13 அக்டோபர் 2018

“மழித்தலும் நீட்டலும்” - சிறுகதை


சிறுகதை                 
          

“மழித்தலும் நீட்டலும்…”    
----------------------------------------   

மீசையை ஏன் மழித்தோம் என்றிருந்தது. தன் முகத்தைத் தன்னாலேயே கண்ணாடியில் பார்க்க முடியவில்லையே! ஒரு துணியை எடுத்து வந்து கண்ணாடியை அழுந்தத் துடைத்தான். படிந்திருந்த அழுக்குப் போனது. முகம் அப்படியேதான் இருந்தது. துடைத்தால் ஒருவேளை சரியாகுமோ என்று நினைத்தது தப்பாய்ப் போயிற்று. இந்தச் சாக்கில் கண்ணாடி சுத்தமானது. இல்லையென்றால், அதையும் துடைக்கப் போவதில்லைதான். முகம் பார்த்துப் பார்த்துக் கண்ணாடி அழுக்காகி விட்டது. ஒரு வேளை பெண்கள் தொடர்ந்து பார்த்தால் கண்ணாடி அழகாகுமோ என்னவோ?
     கல்யாணத்திற்கு வாங்கிக் கொடுத்த கண்ணாடி. பெல்ஜியம் கண்ணாடி என்றுதான் சொல்லப்பட்டது. எது பெல்ஜியம், எது சாதா என்பதெல்லாம் தெரியாது. சொன்னது அப்படி. இன்றுவரை தன் பிம்பத்தை அது சரியாய்த்தான் காட்டிக் கொண்டிருக்கிறது. ஒரே பிம்பம்தான். மாற்றிக் காட்டும் ஜோலியெல்லாம் இல்லை.  அத்தனை கனமான கண்ணாடியை ஒரே ஒரு நடுக் கொக்கியில் மாட்டியிருப்பதுதான் உறுத்திக் கொண்டேயிருக்கிறது. சமதூரத்தில் இரண்டு கொக்கிகளில் மாட்டப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது பலமாகத் தொங்கும் என்பது இவன் எண்ணம். ஆனால் அந்த ஒரே கொக்கியிலேயே அது பலமாய்த்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது இன்றுவரை. கண்ணாடி அத்தனை கனம். அப்படியானால் கொக்கி அதைத் தாங்கும் தரமாய்த்தான் இருக்கிறது என்றுதானே பொருள்?
     அவள் கண்ணாடி. தான் கொக்கி. இப்படிப் பொருள் கொள்ளலாமா?  அதனால்தான் ஒரே கொக்கியோ? ஆனால் ஒன்று. அதில் அவள் என்றும் முகம் பார்த்ததில்லை. அவளுக்கென்று தனியே ஒன்று உள்ளது. அதில்தான் பார்த்துக் கொள்வாள். வலதும் இடதுமாகத் திரும்பித் திரும்பி நின்று அழகு பார்க்கையில் அதை அந்தக் கண்ணாடி முழுமையாகக் காண்பிக்கிறதா என்று தோன்றும் இவனுக்கு. அவள் அழகை அந்தக் கண்ணாடிதான் பார்த்திருக்கிறது பலமுறை. தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. கணவனிடம் வந்து இப்படி அப்படித் திரும்பி அழகைக் காண்பிக்க முடியாதே? அது சினிமாவில்தானே வரும்…!
     இந்தக் கண்ணாடிக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. சமயங்களில் தன் அறைக்கு வரும்போது தற்செயலாகக் கூட, அவள் அந்தக் கண்ணாடியை நோக்கியதில்லை. கண்ணாடியிலும் நோக்கியதில்லை. அந்தக் கண்ணாடிக்கே அந்த ஏக்கம் வந்திருக்கலாம். என்னைப் பார்க்க மாட்டாயா? உன்னை நன்றாகக் காண்பிப்பேன் நான். மேலும் அழகூட்டுவேன். ஒரு முறைதான் பார்த்து வையேன். குறைந்தா போவாய்? ஒரு முறை மட்டும் நேராய் நின்று பார்த்து விட்டாயானால், அதன் பிறகுதான் உன் அழகை நான் மெருகேற்ற முடியும். அதற்கான முயற்சிகள் எனக்கு உண்டு. அழகை அழகு செய்யும் அபூர்வம். விரும்பிப் போனால்தானே நெருங்கி வரும். நீ விலகியே போனாயென்றால்? வா…வா…வந்து விடு…என்னுள் ஐக்கியமாகி விடு…அந்தக் கண்ணாடியின் ஏக்கம் அவள் அறிய மாட்டாள். அதற்கெல்லாம் ஒரு அதீத ஈர நெஞ்சம் வேண்டும். அது அவளிடம் இல்லைபோல்தான் தெரிகிறது.
