கொண்டே பணத்தை நீட்டுகிறாள்….
சாவித்திரி –பத்திரமா டவுசர் பாக்கெட்டுக்குள்ள வை…..– கடைக்காரர் ப்ளாஸ்டிக் பையில தருவார்…அது வேண்டாம்னுடு…இந்தத் துணிப்பைல வாங்கிட்டு வா…..
மகேஷ் – இல்லம்மா….போன தடவை நாம கடைக்குப் போனப்பவே பை கொண்டுவாங்கன்னு போட்டிருந்ததே…..நான் படிச்சேன்…..!
சாவித்திரி – அப்டியா….எங்கண்ணு….எப்டி கவனிச்சிருக்கு…சமத்து…? ப்ளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்கணும்னு கவர்ன்மென்ட்ல சொல்றாங்கல்ல…அதான்…
கண்ணன் –….கடைக்காரங்களே துணிப்பை விற்கிறாங்களே?
சாவித்திரி – அது பை இல்லாதவங்களுக்கு …நீ இதுல வாங்கிட்டு வா….சரியா….? எதுக்கு அநாவசியமா இன்னொண்ணு வாங்கணும்…? செலவு செய்யலாம்…காசை விரயம் பண்ணக் கூடாது…..தெரிஞ்சிதா…..? அவசியம்…அநாவசியம் தெரிஞ்சிக்கணும்….
கண்ணனும் மகேஷூம் அம்மா முகத்தையே வியப்போடு பார்க்கின்றனர்.
சாவித்திரி – சரி….சமத்தா போயிட்டு வாங்க ரெண்டு பேரும்….
அவர்கள் வெளியேறுகின்றனர்.
சீனிவாசன் – இதுக்கு நான் போனா பத்தாதா? சின்னஞ்சிறிசுகளைப் போய் அனுப்புறியே….? உப்புக்கும் புளிக்கும் இப்பவே அதுக அலையணுமா….?
சாவித்திரி- அவங்களும் தெரிஞ்சிக்கட்டும்…ரெண்டுக்கும் வயசு பதினஞ்சாகப்போவுது…
                     காட்சி – 2
இடம் - குமரன் ஸ்டோர்ஸ் வாசல்
மாந்தர் - கண்ணனும் மகேஷூம்…..
கண்ணன் – சார்….கால் கிலோ புளி…..கால் கிலோ மிளகாய் வற்றல்…..
தெளிவாய் வந்த குரலைக் கேட்டு  விழித்துப் பார்க்கிறார் கடைக்காரர்.
கடைக்காரர் – புதுப்புளியா….பழம் புளியா……?
கேள்வி வந்து விழுந்த வேகத்தைப் பார்த்து அசந்து போகின்றனர் இருவரும்.
மகேஷ் -  (சற்றுத் தள்ளிப் போய் நின்று)….இங்க வாடா….ஓடிப் போய் அம்மாட்டக் கேட்டுட்டு வந்திடட்டுமா…? அஞ்சே நிமிஷம்…..
கண்ணன் – போடா…கிறுக்கு …..எங்கயாச்சும் பழைய புளிய வாங்குவாங்களா…? பேர்லயே பழசுன்னு இருக்கு….புதுசை வாங்கிட்டுப் போனாத்தான் அம்மா சமத்தும்பாங்க…பழசுன்னா ஏன் வாங்கிட்டு வந்தீங்க..இது கூடத் தெரியாதான்னு திட்டுவாங்க….நாம புதுப்புளின்னே கேட்டு வாங்கிட்டுப் போவோம்…..
மகேஷ் – சரிடா…..
கடைக்காரர்–சீக்கிரம் சொல்லுங்க தம்பி….மொளகாவத்தல்….நீட்டமா…உருட்டா….? எது வேணும்…?
கண்ணன் – இதென்னடா வம்பாப் போச்சு…புதுசா இன்னொண்ணைக் கிளப்புறாரு….? மிளகாய் வத்தல்னா அதுல ஒண்ணுதானடா இருக்கணும்….புளி மாதிரியே இதுலயும் ரெண்டா…..?
மகேஷ் – சரியான தலைவலிடா….? இதெல்லாம் அம்மா சொல்லலியே…?
இருவரும் யோசிக்கின்றனர்…..
கடைக்காரர் – நீங்க ரெண்டு பேரும் எல்.ஐ.சி. சீனிவாசன் சார் பிள்ளைங்கதானே…சரி…சரி….உங்க அம்மா என்ன வாங்குவாங்கன்னு எனக்குத் தெரியும்…நான் தர்றேன்…கொண்டு போய்க் கொடுங்க…கரெக்டா இருக்கும்…..
தலையாட்டுகின்றனர் இருவரும்……
வாங்கிக்கொண்டு வீடு திரும்புகையில்….மகேஷ் கண்ணனைப் பார்த்துச் சொல்கிறான்…
மகேஷ் – இத முதல்லயே அந்தாளு கொடுத்திருக்கலாமுல்ல… சந்தேகத்தைக் கிளப்பிட்டுத் தர்றாரு….குழம்ப வச்சிட்டாரேடா……?எனக்கு வயித்தைக் கலக்கிடுச்சு..…நல்லா மாட்டிக்கிட்டோம்னே நினைச்சிட்டேன்…..
கண்ணன் – முதல்ல வீட்டுக்குபோய் அம்மாட்ட இதைக் கொடுத்திட்டு…இதுபோல இன்னும் என்னென்னெல்லாம் ரெண்டு ரெண்டு இருக்குன்னு கேட்டுத் தெரிஞ்சிக்கணும்டா….அன்னைக்கு அம்மாவோட கடைக்கு வந்தப்ப… …பாசிப் பருப்பு அரை கிலோ….பாசிப் பயறு கால் கிலோன்னு வாங்கினாங்க…இப்பத்தான் எனக்கு ஞாபகம் வருது…இந்த மாதிரி நிறைய இருக்கும் போல்ருக்கு…இனிமே…இப்டி வெளில வந்து அசடு மாதிரி முழிக்கக் கூடாது…கரெக்டாத் தெரிஞ்சிக்கிட்டுதாண்டா வரணும்..…அம்மா சொல்லச் சொல்ல எழுதி வாங்கிட்டு வந்திரணும்..
மகேஷ் – அது மட்டுமில்ல…இனிமே கடைக்குப் போற வேலையை நாமதான் செய்யணும்…..எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்…அம்மாவை அலைய விடக் கூடாது….சரியா….?
கண்ணன் – ஓ.கே…டா…..!!!
உற்சாகமாய் வீடு நோக்கி நடக்கின்றனர். இருவரின் வாயும் அவர்களை அறியாமல் முனகுகின்றது…
புதுப்புளி……பழம்புளி…….. ……நீளவற்றல்….உருட்டு வற்றல்.
ஆளும் வளரணும்..அறிவும் வளரணும்…அதுதாண்டா வளர்ச்சி…. – எங்கிருந்தோ பாடல் சத்தம் கேட்கிறது…..மென்மையாய்….இனிமையாய்….கம்பீரமாய்…..
                     ------------------------------------------------

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...