     அந்தப் பலமான கொக்கி என்கிற ஆதாரத்தில் அது தொங்கிக் கொண்டிருப்பதை அவள் விரும்பவில்லையோ என்னவோ? இந்தக் கல்யாணக் கண்ணாடியும் அவள் அழகை  முழுமையாகக் காண்பிக்கும்தானே…?. அது அவள் வீட்டில் வாங்கிக் கொடுத்துவிட்டதுதான். பின் ஏன் அவள் அதில் தன்னை நோக்குவதில்லை. ஒரு வேளை தன் அழகை அது பளீரென்று படம் பிடித்துக் கொண்டு சதா தன் கணவனுக்குக் காண்பித்துக் கொண்டே இருந்துவிடும் என்று நினைக்கிறாளோ? 
     தனக்குத்தான் அது முழுமையாகப் பயன்படுகிறது. தன்னை, தன் மனசை, தன் எண்ணங்களை, தன் சந்தோஷங்களை, தன் சோகங்களை, தன் விரக்திகளை முழுமையாகக் காண்பிக்கிறது. உன்னையே நீ அறிவாய்…என்பதற்கு சாட்சியாய். இப்போது மீசையற்ற தன் அசட்டு மூஞ்சியையும் அது பளிச்சென்று படம் பிடித்து விட்டதுதான். இனி விடவே விடாதோ? திரும்ப மீசை வளர்த்தாலும், அந்தப் பழைய மீசையற்ற மொழுக் மூஞ்சியை அது காண்பித்து விடும் போலிருக்கிறதே…! எங்கே சேமித்து வைக்கிறது இதை? மெமரி கார்டு போட்டது மாதிரி?
     சற்று நெருங்கிப் பார்த்தான். மீசை வைத்திருந்த பகுதி மட்டும் வெளிறிப் போய்க் கோடிட்டுப் படம் வரைந்தது போல்  துண்டாகத் தெரிந்தது.ஒரு நாள் போனால் முள் தோன்றி விடும். சொர சொரப்பு வந்து விடும். பிறகு இந்த வெளுப்பு தெரியாது.  இப்போது பார்ப்பவர்கள் தன்னைப் பார்க்கும் முன் தன் முகத்தின் மீசைப் பகுதியைத்தான் முதலில் பார்ப்பார்கள். அதுதான் பட்டென்று கண்ணில் படும். அப்பப்பா? அந்த மூக்கிற்கும், வாய்க்கும்தான் இடையில் எவ்வளவு இடைவெளி? அந்த அதிக இடைவெளிதானே முகத்தின் அழகைக் குறைக்கிறது? அதை மறைப்பதற்குத்தானே மீசை. ஒட்டிய கன்னமும், குறுகிய நெற்றியுமான அவலட்சணங்கள் இந்த மீசையினால்தானே மறைக்கப்பட்டன? தாடி வைத்தால் இன்னும் பலம்பெறும். குழி விழுந்த கண்களை மறைக்கக் கண்ணாடி போட்டுக் கொண்டாயிற்று. முகத்தின் அழகை, அழகுபோல்  ஈடு செய்ய இருந்த மீசை இப்போது காணாமல் போயிற்றே?
     முட்டாள்…! கொஞ்சமாவது புத்தி இருக்கா உனக்கு? எதுக்குக் கிடந்து இத்தனை அவசரப்படறே? நேத்து ராத்திரி வரைக்கும் எல்லாரும் பார்த்த முகம்தானே இது…அப்டியே போனீன்னா, அதே முகம்தானேன்னு விட்ருவாங்கல்ல…? எப்பயும் போலத்தான பார்ப்பாங்க…? அப்புறம் எதுக்கு இப்போ இப்டி? அறிவில்ல உனக்கு? கொஞ்சம் யோசிக்க மாட்டியா? நிதானிக்க மாட்டியா? எதுக்கெடுத்தாலும் அவசரக்குடுக்கைதானா?
     இப்போது வெளியில் செல்வதா வேண்டாமா? நிறைய வெளிக் காரியங்கள் இருக்கின்றன. இதைச் செய்வதற்கு முன் அதை யோசித்திருக்க வேண்டும். போய் நிற்கும் இடத்தில் எல்லாம், பார்ப்பவர்களுக்கு முதலில் இதுதான் கண்ணில் படும். ஒன்று சிரிப்பார்கள், அல்லது முகம் சுளிப்பார்கள். சற்று நெருங்கியவர்கள், ஏண்டா மீசையை எடுத்துத் தொலைச்சே? என்பார்கள். பிறகு முகம் பார்க்காமல் கூடப் பேசக் கூடும். அதுதான் நிகழும். எனக்கே என் முகத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லையே? பிறகு மற்றவர்களைச் சொல்லி என்ன செய்ய?  அப்படியானால் என் முகத்திற்காகத்தான் எல்லாரும் என்னுடன் பழகினார்களா? அந்த மீசைதான் கொஞ்சமாவது லட்சணத்தைக் கொடுத்ததா? அவலட்சணம் என்றால் விலகி விடுவார்களா? உலகில் எது லட்சணம்? எது அவலட்சணம்? யார் வரையறுக்க முடியும் இதை? மனதுக்கு மனம், மனிதனுக்கு மனிதன் இது மாறுடாதா? பக்குவப்பட்ட ஒரு மனசு எப்படி நினைத்துப் பார்க்கும் இம்மாதிரியானவைகளை? உலகத்தில் உள்ள கோடானு கோடிப் பேருக்கு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம் இருக்கிறது. எல்லாமுமா அழகாக இருக்கிறது? அழகு என்பதுதான் என்ன? சிரித்தால் அழகா? பார்த்தால் அழகா? பேசினால் அழகா? கோபப்பட்டால் அழகா? உம்மணா மூஞ்சியாய் இருந்தால் அழகா? அமைதி காத்தால் அழகா? எது வரையறை?
     ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை இம்மாதிரி திடுதிப்பென்று செய்தது நினைவுக்கு வந்தது. அப்போது முகம் இளமையாக இருந்தது. இப்போது முற்றிக் குரங்காக இருக்கிறது. இந்த முற்றிக் குரங்கு சற்று நேரத்திற்கு முன் மனதில் தோன்றவில்லையே என்பதை நினைத்தபோது உண்மையிலேயே மனது வருந்தியது.
     அன்று ஒரு திருமண நாள். அதற்குப் போய் வந்த பிறகாவது அந்த அநாச்சாரத்தைச் செய்திருக்கலாம். குடுகுடுவென்று யோசிக்காமல் அன்று அந்தக் காரியத்தை நிகழ்த்தியாயிற்று. என்னவோ ஒரு நரை தென்பட்டதுபோல் இருக்க, கையில் கத்தரிக்கோலோடு அதை மட்டும் துல்லியமாய் நறுக்கக் கிளம்பி கூடச் சேர்த்து ஒன்றிரண்டையும் வெட்டித் தொலைக்க, உள்ளே ஒளிந்து கொண்டிருந்த மேலும் இரண்டு மூன்று வெள்ளையை எடுக்க முனைய, அன்பே சிவத்தில் ஆக்ஸிடென்ட் கமலுக்கு  இடது புற மீசை நடுவே துண்டிக்கப்பட்டிருப்பதுபோல் ஆகிப் போனது. அது காரக்டர். என்னுடையதும் அப்படித்தான் என்று கிளம்ப முடியுமா? இந்த சர்வஜனப் புழக்கத்தில் புகுந்து புறப்பட்டு மீண்டு வரும் அன்றாட நிகழ்வுகளின் ஒரு சாதாரணப் பிரஜைதானே தானும்.
     ஒரு பக்கம் பழுதானால் இன்னொரு பக்கத்தையும் அதற்கேற்றாற்போல் சரிபண்ணியாக வேண்டுமே? அப்பொழுதுதானே டிரிம் பண்ணியது புரியும்.நாலு பேர் முகம் பார்த்துப் பேசியாக வேண்டாமா? என்ன, என்ன என்று எத்தனை பேருக்குப் பதில் சொல்வது?  டிரிம்மா அது? ஒன்று இரண்டு என்று நறுக்கி நறுக்கி ஒரு பகுதியே அசிங்கமாகிப் போனதே? அடச்…சே…! என்று முழுக்க மழித்தாயிற்று அன்று. நாலு நாள் பொறுத்துத்தானே ஆக வேண்டும்? முணுக்கென்றால் வளர்ந்து விடுமா?
     சரி போகட்டும், கல்யாணத்தை விடலாகுமா?  போயாக வேண்டும் கட்டாயம். இல்லையென்றால் மறுநாள் முகத்தில் முழிக்க முடியாது. போய் நின்றாயிற்று. தூரத்திலேயே பார்த்து விட்டார் பெரியசாமி. கொஞ்ச நேரம் கூர்ந்து பார்த்துத்தான் புரிந்து கொண்டார் போலும்…!
     வாங்க…வாங்க….சட்டுன்னு பார்த்ததுல அப்டியே அசலா நாயகன் கமல் மாதிரித் தோணிடுச்சி….அதான் கொஞ்சம் அசந்து போனேன். மீசையை எடுத்துட்டீங்களாக்கும்….வாங்க போவோம் உள்ளே….
     ஒரு நிமிடம் என்னமாய் மனசு குளிர்ந்து போனது? அட…! நானா…? கமல் ஜாடைலயா…? என்ன சொல்கிறார் இவர்? அப்பொழுதுதான் எனக்கே நினைவு வந்தது. காலையில் மீசையை முழுதாய் மழித்து விட்டுத் தலையை உயர்த்திச் சீவி நோக்கியபோது ஒரு கணம் இதே மாதிரித் தனக்கும் தோன்றியதே…! அது நிஜம்தானோ? கணநேரம் தோன்றி மறைவதெல்லாம் உண்மையாகி விடுமா? கமலைப்போல் கமல் இருந்தால்தான் அழகு. வேறொருவர் இருந்தால் எதற்குதவும்? டூப் போடலாமே…! போதும் அசட்டுக் கற்பனை…! இருந்தால் அசல் கமல்தான். டூப்பெல்லாம் ஆகாது…சம்மதமில்லை…!
     ஆனால் ஒன்று. அன்று வேறு எவனும் வாய் திறக்கவில்லையே? எத்தனை நண்பர்களைச் சந்தித்தோம் அந்தக் கல்யாண நிகழ்வில்? எவனுக்கும் எந்த அதிர்வும் ஏற்படவில்லையா? அல்லது பொறாமையா? பாருய்யா, இவனுக்குக் கூடக் கமல்உறாசன் ஜாடைய….? கேட்பதை விட கேட்காமல் விடுவது, கண்டுகொள்ளாமல் போவதுதானே அதிகபட்ச அலட்சியம்…? என்னே மனிதர்கள்? அடுத்தவனுக்கு ஒரு நல்லது நிகழ்ந்து விடுவதில் கூட இவர்களுக்கு ஏனிந்தப் பொறாமை? இந்த ஜாடை நல்லதா என்ன? அப்படியென்ன பெருமை இதில்?
     ன்னடாதம்பீ…!மீசைவச்சிக்கிட்டியா?.....உறா…உறா…..உறா…..உறா…!.அன்று தன் முகத்தையே பார்த்து வாய்விட்டுச் சிரித்த மெய்யப்பன் அண்ணன் ஞாபகம் சட்டென்று வந்தது. திருச்சியை விட்டு வந்து வருஷம் முப்பது ஆனபின்னாலும் இன்னும் தன் நினைவை விட்டு அகலாத ஒரு வெள்ளை மனிதர்….
     நல்லாருக்குடா…இன்னும் கொஞ்சம் தடிமனா வையி…..இல்லன்னா கோடு போட்டது மாதிரி இருக்கும்…அது வாணாம்…உன் முகத்துக்கு நல்லாயிருக்காது… ஒண்ணு செய்யி….வளருது பாரு…அத அப்டியே விட்ரு…அதான் சரி…
     .என்னசார்….திடீர்னு….சொல்லிக்கொண்டே தன்னைப் பார்த்துப் பார்த்து வாய்பொத்திச் சிரித்துக் கொண்டேயிருந்த சந்திரா மேடம்….
     நன்னாத்தானே இருக்கு….இருக்கட்டும்….நீங்க சும்மா இருங்க…சிரிக்காதீங்க…சின்னப் பையன்தானே…?.- சந்திராவை மிரட்டிய சரோஜா மேடம். என்னதான் சிரித்தாலும், கேலி செய்தாலும் அந்தச் சந்திராவின் மேல் ஏன் தனக்குக் கோபமே வரவில்லை? அந்தச் சிரிப்பையும், கேலியையும் மீறி அந்த முகத்திலே பொலியும் தாங்கவொண்ணா அழகின் ரசனை.. அது மலையாள அழகு. கேரள அழகு. ஒரு வேளை அந்தச் சந்திராவை வசீகரிக்க வேண்டும் என்றுதான் அன்று அந்த மீசை ஐடியாவே வந்ததோ? சே…சே…! ஒரு முறை கூட இதுநாள் வரை அப்படியோர் எண்ணம் வந்ததில்லையே…பின் ஏன் இன்று இப்படி நினைத்துப் பார்க்க வேண்டும். வயதில் பெரியவர்கள் ஆயிற்றே அவர்கள்.  மனித மனம் கிறுக்கு. தத்துப் பித்தென்று தாவிப் பாயும் குரங்கு. டாக்கார்டை அறுத்துக் கொண்டு அது எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் புயலாய்ப் பாயும். மறு நிமிடம் ஆழப் புதைந்திருத்தலினின்று மேலெழும்பி புறப்பட்ட இடத்திற்கே சக்கென்று வந்து உட்கார்ந்து கொள்ளும்.
     வயலூர் கோயிலில் அந்தச் சந்திரா மேடத்திற்குக் கல்யாணம் ஆன போதும் அந்த அழகை மனம் ரசிக்கத்தானே செய்தது?
     வந்திட்டீங்களா…ரொம்பச் சந்தோஷம்…என்று மரியாதையாகக் கூறிக் கொண்டே அருகில் வந்து தன் முகத்தை வழித்து மார்பில் வைத்துக் கொண்டு, வித்தியாசமில்லாமல் கையைப் பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு சென்று, என் தம்பி என்று சொல்லி மாப்பிள்ளைக்கு அறிமுகம் செய்து வைத்தது…அன்றுதான் அந்தச் சந்திரா அக்கா எத்தனை கொள்ளை அழகு?
     அவர்களை இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று முனைந்த மேலாளர் தியாகராஜனும்தானே அன்று அங்கிருந்தார். ஏன் அன்று அவர் முகத்தில் ஈயாடவில்லை?
     தன்னின் படர்ந்த மீசை அவர்களுக்குப் பழகிப் போனபோதுதான் தான் அவர்களுக்குத் தம்பி ஆனோமோ? மூக்கிற்கும், வாய்க்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் வளர்ந்ததை அப்படியே விட்டு, அழகுபடுத்தியபோது, தன்னின் கம்பீரம் கூடிப் போனதையும், அந்த வளாகத்திற்கே தான் ஒரு அழகான இளைஞனாய் வளைய வந்ததுவும், வயது கூடிப் போய் திருமணம் ஆகாமல் கழித்த சந்திரா அக்காவின் மனதில் தான் சலனங்களை ஏற்படுத்தியதுவும், வீட்டுக்கு வா என்று ஒரு ஞாயிற்றுக் கிழமை அவர்கள் தன்னை அழைத்ததுவும்…அன்று ஏன் அவர்கள் அப்படி அவனிடம் அழுதார்கள்? தன் மடியில் முகம் புதைத்து அப்படி ஏன் கதற வேண்டும்? அப்படியான என்ன நெருக்கத்தை என்னிடம் அன்று அவர்கள் உணர்ந்தார்கள்?
     கிளம்பும்போது நல்லா வயிறாரச் சாப்பிட்டியா? என்று கேட்டுக் கொண்டே தன் மீசையை ஒரு முறுக்கு முறுக்கி விட்டார்களே… அது என்ன மாதிரியான நெருக்கத்தில்? சந்திரா அக்காவா…சந்திரா மேடம்மா…வெறும் சந்திராவா….எது நிலைத்தது கடைசியில்?
     வர்றேன்…என்று விட்டுக் கிளம்பிய போது, இரு ஒரு நிமிஷம் என்று கூறி தன்னை மறுபடியும் வீட்டிற்குள் இழுத்துக் கொண்டு போய் தன் கையை எடுத்துத் தன் மார்பில் வைத்துக் கொண்டார்களே அது ஏன்? என் நெஞ்சின் தாக்கத்தை உணர்ந்தாயா? புரிந்து கொள் என்று சொல்லாமல் சொன்னதுவோ அது?
     இந்த வாழ்க்கையில் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம், பழகுகிறோம், கடந்து செல்கிறோம்…எல்லோருமா மனதில் நிற்கிறார்கள்? ஒரு சிலர் மட்டும் ஏன் நிரந்தரமாய் மனதில்    பதிந்து விடுகிறார்கள்? அந்த ஒரு சிலரை மட்டும் ஏன் துடைத்து எறிந்து விடவே முடிவதில்லை? நம் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளில் ஏற்படும், சந்தோஷங்கள் அல்லது சோகங்களின் போது தவறாமல் அவர்கள் நினைவுக்கு வருகிறார்களே, அது ஏன்?
     ச்சே…! இன்று என்ன இந்த மீசை இவ்வளவு எண்ணங்களைக் கிளறி விட்டு விட்டது? இந்த  வாழ்க்கையில், மனிதர்களுக்கு, ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கும் போலிருக்கிறதே…!
     ஒரு வயசுக்கு மேல இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்ல…அது இருந்தா என்ன போனா என்ன? இந்த நாட்டுல எத்தனையோ பேரு, அன்றாடப் பிழைப்புக்கே பொழுது பொழுதாக் கஷ்டப்பட்டுக்கிட்டு, திண்டாடிக்கிட்டு, நல்ல உணவு இல்லாம, நல்ல இருப்பிடம் இல்லாம, சுகாதாரமின்மையோட வியாதியினால் அவதிப்பட்டுக்கிட்டு, நல்ல மருத்துவம் கிடைக்காம எவ்வளவோ கஷ்ட ஜீவனத்துல இருக்காங்க…அதையெல்லாம் நினைச்சுப் பார்த்தா இதெல்லாம் ஒரு பிரச்னையா, கவலையான்னு தோணும்…தோணனும்…அதுதான் சரி…….முதல்ல இதப் பத்தி இந்த   அளவுக்கு யோசிச்சதே தப்பும்பேன் …டைம் வேஸ்ட்…இந்த நேரத்துல ஆக வேண்டிய காரியங்கள் எதையாச்சும் பார்த்திருக்கலாம்…அதுதான் நியாயம்….போங்க…போங்க..போயி கன்ஸ்ட்ரக்டிவ்வா எதையாச்சும் செய்யப் பாருங்க….யாருக்காச்சும் பிரயோஜனமா சிந்திங்க…செயல்படுங்க……
     முன்னும் பின்னும் பரபரப்பாய்த் திரும்பிப் பார்த்துக் கொண்டான் இவன். யார் சொன்னது இப்படி? எந்தக் குரல் ஒலித்தது இப்போது? தனக்குத்தானேதான் சொல்லிக் கொண்டோமோ?.உள்ளே ஏதோவோர் ஒலி. அசரீரியோ…  மனசைத் தொட்டுக் கொண்டான். நெஞ்சு சற்றே படபடப்பு அதிகமாய். தன்னை நிதானப் படுத்திக் கொண்டு, மெல்லத் தலையைத் திருப்பி தீர்க்கமாய் நிமிர்ந்து  மீண்டும் கண்ணாடியை நோக்கினான். அவன் முகம் இப்போது முன்னைவிட அழகாய்த் தெரிந்தது.

                     ---------------------------------------------

                                    

கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...